Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 10 டிசம்பர், 2024

டிசம்பர்‌ 08ம்‌ தேதி - மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அமல ‌ உற்பவத்தின் ‌ திருநாள்‌


டிசம்பர்‌ 08ம்‌ தேதி 
மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அமல ‌ உற்பவத்தின் ‌ திருநாள்‌ 

ஒவ்வொரு கத்தோலிக்கருடைய இருதயத்திற்‌கும்‌ மிகவும்‌ பிரியமான இம்மாபெரும் திருநாளில்‌, சகல காலங்களையும்‌ தொலைநோக்குடன்‌ காண்பிக்கக்‌ ‌ கூடிய ஒரு காட்சியில்‌, எல்லாம்‌ வல்ல சர்வேசுரன்‌, ஆதியிலே, நமது முதல்‌ பெற்றோர்களுக்கும்‌, பசாசிற்கும்‌, மகா பரிசுத்த திவ்ய கன்னிகையான அர்ச்‌.கன்னிமாமரியை, எதிர்காலத்தில்‌ வரவிருக்கும்‌ திவ்ய இரட்சகருடைய மகா பரிசுத்த கன்னித்தாயாராகவும்‌, ஆதி சர்ப்பமாகிய பசாசின் ‌ஆங்காரம்‌ நிறைந்த தலையை தமது காலால்‌ மிதித்து நசுக்கப்போகிற மகா பரிசுத்த ஸ்திரீயாகவும்‌ காண்பித்த அம்‌ மணித்துளி நேரத்தை, நாம்‌ முதலாவதாகக்‌ கொண்டாடுகிறோம்‌. பரம இரகசியமான இந்நிகழ்வைப்‌ பற்றி, ஆதியாகமத்தில்‌ (ஆதி 3:75) வாசிக்கிறோம்‌. வேதாகமத்தில்‌ மறுபடியும்‌, கடைசி தீர்க்கதரிசனப்‌ பகுதியான காட்சியாகமத்தில்‌ (12ம்‌ அதிகாரம்‌), மகா பரிசுத்த தேவமாதாவை, சூரியனை ஆடையாக அணிந்தவர்களும்‌, 12 நட்சத்திரங்களாலான கிரீடத்தை தலையில்‌ அணிந்திருப்பவர்களுமான மகா பரிசுத்த ஸ்திரீயாகக்‌ காண்கிறோம்‌. 
மேலும்‌, தேவ மாதா, ஜென்மப்‌ பாவமில்லாமல்‌ பிறந்தார்கள்‌ என்கிற சத்தியத்தை வேத விசுவாச சத்தியமாக 9ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, 1854ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 8ம்‌ தேதி, அகில திருச்சபைக்கும்‌ பிரகடனம்‌ செய்தபோது, உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்கர்களும்‌ கிறீஸ்துவர்களும்‌ மாபெரும்‌ சந்தோஷமடைந்தனர்‌.  
சிரியாவில்‌ , மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அமல உற்பவத்திருநாள்‌, 5ம்‌ நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வந்தது. அர்ச்‌. தமாசின்‌ அருளப்பர்‌ காலத்தில்‌, இந்த திருநாள்‌ பிரபலமடைந்தது. கி.பி.750ம்‌ வருடம்‌, மத்திய கிழக்கு நாடுகளில்‌ பரவலாக இந்தத்‌ திருநாள்‌ எல்லா இடங்களிலும்‌ கொண்டாடப்பட்டது. 1476ம்‌ வருடம்‌, 4ம்‌ சிக்ஸ்துஸ்‌ பாப்பரசர்‌, பிரான்சிஸ்கன்‌ துறவியாயிருந்தவர்‌, இம்மகா திருநாளை எந்தெந்த மேற்றிராசனங்களில்‌ கொண்டாட விரும்புகிறார்களோ, அங்கெல்லாம்‌ கொண்டாடலாம்‌ என்று அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்‌; 1477ம்‌ வருடம்‌, தனது மேற்றிராசனமான உரோமையில்‌, இந்த திருநாளைக்‌ கொண்டாடினார்‌; திருநாளுக்கான விசேஷ திவ்ய பலிபூசை ஜெபங்களையும்‌, கட்டளை ஜெபத்தையும்‌ இயற்றினார்‌; அதற்கான கும்‌ புரக்செல்சா என்ற பாப்பரசரின்‌ ஆணை மடலையும்‌ எழுதி, 1477ம்‌ வருடம்‌, பிப்ரவரி 28ம்‌ தேதியன்று, பிரகடனம்‌ செய்தார்‌.1483ம்‌ வருடம்‌ செப்டம்பர்‌ மாதம்‌ 4ம்‌ தேதியன்று, இந்த திருநாளை, “என்றும்‌ கன்னிகையான அர்ச்‌.கன்னிமாமரியின்‌ அமல உற்பவத்திருநாள்!”‌ என்று அழைத்தார்‌.
  16ம்‌ கிரகோரி பாப்பரசர்‌ ஆண்ட காலத்தில்‌, பல்வேறு நாடுகளிலிருந்த மேற்றிராணியார்கள்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அமல உற்பவத்தை வேத சத்தியமாக பிரகடனம்‌ செய்ய வேண்டும்‌ என்று வலியுறுத்தத்‌ துவக்கினர்‌. 
 திருச்சபையின்‌ எல்லா மேற்றிராணியார்களுடைய ஆதரவுடன்‌, முத்‌.9ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, 1854ம்‌ வருடம்‌ இந்த விசுவாச சத்தியத்தை பிரகடனம்‌ செய்தார்‌; இதற்கு முன்பாக எல்லா மேற்றிராணியார்களுடன்‌, 1851-53ம்‌ வருடங்களில்‌ இந்த வேத சத்தியத்தைப்பற்றி ஆலோசனை நடத்தியிருந்தார்‌. இன்‌ எஃபாபிலிஸ்‌ தேவுஸ்‌ (வார்த்தைகளால்‌ விவரிக்கமுடியாத சர்வேசுரன்‌ என்று பொருள்‌) என்கிற ஒரு ஆணை மடலை வெளியிட்டு, தமது தவறா வரத்தைக்‌ கொண்டு, “மகா பரிசுத்த தேவ மாதா ஜென்மப்‌ பாவமில்லாமல்‌ பிறந்தார்கள்!”‌ என்கிற சத்தியத்தை, வேத சத்தியமாக அதிகாரபூர்வமாக பிரகடனம்‌ செய்தார்‌. இதை ஏற்காத எவனும்‌ திருச்சபைக்குப்‌ புறம்பாவான்‌; அவிசுவாசியும்‌ பதிதனுமாவான்‌.
 1858ம்‌ வருடம்‌ மகா பரிசுத்த தேவமாதா, லூர்து நகரில்‌ காட்சியளித்தபோது, “நாமே அமல உற்பவம்!”, என்று அறிவித்தார்கள்‌. “இம்மாபெரும்‌ திருநாளில்‌, நாம்‌ சுத்தக்கருத்துடன், பரிசுத்தர்களாக ‌ ஜீவிப்பதற்கு, மகா பரிசுத்த தேவ மாதாவைக்‌ கண்டுபாவிக்க வேண்டும்!” என்று அர்ச்‌.அல்‌ஃபோன்ஸ்‌ மரிய லிகோரியார்‌ நம்மை வலியுறுத்துகின்றார்‌. 

 செபம்
தேவதாயாரான மிகவும்‌ பரிசுத்த கன்னிமரியாயின்‌ அமலோற்பவம்‌ ஸ்துதிக்கப்படக்கடவது! (300 நாள்‌) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக