ஆகஸ்டு 2️6️ம் தேதி
வேதசாட்சியும் பாப்பரசருமான
அர்ச். ஸெஃப்ரினுஸ் திருநாள்
உரோமை
நகரவாசியான இவர், கி.பி.199ம்
வருடம், திருச்சபையின் 15வது பாப்பரசராக, முதலாம்
விக்டர் பாப்பரசர் மரித்தபிறகு, பதவியேற்றார். இவருடைய ஆட்சிகாலத்தில்,திருச்சபை
மிகக்கடுமையான துன்ப உபத்திரவங்களுக்கு ஆளானது! 202ம் வருடம், செப்டிமுஸ்
செவேருஸ் என்ற கொடுங்கோலனான உரோமைச்
சக்கரவர்த்தி ஆண்டபோது, திருச்சபைக்கு எதிரான மாபெரும் இரத்தக்களரியான 5வது துன்ப உபத்திரவக்
காலத்தை கிறீஸ்துவர்களுக்கு எதிராக நிகழ்த்தினான்! இது, 9 வருடகாலமாக, இவனுடைய மரணம் வரை, 211ம் வருடம் வரை
நீடித்திருந்தது.
இக்கொடிய
துன்ப உபத்திரவக்காலம் முடியும் வரை, பாப்பரசர் தனது
மந்தையை வழிநடத்தும்படியாக, ஒளிந்திருந்தார்; துன்ப உபத்திரவத்தில் அலைக்கழிக்கப்பட்டிருந்த நமதாண்டவரின் சீடர்களான கிறீஸ்துவர்களுக்கு ஆறுதலையும் தேற்றரவையும் அளித்து வந்தார். அச்சமயம் திருச்சபையில் ஜீவித்த ஸ்துதியர்களான குருக்கள் துறவியரைப் போலவே, இவரும் உத்தமமான பிறர் சிநேகத்தினிமித்தமாகவும்
துன்புறுகிற கிறீஸ்துவர்கள் மேல் கொண்ட இரக்கத்தினிமித்தமாகவும், அதிக துன்பப்பட்டார். வேதவிசுவாசத்திற்காக
தங்கள் உயிரைக் கையளித்து மகிமையான வேதசாட்சிய வெற்றியின் கிரீடத்தை அடைந்த வேதசாட்சிகள் மெய்யாகவே இவருக்கு ஆனந்த சந்தோஷத்தை அளித்தனர்; ஆனால், அதே சமயம், வேத
விசுவாசத்தில் உறுதியாக இல்லாமல், விசுவாசத்தை மறுதலித்தவர்களாலும், பதிதர்களாலும், ஏற்பட்ட மிக ஆழமான அநேகக்
காயங்களால், இப்பரிசுத்தப் பாப்பரசர் மிகவும் துன்புற்றார். திருச்சபையில் சமாதான காலம் திரும்ப வந்த போது, இப்பதிதம்
தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது!
தெர்துல்லியன்
என்ற கிறீஸ்துவ வேதசாஸ்திரி, ஒரு பதிதத் தப்பறையில்
வீழ்ந்ததைக் கண்டு, இப்பரிசுத்த பாப்பரசர் பெரிதும் வேதனையடைந்தார். இருப்பினும், தியோடோசியன் பதிதத்தைத் தழுவியிருந்த மேற்றிராணியாரான நாட்டாலிஸ் என்பவரை மனந்திருப்பும்படியாக, சர்வேசுரன் தாமே, மிகக் கண்டிப்பான திருத்தலினுடைய துன்பத்தை அனுப்பினார்; அதன் காரணமாக, தன் பதிதத் தப்பறையை
நன்குணர்ந்தவராக, கண்கள் திறக்கப்பட்டவராக, நாட்டாலிஸ், உத்தமமான மனஸ்தாபத்துடன், கிறீஸ்துவின் பிரதிநிதியான பாப்பரசரிடம் வந்து முழங்காலிலிருந்து, திருச்சபைக்கு எதிராகத் தான் செய்த கிளர்ச்சிக்காக மன்னிப்பு கேட்டார்.
மனந்திரும்பி
உத்தம கத்தோலிக்க மேற்றிராணியாரானர். இக்காரியம் பாப்பரசருக்கு ஆறுதலாக இருந்தது! யுசேபியுஸ் என்ற சரித்திர ஆசிரியர்,
இப்பரிசுத்த பாப்பரசர், பதிதர்களுடைய தேவதூஷணங்களுக்கு எதிராக அயராமல் எவ்வளவு அதிக ஆர்வத்துடன் உழைத்தாரென்றால்,
இந்த பதிதர்கள் இவரை, உச்சக்கட்ட கோபத்துடன், வெறுத்தார்கள்.
இவருடைய மகிமையாக, இந்த பதிதர்கள்தாமே, கிறீஸ்துநாதருடைய
தேவத்துவத்தின் முதன்மையான பாதுகாவலர், என்று இப்பரிசுத்த பாப்பரசரை, அழைத்தனர். இப்பாப்பரசர், 19 வருட காலம் திருச்சபையை
ஆண்டு நடத்தினார்; பாஸ்கு திருநாளாம் நமதாண்டவரின் மகிமைமிகு உயிர்ப்பு திருநாளன்று, எல்லா விசுவாசிகளும் திவ்ய நன்மை உட்கொள்ளவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினார். 217ம் வருடம் ஸெஃப்ரினுஸ்
பாப்பரசர் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்: இவருடைய சொந்தக்கல்லறையிலேயே ஆகஸ்டு 26ம் தேதி அடக்கம்
செய்யப்பட்டார்.
தியோடோசியன்
பதிதம் என்றால் என்ன? நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமி, யோர்தான் நதியில் ஞானஸ்நானம்பெறும் வரை சாதாரண மனிதராயிருந்தார்
என்றும், அதன்பின்னரே, அவர் கிறீஸ்துநாதராக மாறினார் என்றும் தப்பறையானக் கருத்துக்களை, தியோடோசியன் பதிதர்கள் பரப்பி வந்தனர். 190ம் வருடம் தோன்றிய
இப்பதிதத்தப்பறை, 4ம் நூற்றாண்டில் முற்றிலுமாக
அழிந்தது! ✝
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக