Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 நவம்பர், 2024

November 27 - Our Lady of Miraculous Medal

 

நவம்பர் 2️7ம் தேதி

அற்புதப் பதக்கம் என்கிற புதுமை மாதா சுரூபத்தின் திருநாள்

 

1830ம் வருடம், நவம்பர் 27ம் தேதியன்று, பாரீஸ் நகரின் ரூ டூ பாக்கிலுள்ள பிறர்சிநேகக் கன்னியர் மடத்தில், மாலை ஜெபதியான நேரத்தில், அர்ச். கத்தரீன் லபூரேவிற்கு, மகா பரிசுத்த தேவமாதா காட்சியளித்தார்கள். மகா பரிசுத்த தேவமாதா, நீள வட்டமான ஒரு சட்டத்தினுள் தம்மையேக் காண்பித்தபடி, பூகோள உருண்டையின் மேல் நின்றவிதமாகக் காட்சி அளித்தார்கள்; தேவமாதா பல வித்தியாசமான வண்ண நிறங்களிலான மோதிரங்களை அணிந்திருந்தார்கள்; அந்த மோதிரங்களிலிருந்து பிரகாசமான ஒளிக் கதிர்கள், கீழே இருந்த பூமியின் பூகோள உருண்டையின் மீது பாய்ந்தன! தேவமாதா தோன்றிய நீள வட்டத்தின் சட்டத்தைச் சுற்றிலும், “! பாவ மில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே! அடைக்கலமாக உம்மை நாடி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!” என்கிற ஜெபத்தினுடைய வார்த்தைகள் தோன்றின!

கத்தரீன் லபூரே, இப்பரலோகக் காட்சியை கவனித்துக்கொண்டிருந்த போது, காட்சியில் தேவமாதாவைச் சுற்றிலுமிருந்த நீள வட்டத்தின் சட்டம் சுற்றத் துவக்கியது! அடுத்த பக்கத்தில், 12 நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நீள வட்டம் தோன்றியது;அதனுள் சிலுவை நாட்டப்பட்டிருந்த “M” என்ற எழுத்தும் அந்த எழுத்தின் அடியில் முட்களால் முடி சூட்டப்பட்டிருந்த ஆண்டவரின் மகா பரிசுத்த திவ்ய திரு இருதயமும், வாளால் ஊடுருவப்பட்ட மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற இருதயமும் தோன்றின! அப்போது, தேவமாதாவின் திருக்கர விரல்களிலிருந்த ஒருசில மோதிரங்களிலிருந்து, ஏன் ஒளிக்கற்றை வெளியேறாமல் இருக்கிறது? என்று, அர்ச்.கத்தரீனம்மாள் கேட்டார். அதற்கு, மகா பரிசுத்த தேவமாதா, வெளியே புறப்பட்டு வராத அந்த ஒளிக்கற்றைகள், மக்கள் கேட்பதற்கு மறந்த தேவ வரப்பிரசாதங்களைச் சுட்டிக் காண்பிக்கின்றன! என்று பதிலளித்தார்கள்.  பின்னர், மகா பரிசுத்த தேவமாதா, அர்ச். கத்தரீனம்மாளிடம், காட்சியில் கண்டபிரகாரம், ஒரு பதக்கம் செய்யப்பட வேண்டுமென்றும், அதை எல்லோரும் கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டுமென்றும், கத்தரீனம்மாளுடைய  ஆன்ம இயக்குனர் சுவாமியாரின் வழிகாட்டுதலின்படி, இந்த பதக்கம் செய்யப் படவேண்டுமென்றும், கூறினார்கள்.  உறுதியான நம்பிக்கையுடன் இந்த பதக்கத்தை அணிகிறவர்கள் எல்லோரும், மாபெரும் தேவ வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள், என்று மகா பரிசுத்த தேவமாதா கூறினார்கள்.  தேவமாதா கூறியபடி எல்லாவற்றையும், அர்ச். கத்தரீன் லபூரே செய்து முடித்தார்; கத்தரீனுடைய ஆன்ம இயக்குனர் சுவாமியார், இரண்டு வருடம் கழித்து, கத்தரீனுடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல், மகா பரிசுத்த தேவ மாதாவின் காட்சியைப்பற்றிய விவரத்தை, பாரீஸ் அதிமேற்றிராணியாரிடம் தெரிவித்தார்.  தேவமாதாவின் அற்புதப்பதக்கத்தின் காட்சி, திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது; அற்புதப்பதக்கங்கள், ஏட்ரியன் வாச்செட் என்ற பொற்கொல்லரால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டன!  அர்ச். கத்தரீன், தேவமாதா காட்சிபெற்ற அந்த மடத்தின் சிற்றாலயம், பாரீஸிலிருக்கும் ரூ டூ பாக்கிலுள்ள பிறா்சிநேகக் கன்னியர் சபையின் தாய் மடத்தில் உள்ளது. இந்த சிற்றாலயத்தில் தான், அர்ச்.கத்தரீன் லபூரே மற்றும் பிறர்சிநேகக் கன்னியர் சபையின் இணை ஸ்தாபகரான அர்ச்.லூயிஸ் தே மரி லாக்கினுடைய அழியாத பரிசுத்த சரீரங்கள் பூஜிதமாக அடக்கம் செய்யப்பட்டு, பொது வணக்கத்திற்காக வைக்கபட்டிருக்கின்றன. உலகெங்கிலுமிருந்து, மக்கள் இந்நாள் வரை, திருயாத்திரையாக, இங்கு வந்து ஜெபித்துச் செல்கின்றனர்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்.மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஓடி வந்தோம்! எங்கள் பேரில் இரக்கமாயிருந்து, எங்களுக்காக உமது திவ்ய திருக்குமாரனிடம் வேண்டிக்கொள்ளும்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக