சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்.
பரலோகப் பிதாவினால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டவரும். நமது மனுஷீகத்தைப் பூண்டு கொண்டவருமான தேவசுதனை நம் கண்முன் ரூபிகரித்து ஆராதிப்போம். இவர் மனுஷாவதாரம் பண்ணினாரே, இப்பரம இரகசியத்துக்கும் அர்ச். சூசையப்பருக்கும் உள்ள சம்மந்தத்தைக் கண்டுபிடிக்க பிரயாசைப் படுவோம். இதற்கு இரண்டு காரியங்களை நாம் கண்டுணர வேண்டும். முதலாவது இப்பரம இரகசியம் நிறைவேறுவதற்கு அவர் செய்த உதவி என்ன? இரண்டாவது: அவ்வுதவியை அவர் எப்படிச் செய்தார்?
மனிதாவதாரம் நிறைவேற அர்ச். சூசையப்பர் செய்த உதவி :
மூன்று விதமாய் உதவினார். முதலாவது மனிதாரத்தின் பரம இரகசியத்தில் சூசையப்பருக்கு ஓர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாத்திரம் இருந்தபடியால் அதில் அவர் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. மாமரி மாத்திரமே அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள். ஏனெனில் தேவதூதனிடம் அவர்கள் தாம் கடவுளின் தாயாவதற்கு சம்மதித்தபடியால், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் மாமரியின் உதரத்தைக் கொண்டு சேசுவின் பரிசுத்த மனுஷீகத்தை உருவாக்கினார்.
இந்த பரம இரகசியம் நிறைவேற ஓர் நிபந்தனை நிறைவேற வேண்டியிருந்தது. அதற்கு அர்ச். சூசையப்பரின் உதவி தேவையா யிருந்தது. அதெப்படியெனில், இரட்சகரின் உற்பவமும் பிறப்பும் கற்புள்ளதாகவும், மரியாயின் கன்னிமை பழுதுபடாததாகவும் காப்பாற்றப் படவும் வேண்டியிருந்தது. இதற்காகத்தான் சூசையப்பர் மரியாயின் கள்ளிமையின் காவலனானார். இந்த தமது பதவியை அவர் மிகுந்த உத்தம விதமாய் நிறைவேற்றினார். விவாகத்துக்கு முன்னரும், பின்பும் மாமரியின் கன்னிமையை நிலைநாட்டபட்ட அந்தஸ்தாக மதித்து அதனைக் காக்கும் காவலனாகத் துலங்கினார்.
பரிசுத்த மரியம்மாளை மணம் புரியும் போது, மனுஷாவதாரத்தின் பரம இரகசியம் நிறைவேறுவதற்கு இசைவான மனமும் குணமும் உடையவராய் இருந்தார். உண்மையாகவே அவருடைய கற்புள்ள விவாகம், இரட்சகர் இவ்வுலகிற்கு வருவதற்கு இறுதி ஆயத்தமாக இருந்தது. அர்ச் சூசையப்பரும் அதற்கு இசைவாகவே நடந்து கொண்டார். அவரது விரதத்துவம் மனுஷாவதாரத்துக்குத் தேவையான நிபந்தனையாக நித்திய காலமாய் சர்வேசுரனால் திட்டம் செய்யப்பட்டிருந்தது. அர்ச். சூசையப்பரின் கன்னிமை விவாகம் மாமரியாயின் கன்னிமைக்கும், அவர்களிடமிருந்து பிறக்கவேண்டிய திவ்விய சேசுவின் பரிசுத்தத்துக்கும் அவசியமான அனுசரனையாகக் குறிக்கப்பட்டிருந்தது. அர்ச்.அகுஸ்தீனார் கூறுவது போல், சூசையப்பர் தமது கன்னிமையினாலேயே சேசுவுக்குத் தந்தையானார்.
இரண்டாவது : இரட்சகரின் மனுஷீகத்தை பராமரிப்பதற்கடுத்த பதவி அர்ச்.சூசையப்பருக்கு தரப்பட்டிருந்தது. இரட்சகரைக் காக்கவும், வளர்க்கவும், போஷிக்கவும் வேண்டிய கடமை அது திவ்ய பாலனுக்கு அளவற்ற ஞானமும், வல்லபமும் திரவியங்களுடைய பிதா பரலோத்தில் இருந்தார். அப்பிதா தமது ஞானத்தையும், தமது திருக்குமாரன் மட்டில் தனக்குள்ள சிநேகத்தையும் காண்பிப்பதற்காக இவ்வுலகில் அவரைப் போஷித்து ஆதரிக்க தமக்குப் பதிலாய் தந்தையாக சூசையப்பரை நியமித்தார். அர்ச் சூசையப்பரும் தமது கைவேலையால் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட மானிட தேவனை பராமரித்து காப்பற்றினார். ஏரோதனிடமிருந்து பாலனின் உயிரைக் காப்பாற்றி பாதுகாத்தார். சேசுமீது அயராத அன்பு நேசம் கொண்டு நாசரேத்தூருக்கு திரும்ப அழைத்துச் சென்று கரிசனையோடும் மிகுந்த பிரயாசையோடும் வளர்த்து காத்தார். இவ்விதமாய் வளர்க்கப் பட்டதால் நமது இரட்சகர் அர்ச். சூசையப்பருக்குக் கடனாளியாகி விட்டார் என்றே கூறலாம்.
மூன்றாவது: சேசுவின் மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தின் மூலமாய் மனுமக்களுக்கு சர்வேசுரன் பொழிந்தருளும் உன்னத வரங்கள் விஷயமாகவும் அர்ச். சூசையப்பர் வகிக்கும் பதவி : என்னவெனில், சேசுவின் ஞான சரீரமாகிய திருச்சபையின் மட்டில் உறுப்பினர்களாகிய நமது பேரில் அர்ச், சூசையப்பருக்கு விசேஷ கவலை உண்டு. சேசுவை மிகுந்த கவனத்தோடும், கவலையோடும் அன்போடும் பாதுகத்து வளர்த்ததில் உள்ளார்ந்த காரணம் உள்ளது. அது, நமது இரட்சண்யம் ஒன்றுதான். நமது இரட்சண்யத்துக்குத் தேவையான வரங்களுக்கெல்லாம் ஊற்றாக இருப்பது சேசுவின் மனிதாவதாரம் தான். இந்த சத்தியம் தேவ தூதருடைய வார்த்தை களில் நன்கு விளங்குகிறது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர், ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்" (மத் 1:21). ஆகையால், இரட்சகர் நிமித்தம் சூசையப்பருக்கு நியமிக்கப்பட்டி ருந்த ஸ்தானாதிபதி பதவி முடியவில்லை. இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் சேசுவின் ஞான சரீரமாகிய (திருச்சபையின் மக்கள்) நமக்கு இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களெல்லாம் அவர்தான் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் பாலத்துவத்தை தியானித்து ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து கொண்டாடும் நாம் அதனோடு இணைந்து நமது இரட்சண்யத்துக்கு உதவிய, இன்றும் உதவிக் கொண்டிருக்கும் நமது நேச தந்தை அர்ச், சூசையப்பரை நன்றியோடு சங்கித்து நம்மை அவரது அடைக்கலத்தில் வைப்போமாக!