Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 17 - St. Hyacinth - அர்ச்‌. ஹைசியந்து

 

ஆகஸ்டு 1️7️ம் தேதி

ஸ்துதியரும், வட ஐரோப்பாவின் மகிமைமிகு அப்போஸ்தலருமான  அர்ச்‌. ஹைசியந்து திருநாள்

            இவர், போலந்து நாட்டில் உயர்குலக் குடும்பத்தில், 1185ம் வருடம் பிறந்தார். இவர் கிராக்கோ நகர கதீட்ரல் தேவாலய அதிபராயிருந்த போது, அந்நகர மேற்றிராணியாருடன், உரோமாபுரிக்கு, 1218ம் வருடம் சென்றார்.அங்கே, இவர் அர்ச்‌. சாமிநாதரை சந்தித்தார். விரைவிலேயே, பிதாப்பிதாவான அர்ச்‌. சாமிநாதர் ஸ்தாபித்த போதகக் குருக்கள் துறவற சபையில் முதலில் சேர்ந்த துறவியருடன் சேர்ந்து, அச் சபையின் துறவற உடுப்பை அணிந்துகொண்டு, சபையின் வார்த்தைப் பாட்டைக் கொடுத்தார். ஒரு வருட காலத்திற்குள், அர்ச்‌.  சாமிநாதர், ஒரு சிறு குழுவுடன் இவரை, போதகக் குருக்கள் துறவற சபையை  (அர்ச்‌. சாமிநாதர் சபையை) ஏற்படுத்தும்படியாக போலந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தார். போலந்தில், அர்ச்‌.  ஹைசியந்து, இரண்டு மடங்களை ஸ்தாபித்தார். இவர், ஆஸ்திரியா, பொஹேமியா, லிவோனா,கருங்கடலின் கரையோரப் பகுதிகள், தார்தாரிய இனத்தவரின் பிரதேசம், மற்றும் கிழக்கில் வட சீனப்பகுதி துவக்கி, மேற்கில், ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து வரைசென்று, சுவிசேஷத்தை போதித்தார். அநேக அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். வேதசத்தியங்கள் பற்றி அறியாமலிருக்கும் அஞ்ஞானிகள் தெளிவாக கற்பிக்கப்படும்படியாக, அர்ச்‌.  ஹைசியந்து, அர்ச்‌.  தாமஸ் அக்வீனாசிடம் ஒரு புத்தகம் எழுதித்தரும்படி, ஒரு வேண்டுகோள் செய்தார்; அதன்படி, அர்ச்‌. தாமஸ் அக்வீனாஸ், கத்தோலிக்க வேத சத்தியங்கள் அடங்கிய ஒரு கத்தோலிக்க தத்துவ இயல் நூலின் தொகுப்பை, சும்மா கோந்த்ரா ஜென்டைல்ஸ் என்கிற ஒரு புத்தகமாக எழுதினார். அர்ச் ஹைசியந்து, போலந்து நாட்டின், இரண்டாம் அர்ச்‌. சாமிநாதா், என்று அழைக்கப்பட்டார். ஒரு சமயம், மங்கோலியப் படை, கீவ் நகரைத் தாக்கவிருந்தபோது, அர்ச். ஹைசியந்து, மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு அவசங்கை நேராதபடி, பாதுகாக்கும்பொருட்டு, மகா பரிசுத்த தேவநற்கருணைப் பாத்திரத்தை, மடத்தின் சிற்றாலயத்திலிருந்து எடுக்கச் சென்றார்: அப்போது, மகா பரிசுத்த தேவமாதாவின் பெரிய கற்சுரூபத்திலிருந்து, தன்னையும் எடுத்துச் செல்லும்படி, புதுமையாக கூறுகிற குரலொலியை, அர்ச்‌. ஹைசியந்து கேட்டார். அவ்வளவு பெரிய கற்சுரூபத்தைத் தூக்க முடியாது, என்று முதலில் தயங்கிய அர்ச்‌. ஹைசியந்து, அந்த சுரூபத்தைத் தூக்க முயற்சித்தபோது, அது, புதுமையாக பாரமில்லாமல் போனது! மிக இலகுவாக ஒரு கரத்திலேயே, அப்பெரிய கற்சுரூபத்தை, அவரால் தூக்கக் கூடுமாயிருந்தது! ஒரு கரத்தில், மகா பரிசுத்த தேவநற்கருணைப் பாத்திரத்தையும், இன்னொரு கரத்தில் மகா பரிசுத்த தேவமாதாவின் சுரூபத்தையும், மிகுந்த பக்தி பற்றுதலுடன் தூக்கிக் கொண்டு, நடந்து சென்றார்; வழியிலிருந்த டினீப்பா் ஆற்றின் மீது சிலுவை அடையாளம் வரைந்து விட்டு, அதன் மேல், தரையின் மேல் நடப்பதுபோல், புதுமையாக நடந்து சென்றார். மங்கோலியர்களின் அவசங்கைகளிலிருந்து மகா பரிசுத்த தேவமாதா சுரூபத்தையும்,மகா பரிசுத்த தேவநற்கருணையையும் பாதுகாத்தார்.புதுமையாக நிகழ்ந்த இந்நிகழ்வின் பின்னணியிலேயே, அர்ச்‌.  ஹைசியந்து படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் காணலாம். அர்ச்‌.  ஹைசியந்து , 1257ம் வருடம், மகா பரிசுத்த தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபனத்திருநாளன்று, திவ்யபலிபூசை நிறைவேற்றியபிறகு, நன்றிய றிதலின்போது, முழங்காலிலிருந்தபடி, மிகுந்த பக்திபற்றுதலுடன், மகா பரிசுக்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தை ஆழ்ந்து தியானித்தபோது, பக்திபரவசமான நிலைமையிலேயே, பாக்கியமாய் மரித்தார்!

 8ம் கிளமென்ட் பாப்பரசர், 1594ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார். ஸ்பெயினில், இவர் சான் ஜாசிந்தோ என்று அழைக்கப்படுகிறார்; ஸ்பானியாவிலும், அதன் காலனி நாடுகளிலும், அநேக நகரங்களும், இடங்களும், இவருக்குத் தோத்திரமாக இவருடைய பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்துதியரும், வட ஐரோப்பாவின் அப்போஸ்தலருமான  அர்ச்‌.  ஹைசியந்துவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக