Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Lent லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lent லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2024

சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் - The mystery of the Passion of Christ

 சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் 

பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத் திற்குத் தகுதி பெற்று விட்டதையும், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள வல்லமை யற்றிருந்ததையும் கண்டு, அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துகொண்டார் என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கூறுகிறார். இவ்வாறு மனிதன் சுதந்தரித்துக் கொண்ட தண்டனை யின் கடனைத் தம் மரணத்தின் மூலம் அவர் தம் பிதாவுக்குத் திருப்பிச் செலுத்தினார். அவர் பிதாவின் சித்தத்தை நிறை வேற்றவே திருப்பாடுகளுக்குத் தம்மை உட்படுத் தினார் என்றாலும், அதுவே அவரது திருச்சித்த மாகவும், ஏக்கமாகவும் இருந்தது. "நான் பெற வேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு; அது நிறைவேறு மளவும் எவ்வளவோ நெருக் கிடைப்படுகிறேன்" (லூக். 12:50). பிதா ஈனப் பாவிகளாகிய நம்மை மீட்டு இரட்சிக்கும்படி தம் சொந்த மகனை மரணத் திற்குக் கையளித்தார். "தமது சொந்தக் குமாரன் மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக் காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார்" (உரோ. 8:32). இவ்வாறு தேவ பிதாவும், அவருடைய திருச்சுதனும் அற்பப் பாவிகளாகிய நம்மீது வைத்த சிநேகத்தை நிரூபித்தார்கள். 

"சர்வேசுரன் தம் வல்லமையைக் கொண்டு நம்மைப் படைத்தார்; தம்முடைய பலவீனத்தைக் கொண்டு நம்மை மீட்டு இரட்சித்தார்!" என்ற ஆச்சரியத்திற்குரிய வார்த்தைகளை அர்ச். அகுஸ் தினார் கூறுகிறார். ஏனெனில் சர்வ வல்லபராயிருந்தும், தேவ சுபாவத்தில் மட்டும் இருந்தபோது, தேவ சுதன் வேதனைப்பட முடியாதவராயிருந்தார். ஆனால், மனித பலவீனத்திற்குத் தம்மை உட்படுத்திக்கொண்டபோது, அவர் மனிதனின் இரட்சகராகவும் தம்மை ஆக்கிக்கொண்டார். 

ஆனால் இது எப்படி அவருக்கு சாத்தியமாயிற்று? பரலோகப் பூலோகப் பேரரசர் அசுத்தத்தில் நெளியும் புழுவையும் விட அதிக அசுத்தனாகிய மனிதனைக் காப்பாற்றும்படி இந்தச் சாக்கடைக்குள் இறங்க அவரைத் தூண்டியது எது? ஆ. வாக்குக்கெட்டாத தேவசிநேகமே! ஆ மனிதனைத் தெய்வமாக்கும்படி, "புழுவாகத் தன்னையே தாழ்த்திக்கொண்ட" (சங்.21:6) உன்னத தேவ இலட்சணமே! "இதென்ன அதிசயம் ஆண்டவரே? பாவம் செய்தவன் நான்; தேவரீர் எதற்காகத் தண்டிக்கப்பட்டீர்!என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். 

ப்போது எப்பேர்ப்பட்ட பாரச் சுமை பரலோகத் திரு இரத்தத் தினால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மீதும் சுமத்தப் பட்டிருக்கிறது! சர்வேசுரன் சர்வேசுரனாக மட்டுமே இருந்த போதும் கூட, தன்னைப் படைத்து, சுவாசிக்கக் காற்றும், உண்ணக் கனிகளும், நட்புள்ள மிருகங்களும், பறவைகளும், பூலோகம் முழுவதன் மீதும் ஆளும் அதிகாரமும் தந்தருளிய அவரை நேசிக்க மனிதன் கடமைப் பட்டிருந்தான். ஆனால் திருப்பாடுகளின் பரம இரகசியம் நிறைவேறி விட்ட இப்போதோ, அவருக்குப் பதில் சிநேகம் காட்டவும், தன்னை மறுத்து, இரத்தந்தோய்ந்த அவருடைய பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், கடவுளுக்குச் சித்தமானால், அவருடைய அன்பிற்காகத் தன் உயிரையும் பலியாக்கவும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். 

தேவ சுதனே, என் ஆண்டவரே, உமது இந்த அளவற்ற சிநேகம் எப்படிப்பட்டது? உம் சிந்தனையின் ஒரே ஒரு அசைவு மனுக்குலத்தை மீட்கப் போதுமாயிருந்ததே! விருத்தசேதனத்தில் நீர் வடித்த இரத்தத்தின் ஒரே ஒரு துளியும், உமது ஒவ்வொரு மூச்சுக் காற்றும் கூட ஓராயிரம் உலகங்களை இரட்சிக்க வல்லதா யிருந்ததே! அப்படியிருக்க, நீர் மனித சாயலையே இழந்து போக என்ன அவசியம் வந்தது! உம்மைக் கட்டிய கயிறுகளுக்கும், சங்கிலிகளுக்கும், சம்மனசுக்களையும் பரவசப்படுத்திய உம் திருமுகத்தில் வழிந்த அசுத்தர்களின் எச்சிலுக்கும், திருச்சதை கிழிந்து துண்டுதுண்டாகப் பிய்ந்து விழச் செய்த கொடூரக் கசையடிகளுக்கும், தெய்வீகத் திருச்சிரசை ஊடுருவிய முட்களுக் கும், பாரச் சிலுவைக்கும், ஆணிகளுக்கும், மூன்று மணி நேர வாதைக்கும், உம் தாய்ச் செம்மறியின் ஆத்துமத்தை ஊடுருவ நீர் அனுமதித்த வியாகுல வாளுக்கும், உம் பிதாவிடமிருந்து முதன் முறையாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாவியைப் போல் அவரை உம் கடவுளாகவே கண்டு கதறியதற்கும், கல்லறையின் இருளுக்கும் நீர் உம்மை உட்படுத்த வேண்டிய தேவை என்ன

எங்களை மீட்க சகல இன்பங்களும் நிறைந்த பரலோகத்தையும், உம் பிதாவின் மடியையும் விட்டு, பாவத்தால் இறந்திருந்த இந்த அசுத்த உலகிற்கு இறங்கி வந்ததும், மூவுலகிலும் அடங்கா தவராயிருந்தும், முதலில் ஒரு கருவிலும், தம் வாழ்வு முழுவதும் ஓர் ஆறடி சரீரமாகிய சிறையிலும் உம்மை சிறைப்படுத்திக் கொண்டதும், பசி, தாகம், சோர்வு, வலி, வேதனை, ஏக்கம் என்பவை போன்ற சகல மனித பலவீனங்களுக்கும் உம்மை உட்படுத்திக் கொண்டதும் உமக்குப் போத வில்லையே! இவ்வளவு கொடூரத் துன்பங்களையும், அவமானச் சிலுவை மரணத்தையும் நீர் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணம்தான் என்ன

ஓ, ஏனெனில் தேவ-மனிதன் என்ற முறையில், தேவரீர் அளவற்ற விதமாய் எங்களை நேசித்து, உம்முடைய சிநேகத்தின் கடைசித்துளி வரை எங்களுக்குத் திறந்து காட்ட ஏக்கமாயிருந்தீர்! “என் பிதாவானவர் அனுமதித்தால், ஒரே ஒரு மனிதனை மீட்டு இரட்சிக்க முதலாய் மீண்டும் சிலுவையில் அறையப்பட விரும்புகிறேன்!" என்று அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளுக்கு தேவரீர் கூறிய வார்த்தைகள் இதை நிரூபிக்கின்றன! இதற்கு மேல் உம்மால் நேசிக்க முடியாது என்று நாங்கள் சொல்லத் துணியும் அளவுக்குத் தேவரீர் உம்முடைய அளவற்ற சிநேகமாகிய பெருவெள்ளத்தை முழுவது மாக எங்கள் மீது பாயச் செய்திருக்கிறீர்

ஆனால் நான் என்ன செய்திருக்கிறேன்? சகல சிருஷ்டிகளிலும் அதிகக் கேடுகெட்டவனாகிய என்னை மீட்டு இரட்சிக்க உம் தெய்வீக உயிரைப் பலியாக்குமளவுக்கு என்னை நேசித்த உம் திரு ருதயத்தையும், என் அடைக்கலமாகத் தேவரீர் தந்தருளிய உம் திருத்தாயாரின் மாசற்ற இருதயத்தையும் முட்களைக் கொண்டு நிரப்பியதைத் தவிர வேறு என்ன நான் செய்திருக்கிறேன்? தேவரீர் எனக்காகச் சிந்திய திரு இரத்தத்தை வீணாக்கி, பசாசுக்கும், உலகத்திற்கும், கேடுகெட்ட என் சரீரத்திற்கும் அடிமையா யிருந்திருக்கிறேன்! ஓ, என் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் தேவரீர் செய்து முடித்த பிறகும், என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமத்தோடும், என் முழு வல்லமையோடும் உம்மைச் சிநேகியாதிருப்பேனாகில் எனக்கு ஐயோ கேடு! 

ஆயினும், என் தேவனே, இனி உம்மை நேசிப்பேன் என்று வாக்களிக்கிறேன். உத்தம மனஸ்தாபத்தை எனக்குத் தந்தருளும். இனி பாவம் செய்வதில்லை என்னும் என் பிரதிக்கினையை ஆசீர்வதித்தருளும். நான் மோட்சத்தை வந்தடையும் வரை, உம் பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், எதையும்விட அதிகமாய் உம்மை நேசிக்கவும், என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், என்னால் கூடுமான வரை, நன்மாதிரிகையாலும், ஜெப, தவத்தாலும், ஒறுத்தல், பரித்தியாகங்களாலும் அதிகமான ஆத்துமங்களை உம்மிடம் கொண்டு வந்து சேர்க்கவும் எனக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைத் தந்தருளத் தயை புரிவீராக! 


வியாகுல மரியாயே, வாழ்க! 

மாதா பரிகார மலர் - March April 2024

வியாழன், 20 ஜனவரி, 2022

தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம் - அர்ச். அல்போன்ஸ் மரியா லிகோரியார்

தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம்

அர்ச். அல்போன்ஸ் மரியா லிகோரியார் 



“சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” (மத் 17:4). இன்றைய சுவிசேஷத்தில், நமது திவ்ய இரட்சகர், தமது சீஷர்களுக்கு மோட்ச மகிமையின் ஒரு காட்சியை சிறிது நேரம் காண்பிக்க சித்தமானார் என்பதை வாசித்தோம். மோட்சத்தில் அடையப் போகும் உன்னதமான மகிமைக்காக உழைப்பதற் கான ஆவலை தமது சீடர்களின் இருதயங்களில் ஏற்படுத்துவதற்காக, நம் நேச ஆண்டவர் அவர்கள் முன்பாக உருமாறினார். அவர் தமது திவ்ய திருமுகத்தின் பேரொளி மிக்க மகிமையை, தமது சிடர்கள் காண்பதற்கு அனுமதித்தார். அப்போது ஏற்பட்ட பேரானந்தத்தினாலும் மகிழ்ச்சி யினாலும் பரவசமான நிலையில் இருந்த அர்ச்.இராயப்பர், “சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” என்று கூறுகின்றார்.

ஆண்டவரே, இந்த இடத்தை விட்டு இனி ஒருபோதும் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஏனெனில், உமது திவ்ய திருமுகத்தின் பேரழகு வாய்ந்த மாட்சிமையைக் காண்பது ஒன்றே எங்களுக்குப் போதும். அதுவே, இவ்வுலக மகிழ்வுகளையெல்லாம் விட மிக அதிகமாக எங்களுக்கு ஆறுதலை அளிக்கின்றது. மாபெரும் நன்மையாக திகழும் மோட்சத்தை நமக்கு பெற்றுக்கொடுப்பதற்காக நமது திவ்ய இரட்சகர் தமது விலைமதிப்பில்லாத உயிரையே சிலுவை மரத்தில் கையளித்தார். அப்போஸ்தலர் கூறுவது போல, சர்வேசுரனை சிநேகிக்கும் ஆத்துமங்களுக்கு ஆண்டவர் தயாரித்து வைத்திருக்கும் அளவில்லாத தேவவரப்ரசாதங்களைப் பற்றி இவ்வுலகில் எந்த மனிதனாலும் கண்டுணர முடியாது. 

“சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனிதருடைய இருதயத்துக்கு அவைகள் எட்டினதுமில்லை" (1 கொரி 2:9). இவ்வுலக ஜீவியத்தில் நமது உணர்வுகளால் அனுபவிக்கும் இன்பங்களைத் தவிர வேறெந்த இன்பத்தைப்பற்றியும் நாம் அறியாமலிருக்கிறோம். ஆனால், எவ்வளவு மகத்துவம் மிக்கவையும், பேரின்பத்திற்குரிய அழகு வாய்ந்தவையும், மோட்சத்தில் உள்ளன! மோட்சத்தைப் பற்றி விவரிக்கையில் அர்ச். பெர்னார்டு, “பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பற்றி ஓ மனிதனே நீ அறிய விரும்பினால், அந்த பேரின்ப இராஜ்யத்தில், உன் இருதயம் ஏற்றுக்கொள்ளாத எதுவும் அங்கு இல்லை. நீ விரும்பும் அனைத்தும் அங்குள்ளன, என்பதை அறிந்து கொள்” என்று குறிப்பிடுகின்றார். கீழே இவ்வுலகத்திலும் சில காரியங்கள், நமது உணர்வுகளுக்கு ஒத்துப்போகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், அதே நேரத்தில் எத்தனை எத்தனையோ காரியங்கள் அனேக நேரங்களில் நம்மை எவ்வளவு கடுமையாக உபாதிக்கின்றன என்பதையும் நாம் காண்கின்றோம். 

பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறோம். ஆனால் இரவின் இருளை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலங்களில் மகிழ்கின்றோம். ஆனால் குளிர்பனிக்காலம் மற்றும் கோடைக்காலங்களின் கடுமையான சிதோஷ்ண நிலைமை நம்மை வாதிக்கின்றது. மேலும், வியாதியின் உபாதனைகளை நாம் அனுபவிக்க வேண்டும். மனிதர்களின் கொடுமைகளைத் தாங்கவேண்டும். தரித்திரத்தினால் ஏற்படும் வசதிக் குறைவுகளை அனுபவிக்க வேண்டும். நமது அந்தரங்க ஜீவியத்தில் பசாசு தோற்றுவிக்கும் வீண் அச்சங்கள், சோதனைகள், கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும். நமது மனச்சாட்சியில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் நித்திய இரட்சணியத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கும். ஆனால் மோட்சத்தை அடைந்த பாக்கியவான் களுக்கு யாதொரு துன்ப துயரமும் இருக்காது. “சர்வேசுரன், அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணிர் யாவையும் துடைப்பார்: இனி மரணமே இராது. இனி துக்கமும், அழுகைச் சத்தமும், துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக் கேட்டேன். அன்றியும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” (காட்சி 21:4,5). 

பரலோகத்தில், மரணமும் மரண பயமும் இல்லை. பாக்கியமான அந்தஸ்தில் அங்கு இருக்கும் பாக்கியவான் களுக்கு துயரம் இல்லை. வியாதி இல்லை. ஏழ்மை இல்லை. வசதிகுறைவு என்ற நிலை இல்லை. பகல், இரவு இல்லை. குளிர், உஷ்ணம் என்ற சீதோஷ்ணம் இல்லை. அங்கு எப்பொழுதும் பகலாகவும், பூத்துக்குலுங்கும் இனிய வசந்த காலமாகவே இருக்கும்.பரலோக இராஜ்யத்தில் உபாதனைகள் இல்லை. பொறாமை இல்லை. ஏனெனில், அங்கு ஒருவர் ஒருவரை கனிந்த சிநேகத்தினால் நேசிப்பர். ஒவ்வொருவரும் மற்றவருடைய மகிழ்ச்சியைக் கண்டு தங்களுடைய சொந்த மகிழ்ச்சிபோல அக்களிப்பர். அங்கு நித்திய கேட்டைப் பற்றிய யாதொரு பயமும் இருக்காது. ஏனெனில் அங்கு ஆத்துமம் தேவவரப்ரசாதத்தில், நித்திய காலத்திற்குமாக நிலைபெற்றிருக்கும். எனவே அங்கு யாரும் பாவம் செய்ய முடியாது. அதனால் சர்வேசுரனை இழக்கவும் மாட்டார்கள். மோட்சத்தில் நிங்கள் விரும்புவது அனைத்தும் இருக்கும். அங்கு எல்லாம் புதியனவாக இருக்கும். புதிய அழகுகள், புதிய அக்களிப்புகள், புதிய மகிழ்வுகள் அங்கு இருக்கும். அந்த பரிசுத்த நகரத்தைப் பார்ப்பதிலேயே நமது கண்கள் பூரண திருப்தியடையும். விலையுயர் இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் வெள்ளியினாலும் அழகிய மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு நகரத்தைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். ஆனால் மோட்சமானது, இதைவிட எல்லையற்ற விதத்தில் உயர்ந்த அழகைக் கொண்டு திகழ்கிறது. அதுவும் அந்த உன்னத இராஜ்யத்தின் அழகுமிக்க மாட்சிமை, அங்கு அரச ஆடைகளை அணிந்துகொண்டு வசிக்கிறவர்களுடைய அழகினால் இன்னும் அதிக மேன்மைக்கு உயர்வடைகின்றது. இவர்கள் எல்லாரும் அரசர்கள் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுகின்றார். 

மோட்சவாசிகள் அனைவரையும் விட அதிமிக மாட்சியும் மகிமையும் மிக்கவர்களும் பேரெழிலழகு வாய்ந்தவர்களுமான பரலோக பூலோக இராக்கினியான நம் தேவமாதாவைக் காணும் பேறு எத்தகைய பேரானந்தத்தை நமக்களிக்கும் என்பதை சற்று தியானிப்போம். நமது நேச ஆண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியின் மகத்துவமிக்க பேரழகைக் காண்பதைப் பற்றியும் தியானிப்போம். இவை நமக்கு எத்தகைய பாக்கியமான பேரின்பங்கள்! ஒரு தடவை அர்ச்.அவிலா தெரசம்மாள் நமது ஆண்டவரின் திவ்யகரத்தைக் காணும் பேறு பெற்றாள். அப்போது அவள் ஆண்டவரின் திருக்கரத்தின் அதிசயத்துக்குரிய பேரழகின் வசிகரத்தைக் கண்ட திகைப்பினால் ஸ்தம்பித்துப்போனாள். மோட்ச நறுமணம் நுகரும் உணர்விற்கு பூரண திருப்தியளிக்கும். பரலோகத்தில் ஒரேதொனியில் ஒன்றிணைந்து இசைவாக எழுப்பப்படும் உன்னதமான கீதங்கள் நமது செவிகளை முழுவதும் திருப்திபடுத்தும். ஒரு தடவை அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் ஒரு சம்மனசானவர் ஒரு இமைப்பொழுது மட்டுமே வயலின் இசைக் கருவியை வாசிப்பதைக் கேட்டார். அப்பொழுது இறந்துவிடும் அளவிற்கு, அவர், பேரானந்தத்தினால் அக்களிப்படைந்தார். சகல அர்ச்சிஷ்டவர்களும் சம்மனசுகளும் தேவமகிமையைப் போற்றிப் பாடுவதைக் கேட்பது எத்தகைய பேரின்பமாக இருக்கும்! “அவர்கள் சதா நித்திய காலங்களிலும் உம்மைத் துதிப்பார்கள்” (சங்.83:4) தேவமாதா சர்வேசுரனைப் போற்றிப்புகழ்வதைக் கேட்பது எத்தகைய மதுரமான இன்பமாக இருக்கும்! அர்ச்.பிரான்சிஸ் சலேசியார், “காட்டில் குயிலின் கீதம் மற்ற எல்லா பறவைகளின் கீதங்களைவிட எவ்வாறு அதிக இனிமையானதாக இருக்கிறதோ, அதைப் போல பரலோகவாசிகளிலேயே அர்ச்.கன்னிமாமரியின் குரலானது அதிக இனிமையானது” என்று கூறுகின்றார். சுருக்கத்தில், மோட்சத்தில் மனிதனால் விரும்பக் கூடியவை அனைத்தும் பேரின்பங்களாக இருக்கின்றன.† 

புதன், 19 ஜனவரி, 2022

தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்

 தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்



நாம் நம்மிலே ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்பதை கண்டுணர்வதற்கு சோதனை நமக்கு அவசியமாகிறது. அநேக கொடூரமான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பவரும் நமது திரளான பாவங்களை மன்னிப்பவருமான சர்வேசுரனின் எல்லையில்லா இரக்கத்திற்கு நன்றி செலுத்துவோம் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுவார். நாம் பாவத்திற்கு எதிரான பிரதிக்கினைகளை எடுக்கும்போது, நமது சொந்த பலத்தையே பெரிதாக நம்புவதும், நம்மை என்றும் பாதுகாக்கும் சர்வேசுரன் மிது அற்ப நம்பிக்கை கொள்வதும் தான் அடிக்கடி, பசாசின் பாவ வலையில் விழும் நிர்பாக்கியம் நமக்கு நேரிடுவதற்கான உண்மையான காரணம். நாம் வெட்கத்துக்குரிய யாதொன்றும் செய்யாமலிருக்கும்போதும், நமது விருப்பப்படி எல்லாம் நிகழும்போதும், நம்மை எதுவும் விழத்தாட்ட முடியாது என்று நம்பத் துணிகின்றோம். 

நமது ஒன்றுமில்லாமையையும் முழு பலவீனத்தையும் மறந்துபோகிறோம். இறந்துபோவோமே தவிர ஒருபோதும் திமையை ஜெயிக்கவிடமாட்டோம் என்று அக்களிப்புடன் பாவத்திற்கு எதிரான எதிர்ப்புகளை அறிவிப்போம். இதன் அருமையான முன்னுதாரணத்தை, “ஒருபோதும் ஆண்டவரை மறுதலியேன்”என்று கூறிய அர்ச்.இராயப்பரின் ஜீவியத்தில் காண்கிறோம்.மனிதன்தன்னிலேயே எவ்வளவு ஒன்றுமில்லாதவனாக இருக்கிறான் என்பதை இராயப்பருக்கு உணர்த்துவதற்காக, ஆண்டவர்,அரசர்களையோ, இளவரசர்களையோ அல்லது மாபெரும் கருவிகளையோ பயன்படுத்தாமல் ஒரு ஊழியக்காரியின் குரலை மட்டுமே பயன்படுத்துகிறார். அதுவும் அவள் வழக்கத்திற்கு மிகவும் வேறுபட்ட வித்தியாசமான விதத்தில் அவரிடம் பேசுகிறாள். ஒரு மணித்துளிக்கு முன்பாக தாம் ஆண்டவருக்காக சாகத்தயாராக இருப்பதாகக் கூறிய இராயப்பர், “அவரை அறியேன்”; என்றும் “யாரைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். அங்கிருந்த யூதர்கள் தாம் கூறுவதை ஏற்றுக்கொள்வதற்காக, மிக உக்கிரமமாக ஆணையிட்டு ஆண்டவரை மறுதலிக்கவும் செய்கிறார். 

ஓ நேச ஆண்டவரே! உமது தேவ உதவியின்றி நாங்கள் தனிமையில் விடப்பட்டால், எங்கள் மட்டில் எதைச் செய்வதற்கு தான் தகுதியுடையவராய் இருக்கிறோம்! சிலர், பல அர்ச்சிஷ்டவர்கள் செய்த மாபெரும் கடின தபசுகளைப் பற்றி பொறாமையாகப் பேசுவார்கள். அவர்கள் தாங்களும் அவ்வாறு தபசு செய்ய முடியும் என்று நம்புவார்கள். நாம் வேதசாட்சிகளின் சரித்திரத்தைப் படிக்கும்போது, நாமும் அவர்களைப் போல நம் திவ்ய இரட்சகருக்காக துன்புறுவதற்கு தயாராக இருப்பதாக கூறுவோம்.

ஏனெனில் இவ்வுலக நிகழ்வுகள் நொடிப்பொழுதில் மறையக்கூடியவை என்றும், அப்பொழுது நாம் பட்டனுபவிக்கும் வாதைகள் குறுகிய காலத்திற்கே என்றும், ஆனால் அதற்கு நமக்குக் கிடைக்கப்போகும் பரிசோ, நித்திய மோட்சம் என்றும் கூறுவோம். ஆனால், நாம் யார் என்றும் அல்லது நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்றும் நமக்கு படிப்பிக்கவே சர்வேசுரன் திருவுளம் கொள்கிறார். பசாசு, நமக்கு சற்று அருகில் வருவதற்கு ஆண்டவர் அனுமதிக்கிறார். இந்தக் கிறிஸ்துவனைப் பார். சற்று நேரத்திற்கு முன்பாக இவன், வெறும் காட்டில் கிடைக்கும் கிழங்குகளையும் மூலிகைகளையும் உண்டு தமது சரீரத்தை மூர்க்கமாக வதைத்துத் தபசு செய்த தபோதனர்களைப் பற்றி பொறாமை கொண்டான். ஆனால், அந்தோ! ஒரு சிறு தலைவலியோ, ஒரு சிறு ஊசி குத்தினாலோ அவன் சரீரத்தில் எவ்வளவு பெரியவனோ அவ்வளவுக்கு அந்த வலி பெரியதாக அவனுக்குத் தோன்றி தனக்காக, அவனை மிகவும் வருந்தச் செய்கிறது. அதனால் அவன் மனமுடைந்தவனாகிறான்.வலி தாங்கமுடியாமல் அழுகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை, அவன் விலங்கிடப்பட்ட எல்லா வேதசாட்சிளைப்போல அநேக தபசுகளை செய்ய விரும்பியிருப்பான். ஆனால், அற்ப விஷயமும் அவனை நிலைகுலைய வைக்கும். அவனை நம்பிக்கை இழக்கச் செய்யும். இதோ இன்னொருவனைப் பார். இவன் தன் ஜிவியத்தை முழுவதும் சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்க விருப்பமுள்ளவனைப் போல் தோன்றுவான். ஆனால் அற்ப காரியத்தையும் அவனால் தாங்க முடியாது. யாராவது அவனுக்கு எதிராக ஒன்றைப் புறணியாக பேசினாலோ, அல்லது, தன்னை சரியாக வரவேற்காவிட்டாலோ, அல்லது மரியாதை இல்லாமல் நடத்தினாலோ, சிறு அநீத செயல் தனக்கு யாராவது புரிந்தாலோ, தான்செய்த காரியத்திற்கு யாராவது நன்றிகெட்டதனமாக நடந்து கொண்டாலோ, உடனே இவனுடைய இருதயத்திற்குள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் அவர்கள் மேல் தோன்றும். எவ்வளவுக்கு அவன் அவர்களை வெறுப்பானென்றால், அவர்களை இனி ஒருபோதும் பார்க்க மாட்டேனென்ற மனநிலையில் இருப்பான். அல்லது அவன் வெளியரங்கமாகவே அவர்களை இழிவாக நடத்துவான். 

எவ்வளவு நாட்கள் இது பற்றிய சிந்தனையில் அவனுக்கு தூக்கம் வராமலிருந்தது. அந்தோ! என் பிரிய சகோதரர்களே! நாம் ஒன்றுமில்லாத வறிய மனிதர்கள். சோதனையின் மட்டில் நாம் எடுத்த தீர்மானங்களைப் பற்றி மிகவும் குறைவாகவே மதிப்பிட்டு அவற்றின் மட்டில் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். சர்வேசுரனின் தயாளத்தையும் தேவவரப்ரசாத உதவியையுமே, நாம் எப்பொழுதும் நமது மரண நேரம் வரைக்கும் நம்பியிருக்க வேண்டும். †


Lentern time Spiritual sermon of St. John Marie Vianney