அமலோற்பவ மரியாயே வாழ்க!
(இக்கட்டுரை அதிமேற்றிராணியார் மிக. வந் மார்செல் லெஃபவர் ஆண்டகை 1972-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாளன்று நிகழ்த்திய பிரசங்கத்திலிருந்த எடுக்கப்பட்டது - ஆசிரியர்)
நித்திய அமலோற்பவம்
மாதாவின் அமலோற்பவ திருநாளின் முழு வழிபாடு அனைத்தும். எல்லாம் வல்ல சர்வேசுரன் தமது அளவில்லாத ஞானத்தால் ஆதியிலிருந்தே, மிகவும் பரிசுத்த கன்னிமரியாயை நமக்காக தயார் செய்தார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. சர்வேசுரன், மரியாய் இவ்வுலகில் உற்பவித்த அந்த கணத்திலிருந்து மாத்திரம் அவர்களை அனைத்துப் பாவமாசுகளிலிருந்தும் விடுவித்து அமலோற்பவமாக ஏற்படுத்தவில்லை. மாறாக, நித்தியத்திலிருந்தே உலகம் உண்டாகும் முன்னமே அவர்களை அவ்வாறு தீர்மானித்திருந்தார்.
நித்திய வார்த்தையானவரின் வார்த்தை களை இத்திருநாளின் நிருப வாசகம் மாதாவிற்கு பொருத்தி இவ்வுண்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பரிசுத்த கன்னிகை ஏற்கனவே சர்வேசுரனின் சித்தத்தில் இருந்தார்கள். "- iiam concepta erami நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்" (பழ. 8:24). ஆம்! சர்வேசுரனுடைய மனதில் கன்னிமாமரி கர்பந்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியாக தமது தெய்வீக மீட்புத் திட்டத்தில் சர்வேசுரன் கன்னிமரியாயை நினைத்திருந்தார். ஆகையால், அவர்களை தமது வரப்பிரசாதங்களால் நிரப்பவும், அவர்களை அனைத்து பாவக்கறைகளிலிருந்து காப்பாற்றி அமலோற்பவம் என்ற அசாதாரண சலுகையை வழங்கச் சித்தமானார். "i Tota pulchra es, Maria, et macula originalis non est in teî - மரியாயே! நீர் முழுவதும் அழகுள்ளவள். ஜென்மப் பாவத்தின் மாசு ஒருபோதும் இருந்ததில்லை!"
ஆக உலகம் தோன்றும் முன்னமே, சர்வேசுரன். இந்த ஆச்சரியத்துக்குரிய படைப்பை நமதாண்டவர் சேசு கிறீஸ்து நாதருக்கு அடுத்தபடியான. தமது படைப்புகளின் மேலானவர்களாயிருக்கிற மாதாவை நினைத்தார். தேவதாயின் பிறப்பிற்கு முந்திய மனித சமுதாயத்தின் வரலாற்று காலங்கள் அனைத்திலும், எந்நேரமும் இந்த பரிசுத்த கன்னிகை சர்வேசுரனுடைய சிந்தையில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் இதனை நாம் காணலாம். அதிலும் குறிப்பாக, ஆதாம்-ஏவாள் பாவம் கட்டிக் கொண்ட உடனேயே சர்வேசுரன் சாத்தானாகிய சர்ப்பத்திடம் "...உனக்கும், ஸ்திரீக்கும் பகையை மூட்டு வோம்... அவள் உன் தலையை நசுக்குவாள்" (ஆதி. 3:15) என்று கூறினார். ஆகையால், பரிசுத்த கன்னிமாமரி, சர்வேசுரனுடைய ஆவியால் முன் குறிக்கப்பட்டார்கள். மாதாவினுடைய அமலோற்பவம் அவரால் தயாரிக்கப்பட்டது.
பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் மாதாவின் உருவகம்!
பரிசுத்த கன்னிமாமரியின் உருவங்கள் பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் காணக் கிடக்கின்றன. அவர்களில் மாதா முன் அடையாளமாகக் காட்டப்படுகிறார்கள். தோபியாசின் மனைவியான சாராவைக் கவனித்தால், அவளை குறித்தே சம்மனசானவர் சாத்தானைக் கட்டி, பாலைவனத்தில் வீசுகிறார் (தோபி. 8:3), சாரா பரிசுத்த கன்னிமரியாயின் முன் அடையாளமாதக் திகழ்கிறாள். அவளுக்கு முன்பாக பசாசு ஓடும், அவளைக் கண்டு சாத்தான் அஞ்சும்? பரிசுத்த கன்னி மரியாய் சாத்தானின் அரசில் ஒரு சிறு கண மேனும் கூட உட்படவில்லை. ஏனெனில் அவர்கள் அமலோற்பவமாக ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள்.
யூதித்தின் வரலாற்றைப் பார்த்தோமாகில், பரிசுத்த கன்னிமரியாயின் பங்கை மீட்புத் திட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவள் தமது இஸ்ராயேல் மக்களை ஒலாப்பேர்னெசிடமிருந்து காப்பாற்றினார். அவனது தலையை யூதித் வெட்டி இஸ்ராயேல் ஜனங்களை மீட்டது போலவே பரிசுத்த கன்னிமரியாயும் சாத்தானின் தலையை வெட்டி (நசுக்கி) சர்வேசுரனுடைய மக்களைக் காத்தார்கள். அதாவது. சேசு கிறிஸ்துநாதரோடு சிலுவைப்பலி வரை உடனிருந்து பங்கேற்று சாத்தானின் அரசை முறியடித்து மீட்பைப் பெற்றுத் தந்தார்கள்.
இது தவிர பழைய ஏற்பாட்டில் இன்னும் அதிகமான பரிசுத்த பெண்மணிகள் மூலமாக மாதா உருவகமாக வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள், அவர்கள் எப்பொழுதும் சர்வேசுரனின் நினைவில் -தேவ திட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கின்றன.
அருள் நிறைந்த மரியாய்!
பரிசுத்த கன்னிமரியாய் தமது தாயின் உதரத்தில் உற்பவமான அந்தக் கணத்திலேயே இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டார்கள். ஆகையால், ஜென்மப்பாவம் அவர்களை மாசுப்படுத்தாமல் விலக்கப்பட்டது. இஸ்பிரித்து சாந்துவானவர் இருக்குமிடத்தில் எப்படி பசாசானது நுழைய முடியும்? எனவே, மகா பரிசுத்தவதியான கன்னிமாமரி ஜென்மப் பாவமில்லாமல் உற்பவமானார்கள். ஆதலால், அவர்களது உற்பவந்தொட்டே - பிறப்பிலிருந்தே இஸ்பிரித்து சாந்துவானவரை முழுமையாகப் பெற்றிருந்தார்கள். அதனால் தான் கபிரியேல் சம்மனசானவர், "பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே; ஸ்திரிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். ஆகையால் தான் அவர்கள் சுதனாகிய சர்வேசுரனுக்கு உகந்த இல்லிடமாவதற்காக பாவ மாசின்றி, அமலோற்பவியாக சிருஷ்டிக்கப்பட்டார்கள். இதனையே தான் திருச்சபையும் மாதாவின் அமலோற்பவத் திருநாள் பூசையின் சபை ஜெபத்தில் "சர்வேசுரா, தேவரீர் கன்னிகையின் மாசில்லா உற்பவத்தினால் உம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடத்தை தயாரித்தருளினீரே..." என்று குறிப்பிட்டு மன்றாடுகிறது.
மாதாவின் அமலோற்பவம் நமக்கு கற்பிக்கும் பாடம்!
நமதன்னையின் அமலோற்பவ மகிமையும், அவர்களது வாழ்வும் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனில், பரிசுத்த கன்னி மரியம்மாள் அவர்களது உற்பவத்திலிருந்தே பாவ மாசில்லாமல் இருப்பது எதற்கென்றால் "அவர்கள் நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் தாயாகும் பொருட்டே!" அவர்கள் தேவ குமாரனை தம்மில் தாங்குவதற்காகவே! உலகிற்கு மீட்பரை வழங்கும் பொறுப்பாளராக இருப்பதற்காகவே! சேசுவோடு அவரது தாயாக, இணை மீட்பராக மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க வேண்டும் என்பதற்காகவே!
கிறீஸ்தவர்களாகிய நாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ளும் போது சேசு கிறிஸ்துநாதர் சுவாமியையே பெற்றுக் கொள்கிறோம். அமலோற்பவ மரியாயிடமிருந்து உற்பத்தியான அதே சரீரமாதலால் நாம் அவரை உட்கொள்ள மிகவும் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும். எப்படி சேசுவை மகவாகப் பெற மாதா பாவமின்றி ஏற்படுத்தப்பட்டிருந்தார்களோ, அதுபோல நாமும் நமது ஆத்துமத்தின் கறைகளெல்லாம் நீக்கப்பட்டு பரிசுத்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேவதாயைப் போல நாம் இல்லாவிட்டாலும், நம் ஜெபதபங்களாலும், நமது புண்ணிய வாழ்வாலும், சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தின் உதவியோடு நமது ஆத்துமங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இது நம்மால் முடியுமா? ஆம். முடியும்! நம்மால் பாவமில்லாமல் வாழ முடியும். நமது ஆத்துமங்களில் சிறு பாவத்தின் சளனம் தோன்றினாலும் கூட நாம் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அது எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால். சர்வேசுரன் நம் ஒவ்வொருவருடைய ஆத்துமத்தையும் நோக்கி: "i Tota pulchra est, et macula non est in eaî - முற்றிலும் அழகுள்ளது. இதனிடம் மாசேதுமில்லை" என்று சொல்லப்படும்படியாக நமது ஆத்துமம் தூய்மையாய்த் திகழ வேண்டும்.
தேவதாய் பாவத்தை அழிப்பதற்காகவே சர்வேசுரனால் உருவாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆகையால், அவர்களைத் தவிர வேறு எந்த சிருஷ்டியும் பாவத்திலிருந்து விடுபட்டதில்லை. அவர்களே சாத்தானின் தலையை நசுக்கினார்கள். ஆதலால், அவர்களிடம் பசாசோடு எந்தவிதமான உடன்பாடுமில்லை. பாவத்தோடு, தீமையோடு எவ்விதமான ஒட்டுறவுமில்லை. அவர்கள் முழுவதும் பரிசுத்தமானவர்கள். எனவே அவர்களிடம் ஜெபிப்போம். நாமும் அவர்களைப் போலவே. சாத்தானோடு பாவத்தோடு - தீமைகளோடு எந்தவிதமான உடன்பாடோ, ஒட்டுறவோ இல்லாமல் காக்கும்படியாக கேட்போம். நம்மையும் அவர்களைப் போல அமல - தூயவர்களாக்கும்படியாக நம்மை அவர்களது அமலோற்பவ மேலாடையால் போர்த்திக் காக்கும்படி இறைஞ்சி மன்றாடுவோமாக!
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
source: Salve Regina (Magazine) - Dec. 2007