Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St. Francis Xavier லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St. Francis Xavier லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜனவரி, 2024

சேசுசபையை உண்டாக்கின அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார் (St. Ignatius of Loyalo)

 திருநாள் ஜூலை 31ம் தேதி.



ஸ்பெயின் நாட்டில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த உத்தம கத்தோலிக்க கிறிஸ்துவ பெற்றோர்களுக்கு மகனாக அர்ச்.இஞ்ஞாசியார் 1491ம் வருடம் பிறந்தார். இஞ்ஞாசியார் மேல் அந்நாட்டின் அரசன் மிகவும் பிரியமாயிருந்ததினால் அரண்மனையில் இருந்த அரச அலுவலர்களிடையே அவர் மிகுந்த மகிமையுடன் திகழ்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து வீர தீரச் செயல்கள் புரிந்து புகழ்பெற்றார். "பாம்பலோனா" என்ற கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது இவர் கால்முறிபட்டு கடினக் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அப்போது அவர் அங்கு, அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரத்தை வாசிக்கிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களைப் அனுக்கிரகத்தினாலேயே பின்பற்றி ஜீவிப்பதற்கு தீர்மானித்தார். பிரதான அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பர் அவருக்குத் தோன்றி புதுமையாக அவருடைய காலைக் குணப்படுத்தினார். மேலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவும் அவருக்குத் தோன்றி, பசாசு அவரை உபாதித்து வந்த கற்புக்கு எதிரான சோதனைகளையும், பாவநாட்டங்களையும் அவரிடமிருந்து அகற்றினார்கள். தேவமாதா செய்த புதுமையினால், அன்றிலிருந்து சாகுமட்டும், அர்ச்.இஞ்ஞாசியார் அத்தகைய சோதனைகளிலிருந்து ஜீவியகாலம் முழுவதும் காப்பாற்றப்பட்டார். தன் அரண்மனை ஜீவியத்தை விட்டு விட்டு, சாங்கோபாங்கமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு மோன்செராத் என்ற தேவமாதாவின் தேவாலயத்திற்கு தவயாத்திரையாகச் சென்றார். பயணத்தின்போது ஒரு பிச்சைக்காரனுக்கு தன்னுடைய நல்ல உடைகளைக் கொடுத்தார். அவனுடைய தரித்திர உடையை வாங்கி அணிந்து கொண்டார். இத்தரித்திர கோலத்திலேயே தேவமாதாவின் கோவிலுக்குச் சென்றார். தன்னுடைய போர்வாளை தேவமாதாவின் சந்நிதியில் வைத்தார். பிறகு மிகுந்த மனஸ்தாபத்துடன் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்தார். தன் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தினார். தன் ஜீவியகாலம் முழுவதும் கற்புநிறை விரத்தனாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்தார். நித்தியத்திற்கும் தேவமாதாவின் சொந்த அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பரிசுத்த கற்புநிறை விரதத்துவ ஜீவியம் தனக்குக் கிடைக்கும்படி ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தேவமாதாவின் சுரூபத்தின்முன் அழுதுகொண்டே மன்றாடிக் கொண்டிருந்தார். அந்த தயைமிகுந்த திவ்ய மோட்ச இராக்கினி அவருடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டதினால் அவர் பெரிய அர்ச்சிஷ்டவரானார். அதன்பிறகு இஞ்ஞாசியார் வியாகுலமாதாவின் சுரூபத்தை தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். அநேக ஆபத்துக்களிலிருந்து வியாகுல மாதா தன்னைக் காப்பாற்றினார்கள் என்று அவரே வெளிப்படுத்தினார்.
மன்ரேசா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும் தரித்திரர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார். கடின தபசும் அனுசரித்து வந்தார். ஆனால் அவ்வூர் மக்கள், தரித்திர கோலத்தில் இருந்த போதிலும் அவர் ஒரு உயர்குடிமகன் என்று அறிந்து அவருக்கு மிகவும் சங்கை மரியாதை செய்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு உடனே, இஞ்ஞாசியார் ஊரை விட்டு வெளியேறி, அருகிலிருந்து மலைக்குகைக்குச் சென்று மறைந்து ஜீவித்தார். நேச ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அவர் அங்கு மிகுந்த கடினமான தபசுகளை அநுசரித்து வந்தார். பிச்சையெடுத்தே உண்டு வந்தார்.

 ஞாயிற்றுக் கிழமைதவிர மற்ற நாட்களில் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உட்கொண்டு ஒருசந்தியிருப்பார். நித்திரையை மிகவும் ஒறுத்துக் குறைப்பார். காயம் வருத்துவிக்கிற இரும்புமுள் ஒட்டியானத்தையும் மகா வேதனை வருத்துவிக்கிற சங்கிலியையும் இடுப்பிலே கட்டிக் கொள்வார். தினமும் தன் சரீரத்தை இரத்தம் புறப்படுகிறவரை அடித்துக் கொள்வார். இவ்வாறாக ஒருவருட காலம் அந்த "மன்ரேசா" குகையிலே கடின தபசு செய்தார்.

அப்படி ஒரு தபசில் ஈடுபட்டிருந்தபோது, விசேஷ தெளிவும் ஞான வெளிச்சமும் அடைந்து ஆண்டவராலே பிரகாசிக்கப்படுகிற போது வெகு ஆனந்தத்தை அவர் அனுபவித்ததுமல்லாமல் மேலான உன்னதமான உணர்ச்சிகள் அவருக்கு உண்டாயிற்று. இதைப்பற்றி குறிப்பிடுகையில் அவர், "அந்தக் குகையில் பரிசுத்த வேதாகமங்கள் இல்லாமல் போனாலும், ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தின வேதகாரியங்களைப் பற்றி மாத்திரம், வேதத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறினார். அர்ச். பரமதிரித்துவ இரகசியத்தை அவர் தரிசனமாகக் காட்சி கண்டார். தேவமாதாவும் அநேகமுறை அவருக்கு அக்குகையில் தோன்றினார்கள்.
அப்போது அதுவரை கல்வி சாஸ்திரங்களைப் படியாமல் இருந்த இஞ்ஞாசியார், அந்தக் குகையிலே "ஞான தியான பயிற்சிகள்" என்ற ஞானதியானத்திற்குரிய ஆச்சரியமான புத்தகத்தை எழுதினார். ஞானத்துக்கு இருப்பிடமான தேவமாதாவே அப்புத்தகத்தை அவர் எழுதும்படிச் செய்தார்கள். அத்தியானங்களின் வழியாக அர்ச்.இஞ்ஞாசியார் வெகு பக்தி சுறுசுறுப்பும் அடைந்ததுமல்லாமல் எண்ணமுடியாத அநேக ஆத்துமங்கள் அப்புத்தகத்தினால் ஞான நன்மையடைந்தன. பாப்பரசர் அதனால் ஏற்படும் ஞானநன்மைகளின் பொருட்டு, உடனே அப்புத்தகத்தை அங்கீகரித்தார். ஆத்துமங்களை இரட்சிக்க கல்வி சாஸ்திரம், முக்கிய தேவை என்று தீர்மானித்த அர்ச். இஞ்ஞாசியார் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தனது 30வது வயதில் சேர்ந்து கல்வி பயின்றார். அதற்குள்ளாக தான் உண்டாக்கின ஞான தியானங்களைக் கொண்டு அநேக பாவிகளை மனந்திருப்பினார். அதனால் காய்மகாரம் கொண்ட பசாசினாலேயும், மனந்திரும்பாத பாவிகளினாலேயும் அவருக்கு வந்த உபாதைகளுக்குக் கணக்கில்லை. அவரை மாயவித்தைக்காரன் என்று சொல்லி விலங்கிட்டு காவலிலே வைத்தார்கள். ஒருசமயம் பாவிகள் அவரைக் கொடூரமாய் அடித்ததினால் அவர் நினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தார்.
ஒரு பாவியை மனந்திருப்புவதற்காக பனிஉறைந்திருக்கிற ஆற்றுத்தண்ணீரிலே வெகுநேரம் நின்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட கடின அவஸ்தையையும் சட்டைபண்ணாமல் பாவியின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இஞ்ஞாசியார், தன் நல்ல நேச ஆண்டவரான சேசுநாதர்பேரில் கொண்டிருந்த சிநேகத்தின்பொருட்டு அளவற்ற ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகச் சென்றார். அங்கிருந்த திவ்ய கர்த்தர் பாடுபட்ட ஸ்தலங்களுக்கு சென்று அவற்றை, மகா உருக்கத்துடனும்அழுகையுடனும் சேவித்தார்.

இஞ்ஞாசியார் தவயாத்திரையை முடித்துக் கொண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி சாஸ்திரங்களைப் பயின்றார். அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களான இளைஞர்கள் சிலரைக் கொண்டு ஒரு துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். தனது ஞானதியானங்களின் வழியாக அவர்களை ஞானஒடுக்கம் செய்ய வைத்தார். அதன்விளைவாக அவ்விளைஞர்கள் பக்தி சுறுசுறுப்புள்ளவர்களானார்கள். அர்ச். பிரான்சிஸ் சவேரியாரும் அந்த இளைஞர்களில் ஒருவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினார். உலக மகிமையைத் தேடி தீவிரமாக அவர் அலைந்தபோது தான் இஞ்ஞாசியார் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராக சேர்ந்தார்.
 "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்" என்ற சுவிசேஷ வார்த்தைகளின் போதனையைக் கொண்டு அர்ச்.இஞ்ஞாசியார் யார் அவரை மனந்திருப்பியிருந்தார். அந்த இளைஞர் களுடன் இஞ்ஞாசியாரும் சேர்ந்து 7 பேராக வேதசாட்சிகளின் இராக்கினியான தேவமாதாவின் தேவாலயத்திற்குச் சென்று கற்பு, கீழ்படிதல், தரித்திரம் என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் கொடுத்து இஞ்ஞாசியார் தொடங்கவிருந்த சந்நியாச சபைக்கு அஸ்திவாரமிட்டனர்.

 இஞ்ஞாசியார், தன் படிபபை முடித்ததும், குருப்பட்டம் பெற்றார். நம் ஆண்டவர் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாத நேசத்தின் பொருட்டும், தாழ்ச்சியினிமித்தமும், இஞ்ஞாசியார், தனது சபைக்கு "சேசுசபை" என்று பெயரிட்டார். பிறகு, ரோமாபுரிக்குச் சென்று தனது சபைக்கு பாப்பரசரிடத்தில் அங்கீகாரம் பெற்றார். பிறகு தன் சபையார் மூலம் சத்தியவேதம் போதிக்கவும் அப்பொழுதுதான் திருச்சபையை உலகெங்கும் சீர்குலைக்கும்படியாக தோன்றியிருந்த புரோட்டஸ்டான்ட் பதிதங்களை நிர்மூலம் பண்ணவும் கிறிஸ்துவர்களை சாங்கோபாங்கத்தின் சுகிர்தநெறியில் திருப்பவும் வேண்டிய அலுவல்களில் ஈடுபடலானார். சிந்துதேசமான இந்தியாவிற்கு அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தலைமையில் சில குருக்களை அனுப்பி அங்கு சத்திய வேதத்தைப் போதிக்கச் செய்தார். தேவபராமரிப்பினால் சேசுசபை உலகெங்கும் வெகுவிரைவாக பரவி ஆங்காங்கே சத்தியவேதம் போதிக்கப்பட்டது. “எல்லாம் சர்வேசுரனுடைய அதிமகிமைக்காக" A.M.D.G (AD MAJOREM DEI GLORIAM) என்பதையே விருதுவாக்காகக் கொண்டு இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட சேசுபையால் உலகம் முழுவதிலும் இருந்த அஞ்ஞானத்துக்கும் பதிதங்களுக்கும் குறிப்பாக லுாத்தரன் என்ற பதிதத்திற்கும் பசாசின் இராஜ்யங்களுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவர்களிடையே தாழ்ந்து குளிர்ந்து போயிருந்த பக்திபற்றுதலை மறுபடியும் தூண்டி உயர்த்தும்படியாக அர்ச். இஞ்ஞாசியார் வெகுவாய் உழைத்தார். தேவாலயங்களை புதுப்பித்து வேதத்தைக் கடைபிடியாதவர்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கிறதும், ஞானபிரசங்கங்கள் கொடுப்பதும், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக ஆத்தும சுத்தம் பண்ணி திவ்ய நற்கருணை பந்திக்கு கிறிஸ்துவர்களை ஆயத்தம் செய்வதுமான பல்வேறு ஞான காரியங்களெல்லாம் அர்ச். இஞ்ஞாசியாராலே எங்கும் முக்கியமாக புண்ணிய பழக்க வழக்கங்களாக அனுசரிக்கப்படலாயின. இஞ்ஞாசியாரின் கட்டளையின்படி சேசுசபையார் அனைவரும் உலகெங்கும் பல நாடுகளில் மடங்களைக் கட்டி இளைஞர்களுக்கு இலவசமாக கல்விக் கற்பித்தனர். வேதசாஸ்திரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தனர்.
சேசுசபையில் உட்படும்படியாக ஏராளமான இளைஞர்கள் முன் வந்தனர். ஜெர்மனி தேசத்திலிருந்து சேசுசபையில் சேர்வதற்காக வந்த ஏராளமான அரசகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்காக ரோமாபுரியில் ஒரு பெரிய குருமடத்தை நிறுவினார். அங்கு மற்ற நாடுகளினின்று வரும் இளைஞர்களுக்கும் வெவ்வேறு சிறு மடங்களையும் கட்டினார். திருமணமாகியும் இல்லறத்தில் ஈடுபடாமல் போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பரிசுத்த கற்பைக் காப்பாற்றும்படியாகவும் அவர்கள் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் ஜீவிப்பதற்காகவும் அவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை ஏற்படுத்தினார். மேலும், அனாதை பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் ஞான உபதேசம் கற்பவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை நிறுவினார்.
 திருச்சபையிடமிருந்தும், பல்வேறு உபகாரிகளின் உதவியினாலும் இஞ்ஞாசியார், தான் நிறுவிய எல்லா மடங்களையும் போஷித்து வந்தார். பசாசுகளை ஓட்டுவதிலே இஞ்ஞாசியார் எவ்வளவுக்கு வல்லமை வாய்ந்தவரென்றால் அவருடைய உருவத்திற்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் பயந்து பசாசுகள் ஓடின என்பதை அவருடைய சபைக்குருக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தேவசிநேகத்தின் சுவாலை அவருடைய இருதயத்திலே அடிக்கடி கொளுந்து விட்டு எரியும். அப்போதெல்லாம் அவர் அடைந்த ஞான சந்தோஷத்தினாலே தன் இரு கண்களும் குருடாகும் அளவிற்கு வெகுவாய் கண்ணீர் விடுவார்.

அவர் திவ்யபலிபூசை நிறைவேற்றும்போது தேவசிநேக சுவாலை அவருடைய இருதயத்தில் மிகுதியாக கிளம்பினதால், திவ்யபலிபூசை முடிந்தவுடன் நடக்கக்கூட முடியாதபடிக்கு மிகவும் பலவீனமாகி சோர்ந்து போவார். அப்போது அவரை அவருடைய அறைக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். அவர் தியானத்தில் இருக்கும்போது அநேகமுறை பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை இஞ்ஞாசியார் அவ்வாறு ஒன்றும் சாப்பிடாமலும், பேசாமலும் 8 நாட்கள் தொடர்ந்து பரவசநிலையிலேயே இருந்தார். ஒருசமயம் இஞ்ஞாசியார் ரோமாபுரிக்கு போகிறபோது நம் ஆண்டவர் சிலுவை சுமந்த பிரகாரமாக அவருக்குக் காட்சி தந்து, "நாம் உனக்கு ரோமாபுரியில் பிரசன்னமாயிருப்போம்" என்றார். அன்றிலிருந்து இஞ்ஞாசியாரின் முகத்தைச் சுற்றிலும் ஒளிக்கதிர் புதுமையாக வீசுகிறதை அர்ச். பிலிப் நேரியார் முதலிய சிலர் கண்டனர். அர்ச். சவேரியார் இஞ்ஞாசியாரை மிகவும் சங்கை செய்தவராதலால் அவருக்குக் கடிதம் எழுதும்போது முழங்காலில் இருந்து எழுதுவார். அவரை அர்ச்சிஷ்டவரென்றே அழைப்பார். வேறுபெயரினால் அழைக்கமாட்டார். அர்ச்.இஞ்ஞாசியார் எழுதிய கடிதத்தின் இறுதியில் இருந்த அவருடைய கையொப்பத்தை சவேரியார் கத்தரித்து எடுத்து அதை ஒரு அர்ச்சிஷ்ட பண்டமாக தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் சவேரியார், அவருடைய கையொப்பத்தை நம்பிக் கொண்டு பூமியிலேயும் கடலிலேயும் யாதொரு பயமுமின்றி பயணம் செய்யலாம். மேலும் நான் புண்ணியத்தில் உயர்வதற்கும் என்னுடைய வழியாக சிந்துதேசத்தாருக்கு வருகிற ஞான நன்மைகள் எல்லாவற்றிற்கும் அர்ச். இஞ்ஞாசியாருடைய புண்ணியங்கள் காரணமாயிருக்கின்றன. அவர் மகாபெரிய அர்ச்சிஷ்டவர்” என்றார்.

 அர்ச். இஞ்ஞாசியார் வாக்குக்கெட்டாத பக்திசுறுசுறுப்போடே புண்ணிய ஜீவியம் ஜீவித்தார். 65வது வயதில் அவஸ்தைபட்டு அர்ச்சிஷ்டவராக மரித்தார். அவரால் திருச்சபைக்கு விளைந்த திரளான ஞான நன்மைகளையும் அவர் செய்த எண்ணற்ற புதுமைகளையும் கண்ட 15ம் கிரகோரியார் பாப்பரசர் இஞ்ஞாசியாருக்கு 1622ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் அளித்தார். தேவமாதாவின் கட்டளையின்படியே அர்ச். இஞ்ஞாசியார் ஒருதடவை உலகிற்கு வந்து அப்போது ஜீவித்துக்கொண்டிருந்த அர்ச். பாசி மரியமதலேனம்மாளுக்கு தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்பேரிலே ஞான பிரசங்கம் செய்தார். சேசுசபை என்ற இந்த மாபெரும் உன்னத சந்நியாச சபையினாலே இதுவரைக்கும் உண்டான மகாத்துமாக்களான அர்ச்சிஷ்டவர்களும் வேதசாஸ்திரிகளும் எவ்வளவு பேர் என்றும் இதனால் உலகிற்கு விளைந்த ஞான நன்மைகள் எவ்வளவு என்றும் மனிதரால் சொல்லமுடியாது. சம்மனசுக்குரிய உயர்ந்த புத்தியும் வார்த்தையும் தான் அந்த ஞானநன்மைகளைப்பற்றி விவரிக்கக்கூடும். A.M.D.G.t

புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 19 - அர்ச். பிரான்சிஸ் சவேரியார் (St. Francis Xavier)

 வாழ்க்கை வரலாறு

அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று சத்திய வேதத்தைப் போதித்ததினால் அவர் சிந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் நமது ஞானத் தந்தையாகவும் இருக்கிறார். ஆனால் இந்த நவீன காலங் களில் அவர் மீதான பக்தி மறைந்து வருகிறது. ஆன்ம தாகம் நிறைந்த அவரது வாழ்வை அறிந்து, அவரைக் கண்டுபாவித்து, அவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அவர் மீது விசேஷ பிள்ளைக் குரிய பக்தி கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. (ஆர்)

இந்தியாவின் அப்போஸ்தலர்

உ லகமெங்கும் சென்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் உன்னத அலுவல் நமது ஆண்டவரால் திருச்சபை வசம் ஒப்பு விக்கப்பட்டது. இந்த அலுவலைக் கத்தோலிக்கத் திருச்சபை, அப்போஸ்தலர் காலமுதல் இதுவரையில் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வுத்தம தொழிலுக்கு தேவ திருவுளத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வேத போதகர் திருச்சபையின் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்று தூர தேசங்களுக்குச் சென்று கத்தோலிக்க சத்தியங்களைப் போதித்து ஆயிரக்கணக்கான அஞ்ஞானிகளைத் திருச்சபையின் செல்வ மக்களாக்கியிருக்கின்றனர். 16-ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்திப் பெற்ற வேதபோதகர்களுள் முதன்மையானவர் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் என்றால் மிகையாகாது. இவருக்கு அக்காலத்தில் வசித்த பரிசுத்த பாப்புவாகிய 8-ம் உர்பன் இந்தியாவின் அப்போஸ்தலர் என்னும் பட்டமளித்தார். 

பிறப்பு 

இந்தப் பெரிய அப்போஸ்தலர் பிறந்த இடம் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த நவார் நாட்டிலுள்ள சேவியேர் மாளிகை. இவர் பிறந்தது 1506-ம் ஆண்டு. இவரது தாய் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை நவார் நாட்டு இராஜாவாகிய 3-ம் ஜான் ஆல்பிரட் என்பவரின் பிரதான மந்திரிகளுள் ஒருவர்.

அர்ச். சவேரியார் பிறந்த சேவியேர் மாளிகை

பிரான்சிஸ் சவேரியாரின் குடும்பத்தில் உதித்த ஆறு மக்களுள் இவர்தான் கடைசிப்பிள்ளை. இவரது சகோதரி மதலேன் என்பவள் காந்தியா நாட்டிலுள்ள அர்ச். கிளாரா மடத்து சிரேஷ்ட தாயாராக மாட்சிமை பொருந்திய உத்தியோகத்தை வகித்து வந்தார். சகோதரரோ அக்காலத்து வழக்கம்போல் இராணுவத்தில் சேர்ந்து கீர்த்திப் பெற்று விளங்கினர். 

பாரீஸ் நகர் பல்கலைக்கழகம் 

பிரான்சிஸ் சிறுவயதிலேயே கல்வி கற்பதில் பெரும் ஆவல் கொண்டிருந்தபடியால், அவரது தாய் தந்தையர் அவரைப் பாரீஸ் நகர் பல்கலைக்கழகத்திற்குத் தமது கல்விப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்தும்படி அனுப்பினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உயர்தரக் கல்வி ஸ்தாபனங்களுள் அதிமிக சிறப்பும், மேன்மையும் பெற்று விளங்கியது பாரீஸ் பல்கலைக் கழகமாகும். பலதேசத்து மாணவர் வந்துகூடி படிக்குமிடமும் இதுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஆசிரியருள் பிரசித்திபெற்ற அறிஞர்கள் ஆசிரியர் தொழில் நடத்திவந்ததும் இந்தப் பல்கலைக்கழகத்திலேதான். சுபாவத்தில் நுட்பமான புத்தியுள்ள இளைஞனாகிய பிரான்சிஸ் வெகு கவனமாய்ப் பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இளமையிலேயே உயர்ந்த கல்விப் பட்டங்களைப் பெற்று, பெரியோரால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். இவரை அர்ச். பார்பரா கல்லூரியின் பிரதம ஆசிரியருள் ஒருவராக நியமித்தார்கள். தமது சகோதரர்கள் இராணுவத்தில் பெயரும். புகழும் பெறுவதுபோல், தாம் கல்வி துறையில் கீர்த்தியும் செல்வாக்கும் அடையவேண்டுமென்பது பிரான்சிஸ் சவேரியாரின் ஒரே ஆசையாயிருந்தது.

அர்ச். இஞ்ஞாசியார்

ஆனால் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று செய்யும் என்னும் பழமொழிக்கேற்ப நமது நல்ல ஆண்டவர் பெருந்தன்மையும், புத்தி தீட்சண்யமுமுள்ள சவேரியாரை தமது ஊழியத்துக்கு அழைக்க சித்தமாயிருந்தார். "நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உலக இரட்சகர் தமது அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறாரன்றோ? அவ்வாறே இப்போது தாம் சவேரியாரைத் தமது அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டதாக அவருக்கு அறிவிக்கும்படி அர்ச். இஞ்ஞாசியாரை அவரிடம் அனுப்பினார். 

அர்ச். இஞ்ஞாசியார் சவேரியாரைப் போலவே ஸ்பெயின் தேசத்து பிரபுகுலத்தில் பிறந்தவர். அவரைப் போலவே தொடக்கத்தில் இவ்வுலக பெருமை, மகிமையை நாடித் திரிந்தவர். ஆனால் இஞ்ஞாசியார் தேவ திருவுளத்தால் அற்புதமாய் ஏவப்பட்டு, பூலோக சுக செல்வங்கள் அழிவுக்குரியவையென்று உணர்ந்து, உலகத்தைத் துறந்து, கடுந்தபம் புரிந்து, தன்னை அடக்கி, சேசுவின் திரு ஊ ழியத்துக்குத் தன்னை முழுவதும் கையளித்திருந்தவர். இவர் தம்மோடு சேர்ந்து தேவ பணிபுரிய ஓர் புதிய சன்னியாச சபையை ஏற்படுத்த கருத்துக் கொண்டவராய் பாரீஸ் பல்கலைக் கழகத்திற்கு வந்து, பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பெருங் குணாதிசயங்களைக் கண்ணுற்ற அவரைத் தமது தோழனாகத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்து, அவரிடம் சென்று. "பிரான்சிஸ், உலக முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழந்துபோவாயானால் என்ன பிரயோசனம்” என்று சொல்வார். ஆனால் வின் மகிமை யென்னும் உலக மாய்கையில் சிக்குண்டு அழைக்கழிக்கப்பட் டிருந்த அவரது இருதயத்துக்கு அர்ச். இஞ்ஞாசியார் சொன்ன புத்திமதி வேப்பங்காயைப் போல கசப்பாயிருந்தது. உலக சுக செல்வத்தை ஒருங்கே மறுத்து சன்னியாசக்கோலம் பூண்டு தரித்திர திசையில் நடமாடித்திரிந்த இஞ்ஞாசியாரை ஓர் ஏழை மாணவன் என்று எண்ணியிருந்த சவேரியார் அவரை இகழ்ந்து அலட்சியம் செய்தார்.

ஆயினும் இஞ்ஞாசியார் அவதைரியப்படாமல், அர்ச்சியசிஷ்டவர் களுக்குரிய அற்புத தாழ்ச்சி, பொறுமையுடன் சவேரியாரை அணுகி, அவருடைய குலம், குணம், கல்வி, ஒழுக்கம், சாதுர்ய சாமர்த்தியம், யுக்தி, யோசனை ஆகிய சுபாவ நன்மைகளைப் புகழ்ந்துப் பேசி, இத்தகைய சுகிர்த இலட்சணங்களை ஆபரணமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் கத்தோலிக்க வாலிபன் இவ்வுத்தம சுபாவக் கொடைகளைத் தன் இரட்சகரின் திரு ஊழியத்தில் செலவழிப்பதே அழிவில்லாப் புகழ்பெற ஏற்ற வழி என்று அவர் உணருமாறு எடுத்துரைத்தார். சவேரியார் இஞ்ஞாசியாரோடு நெருங்கிப் பழகவே, அவரது யதார்த்த குணத்தையும் பெருந்தன்மையையும் உயர்குலப் பிறப்பையும் கண்டு, மனச்சாட்சியின் குரலுக்குச் செவிக்கொடுத்து, திவ்விய இஸ்பிரித்துசாந்துவின் பரிசுத்த ஏவுதலுக்கு இணங்கி, தம்மை இஞ்ஞாசியார் வசம் ஒப்படைத்தார். இஞ்ஞாசியாரும், அவரை உற்சாகப்படுத்தி தமது உற்ற தோழனாக ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அர்ச் இஞ்ஞாசியார் சேசு சபையை ஸ்தாபிக்கும்போது அச்சபையின் அஸ்திவாரக் கற்கள்போன்ற பத்துபேருள் பிரான்சிஸ் சவேரியார் ஒருவராயிருந்தார்.

இந்தியா வருகை 

1537-ம் ஆண்டு அர்ச். ஸ்நாபக அருளப்பர் திருநாள் அன்று சவேரியாருக்கு வெனிஸ் நகரில் குருப்பட்டம் அளிக்கப் பட்டது. அதன்பின் அர்ச். இஞ்ஞாசியாரும் அவர் தோழர் களும் உரோமையில் ஆத்தும இரட்சண்ய அலுவலில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக் கையில், போர்த்துக்கல் தேசத்து இராஜா இந்தப் புது குருமாரின் பக்திப் பற்றுதலையும், வேதபோதகத் திறமையையும் கேள்வியுற்று, இவர்களுள் ஆறுபேரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென்று பரிசுத்த பாப்பரசருக்கு மனு செய்துகொண்டார். அக்காலத்தில் நமது தேசமாகிய இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முன்வந்து முயற்சி செய்தவர்கள் போர்த்துக்கீசியரே. நமது பரிசுத்த பிதா இராஜாவின் மன்றாட்டுக்கிணங்கி அர்ச் இஞ்ஞாசியார் விருப்பப் பிரகாரம் பிரான்சிஸ் சவேரியார். சீமோன் ரொட்ரிகோஸ் என்னும் இரண்டு சேசுசபைக் குருமாரைப் போர்த்துக்கலுக்கு அனுப்பினார். ரொட்ரிக்கோஸ் சுவாமியார் லிஸ்பன் நகரில் இருக்க நேர்ந்ததால், பிரான்சிஸ் சவேரியார் மாத்திரம் இந்தியாவுக்குப் புறப்பட வேண்டிய தாயிற்று. சங். சவேரியார் சுவாமி தமது 35-ம் வயதில், 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சுப்பலேறி, தமது சொந்த தேசம், அன்புள்ள தாய், சகோதரர், சகோதரி, உற்றார் உறவினர் சகலரையும் விட்டு அந்நியராகிய அஞ்ஞான இந்தியர்களுக்கு சத்திய வேதத்தைப் போதிக்க இந்தியாவை நோக்கிப் புறப்பட்டு 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கோவா துறைமுகத்தில் வந்திறங்கினார்.

கோவா 

அர்ச். சவேரியார் காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரை யோரத்திலுள்ள சில துறைமுகப் பட்டணங்கள் போர்த்துக்  கீசியருக்குச் சொந்தமானவையாயிருந்தன. இவைகளுள் பிரதான மானது கோவா நகர். இந்த கோவா மாநகரில்தான் மேற்றிராணியாரும் அரச பிரதிநிதியாகிய உயர் அதிகாரிகளும் வசித்தனர். புதிதாய் வந்திறங்கின சங். சவேரியார் சுவாமியார் தினமும் அதிகாலையில் திவ்விய பலிபூசை நிறைவேற்றியபின், கோவாவிலுள்ள தர்ம மருத்துவமனைகளுக்குச் சென்று வியாதியஸ் தருக்கு ஆத்தும சரீர நன்மைகள் செய்வார். தொழுநோய் மருத்துவ மனையே அவரது விசேஷ அன்புக்குரியதாயிருந்தது. பிறகு சிறைச் சாலைகளுக்குப் போய் அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலளிப்பார். கோவாவில் வீடு வீடாய்ச் சென்று தான் சேகரித்தப் பொருட்களையும் தர்ம பணத்தையும் நோயாளிகளுக்கும் கைதிகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பார். மாலை நேரத்தில் ஓர் சிறு மணியை அடித்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்துபோய் சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட்டிச் சேர்த்துவந்து அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பார். பிள்ளைகளின் ஆத்துமத்தைக் காப்பாற்றி அவர் களுடைய இளம் பிராயத்தில் புண்ணிய நற்பண்புகளை விதைத்தால், பிள்ளைகள் மூலமாய்ப் பெற்றோரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்குவது எளிது என்பதே அவருடைய அபிப்பிராயம். சங். சவேரியார் சுவாமியுடைய முயற்சியின் பலனாக பிள்ளைகள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்சென்று அவருடன் கோவிலுக்குள் சென்று வேத ஞான சத்தியங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொள்வார்கள். கற்றுக்கொண்டதை அநுசரித்து பக்தி விசுவாசமுள்ள சிறு சம்மனசுகளாக மாறிவிட்டதுமன்றி, வேத விசுவாசத்தில் சீர்குலைந்து திரிந்த தங்கள் தாய் தந்தையரையும் தங்களோடு ஞானோபதோத்துக்கு அழைத்துச் செல்வார்கள். கோவா நகர் கிறீஸ்தவர்களும் தங்கள் மத்தியில் ஓர் பரிசுத்த குருவானவர் எழுந்தருளி வந்திருக்கிறாரென்று நன்குணர்ந்து அவரது பிரசங் கத்தைக் கேட்க ஓடிவருவார்கள். அவரது பக்தியார்வம் நிறைந்த வார்த்தைகள் பாவிகளின் இருதயத்தில் ஆணிபோல் பதிந்து தெய்வ பயத்தை உண்டாக்கி அவர்களை நடுங்கச் செய்தன. தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு உத்தம கிறீஸ்தவர்களானார்கள். 


தென்கீழ்க் கடலோரப் பகுதியில் 

பகலில் இவ்வாறு ஆத்தும இரட்சண்யத்திற்காக அயராது உழைத்த அர்ச். சவேரியார் இரவில் அதிக நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவிடுவார். தனது சரீர சுகத்தை ஒரு பொருட்டாய் எண்ணாது, களைப்புக்கும் தவிப்புக்கும் அஞ்சாமல், பிறர் ஆத்தும நன்மைக்காக அவர் சில மாதங்கள் உழைத்தபின், இந்தியாவின் தென்கீழ்க் கடலோரமாகிய முத்துக்குளித்துறையில், கன்னியாகுமரிக்கும் மன்னாருக்கும் நடுவிலுள்ள ஊர்களில் வசித்த பரதகுல மக்களுக்கு ஞான உதவி புரியும்பொருட்டு 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வந்து சேர்ந்தார்.


அர்ச். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வந்ததும் அங்குள்ள பரதர்களில் அநேகர் சில வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தும். அவர்களை வேதத்தில் ஸ்திரப் படுத்த குருமார் இல்லாத குறையால் இந்தப் புதுக் கிறீஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருந்த அஞ்ஞானிகளைப் போலவே வேத ஞான அறிவில்லாத வர்களாயிருப்பதைக் கண்டார். கோவாவில் எப்படி கிறீஸ்தவர்கள் மத்தியில் உழைத்தாரோ அதே விதமாய்ப் பரதர்கள் மத்தியிலும் உழைத்து, புதுக் கிறீஸ்தவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்த அஞ்ஞானப் பரதர்களுக்கு வேதம் போதித்து தமது கையாலேயே ஞானஸ்தானம் கொடுத்தார்.

முத்துக்குளித்துறையில் தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் ஞான ஆறுதலையும் தக்கவாறு வர்ணிக்கத் தன்னால் இயலாது என்று அர்ச். சவேரியார் உரோமைக்குத் தனது சபைக் குருமாருக்கு எழுதி யிருக்கிறார். திரளான கூட்டமாய் தன்னிடம் வந்த பரதகுலத்தாருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் தனது கரங்களைத் தூக்க முடியவில்லை என்றும், களைப்பினால் பேசமுதலாய் பலமில்லை யென்றும் சொல்லுகிறார். அம்மக்களின் ஆச்சரியத்துக்குரிய பக்திப் பற்றுதலையும், வேத சத்தியங்களைக் கற்றறிய அவர்களுக்கு இருந்த அணைகடந்த ஆவலையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர்கள் எப்போதும் என்னோடுகூட இருக்க ஆசித்து, என்னை எப்போதும் சூழ்ந்துகொண்டிருப்பதால் ஜெபிக்க நேரமின்றி, அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொண்டு என் கட்டளை ஜெபத்தை ஜெபித்து முடிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குள் யாராவது வியாதியாய் விழுந்தால் சவேரியாருடைய ஜெபமாலை அல்லது பாடுபட்ட சுரூபத்தை வாங்கிக்கொண்டு போய் குணப்படுத்துவார்கள். 

முத்துக்குளித்துறையில் மரணத்தறுவாயிலிருந்த அஞ்ஞானக் குழந்தைகளைத் தேடிச்சென்று ஞானஸ்நானம் கொடுப்பார். இவ்வாறு இவர் கையால் ஞானஸ்நானம் பெற்று இறந்து மோட்சபாக்கியம் பெற்ற குழந்தைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கு மேல் இருக்கு மென்று அர்ச். சவேரியார் கணக்கிட்டிருக்கிறார்.

அர்ச் சவேரியார் மணப்பாட்டு வழியாய் பலமுறை பிரயாணஞ் செய்தும் அவ்வூரிலேயே அநேக மாதம் தங்கியும் இருக்கிறார். 1542-ம் ஆண்டு மணப்பாடு அவருடைய பரிசுத்த பாதங்களினால் முதன் முதலாக அர்ச்சிக்கப்பட்டது. மறு வருடம் சுமார் நான்கு மாதம் அங்கேயே தங்கியிருந்தார். 1544 ம் வருடத்தில் மாத்திரம் மணப்பாட்டிலிருந்து 12 கடிதங்கள் எழுதினாரென்றால் எத்தனை முறை அவர் அங்கு சென்றிருக்கவேண்டுமென நாமே எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 1548-ம் ஆண்டில் தமது தோழர்களுக்கு தியானம் கொடுத்து அவர்களுக்கான புத்திமதிகளை எழுதிக் கொடுத்தது மணப்பாட்டில்தான். ஏழைகளின் உணவாகிய சாதமும் தண்ணீருமே அவர் அருந்திய அநுதின உணவு. வேலை முடிந்தபின் ஓர் எளிய குடிசையில் தரையில் மூன்று மணி நேரம் படுத்துறங்குவார். மீதி நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஆழ்த்திருப்பார். அவர் வழக்கமாய் ஜெபதபம் புரிந்துவந்த குகையை இன்றும் மணப்பாட்டில் காணலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் முத்துக்குளித் துறையெனப் பெயர்பெற்று விளங்கும் பரதர் நாடே அர்ச். சவேரியாரின் விசேஷ அன்பின் ஸ்தானமாயிருந்தது என்று மேற்கூறியவைகளைக் கொண்டு எளிதாக அறிந்துக் கொள்ளலாம். அவரது ஞான மக்களாகிய பரத குலத்தாரும் அர்ச். சவேரியார் தங்கள் முன்னோருக்குச் செய்தருளிய எண்ணிலா உபகார சகாயங்களை மறவாமல் அவரைத் தங்கள் அருமைத் தந்தையென்று போற்றிப் புகழ்ந்து ஸ்துதித்து வருகின்றனர். அர்ச். சவேரியார் வேதம் போதிக்கச் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவது எளிதல்ல. ஆனால் அவர் இலங்கை, மலாக்கா, மொலுக்கஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போய் இந்தியாவுக்குத் திரும்புகையில் தமது பரதருல மக்களை பாசத்தோடு சந்தித்து அன்புடன் ஆசீர்வதிக்க ஆவலுடன் முத்துக்குளித் துறைக்குப் போவார்.

சீனதேசம்


அர்ச். சவேரியார் இந்தியாவை விட்டு கடைசியாக புறப்பட்டது 1552-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. சீனதேசம் புகுந்து அங்குள்ள அஞ்ஞான சீனருக்கு வேதம் போதிக்கவேண்டுமென்பது அவரது தீராத ஆவல், ஆனால் அந்நிய தேசத்தார் எவரும் சீனதேசத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்பது அத்தேசத்தின் கண்டிப்பான சட்டம். அப்படி இச்சட்டத்தை மீறி தேசத்திற்குள் பிரவேசிப்பவர்களைச் சிரச்சேதம் செய்வது வழக்கம். அர்ச். சவேரியார் இதை அறிந் திருந்தும், தேவசிநேகத்தால் பற்றியெறிந்த அவர் இருதயம் சீனர்களுக்கு வேத ஞானப்பிரகாசம் அளிக்கவேண்டுமென்று அவரை ஏவித்தூண்டிக்கொண்டேயிருந்தது. ஆதலால் தனக்கு வரவிருக்கும் உயிர்சேதத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சீனதேசத்துக்குச் செல்லத் தீர்மானித்து, 1552-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்ஷியன் தீவு போய்ச் சேர்ந்தார். இந்த இடம் சீன தேசத்தின் கீழ்க்கரையோரத்தில் கான்டன் நகருக்கு எதிரே இருக்கும் ஓர் சிறு தீவு, அங்கே வந்திருந்த போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் அர்ச்சியசிஷ்டவரை சந்தோஷத் துடன் வரவேற்று, அவர் திவ்விய பலிபூசை செய்ய ஓர் சிற்றாலயமும் கட்டிமுடித்தனர். சிலநாள் அத்தீவில் சிறுவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்துவந்தார். அங்கிருந்து சீன தேசத்திற்குப் போக ஏதாவது வர்த்தக கப்பல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு கொடிய ஜுரம் கண்டது. 

மரணம்

மரணம் அடுத்திருக்கிறது என்று தூரதிருஷ்டியால் அறிந்துகொண்ட அர்ச். சவேரியார் தமது நேச ஆண்டவரின் வருகைக்கு தன்னைத் தயார்செய்து கொண்டு ஆவலோடு காத்திருந்தார். “ஒ. மிகவும் பரிசுத்த திரித்துவமே, தாவீதின் குமாரனாகிய சேசுவே, என்மீது இரக்கமாயிரும்." "தாயே உம்மைத் தாயென்று காண்பித் தருளும்" என்னும் மனவல்ய ஜெபங்களே அவரது கடைசி சம்பாஷனையாக இருந்தது. 1552, டிசம்பர் 2-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு தனது கரங்களில் பாடுபட்ட சுரூபத்தை இறுகப் பிடித்து அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டே மெதுவாய்,

"ஆண்டவரே, உம்மை நம்பினேன், ஒருபோதும் கைவிடப் படேன்” என்னும் இனிய ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே தனது ஆத்துமத்தைத் தன் அதிமிக அன்புக்குரிய ஆண்டவரிடம் கையளித்தார்.

பிரான்ஸ் தேசத்தின் பெயர்பெற்ற பிரசங்கியாகிய பூர்தலு என்பவர் அர்ச். சவேரியாரைப்பற்றி பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்: அப்போஸ்தலர்கள் செய்த புதுமைகளையெல்லாம் அர்ச். சவேரியாரும் செய்தார். அவர்களைப் போலவே அற்புதமாய் பல பாஷை பேசும் வரமும், தீர்க்கதரிசன வரமும், புதுமை செய்யும் வரமும் அவருக்கிருந்தது. பல தேசங்களில் திரிந்து கணக்கற்ற அஞ்ஞானிகளை மனந்திருப்பியதில் அப்போஸ்தலர்களுக்கு சம அப்போஸ்தலராயிருந்தது மாத்திரமல்ல, அவர்களில் பலருக்கு மேலானவருமாயிருந்தார். அவர் கரங்களில் ஞான தீட்சைப் பெற்றவர்கள் 12 லட்சத்திற்கு அதிகமான அஞ்ஞானிகள், சத்திய வேதத்தைக் கேட்டிராத 200-க்கு அதிகமான இராச்சியங்களில் வேதத்தைப் போதித்து ஏக திரித்துவ மெய்யங்கடவுளின் மேலான ஆராதனையை ஸ்தாபித்தார். எண்ணிறந்த அஞ்ஞான விக்கிர கங்களை உடைத்துத் தகர்த்தார். கடலிலும் தரையிலும் அவர் செய்த பிரயாணங்கள் உலக முழுவதையும் மும்முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும். அவர் சென்றவிட மெல்லாம் சத்திய திருச்சபை செழித்தோங்கி வளர்ந்தது. அவருக்குமுன் குருக்கள் பாதம் படாத ஜப்பான் தேசத்தில் முதன்முதலில் சத்திய வேதத்தை நாட்டினவர் இந்த அர்ச்சியசிஷ்டவர்தான்.

சவேரியாரே எம் நல்ல தந்தையே!
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே