விலையுயர்ந்த பொருள்
தன் சிடர்களை பாரிஸூக்கு அனுப்பியபிறகு அர்ச்.சாமிநாதர் தன் சிடர் சகோ.ஸ்டீபனுடன் ரோமுக்கு செல்ல திட்டமிட்டார். அப்போது புரோயிலில் இருந்த அவருடைய மடத்திற்கு நான்கு புதிய துறவற சகோதரர்கள் வந்ததால் சாமிநாதர் தமது ரோமைநகர பயணத்தை சிறிது காலத்திற்கு தள்ளி போட்டார். ஆர்னால்டு, ரோமியோ, போன்சியோ, மற்றும் ரேமண்டு என்ற அந்த நான்கு சகோதரர்களும் ஆன்ம தாகம் கொண்ட நல்ல இளைஞர்கள். ஆயினும் அவர்களுக்கு துறவற ஜீவியத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. எனவே துறவற ஜீவியத்திற்கான ஞானப்பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டியது மிக அவசியம் என்று சாமிநாதர் உணர்ந்தார். அதன்படி அர்ச்.சாமிநாதர், அவர்களுக்கு ஞானஜிவியத்திற்கான உத்தம பயிற்சியை அளித்து நல்ல துறவிகளாக உருவாக்கினார். 1217ம் ஆண்டு அக்டோபர் மாதம் நித்திய நகரமான ரோமாபுரிக்கான பயணத்தை சாமிநாதர் தன் சீடர்களுடன் துவக்கினார்.
அப்போது, சகோ.ஸ்டீபன் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, ரோமாபுரிக்கு நாம் தெற்குதிசையாகப் போகிறோமா அல்லது வடக்கு திசைவழி பயணத்தை மேற்கொள்கிறோமா?” என்று கேட்டார்.
அதற்கு சாமிநாதர், “தெற்கு நகரமான மார்சேல்ஸ் வழியாக சென்று மத்தியதரைக்கடல் நகரங்களின் வழியாக சென்றால் எளிதாக ரோமாபுரியை அடையலாம். ஆனால், வடக்குதிசையாகச் சென்றால், பாரீஸ் வழியாக செல்ல வேண்டும். அப்போது அங்கு புதிதாக சென்று மடத்தை ஏற்படுத்தியிருக்கும் நமது மற்ற சகோதரர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் காணலாம். மேலும் பிரான்சின் வடக்குப் பகுதி மக்களுக்கு ஞானப்பிரசங்கியார்கள் தேவைப்படுகிறார்கள். எனவே நாம் அதிக தூர பயணமானாலும் இந்த வடக்குதிசைவழி பயணத்தையே மேற்கொள்வோம்” என்றார். அதேபோல் அவர்கள் பாரிஸ் சென்றபோது, அங்கு சாமிநாதர், தன் சீடர்கள், பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒரு சிறு இல்லத்தை வாங்கி அதை புதிய மடமாக மாற்றியிருந்ததைக் கண்டார். அம்மடத்தை அர்ச். யாகப்பருடைய பாதுகாவலில் அர்ப்பணித்திருந்தனர். மேலும் அங்கு தன் சீடர்கள் துறவற ஒழுங்குகளை நன்றாக கடைபிடித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதையும் சாமிநாதர் கண்டார்.
அம்மடத்தின் துறவற சகோதரர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் வேத இயல் மற்றும் வேதாகமத்தைப் பற்றிய துறைகளில் சேர்ந்து கல்வி பயின்று வந்தனர். பிறகு, அங்கிருந்து சகோ ஸ்டீபன் பிறந்த நகரமான, மெட்ஸ் என்ற பெல்ஜிய நகரத்தை அடைந்ததும், சகோ.ஸ்டீபன் தங்களுடன் தங்கி விடுவதற்கு, அந்நகர மக்கள் அர்ச்.சாமிநாதரிடம் அனுமதிவேண்டினர். அந்நேரத்தில் மெட்ஸ் நகரத்திற்கு ஒரு ஞானப்பிரசங்கியார் அவசியமாகத் தேவைப்பட்டதை சாமிநாதரும் அறிவார். சகோ.ஸ்டீபன் நல்ல பிரசங்கியாராகவும் அனுபவமிக்க வேதபோதகருமாக விளங்கினார். அதனால் அவர் அங்கு தங்குவாரேயானால், ஓரிரு வருடங்களுக்குள்போதிக்கும் துறவிகளுக்கான ஒரு மடத்தை துவக்க முடியும் என்பதையும் சிந்தித்தவராக அர்ச்.சாமிநாதர் அவ்வூர் மக்களைப் பார்த்து, “ நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். சகோ.ஸ்டீபன் இங்கு தங்கினால் அவர் அனேக நன்மைகளைச் செய்யக் கூடும்” என்று கூறினார். இதுவரை தானும் தன் சபைத் தலைவருடன் ரோமாபுரிக்கு செல்வோம் என்றும் அங்கு மோட்சத்தைப் பற்றியும், சர்வேசுரனின் மகத்துவத்தைப் பற்றியும் சகல அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும் அர்ச்.சாமிநாதர் ஆற்றவிருக்கும் அரிய பிரசங்கங்களைக் கேட்கப் போகிறோம் என்றும் எண்ணியிருந்த சகோ.ஸ்டீபன், தனக்கு வந்திட்ட இந்த திடீர் பொறுப்பைப் பற்றி திடுக்கிட்டார். இருப்பினும், அர்ச்.சாமிநாதர் தனக்களித்திட்ட இப்பொறுப்பு சர்வேசுரனிடமிருந்தே வந்ததாக எண்ணியவராக சகோ.ஸ்டீபன் உடனே அதற்கு சம்மதித்தார். அவர் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, என்னால் கூடுமான அனைத்தையும் செய்து இந்நகர மக்களுக்கு உதவுவேன். ஆனால் நிங்கள் எனக்காக எப்பொழுதும் உங்கள் ஜெபத்தில் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கேட்டார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “நமது ஆண்டவருடைய பிடசந்நிதானத்தில் தினமும் நான் உம்மை நினைவுகூருவேன்” என்று பதிலளித்தார். பிறகு சாமிநாதர் தன் சிடரிடமிருந்தும் அந்நகரத்தாரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு தன் பயணத்தை, தெற்கு ஜெர்மானிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக ஞானப்பிரசங்கங்களை நிகழ்த்திக் கொண்டே, ரோம்நகரை நோக்கித் தொடர்ந்தார். வெண்கம்பளியினாலும் கறுப்பு அங்கியினாலுமான அவருடைய துறவற உடுப்பு எண்ணற்ற மக்களை சாமிநாதர்பால் ஈர்த்தது. அதற்குமேலாக பக்திபற்றுதலையும் தேவசிநேக நெருப்பையும் கேட்பவர் இருதயங்களில் ஏற்படுத்திய அவருடைய ஞானமிக்க பிரசங்கங்கள் மக்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.
அவர் சென்ற இடமெல்லாம் ஏராளமான மக்கள் தங்களுடைய பாவ ஜீவியத்தை விட்டு நல்ல பாவசங்கீரத்தனம் செய்து உத்தம கத்தோலிக்க ஜீவியத்திற்கு திரும்பினர். தன்னை சந்தித்த மக்கள் சத்திய வேதத்தைப் பற்றிக் கேட்ட வினாக்களுக்கெல்லாம் தெளிவானதும் இலகுவானதுமான விடைகளை மிக இனிமையாகக் கூறினார். பல ஊர்களில் மக்களிடையே நிகழ்ந்த பற்பல சண்டை சச்சரவுகளை திர்த்து சமாதானத்தை ஏற்படுத்தினார். ஒரு நாள் சாமிநாதர் கிரகோரி, ஹென்றி, ஆல்பர்ட், ஓத்தோ என்ற நான்கு இளைஞர்களை சந்தித்தார். அவர்களுடைய கிராமத்தில், அர்ச்.சாமிநாதர் தேவமாதாவைப்பற்றி நிகழ்த்திய ஞானப்பிரசங்கமே அவர்கள் அவரைச் சந்திக்கும்படிச் செய்தது. அவ்விளைஞர்கள் சாமிநாதரிடம், “சுவாமி! நாங்கள் இதுவரை தேவமாதாவைப்பற்றி இவ்வளவு அருமையான பிரசங்கத்தைக் கேட்டதில்லை. கேட்பவர் யாவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில், தாங்கள் பரலோக இராக்கினியான சர்வேசுரனுடைய மாதாவைப் பற்றிக் கூறியவையெல்லாம் உண்மைதானே?” என்று வினவினர்.
அதற்கு அர்ச்.சாமிநாதர் புன்முறுவலுடன் அவ்விளைஞர்களை நோக்கி, “நான் உண்மையையே தான் எப்பொழுதும் பேசுவேன் என் அன்பார்ந்த பிள்ளைகளே!” என்றார்.
அதற்கு கிரகோரி அவரிடம், “அர்ச்.கன்னிமரியம்மாள் ஒருபோதும் நமது ஜெபத்தின் மன்றாட்டைப் புறக்கணிக்கமாட்டார்கள். நம்மைக் கைவிடமாட்டார்கள்” என்று நீங்கள் கூறினீர்கள்” என்றான்.
அதற்கு அர்ச்.சாமிநாதர், “ஆம். அவ்வாறு தான் நான் கூறினேன்” என்றார். “ஆனால், நான் அனேக முறை தேவமாதாவிடம் பல நன்மைகளுக்காக ஜெபத்திருக்கிறேன். அவர்கள் எனக்கு அவற்றை தந்ததில்லை.” என்று கிரகோரி கூறினான்.
“ ஆம். எனக்கும் தான்” என்று ஓத்தோவும் அவனுடன் சேர்ந்து கூறினான்.
இதைக் கேட்ட அர்ச்.சாமிநாதர் சற்று நேரம் சிந்தித்துவிட்டு அவர்களிடம், “இதுவரை உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தவற்றிலேயே யார் அதிக விலையுயர்ந்த பொருளைக் கொடுத்தார்?” என்று கேட்டார்.
அதற்கு கிரகோரி, “சுவாமி! என் தந்தையார் பெரிய பணக்காரர். என்னுடைய 18வது பிறந்த நாள் பரிசாக இரத்தினங்களும் மாணிக்கங்களும் வைரங்களும் பதியப்பெற்ற ஒரு வாளைப் பரிசாகக் கொடுத்தார். அதன் விலை மிக அதிகம்” என்று கூறினான்.
பிறகு, ஓத்தோ, “சுவாமி! என் தந்தை அவ்வளவு பெரிய பணக்காரர் அல்ல. இருப்பினும் கடந்த வருடம் எனக்கு அவர் தன்னுடைய குதிரையையே பரிசாகக் கொடுத்தார். அது காற்றைப் போல வேகமாக ஓடும். அதற்காக நான் அவருக்கு நான் சரியாக நன்றிகூட கூறவில்லை” என்றான்.
பிறகு அர்ச்.சாமிநாதர் ஆல்பர்ட், ஹென்றி என்ற மற்ற இருவரையும் நோக்கி “ பிள்ளைகளே! உங்களுக்குக் கிடைத்த அதிமிகு விலையுயர்ந்த பொருள் என்ன?” என்றார்.
அவர்கள் இருவரும் மற்றவர்களைப் போல இல்லாமல் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஹென்றி தனக்குள்ள அபாரமான ஞாபக சக்தியையே தனக்குக் கிடைத்த விலைமதிப்பில்லாத கொடை என்று கூறினான். ஆல்பர்ட், ஆரோக்கியமான நோயற்ற சரீர சுகத்தையே தனக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை என்று கூறினான். இவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அவ்விளைஞர் களிடம், உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களெல்லாம் கொண்டிருக்கும் ஒப்பற்ற கொடை மனுக்குலத்தின் இரட்சணியமே என்று தெளிவாகக் கூறினார். அக்கொடை ஒன்றே அவர்களுக்கு இலவசமாக நித்திய பரலோக ஜிவியத்தைப் பெற்றுத் தரக்கூடியது என்றும் விளக்கினார்.
மேலும், “சர்வேசுரனுடைய நித்திய ஞானத்திட்டத்தின் பிரகாரம், அத்தகைய அற்புத கொடையான இரட்சணியத்தை சர்வேசுரனிடமிருந்து, பரிசுத்த மாதாவே நம் அனைவருக்கும் பெற்றுத் தந்தார்கள். மங்களவார்த்தையின் போது, நம்மேல் கொண்ட அளவில்லா சிநேகத்தினால், மனுக்குலத்தின் இரட்சணியத்தையே தமது “ஆகட்டும்” என்ற வார்த்தையால் சாத்தியமாக்கிய தேவமாதா நிங்கள் கேட்கும் இந்த சாமானிய உதவிகளைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்களா?” என்று சாமிநாதர் அவர்களிடம் வினவினார்.