Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Christmas News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Christmas News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2023

Epiphany of Our Lord - ஞானத்தைத் தேடி தரிசிப்போமாக!

Epiphany of Our Lord

ஞானத்தைத் தேடி அதில் வளரவேண்டும் என்ற உணர்வு மனிதர்களிடம் எப்பொழுதும் இருந்துவந்தது. மனித புத்தியானது தான் அநுதினம் எதிர்கொள்ளும் காரியங்கள். பொருட்களைப் பற்றிய உண்மைகளை இன்னும் அதிகமதிகமாய் அறிய விரும்புகிறது. ஆகையால்தான் மக்கள் சில காரியங்களைக் குறித்த, தங்களின் அறியாமையை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை! இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம். ஒரு மனிதன் தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறான். அது முதல் தடவையாதலால் வீட்டு முகவரி இருந்தும், அவனால் சரியான தெருவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் வேறொருவரின் உதவியை நாடுகிறான். முன்பின் தெரியாத அந்த மனிதன் தமக்கும் சரியான முகவரி தெரியவில்லையானாலும், அந்த இடத்தை அறிந்தவன் போல் பாவனை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், எப்படியாவது அவனுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று விருப்பம் கொண்டதால், தவறான வழியைக் காட்டிவிடுவான். ஏன் இந்த மனிதன் தவறான வழியைக் காட்டிட வேண்டும்? ஏனெனில் தனக்கு உண்மையிலேயே பாதை தெரியாது என்ற தமது அறியாமையை வெளிக்காட்டிக்கொள்ள அவன் விரும்ப வில்லை. இப்படி தமது அறியாமையை வெளிப்படுத்த விரும்பாதவன் எப்படி, அதனை போக்கிக்கொள்ள முடியும்? அதிகமதிகமாய் தேடி அறிவை வளர்ப்பதே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவு வாயிலாகும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஞானத்தை அடைய வேண்டுமென்ற தாகமே, அந்த கீழ்த்திசை ஞானிகள் சகல ஞானங்களின் ஊற்றாகிய நித்திய ஞானமானவரை குழந்தை சேசுவை தேடிக்கொண்டுவர தூண்டியது. நூற்றாண்டு காலமாக "பூமியின் எல்லைகளையும்" (சங். 2:8) சொந்தமாகக் கொண்டவரான, நித்திய ஞானமானவரை ஒரு நட்சத்திரத்தின் மூலமாக அஞ்ஞானிகளுக்கு முன்னுரைக்கப்பட்டது. அது எப்படியெனில்: "...அவரைக் காண்பேன், ஆனால் இப்போதல்ல; அவரை தரிசிப்பேன், ஆனால் சமீபித்திருந்தல்ல. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல்  இஸ்ராயேலியரிட மிருந்து எழும்பும்; அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும், சேத் புத்திரர்களெல்லோரையும் நாசம் பண்ணும்" (எண். 24:17). இது பாலாமின் தீர்க்க தரிசனமாகும். அஞ்ஞானியான பாலாம் இஸ்ராயேலியரை சபிக்கக் கேட்டுக்கொள்ளப்பட, அவனோ அவர்களை ஆசீர்வதிக்கும் கட்டாயத்துக்குள்ளானான்.

மூன்று இராஜாக்கள்" என்று அழைக்கப்படும் ஞானிகளான கஸ்பார், மெக்கியோர் மற்றும் பல்தஸார் பாலாமின் இந்த தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தனர். அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு அது மோட்சத்தி லிருந்து தங்களுக்கு வந்த அழைப்பு என உறுதிகொண்டனர் அவர்களின் இருதயத்தினுள் உள்ளரங்க வரப்பிரசாதம் செயல்படவே, நித்திய ஞானமானவரைத் தேடும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களது பயணம் எதனாலும் தடைபடவில்லை. குடும்பத்தைப் பற்றிய கவலையோ, களைப்பைத் தரும் நீண்ட பயணத்தைப் பற்றிய பிரமிப்போ, எதனையும்பற்றி கவலைப்படாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாலைவனத்தின் கடும் வெப்பத்தைப்பற்றிய சுவக்கமோ, கொள்ளைக்காரர்களைப்பற்றிய அச்சமோ, எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறப்பட்டதுபோல் "தேடியவர்கள் சர்வேசுரனைக் கண்டுகொண்டனர்." அவரை தரிசித்தார்கள். ஏனெனில்ஞானம் அவர்களோடு இருந்தது.

ஆம்! எண்ணில்லா கடினமான துன்பங்களுக்குப் பிறகு, கர்த்தரை கண்டுகொண்டார்கள். அவரை ஆராதித்தார்கள். ஞானத்தைப்பற்றி பெரிய நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்துபவராக அல்லாமல், அமைதியான குழந்தையாகக் கண்டுகொண்டார்கள். ஒரு தாயின் கவனமான அரவணைப்பில், பாதுகாப்பில் அவர் இருக்கக் கண்டு கொண்டனர். இதன் மூலம் சர்வேசுரன் தாமே தாழ்ச்சியின் அற்புதத்தை பிறருக்கு காண்பித்தார்.

நித்திய ஞானத்தோடு தொடர்புகொண்ட அவர்கள், கிறீஸ்துவின் பிறப்பை ஏரோதனுக்கு சொல்லாது, மாற்றுப் பாதையில் தங்களது நாடுகளுக்குச் சென்றனர். அவர்களது இச்செயலே ஞானிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு தந்தது என்றால் மிகையாகாது!

நாமும்கூட இந்த ஞானிகளைப் போல கிறீஸ்துவை தேடிவந்து கண்டு ஆராதிக்கவும், அவரது சுவிசேஷ சட்டங்களின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலமாகவே நித்தியமானவரோடு நம்மையே இணைத்துக்கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் பாக்கியம் பெறுவோமாக!


Source: Salve Regina - Jan. - Feb. 2011

வியாழன், 14 டிசம்பர், 2023

கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

 Christus natus est nobis; adoremus
கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

(உரோமை கட்டளை ஜெபம்)



கிறிஸ்துமஸ் இரவிலே, திருச்சபை சகல விசுவாசிகளுக்கும் இத்தகைய அழைப்பை விடுக்கிறது. அதற்கு உடனே செவி சாய்ப்பாயாக. ஓ எனது ஆன்மாவே, நினைவின் வழியாக பெத்லேகம் சென்று, நமது மீட்பரின் தோற்றத்தைத் தியானி, விவரிக்க முடியாத நேசத்தை நமது கண்கள் காண்கின்றன! உலகை சிருஷ்டித்து. சர்வேசுரன் ஒரு சிறு சிசுவாக குழந்தையாக அவரது தெய்வீக மகிமைகள் அனைத்தும் களையப்பட்டு இருக்கிறார். ஆதலால் நமது அச்சங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து நீக்கி, அனைத்து உள்ளங்களையும் அவரிடம் ஈர்த்துக்கொள்ளும் வடிவமாக இருக்கிறார். நமக்காக தன்னையே அழித்துக் கொள்ளும், அவரது நேசம்தான் எத்தகையது! நம்மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டுள்ளார்! பாருங்கள், எப்படி அவர் தமது சின்னஞ் சிறு கரங்களை உன்னை நோக்கி விரிப்பதையும், அவர் பின்னாளில் சொல்லவிருக்கும் சுமை சுமந்து சோர்ந்திருக்கும் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் நான் தீர்ப்பிடுவதற்காக உலகிற்கு வரவில்லை. ஆனால் உலகை மீட்கவே வந்தேன் என்ற வார்த்தைகள் அவரது இதயத்துடிப்பாக வெளிவருவதை உணருங்கள்.

இந்த தேவக் குழந்தையின் அன்பை யார்தான் தியானிக்க முடியும்! நம்மீது கொண்ட அளவற்ற அன்பே அவரை மோட்சத்திலிருந்து, கீழே இந்த எளிய மாட்டைக் குடிலிலே கொண்டு வந்தது. எதற்காக? நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்லவே! அப்படிப்பட்டவரை எப்படி நேசிக்கப் போகிறோம்? அவருக்கு எவ்வாறு பதில் அன்பு காட்டப் போகிறோம்?

நாம் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும், நமது கடந்த கால பிரமாணிக்கமின்மை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவரது அன்பான, பரிவிரக்கமுள்ள இதயத்தின் மொழி நம்மை இனிமையாலும் நம்பிக்கை உணர்வாலும் நிரப்புகிறது. இப்படி இரக்கத்தையும், பரிவையும் அன்பையும் வெளிப்படுத்தும் சேச பாலனை வாருங்கள் ஆராதிப்போம்!


source - Salve Regina - December 2007


Download Tamil Christmas Songs MP3

சனி, 9 டிசம்பர், 2023

Christmas - உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்

 உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்






உலகம் இன்று போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இறுதிக் காலங்களின் ஓர் அடையாளமாக "தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்பும்" (மத் 24:7) என்று நம் ஆண்டவர்தாமே முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா- யுக்ரேன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்ற எந்த ஒரு போரும் எந்த நிமிடத்திலும் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உலகப் போராக மாறக்கூடிய ஆபத்து நம் தலைக்கு மேல் வாளைப் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பிற நாடுகளை ஏமாற்றிக் கைவசப்படுத்து வதற்கென்றே உருவானவை போன்ற நாடுகள் "பேச்சு வார்த்தை" மூலம் சமாதானத்தை நிலை தாட்டப் போவதாகப் பாசாங்கு செய்கின்றன. அவை முதுகுக்குப் பின்னால் இடது கையில் கத்தியை மறைத்துக்கொண்டு வலது கையால் "பாசத்தோடு" கைகுலுக்குகின்றன. வேறு வழியின்றி அவற்றை நம்பும் ஏழை நாடுகள் பல வகைகளிலும் தங்களையே அவற்றிடம் அடகு வைக்கின்றன. உலகத்தில் சமாதானமில்லை. ஏனெனில் இப்போது அது "கடவுளற்றதாக" மாறிக் கொண்டிருக்கிறது. அது சமாதானம் (கடவுள்) இல்லாத இடங்களில் அதைத் தேடுகிறது. உலக செல்வங்களிலும், வெற்று வாக்குறுதிகளிலும், பேராசையிலும் அதைத் தேடுகிறது.

தனி மனிதர்களோ கடவுளை அடியோடு மறந்துவிட்டு, உலக செல்வங்களிலும், உலகக் கேளிக்கைகளிலும், மதுவிலும், சரீர இச்சையிலும் தங்கள் இன்பத்தையும், அதில் சமாதானத் தையும் தேடுகிறார்கள். நல்லொழுக்க விதிகளை மீறுவதில் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஊடகங்கள் சகல அகத்தங்களையும் கொண்டு மனிதனை நிரப்பி, அந்திக் கிறிஸ்துவுக்கான பாதையை மிக எளிதாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒளியைத் தேடுவதாக நினைத்துக்கொண்டு. மேலும் மேலும் அதிகக் கடுமையான, "தொட்டுணரக் கூடிய இருளுக் குள் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் சமாதானமில்லை.

இன்றைய (சங்கத்) திருச்சபையோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரட்சணியப் பணியை அடியோடு மறந்துவிட்டு, உலகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே உலக மதத் திற்கான விதையை அதுவே பூமியில் ஊன்றி, அது வளரத் தேவையான எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறது. அது தன் திவ்ய எஜமானராகிய உலக இரட்சகரைத் "தெய்வங்களில்" ஒருவராகப் பார்க்கிறது. அல்லது இன்னும் மோசமாக, சமூகப் புரட்சி செய்ய வந்த ஒரு "மிகச் சிறந்த மனிதராகப்" பார்க்கிறது. சங்கச் சபை சுவிசேஷ போதனைகளை ஏளனம் செய்கிறது; சரீர இச்சை, ஓரின உறவு, குருந்துவ அழிவு, துறவற அழுகல், தேவத் திரவிய அனுமானங்களின் முழுச் சிதைவு, விசுவாசமற்ற "இறை மக்களின்" வெறுமையான "மனித நேய" ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டு, தானே ஒரு முழுமையான விசுவாச மறுதலிப்பை முழுமை யாக்கி விட உழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய "திருச்சபையிலும் சமாதானமில்லை!

இந்நிலையில் இதோ! கீழ்த்திசையினின்று ஓர் ஒளி உதிக்கிறது/ பெத்லகேமில் உண்மை யான "சமாதானத்தின் அரசர்" (இசை.9:6) தோன்றுகிறார்? ஆச்சரியத்திற்குரிய முறையில், இன்று உலகம் தேடும் எதுவும் அவரிடமில்லை! பரலோக, பூலோக, பாதாள லோகங்களாகிய திரிலோகங்களையும் ஒரே வார்த்தையால் படைத்த அந்த நித்திய செல்வந்தர், இதோ, மனிதர் களின் இருதயங்களிலும், சத்திரத்திலும் கூட, தமக்கென ஓர் இடமின்றி, மாடும், கழுதையும் அடையும் கொட்டிலில், மூடத் துணியுமின்றி, படுக்கக் கட்டிலுமின்றி, உலசு வசதி ஏதுமின்றி. தீவனத் தொட்டியில் பரப்பிய வைக்கோலின்மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! யாருக்கு முன்பாக வானத்து நட்சத்திரங்களும் கூட வெறுமையாகவும். ஒரு மூச்சுக் காற்றைப் போலவும் இருக்கின் றனவோ, யாருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறதோ, யாருக்கு முன்பாக மலை களும், குன்றுகளும் துள்ளிக் குதிக்கின்றனவோ, அந்த உன்னத சர்வேசுரன் இங்கே, ஏதும் செய்ய இயலாத எல்லாவற்றிற்கும் தம்முடைய மாசற்ற திவ்ய கன்னிகையாகிய திருத்தாயாரையும், பிதாவால் தமக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட பரிசுத்த விரத்தராகிய நீதிமானையும் சார்ந்திருக்கிறார்! நித்திய பிதாவோடு ஒரே பொருளானவர். கீழ்ப்படிதலின் நிமித்தம் இந்தக் கேடுகெட்ட மனிதனை மீட்பதற்காக, சகல அசுத்தங்களும் நிறைந்த உலகிற்கு இறங்கி வந்திருக் கிறார்! நல்ல வேளையாக, பூலோக மோட்சமாகிய அமல உற்பவ நித்தியக் கன்னிமையின் மாசற்ற இருதயம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது!

ஆம்! கிறீஸ்துநாதரின் பிறப்பு தரும் போதனை உலகத்திற்கு எதிரானது! அது தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம், தரித்திரம், கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் போதனை! கிறீஸ்து பாலன் உலக இன்பங்களுக்கான, உலகில் சுகமாக மனிதன் வாழ்வதற்கான வழியை அல்ல, மாறாக, நித்திய மோட்சத்தின் வழியை, நித்திய இரட்சணியத்தின் வழியைத் திறந்து வைக்கவே வந்திருக்கிறார்! அவரே கூறுவது போல, அந்த வழி ஒடுக்கமானது! கல்லும், முள்ளும் நிரம்பியது! அதில் நுழைபவன் எவனும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, இரத்தம் தோய்ந்த தன் திவ்ய எஜமானரின் பாதச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவனாயிருக்கிறான்!

ஆயினும் இது நமக்கு அச்சம் தரத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஒடுங்கிய வழிக்குள் ஒருவன் நுழைந்த மாத்திரத்திலேயே, உலகம் தர முடியாத, நிரந்தரமான, நல்ல மனத்தவர்களுக்குரிய சமாதானம் அவனை நிரப்பி விடுகிறது. உலகத் துன்பங்களால் கெடுக்கப்படவோ, அழிக்கப்பட்டவோ முடியாத சமாதானம் அது! இன்னும் சொல்லப் போனால், உலகத் துன்பங்களை ஏக்கத்தோடு தேடச் செய்கிற உத்தமமான சமாதானம் அது!

அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த சமாதானத்தில் வாழ்ந்தார்கள்! பல சமயங்களில் அது தருகிற மோட்சத்தின் முன்சுவையாகிய இந்த நித்திய சமாதானத்தையும், பேரின்பத்தின் சில துளிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகக் கூட அவர்கள் இருந்தார்கள்! நம்முடைய ஞானத் தகப்பனான அர்ச். சவேரியாரின் "இந்திய" வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்! பிரபுத்துவப் பிறப்பு! ஆடம்பரமான இளமை வாழ்வு! மிகச் சிறந்த கல்வி! புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி! ஆனால் இதிலெல்லாம் தம்மால் காண முடியாத உண்மையான சமாதானத்தையும், உண்மையான இன்பத்தையும் அவர் தரித்திர வாழ்வைத் தேர்ந்துகொண்ட போது, மட்டற்ற விதமாக அனுபவித்தாரி! இரவெல்லாம் ஜெபத்தில் கழித்து, பகலெல்லாம் கால்நடையாக அல்லது படருகளில் பல ஊர்களுக்குச் சென்று பூசை வைத்து, ஞான உபதேசம் கற்பித்து, ஆலயங்கள் கட்டி, அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடிக் கழித்த பின், இரவில், அந்த மணப்பாட்டுக் குகையில் முழந்தாளிட்டபடி தம்முடைய பரவச நிலையில், "போதும்! போதும் என் ஆண்டவரே! தேவரீர் என்மீது பொழிகிற இந்தப் பேரின்பத்தை என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது!" என்று கூக்குரலிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தச் சமாதானத்தின் வேர்கள் எதில் ஊன்றியிருக்கின்றன? அவை தேவசிநேகத்தில் ஊன்றியிருக்கின்றன. இந்த தேவசிநேகமோ தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அடங்கி யிருக்கிறது. அவை தேவ நம்பிக்கையில் ஊன்றியிருக்கின்றன. பெத்லகேமின் திவ்ய பாவனைப் போல, வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரித்திர நிலையிலும், சர்வேசுரனைத் தன் சொந்தமாகக் கொண்டிருப்பவனை விடப் பெரிய செல்வந்தன் எவனும் இல்லை. அந்த வேர்கள் அசைவுறாத தேவ விசுவாசத்தில் ஊன்றியுள்ளன. இன்றைய விசுவாச மறுதலிப்புக்கு மத்தியிலும், புயலடித்தபோதும், வெள்ளம் வந்து மோதிய போதும். திடமான விசுவாசமென்னும் பாறையின் மீது எவனுடைய வாழ்வு கட்டப்பட்டிருக்கிறதோ. அவன் பாக்கியவான். ஆயினும், தன்னுடைய பரிசுத்த வாழ்வின் மூலம், இந்த விசுவாசமாகிய தேவ கொடை என்றென்றும் தன் சொந்தமா யிருப்பதையும், அது நித்திய ஜீவியத்திற்குரிய கனிகளைத் தன்னில் பிறப்பித்து, அவற்றை விளை வித்துக் கனியச் செய்வதையும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், "மலை களைப் பெயர்த்தகற்றும்" வல்லமையுள்ளதாக இருந்தாலும் கூட கடவுளுக்கு முன்பாக எந்த மதிப்பும் அற்றதாக இருக்கிற ஒரு விசுவாசம் உண்டு! அது பரிசுத்த வாழ்வில் ஊன்றியிராத. வெறும் போலி விசுவாசம்!

மேலும் அது கடவுளுக்குச் சித்தமானால் பரிசுத்த கன்னிமையில், அல்லது ஜீவிய அந்தஸ்துக்குரிய கற்பில் ஊன்றியிருக்கிறது! கடவுளுக்குச் சித்தமானால், அவரைப் போலவும். அவருடைய திருத்தாயாரைப் போலவும், பரிசுத்த நீதிமானைப் போலவும், பரிபூரண தரித்திரத் தையும் ஏற்றுக்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது! மரண மட்டுக்கும். அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவரைக் கண்டுபாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருப் பதிலும், அவரால் நமக்கு மேலாக நியமிக்கப்படுபவர்களுக்குப் பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் பணிந்திருப்பதிலும் அடங்கியிருக்கிறது!

இவை இல்லாத கிறீஸ்துமஸ் திருநாட்கள் திவ்ய பாலனின் பார்வையில் "அருவருப்புக் குரியவையாக" இருக்கின்றன என்பதை மறவாதீர்கள், குடில்கள், வீட்டு அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவற்றில் மட்டுமே இன்று மனிதன் கிறீஸ்து பிறப்பைக் கொண்டாடுவதுதான் இன்றைய பெரும் தீமையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் கிறீஸ்து பிறப்பிற்காகத் தன் ஆத்துமத்தை ஆயத்தம் செய்து வைத்துக் காத்திருப்பதை அவன் நினைப்பது கூட இல்லை. இவைகளைத்தான் செய்திருக்க வேண்டும்; அவைகளையும் விட்டு விடலாகாது (மத்.23:23).மேலும் உங்க ளிடையே வாழும் ஏழைகளையும் மறந்து விடலாகாது! எனவே, அன்புச் சகோதரரே! கிறீஸ்துநாதர் உண்மையாகவே நம் ஆத்துமங்களிலும்,

இல்லத்திலும் வந்து பிறப்பதை உறுதி செய்துகொள்வோம். அப்போது, நல்மனத்தோருக்குரிய சமாதானம் நம்முடையதாகும்; அதுவே உன்னத ஸ்தலங்களில் சர்வேசுரனுக்கு மகிமையாக இருக்கும்.




Source: Matha Malar - நவம்பர் - டிசம்பர், 2023


மரியாயே வாழ்க!

சனி, 18 டிசம்பர், 2021

தேவ பாலனின் பிறப்பு மற்றும் புத்தாண்டு ஆசீர்வாதங்கள்


 ""ஓ  ஜெருசலேமே,  மிகவும்  அக்களிப்புடன்  களிகூர்வாயாக!  ஏனெனில்  உன்னுடைய  இரட்சகர்  உன்னிடம் வருவார். அல்லேலூயா!''

இந்த வார்த்தைகள் ஆகமன காலத்தின் சிறப்புச் செய்தியைச் சுருக்கமாக நமக்குத் தெரிவிக்கின்றன. ஆகமன  காலத்தின்  நான்கு  வாரங்களும்  நம்  ஆத்துமங்களைத்  தேவ  நம்பிக்கையால்  நிரப்புவது மட்டுமல்லாமல், சேசு பாலனின் வருகையால் நமக்குக் கிடைக்கப் போகும் சிறப்பான பரலோகபாக்கியங்களை  நாம்  நினைவுகூர்ந்து  அக்களிப்பால்  அகமகிழ  வேண்டும்  என்று  நம்  தாயாகிய  பரிசுத்த திருச்சபை இந்தக் காலத்தை நமக்குத் தந்துள்ளது. பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் பாவத் தளைகளினால்  அவதியுற்றபோது  வாக்களிக்கப்பட்ட  இரட்சகரைக்  கடவுள்  விரைவில்  அனுப்ப  வேண்டும்  என  ஆசித்து  உருக்கமாக ஜெபித்தார்கள். அவர்களின் ஜெபங்கள் கேட்கப்பட்டன.  இரட்சகர் உலகிற்கு அனுப்பப்பட்டார்.  ஒவ்வொரு  வருடமும்  இந்த  இரட்சிப்பின்  நிகழ்வானது  நம்  வாழ்விலும்  நடக்க  வேண்டும்  என்பதை  நம்  பரிசுத்த  திருச்சபை  நினைவூட்டுகிறது.  நமது  ஆன்மாக்களும்  தேவ  நம்பிக்கையால்  நிரப்பப்பட்டு,  சுத்தம் செய்யப்பட்ட  நம்  ஆத்துமங்களில்  தேவ  பாலன்  மீண்டும்  ஒரு  முறை  பிறக்க  வேண்டும்  என்பதே திருச்சபையின் தலையான விருப்பமாகவும் உள்ளது.

இந்த  பாக்கியத்தை  நாம்  பெற  வேண்டுமென்றால், தேவதாயையும்,  அர்ச்.  சூசையப்பரையும்  நாம்  கண்டுபாவிக்க வேண்டும். அவர்கள் அன்று மாட்டுத் தொழுவத்தை எவ்வாறு பரிசுத்த தமத்திரித் துவத்தின்  இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிறப்பதற்கு ஏற்ற இடமாக மாற்றினார்களோ, அதே போன்று  நம் ஆத்துமங்களைக் கறைப்படுத்தும் பாவங்கள் மற்றும் பாவ நாட்டங்களிலிருந்து நம் ஆத்துமங்களைச் சுத்தப்படுத்தி,  சகல  புண்ணியங்களாலும்  நிரப்பி,  அவற்றைப்  பரலோக  நறுமணம்  மிகுந்த  குடில்களாக  மாற்ற  வேண்டும்.  இந்த  அவசியமான  அலுவலைத்  தேவ  பாலனுக்குப்  பிடித்த  விதத்தில்  செய்ய  தேவதாயினுடையவும்,  அர்ச். சூசையப்பருடையவும்  உதவி  நமக்கு  மிகவும்  அவசியமாக  உள்ளது.  இது  மட்டுமே பரலோகம் விரும்புகிற உத்தம கிறீஸ்தவர்களுடைய கிறீஸ்து பிறப்பு நிகழ்வாகும். 

கடந்த  வருடம்  நம்மைப்  பலவிதமான  ஆபத்துக்கள்  மற்றும்  சோதனைகளிலிருந்து  காப்பாற்றிய  சர்வேசுரனுக்கும்,  நம்  பரிசுத்த  தேவதாய்க்கும்  நன்றி  கூறுவோம்.  சேசுவுக்கு  மிகவும்  பிடித்தமான  இந்த  நன்றியறிதல் என்ற புண்ணியம் பரலோகக் கொடைகளை மீண்டும் மீண்டும் அபரிவிதமாக நாம் பெறத் தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது. தேவபாலனின் உதவிகள் இன்றி நம்மால் உத்தமதனத்தில் ஒரு படி கூட முன்னேற்றம் அடைய இயலாது. தேவ வழிபாட்டின் புதிய வருடமும், அதனைத் தொடர்ந்து வரும்  புத்தாண்டும் கடவுளின் இரக்கத்தையும், ஆசீர்வாதங்களையும் நம் தேவதாய் வழியாக நமக்குப் பெற்றுத் தரட்டும்! சேசுவுக்குப் பிடித்தமான பரிசுத்த வாழ்வை வாழத் தீர்மானிப்போம்! இந்த இதழானது இப்படிப்பட்ட பரலோகச் சிந்தனைகளால் உங்கள் ஆத்துமங்களை நிரப்புவதாக!

நேசமிகு தேவ பாலனோடு கன்னிமாமரி நம்மை ஆசீர்வதிப்பார்களாக! வாசகர்கள் அனைவருக்கும் தேவ  பாலனின்  பிறப்பு  மற்றும்  புத்தாண்டு  ஆசீர்வாதங்களும்,  வரப்பிரசாதங்களும்  அபரிவிதமாய்க் கிடைப்பதாக!