டிசம்பர் 09ம் தேதி
ஸ்துதியரும், தேவமாதா துறவற சபையின் ஸ்தாபகருமான அர்ச்.பீட்டர் ஃபூரியர்
பிரான்சிலுள்ள லொரேயின் பகுதியைச் சேர்ந்த மைர்கோர்ட் என்ற இடத்தில், இவர்,1563ம் வருடம் பிறந்தார். அர்ச்.அகுஸ்தீனாரின் துறவற சபையில் சேர்ந்து, 1585ம் வருடம் குருப்பட்டம் பெற்றார்.
பிரான்சிலேயே மிகுந்த வறுமை நிலையிலிருந்ததும், ஒழுக்கக்கேடு நிறைந்ததுமான நகரத்தைக் தேர்ந்தெடுத்து, அங்கே தனது குருத்துவப் பணியை ஆற்றினார்; மட்டெயின்கோர்ட் என்ற அந்நகரம் கால்வினிஸ்ட் பதிதர்களுடைய அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தது.
அங்கு சென்று இரண்டு வருட காலத்திற்குள், இவருடைய அர்ச்சிஷ்டதனத்தினுடைய முன்மாதிரிகையாலும், தப பரித்தியாகங்களுடன் கூடிய இவருடைய அத்தியந்த ஜெபங்களாலும், இனிமையான ஞான உபதேச வகுப்புகளாலும், அந்நகரம் முழுவதும் மனந்திரும்பியது. இவர் தமது பங்கு மக்களுடைய நலனுக்காக, பரஸ்பர வங்கியை ஏற்படுத்தினார்; மேலும், மக்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவு, தகராறுகளை நிவர்த்தி செய்வதற்காக, நட்புறவை ஏற் படுத்தி, அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு நீதிமன்றத்தையும் ஏற்படுத்தினார்.
அதே சமயம், அவருடைய பங்கிலிருந்த ஏழை பிள்ளைகள் தான், அவருடைய முக்கிய முதன்மையான அக்கறைக்குப் பாத்திரவான்களாயிருந்தனர்; ஏழைப் பெண்பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை கன்னியர்களால் நடத்தும்படியாக 1598ம் ஆண்டு, திறந்து வைத்தார்.முத்.அலெக்ஸ் டே கிளர்க் என்பவர்களுடைய வழிநடத்துதலின் கீழ், கன்னியர்கள், இப்பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தனர். இது பின்னாளில், தேவமாதா சபை என்ற துறவற சபையாக, அர்ச்.பீட்டர் ஃபூரியரால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த சபையைச் சேர்ந்த கன்னியர்களுடைய எண்ணிக்கை விரைவிலேயே மிகக் கூடுதலாக அதிகரித்தது. பிரஞ்சுப்புரட்சியின் காலத்தில், இந்த துறவற சபைக் கன்னியர்கள், 4000 பேர் இருந்தனர். அர்ச்.பீட்டர் ஃபூரியர், ஆச்சரியத்திற்குரிய ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் விளங்கினார். அநேக புராட்டஸ்டன்டு பதிதர்களை மனந்திருப்பி திருச்சபையில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியடைந்தார். 6 மாத கால இடைவெளிக்குள், இளவரசருக்குரிய பிராந்தியமான சால்ம் என்ற இடத்திலிருந்த எல்லா பரிதாபத்திற்குரிய புதியவர்களான (அவர் பதிதர்களை அவ்வாறு தான் அழைப்பார்!) புராட்டஸ்டன்டு பதிதர்களையும், பீட்டர் மனந்திருப்பி சத்திய திருச்சபையில் சேர்த்தார். அர்ச்.பீட்டர் ஃபூரியர் 1640ம் வருடம் பாக்கியமாக மரித்தார். 1897ம் வருடம், 13ம் சிங்கராயர் பாப்பரசர் அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார். பின்னாளில், இவர் கன்னியர்களுக்காக ஸ்தாபித்த தேவமாதா சபை,முத். மார்கிரட் பொர்கொய்ஸ் என்ற கன்னியாஸ்திரியால், கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்துதியரான அர்ச்.பீட்டர் ஃபூரியரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக