ஜனவரி 5ம் தேதி
அர்ச். தூண் சிமியோன்
சிமியோன், சிரியா நாட்டின் துறவி, தூண் தபோதனர் என்று அழைக்கப்பட்டார்; இவர் பெரிய தூண் சிமியோன் என்று அழைக்கப்பட்டார்; ஏனெனில், 6ம் நூற்றாண்டில் மற்றொரு தூண் சிமியோன் துறவியும் ஜீவித்து வந்தார்.
இவர், ஒரு ஆட்டிடையரின் மகனாகப் பிறந்தார்; சிஸ் என்ற நகரில் இவர் 390ம் வருடம் பிறந்தார்; இது உரோமைப் பேரரசின் சிலிசியா என்ற பிராந்தியத்திலுள்ள நகரம்; இப்போது, இந்நகரம் துருக்கியைச் சேர்ந்த கோசான் என்ற நகரமாக இருக்கிறது.
இவர், 13வது வயதில்,நமதாண்டவருடைய மலைப்பிரசங்கங்களை வாசித்தபிறகு, கிறீஸ்துவ வேதத்தின் மேல் ஆர்வம் கொள்ளத் துவக்கினார்; 16 வயதை அடைவதற்குள், இவர் ஒரு துறவற மடத்தில் சேர்ந்தார்.
இவர் தபசை எவ்வளவு கடுமையாக அனுசரித்தாரென்றால், அது மற்ற சக துறவியரால், அதிகப் பட்சமான தபசாக உணரப்பட்டது; மற்ற துறவியருடன் சேர்ந்து துறவற ஜீவியத்தை ஜீவிப்பதற்கு,இவர் ஏற்புடையவர் அல்ல என்று கருதினர். எனவே, மடத்தை விட்டு வெளியேறும்படி இவரிடம் கேட்டுக்கொண்டனர். எனவே,இவர் ஒரு குடிசையில், தன்னையே அடைத்துக் கொண்டு,ஒன்றரை வருட காலம் ஜிவித்தார்; அந்த தபசுகாலம் முழுவதும், இவர் எதையும் உண்ணாமலும் குடியாமலும் தபசு செய்தார். இவர் அக்குடிசையை விட்டு வெளியேறிய போது, அக்காலத்தில் இவர் செய்த அக்கடுமையான தபசே ஒரு புதுமையாகக் கருதப்படுகிறது. இவருடைய அர்ச்சிஷ்டதனத்தைக் கேள்வியுற்று, இவரிடம் ஞான ஆலோசனையைக் கேட்பதற்கும், இவருடைய ஜெப உதவியைக் கேட்பதற்கும் திரளான கூட்டம் வந்தது; நோயாளிகள் அநேகர் புதுமையாகக் குணமடைந்தனர்;இம்மக்கள் கூட்டத்தினர், நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததினால், இவர் தனது தபசு முயற்சிகளுக்கும், ஜெபத்திற்கும் நேரம் பற்றாமல் போனதினால், சிரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள அலெப்போ என்ற இடத்தில் அழிந்துபோயிருந்த இடிபாடுகளுக்கிடையே ஒரு கற்தூண் இருப்பதைக் கண்டார்;அதன் மீது ஒரு சிறு மேடையை அமைத்து, அதிலேயே தன் எஞ்சிய வாழ் நாட்களைக் கழிக்கத் தீர்மானித்தார்.
உலகத்தில் எங்கு சென்றாலும் தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்திடம் தப்பிப்பதற்காகவே, உயரமான ஒரு தூணில் ஜீவிக்கலானார். வனாந்தரத்தில், ஜீவித்த வயதான தபோதனர்கள், இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, இவர் ஞான தியான ஜீவியத்திற்காக, இவ்விதமாக ஒரு தூணில், ஜீவிப்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டனர்; இவருடைய உச்சக் கட்ட தபசும் பரித்தியாகமும் உண்மையிலேயே தாழ்ச்சி என்ற புண்ணியத்தின் அஸ்திவாரத்தில் ஏற்பட்டிருக்கின்றனவா? என்பதைப் பரிசோதிக்கும்படியாக, கீழ்ப்படிதலின் பேரில், உடனே தூணிலிருந்து கீழே இறங்கி வரும்படி கூற வேண்டுமென்று இம்முதிய தபோதனர்கள் தீர்மானித்தனர்; அவர் அவ்வாறு கீழே உடனே வராவிட்டால், அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தனர்; அதன் படியே அவரை நோக்கி, கீழ்ப்படிதலின் பேரில் கீழே இறங்கி வரவேண்டும் என்று உரத்தக்குரலில் கூறினர். இந்த பரிசோதனையின்போது, அர்ச். சிமியோன், முழுமையான கீழ்ப்படிதலையும், தாழ்ச்சியையும் காண்பித்தார்; முதிய துறவிகள், இவரைத் தூணிலேயே விட்டுச் சென்றனர்.
துவக்கத்தில், இந்த தூண் 9 அடிக்கு சிறிது அதிகமாக இருந்தது. ஆனால், இவருக்குப் பிறகு இதில் வசித்த தூண் தபோதனர்கள், இதன் உயரத்தைக் கூட்டிக் கொண்டே சென்றனர்; இறுதியாக, இதன் உயரம் 50 அடியைக் தொட்டது. இதன் மேலிருந்த கைப்பிடிச்சுவருடன் கூடிய மேடை ஒரு சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இவர் தூணின் உச்சியில் சாகும்வரை ஜீவித்தார்; சூரியனுடைய உக்கிரமமான வெயிலுக்கும், குளிருக்கும், மழைக்கும் காற்றுக்கும், எவ்வித பாதுகாப்புமில்லாமல் நேரடியாக தன்னையே முழுவதுமாகக் கையளித்தபடி மாபெரும் தபசு செய்தார்; இரவு பகல் முழுவதும், முழங்காலிலிருந்து ஆண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தை ஸ்துதித்தபடி,அல்லது நின்றுகொண்டு, அல்லது உட்கார்ந்துகொண்டு தியானித்தபடி இருப்பார். கீழே விழாமலிருப்பதற்காக, உச்சியில் நான்குபக்கமும் கம்பி கட்டப்பட்டிருந்தது; கீழே மக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும், சீடர்களிடமிருந்து, உணவை வாங்குவதற்கும், ஒரு ஏணி இருந்தது.அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், தூணில் ஏறி, அர்ச்சிஷ்டவருக்கு, சில ரொட்டிகளையும், ஆட்டுப்பாலையும் கொடுப்பார்கள்.
இறுதியில்,இந்த தூண் திருயாத்திரை ஸ்தலமாக மாறியது. இவரைச் சந்திக்க வந்த மக்கள், ஞான ஆலோசனையையும், வியாதியிலிருந்து சுகத்தையும், கொடுங்கோலர்களிடமிருந்து, எளியோர்கள் விடுவிக்கப்படும்படியான பரிந்துரையையும், ஜெபத்திலும், வேத சத்தியத்திலும், ஒளியையும் பெறும்படியாகவே இவரிடம் வந்தனர். அர்ச். சிமியோன், அநேக மனிதர்களை மனந்திருப்பினார். கிழக்கத்திய உரோமைப் பகுதியின் சக்கரவர்த்தியான முதலாவது லியோவை, கிறீஸ்துநாதருடைய சுபாவத்தைப் பற்றிய 5ம் நூற்றாண்டின் சர்ச்சையைத் தீர்ப்பதில், சால்சடொனியன் குழுவினருக்கு ஆதரவாக இருக்கும்படிச் செய்தார். இவர், கி.பி.459ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்.
அர்ச். தூண் சிமியோனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!