டிசம்பர் 17ம் தேதி
வேதசாட்சியான அர்ச்.ஒலிம்பியாஸ்
ஒலிம்பியாஸ், கி.பி.360ம் வருடம், கான்ஸ்டான்டிநோபிளில், ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாள். மிகச்சிறிய வயதிலேயே பெற்றோர்களை இழந்து அனாதையானாள்.ஒலிம்பியாஸின் மாமாவான புரொபேகாபியுஸ் நகரக்தலைவராயிருந்தார்; அவர், அவளை தியோடோசியா என்ற பெண்ணின் பொறுப்பில் ஒப்படைத்தார்.
ஒலிம்பியாஸ் பருவமடைந்ததும், கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தலைவராயிருந்த நெப்ரிடியுஸ் என்பவரை திருமணம் செய்தாள்;இவர்களுடைய திருமணத்தின்போது, அர்ச்.நசியான்சன் கிரகோரியார், ஒரு கவிதை எழுதினார். சிறிதுகாலத்திலேயே ஒலிம்பியாஸ், கணவனை இழந்து விதவையானாள். தனது ஆஸ்திகளையெல்லாம், 30வது வயதை அடையும் வரை, அறக்கட்ட ளையின் காப்பகத்தில் ஒப்படைத்திருந்தாள்.மறுமணம் செய்துகொள்ள அநேக உயர் அதிகாரிகள் முன்வந்தனர்; அதையெல்லாம் மறுத்துவிட்டாள். தியோடோசியுஸ் பேரரசன், இவளை மறுமணம் செய்ய முன்வந்தான்; அதற்கும் ஒலிம்பியாஸ் மறுத்து விட்டாள்.
பேரரசன், 391ம் வருடம், இவளுடைய பண்ணைத்தோட்டத்தை இவ ளிடமே திருப்பி ஒப்படைத்தபோது, இவள் தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேகக் காரியங்களில் ஈடுபடும்படியாக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கக் திட்டமிட்டாள்; தேவசிநேக மற்றும் பிறர்சிநேக அலுவல்களில் ஈடுபட்டு, ஒரே குடும்பமாக ஜீவிக்கும்படியாக, அநேக பெண்களுடன் கூடிய ஒரு பக்தி சபையை ஸ்தாபித்தாள்; ஏழைகளுக்கு தான தர்மம் செய்வதில், இவள் மிக தாராளமான மனதுடன் ஈடுபட்டாள்; அதற்காக, தனது ஆஸ்திகளையெல்லாம் விற்றாள்.பிறர்சிநேக அலுவலில் இவளுடைய தயாளகுணத்தைக் கண்டு அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், இவளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்; 398ம் வருடம், கான்ஸ்டான்டிநோபிளின் பிதாப்பிதாவாக ஆனதும், அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், ஒலிம்பியாஸை, தனது ஞான வழிகாட்டுதலின் கீழ் வழிநடத்தத் துவக்கினார்.
ஒலிம்பியாஸ், ஒரு மருத்துவமனையையும், ஒரு அனாதை இல்லத்தையும் கட்டினாள். ஆரிய பதிதர்களால், நித்ரியா என்ற இடத்திலிருந்து விரட்டப்பட்ட துறவியர்களுக்கு இவள், அடைக்கலம் கொடுத்து, தங்குவதற்கான மடத்தை ஏற்பாடு செய்தாள்; ஆரிய பதிதத்தை எதிர்ப்பதில், அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பருக்கு, இவள் மிக உறுதியான ஆதரவாளராக துணை நின்றாள்.
கி.பி.404ம் வருடம், அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், கான்ஸ்டான்டிநோபிளின், அதிமேற்றிராணியார் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ஆரிய பதிதர்களுடைய இந்த சதிவேலையை, ஒலிம்பியாஸ், எதிர்த்தாள்; ஆரிய பதிதர்களால் பிதாப்பிதாவாக அமர்த்தப்பட்ட ஆர்சேசியுஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒலிம்பியாஸ் கூறி, எதிர்த்தாள்; அதற்கு, அந்நகர அதிகாரியாயிருந்த ஒப்டாடுஸ், ஒலிம்பியாஸூக்கு அபராதம் விதித்தான், இவளுடைய பக்திசபையைக் கலைத்தான்;இவள் மேற்கொண்ட சகல பிறா்சிநேக அலுவல்களையும் நிறுத்தினான். அர்ச்.ஒலிம்பியாஸ், இறுதி நாட்களில், வியாதியிலும், உபத்திரவங்களிலும் அவதிப்பட்டாள்; ஆனால், நாடுகடத்தப்பட்ட அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், தங்கியிருந்த இடத்திலிருந்து, கடிதங்கள் மூலமாக, ஒலிம்பியாஸூக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும், அளித்து உற்சாகப்படுத்தி வந்தார்.
நிக்கோமேதேயாவிற்கு நாடுகடத்தப்பட்ட ஒலிம்பியாஸ், 408ம் வருடம் வேதசாட்சியாக, இறந்தாள். அர்ச்.கிறிசோஸ்தம்அருளப்பர் இறந்த ஒரு வருட காலத்திற்குள், இவளும் வேதசாட்சியாக மரித்தாள்!
வேதசாட்சியான அர்ச்.ஒலிம்பியாஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக