அர்ச். மார்கிரட் ஹங்கேரி
13ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹங்கேரி நாட்டை பேலா என்ற அரசர் ஆண்டு வந்தார். அது ஒரு மாபெரும் கத்தோலிக்க நாடாக விளங்கியது. அக்காலத்தில் கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளை அதுவும் முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை டார்டார் என்ற காட்டுமிராண்டியினர் கைப்பற்றி அந்நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அரசர் பேலா தன் நாட்டை அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி ஆண்டவரிடம் மன்றாடினார். காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்களுடைய நாடு காப்பற்றப்படுமாகில் அதற்காக தங்களுக்கு பிறக்கும் குழந்தையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுப்பதாக நேர்ந்து கொண்டார். அவ்வாறே ஹங்கேரி யாதொரு திங்குமின்றி காப்பாற்றப்பட்டது. அதனால் அரசர் தனக்குப் பிறந்த குழந்தை மார்கிரட்டை அதன் 3வயது வயதில் வெஸ்ப்ரிம் என்ற இடத்தில் இருந்த அர்ச்.சாமிநாதர் சபை கன்னியர் மடத்தில் விட்டு வந்தார்.
சர்வேசுரனுடைய இல்லமாக விளங்கிய அம்மடத்தில் அக்குழந்தை தனக்கும் அத்துறவறசபையினருக்கான உடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தது. அப்பொழுது குழந்தை மார்கிரட்டுக்கு வயது 4. அந்த மடத்தில் இருந்த மற்ற கன்னியர் அனுசரித்த தபசுகளையும் அர்ச்.மார்கிரட் தனது குழந்தை பருவத்திலேயே கடைபிடிக்கலானாள். சுத்தபோசனம்,ஒருசந்தி,உபவாசம், மயிர்ச்சட்டையை உள்ளாடையாக அணிதல், நேச ஆண்டவரின் திவ்ய பாடுகளை உருக்கத்துடன் தியானித்தபடியே தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், இரவு நேரங்களில் திவ்யசற்பிரசாத நாதருடன் அவருடைய தேவநற்கருணைப் பேழைக்கு முன்பாக நிண்ட நேரம் நிந்தை பரிகார ஜெபங்களை தியானித்துக் கொண்டே தங்கள் நேச ஆண்டவருடன் கண்விழித்து தங்கியிருந்தல் போன்ற தவக்கிரியைகளில் குழந்தை மார்கிரட் ஈடுபட்டாள்.
அர்ச்.சாமிநாதர் சபையின் கட்டளை ஜெபத்தை அவள் அக்குழந்தை பருவத்திலேயே முழுவதும் மனப்பாடம் செய்தாள். அவள் விளையாடும் நேரங்களில் அக்கட்டளை ஜெபத்தை சங்கிதமாக பாடிக் கொண்டே அகமகிழ்வுடன் விளையாடுவாள். அச்சபையின் கன்னியாஸ்திரியாக நித்திய வார்த்தைப்பாடு கொடுத்தால் அதுவே மிகச்சிறந்த திருமணம். அரசரான தன் தந்தைக்கும், தனக்கும், எல்லாருக்கும், அதுவே, ஞானம் மிகுந்த வகையில் தெரிந்தெடுக்கப்பட்ட திருமணமாக, திகழும் என்று தனக்குள் எண்ணினாள்.பிறக்கும் முன்னரே, தான், சர்வேசுரனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதால், அந்தவாக்குதத்தத்திற்கு பிரமாணிக்கமாக விளங்க வேண்டுமென்பதில், அர்ச்.மார்கிரட் மிகவும் கவனத்துடனும் விழிப்புடனும் ஜீவித்து வந்தாள்.
அவளுக்கு 12 வயதானதும், சாமிநாதர் சபையின் தலைமை அதிபர் சங்.ஹம்பர்ட் சுவாமியார் முன்னிலையில் சபையின் வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவளுக்கு 18 வயது ஆனதும் பொஹேமியா நாட்டின் அரசன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதற்காக அவளுடைய தந்தையான பேலா அரசனும் ரோமாபுரி சென்று பாப்பரசரிடத்தில் தன் நேர்ச்சியிலிருந்து விடுதலைபெற்று மார்கிரட்டின் திருமணத்திற்கான அனுமதியையும் வாங்கி வந்தார். ஆனால் தன் தந்தையிடம் அர்ச்.மார்கிரட், “இந்த பொஹேமியா அரசனுடைய கிரீடத்தை விட மகத்துமிக்கவரான மாபெரும் அரசரான பரலோக அரசரைக் கொண்டிருப்பதும் நமது நேச ஆண்டவரை என் இருதயத்தில் குடியிருக்கச் செய்வதினால் எனக்கு ஏற்படும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியையுமே அளவில்லாத வகையில் உயர்வான உன்னதமான அந்தஸ்து என்று மதிக்கிறேன்”; என்று கூறினாள்.
இதைக் கேட்ட பேலா அரசனும் தன் மகளுடைய தேவஅழைத்தலைத் தடைசெய்யாமல் அவளுடைய தேவசிநேக ஜீவியத்திற்கு அனுமதியளித்தார். அதன்பிறகு, அர்ச்.மார்கிரட் தனது துறவற ஜீவியத்தில் இன்னும் அதிக மகிழ்வுடனும் உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் பக்திபற்றுதலுள்ளவளாக ஜீவிக்கலானாள். மடத்தில் யாராவது அவளுடைய அரசகுலத்தின் பெருமையைப் பற்றிப்பேச முற்பட்டால் உடனே அவள் ஹங்கேரி நாட்டை ஆண்டு வந்த, தனது மூதாதையரான அர்ச்.ஹங்கேரி எலிசபெத்தம்மாள், அர்ச்.ஹங்கேரி முடியப்பர், அர்ச்.ஹெட்விக் போன்றவர்களின் பரிசுத்த ஜீவியத்தினுடையவும் தேவ சிநேகத்தை முன்னிட்டு அவர்கள் கடைபிடித்துவந்த ஜெப தப பரிகார ஜீவியத்தின் மாண்பைப்பற்றியும் பேசி, உலக மாண்பின் வீண்பெருமையின் இழிநிலையைப்பற்றி சககன்னியர்கள் கண்டுணரச்செய்வாள்.
அந்நாட்டின் இளவரசி என்பதற்காக சாதாரண அலுவல்களிலிருந்து தனக்கு சலுகை அளிக்கப்படுவதை விரும்பாதவளாக, சமையலறையில் பாத்திரம் கழுவுதல், துணிதுவைத்தல், தரையை சுத்தம் செய்தல் போன்ற சாதாரண வேலைகளையும், இன்னும் மற்ற கனமான அலுவல்களையும் விரும்பி ஏற்று வந்தாள்.
எப்பொழுதும் மகிழ்வுடன் திகழ்ந்து வந்த அவள் நோயாளிகளின் அறையைக் கண்காணிக்கும் அலுலையும் ஏற்று வந்தாள். அர்ச்.மார்கிரட்டின் தேவசிநேகத்தினால் தூண்டப்பட்ட பிறர்சிநேக ஜீவியத்தையும் பரலோக புன்னகை தவழும் அவளுடைய முகத்தையும் கண்டு ஈர்க்கப்பட்டவர்களாக, அந்நோயாளிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவளை வரவேற்பர்.
தபசுக் காலத்தில் பெரிய வெள்ளிக்கிழமையன்று, ஆண்டவருடைய திவ்ய பாடுகளின் அகோரத்தையும் அவர் அனுபவித்த கொடூரமான உபாதனைகளையும் குறித்து, அன்றைய தினம் முழுவதும் மார்கிரட்டம்மாள் அழுது கொண்டே இருப்பாள். அடிக்கடி அம்மடத்தில் அர்ச்.மார்கிரட்டம்மாள் ஜெபதியானத்தின் போது பரவச நிலைக்கு சென்று விடுவாள். அவளுடைய அந்நிலையை யாராவது கண்டாலோ அல்லது அவளுடைய பரிசுத்த அந்தஸ்தைப்பற்றி யாராவது குறிப்பிட்டாலா அவள் மிகவும் சங்கடப்படுவாள். அவள் ஜீவிக்கும் போதே அநேக புதுமைகளை நிகழ்த்தியுள்ளாள். அதைவிட அதிகமான புதுமைகள் அவளுடைய இறப்பிற்கு பிறகு நிகழ்ந்தன. அவளுடைய கன்னியர் மடம் இருந்த தீவு முன்னர் பரிசுத்த கன்னிமாமரியின் தீவு என்று அழைக்கப்பட்டது.
அர்ச்.மார்கிரட்டின் மறைவிற்கு பிறகு நிகழ்ந்த அநேக புதுமைகளின் காரணமாக அத்தீவு மார்கிரட்டின் திவு என்று அழைக்கப்படுகிறது. வெள்ள அபாயம் ஏற்படும்போது அதிலிருந்து தப்புவிப்பதற்காக அர்ச். மார்கிரட்டம்மாளிடம் வேண்டிக் கொள்ளலாம். ஒருமுறை ஹங்கேரியில் உள்ள டான்யூப் நதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டபோது புதுமையாக அர்ச்.மார்கிரட்டம்மாள் அதை தடுத்து நிறுத்தினாள்.
அவள் 1270ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று பாக்கியமான மரணம் அடைந்து தன் நேச ஆண்டவரிடம் மகிமையின் முடியைப் பெறச் சென்றாள்.