Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Devamaatha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Devamaatha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2024

மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி! (Devotion to Our Lady)

 மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி!



சேசுவே இரட்சகர்! சேசுவே ஆண்டவர் ! சேசுவே சர்வேசுரன்! சகல சிருஷ்டிகளும் அவருக்காக, அவர் மூலமாகவே உண்டாக்கப் பட்டுள்ளன. ''அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்ட தொழிய உண்டாக்கப்பட்டவைகளில் எதுவும் அவராலேயன்றி உண்டாக்கப்பட வில்லை " (அரு.1:3).

அவரே நம் இரட்சகர்! ''நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவை மரத்தின் மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவருடைய காயங்களினால் நாம் குணமாக்கப்பட்டோம்!" (1இரா.2:24). நாம் இரட்சணியம் அடைய வேண்டியதற்கு வானத்தின் கீழ் (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை (அப். நட. 4:12).

சேசுவே ஆண்டவர்! ஏனெனில் "இவரே காணப்படாதவராகிய சர்வேசுரனுடைய சாயலும், சகல சிருஷ்டிகளுக்கும் முந்தின பேறுமானவர். அதெப்படியென்றால், பரலோகத்திலும் பூலோகத் திலும் காணப்பட்டவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டன.... இவரே எல்லோருக்கும் முந்தின வராயிருக்கிறார். இவருக்குள்ளே சகலமும் நிலைபெறுகின்றது" (கொலோ.1:15-17).

சேசுவே சர்வேசுரன்! அவரே தேவ வார்த்தையானவர். ''அந்த வார்த்தை சர்வேசுரனிடத்திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்" (அரு.1:1). "சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரனும்." (மத்.16:16), பாவங்களை மன்னிக்கிறவரும், வரப்பிரசாதங்களின் கருவூலமும், சிநேகத்தின் ஊற்றும், " மறைவாயிருக்கிறவைகளை வெளிப்படுத்துகிறவரும்" (மத் 13:35), "மனிதனைத் தீர்வையிடும் அதிகாரத்தைப் பிதாவிடமிருந்து பெற்றிருக்கிறவரும்” (அரு. 5:27), "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே இருக்கிறவரும்" (அரு. 8:58) அவரே. அவரே நம் இறுதிக்கதி!

எனவே, கிறீஸ்துநாதரைத் தன் இரட்சகராகவும், ஆண்டவராகவும், உன்னத சர்வேசுரனாகவும் ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் நித்தியத் திற்கும் இழக்கப்படும் ஆபத்திலிருக்கிறான்.

ஆனால் கத்தோலிக்கரிடையேயும் கூட அறியாமையில் மூழ்கியிருக் கிற அநேகர் கிறீஸ்து நாதரை விட்டுவிட்டு, தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் உண்மையான அன்பில்லாமல், ஒரு முறையற்ற வெளியரங்க பக்தியை மட்டும் கொண்டிருக்கிறார்கள். திருநாட்களின் வெளிக் கொண்டாட்டங்கள், வரி வசூல், ஆடை அணிகலன்கள், குடிவெறி, உல்லாசம், சப்பரம், கும்பிடு சரணம் போன்ற வெளிக்காரியங்களில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் நாம் கொள்ளும் பக்தி (திவ்ய பலிபூசை, தேவ நற்கருணை, பாவசங்கீர்த்தனத்தின் வழியாக) நமதாண்டவராகிய சேசுவோடு நம்மை இணைக்காவிட்டால், நம் பக்தி உண்மையான கிறீஸ்தவ பக்தியல்ல. கிறீஸ்துநாதரை அறிந்து, நேசித்து, சேவிக்க எல்லா முயற்சியையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவமாதாவோ கிறீஸ்துநாதரை நாம் சென்றடையும் வழியாக இருக்கிறார்கள். மாதா பக்தி நம்மைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனில், இந்த மகா உன்னத சிருஷ்டியான திவ்ய கன்னிகை உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒருபோதும் நிறைவேற முடியாது. சேசுநாதர் மாமரியாகிய மரத்தில் கனிந் திருக்கிற கனியாயிருக்கிறார். இக்கனியைப் பெற்றுக் கொள்ளும் ஏக்கத்துடனேயே நாம் மாதாவை அணுகிச் செல்ல வேண்டும். ஆகையால் மாதா பக்தியைப் பயன்படுத்தி, சேசுவைச் சென்றடைய நமக்கு உதவுமாறு மாதாவிடம் மன்றாடுவோமாக!

புதன், 20 டிசம்பர், 2023

சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்! - Feast of Annunciation (March - 25)

Source: Salve Regina, March 2007 


சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!

வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)


ரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!

அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி!  ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது. 

ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)

மாமரியின் தகுதி!

சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு  என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.

திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.

மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!

கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.

கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அமலோற்பவ மரியாயே!!! - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ மரியாயே வாழ்க!

(இக்கட்டுரை அதிமேற்றிராணியார் மிக. வந் மார்செல் லெஃபவர் ஆண்டகை 1972-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாளன்று நிகழ்த்திய பிரசங்கத்திலிருந்த எடுக்கப்பட்டது - ஆசிரியர்)


நித்திய அமலோற்பவம்


மாதாவின் அமலோற்பவ திருநாளின் முழு வழிபாடு அனைத்தும். எல்லாம் வல்ல சர்வேசுரன் தமது அளவில்லாத ஞானத்தால் ஆதியிலிருந்தே, மிகவும் பரிசுத்த கன்னிமரியாயை நமக்காக தயார் செய்தார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. சர்வேசுரன், மரியாய் இவ்வுலகில் உற்பவித்த அந்த கணத்திலிருந்து மாத்திரம் அவர்களை அனைத்துப் பாவமாசுகளிலிருந்தும் விடுவித்து அமலோற்பவமாக ஏற்படுத்தவில்லை. மாறாக, நித்தியத்திலிருந்தே உலகம் உண்டாகும் முன்னமே அவர்களை அவ்வாறு தீர்மானித்திருந்தார்.

நித்திய வார்த்தையானவரின் வார்த்தை களை இத்திருநாளின் நிருப வாசகம் மாதாவிற்கு பொருத்தி இவ்வுண்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பரிசுத்த கன்னிகை ஏற்கனவே சர்வேசுரனின் சித்தத்தில் இருந்தார்கள். "- iiam concepta erami நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்" (பழ. 8:24). ஆம்! சர்வேசுரனுடைய மனதில் கன்னிமாமரி கர்பந்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியாக தமது தெய்வீக மீட்புத் திட்டத்தில் சர்வேசுரன் கன்னிமரியாயை நினைத்திருந்தார். ஆகையால், அவர்களை தமது வரப்பிரசாதங்களால் நிரப்பவும், அவர்களை அனைத்து பாவக்கறைகளிலிருந்து காப்பாற்றி அமலோற்பவம் என்ற அசாதாரண சலுகையை வழங்கச் சித்தமானார். "i Tota pulchra es, Maria, et macula originalis non est in teî - மரியாயே! நீர் முழுவதும் அழகுள்ளவள். ஜென்மப் பாவத்தின் மாசு ஒருபோதும் இருந்ததில்லை!"

ஆக உலகம் தோன்றும் முன்னமே, சர்வேசுரன். இந்த ஆச்சரியத்துக்குரிய படைப்பை நமதாண்டவர் சேசு கிறீஸ்து நாதருக்கு அடுத்தபடியான. தமது படைப்புகளின் மேலானவர்களாயிருக்கிற மாதாவை நினைத்தார். தேவதாயின் பிறப்பிற்கு முந்திய மனித சமுதாயத்தின் வரலாற்று காலங்கள் அனைத்திலும், எந்நேரமும் இந்த பரிசுத்த கன்னிகை சர்வேசுரனுடைய சிந்தையில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் இதனை நாம் காணலாம். அதிலும் குறிப்பாக, ஆதாம்-ஏவாள் பாவம் கட்டிக் கொண்ட உடனேயே சர்வேசுரன் சாத்தானாகிய சர்ப்பத்திடம் "...உனக்கும், ஸ்திரீக்கும் பகையை மூட்டு வோம்... அவள் உன் தலையை நசுக்குவாள்" (ஆதி. 3:15) என்று கூறினார். ஆகையால், பரிசுத்த கன்னிமாமரி, சர்வேசுரனுடைய ஆவியால் முன் குறிக்கப்பட்டார்கள். மாதாவினுடைய அமலோற்பவம் அவரால் தயாரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் மாதாவின் உருவகம்! 

பரிசுத்த கன்னிமாமரியின் உருவங்கள் பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் காணக் கிடக்கின்றன. அவர்களில் மாதா முன் அடையாளமாகக் காட்டப்படுகிறார்கள். தோபியாசின் மனைவியான சாராவைக் கவனித்தால், அவளை குறித்தே சம்மனசானவர் சாத்தானைக் கட்டி, பாலைவனத்தில் வீசுகிறார் (தோபி. 8:3), சாரா பரிசுத்த கன்னிமரியாயின் முன் அடையாளமாதக் திகழ்கிறாள். அவளுக்கு முன்பாக பசாசு ஓடும், அவளைக் கண்டு சாத்தான் அஞ்சும்? பரிசுத்த கன்னி மரியாய் சாத்தானின் அரசில் ஒரு சிறு கண மேனும் கூட உட்படவில்லை. ஏனெனில் அவர்கள் அமலோற்பவமாக ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள். 

யூதித்தின் வரலாற்றைப் பார்த்தோமாகில், பரிசுத்த கன்னிமரியாயின் பங்கை மீட்புத் திட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவள் தமது இஸ்ராயேல் மக்களை ஒலாப்பேர்னெசிடமிருந்து காப்பாற்றினார். அவனது தலையை யூதித் வெட்டி இஸ்ராயேல் ஜனங்களை மீட்டது போலவே பரிசுத்த கன்னிமரியாயும் சாத்தானின் தலையை வெட்டி (நசுக்கி) சர்வேசுரனுடைய மக்களைக் காத்தார்கள். அதாவது. சேசு கிறிஸ்துநாதரோடு சிலுவைப்பலி வரை உடனிருந்து பங்கேற்று சாத்தானின் அரசை முறியடித்து மீட்பைப் பெற்றுத் தந்தார்கள்.

இது தவிர பழைய ஏற்பாட்டில் இன்னும் அதிகமான பரிசுத்த பெண்மணிகள் மூலமாக மாதா உருவகமாக வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள், அவர்கள் எப்பொழுதும் சர்வேசுரனின் நினைவில் -தேவ திட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கின்றன.


அருள் நிறைந்த மரியாய்!


பரிசுத்த கன்னிமரியாய் தமது தாயின் உதரத்தில் உற்பவமான அந்தக் கணத்திலேயே இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டார்கள். ஆகையால், ஜென்மப்பாவம் அவர்களை மாசுப்படுத்தாமல் விலக்கப்பட்டது. இஸ்பிரித்து சாந்துவானவர் இருக்குமிடத்தில் எப்படி பசாசானது நுழைய முடியும்? எனவே, மகா பரிசுத்தவதியான கன்னிமாமரி ஜென்மப் பாவமில்லாமல் உற்பவமானார்கள். ஆதலால், அவர்களது உற்பவந்தொட்டே - பிறப்பிலிருந்தே இஸ்பிரித்து சாந்துவானவரை முழுமையாகப் பெற்றிருந்தார்கள். அதனால் தான் கபிரியேல் சம்மனசானவர், "பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே; ஸ்திரிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். ஆகையால் தான் அவர்கள் சுதனாகிய சர்வேசுரனுக்கு உகந்த இல்லிடமாவதற்காக பாவ மாசின்றி, அமலோற்பவியாக சிருஷ்டிக்கப்பட்டார்கள். இதனையே தான் திருச்சபையும் மாதாவின் அமலோற்பவத் திருநாள் பூசையின் சபை ஜெபத்தில் "சர்வேசுரா, தேவரீர் கன்னிகையின் மாசில்லா உற்பவத்தினால் உம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடத்தை தயாரித்தருளினீரே..." என்று குறிப்பிட்டு மன்றாடுகிறது.


மாதாவின் அமலோற்பவம் நமக்கு கற்பிக்கும் பாடம்!


நமதன்னையின் அமலோற்பவ மகிமையும், அவர்களது வாழ்வும் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனில், பரிசுத்த கன்னி மரியம்மாள் அவர்களது உற்பவத்திலிருந்தே பாவ மாசில்லாமல் இருப்பது எதற்கென்றால் "அவர்கள் நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் தாயாகும் பொருட்டே!" அவர்கள் தேவ குமாரனை தம்மில் தாங்குவதற்காகவே! உலகிற்கு மீட்பரை வழங்கும் பொறுப்பாளராக இருப்பதற்காகவே! சேசுவோடு அவரது தாயாக, இணை மீட்பராக மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க வேண்டும் என்பதற்காகவே!

கிறீஸ்தவர்களாகிய நாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ளும் போது சேசு கிறிஸ்துநாதர் சுவாமியையே பெற்றுக் கொள்கிறோம். அமலோற்பவ மரியாயிடமிருந்து உற்பத்தியான அதே சரீரமாதலால் நாம் அவரை உட்கொள்ள மிகவும் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும். எப்படி சேசுவை மகவாகப் பெற மாதா பாவமின்றி ஏற்படுத்தப்பட்டிருந்தார்களோ, அதுபோல நாமும் நமது ஆத்துமத்தின் கறைகளெல்லாம் நீக்கப்பட்டு பரிசுத்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேவதாயைப் போல நாம் இல்லாவிட்டாலும், நம் ஜெபதபங்களாலும், நமது புண்ணிய வாழ்வாலும், சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தின் உதவியோடு நமது ஆத்துமங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இது நம்மால் முடியுமா? ஆம். முடியும்! நம்மால் பாவமில்லாமல் வாழ முடியும். நமது ஆத்துமங்களில் சிறு பாவத்தின் சளனம் தோன்றினாலும் கூட நாம் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அது எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால். சர்வேசுரன் நம் ஒவ்வொருவருடைய ஆத்துமத்தையும் நோக்கி: "i Tota pulchra est, et macula non est in eaî - முற்றிலும் அழகுள்ளது. இதனிடம் மாசேதுமில்லை" என்று சொல்லப்படும்படியாக நமது ஆத்துமம் தூய்மையாய்த் திகழ வேண்டும்.

தேவதாய் பாவத்தை அழிப்பதற்காகவே சர்வேசுரனால் உருவாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆகையால், அவர்களைத் தவிர வேறு எந்த சிருஷ்டியும் பாவத்திலிருந்து விடுபட்டதில்லை. அவர்களே சாத்தானின் தலையை நசுக்கினார்கள். ஆதலால், அவர்களிடம் பசாசோடு எந்தவிதமான உடன்பாடுமில்லை. பாவத்தோடு, தீமையோடு எவ்விதமான ஒட்டுறவுமில்லை. அவர்கள் முழுவதும் பரிசுத்தமானவர்கள். எனவே அவர்களிடம் ஜெபிப்போம். நாமும் அவர்களைப் போலவே. சாத்தானோடு பாவத்தோடு - தீமைகளோடு எந்தவிதமான உடன்பாடோ, ஒட்டுறவோ இல்லாமல் காக்கும்படியாக கேட்போம். நம்மையும் அவர்களைப் போல அமல - தூயவர்களாக்கும்படியாக நம்மை அவர்களது அமலோற்பவ மேலாடையால் போர்த்திக் காக்கும்படி இறைஞ்சி மன்றாடுவோமாக!

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


source: Salve Regina (Magazine) - Dec. 2007