டிசம்பர் 11ம் தேதி
அர்ச்.முதலாம் டமாசுஸ் பாப்பரசர்
(திருச்சபையின் திருவழி பாட்டின் மொழியை கிரேக்கத்திலிருந்து
இலத்தீனுக்கு மாற்றியவர்)
மேலும், இன்றைய திருநாள், சுவிசேஷத்தை வாசிக்கிற சகலராலும் கொண்டாடப்பட வேண்டிய திருநாளாக இருக்கிறது.
ஏனெனில், அர்ச்.டமாசுஸ் பாப்பரசர் கத்தோலிக்க திருச்சபை முழுவதற்கும் அதிகாரபூரவமான இலத்தீன் மொழியில், பரிசுத்த வேதாகமத்தை வுல்காத் பதிப்பாக எழுதுவதற்கு அர்ச் ஜெரோமை நியமித்தார்.
டமாசுஸ், 305ம் வருடம் பிறந்தார்.உரோமையைச் சேர்ந்த லுசிடானியா பிராந்தியத்தில் (இக்கால போர்த்துக்கல் நாடு) எஜடானியா நகருக்கருகில் பிறந்தார். இவருடைய ஜீவியகாலத்தில், மகா கான்ஸ்டன்டைன் பேரரசர் உரோமையை ஆளத்துவக்கினார்; கிறீஸ்துவ சாம்ராஜ்ஜியமாக உரோமையை உருமாற்றினார்.
பாப்பரசர் லிபேரியுஸ் மரித்தவுடன், டமாசுஸ், 366ம் வருடம் அக்டோபர் 1ம் தேதியன்று, பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாப்பரசரானதிலிருந்தே, இவரை எதிர்த்து உர்சுஸினுஸ் என்ற ஏதிர்பாப்பு, வேறு ஒரு கூட்டத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இரு குழுக்களுக்கும் இடையே 12 வருட காலமாக இடைவிடா பகையும் சண்டையும் நிலவியது. மூன்றாம் வாலென்டினியன் பேரரசரால், இவ்விரு குழுவினருக்கும் இடையே நடை பெற்ற சண்டைகள் நிறுத்தப்பட்டும், எதிர்பாப்பரசர், இரண்டு முறை நீக்கப் பட்ட பிறகும், அர்ச். டமாசுஸ் பாப்பரசர், வாழ்நாள் எல்லாம் எதிராளிகளால் அநேக துன்பங்களுக்கு ஆளானார். இரு சாராருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில், அர்ச். டமாசுஸ் நேரடியான வெற்றியை பெறாமலிருந்த போதிலும், இவர் துவங்கிய அலுவல்கள் நீடித்து நிலைபெற்றிருந்ததன் மூலமாக, இவருடைய சகல எதிரிகளுடைய அலுவல்களையும் முறியடித்து, அதில் வெற்றியடைந்தார். பரிசுத்த வேதாகமத்தின் வுல்காத் மொழிபெயர்ப்பிற்கான அலுவலை செய்வித்ததுடன் கூட, திருச்சபையின் திருவழிபாட்டின் மொழியை, கிரேக்கத்திலிருந்து, இலத்தீனுக்கு மாற்றினார். உரோமையிலிருந்த கொலோசியத்தின் சுரங்கக் கல்லறைகளைப் புதுப்பித்தார்; வேதசாட்சிகளின் கல்லறைகளில் பெயர்பலகைகளில் பொறிக்கப்பட வேண்டியிருந்த சொற்றொடர்களை இயற்றி, அவற்றில் பொறிக்கப்படும்படிச் செய்தார். வேதசாட்சிகளுடைய கல்லறைகளையும், அருளிக்கங்களையும் பாதுகாத்தார்; அவற்றிற்கான பேழைகளில் வைத்தார். கவிதை நயத்துடன் அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும், வேதசாட்சிகளைப்பற்றியும் சிறுகுறிப்புகளை எழுதி அவற்றை அவர்களுடைய கல்லறைகளில் பொறிக்கப்படும்படிச் செய்தார்.
இறுதியில், அவருடைய கல்லறையில் எழுதப்படவேண்டியதை முன்னதாக, அவர் தாமே பின்வருமாறு எழுதினார்: “டமாசுஸ் என்ற நான், இங்கு புதைக்கப்பட ஆசிக்கிறேன்.ஆனால், இங்கிருக்கும் பரிசுத்தர்களுடைய சாம்பல்களை, நான் அவசங்கை செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்!”
ஆனால், அர்ச்.டமாசுஸ் 384ம் வருடம் இறந்தபிறகு, அவருடைய தாயாருடனும், சகோதரியுடனும் அடக்கம் செய்யப்பட்டார்.
அர்ச்.முதலாம் டமாசுஸ் பாப்பரசரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக