ஆகஸ்டு2️3️ம்
தேதி
ஸ்துதியரான அர்ச். பிலிப் பெனிசயார் திருநாள்
இவர்,
1233ம் வருடம், ஆகஸ்டு 15ம் தேதியன்று, இத்தாலியின், ஃபுளாரன்சில் பிறந்தார்.
மகா பரிசுத்த தேவமாதாவின் மகிமை மிகு மோட்சாரோபனத் திருநாளன்று பிறந்தார்; அதிலும்,
விசேஷமாக, அந்த வருடம் இந்தத் திருநாளன்று மகா பரிசுத்த தேவமாதாவின் ஏழு ஊழியர்
துறவற சபையை ஸ்தாபித்த அந்த ஏழு அர்ச்சிஷ்டவர்களுக்கு முதன் முதலாக, மகா பரிசுத்த
தேவமாதா தாமே காட்சியளித்து, இத்துறவற சபையை ஸ்தாபிக்கும்படி கூறினார்கள்; இதே நாளில்
பிறந்த அர்ச். பிலிப் பெனிசியாரும் பின்னாளில், மகா பரிசுத்த தேவ மாதாவின் ஏழு
ஊழியர் சபையில் சேர்ந்து, அதன் தலைமை அதிபராகவும், ஆனார்! என்பது குறிப்பிடத்தக்கது!
இளம்
வயதில் ஏற்படும் சகல பாவசோதனைகள் மத்தியில், இவர், மகா பரிசுத்த தேவமாதாவின்
ஊழியராக வேண்டும் என்று ஆசித்தார். அதற்கு தன்னுடைய தகுதியற்றதனத்தின் மட்டில்
அஞ்சியதால் மட்டுமே, இவர், தன் தந்தையின் ஆவலை நிறைவேற்றும்படியாக, பதுவாவிலுள்ள
மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரானார். இவர்,தனது தகுதியற்றதனத்தின்
மீது கொண்டிருந்த சந்தேகத்தினால், நீண்ட காலம்
தேவ ஊழியத்தில் நுழைவதற்குத் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக சோர்வுற்ற நிலையிலிருந்தபோது,
ஒரு நாள், ஃபுளாரன்ஸ் நகரில் மகா பரிசுத்த தேவமாதாவின் ஏழு ஊழியர் சபை மடத்தின்
சிற்றாலயத்தில், திவ்ய பலிபூசை நேரத்தின்போது,மகா பரிசுத்த தேவமாதா தாமே, இவருக்குக்
காட்சியளித்து, தம்முடைய இந்த துறவற சபையில் சேரும்படி, கட்டளையிட்டார்கள்.அர்ச்.
பிலிப், உடனே, இத்துறவற சபையில், சேர்ந்தார்; இருப்பினும், தன் தகுதியற்றதனத்தின்
காரணமாக ஒரு பொதுநிலைச் சகோதரராகவே சேரத் துணிந்தார்.
கல்வியில்,
தான் பெற்றப் பட்டங்களைப் பற்றியோ, மருத்துவரானதைப் பற்றியோ, மடத்தின் அதிபரிடம்,
ஒன்றும் வெளிப்படுத்தாமல், தன் பாவங்களுக்காக, இவ்வெளிய தாழ்மையான நிலைமையிலேயே
தபசு செய்ய ஆசித்தார். ஒரு சமயம், இவருடைய மடத்திற்கு வந்த இரண்டு அர்ச். சாமிநாத
சபைத் துறவியருடன் இவர் பயணம் செய்தபோது, அந்நாள் வரையிலும் இவர் வெற்றிகரமாக
மறைத்து வைத்திருந்த மாபெரும் திறமைகளையும் , ஞானத்தையும், அறிவையும், இவ்விரு
துறவியரும் கண்டறிந்தனர். உடனே, இவரைப் பற்றி, இவ்விரு சாமிநாத துறவியரும், இவருடைய
அதிபர்களிடம் கூறினர். உடனே, இவரை குருப்பட்டத்திற்காக தயாரிக்கும்படி, அதிபர் கூறினார்;
அதன்படி,1258ம் வருடம், சியன்னா நகரில் , குருப்பட்டம் பெற்றார். ஒரு குருவானவராக
அர்ச். பிலிப் பெனிசியார், மாபெரும் நன்மையான காரியங்களைச் செய்தார். கருத்துவேறுபாடுகளால்
பகையிலிருந்த நக ரங்களுக்கிடையே , சமாதானத்தை ஏற்படுத்தினார்.
ஒரு
சமயம், ஏறக்குறைய நிர்வாணமாயிருந்த ஒரு தொழு நோயாளியைச் சந்தித்தபோது, இவரிடம் பணம்
ஏதுமில்லாமலிருந்ததால், தனது மேலங்கியை அந்நோயாளிக்குக் கொடுத்தார். அந்த அங்கியை
அந்த நோயாளி அணிந்துகொண்டவுடன், அந்நேரமே, புதுமையாக தொழுநோய் முற்றிலுமாகக் குணமடைந்தது!
இதற்குப் பின்,மிக துரிதமாக இவருக்கு மகிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பின்தொடர்ந்து
வந்தன! இவர், மகா பரிசுத்த தேவமாதாவின் ஏழுஊழியர் துறவற சபையின் பொது தலைமை அதிபரானார்.
ஆனால், இவரை புதிய பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்போகும் சமயத்தில், இவர் தூனியாடோ
என்ற மலைக்கு ஓடிப்போனார். புதிய பாப்பரசராக 10ம் கிரகோரியார் தேர்ந்தெடுக் கப்படும்
வரை, இவர் அந்த மலையிலேயே ஒளிந்திருந்தார்.
அர்ச்.
பிலிப் பெனிசியாரின் தேவசிநேகத்தை மூட்டக்கூடிய தியானப் பிரசங்கங்களால், உள்நாட்டுப்
போர்களால் அலைக்கழிக்கப்பட்டிருந்த இத்தாலி நாடு முழுவதிலும், சமாதானத்தையும் அமைதியையும்
ஏற்படுத்தினார். ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்று, அநேகரை மனந்திருப்பினார்.
சில இடங்களில் துஷ்ட எதிரிகளால் சாட்டையடிகள் பட்டார். இத்தாலியில் ஃபோர்லி என்ற
இடத்திற்கு ஒரு சமயம் இவர் அனுப்பப்பட்டபோது, அச்சமயம். சக்கரவர்த்திக்கும் பாப்பரசருக்கும்
கருத்து வேறுபாடு நிலவியது. இவர் அங்கு பிரசங்கித்த போது, பெரிகிரின் லாசியோசி என்ற
18 வயது இளைஞன், இவரைத் தாக்கி அடித்தான்; உடனே, அர்ச்சிஷ்டவர், தனது மறு கன்னத்தையும்,
அந்த இளைஞனுக்குக் காண்பித்தார்; இவருடைய தீரமிக்க இந்த உத்தமமான புண்ணிய செயலினால்
, பெரிகிரின் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவராக, மனந்திரும்பி, இறுதியில் இதே துறவற
சபையில் சேர்ந்து துறவியானார்; பின்னர் ஒரு அர்ச்சிஷ்டவருமானார், அர்ச். பெரிகிரினார்,
புற்றுநோயாளிகளுக்குப் பாதுகாவலராகத் திகழ்கிறார். இவருடைய திருநாள் - மே 1ம்
தேதி அனுசரிக்கப்படுகிறது.
லியோன்ஸ்
நகர பொதுச்சங்கத்தின்போது, பிலிப் கூடியிருந்த மேற்றிராணியார்களிடம், பெந்தேகோஸ்தே
திருநாளின்போது, பலமொழி வரம் பெற்று, அப்போஸ்தலர்கள் பேசியதைப்போலவே, பேசினார்;
மேற்றிராணிமார்களும், அவரவருடைய மொழிகளில் , இவருடைய பிரசங்கத்தைக் கேட்டனர்.
இவ்வளவு மகிமைகளுக்கும் மத்தியில், அர்ச். பிலிப், மிகக் கடினமான தபசைக் கடைபிடித்தார்.
எந்நேரமும் சர்வேசுரன் முன்பாக, இடைவிடாமல் தனது ஆத்துமத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
இவருடைய மரணத்தருவாயில், மகா பரிசுத்த தேவமாதா,
இவருக்குக் காட்சியளித்தார்கள்; உடனே, அர்ச். பிலிப் மகா மோட்சானந்த சந்தோஷத்துடன்,
தனது இரு கரங்களையும் பரலோகத்தை நோக்கி உயர்த்தியபடி, தனது ஆத்துமத்தை, மகா பரிசுத்த
தேவமாதாவின் திருக்கரங்களில் ஒப்படைத்ததைப்போல் ஒரு பெருமூச்சை விட்டுப் பாக்கியமாய்
மரித்தார். மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்திருநாளுக்குப் பின் வரும்
எட்டாம் நாள் ஆகஸ்டு 22ம் தேதியன்று, 1285ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்.
10ம் இன்னசன்ட் பாப்பரசரால் முத்திப்பேறு பட்டம் அளிக்கப்பட்டது; 1671ம் வருடம்,
ஏப்ரல் 12ம் தேதியன்று, 10ம் கிளமென்ட் பாப்பரசர் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்
அளித்தார். 1284ம் வருடம், அர்ச். பிலிப் பெனிசியார், மகா பரிசுத்த தேவமாதாவின்
ஏழு ஊழியரின் துறவற சபையின் துறவியரை, முதன் முதலாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.✝
ஸ்துதியரான
அர்ச். பிலிப் பெனிசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக