Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 20 டிசம்பர், 2024

டிசம்பர்‌ 18ம்‌ தேதி எதிர்பார்த்துக்‌ காத்திருந்த மகா பரிசுத்த தேவமாதாவின்‌ திருநாள்‌

டிசம்பர்‌ 18ம்‌ தேதி  
எதிர்பார்த்துக்‌ காத்திருந்த மகா பரிசுத்த தேவமாதாவின்‌ திருநாள்‌ 

   இன்று கிறீஸ்துமஸ்‌ திருநாளுக்கு முந்தின திருநாட்களில்‌ மிக முக்கியமானதும்‌ உற்சாகமளிக்கக்‌ கூடியதுமான திருநாளாக, காத்திருந்த தேவமாதாவின்‌ திருநாள்‌ கொண்டாடப்படுகிறது. இந்நவீன காலத்தில்‌, இத்திருநாள்‌ அறியப்படாமலிருந்தபோதிலும்‌,ஸ்பெயின்‌, போர்த்துக்கல்‌, இத்தாலி, மற்றும்‌ போலந்து போன்ற நாடுகளிலும்‌, ஒரு சில துறவற மடங்களிலும்‌, இன்றும்‌, இந்த திருநாள்‌ மிகுந்த உற்சாகத்துடன்‌ கொண்டாடப்படுகிறது.  மகா பரிசுத்த தேவமாதா, அவர்களுடைய பரிசுத்த கர்ப்பத்தினுடைய  கால நேரம்‌ முடிவடைகிற நிலைமையில்‌ , அவர்களுடைய தெய்வீக தாய்மையின்‌ மகா உன்னதமான கண்ணியத்துடன்‌ சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்‌.தாவீ தரசரின்‌ குமாரத்தியாக மகா பரிசுத்த தேவமாதா, ஒரு இராக்கினியின்‌ மகிமை மிகுந்த ஆடம்பரமான ஆடையை அணிந்தவர்களாக, சமாதானத்தின்‌ இளவரசரும்‌, தம்‌ திவ்ய குமாரனுமான சேசுநாதருடைய வருகைக்காக மிகுந்த சந்தோஷத்துடன்‌ காத்திருக்கிறார்கள்‌. மகா பரிசுத்த தேவமாதாவின்‌ தோற்றம்‌ முழுவதும்‌, தமது மாசற்ற இருதயத்தில்‌ தமது திவ்ய குமாரனைப்‌ பற்றிய ஆழ்ந்த தியானத்தி னால்‌ எவ்வாறு முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்‌! என்பதையே நமக்குக்‌ காண்பிக்கிறது. மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திருவுதரம்‌, தெய்வீகத்தினுடைய ஒரு உயிருள்ள நடமாடும்‌ பரிசுத்த ஸ்தலமாகவே மாறியிருந்தது! 

கி.பி.656ம்‌ வருடம்‌, ஸ்பெயின்‌ நாட்டின்‌ டொலேடோ நகரில்‌ கூடிய திருச்சபையின்‌ பத்தாவது சங்கத்தின்போது, மேற்றிராணிமார்களால்‌ இந்த திருநாள்‌, ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயம்‌, எக்ஸ்பெக்தாசியோ பார்துஸ்‌ என்று இத்திருநாள்‌ அழைக்கப்பட்டது. உரோமைக்‌ கத்தோலிக்க திருச்சபை முழுவதிலும்‌ இத்திருநாள்‌ கொண்டாடப்பட்டது.

  ஸ்பெயின்‌ நாட்டினர்‌, இந்த திருநாளை, நுவஸ்ட்ரா செனோரா தேவ லா ஓ!  என்ற பெயரில்‌ அழைத்தனர்‌. ஏனெனில்‌, அன்றைய தின மாலை ஜெபத்தில்‌, திருவழிபாட்டிற்கான வெஸ்பர்ஸ்‌ ஜெபங்களைப்‌ பாடும்போது, குருக்கள்‌, திவ்விய இரட்சகருடைய வருகையை அகில பிரபஞ்சமே ஆவலுடன்‌ ஏங்கிக்‌காத்திருக்கிறதை வெளிப்படுத்தும் விதமாக, உரத்தக்‌ குரலில்‌, நீட்டியபடி, ஓ! என்று பாடுவார்கள்‌. 

 இந்த திருநாள்‌ ஸ்பெயின்‌ நாட்டில்‌ எப்போதும்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. டொலேடோ நகர சங்கத்தின்போது, 13ம்‌ கிரகோரி பாப்பரசரால்‌ 1573ம்‌ வருடம்‌ இந்த திருநாளை ஆக்டேவ்‌ என்கிற 8 நாள்‌ தயாரிப்பில்லாத இரட்டிப்பான பெரிய திருநாளாக ஸ்தாபித்தார்‌. டொலேடோ மேற்றிராசனத்தில்‌, விசேஷ சலுகையுடன்‌, இந்த திருநாள் 1634ம்‌ வருடம்‌ ஏப்ரல்‌ 29ம்‌ தேதி ஏற்படுத்தப்பட்டு, ஆகமன காலத்தின்‌ 4ம்‌ ஞாயிற்றுக்கிழமையில்‌ வந்தாலும்‌, இந்த திருநாளைக்‌ கொண்டாடுவதற்கான திருச்சபையின்‌ அனுமதியுடன்‌ கொண்டாடப்படுகிறது. 

 பின்னர்‌, இந்த திருநாள்‌ ஸ்பெயின்‌, போர்த்துக்கல்‌ பேரரசுகளின்‌ குடியேற்ற நாடுகளிலும்‌, உலகின்‌ மற்ற நாடுகளிலும்‌ பரவியது. 1695ம்‌ வருடம்‌, வெனிஸ்‌ மற்றும்‌ தூலோஸ்‌ பகுதிகளிலும்‌ 1702ம்‌ வருடம்‌ சிஸ்டர்ஷியன்‌ துறவற மடங்களிலும்‌ , 1713ம்‌ வருடம்‌ டஸ்கனி நாட்டிலும்,1725ம் வருடம்‌ பாப்பரசருடைய நாடுகளிலும்‌ இந்த திருநாள்‌ ஸ்தாபிக்கப்பட்டது. இன்று திருச்சபை, இசையாஸ்‌ தீர்க்கதரிசியுடன்‌ சேர்ந்து, பூமியானது திவ்‌விய இரட்சகரை வரவேற்பதற்கு தயாராக இருப்பதற்காக, பரலோகத்திலிருந்து நீதியின்‌ சூரியனானவருடைய வருகைக்காக ஜெபிக்கிறது: “வானகங்காள்‌! மேல்‌ நின்று கிருபையார்ந்த பனிபெய்யுங்கள்‌; மேகங்கள்‌ நீதிமானை இறங்கச்‌ செய்யக்கடவன ; பூமி கற்பம்‌ விரிந்து இரட்சகரை வெளிப்படுத்தக்கடவது!” (இசை 45:8) 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக