Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 12 டிசம்பர், 2024

டிசம்பர்‌ 12ம்‌ தேதி - மகா பரிசுத்த குவாடலூப்‌ மாதாவின்‌ திருநாள்


டிசம்பர்‌ 12ம்‌ தேதி 
மகா பரிசுத்த குவாடலூப்‌ மாதாவின்‌ திருநாள்

 உலகத்தில்‌ புராட்டஸ்டன்டு பதிதர்களும்‌, மகமதியர்களும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ பரிசுத்தப்‌ படங்களையும்‌ சுரூபங்களையும்‌, அவசங்கை செய்தும்‌, அழித்துப்‌ போட்டும்‌ அட்டூழியம்‌ செய்த அதே நேரத்தில்‌ மிகச்‌ சரியாக, பரலோகம்‌, மனுக்குலத்திற்கு, மகா பரிசுத்த தேவமாதாவினுடைய இந்த பரிசுத்த சாயலை, உலகத்திற்கு அளித்தது! மேலே காணப்படுகிற படத்தில்‌, குவாடலூப்‌ மாதாவின்‌ பரிசுத்த சாயல்‌ அற்புதமாகப்‌ பதியப்பெற்ற டில்மா என்கிற போர்வையின்‌ மூலப்பிரதி காண்‌பிக்கப்பட்டிருக்கிறது. இது, தற்போது, மெக்சிகோ குவாடலூப்‌ பசிலிக்கா தேவாலயத்தில்‌ குண்டு துளைக்காத கண்ணாடி சட்டத்தினுள்‌ வைக்கப்பட்டு பீடத்தில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. 
முதல்‌ காட்சி 
1531ம்‌ வருடம்‌, டிசம்பர்‌ 9ம்‌ தேதியன்று, அண்மையில்‌ கத்தோலிக்கராக மனந்‌திரும்பிய ஜூவான்‌ தியேகோ என்ற மெக்சிகோ நாட்டின்‌ பூர்வீக இனத்தைச்‌ சேர்ந்தவர்‌, மெக்சிகோவின்‌ வில்லா தே குவாடலூப்பே என்ற நகரிலுள்ள டெப்பியாக்‌ என்ற ஒரு குன்றின்‌ மேல்‌,தேவமாதாவின்‌ காட்சியைப்பெற்றார்‌. மகா பரிசுத்த தேவமாதா,அந்நாட்டின்‌ இளவரசியின்‌ தோற்றத்தில்‌ ஒரு இளம்‌ பெண்ணரசியாகக்‌ காட்சி யளித்தார்கள்‌. ஜூவான்‌ தியேகோவிடம்‌, அவருடைய சொந்த மொழியிலேயே, தேவ மாதா பேசினார்கள்‌; அந்த இடத்தில்‌, தமக்குத்‌ தோத்திரமாக ஒரு தேவாலயம்‌ கட்டப்பட வேண்டும்‌ என்று கூறினார்கள்‌; அவர்கள்‌ கூறிய வார்த்தைகளிலிருந்து, மகா பரிசுத்த தேவமாதா தான்‌ தன்னிடம்‌ காட்சியளித்துப்‌ பேசினார்கள்‌, என்று ஜூவான்‌ கண்டுபிடித்தார்‌. இந்த காட்சியைப்‌ பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதா கூறியதைப் பற்றியும்‌, ஜூவான்‌ தியேகோ, அதிமேற்றிராணி யாரான வந்‌.ஜூவான்‌ சுமர்ரகா ஆண்டகையிடம்‌ அறிவித்தார்‌. 
 

2ம்‌ காட்சி
  அதி மேற்றிராணியார்‌, ஜூவான்‌ தியேகோ கூறியதை நம்ப மறுத்தார்‌. ஜூவான்‌ மறுபடியும்‌ டெப்பியாக்‌ மலைக்குத்‌ திரும்பி வந்தார்‌. அங்கு மகா பரிசுத்த தேவ மாதா, அவருக்காகக்‌ காத்திருந்தார்கள்‌. ஜூவான்‌, தான்‌ கூறியதை, அதிமேற்றிராணியார்‌ நம்பவில்லை, என்று தெரிவித்தார்‌; மகா பரிசுத்த தேவமாதா, அவரிடம்‌, அதிமேற்றிராணியாரிடம்‌, மறுபடியும்‌ அடுத்த நாள்‌ சென்று, தமது விருப்பத்தைப்‌ பற்றி தெரிவிக்கும்படி கூறினார்கள்‌. 
 3ம்‌ காட்சி
  அடுத்த நாள்‌, அதிமேற்றிராணியார்‌,காட்சியளிக்கும்‌ பெண்ணரசி தனக்கு ஒரு அடையாளத்தைக்‌ காண்பிக்க வேண்டும்‌ என்று விண்ணப்பித்தார்‌. அன்று மாலையில்‌, அதிமேற்றிராணியார்‌ கூறியதை, ஜூவான்‌, மகா பரிசுத்த தேவ மாதாவிடம்‌ அறிவித்தார்‌;அடுத்த நாள்‌ காலையில்‌, அதிமேற்றிராணியாரின்‌ விருப்பத்தை நிறைவேற்றுவதாக, மகா பரிசுத்த தேவமாதா வாக்களித்தார்கள்‌. ஆனால்‌, அடுத்த நாள்‌, ஜூவான்‌, தேவமாதா காட்சியளிக்கும்‌ அந்த மலைப்‌ பக்கமாகச்‌ செல்லாமல்‌ வேறு வழியாகச்‌ சென்றார்‌; காரணம்‌, அவருடைய மாமா ஜூவான்‌ பெர்னார்டினோ மிகக்‌ கடுமையான காய்ச்சல்‌ கண்டு மர ணத்தருவாயிலிருந்தார்‌.
 4ம்‌ காட்சி
 2 நாட்கள்‌ கழித்து, டிசம்பர்‌ 12ம்‌ தேதியன்று, ஜூவான்‌, இறந்து கொண்டிருக்கிற தன்‌ மாமாவிற்கு அவஸ்தைப்‌ பூசுதல்‌ அளிப்பதற்காக ஒரு குருவானவரைக்‌ கூட்டி வரும்படி, லடலோகோ என்ற ஊரிலுள்ள தேவாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்‌; அப்போது, மறுபக்கத்திலிருந்த டெப்பியாக்‌ மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, மகா பரிசுத்த தேவமாதா, ஜூவானை நிறுத்தினார்கள்‌. மகா பரிசுத்த தேவமாதா, ஜூவான்‌ முந்தின நாள்,‌ ஏன்‌ தம்மை வந்து பார்க்கவில்லை என்பதற்கான காரணத்தைக்‌ கேட்டார்கள்‌. மாமாவின்‌ வியாதியின்‌ காரணமாகவே அங்கு வரவில்லை என்று, ஜூவான்‌ கூறியதைக்‌ கேட்ட மகா பரிசுத்த தேவமாதா, அவரிடம்‌, “நல்லது. என்‌ பிள்ளைகளில்‌ மிகப்‌ பிரியமான மிகச்‌ சிறிய பிள்ளையே! இப்போது நான்‌ கூறப்போவதை நன்றாகக்‌ கவனித்துக்கேள்‌. உன்னை உபத்திரவப்படுத்துகிற எதைப்‌ பற்றியும்‌ கவலைப்படாதே! அதைப்‌ பற்றி பயப்படாதே! உன்‌ தாயாராக நான்‌ இங்கு இருக்கிறேனல்லவா? நீ என்‌ நிழலின்‌ கீழும்‌ பாதுகாப்பிலும்‌ இருக்கிறாயல்லவா? என்‌ கரங்களின்‌ அரவணைப்பிற்குள்‌ நீ இருக்கிறாயல்லவா? வேறு ஏதாவது உனக்குத்‌ தேவையாக இருக்கிறதா? உன்‌ மாமாவைப்‌ பற்றி, நீ பயப்படாதே! அவர்‌ சாக மாட்டார்‌. அவர்‌ ஏற்கனவே நலமடைந்துவிட்டார்‌; இதைப்‌ பற்றி நிச்சயித்திரு!” என்று கூறினார்கள்‌. மகா பரிசுத்த தேவ மாதா கூறியதைக்‌ கேட்டதும்‌, ஜூவான்‌, மகிழ்ச்சியடைந்தவராக, மேற்றிராணியாரிடம்‌ எடுத்‌துச்‌ செல்வதற்கான அவர்‌ கேட்ட அடையாளத்தைக்‌ கேட்டார்‌; மகா பரிசுத்த தேவமாதா, ஜூவானிடம்‌, மலை உச்சியை நோக்கி ஏறிச்‌ செல்லும்படி, கூறினார்கள்‌. அங்கு ஏற்கனவே மூன்றுமுறை அவர்கள்‌ காட்சி கொடுத்த அதே இடத்திற்குச்‌ சென்று, அங்குக்‌ கண்டடையக்‌ கூடிய அன்று மலர்ந்திருக்கும்‌ அநேக ரோஜாப்பூக்களைப்‌ பறித்துக்‌ கொண்டு, மறுபடியும்‌ தம்மிடம்‌ வரும்படிக்‌ கூறினார்கள்‌. அவரும்‌ மெக்சிகோவிலேயே காணக்கிடைக்காத அபூர்வமான காஸ்டிலியன்‌ ரோஜாபூக்கள்‌ மலை உச்சியில்‌, எப்போதும்‌ தரிசாக இருக்கும்‌ பாறை நிலத்தில்,‌ புதுமையாக மலர்ந்திருப்பதைக்‌ கண்டு, அம்மலர்களைப் பறித்து வந்தார்‌. 
 மகா பரிசுத்த தேவமாதா தாமே, ரோஜா மலர்களை அடுக்கி வைத்து, ஜூவானுடைய டில்மா என்ற மேலங்கியில்‌ வைத்துக்‌ கொடுத்தார்கள்‌; ஜூவான்‌ 1531ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 12ம்‌ தேதியன்று, தனது டில்மா மேலங்கியை அதிமேற்றிராணியாருக்குத்‌ திறந்து காண்பித்தபோது, பூக்கள்‌ தரையில்‌ விழுந்தன. டில்மா மேலங்கியில்‌ மகா பரிசுத்த தேவமாதாவின்‌ பரிசுத்த சாயல்‌ புதுமையாக பதிந்திருப்பதைக்‌ கண்ட அதிமேற்றிராணியார்‌, உடனே முழங்காலிலிருந்து, பக்திபற்றுதலுடன்‌, மகா பரிசுத்த தேவமாதாவை, வணங்கினார்‌; மகா பரிசுத்த தேவமாதாவின்‌ விருப்பத்தை நிறைவேற்றத்‌ தீவிரித்தார்‌. அதன்படி குவாடலூப்‌ மாதாவின்‌ பேராலயம்‌ கட்டப்பட்டது. அதில்‌ மகா பரிசுத்த தேவமாதாவின்‌ பீடத்தில்‌, மகா பரிசுத்த குவாடலூப்‌ தேவமாதாவின்‌ பரிசுத்த சாயல்‌ பதியப்பெற்ற டில்மா, குண்டு துளைக்காத ஒரு கண்ணாடி சட்டத்‌தினுள்‌ பொது வணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. மகா பரிசுத்த குவாடலூப்‌ மாதாவின்‌ இப்படம்‌, மெக்சிகோ நாட்டின்‌ மிகப்‌ பெரிய அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பசிலிக்கா பேராலயம்‌, இன்று வரை உலகிலேயே மாபெரும்‌ தேவமாதாவின்‌ திருயாக்திரை ஸ்தலமாக விளங்குகிறது. 
 மகா பரிசுத்த குவாடலூப்‌ மாதாவின்‌ இப்புதுமை, அஞ்ஞான நாடாயி ருந்த மெக்சிகோ நாட்டை முழுவதுமாக , கத்தோலிக்க நாடாக மாற்றியது! பசாசின்‌ மதத்தை வழிபட்டு அனுசரித்துக்‌ கொண்டிருந்த 90 லட்சம்‌ அஞ்ஞானிகள்‌, 5 வருட காலத்திற்குள்‌ சத்திய கத்தோலிக்கர்களாயினர்‌. மனித சரித்திரத்திலேயே, இது, மாபெரும்‌ எண்ணிக்கையிலான மனந்திரும்புதலாகத்‌ திகழ்கிறது. 

மகா பரிசுத்த பாத்திமா மாதாவிடம்,‌ நாம்‌ அனுதின ஜெப தப பரிகாரங்கள் மூலமாகவும், மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ மூலமாகவும்,‌ தொடர்ந்து , திருச்சபைக்காக வேண்டிக்கொள்வோமாக!

 மகா பரிசுத்த குவாடலூப்‌ மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக