Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 8 - Apparition of the St. Michael - அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியளித்தத் திருநாள்


மே 0️8️ம் தேதி

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர்

காட்சியளித்தத் திருநாள்

 


முதலாம் ஜெலாசியுஸ் (492-496) பாப்பரசரின் காலத்தில், இத்தாலியிலுள்ள மோந்தே கர்கானோ என்ற மலைப்பகுதியில்,  ஒரு பெரிய செல்வந்தன் தன் கால்நடை மந்தைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான்.  அது, பிரபலமான சிபோன்டோ நகரத்திற்கு அருகிலிருந்தது. 492ம் வருடத்தில் ஒருநாள், அந்த கால் நடை மந்தை, பட்டியில் அடைபடுவதற்குத் திரும்பியபோது, ஒரு எருது மாடு மட்டும், திரும்பி வந்து  மந்தையுடன் சேரவில்லை.

                மாட்டுக்குச் சொந்தக்காரனும், மாடு மேய்ப்பவனும், அந்த எருதைத் தேடி, அந்த மலைப்பகுதி முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியாக, அந்த எருதை மலை உச்சியில் கண்டுபிடித்தனர் ; ஒரு குகையின்  வாசலில், அந்த எருது, படுத்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தை விட்டு வருவதற்கு , எருது மறுத்தது. எவ்வளவு கட்டாயப்படுத்தியும், எருது அங்கிருந்து அகலாமலிருக்கிறதைக் கண்ட சொந்தக்காரன், விரக்தியில், தன் வில்லை எடுத்து ஒரு அம்பை, அந்த மாட்டின் மீது குறி வைத்து எய்தான்; என்ன ஆச்சரியம்! அந்த அம்பு, அந்த மாட்டின் மேல் பாயாமல், எய்த அந்த சொந்தக்காரன் மேலேயே திரும்பி வந்து பாய்ந்து அவனைக் காயப்படுத்தியது!

                இந்நூதனமான நிகழ்வைக் கண்டு எல்லோரும் மிகவும் அச்சமடைந்தனர். பின் யாரும் அந்த இடத்திற்கு அணுகிச் செல்வதற்குத் துணியவில்லை!  அங்கிருந்த மக்கள் எல்லோரும், சிபோன்டோ நகர மேற்றிராணியாரிடம் நேராகச் சென்று, அவரிடம் நடந்ததைக் கூறினர். அந்த பரிசுத்த மேற்றிராணியார், அந்த இடத்தில், ஏதோ பரம இரகசியமான ஒரு உன்னத வஸ்து மறைந்திருக்கிறது என்று சந்தேகித்தவராக, சர்வேசுரன் தாமே, இந்த தேவ இரகசியமான காரியத்தை, வெளிப்படுத்தும்படியாக, தமது மேற்றிராசன குருக்களிடமும், மக்களிடமும், கன்னியரிடமும், துறவியரிடமும், மூன்று நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருந்து ஜெபிக்கும்படி கட்டளையிட்டார்.

                மூன்று நாட்களுக்குப் பிறகு, அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர், மிகுந்த மாட்சிமை ஒளியுடன், இப்பரிசுத்த மேற்றிராணியாருக்கு காட்சியளித்து, அந்த எருது மாடு இப்போது இருக்கிற அந்த இடம் அவருடைய விசேஷ பாதுகாவலில் இருக்கிறது என்றும், அந்த இடத்தை அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக அர்ப்பணிக்கும்படியும், அந்த இடத்தில், அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக தேவாலயத்தைக் கட்டி, அங்கு சர்வேசுரனுடைய தேவ வழிபாடாகிய  திவ்யபலிபூசை நிறைவேற்றப்பட வேண்டும்! என்றும், அறிவித்தார்.

                இதைக் கேட்டு, அந்த அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் பெரிதும் மகிழ்ந்தவராக, அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியில் அறிவித்ததை, தமது குருக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்தார்; பின் சகலருடனும் மிகப் பெரிய சுற்றுப்பிரகார பவனியாக அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி மலை மேல், மேற்றிராணியார் ஏறிச் சென்றார்.

                அங்கிருந்த குகை, ஒரு பாறையில் குடையப்பட்டு, உருவாக்கப்பட்டிருந்த ஒரு தேவாலயம் போல் இருந்தது! அதன் நுழை வாயிலின் மேலிருந்த ஒரு திறப்பின் வழியாக அந்த குகையின் உட்புறம் முழுவதையும் போதுமான அளவிற்கு ஒளிர்வித்தது! அங்கு திவ்யபலிபூசை நிறைவேற்றுவதற்கு, ஒரு பீடம் மட்டுமே தேவைப்பட்டது; அந்த பக்தியுள்ள மேற்றிராணியார் துரிதமாக ஒரு பீடத்தை அங்குக்கட்டி ஸ்தாபிக்க ஏற்பாடு செய்தார். பின்னர், மாபெரும்  ஆடம்பரமாக இந்த புதிய தேவாலயம், அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவருக்கும், சகல சம்மனசுகளுக்கும் தோத்திரமாக அர்ப்பணிக்கப்பட்டது.

                ஆதித்திருச்சபையின் காலத்தில், வேத கலாபனையின் சமயத்தில், இந்த குகையில் இரகசியமாக கிறீஸ்துவர்கள் திவ்ய பலிபூசை, மற்ற தேவாராதனை திருவழிபாட்டுச் சடங்குகள் நடத்தி வந்திருக்கின்றனர், என்ற உண்மை பின்னர் கண்டறியப்பட்டது.

                இந்த குகையில் கட்டப்பட்டிருக்கும் தேவாலயத்தின் பரிசுத்த சந்நிதானத்தின்  மேற்கூரைப் பகுதியில் பாறையின் ஒரு பிளவு இருக்கிறது. இதிலிருந்து பாறைகளிலிருந்து வருகிற தண்ணீர் சொட்டு சொட்டாக, தேவாலயத்தின் உள்ளே விழுந்து கொண்டிருக்கும். அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் விசேஷ பரிந்துரையால், அநேக நோயாளிகள், இந்த பாறையின்  ஊற்றுத் தண்ணீரைப் பருகியதும், புதுமையாகக் குணமடைந்து வருகின்றனர்.

                பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான திருயாத்ரீகர்கள், மோட்சவாசிகளின் பசிலிக்காவைச் சந்திப்பதற்காக, மோந்தே சான் ஆஞ்சலோ என்கிற இந்த மலைக்கு திருயாத்திரையாகச் சென்றனர்.  அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் இப்பரிசுத்த சந்நிதானத்திற்கு, திருயாத்திரையாக வந்த பாப்பரசர்களில், முதலாம் ஜெலாசியுஸ்,9ம் சிங்கராயர்,2ம் உர்பன்,3ம் அலெக்சாண்டர்,10ம் கிரகோரி,5ம் செலஸ்டின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அநேக அர்ச்சிஷ்டவர்கள் இங்கு வந்திருக்கின்றனர்; ஸ்வீடனின் அர்ச். பிரிஜித்தம்மாள், அர்ச். பெர்னார்டு, அர்ச். தாமஸ் அக்வீனாஸ், அர்ச். ஜெரார்டு மஜெல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

 

அதிதூதரான அர்ச். மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக