Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

x-mas sermon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
x-mas sermon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 டிசம்பர், 2023

கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

 Christus natus est nobis; adoremus
கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

(உரோமை கட்டளை ஜெபம்)



கிறிஸ்துமஸ் இரவிலே, திருச்சபை சகல விசுவாசிகளுக்கும் இத்தகைய அழைப்பை விடுக்கிறது. அதற்கு உடனே செவி சாய்ப்பாயாக. ஓ எனது ஆன்மாவே, நினைவின் வழியாக பெத்லேகம் சென்று, நமது மீட்பரின் தோற்றத்தைத் தியானி, விவரிக்க முடியாத நேசத்தை நமது கண்கள் காண்கின்றன! உலகை சிருஷ்டித்து. சர்வேசுரன் ஒரு சிறு சிசுவாக குழந்தையாக அவரது தெய்வீக மகிமைகள் அனைத்தும் களையப்பட்டு இருக்கிறார். ஆதலால் நமது அச்சங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து நீக்கி, அனைத்து உள்ளங்களையும் அவரிடம் ஈர்த்துக்கொள்ளும் வடிவமாக இருக்கிறார். நமக்காக தன்னையே அழித்துக் கொள்ளும், அவரது நேசம்தான் எத்தகையது! நம்மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டுள்ளார்! பாருங்கள், எப்படி அவர் தமது சின்னஞ் சிறு கரங்களை உன்னை நோக்கி விரிப்பதையும், அவர் பின்னாளில் சொல்லவிருக்கும் சுமை சுமந்து சோர்ந்திருக்கும் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் நான் தீர்ப்பிடுவதற்காக உலகிற்கு வரவில்லை. ஆனால் உலகை மீட்கவே வந்தேன் என்ற வார்த்தைகள் அவரது இதயத்துடிப்பாக வெளிவருவதை உணருங்கள்.

இந்த தேவக் குழந்தையின் அன்பை யார்தான் தியானிக்க முடியும்! நம்மீது கொண்ட அளவற்ற அன்பே அவரை மோட்சத்திலிருந்து, கீழே இந்த எளிய மாட்டைக் குடிலிலே கொண்டு வந்தது. எதற்காக? நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்லவே! அப்படிப்பட்டவரை எப்படி நேசிக்கப் போகிறோம்? அவருக்கு எவ்வாறு பதில் அன்பு காட்டப் போகிறோம்?

நாம் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும், நமது கடந்த கால பிரமாணிக்கமின்மை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவரது அன்பான, பரிவிரக்கமுள்ள இதயத்தின் மொழி நம்மை இனிமையாலும் நம்பிக்கை உணர்வாலும் நிரப்புகிறது. இப்படி இரக்கத்தையும், பரிவையும் அன்பையும் வெளிப்படுத்தும் சேச பாலனை வாருங்கள் ஆராதிப்போம்!


source - Salve Regina - December 2007


Download Tamil Christmas Songs MP3

வெள்ளி, 14 ஜனவரி, 2022

நமதாண்டவரின் திவ்யபிறப்பு திருநாளின் திருவிழிப்பிற்கான ஞானதியான பிரசங்கம்: அர்ச்.பெர்னார்ட்.

 நமதாண்டவரின் திவ்யபிறப்பு திருநாளின் திருவிழிப்பிற்கான ஞானதியான பிரசங்கம்: அர்ச்.பெர்னார்ட்.

சுபாவத்திற்கு மேற்பட்டதும் சுபாவத்திற்காகவும், தன்னிகரற்ற உமது அற்புதத்தால் சுபாவத்தைக் கடந்ததும், ஆனால் அதே நேரத்தில் சுபாவத்தை உமது தேவஇரகசியத்தால் பரிகரிப்பதற்காகவும், நிகழ்ந்த ஓ அற்புத பிறப்பே! சர்வேசுரனின் குமாரன் பிறந்துள்ளார்: மகத்தானவற்றை ஆசிப்பவன் பேருவுவகை கொள்ளட்டும். ஏனெனில் மாபெரும் நற்கொடைகளை அளிப்பவர் இதோ வருகிறார்! சகோதரரே! இதோ எல்லாவற்றிற்கும் உரிமையாளர். இவ்வாறு, அவருடைய உரிமைச்சொத்தை நாமும் பெறும்படியாக, நாம் அவரை பக்திபற்றுதலுடன் வரவேற்போம். “நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்கு தானம் பண்ணாதிருப்பதெப்படி?” (ரோமர்.8:32). யூதாவின் பெத்லகேமில் சேசுகிறிஸ்து பிறந்தார். எளிய மக்களாகிய நம்மேல் கொண்ட அவருடைய அளவற்ற இரக்கத்தைப் பாருங்கள்! ராஜநகரமான ஜெருசலேமில் அல்ல அவர் பிறந்தது. மாறாக, யூதாவிலேயே தாழ்ந்த நகரமான பெத்லகேமில் பிறந்தார். ஓ சிறிய பெத்லகமே! இப்பொழுது உன்னை ஆண்டவர் மாபெரும் நகரமாக மாற்றினார்! மிகப்பெரியவரான சர்வேசுரன் உன்னிடத்தில் மிகச்சிறியவராக வந்ததால், உன்னை மிகப்பெரியதாக மாற்றினார். பெத்லகமே! களிகூர்வாயாக! உனது எல்லா தெருக்களிலும் திருவிழாவின் அல்லேலூயா கிதம் பாடப்படட்டும். அந்த மாபெரும் விலைமதிப்பில்லாத மாட்டுத் தொழுவத்தையும் திவ்யபாலன் படுத்துறங்கிய முன்னிட்டியையும்பற்றி கேள்வியுறும் மற்றெந்த நகரம் தான் உன்னைப் பார்த்து பொறாமைப்படாமல் இருக்கும்? இதிலிருந்து நாம் அறியவேண்டியது, பெத்லகேமில் பிறப்பதற்கு திருவுளமான திவ்ய கர்த்தர் எவ்வாறு அவரை நாம் வரவேற்கிறதை விரும்புகிறார் என்பதேயாம். அரசமாளிகையில், அரசருக்கெல்லாம் அரசருக்குரிய அரண்மனை மாளிகையில் அவர் மகிமையுடன் வரவேற்கப்படுவதையா அவர் விரும்பினார்? அல்லவே. இவற்றையெல்லாம் தேடி பரலோக சிம்மாசனத்தில் இருந்து அவர் கீழே இறங்கி பூமிக்கு வரவில்லை. மோட்சத்தில், நித்தியத்திற்குமாக அவையெல்லாம், ஏராளமாக உள்ளன. ஆனால் மோட்சத்தில் “தரித்திரம்” என்ற ஒன்றுதான் காணக்கிடைக்காததாக இருக்கிறது. 

பூமியிலோ, இது அதிகமாக, மிக அதிகமாக உள்ளது. மனிதர் இதன் விலைமதிப்பை அறியாதிருக்கின்றனர். இதனை ஆசித்து, அதைத் தமக்கே உரியதாக்கிக் கொள்ளவும், நம் அனைவருக்குமாக அதை விலையுயர்ந்த தாக்கும்படியாக, சர்வேசுரனின் திவ்யகுமாரன் பூவுலகிற்கு இறங்கி வந்தார். பூமியில் இருக்கும் சகல மனுமக்களே! புழுதியில் இருக்கும் நீங்கள் கேளுங்கள். உங்களையே உலுக்கிக் கொள்ளுங்கள். ஆண்டவரைப் பற்றி புகழ்ச்சி கீதங்கள் பாடுங்கள். இதோ! நோயாளிகளைச் சந்திக்க மருத்துவர் வருகின்றார்! அடிமைகளை மிட்பதற்கு இரட்சகர் வருகின்றார். தவறுபவர்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கவும், இறந்தவர்களுக்கு ஜீவியத்தை அருளும்படியாகவும், வருகிறார். ஏனெனில் நமது பாவங்களை யெல்லாம், ஆழ்கடலில் எறிவதற்காக நம்மிடம் வருகிறார். அவர் நமது நோய்களை குணப்படுத்துவார். நம்மை அவரது தோள்களிலே சுமந்து தமது மகத்துவமிக்க அரியாசணைக்கு இட்டுச் செல்வார். அது மாபெரும் வல்லமை வாய்ந்ததாக திகழும். அதைவிட ஆச்சரியமிக்க விதத்தில் நமது மேல் அவர் கொண்டிருக்கும் எல்லையில்லா இரக்கமே, நமக்குத் துணை புரியும்படி அவரை நம்மைத் தேடி வரச் செய்தது.

ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட அதிபிரகாசமான அந்த நாளிலிருந்து விரட்டப்பட்டான். இக்குறுகிய இடத்தில் அடைபட்டான். இந்த இருண்டுபோன நாளுக்குள் வந்தான்.ஏனெனில் அவனுக்குள் இருந்த சத்தியத்தின் ஒளி அணைந்துபோனது. அந்த இருளான நாளில் தான் நாம் அனைவரும் பிறந்தோம். ஆயினும் சர்வேசுரனுடைய இரக்கமே, அணையாத ஒரு சிறு ஒளித்துகளை நமக்குள் விட்டு வைத்தது. சத்தியத்தின் ஒளியை அடைய விரும்பும் அனைவரையும் நீதியின் சூரியனான சர்வேசுரனுடைய ஏக குமாரனே, மாபெரும் ஒளியுடைய மெழுகு விளக்கு போல தம்மிடம் அழைக்கின்றார். அவரை அணுகிச்செல்வோர் அனைவரும் அவருடன், விளக்கில் நெருப்பும் ஒளியும் இணைந்திருப்பதுபோல ஒன்றிணைவர். எனவே, நாம் இவ்வுலகைவிட்டுப் பிரியும்போது நித்திய இருளுக்கு செல்லாதபடி, இந்த மகத்துவமிக்கதும் பிரகாசமிக்கதுமான நட்சத்திரத்தினின்று புறப்படும் சத்தியத்தின் அறியவியலுக்கான ஒளியினால் நம்மை ஒளிர வைத்துக்கொள்வோம். சர்வேசுரன், உங்களை குணமாக்கும்படியாக அர்ச்.கன்னிமாமரி வழியாக கிறிஸ்துவை உங்களுக்கு அளித்தார். 

அதில், கடவுளும் மனிதனும் சேர்ந்த ஒரு கலவை மருந்து, அதாவது உங்களுடைய குற்றங்குறைகளைத் தீர்ப்பதற்கான மாற்றுமருந்து உள்ளது. கட்டிட வேலைக்கு உலக்கையால் கலந்து செய்யப்படும், காரைச்சாந்து போல, அர்ச்.கன்னிமாமரியின் திருவுதரத்தில், கடவுள், மனிதன் என்னும் இரு வஸ்துக்களும் திவ்ய இஸ்பிரித்துவானவரால் கலக்கப்பட்டு தேவமனிதசுபாவம் உருவானது. கிறிஸ்துவைப் பெற உங்களுக்கு தகுதியில்லையாதலால், தேவமாதா மூலமாகவே நிங்கள் மோட்சத்திலிருந்து பெற விரும்பும் அனைத்தையும் அடையும்பொருட்டு, கிறிஸ்துவானவர் அர்ச்.கன்னிமாமரியிடம் கொடுக்கப்பட்டார். மாதாவே, உங்கள் அனைவருக்காகவும் சர்வேசுரனையே திவ்ய மகனாகப் பெற்றெடுத்தார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்குத் தேவையான பாவத்திற்கான மாற்றுமருந்தைக் கண்டடைகின்றோம். நித்தியத்திற்கும் பரிசுத்த கன்னிகையாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்கு தேவையான சகாயங்களை அடைகின்றோம். ஏனெனில், தேவமாதாவின் பரிசுத்த கரங்களின் வழியாக மட்டுமே அனைத்தும் மனுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படியாக சர்வேசுரன் திருவுளம் கொண்டுள்ளார்.

இன்று உங்களை பரிசுத்தப்படுத்தும்படியாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள். அப்பொழுது, நாளைக்கு, உங்களுக்குள் சர்வேசுரனுடைய மகத்துவமிக்க வல்லமை விளங்குவதை நிங்கள் காண்பீர்கள். மனித நாவால் விவரிக்கமுடியாத தேவஇரகசியமான நமது நேச ஆண்டவரின் திவ்யபிறப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், அன்பார்ந்த சகோதரரே! நம்மை அதற்குத் தகுந்தபடி எல்லாவிதத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளும்படி, நாம் மெய்யாகவே இப்பொழுது எச்சரிக்கப்படுகின்றோம். ஏனெனில் பரிசுத்தருக்கெல்லாம் பரிசுத்தர்  இங்கு இருக்கின்றார். “நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தராகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவி 19:2) என்று இங்கு விற்றிருக்கும் நம் ஆண்டவர் நம்மிடம் கூறுகின்றார். ஏனென்றால், பரிசுத்தமானதை நாய்களுக்கும், முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதபடிக்கு, இப்பரிசுத்த ஸ்தலத்திற்கு வருமுன் முதலில், நீங்கள், உங்களுடைய பாவங்களிலிருந்தும் அநீத இன்பங்களினின்றும் நீங்கி பரிசுத்தமாக வேண்டும்.

சகோதரர்களே! நாம் இதற்காகத் தான் ஜீவிக்கின்றோம். இதற்காகத் தான் இவ்வுலகில் பிறந்தோம். இதற்காகத் தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதற்காகத் தான் நமக்காக, இந்த நாள் இப்பொழுது தோன்றியுள்ளது. இருளடைந்த இரவாகவே ஒரு காலம் இருந்தது. அப்போது, யாரும் இந்த அலுவலை செய்யக் கூடாமலிருந்தனர். சத்தியத்தின் ஒளி தோன்றிய கிறிஸ்துவின் திவ்ய பிறப்பிற்கு முன்வரைக்கும் இந்த உலகம் முழுவதும் இரவின் இருளில் நிலைத்திருந்தது. “மனந்திரும்புதல்”; என்னும் நமது “அந்தரங்க மறுபிறப்பு” ஏற்படும் வரைக்கும் நாம் ஒவ்வொருவரும் இரவின் இருளிலேயே நிலைத்திருந்தோம். எனவே, இன்று, நம்மை அர்ச்சித்துக் கொள்வோம். மெய்யாகவே, இரவின் தூக்க மயக்கத்திலிருந்து எழுந்து, தெளிவடைவதற்காக நம்மையே உலுக்கிக்கொள்வோம். ஏனெனில் நாளைக்கு அர்ச்சிப்பிற்கான ஆயத்தம் செய்வதற்காக நேரம் நமக்கு கொடுக்கப்படாது. ஏனெனில், நாளைக்கு “உங்களுக்குள் தேவமகத்துவத்தைக் காண்பீர்கள்”; என்பதற்கேற்ப, இன்று நீதி விதைக்கப்படுகின்றது. நாளைக்கு அதற்கான தீர்ப்பைப் பெறுவோம். பரிசுத்த உத்தமதனத்தை இதுவரைக்கும் வெறுத்து வந்த மனிதனால் தேவமகத்துவத்தைக் காணமுடியாது. அவனால் மகிமையின் சூரியன், தன் மேல் உதயமாவதை இன்றும் காணமுடியாது. நாளையும் காணமுடியாது. ஏனென்றால் அவன்மேல் நிதியின் சூரியனானவர் எழுந்தருள மாட்டார். இன்று நமக்கு நிதியின் பிதாவாக விளங்கும் சர்வேசுரன், நாமும் அவருடன் நித்தியமகிமையில் தோன்றும்படியாக, நாளைக்கு நமது உயிரளிக்கும் நித்திய ஜீவியமாக நம்முன் தோன்றுவார். “சேசுகிறிஸ்து, சர்வேசுரனின் திவ்யகுமாரன் யூதாவின் பெத்லகேமில் பிறந்தார்” என்ற பரிபூரணமான தேவவரப்பரசாதத்தைக் கொண்டதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான வார்த்தையைக் கேட்டோம். ஆனால், பக்தியற்றவர்களும், நன்றிகெட்டவர்களும், கெட்ட கிறிஸ்துவர்களும் இதைப்பற்றி, “இது ஒன்றும் புதிதல்ல.  வெகுகாலத்திற்கு முன்பே இதை அறிவோம். வெகு நீண்ட காலத்திற்கு முன்பே கிறிஸ்து பிறந்தார்” என்று பேசாதிருப்பார்களாக! ஏனெனில், கிறிஸ்து, “நம்முடைய இக்காலங்களுக்கெல்லாம் முன்னரே பிறந்தார்” என்பதற்கு பதிலாக “எல்லா காலத்திற்கும் முன்னதாக பிறந்தார்” என்று நான் கூறுகின்றேன். ஆனால் திவ்ய கர்த்தரின் அந்த திவ்ய பிறப்பு இருளை தனது மறைவிடமாகக் கொண்டிருந்தது. அல்லது, நம்மால் காணக்கூடாத ஒளியினுள் குடியிருந்தது. பிதாவின் இருதயத்தினுள் அது மறைந்திருந்தது. தாம் ஓரளவிற்கு அறியப்படும் படியாக அவர் உலகிற்கு வந்து பிறந்தார். காலம் நிறைவுற்றபோது, அவர் மாமிசமெடுத்து பிறந்தார். எனவே, ஆத்துமங்களை எப்பொழுதும் புதுப்பிக்கும் ஆண்டவருடைய திவ்ய பிறப்பு, எப்பொழுதும் புதியதாகவே திகழ்கிறது. அது ஒருபோதும், பலனளிக்காத, உதிர்ந்துபோன பழைமையான நிகழ்வு அல்ல. நமது நேச ஆண்டவரின் திவ்ய பிறப்பு, பரிசுத்தமாக அழியாததாக, நம்மைப் பரிசுத்தர்களாக்குவதற்காக, நித்திய காலத்திற்குமாக நிலைத்திருக்கும்.