நவம்பர் 24ம் தேதி
காட்சி தியானியும், ஸ்துதியரும், வேதபாரகருமன
அர்ச். சிலுவை அருளப்பர்
ஜூவான் தே யெப்பெஸ் ஆல்வாரெஸ்,1542ம் வருடம்,ஜூன் 24ம் தேதி,ஸ்பெயின் நாட்டிலுள்ள ஃபோன்டிவெரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். பிரான்சிஸ் தே யெப்பெஸ் என்ற ஸ்பெயின் நாட்டின் உயர்குடியைச் சேர்ந்த பிரபுவின் மகனாக அருளப்பர் பிறந்தார். ஸ்பெயினிலுள்ள மெதீனா தே காம்போஸ் என்ற நகரிலுள்ள கார்மெல் மடத்தில்,1563ம் வருடம்,அருளப்பர்,தன் 23வது வயதில்,இளந்துறவியாகச் சேர்ந்தார்,1567ம் வருடம்,25வது வயதில் குருப்பட்டம் பெற்றார். 1568ம் வருடம்,கார்மெல் சபையின் புகழ்பெற்ற காட்சி தியானியான அர்ச்.அவிலா தெரசம்மாள்,கார்மெல் சபையின் ஆரம்பகால கண்டிப்பான தபசுகளின் விதிமுறைகளை மறுபடியும் அனுசரிக்கும்படியாக,கார்மெல் சபையினுள் கொண்டு வரும்படியாக,கார்மெல் சபையை சீர்திருத்தும் அலுவலில் அர்ச். சிலுவை அருளப்பருடைய உதவியுடன் ஈடுபட்டார்கள்.
1569ம் வருடம்,டூரூவெலோ என்ற இடத்தில்,அர்ச்.சிலுவை அருளப்பர்,முதல் சீர்திருத்தப்பட்ட கார்மெல் சபை மடத்தைத் துவக்கினார். ஆனால் இவர்,அர்ச்.அவிலா தெரசம்மாளுடன் சேர்ந்து கொண்டு வந்த சீர்திருத்தத்தினால்,கார்மெல் துறவற சபையினுள் துறவியரிடையே உட்பூசல் ஏற்பட்டது. அதன் காரணமாக 1576ம் வருடம்,இவரை சிறை வைத்தனர். 1577ம் வருடம்,அர்ச். சிலுவை அருளப்பரை,டொலடோவில் மறுபடியும் ஒரு இருண்ட அறையில் அடைத்து வைத்தனர். அங்கு தான்,அர்ச்.சிலுவை அருளப்பர்,உலகப்புகழ் பெற்றதும்,இவருடைய மிகச்சிறந்தவையுமான காட்சிதியானக் கட்டுரைகள் அல்லது ஞானப் பாடல்களை,எழுதினார்: “ஆத்துமத்தின் உன்னத சங்கீதம்”ஆத்துமத்தின் இருண்ட இரவு”சிநேகத்தினுடைய உயிருள்ள சுவாலை” ஆகிய ஞான சங்கீதங்களை எழுதினார்.
“ஆத்துமத்தின் இருண்ட இரவு” என்கிற தனது காட்சிதியானக் கட்டுரையில்,ஆத்துமமானது,சகலத்தின் மீதும் கொண்டிருக்கும் சகல பற்றுதல்களையும் ஒவ்வொன்றாகத் துறந்துவிட்டு சகலத்தையும் கடந்து,இறுதியாக எவ்வாறு,நமதாண்டவர் சிலுவையில் அறையப்பட்டதையே அதனுடைய இறுதி மகிமையாக,அனுபவிக்கிறது,என்பதைப் பற்றி விவரிக்கின்றார். எட்டு சரணங்களுடைய பாடலாக இதை இயற்றியிருக்கிறார்.தன் மகா நேசமானவருடன் ஒன்றிணைந்து ஐக்கியமாவதற்கு முன்பாக, விசுவாசத்தினுடைய இருண்ட இரவைக் கடந்து செல்லும்போது தான், கொண்டிருந்த பாக்கியமானதும் துணிகரமானதுமான வீரத்துவத்தைப் பற்றி,ஆத்துமம் பாடுகிற பாடலாக இதை எழுதியுள்ளார். 1568ம் வருடம்,ஆகஸ்டு மாதம் அருளப்பர் சிறையிலிருந்து புதுமையாக வெளியேறி தப்பிச் சென்றார். பின்னாளில் 1585ம் வருடத்திலிருந்து 1587ம் வருடம் வரை, இவருக்கு ஆண்டலூசியா பிராந்தியத்தின் கார்மெல் துறவற சபையில் உதவி பொதுதலைமை அதிபர் பதவி அளிக்கப் பட்டது. இவருடைய இறுதி காலத்தில்,மறுபடியும்,சீர்திருத்தப்பட்ட கார்மெல் சபைத் துறவியரிடையே கருத்து வேறுபாடும் பிரிவினையும் ஏற்பட்டது,அர்ச்.சிலுவை அருளப்பர் தனிமையில் ஜெப தபத்தில் ஈடுபட்டு முழுமையான ஏகாந்த ஜீவியம் ஜீவித்தார். உபேடா என்ற இடத்தில் 1591ம் வருடம், டிசம்பர் 14ம் தேதியன்று,தன் 49வது வயதில்,அர்ச். சிலுவை அருளப்பர் பாக்கியமாக மரித்தார். செகொவியா நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.1726ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்டப் பட்டம் அளிக்கப்பட்டது.இவருடைய பரிசுத்த சரீரம் அழியாத சரீரமாக இந்நாள் வரை வணங்கப்பட்டு வருகிறது. 11ம் பத்திநாதர் பாப்பரசர்,1926ம் வருடம்,இவரை திருச்சபையின் வேதபாரகராகப் பிரகடனம் செய்தார். மாபெரும் கத்தோலிக்கக் காட்சி தியானிகளில் மிகச்சிறந்த காட்சி தியானியாகவும், ஞான சங்கீதங்கள் எழுதும் இஸ்பானிய கவிஞர்களில் மிகச்சிறந்த கவிஞராகவும்,அர்ச்.சிலுவை அருளப்பர் திகழ்கின்றார். திருச்சபையின் மிகச் சிறந்த வேதபாரகராகவும்,இஸ்பானிய தேசத்தின் துறவற மடங்களின் சீர்திருத்தவாதியாகவும்,சீர்திருத்தப்பட்ட கார்மெல் சபையின் தியான துறவற சபையின் இணை ஸ்தாபகராகவும் திகழ்கின்றார்.
ஸ்துதியரும்,காட்சிதியானியும்,வேதபாரகருமானஅர்ச்.சிலுவை அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்