ஜூலை2️7ம் தேதி
வேதசாட்சியான அர்ச். பந்தலேயோன் திருநாள்.
இவர் வேதசாட்சியாக கிபி
305ம் ஆண்டில் மரித்தார். இவர், நிக்கோமேதியாவைச் சேர்ந்த யுஸ்டோர்ஜியுஸ் என்கிற ஒரு
அஞ்ஞான பணக்காரரின் மகன். இவர், இவருடைய கிறீஸ்துவ தாயாரான யூபுலாவிடமிருந்து ஞான உபதேசத்தைக் கற்றுக்கொண்டார்.
பின்னர், இவர் கிறீஸ்துவ வேதத்தை
அனுசரிப்பதை விட்டு விட்டார்! மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். சக்கரவர்த்தி மாக்ஸிமியானுசி னுடைய குடும்ப மருத்துவரானார்; சங். ஹெர்மோலாவுஸ் என்கிற
குருவானவரால், இவர் மனந்திரும்பி, மறுபடியும்
கிறீஸ்துவ வேதத்தில் சேர்ந்து, வேதக்கடமைகளை அனுசரிக்கலானார்!
இவருடைய தந்தை இறந்தபிறகு, அவருடைய திரளான சொத்துக்கள், இவருக்குக் கிடைத்தன! உரோமை சாம்ராஜ்ஜியத்தின் கீழை
நாடுகளின் சக்கரவர்த்தியான தியோக்ளேஷியனுடைய காலத்தில், கிறீஸ்துவர்களுக்கு எதிரான வேதகலாபனை ஏற்பட்ட சமயத்தில், இவர் பேரில் காய்மகாரம்
கொண்ட சக அலுவலர்கள், சக்கரவர்த்தி
மாக்ஸிமியானுசிடம் இவர் ஒரு கிறீஸ்துவர்
என்று காட்டிக்கொடுத்தனர். மாக்ஸிமியானுஸ், இவரைக் காப்பாற்ற விரும்பி, கிறீஸ்துவ வேதத்தை மறுதலித்து விடும்படி கூறினான்.
ஆனால், பந்தலேயோன், பகிரங்கமாக சக்கரவர்த்தியிடம், தனது கிறீஸ்துவ வேத
விசுவாசத்தை உச்சாரணம் செய்தார்! ஆண்டவர் தான் உண்மையான சர்வேசுரன்
என்பதை நிரூபிப்பதற்காக, நடக்கக் கூடாமலிருந்த ஒரு பக்கவாத நோயாளியை
புதுமையாக நடக்கச் செய்தார்! இவர் இந்த புதுமையைச்
செய்தபோதிலும், இவர் கிறீஸ்துவ வேதத்தில்
உறுதியாக நிலைத்திருந்ததைக் கண்ட சக்கரவர்த்தி, அந்த
புதுமை ஒரு மாய வித்தை
என்று கூறி, இவருக்கு மரண தண்டனை விதித்தான்.
பந்தலேயோனின்
சரீரம் முதலில் நெருப்புப் பந்தங்களால் சுட்டெரிக்கப்பட்டது!அச்சமயம், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின்
உருவத்தில் தோன்றி, இவருடைய சரீரத்தில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களை குணப்படுத்தி, இவரை திடப்படுத் தினார்! தீப்பந்தங்கள் இதன்பின்
அணைக்கப்பட்டன! பிறகு, காய்ச்சப்பட்ட ஈயம் இருந்த ஒரு
கொப்பறையினுள் இவரைத் தூக்கிப் போட்டனர்! அச்சமயம், மறுபடியும், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின்
உருவத்தில் இவருடன் கூட கொப்பறையினுள் இறங்கினார்!
அடியில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு அவிந்துபோனது! உள்ளேயிருந்த காய்ச்சப்பட்டிருந்த ஈயம் குளிர்ந்து போனது! பின், இவரை,
ஒரு பெரிய கல்லைக் கட்டி, கடலில் எறிந்தனர்! ஆனால், அந்த கல் கடலில்
மூழ்காமல் மிதந்தது! அதன்பின்,
காட்டு மிருகங்கள் மத்தியில் இவரை விட்டனர்.
எல்லா கொடிய மிருகங்களும், இவர்பேரில் மயங்கி, இவருடைய பாதத்தண்டையில் உட்கார்ந்து கொண்டன! இவர்
அந்த மிருகங்களை ஆசீர்வதித்தபிறகே, அவை, இவரை விட்டுச்
சென்றன!
ஒரு பெரிய சக்கரத்தில்
இவர் கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கட்டப்பட்டார். ஆனால், கயிறுகள் அறுந்துபோயின! சக்கரம் உடைந்துபோனது! இவரை இறுதியாக தலையை,
ஒரு வாளால் வெட்டிக்கொல்ல முயற்சித்தபோது, அந்த வாள் வளைந்துபோனது!
இதைக் கண்ட கொலைஞர்கள் மனந்திரும்பி
கிறீஸ்துவர்களாயினர்! தன்னைக்
கொல்ல வந்த கொலைஞர்களை மன்னிக்கும்படி,
இவர் பரலோகத்தை நோக்கி ஜெபித்தார்! சர்வேசுரனிடம் அதற்காகக் கெஞ்சி மன்றாடினார்! இதனாலேயே இவர் “சகல இரக்கத்தையுடையவர்” என்கிற அர்த்தமுள்ள “பந்தேலேயோன்”
பெயரினால் அழைக்கப் படுகிறார்! பின்னர், தனக்கு மகா பாக்கியமான வேதசாட்சிய
மரணம் கிடைக்கும்படியாக ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடினார்! அதன் பின்னரே, இவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்!
மகிமையான வேத சாட்சிய மரணத்தினுடைய
கிரீடத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்!
கீழை நாடுகளில், அர்ச்.
பந்தலேயோன், மகா
பெரிய வேதசாட்சியாகவும், புதுமை செய்கிறவராகவும் வணங்கப்படுகிறார்! மத்திய நூற்றாண்டுகளில், மருத்துவர்களும் தாதியர்களும் இவரைப் பாதுகாவலராகக் கொண்டு இவர் மீது விசேஷ
பக்தி பற்றுதல் கொண்டிருந்தனர்! மேலும்,திருச்சபையின் உதவியாளர்களான பதினான்கு வேதசாட்சிகளில் இவரும் ஒருவராயிருந்தார்! ஆதிக்காலத்திலிருந்தே, இவருடைய பரிசுத்த இரத்தம் அடங்கிய ஒரு சிறிய குப்பி,
கான்ஸ்டான்டிநோபிளிலுள்ள
ஒரு தேவாலயத்தில், ஒரு அருளிக்கப்பேழையாக பூஜிதமாகக் காப்பாற்றப்பட்டு,
வணங்கப்பட்டு வந்தது!
அர்ச். பந்தலேயோன் திருநாள் அன்று, வருடந்தோறும், திடப்பொருளாக உறைந்து போயிருந்த இரத்தம், புதுமையாக, திரவ நிலையை அடைந்து,
நுரையுடன் காணப்படும்! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள்
பாரீஸிலுள்ள அர்ச். டென்னிஸ் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்தத் தலை, லியோன்ஸ் நகரில்
பூஜிதமாக வணங்கப்படுகிறது!✝
வேதசாட்சியான அர்ச். பந்தலேயோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!