Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

August 29 - அர்ச். ஸ்நாபக அருளப்பர் தலைவெட்டுண்டு வேதசாட்சியாக மரித்தத் திருநாள்

 

ஆகஸ்டு 2️9️ம் தேதி

அர்ச். ஸ்நாபக அருளப்பர் தலைவெட்டுண்டு வேதசாட்சியாக மரித்தத் திருநாள்

 

சர்வேசுரன் தமது திவ்ய குமாரனுடைய வழியை ஆயத்தம் செய்யும்படியாக, அர்ச். ஸ்நாபக அருளப்பரைத் தேர்ந்தெடுத்தார். வனாந்தரத்தில், ஏகாந்த தியான ஜீவியம் ஜீவிக்கும்படியாக திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரால் அர்ச். ஸ்நாபக அருளப்பர் வழிநடத்தப்பட்டார். அர்ச். ஸ்நாபக அருளப்பர் தனது 30வது வயதில், திவ்ய இரட்சகரான நமதாண்டவருடைய வருகைக்காக ஆயத்தம் செய்யவேண்டிய தமது உன்னதமான அப்போஸ்தல அலுவலைத் துவக்கினார். “திபேரியூ என்னும் செசாருடைய  இராஜ்ஜியபாரத்தின்  பதினைந்தாம் வருடத்திலே.... வனாந்தரத்திலே சக்கரியாஸ் குமாரனான அருளப்பருக்கு ஆண்டவருடைய வாக்கியம் உண்டாயிற்று!அப்பொழுது, அவர் யோர்தான் நதிக்கடுத்த  நாடெங்கும் வந்து, இசையாஸ் தீ்ர்க்கதரிசியின் வாக்கியாகமத்தில் எழுதியிருக்கிற பிரகாரம், பாவ விமோசனத்துக்காகத் தவத்தின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தார்(லூக் 3:1-3). அருளப்பர், தமக்குப்பின்வருபவராகிய, திவ்ய சேசுநாதர்சுவாமியை விசுவசிக்க வேண்டுமென்று, ஜனங்களுக்குச் சொல்லி, அவர்களுக்கு தவத்தின் ஞானஸ்நானம் கொடுத்தார்( அப் .நட 19:4).

மகா உன்னத சர்வேசுரனுடைய  உண்மையான கட்டியக்காரராக, அறிவிப்பாளராகத் திகழ்ந்தார்; இவருடைய குரலொலி, தேவ நீதித்தீர்ப்பின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படி, உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் அழைக்கிற பரலோகத்தின் எக்காளத்தின் ஒலியைப்போல், ஒலித்தது! இவர், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தினார்: வரவிருக்கிற திவ்ய இரட்சகர் மூலமாக அவர்களுக்கு அருளப்படவிருக்கிற தேவ இரக்கத்தினுடைய ஞான பலன்களை அறுவடை செய்து பயன்படுத்தும்படியாக, தங்களையே ஆயத்தம் செய்யும்படி, சகல மனிதர்களுக்கும் அறிவுரைப் புகட்டினார்.

ஏரோதுவின் மகனான அந்திப்பாஸ் ஏரோதுவாக  கலிலேயாவின் சிற்றரசனாக, உரோமை சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஆட்சி செய்த காலத்தில், இவன், தன் மனைவியான ஃபாஸேலிஸ் என்பவளை விவாகரத்து செய்து விட்டு, உயிருடனிருந்த தன் சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் வைப்பாட்டியாகக் கொண்டிருந்தான்; அவளை, ஏரோதியாளாக ஏற்படுத்தியிருந்தான்; இது யூத மதச்சட்டத்திற்கு விரோதமான காாரியமாகவும், பெரிய கனமானப் பாவமாகவுமிருந்தது.  ஆகவே தான், அர்ச். ஸ்நாபக அருளப்பர், பரிசுத்த தைரியத்துடன், ஏரோது அந்திப்பாஸையும் அவனுடைய வைப்பாட்டியையும்  கண்டித்தார். இது விபச்சாரம் என்கிற பெரிய பாவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள், என்றும், நாட்டிற்கேத் துர்மாதிரிகையைக் காண்பிக்கிறீர்கள், என்றும், கூறி, அவர்கள் இருவரையும் கண்டித்தார். மோக பாவத்தினாலும், கோபத்தினாலும், ஆட்கொள்ளப்பட்டவனாக, அந்திப்பாஸ், மக்கேருஸ் மலைக்கோட்டைச் சிறையில், அர்ச். ஸ்நாபக அருளப்பரை அடைத்தான்.

ஒரு வருட காலத்திற்குப் பிறகு, கலிலேய உயர்குடி மக்களுக்கு அந்திப்பாஸ் ஒரு விருந்து அளித்தான்;  ஏரோது பிலிப்புவின் மகளான சலோமை நடனமாடி, அந்திப்பாஸை மகிழ்வித்தாள். முட்டாள்தனமாக, அந்திப்பாஸ் அவளிடம், எதைக்கேட்டாலும், தன் இராஜ்ஜியத்தில் பாதியைக்கேட்டாலும் தருவதாகக் கூறினான்.  சலோமை தன் தாயிடம் எதைக் கேட்கலாம் என்று கேட்டபோது, அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்! என்று கூறினாள். காட்டுமிராண்டித்தனமானதும் அரக்கத்தனமானதுமான இந்த விருப்பத்தின் வேண்டுகோளைக்  கேட்டு, கொடுங்கோலனான அந்திப்பாஸே, முதலில் அதிர்ந்து போனான். மனித முகஸ்துதி, மனித மரியாதையினால் மேற்கொள்ளப்பட்டவனாக, ஒரு வீரனை அனுப்பி, அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய தலையை வெட்டிக் கொண்டு வரச் செய்தான்.

இவ்விதமாக, நமது திவ்ய இரட்சகரின் மகா உன்னதமான முன்னோடியான  அர்ச். ஸ்நாபக அருளப்பர், கி.பி.31ம் வருடம், ஆண்டவருடைய பகிரங்க ஜீவியத்தின் இரண்டாம் வருடத்தில், நமதாண்டவருடைய பரிசுத்த சிலுவை மரணத்திற்கு ஒரு வருட காலத்திற்கு முன்பாக வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்த சரீரத்தை, அவருடைய சீடர்கள் பூஜிதமாக, செபாஸ்டே என்ற இடத்தில் அடக்கம் செய்தனர். ஆனால், அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்தத் தலையை, ஏரோதியாள், ஒரு சாணக்குவியலில் புதைத்து வைத்தாள்!; ஏரோதுவின் ஊழியக்காரரின் மனைவியான அர்ச். ஜோவன்னா, இரகசியமாக அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்தத்தலையை  எடுத்து ஒலிவ மரங்களின் மலையில், பூஜிதமாக அடக்கம் செய்தாள். இங்கு பல நூற்றாண்டுகள் காலமாக மறைந்திருந்தது!  பின்னர், அர்ச். ஸ்நாபக அருளப்பர் தாமே, காட்சியளித்து இந்த இடத்தை வெளிப்படுத்தினார்.  பாரம்பரியத்தின்படி, சுவிசேஷகரான அர்ச். லூக்காஸ், செபாஸ்டே என்ற இடத்திற்குச் சென்று, நமதாண்டவருக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் அளித்த அர்ச். ஸ்நாபக அருளப்பரின் பரிசுத்த வலது கரத்தை, ஒரு பரிசுத்த அருளிக்கமாகத் தன் சொந்த ஊரான அந்தியோக்குவிற்குக் கொண்டு சென்று, அங்குள்ள தேவாலயத்தில் பூஜிதமாக  ஸ்தாபித்தார். அந்நாளிலிருந்து, அங்கே, ஏராளமான புதுமைகள் நிகழலாயின!

அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்தத் மண்டைஓடு, உரோமிலுள்ள காபிடெவிலுள்ள சான் சில்வஸ்ட்ரோ என்ற தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! அர்ச்சிஷ்டவரின் பரிசுத்த மண்டை ஓட்டின் முகப்பகுதி எலும்பும், கீழ்த்தாடை எலும்பும், பிரான்சிலுள்ள ஏமியன்ஸ் கதீட்ரலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

அர்ச். ஸ்நாபக அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக