ஆகஸ்டு
1️2️ம் தேதி
அர்ச்.
கிளாரம்மாள் திருநாள்.
இவள்,
அர்ச். பிரான்சிஸ் அசிசியாருடன் சேர்ந்து, அவருடைய 2ம் துறவற சபையான
ஏழை கிளாரம்மாள் துறவற சபையை ஸ்தாபித்தாள். இவள் 1194ம் வருடம், ஜுலை
16ம் தேதி, இத்தாலியிலுள்ள ௮சிசி நகரில் பிறந்தாள். கிளாரா என்கிற வார்த்தைக்கு, “ஒளிருகின்ற”
, அல்லது “தெளிந்த” என்று அர்த்தமாகும். இவளுடைய தந்தை, பண்டைக்கால உரோமை உயர்குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தர்; அசிசியில் இவருக்கு சொந்தமாக ஒரு கோட்டை இருந்தது.
1212ம் வருடம், மார்ச் 19ம் தேதி, குருத்து
ஞாயிறன்று, அர்ச். பிரான்சிஸ் அசிசியார், தபசுக்காலத்திற்காக நிகழ்த்திய ஒரு ஞான தியானப்
பிரசங்கத்தைக் கேட்டபோது, அந்த உன்னதமான தியானப்
பிரசங்கத்தினால், அர்ச். கிளாரம்மாள், பெரிதும் மேற்கொள்ளப்பட்டாள்.அச்சமயம், இவளுக்கு 18 வயது.
இரகசியமாக வீட்டை விட்டு, தன் அத்தை பியான்காவுடனும்,
ஒரு சகத்தோழியுடனும், போர்சியன்குலா தேவாலயத்திற்கு, அர்ச். பிரான்சிஸ் அசிசியாரைச் சந்திப்பதற்காகச் சென்றாள். அங்கு, அந்த தேவாலயத்தில், மகா
பரிசுத்த தேவமாதாவின் பீடத்தண்டையில், அர்ச். பிரான்சிஸ் அசிசியார், இவளுடைய தலைமுடியை, கத்தரித்து நீக்கினார்;அர்ச். கிளாரம்மாள், தான் அணிந்திருந்த விலையுயர்ந்த செல்வ மகளுக்குரிய ஆடையைக் களைந்து விட்டு, எளிய கன்னியாஸ்திரியின் உடுப்பையும், முக்காட்டையும், ஒரு இடுப்புக் கயிற்றையும்
அணிந்துகொண்டாள். இவ்விதமாக, அர்ச். கிளாரம்மாள், 18வது வயதில், தன்
பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து. ஆண்டவருடைய ஞான பத்தினியானாள்!
பாஸ்டியா என்ற நகரத்திற்கருகிலிருந்த சான் பவுலோவிலுள்ள
அர்ச். ஆசீர்வாதப்பர்
கன்னியர் மடத்தில், அர்ச். பிரான்சிஸ் அசிசியார், அர்ச். கிளாரம்மாளை விட்டார்.அவளுடைய தந்தை, அவளை வீட்டிற்குத்
திரும்பி வர வற்புறுத்தினார்.
அச்சமயம், கிளாரம்மாள், தேவாலயத்தின் பீடத்தைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டாள்; பின் தன் தந்தைக்கு முன்பாக
தனது முக்காட்டை அகற்றி, நீளமான தலைமுடி கூந்தல் எல்லாம் வெட்டப்பட்டு வெறுமையாயிருந்த தன் தலையைக் காண்பித்தாள். அதன்பின்,
அர்ச். பிரான்சிஸ், இவளை, பான்சோ என்ற இடத்திலிருந்த சான்
ஆஞ்சலோ என்ற இன்னொரு அர்ச்.
ஆசீர்வாதப்பா் கன்னியர்
மடத்திற்கு அனுப்பி வைத்தார். கிளாரம்மாள், இந்த மடத்திலிருந்தபோது, விரைவிலேயே இவளுடைய
தங்கை கத்தரீனும், இவளுடன் சேர்ந்து கொண்டு, ஆக்னஸ் என்ற பெயரைத் தேர்ந்து
கொண்டாள். இரு சகோதரிகளும், அர்ச்.
ஆசீர்வாதப்பர் கன்னியர்
மடத்திலேயே தங்கியிருந்தனர்; பின்னர், அர்ச். பிரான்சிஸ் அசிசியார், சில வருடங்களுக்கு முன்
செப்பனிட்டிருந்த அர்ச். தமியான் தேவாலயத்தை ஒட்டியபடி, கன்னியர் மடத்திற்கான ஒரு சிறிய கட்டிடத்தைக்
கட்டி, அதில் இரு கன்னியரும் குடியேறினர்.
நாளடைவில், மற்ற பெண்களும் அங்கு
வந்து, அவர்களுடன் சேர்ந்து கன்னியர்களாக , அர்ச். பிரான்சிஸ் அசிசியார் ஏற்படுத்தியிருந்த துறவற விதிமுறைகளை அனுசரித்து ஜீவிக்கலாயினர்.
இதுவே, பிரான்சிஸ் அசிசியாரின் 2ம் துறவற சபையாகும்.
ஏழைகிளாரம்மாள் கன்னியர் சபை என்றும் அழைக்கப்படுகிறது!
பின்னாளில், கிளாரம்மாளின் தாயாரும், இன்னொரு சகோதரியும்
கூட , கிளாரம்மாளுடன் சேர்ந்து, கன்னியாஸ்திரிகளாயினர்! அர்ச்.
தமியான் தேவாலய
வளாகம், கிளாரம்மாளின் இப்புதிய கன்னியர்சபையின் மையமாக மாறியது! இதன் காரணமாகவே, சான் தாமியானோ ஏழைப்பெண்களின் துறவறசபை என்றே,அர்ச். கிளாரம்மாள் ஜீவிய காலம், முழுவதும் அழைக்கப்பட்டது! இக்கன்னியாஸ்திரிகளின் அனுதின ஜீவியம், உடல் உழைப்பையும், ஜெபத்தையும் கொண்டிருந்தது! இக்கன்னியாஸ்திரிகள் காலணி அணியாமல் வெறுங் காலில் நடந்துசென்றனர்; வெறுந்தரையில் படுத்து உறங்கினர்; இறைச்சியை உண்ணாமல், சுத்த போசனத்தையே எப்போதும் அனுசரித்தனர்; எப்போதும் பரிசுத்த மவுனத்தை அனுசரித்து வந்தனர். சிறிது
காலத்திற்கு, இக்கன்னியார் சபையை, அர்ச். பிரான்சிஸ் அசிசியாரே
நடத்தி வந்தார்; 1216ம் வருடம், அர்ச்.
கிளாரம்மாள், சான்
தாமியானோ கன்னியர் மடத்தின் அதிபர் தாயார் பொறுப்பை ஏற்று கன்னியர் சபையை நடத்தத் துவக்கினாள். அதிபர் தாயாராகக் கூடுதல் பொறுப்பையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தாள்; மடத்தின் தாயாராக
இருந்தபோது, சகக் கன்னியரை , குருவானவரின் கட் டளைகளைப் பின்பற்றி
நடத்தி வந்தாள்; ஆனால், அதிபர் தாயாராக பொறுப்பை ஏற்றபோது, தன் சுய அதிகாரத்தைப்
பயன்படுத்தி, சகக் கன்னியரை ஞான ஜீவியத்தில் வழிநடத்தி
வந்தாள்.
1228ம் வருடம், 9ம்
கிரகோரி பாப்பரசர், கண்டிப்பான தரித்திர வார்த்தைப்பாட்டிலிருந்து கிளாரம்மாளுக்கு விலக்கு அளிக்க ஆசித்த போது,அர்ச். கிளாரம்மாள்,”என் பாவங்களுக்கான மன்னிப்பு
எனக்குத் தேவையாயிருக்கிறது; என் பாவங்களுக்கான தண்டனையிலிருந்து
விடுவிக்கப்பட ஆசிக்கிறேன்; ஆனால், நமதாண்டவரான திவ்யசேசு கிறீஸ்துநாதரைப் பின்பற்றுவதற்கான கடமையிலிருந்து விடுவிக்கப்பட நான் ஆசிக்கவில்லை!” என்று பாப்பரசருக்கு பதில் கூறினாள்! அதன்படி, பாப்பரசரும், இவளுடைய கன்னியர் சபைக்கு, அட்ட தரித்திரத்தினுடைய சிறப்பு சலுகையினுடைய
உரிமையை அளித்தார். இந்த உரிமையின்பிரகாரம், யாரும், இக்கன்னியாஸ்திரிகளிடம்,
எவ்வித செல்வததையோ, பணத்தையோ சொந்தமாகக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது!
1253ம் வருடம், ஆகஸ்டு
9ம் தேதியன்று, 4ம் இன்னசன்ட் பாப்பரசர்,
சோலெட் அன்னுவெரே என்கிற பாப்பரசரின் ஆணைமடலைப் பிரகடனம் செய்தார்; இது, அர்ச். கிளாரம்மாள் ஏற்படுத்திய சபை
விதிமுறையை, குறிப்பாக அட்ட தரித்திர வார்த்தைப்பாட்டின்
விதி முறையை, ஏழை கிளாரம்மாள் கன்னியா
சபையின் நிர்வாக விதி முறையாக நிச்சயப்படுத்தி
உறுதிப்படுத்தியது. இரண்டு
நாட்களுக்குப் பின், ஆகஸ்டு 11ம் கேதியன்று, அர்ச்.
கிளாரம்மாள்,
59வது வயதில், “ஓ! திவ்ய கர்த்தரே!
என்னை சிருஷ்டித்ததற்காக தேவரிர் ஸ்துதிக்கப்படுவீராக! ஆசீர்வதிக்கப்படுவீராக!” என்று பக்தி பற்றுதலுடன் உச்சரித்தபடி, தேவசிநேக மிகுதியால்,பாக்கியமாய் மரித்தாள். அர்ச். கிளாரம்மாளின் பரிசுத்த சரீரம், இவளுக்கு தோத்திரமாக ஒரு தேவாலயம் கட்டப்படும்
வரைக்கும், அர்ச். ஜார்ஜியாரின் தேவாலயத்தில் பூஜிதமாக அடக்கம் செய்யப்பட்டது. 4ம் இன்னசன்ட் பாப்பரசரின்
வேண்டுகோளுக்கிணங்க, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள், உடனடியாக துவங்கின! இவளுடைய பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் பேரில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகள் எல்லாம் வெறும் ஆறு நாட்களிலேயே நிறைவடைந்தன!
ஆனால், கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுப்பதற்கான செயல்முறைகள் எல்லாம், முடிவதற்கு இரண்டு ஆண்டு காலம் தேவைப்பட்டது.
1255ம் வருடம் ஆகஸ்டு
15ம் தேதியன்று, 4ம் அலெக்சாண்டர் பாப்பரசர்,
கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார். 1260ம் வருடம், அர்ச்.
கிளாரம்மாளின்
பசிலிக்கா தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது! அக்டோபர் 3ம் தேதியன்று, அர்ச்.
கிளாரம்மாளின் பரிசுத்த
சரீரம், இப்புதிய பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, முதன்மையான பெரிய பீடத்திற்கு அடியில், பூஜித மாக அடக்கம் செய்யப்பட்டது.
அர்ச். கிளாரம்மாளின்
மாபெரும் புண்ணியங்களை மகிமைப்படுத்தும்படி, 4ம் உர்பன் பாப்பரசர்,
1263ம் வருடம், ஏழைப்பெண்களின் துறவற சபை என்கிற பெயரை,
ஏழை கிளாரம்மாள் கன்னியர் சபை என்று , அதிகாரபூர்வமாக
மாற்றினார். 600 வருடங்களுக்குப் பின், 1872ம் வருடம், அர்ச்.
கிளாரம்மாளின் பரிசுத்த
சரீரம், அர்ச். கிளாரம்மாள் பசிலிக்கா தேவாலயத்தில் புதிகாகக் கட்டப்பட்ட கீழ் நிலவரைச் சிற்றாலயத்தின் ஷேத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதை இன்றும் காணலாம். மகா பரிசுத்த தேவநற்கருணைப்பாத்திரத்தைக்
கரத்தில் ஏந்தியபடி, அர்ச். கிளாரம்மாள், படங்களில், சித்தரிக்கப்பட்டிருக்கிறதை நாம் காணலாம்.
1224ம் வருடம் அசிசி
நகரைத் தாக்க வந்த 2ம் ஃபிரடரிக் அரசனின்
படையை நேருக்கு நேராக சந்தித்த அர்ச். கிளாரம்மாள், தேவாலயத்திலிருந்த மகா பரிசுத்த தேவநற்கருணைப்
பாத்திரத்தை, எதிரிப்படைகள் முன்பாக, பக்திபற்றுதலுடன் மேலே உயர்த்திப் பிடித்து,
அவர்களுக்குக் காண்பித்தாள்; திடீரென்று, ஒரு நூதனமான பேரச்சம்,
ஏதிரிப்படையினரை ஆட்கொண்டது! உடனே, அந்தப் படைவீரர்கள் அசிசி நகர வாசிகளுக்கு ஒரு
தீங்கும் செய்யாமல், அந்நகரை விட்டு ஓடிவிட்டனர்! 12ம் பத்திநாதர் 1958ம்
வருடம், அர்ச். கிளாரம்மாளை, தொலைக் காட்சியின் பாதுகாவலராக ஏற்படுத்தினார்.
அர்ச். கிளாரம்மாள் மிக வும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது,
திவ்யபலிபூசைக் காண்பதற்காக தேவாலயத்திற்குச் செல்லக்கூடாமலிருந்தபோது, அவளுடைய சிற் றறையிலிருந்த சுவரில், புதுமையாக திவ்யபலிபூசையைக் காணும் பாக்கியம் பெற்றிருந்தாள். EWTN என்ற
ஒரு அமெரிக்க கத்தோலிக்க தொலைக்காட்சி அலை வரிசையை, சங்.தாயார் ஆஞ்சலிக்கா என்ற ஒரு ஏழை
கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஸ்தாபித்திருந்தார்! என்பது குறிப்பிடத்தக்கது!
அர்ச்.
கிளாரம்மாளே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்!