மே
0️6️ம் தேதி
இலத்தீன் வாசல் என்று அழைக்கப்படும் உரோமாபுரி நகர வாசலுக்கு முன்பாக அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் அனுபவித்த கொடிய வேதசாட்சிய துன்பங்களை நினைவுகூரும் திருநாள்
இன்று
திருச்சபை, எல்லா
அப்போஸ்தலர்களிலும் கடைசியாக நீண்ட காலம் உயிருடனிருந்து
ஆசிய திருச்சபைகளை நிர்வகித்தவரும், சுவிசேஷகரும், அப்போஸ்தலருமான அர்ச். அருளப்பர், உரோமையில் அனுபவித்த கொடிய வேதசாட்சிய துன்ப உபத்திரவங்களை அனுபவித்தத் திருநாளை அனுசரித்துக் கொண்டாடுகிறது.
எபேசுஸ் நகரில் அர்ச். அருளப்பர் கைதுசெய்யப்பட்டு, உரோமாபுரிக்கு கி.பி.95ம்
வருடம் அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு, அவர் கத்தோலிக்க வேத
விசுவாசத்தைப் பிரசங்கித்ததன்பேரில் உரோமை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின் அடிக்கப்பட்டார்,,சங்கிலிகளால்
கட்டப்பட்டு, அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான டொமிஷியன் முன்பாக இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டார். அஞ்ஞான உரோமை தேவதைகளுக்கு பலிசெலுத்தும்படி சக்கரவர்த்தி கூறினான், அர்ச். அருளப்பர் அதற்கு மறுத்து விட்டார். அசையாத உறுதியான விசுவாசத்தினால், அர்ச். அருளப்பர், நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தை
உச்சரித்து, ஆண்டவரைப் பற்றிய விசுவாச சத்தியத்தைப் பிரகடனம் செய்தார். உடனே, டொமிஷியன், கத்தோலிக்க வேதத்தைப் பிரசங்கித்ததற்காக. அர்ச். அருளப்பரை கொதிக்கிற எண்ணெய் கொப்பறையில் உயிருடன் போடும்படி உத்தரவிட்டான்.
லததீன் வாசல் என்று அழைக்கப்படும் உரோமாபுரியின் நகர வாசலுக்கு முன்பாக,
ஒரு பெரிய கொப்பறையில் எண்ணெயை சூடேற்றி கொதிக்க வைத்தார்கள். மிகக் கொடூரமான சாட்டையால் அடித்தபிறகு, கொலைஞர்கள் அர்ச். அருளப்பரைப் பிடித்து, கொதிக்கிற எண்ணெய் கொப்பறையினுள் போட்டார்கள்; ஆனால், அருளப்பருக்கு, அந்த கொதிக்கிற எண்ணெய்
ஒரு தீங்கும் செய்யவில்லை! ஆனால், புதுமையாக, அவர் சாட்டை கசை
வார்களினால் பட்ட அடிகளின் காயங்கள்
எல்லாம் குணமடைந்தவிதமாக கொப்பறையிலிருந்து, அதிக புத்துணர்வுடனும், ஆரோக்கியத்துடனும் வெளியே வந்தார்.
இம்மகா பெரிய புதுமையினால், அங்குக் கூடியிருந்த அநேக அஞ்ஞானிகள் மனந்திரும்பி
கத்தோலிக்க வேதத்தில் சேர்ந்தனர்.
சர்வேசுரன், அர்ச். அருளப்பரின் நல்ல மனதை ஏற்றுக்
கொண்டு, வேதசாட்சியத்தின் மட்டில் அவர் கொண்டிருந்த விருப்பத்தின்படி,
அவருக்கு வேதசாட்சிய முடியைச் சூட்டினார்; வேதசாட்சியத்தினுடைய மகிமையையும் பேறுபலன்களையும், சர்வேசுரன், அர்ச். அருளப்பர் மேல் பொழிந்தருளினார்! பின்னர்,
டொமிஷியன் பேரச்சமடைந்தவனாக,
அர்ச். அருளப்பருக்கு தீங்கு செய்யத் துணியாமல், மனித சஞ்சாரமில்லாத பத்மோஸ்
தீவிற்கு நாடுகடத்தினான். இந்த பத்மோஸ் தீவில்
சுவிசேஷத்தின் கடைசி புத்தகமான காட்சியாகமத்தை, அர்ச். அருளப்பர்
எழுதினார். திருச்சபையின் வருங்காலத்தைப் பற்றியும் கடைசிகாலத்தைப் பற்றியும், சர்வேசுரன் தாமே அர்ச். அருளப்பருக்கு பரலோகக் காட்சியின்
மூலம் வெளிப்படுத்தியதின் சுருக்கமாக இந்த காட்சியாகமம் திகழ்கிறது!
பின்னர்,
முதலாம் ஜெலாசியுஸ் (492-496) பாப்பரசரின்
காலத்தில், அர்ச்.
அருளப்பர் வேதசாட்சிய
துன்ப உபத்திரவத்தை அனுபவித்த இலத்தீன் வாசலுக்கு முன்பாக, எரிகிற எண்ணெய் கொப்பறையிலிருந்து புதுமையாக அர்ச். அருளப்பர் வெளியேறி நடந்து வந்த அதே இடத்தில்,
அப்புதுமையின் ஞாபகார்த்தமாக ஒரு பசிலிக்கா தேவாலயம்
கட்டப்பட்டது!✝
அப்போஸ்தலரும்
வேதசாட்சியுமான அர்ச். அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக