டிசம்பர் 10ம் தேதி
மகா பரிசுத்த லொரேத்தோ மாதா திருநாள்
மகா பரிசுத்த திருக்குடும்பத்தின் பரிசுத்த இல்லம் புதுமையாக நாசரேத்திலிருந்து இத்தாலியிலுள்ள லொரேட் நகருக்கு சம்மனசுகளால் கொண்டு வரப்பட்ட திருநாள்.
அகில உலகத்தில், மகா பரிசுத்த தேவமாதாவின் திருயாத்திரை ஷேத்திரங்களிலேயே, மகா விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாகப் பேணி பாதுகாக்கப்படுவதும், மகா சங்கை மேரையுடன் வணங்கப்பட்டுவருவதுமான மகா பரிசுத்த தேவமாதாவின் திருயாத்திரை ஷேத்திரமாக, இத்தாலியின் லொரேட் நகரிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் பசிலிக்கா விளங்குகிறது! இந்த பசிலிக்காவினுள், மகா பரிசுத்த திருக்குடும்பம் வசித்த நாசரேத்தின் பரிசுத்த இல்லம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! மிக நீதியுடன், பாரம்பரிய குறிப்பிற்கேற்ப, பாப்பரசர்கள் மற்றும் அநேக அர்ச்சிஷ்டவர்கள் அளித்த சாட்சியங்களின் பிரகாரம், இப்பரிசுத்த இல்லத்தில் தான் , உன்னதமான மறு சிருஷ்டிப்பும்- நம் இரட்சணியமும்- துவங்கின!!
இப்பரிசுத்த இல்லத்தில் தான், மகா பரிசுத்த தேவமாதா ஜீவித்தார்கள்; இங்கு தான், அதிதூதரான அர்ச்.கபிரியேல் சமமனசானவர், மகா பரிசுத்த தேவமாதாவை நோக்கி, “பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே! வாழ்க!” என்கிற மங்கள வாழ்த்தைக் கூறினார்; இப்பரிசுத்த இல்லத்தில் தான், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்,மகா பரிசுத்த திவ்ய கன்னி மாமரியின் திருவுதரத்தில் மாமிசமாகி, பரிசுத்த மனிதவதாரத்தை எடுத்தார்! பின், இங்கு தான், ஆண்டவர், தமது 30வது வயது வரை, மகா பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச்.சூசையப்பருக்குக் கீழ்ப்படிந்து, தச்சுத் தொழில் செய்து வந்தார்.
“சேசு , மரி, சூசை” என்கிற மகா பரிசுத்த திருக்குடும்பம் தங்கி வாசம் செய்த இப்பரிசுத்த இல்லம் தான், உண்மையில் பூமியிலேயே மகா பரிசுத்த இல்லமாகத் திகழ்கிறது! உரோமையிலுள்ள அர்ச்.இராயப்பர் பசிலிக்காவை விட, மற்ற எந்த கதீட்ரல் தேவாலயங்களையும் விட, கூடுதல் அதிக பரிசுத்தமான இல்லமாகத் திகழ்கிறது! நாசரேத்தின் இப்பரிசுத்த இல்லத்தினுடைய சரித்திரம், அப்போஸ்தலர் காலம் வரை பின்னோக்கிச் செல்கிறது; ஆதிக் கிறீஸ்துவர்களின் காலத்திலிருந்து, இப்பரிசுத்த இல்லம், ஆதித்திருச்சபையின் திருவழிபாட்டினுடையவும், திருயாத்திரை யினுடையவும் பரிசுத்த ஸ்தலமாகத் திகழ்கிறது!
313ம் வருடத்திற்கு சிறிது காலத்திற்குப் பிறகு, முதல் கத்தோலிக்க உரோம சக்கரவர்த்தியான மகா கான்ஸ்டன்டைன் பேரரசர், நாசரேத்தில் இப்பரிசுத்த இல்லத்தை, பரிசுத்த சன்னிதியாகக் கொண்டு, மாபெரும் பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டுவித்தார்.
1291ம் வருடம், மகமதியர்கள், நாசரேத்தைக் கைப்பற்றினர். இச்சமயத்தில், மகா பரிசுத்த திருக்குடும்பத்தின் இப்பரிசுத்த இல்லம், கொடூர மகமதியரால் ஏற்படக்கூடிய அவசங்கையிலிருந்து, காப்பாற்றப்படும்படியாக, அஸ்திவாரத்துடன் பெயர்த்தெடுக்கப்பட்டு, 1291ம் வருடம் மே 10ம் தேதியன்று, பாலஸ்தீனத்திலிருந்து ஆகாய மார்க்கமாக, மத்தியதரைக் கடலைக் கடந்து, டால்மேஷியா (குரோஷியா) விலுள்ள டெர்சட்டோ என்ற சிறிய நகரத்திற்கு , சம்மனசுகளால், தூக்கிச் செல்லப்பட்டு, இடமாற்றம செய்யப்பட்டது!
அல்பேனியா நாட்டை மகமதியர் ஊடுருவியதால், 1294ம் வருடம், டிசம்பர் 10ம் தேதியன்று, இப்பரிசுத்த இல்லம், சம்மனசுகளால், மறுபடியும், முதலில், இத்தாலியிலுள்ள ரிகான்டி என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது; பின் சிறிது காலத்திற்குள், இப்போதிருக்கிற லொரேட் நகருக்கு சம்மனசுகளால் கொண்டு வரப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது!கட்டிடக் கலை நிபுணர்களுடைய ஒரு குழு, லொரேட்டிலுள்ள இப்பரிசுத்த இல்லம், உண்மையாகவே, நாசரேத்திலிருந்து இடம் பெயர்ந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது! என்ற முடிவிற்கு வந்தனர்.
இப்பரிசுத்த இல்லம், சாதாரணமான கட்டிடத்தினுடைய அஸ்திவார அமைப்புகள் இல்லாமலிருக்கிறதைச் சுட்டிக் காண்டிபித்தனர். இப்பரிசுத்த இல்லத்தைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்கள், “ஜெபெஸ்” என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகைக் கற்கள், கலிலேயா பிரதேசத்திலுள்ள மலைகளில் காணப்படுகின்றன. இத்தாலியிலும், மற்ற எந்த இடங்களிலும் இவ்வகைக் கற்கள் கிடைக்காது.
நாசரேத்தின் பரிசுத்த இல்லம், மிகச் சிறிய கற்கட்டிடம்; இதன் அளவு: 9.52மீ நீளம், 4.1 மீ அகலம், 4.3 மீ உயரம்.இதன் உள்சுவர்களில், மத்திய நூற்றாண்டு கால சித்திரங்கள் காணப்படுகின்றன! இதன் கிழக்கு சுவரில் (பின்னாளில் சேர்க்கப்பட்ட பகுதி), “இங்கு தான் வார்த்தையானவர் மாமிசமானார்”. என்று இலத்தீனில் ("Hic Verbum Caro Factum Est!") பொறிக்கப்பட்ட ஒரு பரிசுத்த பீடம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! இப்பீடத்தின் மேல், மகா பரிசுத்த தேவமாதாவின் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!
1469ம் வருடம், லொரேட் நகரிலிருந்த இப்பரிசுத்த இல்லத்தை பரிசுத்த சந்நிதானமாகக் கொண்டு, ஒரு மாபெரும் பசிலிக்கா தேவாலயம் கட்டப்பட்டது! இன்று வரை இருக்கிறது! 1507ம் வருடம், ஒரு அழகிய சலவைக்கல்லினாலான அடைப்பு, பசிலிக்கா தேவாலயத்தினுள்ளே, இப்பரிசுத்த இல்லத்தைச் சுற்றிலும் கட்டி எழுப்பப்பட்டது!1510ம் வருடம், திருயாத்திரை ஸ்தலமாக அதிகாரபூர்வமாக ஏற்று அறிவிக்கப்பட்டது!
பல நூற்றாண்டு காலமாக, பல பாப்பரசர்கள், இப்பரிசுத்த இல்லம், நாசரேத்திலிருந்து , சம்மனசுகளால், இங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, என்றும், இங்கு நிகழும் அநேக புதுமைகளும் உண்மையானவை என்றும் சாட்சியளித்திருக்கின்றனர். பாப்பரசர்கள், இப்பரிசுத்த இல்லத்தின் மீது கொண்டிருந்த பக்திபற்றுதல், மேரை மரியாதையை, இப்பரிசுத்த இல்லத்திற்குத் திருயாத்திரை செல்வதற்காக அளித்த அவர்களுடைய அநேக ஞானப் பலன்கள் மூலம் எண்பிக்கப்படுகிறது! முதலில் 12ம் ஆசிர்வாதப்பர் பாப்பரசரும், அவருக்கு அடுத்தபடியாக, 6ம் உர்பன் பாப்பரசரும், மகா பரிசுத்த தேவமாதா பிறந்த திருநாளுக்காக அளித்த ஞானப்பலன்கள், இப்பரிசுத்த இல்லத்தின் மீது, அவர்கள் கொண்டிருந்த பக்திபற்றுதல் வெளிப்படுகின்றது! இந்த ஞான பலன்களை, 9ம் போனிஃபேஸ், மற்றும், 5ம் மார்டின் பாப்பரசர்கள் உறுதிப்படுத்தினர்.
உண்மையில், லொரேட் பரிசுத்த இல்லத்தினால், மூன்று பாப்பரசர்கள் வியாதியிலிருந்து புதுமையாகக் குணமடைந்தனர். திருச்சபையால் அர்ச்சிஷ்டவர்கள் என்றும், வணக்க்திற்குரியவர்கள் என்றும், பிரகடனம் செய்யப்பட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர்கள், இப்பரிசுத்த தேவாலயத்திற்கு திருயாத்திரையாக வந்து ஜெபித்திருக்கின்றனர்! அர்ச்.லிசியே குழந்தை சேசுவின் தெரசம்மாள், கார்மல் மடத்திற்கு செல்வதற்கு முன்பாக, திடீரென்று அவளுடைய மனதில் ஏற்பட்ட ஞான ஏவுதலினால், இப்பரிசுத்த இல்லத்திற்கு திருயாத்திரை சென்றதாக, தனது ஜீவிய சரிதையில் குறிப்பிடுகிறாள்; இப்பரிசுத்த இல்லத்தை திருயாத்திரையாக வந்து சந்தித்தவர்களில், அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், அர்ச்.கப்ரீனி பிரான்செஸ், கர்தினால் நியூமன்,அர்ச்.ஜான் நியூமன்,அர்ச்.பிரான்சிஸ் சலேசியார், ஆகியோர், சில குறிப்பிடத்தக்க அர்ச்சிஷ்டவர்கள் ஆவர்.
13ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், ரிகேனாட்டியின் வடக்கிலுள்ள சிரோலோ என்ற இடத்தில், ஒரு துறவற மடத்தைக் கட்டினார். இங்கு ஏன் கட்டவேண்டும், என்று இதைப் பற்றிய திகைப்பிலிருந்த தன் சிடர்களின் கூட்டத்திடம், அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், இந்நூற்றாண்டு முடிவதற்குள், இங்கு அருகில் ஒரு பரிசுத்த ஷேத்திரம் கட்டப்படும் என்றும், இது, உரோமை மற்றும் ஜெருசலேம் பசிலிக்கா தேவாலயங்களை விட அதிகமான திருயாத்ரீகர்கள், உலகம் முழுவதிலிருந்தும், இப்பரிசுத்த சன்னிதானத்திற்கு வருவார்கள், என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். அர்ச்.பிரான்சிஸின் இத்தீ்ர்க்கதரிசனம், 1294ம் வருடம், டிசம்பர் 10ம் தேதி, இப்பரிசுத்த இல்லம் லொரேட் நகரில் ஸ்தாபிக்கப்பட்டபோது, நிறைவேறியது!
1910ம் வருடம், மகா பரிசுத்த லொரேத்தோ மாதா, விமான ஓட்டிகளின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்கள்! ஏனெனில், பரிசுத்த பாரம்பரிய குறிப்பின்படி, பரிசுத்த இல்லம், நாசரேத்திலிருந்து ஆகாய மார்க்கமாக, பாலஸ்தீனத்திலிருந்து சம்மனசுகளால் தூக்கி வரப்பட்டது.செப்டம்பர் 8ம் தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதாவின் பிறந்த திருநாளன்று, விமான ஓட்டிகள், லொரேட்டிலுள்ள இப்பரிசுத்த சந்நிதானத்திற்கு, திருயாத்திரையாக வந்து, ஆடம்பரமான வண்ண நிற சுற்றுப்பிரகாரத்தில் கலந்துகொண்டு, மகா பரிசுத்த தேவமாதாவிடம் பக்திபற்றுதலுடன் ஜெபித்து வேண்டிக் கொள்வார்கள். கடந்த பல நூற்றாண்டுகளால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மகா பரிசுத்த தேவமாதாவின் சகாய உதவியை நாடி திரளான மக்கள் திருயாத்திரையாக இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்; அபரிமிதமான புதுமைகள் நிகழ்கின்றன! தேவ சலுகைகளையும், தேவ வரப்பிரசாதங்களையும் பெற்று, மக்கள் மனந்திரும்பி உத்தம கத்தோலிக்க ஜீவியம் ஜீவிக்கின்றனர்.
மகா பரிசுத்த லொரேத்தோ மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!