Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 18 - St. Helen - அர்ச்‌. ஹெலன்‌

 

ஆகஸ்டு 1️8️ம்‌ தேதி

மகா கான்ஸ்டன்டைன்‌ சக்கரவர்த்தியின்‌ தாயாரான அர்ச்‌.  ஹெலன்‌ திருநாள்‌

ஹெலன்‌, சின்ன ஆசியாவில் (இன்றைய துருக்கி) பித்தினியா பிராந்‌ தியத்திலுள்ள டிரெபானும்‌ என்ற ஊரில்‌, 250ம்‌ வருடம்‌ பிறந்தாள்‌. இவள்‌, 270ம்‌ வருடம்‌, உரோமைப்‌ படைத்‌ தளபதியான கான்ஸ்டான்சியுஸ்‌ குளோரஸ்‌ என்பவரைத்‌ திருமணம்‌ செய்தாள்‌. அச்சமயம்‌, அவர்‌ சின்ன ஆசியாவில்‌, செனோபியாவிற்கு எதிராக பிரச்சாரம்‌ செய்வதற்காக முகாமிட்டிருந்தார்‌. இவளுடைய முதல்‌ மகனும்‌ ஒரே மகனுமான கான்ஸ்டன்டைன்‌, 274ம்‌ வருடம்‌, வட மோயெசியாவில்‌, நாய்ஸ்ஸுசில்‌ பிறந்தார்‌. பின்னாளில்‌ இவர்‌ தான்‌, மகா கான்ஸ்டன்டைன்‌ சக்கரவர்த்தியானார்‌. 293ம்‌ வருடம்‌, கான்ஸ்டன்‌சியுஸ்‌ குளோருஸ்‌ உரோமையின்‌ சீசராக, அதாவது இளைய சக்கரவர்த்தியாக ஆக்கப்பட்டார்‌. அச்சமயம்‌, இவர்‌ தன்‌ மனைவி ஹெலனை விவாகரத்து செய்தார்‌; உரோமாபுரியை ஆண்ட மாக்ஸ்மின்‌ சக்கரவர்த்தியின்‌ வளர்ப்பு மகளைத் திருமணம்‌ செய்து கொள்வதற்காக, கான்ஸ்டன்சியுஸ்‌, ஹெலனை விவாகரத்து செய்தார்‌.

ஆனால்‌, ஹெலனின்‌ மகன்‌ கான்ஸ்டன்டைன்‌, தன்‌ தாயாருக்குப்‌ பிரமாணிக்கமாக அவளுடன்‌ கூடவே இருந்தார்‌. 308ம்‌ வருடம்‌, கான்ஸ்டன்சியுஸ்‌ குளோரஸ்‌ மரித்தபோது, கான்ஸ்டன்டைன்‌, தன்‌ தந்தைக்குப்பிறகு, உரோமைச்‌ சக்கரவர்த்தியானார்‌; தனது அரச அரண்மனைக்கு, தன்‌ தாயாரான ஹெலனம்மாளை வர வழைத்தார்‌. பின்னாளில்‌, 312ம்‌ வருடம்‌ மில்வியன்‌ பாலத்தில்‌ நடை பெற்ற ஒரு போரில்‌, கான்ஸ்டன்டைனுக்கு வானத்தில்‌ புதுமையாகக்‌ காணப்பட்ட பரிசுத்த சிலுவையின்‌ அடையாளத்தைக்‌ கொண்டு, போரிட்டபோது, இவர்‌ மாபெரும்‌ வெற்றியடைந்தார்‌. உடனே, இவர்‌ ஞானஸ்நானம்‌ பெற்று, தன்‌ தாயைப்போல ஒரு கிறீஸ்துவரானார்‌. இவ்விதமாக, கான்ஸ்டன்டைன்‌ உரோமை சாம்ராஜ்ஜியத்தின்‌ முதல்‌ கத்தோலிக்க சக்கரவர்த்தியானார்‌; தன்‌ தாயாரை, ஆகஸ்டா மகாராணியாக அரண்மனையில்‌ நியமித்தார்‌; தன்‌ தாயார்‌ பிறந்த டிரெபானும்‌ என்ற ஊரின்‌ பெயரை,ஹெலனோபோலிஸ்‌ என்று மாற்றினார்‌. கிறீஸ்துவ பிறர்சிநேக அலுவல்களுக்கும்‌, கிறீஸ்துவ வேத போதக அலுவல்களுக்கும்‌, தேவையான நிதியுதவி செய்வதற்கு, அரண்மனை திரவிய சாலையிலிருந்து, அளவில்லாமல்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌ அதிகாரத்தையும்‌ உரிமையையும்‌ தன்‌ தாயாருக்கு அளித்தார்‌.

அர்ச்‌. ஹெலன்‌, 324ம்‌ வருடம்‌, பாலஸ்தீனத்திலிருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு திருயாத்திரை பயணத்தை மேற்கொண்டாள்‌; அங்கு கல்வாரி மலையில்‌ கட்டப்பட்ட அஞ்ஞான வீனஸ்‌ கோவிலை இடித்துத்‌ தள்ளியதைத்‌ தான்‌, 325ம்‌ வருடம்‌, இவள்‌ முதல்‌ அலுவலாக நிறைவேற்றினாள்‌; ஹேட்ரியான்‌ என்ற சக்கரவர்த்தி, கல்வாரி மலையில்‌, ஆண்டவரின்‌ பரிசுத்த சிலுவை நாட்டப்பட்டிருந்த இடத்தில்‌, இந்த அஞ்ஞான கோவிலைக்‌ கட்டியிருந்தான்‌. அர்ச்‌. ஹெலனம்மாள்‌, ஆண்டவருடைய மெய்யான சிலுவையைக்‌ கண்டு பிடிக்கும்‌ அலுவலைத்‌ துவக்கினாள்‌; நிலத்தைத்‌ தோண்டி, அகழ்வாராய்ச்சி செய்கிற நிபுணர்‌ குழுவினரை வேலைக்கு அமர்த்தி, ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையைத்‌ தேடும்‌ அலுவலில்‌ ஈடுபட்டாள்‌. 326ம்‌ வருடம்‌ ஆண்டவருடைய பரிசுத்த சிலுவைக்‌ கண்டு எடுக்கப்பட்டது. இந்த இடத்தில்‌, ஆண்டவருடைய பரிசுத்த கல்லறையின்‌ தேவாலயத்தைக்‌ கட்டும்படி கான்ஸ்டன்டைன்‌ சக்கரவர்த்தி கட்டளையிட்டார்‌. ஆண்டவருடைய பரிசுத்த பூமியில்‌, அர்ச்‌.  ஹெலன்‌ மற்ற அநேக கிறீஸ்துவ புண்ணிய ஸ்தலங்களையும்‌ கண்டுபிடித்து, அந்த இடங்களி லெல்லாம்‌ அழகிய மாபெரும்‌ தேவாலயங்களைக்‌ கட்டுவித்தாள்‌.

327ம்‌ வருடம்‌, சக்கரவர்த்தினியான அர்ச்‌. ஹெலனம்மாள்‌, ஜெருசலேமையும்‌, கீழை உரோம சாம்ராஜ்ஜியப்‌ பிரதேசத்தையும்‌ விட்டு, ஆண்டவருடைய மெய்யான பரிசுத்த சிலுவையின்‌ பெரும்‌ பகுதிகளையும்‌, பரிசுத்த ஆணிகளையும்‌, மற்ற அநேக பரிசுக்த அருளிக்கங்களையும்‌ , உரோமை அரண்மனையிலுள்ள தன்‌ சொந்த சிற்றாலயத்தில்‌, பொக்கிஷ திரவியமாக ஸ்தாபிக்கும்படியாக, தன்னுடன்‌ கூட எடுத்துக்‌ கொண்டு, உரோமைக்குத்‌ திரும்பிச்‌ சென்றார்கள்‌. அந்த அரண்மனை சிற்றாலயத்தில்‌, இன்றும்‌ இப்பரிசுத்த அருளிக்கங்கள்‌ ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதைக்‌ காணலாம்‌. அர்ச்‌. ஹெலனம்மாளுடைய அரண்மனை, பின்னாளில்‌, ஜெருசலேமிலுள்ள ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையின்‌ பசிலிக்கா தேவாலயமாக மாற்றப்பட்டது! இந்த தேவாலயம்‌, இத்துடன்‌ இணைக்கப்பட்டிருந்த சிஸ்டர்ஷியன்‌ மடத்துத்‌ துறவியரால்‌, பல நூற்றாண்டு காலமாக பராமரிக்கப்பட்டு வந்தது. 

உரோமாபுரியிலிருக்கும்‌ வத்திக்கான்‌ தோட்டங்கள்‌, கல்வாரி எனப்படும்‌ கொல்கொத்தாவிலிருந்து,அர்ச்‌.  ஹெலனம்மாள்‌, கொண்டு வந்த பரிசுத்த மண்ணைக்‌ கொண்டு, நிரப்பப்பட்டன! கல்வாரி மலையின்‌ பரிசுத்த மண்ணில்‌ கலந்திருந்த ஆண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்துடன்‌, உரோமையில்‌, பல்வேறு இடங்களில்‌,  பல்லாயிரக்கணக்கான கிறீஸ்துவர்கள்‌ வேதசாட்சிகளாக மரித்தபோது, சிந்திய திரு இரத்தத்துடன்‌ ஒன்றாகக்‌ கலப்பதன்‌ வெளியடையாளமாகவே, அர்ச்‌.  ஹெலனம்மாள்‌, வத்திக்கான்‌ தோட்டத்தை, கல்வாரியின்‌ பரிசுத்த மண்ணைக்‌ கொண்டு நிரப்பினார்கள்‌.  அர்ச்‌. ஹெலனம்மாள்‌, 330ம்‌ வருடம்‌ பாக்கியமாய்‌ மரித்தார்கள்‌. உரோமாபுரியிலுள்ள ஆரா சேலியிலிருக்கும்‌ சாந்தா மரியா தேவாலயத்தில்‌ அர்ச்‌.  ஹெலனம்மாளின்‌ பரிசுத்த சரீரம்‌ பூஜிதமாக அடக்கம்‌ செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

அர்ச்‌.  ஹெலனம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக