Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 16 - St. Joachim, - அர்ச்‌. ஜோக்கிம்

 

ஆகஸ்டு 16ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின் மகா பரிசுத்த தந்தையான அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்


            அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்,  1584ம் வருடம், உரோமன் காலண்டரில் சேர்க்கப்பட்டது. முதலில், இந்த திருநாள், மார்ச் 20ம் தேதியன்று, மகா பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச்‌. சூசையப்பர் திருநாளுக்கு அடுத்த நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது;1738ம் வருடம், இத்திருநாள், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்கு, எட்டு நாட்களுக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றப் பட்டது! ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டை அனுசரிப்பதை அனுமதிக்கும் விதமாக, அர்ச்‌. பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்குப் பின் வரும் நாளில், அதாவது, ஆகஸ்டு 16ம் தேதிக்கு மாற்றினார்.

            மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தின் மகிமையைக் கொண்டாடும்போது, அவர்களுடைய மகா பரிசுத்த தந்தையான அர்ச்.ஜோக்கிமையும் நாம் நினைவு கூரும் விதமாக, இந்நாளில், அர்ச்.ஜோக்கிம் திருநாள் அனுசரிக்கப்படும்படியாக, அர்ச்‌. பத்தாம் பத்தி நாதர் பாப்பரசர் ஏற்பாடு செய்தார்! எபிரேய மொழியில், ஜோக்கிம் என்ற பெயருக்கு, “சர்வேசுரன்  ஆயத்தம் செய்கிறார்!”, என்று அர்த்தம்.யூதாவின் கோத்திரத்தில், தாவீதின் குலத்தில் பிறந்த அர்ச்‌.  ஜோக்கிம், பக்தியுள்ள மனிதராயிருந்தார்; இவர் தவறாமல் தொடர்ந்து ஏழைகளுக்கும், செப்ஃபோரிஸிலிருந்த  ஜெபக்கூடத்திற்கும், பண உதவி செய்து வந்தார்; பின்னா், அர்ச்‌.  அன்னம்மாளைத் திருமணம் செய்தார்.   மகா பரிசுத்த தேவமாதாவின் பெற்றோர்கள் முதலில் கலிலேயாவில் ஜீவித்ததாகவும், பின்னர் ஜெருசலேமிற்குக் குடி பெயர்ந்ததாகவும், பரிசுத்த பாரம்பரியம் கூறுகின்றது.  20 வருடங்கள் குழந்தையில்லாமலிருந்தனர்.

            இப்பரிசுத்தத் தம்பதியா், வருடந்கோறும் தவறாமல், கூடாரத் திருநாளுக்கு ஜெருசலேம் தேவாலயத்திற்குச் சென்றனர்; இருப்பினும், பெரிய குரு, ஜோக்கிமினுடைய பலியை நிராகரித்து வந்தார்; இவருடைய மனைவி குழந் தையில்லாமலிருப்பது, தேவ கோபத்தின் அடையாளமாயிருக்கிறது, என்று கூறி, அர்ச்‌. ஜோக்கிம் கொண்டு சென்ற பலிப்பொருட்களை நிராகரித்து வந்தார்: இதன்விளைவாக, அர்ச்‌.  ஜோக்கிம், வனாந்திரத்திற்குச் சென்று,  40 நாட்கள் உபவாசம், தபசு இருந்தார்.அச்சமயம்,சம்மனசுகள், இவருக்கும், அர்ச்‌.  அன்னம்மாளுக்கும் காட்சியளித்து,ஒரு பெண்குழந்தை அவர்களுக்குப் பிறக்கப் போகிறது, என்றும், அக்குழந்தை, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப் பட வேண்டும், என்றும் அறிவித்தனர். மகா பரிசுத்த மாமரி, அமலோற்பவமாக பிறந்த நாளன்று, அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும் அனுபவித்த உன்னதமான சந்தோஷத்தைப்பற்றி யாரால் விவரிக்கக் கூடும்? அவர்களுக்கு, அந்த நாள் மற்றெல்லா நாட்களுக்கும் மேலான நாளாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருந்தது!

            ஏனெனில், அந்த நாள், இவர்கள் இருவரையும் நமதாண்டவரின் பரிசுத்த தாத்தா பாட்டியாக மாற்றவிருக்கிற நாளுக்குக் கூட்டிச்செல்லக்கூடிய நாளாக இருந்தது! மகா பரிசுத்த தேவமாதா 3 வயது குழந்தையாக இருந்தபோது, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண் குழந்தைகளை வளர்ப்பதில், ஜெருசலேம் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த பரிசுத்தப் பெண்களிடம், அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும், தங்கள் மகா நேச முள்ள குழந்தையை, ஒப்படைத்தார்கள். இந்த தேவாலயத்தில் சர்வேசுரனுடைய கருத்தூன்றிய நேரடிப் பார்வையின் கீழ், மகா பரிசுத்த கன்னிமாமரி, எட்டு வருட காலம் ஜீவித்தார்கள். கி.மு.7ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், புண்ணியங்களிலும் உத்தமதனத்திலும் உச்சநிலையை அடைந்தவராக, பாக்கியமாய் மரித்தார்; அர்ச்‌.  அன்னம்மாள், அர்ச்‌.  ஜோக்கிமை, ஜெத்சமேனி தோட்டத்திற்கு அருகிலுள்ள ஜோசப்பாத் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தார்கள். 1889ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், அர்ச் அன்னம்மாளின் கல்லறைகள் கண்டு எடுக்கப்பட்டன.

 நமதாண்டவரின் மகா பரிசுத்த தாத்தாவான அர்ச்‌.  ஜோக்கிமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக