Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 12 பிப்ரவரி, 2022

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

 பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பருடைய மகிமைகள்


சங்.பினே சுவாமி


“சேசுநாதர்சுவாமியின் தந்தை” என்ற உன்னதமான பட்டமே, அர்ச். சூசையப்பருடைய பரிசுத்ததனத்தினுடையவும், தேவவரப்பிரசாதங் களினுடையவும் முதல்அளவுகோலாக திகழ்கின்றது. மனிதவதாரம் எடுத்த தேவ வார்த்தையானவருடைய தேவ ஆளுக்கு, ஊழியம் செய்யும் அலுவலைப் பெற்ற மனிதர், மாபெரும் பாக்கியம் பெற்றவர். அவர், அவ்வுன்னதமான அலுவலைத் தகுதியுடன் பெற்று, மாபெரும் கீர்த்தியுடன் விளங்குவார் என்று, புகழ்பெற்ற வேதஇயல் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். தேவமாதாவுக்கு அடுத்தபடியாக, அர்ச். சூசையப்பரைத் தவிர வேறு எந்த மனிதனும் இவ்வளவு நெருக்கமாக, நமது ஆண்டவரின் அருகில், அவருக்கு ஊழியம் செய்யும்படியாக, அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அர்ச். சூசையப்பர், நித்திய பிதாவினுடைய தேவ வரப்பிரசாதங்களில் அடையப்பெற்ற பெரும்பான்மையான பங்கை, வேறு எவரும், அடைந்து கொள்ளமுடியவில்லை. நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்துடன், தேவ மனித ஐக்கியத்தின் மூலம், ஒன்றிணைந்த ஆண்டவருடைய பரிசுத்தமனிதத்துவம், அளவில்லாத தேவ வரப்பிரசாதங்களைக் கொண்ட ஒரு முழு உலகத்தையேப் பெற்றுக்கொண்டது.

ஆண்டவரைத் தமது திருக்கன்னிவுதரத்தில் ஒன்பது மாதமளவாக சுமந்தவர்களும், அவரை ஆயிரம் தடவையாவது, தமது கரங்களில் ஏந்தினவர்களுமான, அவருடைய மிகவும் பரிசுத்த தாயாரான, தேவமாதா, நம் நேச ஆண்டவருக்கு மிக நெருங்கிய விதத்தில் ஊழியம் செய்யத் தகுதி பெற்றிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு, ஆண்டவருடைய ஆராதனைக்குரிய ஆளுமைக்குப் பாதுகாவலரும், வளர்ப்புத் தந்தையுமான அர்ச். சூசையப்பர், நம் திவ்ய இரட்சகருக்கு நெருங்கிய விதமாக ஊழியம் செய்யும்படி, அவரிடம் வருகின்றார். மாமிசமான தேவ வார்த்தையானவருக்கு,இவ்வளவு நெருங்கிய முறையில்,ஊழியம் செய்வதற்கு,வேறு எந்த அர்ச்சிஷ்டவரும் அழைக்கப்படவில்லை.இந்த அலுவலின் உன்னதமான மாண்பிற்கு ஏற்றாற்போல், அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, வேறு யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலர்களுடைய அலுவலே, திருச்சபையில் அதிமிக உயர்வானது என்று அர்ச். அன்செல்ம் குறிப்பிடுகின்றார். ஆனால், அர்ச். சுவாரெஸூடன் சேர்ந்து, “அர்ச். சூசையப்பருடைய அலுவல், அதை விட அதிக மாட்சிமையும் உத்தமமுமானது. தேவமாதாவினுடையவும் அர்ச். சூசையப்பருடையவும் அலுவல், சர்வேசுரனுடைய திருச்சபையின் சகல அர்ச்சிஷ்டவர்களுடைய அந்தஸ்தையும் விட பல மடங்கு உயரியநிலைமையைப் பெற்றது” என்று நாமும் கூறலாம்.

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச்.  சூசையப்பருடைய தேவவரப்பிரசாதங்களின் மேன்மை


சங்.பினே சுவாமியார்


கற்றறிந்தவனிடத்தில் வாசிக்கும்படி புத்தகத்தைக் கொடுத்தால், அவன் அதை வாசிக்க முடியாது என்று சொல்லும் காலம் வரும் என்று, இசையாஸ் திர்க்கதரிசி கூறுகின்றார். “புத்தகத்தை எழுத்து வாசனைஅறிந்தவனிடத்தில் கொடுத்து, இதை வாசியென்றால், அஃது முத்திரையிடப்பட்டிருப்பதால், என்னால்முடியாது என்பான்” (இசை.29:11). உன்னதமான தேவ இரகசியங்களடங்கிய இந்த முத்திரையிடப்பட்ட புத்தகத்தின் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அது, அர்ச். சூசையப்பரின் மகிமையான தோற்றத்தை நம்கண்முன் வைக்கின்றது! பிதாவாகிய சர்வேசுரன், புத்தகத்தில் எழுதுவதுபோல், அர்ச். சூசையப்பருடைய மாசற்ற இருதயத்தில், ஆண்டவருடைய திருமனிதவதாரத்தினுடையவும், மனுவுருவான தேவவார்த்தையானவருடைய மறைந்த ஜிவியத்தினுடையவும், தேவஇரகசியங்களை, முழுவதுமாக எழுதி வைத்தார்.

சர்வேசுரனால், இவ்வாறு அர்ச். சூசையப்பரின் இருதயத்தில் ஞானபுத்தகமாக எழுதப்பட்ட தேவ இரகசியங்களுடைய பிரபந்த காண்டங்கள் எல்லாம் எவ்வளவுக்கு நன்றாக முத்திரையிடப்பட்டிருந்தன என்றால், அனேக நூற்றாண்டுகள் வரைக்கும், அந்த ஞானபுத்தகம் கொண்டிருந்த தேவ வரப்பிரசாதங்களுடையவும் உன்னதமான அதிசயங்களுடையவும் மாபெரும் பரந்த உலகத்தைப் பற்றி, அதிமிக ஞானமுடைய திருச்சபையின் வேதசாஸ்திரிகளால் கூட, ஒன்றும் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. நமதாண்டவளின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பருடைய இருதயத்தில் இருந்த ஞானபுத்தகத்தின் சில தேவசலுகைகளைப் பற்றி, முதன் முதலாக வாசித்த அர்ச்சிஷ்டவர்களில் ஒருவர் தான், சேசுவின் அர்ச்.தெரசம்மாள்.

இதனால், இம்மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரிடம் கொண்டிருக்க வேண்டிய உத்தமமான பக்தியை சகல விசுவாசிகளிடமும் பரப்புவதற்கான ஊக்கமுள்ள ஆவல், அர்ச். அவிலா தெரசம்மாளுடைய இருதயத்தில் ஏற்பட்டது. பக்தி சுவாலகருடைய தேவசிநேகத்தைக் கொண்டிருந்த அர்ச்சிஷ்டவரும் கார்மல் சபையை சீர்திருத்தியவருமான அர்ச்.அவிலா தெரசம்மாளுடைய திவிரமான முயற்சியாலும், உழைப்பாலும், அர்ச். சூசையப்பர் மிதான பக்தி, திருச்சபையில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதுவரைக்கும், விசேஷ தேவ சலுகை பெற்றிருந்த சில அர்ச்சிஷ்டவர்கள் மட்டுமே அர்ச். சூசையப்பரை மகிமை செய்து வந்தனர்.

அர்ச். சூசையப்பர் தாமே, அவருடைய புண்ணியங்களடங்கிய அந்த ஞானபுத்தகத்தை முத்திரையிட்டிருந்தார். அவர் எவ்வளவுக்கு அடக்க ஒடுக்கமும் தாழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தாரென்றால், அவருடைய ஆத்துமத்தில் இருந்த ஞானபொக்கிஷங்களையும், அவருடைய செயல்களின் நேர்த்தியானதும் ஆச்சரியமிக்கதுமான உத்தமமான பூரணத்துவத்தையும், மனிதருடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டார்.சாதாரண மனிதராக ஜிவிக்கும் தோற்றத்தையே சகலருக்கும் காண்பித்தார். அவர் வெகு குறைவாகவே பேசினார். நான்கு சுவிசேஷங்களிலும், வேதாகமம் முழுவதிலும், அவர், ஒரு வார்த்தையாவது, தம்முடைய திவ்ய குமாரனிடமோ, அல்லது தேவமாதாவிடமோ, அல்லது அர்ச்.கபிரியேல் சம்மனசு விடமோ அல்லது உலகிலுள்ள வேறு எந்த மனிதனிடமோ, கூறுவதாக நாம் காணவில்லை. சர்வேசுரனுடைய மகா உன்னதமான தெய்வீக பிரசன்னத்தின் மகத்துவமிக்க மகிமைகளை மனிதருடைய பார்வையிலிருந்து மறைக்கும்படியாக திரைச்சிலையால் மூடப்பட்டிருக்கும் ஜெருசலேம் தேவாலயத்தின் பரிசுத்தத்தின் பரிசுத்த இடமான(“Holy  of  Holies”) தேவ சந்நிதானத்தைப் போல், மனிதர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பரலோக மகிமைகளையுடைய பிதாப்பிதாவாக அர்ச். சூசையப்பர் திகழ்கின்றார். இந்தப் புத்தகத்தில், தெய்விகமான பரலோகக் காரியங்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கின்றன. அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தின் 5ம் அதிகாரத்தில் குறிப்பிடுவதைப் போன்றதொரு புத்தகம் அர்ச். சூசையப்பருக்கு அளிக்கப்பட்டது. அவரால் அதைப் படிக்கக் கூடாமலிருந்ததால், அவர் அழுதார். அதனால், செம்மறியானவரும் சம்மனசுகளும் அவர் மேல் இரக்கம் கொண்டனர். உடனே செம்மறியானவர், அந்த பரம இரகசிய புத்தகத்தைத் திறந்து படித்தார். அதிலிருந்த தேவ இரகசியங்கள் அனைத்தையும் அர்ச். சூசையப்பருக்கு வெளிப்படுத்தினார். தம்முடைய இருதயத்தில் மறைவாகப் புதைந்து கிடக்கும் தேவ இரகசியங்கள் அனைத்தையும், நம்மேல் கொண்ட இரக்கத்தினிமித்தம், அர்ச். சூசையப்பரே நமக்கு வெளிப்படுத்தும்படியாக, நாம் எப்பொழுது அவர் மேல் போதிய அளவு பக்திபற்றுதல் கொள்ளப் போகிறோம், என்பதை சற்று சிந்திப்போம்!

வியாழன், 10 பிப்ரவரி, 2022

"இடைவிடா சகாய மாதா” அற்புதப்படத்தின் சரித்திரம்

 "இடைவிடா சகாய மாதா” 
அற்புதப்படத்தின் சரித்திரம்

By. Rev.Fr.W.Raemers, C.SS.R

(Courtesy "Catholic” April 2001)




"என்னுடைய அனுக்கிரகம் இப்படத்தில் எப்பொழுதும் தங்கியிருக்கும்" என்று மிகவும் பரிசுத்த தேவமாதா அர்ச்.லூக்காஸிடம் கூறினார்கள்.

Click Here to Download as PDF  

  1. Booklet
  2. A5 Book
  3. With Page number

பரிசுத்த மரியாயே! பரிதவிப்போருக்கு சகாயமாக வாரும்! பலவீனமான இருதயமுடையோருக்கு உதவியருளும் ! அழுபவரைத் தேற்றி மகிழப் பண்ணியருளும். மக்களுக்காக வேண்டிக்கொள்ளும். குருக்களுக்காக பரிந்து பேசியருளும்: Magnificat Antiphon B.V.M

மனித மனமானது, உன்னதமானதும் அழகானதுமான சிந்தனைகளை உருவாக்கக் கூடியதிறமை வாய்ந்தது. கவிதை, இசை, ஓவியம் போன்றவற்றின் மூலம் இவ்வுயரிய சிந்தனைகளை வெளிப்படுத்துவது கலைத்துறையாகும். நமதாண்டவர் மோட்சத்திற்கு எழுந்தருளிப்போன பிறகு, இப்பூமியில் அந்நாள்வரை ஆண்டவரைக் கண்டும் அறிந்தும், நேசித்தும் பக்திபற்றுதலுடன் அவரைப் பின்தொடர்ந்தும் வந்த அவருடைய சீடர்கள், ஆண்டவரைப் பற்றிய அனைத்தையும், தங்களுடைய இருதயங்களில் தெளிவாக வைத்திருக்க ஆசித்தனர். நம் நேச ஆண்டவருடைய போதகத்தை மட்டுமல்லாமல், அவருடைய சயிக்கினைகள், ஆண்டவருடைய குரலொலியின் தொனி , உணர்வுகளை வெளிப்படுத்திய ஆண்டவருடைய திருக்கண்களின் தோற்றம், ஆண்டவருடைய ஆளுமையின் தோற்றம், அனைத்தையும் மீண்டும் நேசமுடன் ஞாபகப்படுத்திக்கொண்டனர். சேசுநாதர் சுவாமியுடைய தோற்றத்தைப் பற்றி சீடர்கள் கொண்டிருந்த ஞாபகமே, பலவிதமாக ஆண்டவரைப் பற்றிய வாய்வழி வர்ணனை வார்த்தைப் படங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. எனவே தான், ஆதித்திருச்சபைக் காலத்தில் ஆண்டவருடைய திருவுருவத்திற்கேற்ப அமையப்பெற்ற பல ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சுரங்கக்கல்லறைகளிலும், ஆதித்திருச்சபைக்காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்களின் சுவர்களிலும் ஆண்டவருடைய உருவம் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆண்டவர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனபிறகு , தேவமாதா இவ்வுலகில் 12 வருடங்கள் ஜீவித்தார்கள். அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தேவமாதாவுடன் தங்கியிருந்தனர். அர்ச். அருளப்பருடைய சீடர்களான அர்ச். மாற்குவும் அர்ச். லூக்காஸும் அவர்களுடன் தங்கியிருந்தனர். அர்ச். அருளப்பருடன் அர்ச்.லூக்காஸும் தேவமாதாவைப் பற்றிய விசேஷ குணாதிசயங்களைப் பற்றி அறிந்து மகிழும் பாக்கியம் பெற்றவர். கிழக்கத்திய பாரம்பரியத்தின்படி, ஓவியரும் சுவிசேஷகருமான அர்ச். லூக்காஸ், தேவமாதாவையும் குழந்தை சேசுவையும் ஓவியமாக வரைந்தார். இதைக் கண்ட தேவமாதா மிகவும் சந்தோஷப்பட்டார்கள். எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைந்தார்கள் என்றால், இந்தப் படம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அவர்களுடைய ஆசீர்வாதமும் செல்லும்படியாக ஆசித்து, அதற்கான விசேஷ ஆசீர்வாதத்தையும் அப்படத்திற்கு அளித்தார்கள். தியோ பிலுஸ் என்ற தம் நண்பருக்கு அர்ச்.லுக்காஸ் இந்த ஓவியத்தை அனுப்பிவைத்தார். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் தியோடிசியுஸ் என்பவனுடைய மனைவியான யுடோசியாவின் கைவசத்தில் இப்படம் இருந்தது. அவள் இப்படத்தை, கி.பி.453ம் வருடம் வரை வாழ்ந்து வந்த தியோடிசியுஸின் சகோதிரியான அர்ச். புல்கேரியாவிற்கு அன்பளிப்பாக அளித்தாள். பரிசுத்த கன்னிகையான இந்த அர்ச்சிஷ்டவள் கான்ஸ்டான்டினோபிள் நகரில், தேவமாதாவுக்குத் தோத்திரமாக மூன்று தேவாலயங்களைக் கட்டுவித்தாள். அதில் ஒரு தேவாலயத்தில் அர்ச். லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படத்தை ஆடம்பரமாக பொதுமக்களுடைய வணக்கத்திற்காக ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்தாள். "வழிகாட்டிகளின் வாசஸ்தலம்" என்ற அர்த்தம் கொடுக்கும் "Hodegium'' என்ற கிரேக்க பெயருடன் திகழ்ந்த தேவாலயத்தில், இந்தப்படம் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே தான், அர்ச். லுக்காஸ் வரைந்த பிரசித்திபெற்ற தேவமாதாவின் படம் , ஹோடே கெத்ரியா (Hodegetria) என்று நாளடைவில் அழைக்கப்பட்டது. அந்நகரமெங்கும் மக்கள் மாபெரும் சங்கை மேரையுடன் தேவமாதாவின் படத்தை வணங்கி வந்தனர். இவ்வற்புத படத்தினால் அநேக புதுமைகள் நிகழ்ந்தன. அநேக பிரச்னைகள், பஞ்சம், கொள்ளை நோய்களின்றும், எதிரிகளின் படைத்தாக்குதல்களிலிருந்தும் அந்நகர மக்களை தேவமாதாவின் இந்த அற்புதப்படம் புதுமையாக பாதுகாத்துவந்தது. தேவமாதாவின் மேல் அத்தியந்த பக்திபற்றுதல் கொண்டிருந்த அந்நகர மக்களை தேவமாதாவும் விசேஷ பாதுகாவலினால் காத்து வந்தார்கள். 1000 ஆண்டுகள் தேவமாதாவின் படத்தை அந்நகர மக்கள் பக்தி பற்றுதலுடன் வணங்கி கொண்டாடி வந்தனர். 

1453ம் வருடம் கான்ஸ்டான்டிநோபிள் நகரை துருக்கியர் கைப்பற்றினர். மகம்மதியரான இக்காட்டுமிராண்டிகள், பரிசுத்தமான இவ்வற்புதப்படத்தை அழித்தனர். இவ்வாறு கீழைத்திருச்சபை, அது வரைக்கும் பாதுகாத்துவந்த அதிமிகு விலை மதியாத பொக்கிஷத்தை இழந்தது. ஆனால், தேவபராமரிப்பினால், ஹோடே கெத்ரியா படத்திலிருந்து எடுக்கப்பட்ட பல நகல்கள், இந்நாள்வரை காப்பாற்றப்பட்டுள்ளன. அதில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு படம், ஸ்மோலென்ஸ்க் என்ற ரஷ்ய நகரில் உள்ளது. இது, அர்ச்.லூக்காஸ் வரைந்த படத்தின் நகலாகும். இப்படத்தில், தேவமாதாவின் வலது தோளின் மேல், ஹோடே கெத்ரியா என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். கிழக்கத்திய நாடுகளில் உள்ள பல தேவாலயங்களில், தேவமாதாவின் இந்த அற்புதப்படத்தைக் காண்கிறோம். அர்ச்.லூக்காஸ் வரைந்த மூலப்படத்திலிருந்து, அவை வெகு சொற்ப வித்தியாசத்தினால் மட்டுமே வேறுபட்டிருப்பதையும் பார்க்கின்றோம். இந்தப் படத்தில் சில சிறு மாற்றங்களைச் சேர்த்து, கைதேர்ந்த பக்தியுள்ள ஓவியர்கள், வியாகுல மாதாவின் படங்களை வரைந்தனர். 

அப்படங்களில் ஒன்று தான்  இடைவிடா சகாய மாதாவின் படம். ரோமாபுரியிலும் அகில உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இவ்வற்புதப் படத்தை விசுவாசிகள் வணங்கி, மகிமை செலுத்தி வருகின்றனர். கிழக்கு நாடுகளில், சுரூபவணக்க விரோதிகள், சுரூபங்களை உடைத்து, கிறிஸ்துவ மக்களை கொடுமைப்படுத்தி வந்த காலத்தில், தலைசிறந்த ஓவியரும் வேதசாட்சியுமான அர்ச். லாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தேவமாதாவின் மேல் ஆழ்ந்த பக்தி பூண்டவர். அர்ச். லூக்காஸின் தேவமாதா படத்தைப் பார்த்து, நமதாண்டவளின் படத்தைப் பக்திபற்றுதலுடன் வரைந்தார். அதற்குக் கைம்மாறாக, கொடூர அரசாங்கத்தினால், அவருடைய இரு கைகளும் சுடப்பட்டன. ஆனால், தேவமாதா , அற்புதமாக தம்முடைய தாசனாகிய லாசருடைய கரங்களைக் குணப்படுத்தினார்கள். அர்ச்.லூக்காசின் படத்தில் இல்லாத இரண்டு சம்மனசுகளை இவர் தமது படத்தில் சேர்த்து சித்தரித்திருந்தார். பாப்பரசர் இப்படத்தைக் கேட்டதன் பேரில், அர்ச். லாசர், தான் வரைந்த தேவமாதாவின் அற்புதப்படத்தை எடுத்துக்கொண்டு, உரோமாபுரிக்கு பயணம் செய்யும் போது, வழயில் கிரீட் தீவில் இறந்துவிட்டார். 

அதன்பிறகு, தேவமாதாவின் இவ்வற்புதப்படம் கிரீட் தீவில் வசித்து வந்த கிறிஸ்துவர்களால் 3 நூற்றாண்டு காலமாக மிகுந்த பக்தியுடன் ஸ்துதிக்கப்பட்டு வந்தது. துருக்கியர்கள், 1669ம் வருடம், மத்திய தரைக்கடலிலுள்ள கிரீட் தீவைக் கைப்பற்றியபோது, அங்கிருந்த அர்ச். தீத்துவின் தேவாலயத்தில் இருந்த தேவமாதாவின் அற்புதப்படத்தை வெனிஸ் நகரவாசிகள் பாதுகாப்பாக தங்களுடன் எடுத்துச் சென்றனர். அடுத்த வருடம் , வெனிஸ் நாட்டின் குடியரசின் ஆணையின்படி, அந்நகரிலுள்ள டெல்லா சாலுதே என்ற தேவாலயத்தில் அற்புதப்படத்தை ஸ்தாபித்தனர். 1922ம் ஆண்டில், அதாவது, கிரீட்டிலிருந்து தேவமாதாவின் படம், வெனிஸ் நகரத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ஏறக்குறைய 3நூற்றாண்டுகள் நிறைவுபெற்றதன் ஞாபகார்த்தமாக, தேவமாதாவுக்குத் மகிமை செலுத்தும்படியாக, அவர்களுடைய இந்த அற்புதப்படத்திற்கு ஆடம்பரமாக திருச்சபை உயர் அதிகாரிகள் முடிசூட்டினர். 

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இப்படத்தின் நகல் ஒன்று ஜெர்மனியிலுள்ள ட்ரையர் என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹோடே கெத்ரியா மூலப்படத்தை மிகவும் ஒத்திருக்கும் தேவமாதாவின் அற்புதப்படத்தின் நகல், வத்திக்கானிலும் போலந்திலும் உள்ளது. அதனால், இவ்வற்புதப் படத்தின் பல பிரதிகள் இன்றுவரை உலகெங்கும் இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.

திருச்சபையின் வேதவல்லுநர்களின் கணிப்பின்படி, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இடைவிடா சகாய மாதாவின் படத்தைப் பற்றிய மற்றொரு சரித்திரத்தின்படி, மத்தியதரைக்கடலிலுள்ள கிரீட் தீவில் பல நூற்றாண்டுகள் தேவமாதாவின் இவ்வற்புதப்படத்தை மக்கள் வெகுவிமரிசையாக வணங்கி வந்தனர். அச்சமயத்தில், ஒரு வியாபாரி இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படத்தைத் திருடிக்கொண்டு, உரோமாபுரிக்கு எடுத்துச் சென்றான். ஆனால், உரோமையை அடைந்ததும் கடும் வியாதியானான். அவன் சாகும் தருவாயிலிருந்தபோது, தான் கட்டிக்கொண்ட தேவதுரோகத்திற்குப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அற்புதப்படத்தை, திருச்சபையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, தன்னைப் பாதுகாத்திருந்த சிநேகிதனிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவனிடத்திலேயே கொடுத்து விட்டான். இச்சமயத்தில் தான், சாகக்கிடந்தவனின் வேண்டுகோள் நிறைவேறும்படி, தேவமாதா பல தடவை, ஓர் சிறுமிக்கு உரோமை நகரில் காட்சி கொடுத்தார்கள். தம்முடைய அற்புத ஓவியத்தை தேவமாதாவின் (னிழிrதீ னிழிளூலிr) பேராலயத்திற்கும், அர்ச். லாத்தரன் அருளப்பர் தேவாலயத்திற்கும் இடையே ஸ்தாபிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். 

அதன்படியே, 1499ம் வருடம், மார்ச் 27ம் தேதியன்று, இவ்விரு தேவாலயங்களுக்கும் இடையே , எஸ்கிலேனில் உள்ள அர்ச். மத்தேயு தேவாலயத்தின் நடுப்பீடத்தில், அதிசயத்துக்குரிய இப்படம் வெகு ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச் அகுஸ்தீனார் சபைக் குருக்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. மூன்று நூற்றாண்டுகளாக (கி.பி. 1499 -1798) இவ்வற்புதப்படம் "இடைவிடா சகாய மாதா" என்ற பெயரில், உரோமையில் உள்ள அர்ச். மத்தேயு தேவாலயத்தில் வணங்கப்பட்டு வந்தது. ஏனெனில், தேவமாதா , அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தம்முடைய படம் மக்களுடைய வணக்கத்துக்கும் ஸ்துதிக்கும் உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோது, "நாமே இடைவிடா சகாய மாதா" என்று தெரிவித்தார்கள். அன்றிலிருந்து "இடைவிடா சகாய மாதா' என்ற பெயரும் உலகெங்கிலும் பிரசித்தமானது . 

1798ம் ஆண்டு, அர்ச். மத்தேயுவின் தேவாலயம் பிரெஞ்சுக்காரரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அப்பொழுது, அர்ச். அகுஸ்தீன் சபைக்குருக்கள் இடைவிடா சகாய மாதாவின் படத்தை மற்றொரு துறவற மடத்திற்கு பாதுகாப்பாக மாற்றினார்கள். பின்னர், போஸ்தெருலா என்னும் நகரில் உள்ள தேவமாதாவின் ஜெபக்கூடத்தில் அற்புதப்படத்தை ஸ்தாபித்தனர். அங்கு, இடைவிடா சகாய மாதாவின் படம் 1866ம் வருடம் வரைக்கும் மறைந்திருந்தது. 1866ம் ஆண்டில், தேவபராமரிப்பின் உதவியினால், அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படம், சகல மனிதர்களின் ஸ்துதிக்கும் வணக்கத்திற்குமாக, தேவமாதா தாமே குறிப்பிட்ட இடத்தில், ஒன்பதாம் பத்திநாதர் பாப்பரசரின் கட்டளையின்படி வெகு ஆடம்பரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச். அல்போன்சின் குமாரர்களினால், அதாவது, இரட்சகர் சபை குருக்களால், 12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இடைவிடா சகாய மாதாவின் படம், 2" அங்குல நீளமும் 16 அங்குல அகலமும் கொண்ட ஒரு மரப்பலகையில் வரையப்பட்ட படம். அதில் தேவமாதா செந்நிற ஆடையணிந்து, தமது இடது கரத்தில் குழந்தை சேசுவை ஏந்தினவர்களாய் தங்க மயமான வானத்தில் தோன்றுகிறார்கள். ஓர் நட்சத்திரத்தினால் பிரகாசிக்கப்பட்ட கருநீல முக்காட்டுச் சீலையொன்று அவர்களுடைய சிரசை மூடியிருக்கின்றது. இந்த சீலையின் வசீகரமானதும் விறைப்பானதுமான மடிப்புகள் தங்கத்தினாலானவையாக பொன்னிறத்தில் திகழ்கின்றன. மாதா அணிந்திருக்கிற ஆடை செந்நிறத்தில் உள்ளது. மாதா அணிந்திருக்கின்ற கருநீல முக்காட்டுச் சீலைக்குக் கீழே அவர்களுடைய முடியையும் நெற்றியையும் மறைத்துச் சுற்றும் கச்சை வெளிறிய பச்சை நிறத்தில் உள்ளது. மாதாவின் கழுத்திலும் கரங்களின் மணிக்கட்டுகளிலும் எளிய ஆபரணங்கள் காணப்படுகின்றன. திவ்ய குழந்தை சேசு பச்சை நிற ஆடை அணிந்திருக்கின்றார். அவருடைய இடைக்கச்சை செந்நிறத்தில் உள்ளது. அவருடைய மேலங்கி பழுப்பு நிறத்தில் இருக்கிறது. ஆண்டவருடைய பாடுகளுக்கான கருவிகளை தங்களுடைய கரங்களில் ஏந்தியபடி, சம்மனசுகள் தோன்றுகின்றனர். மனுக்குல இரட்சணியத்திற்கான கருவிகளுடன் தோன்றும் சம்மனசுகள், ஒரே மூலப்படத்திலிருந்து தான், இப்படங்கள் எல்லாம் நகல்களாக , உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றன. தேவநற்கருணை ஆசீர்வாதத்தின் போது, குருவானவர் கதிர்பாத்திரத்தை உயர்த்திக் காண்பிக்கும்போது, அவருடைய கரங்கள் துணியால் மூடப்பட்டிருப்பதுபோல, இவ்விரு சம்மனசுகளும் ஆண்டவருடைய திவ்யபாடுகளின் கருவிகளைத் தங்களுடைய கரங்களில் ஏந்தியிருக்கும்போது, அவர்களுடைய கரங்களும் திரைச் சீலையால் மூடப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, திருச்சபையின் துவக்கக் காலங்களிலிருந்தே, பரிசுத்த பொருட்கள் கையாளப்படும் போது, அவற்றிற்குரிய சங்கை மரியாதையை இவ்வாறு காண்பிப்பது வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிகின்றோம். மத்திய நுற்றாண்டுகளின் முடிவில், விசுவாசிகள் ஆண்டவருடைய பாடுகளின் மேலும், தேவமாதாவின் வியாகுலங்களின் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். சிலுவைப்போர்கள் (கி.பி. 1095-1291) இக்காலத்தில் தான் நடைபெற்றன. அர்ச். பிரான்சிஸ் அசிசியாருடைய சபைத் துறவிகளும் இக்காலத்தில் தான் ஆண்டவருடைய பாடுகள் மற்றும் தேவமாதாவின் வியாகுலங்கள் மீது உத்தமமான பக்திமுயற்சியை திருச்சபையெங்கும் பரப்பி வந்தனர். இதன் அடிப்படையிலேயே, இந்த அற்புத படத்தை வரைந்த ஓவியரும், தேவமாதாவின் வியாகுலத்தை விவரிக்கும் இக்காட்சியே "என் துயரம் எந்நேரமும் என் முன்பாக நிற்கின்றது" என்ற தாவீதரசரின் தீர்க்கதரிசனத்தின் நிறைவாக இருக்கின்றது என்பதை தம்முடைய படத்தின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும், வியாகுலமாதாவின் மேல் உத்தமமான பக்தியை மக்களுடைய இருதயங்களில் துண்டி பரப்பும் விதமாகவும், இவ்வுன்னத அலுவலில் அவர் ஆவலுடன் ஈடுபட்டிருந்தார். துக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட திவ்யபாலனான குழந்தை சேசு, அவருடைய பரிசுத்த தாயாருடைய கரங்களில் ஏந்தப்பட்டிருப்பதுபோல சித்தரித்து, இந்த ஓவியர் வியாகுலமாதாமேலுள்ள பக்தியை, இப்படத்தைக் காணும் மனிதருடைய இருதயங்களில் தூண்டும்படி செய்திருக்கின்றார். திவ்ய சேசுபாலன், தம் முன்பாக இருக்கும் அர்ச். மிக்கேல் சம்மனசானவரைக் காண்கின்றார். மிக்கேல் சம்மனசானவர், ஓர் ஈட்டியையும், நுனியில் கடற்காளான் கட்டியிருக்கிற ஒரு நாணலையும் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். அக்காட்சியினால் திவ்ய குழந்தை பயப்பட்டவராக , அடுத்தப் பக்கம் விரைவாக திரும்புகின்றார். அவ்வாறு திரும்பும்போது, திடீரென்று ஏற்பட்ட அசைவினால், அவருடைய மிதியடிகளில் ஒன்றின் வார் கழன்று அவருடைய வலது பாதத்தில் தொங்குவது போல் காணப்படுகின்றது. ஆனால், இந்தப்பக்கத்தில், அவர் மற்றொரு காட்சியைக் காண்கின்றார். அர்ச். கபிரியேல் சம்மனசானவர், சிலுவையுடனும் ஆணிகளுடனும் தோன்றுகின்றார். திவ்ய குழந்தை சேசு எப்பக்கம் திரும்பினாலும், அவருடைய துயரம் எந்நேரமும் அவர் கண் முன்பாக இருக்கின்றது. எல்லா குழந்தைகளைப் போலவே, திவ்ய குழந்தை சேசுவும், பயப்படும்போது, அவருடைய தாயாரிடம் திரும்புகின்றார். மாதாவின் வலது கரத்தை தம்முடைய இருசிறு கரங்களினால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கின்றார். அவருக்கு ஆதரவாக மாதா தம்முடைய இடது கரத்தினால் அவரை தாங்கி, அவருக்குப் பாதுகாப்பை நிச்சயிக்கும்படியாக, தமது பக்கமாக திவ்ய குழந்தையை அரவணைத்துக் கொள்கின்றார்கள்...

திவ்ய குழந்தை சேசுவை அவருடைய பரிசுத்த தாயார் தம்முடைய கரங்களில் ஏந்தியபடியும், இருபுறமும் ஆண்டவருடைய திருப்பாடுகளின் கருவிகளை ஏந்தியபடி தோன்றும் இரு சம்மனசுகளுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கும் இத்தகைய படங்கள், சம்மனசுகளின் கன்னிகை அல்லது பாடுகளின் திவ்ய கன்னிகை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பைசன்டின் முறைப்படி, படங்கள் வரையப்படும்போது, அவற்றில் உள்ள உருவங்களுக்குரிய பெயர்களையும் சுருக்கமாக அருகில் எழுதுவது வழக்கமாக இருந்தது. இடைவிடா சகாய மாதாவின் படத்தில் "சர்வேசுரனுடைய" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையின் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து, "OV'' என்றும், "மாதா" என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையின் முதல் மற்றும் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து "M'' என்றும் தேவமாதாவைக் குறிக்கும் வகையில் தேவமாதாவின் படத்தில் மேற்புறத்தில் இருபக்கத்திலும் குறிக்கப்பட்டிருக்கின்றன. திவ்ய குழந்தை சேசுவின் அருகில், சேசு கிறிஸ்து என்று பொருள்படும் இரு கிரேக்க வார்த்தைகளின் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்த்து ICXC என்று எழுதப்பட்டிருக்கின்றது. அதேபோல், "0 AP M", "O AP ('' என்ற எழுத்துக்கள், முறையே, அர்ச். மிக்கேல் அதிதூதரையும் அர்ச். கபிரியேல் அதி தூதரையும் குறிக்கும் விதமாக இருசம்மனசுகளின் அருகில் எழுதப்பட்டிருக்கின்றன .

சகாயமாதாவின் படம் வரையப்பட்டதற்கான உட்கருத்து, உன்னதமானது. அது சர்வேசுரனுடைய எதிர்கால நிகழ்வுகளைப்பற்றிய அறிவையும், அவருடைய பரிசுத்த தாயாருடைய வல்லமையையும் வெளிப்படுத்துவதாக விளங்குகின்றது. இவ்வுன்னத படத்திற்கான அர்த்தம் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது. 

1. சேசுகிறிஸ்துநாதர் சுவாமி, இவ்வுலக ஜீவியம் துவங்கிய முதல் மணித்துளி நேரம் முதற்கொண்டு, இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார். அப்பாவங்களுக்காக அவர் அனுபவிக்க வேண்டிய பாடுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். இதைப்பற்றி, "என் துயரம் எந்நேரமும் என் முன்பாக நிற்கின்றது" என்று தீர்க்கதரிசனமாக, தாவீதரசர் கூறுகின்றார். "அவர் மனிதரில் அருவருக்கப்பட்டவராகவும், கடைத்தரமானவராகவும், துன்புற்ற மனிதனாகவும், பலவீனம் உடையவராகவும் காணப்பட்டார்" (இசை 53:3) என்று இசையாஸ் தீர்க்கதரிசி ஆகமத்தில் நாம் வாசிக்கின்றோம். தம்முடைய பாடுகளின் கருவிகளைக் கண்டதும், திகிலடைந்த திவ்ய குழந்தை சேசுவின் அச்சமுற்ற பாவனையை வரைந்ததன் மூலம், ஆண்டவர், குழந்தைப் பருவத்திலேயே தம்முடைய பாடுகளைப்பற்றிக் கொண்டிருந்த அறிவைப்பற்றி மிகத் தெளிவாக இப்படம் வெளிப்படுத்துகின்றது. 

2. இப்படமானது, அர்ச். கன்னிமரியம்மாள், தம்முடைய திவ்யகுமாரனுடைய பாடுகளில், தாய் என்ற முறையில் பங்கேற்றபடியால், வியாகுலங்களின் மாதாவாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. அர்ச். பெர்னார்டு, மற்றும் அர்ச் அல்போன்ஸ் போன்ற வேதபாரகர்கள் கூறுவதுபோல, தேவமாதா , தாம் பெற்றிருந்த வேதாகம அறிவினால், தம்முடைய திருக்குமாரனுக்கு நேரிடப்போகும் சகல காரியங்களைப் பற்றியும் முன்னதாகவே அறிந்திருந்தார்கள். அதில் குறிப்பாக, "உம்முடைய ஆத்துமத்தையும் ஓர் வாள் ஊடுருவும் ' இதினாலே, அநேகருடைய இருதயசிந்தனைகள் வெளிப்படும்படியாகும்" (லூக். 2:35) என்ற சிமியோன் தீர்க்கதரிசியின் வார்த்தைகளின் அர்த்தத்தை , நிச்சயமாக, முழுமையாக அறிந்திருந்தார்கள். 

3. சிலுவை, ஆணிகள், ஈட்டி, கடற்காளானுடைய நாணல் என்ற தம்முடைய பாடுகளின் கருவிகளைப் பார்த்தபோது, திவ்ய குழந்தை சேசு அடைந்த பயத்திற்கு மற்றொரு ஆழ்ந்த அர்த்தம் ஒன்று உண்டு. அதாவது, மனுக்குலத்தின் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, தம்முடைய உயிரையேக் கையளித்தாலும், திவ்ய இரட்சணியப்பலனைப் பெறாமல், மனிதர்கள் தங்களுடைய பாவங்களிலே தொடர்ந்து நிலைத்திருப்பர் என்பதைப் பற்றிய அறிவினால் தான், திவ்ய குழந்தை சேசு அதிகமாக பயப்படுகின்றார். இதைப் பற்றி, " அவர்கள் சர்வேசுரனுடைய குமாரனை மறுபடியும் தங்களாலான மட்டும் சிலுவையில் அறைந்து அவமான கோலமாக்குகிறார்கள்" (எபி 6:6) என்று அர்ச். சின்னப்பர் குறிப்பிடுகின்றார். தம்முடைய திவ்யகுமாரன், அவருடைய பாடுகளைப்பற்றிப் பெற்றிருந்த இந்த முன்னறிவில், தேவமாதாவும் பங்கேற்றிருப்பதையும் இந்தப் படம் அருமையாக காண்பிக்கின்றது. தம்மை நோக்கித் தாவிவரும் தம்முடைய திவ்ய குழந்தையை நோக்கிப் பார்ப்பதற்கு பதிலாக, தேவமாதாவின் கண்கள், நம்மை நோக்கிப் பார்க்கின்றன. அதன் காரணம் என்னவெனில் : வியாகுலம் நிறைந்தவர்களாகக் காணப்படும் தேவமாதா, துயரம் முழுவதும் நிரம்பியுள்ள தம்முடைய கண்களால், "பாவிகளே! என்னுடைய திவ்ய குழந்தையும் உங்களுடைய இரட்சகருமானவரை விட்டு விடுங்கள். மறுபடியும் சிலுவையில் அறைவதற்காக அவரைத் தேடாமலிருங்கள்" என்று நம்மிடம் கூறுவதுபோல் நம்மை உற்று நோக்குகின்றார்கள். 

4. பரிசுத்தமான காரியங்கள் அனைத்திற்கும், நாம் சங்கைமேரை செய்ய வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கும்படியாக, தங்களுடைய கரங்களைத் துணியால் மூடியபடி, அதிதூதரான சம்மனசுகள், ஆண்டவருடைய திவ்யபாடுகளின் கருவிகளை ஏந்திக் காண்பிப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. படத்தில், உருவங்களுக்குப் பின்னால் எங்கும் தங்கமயமாக வியாபித்திருப்பதுபோல் வரையப்பட்டிருக்கின்றது. இது, சுத்த தங்கத்தினாலான பரலோக ஜெருசலேமை அடையாளமாக சுட்டிக் காண்பிக்கின்றது. அர்ச். அருளப்பர், காட்சியாகமத்தில், பூமியில் சேசுவையும் மாதாவையும் காண்பதற்காக சம்மனசுகள் இறங்கி வந்தபோது, அது சுத்த தங்கத்தினாலான பரலோக ஜெருசலேமாக இருந்தது என்று விவரித்தார். இப்படத்தின் பின்னணி அந்த பரலோக ஜெருசலேமைக் காண்பிப்பதுபோல் வரையப்பட்டிருக்கின்றது.... இங்கு, பொன், என்பது நம்முடைய திவ்ய இரட்சகர் தமது விலையுயர்ந்த திவ்யதிரு இரத்தத்தினால் நமக்குப் பெற்றுத் தந்த மோட்சத்தைக் குறிக்கின்றது. 

மேலும், " பரலோகத்தின் வாசலான" தேவமாதாவின் வழியாகத் தான், நாம் மோட்சத்திற்குள் நுழைய முடியும் என்ற உண்மையையும் இப்படம் நமக்குக் கற்பிக்கின்றது. இரட்சகர் சபையின் முன்னாள் பொது அதிபரான சங். பேட்ரிக் முர்ரே சுவாமியார், சகாயமாதா படத்தில் காணப்படும் ஆண்டவருடைய பாடுகளின் கருவிகளான, கடற்காளான், ஈட்டி மற்றும் சிலுவை , துறவிகளுக்கு அவர்கள் கொடுத்த வார்த்தைப்பாட்டை அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றன என்று கூறுவார். "நான் தாகமாயிருக்கிறேன்" என்று சிலுவையில் தொங்கியபடி கூறியபோது, நம்முடைய திவ்ய இரட்சகருக்கு , கடற்காளானை நாணலின் நுனியில் கட்டியபடி, கொடுத்தார்கள். இது, துறவிகள் கொடுத்த தரித்திர வார்த்தைப் பாட்டின்படி, அவர்கள் அனுசரிக்கும் தரித்திரத்துடன் வறுமையும் சேர்ந்திருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றது. நம் நேச ஆண்டவருடைய மகா பரிசுத்த திரு இருதயத்தை ஊடுருவிய ஈட்டியானது, நிறைகற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உத்தமமாக அனுசரிப்பதற்காக, உணர்வுகளை ஒறுத்தல் மற்றும் பரித்தியாகங்களினால் ஒடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. சிலுவையானது, தமது மரணம் மட்டும், அதுவும், சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்திருந்த, தங்களுடைய தேவ அதிபரான, நேச ஆண்டவரைக் கண்டுபாவித்து, துறவிகள் தங்களையே தாழ்த்த வேண்டும் என்று அவர்களுக்குக் கற்பிக்கின்றது நம் அனைவருக்குமே சிலுவையானது, தாழ்ச்சி என்ற புண்ணியத்தைக் படிப்பிக்கின்றது. 

5. தேவமாதாவின் பாதுகாப்பையும், வல்லமையையும் வெளிப்படுத்தும்படியாக பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கும்படியாக உயர்வான இடத்தில் தேவமாதாவின் வலதுகரம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இதுவே படத்தின் வசீகரமான அம்சமாக இருக்கிறது. தேவமாதாவின் வலது கரத்தை, தேவகுழந்தையான திவ்யபாலன், தம்முடைய இரண்டு சிறுகரங்களினாலும் பற்றிக் கொண்டிருக்கின்றார். கிரேக்க விசுவாசிகள், இதில், சர்வேசுரனுடைய திருச்சித்தத்துடன், மாதாவின் சித்தம் உத்தமமாக ஒன்றிணைந்திருப்பதைக் கண்டனர். நமதாண்டவர் தேவவரப்பிரசாதங்களையெல்லாம், தம்முடைய பரிசுத்த தாயாரின் திருக்கரங்களின் வழியாகத் தான் நமக்கு அருளுகின்றார் என்று அர்ச்சிஷ்டவர்கள் நமக்கு போதிக்கின்றனர். தேவமாதா ஆண்டவரிடம் எதைக் கேட்டாலும், அதை அவர், அவர்களுக்கு அருளுகின்றார். ஏனெனில், மாதா, சர்வேசுரன் ஆசிப்பதையும், அவருடைய விலைமதியாத திவ்ய இரத்தத்தினால், வாங்கப்பட்ட ஆத்துமங்களின் இரட்சணியத்தையுமே கேட்பார்கள் என்று ஆண்டவர் அறிவார். தேவமாதாவின் வல்லமையைப் பற்றி, அர்ச். பெர்னார்டு, "மகா பரிசுத்த தேவமாதாவே! நீர் ஆசிக்கின்றீர். உடனே சகலமும் நிறைவேறுகின்றது'' என்று எழுதுகின்றார். அப்படியென்றால், நாம் எவ்வளவு உறுதியான நம்பிக்கையுடன், நாம் இடைவிடா சகாய மாதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்று சிந்தியுங்கள் ! தேவமாதாவைப்பற்றிய சகலமும், நமக்கு அவர்கள் மேல் நாம் கொள்ள வேண்டிய திடமான நம்பிக்கையைப் பற்றிதான் நமக்கு அறிவுறுத்துகின்றது. "பொக்கிஷங்களுக்கெல்லாம் பொக்கிஷமான" கடவுள் - மனிதனையே, மாதா தம்முடைய கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தம்முடைய திவ்ய குமாரனுடைய மகா பரிசுத்த திரு இருதயத்தின் பரம இரகசியங்களையும் தேவமாதா அறிந்திருக்கின்றார்கள். மாதாவின் திருக்கண்களும் மன்றாட்டுகளினால் நிரம்பியிருக்கின்றன. "நிரந்தர சகாயத்தின் பரிசுத்த மாமரி" என்று மாதாவே நமக்கு வெளிப்படுத்திய அவர்களுடைய பரிசுத்த நாமமே, தேவமாதா நம்மை இடைவிடாமல் பாதுகாப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிய வெளிப்படுத்துதல்கள் எல்லாவற்றிலும் அதிக நிச்சயமானதொன்றாக திகழ்கின்றது. அது தேவமாதா நமக்கு வெளிப்படுத்திய அவர்களுடைய பெயர் மட்டுமல்ல. நாம் தேவமாதாவை, நோக்கி அபயமிட்டு அழைக்கும் போது, உடனே நமக்கு உதவிடுவார்கள் என்பதற்கான வாக்குறுதியாகவும் விளங்குகின்றது. இக்காரியத்திலும், மற்றெல்லா விஷயங்களிலும், திவ்ய குழந்தை சேசு நமக்கு முன்மாதிரிகையாக விளங்குவாராக ! பயத்தினாலும், கஷ்டத்தினாலும் சஞ்சலப்படும்போது, உடனே தாமதியாமல் அவர் தம்முடைய பரிசுத்த தாயாரை நோக்கித் திரும்புகின்றார். மாதாவின் கரத்தை அவர் உறுதியாகப் பற்றிக்கொள்கின்றார். அதேபோல், சோதனை வரும் முதல் க்ஷணத்திலேயே, நாமும் தேவமாதாவை நோக்கித் திரும்ப வேண்டும். சிலுவை பாரம் நம்மை அதிக கனமாக அழுத்தும்போதும், நாம் தேவமாதாவை உறுதியுடன் பற்றிக்கொண்டால், யாதொரு சந்தேகமுமின்றி, தேவமாதாவின் பாதுகாப்பையும், வல்லமையையும் நாம் அனுபவிக்கலாம். 

6. தேவமாதாவின் திரைச் சீலை முக்காட்டில், ஓர் நட்சத்திரம் இருக்கின்றது' மரி என்னும் அவர்களுடைய பரிசுத்த நாமத்திற்கு, "விடியற்காலை நட்சத்திரம்" என்று அர்த்தம். திருச்சபை, தேவமாதாவை "சமுத்திரத்தின் நட்சத்திரம்" என்றும் அழைக்கின்றது. இதைப் பற்றிப் பிரசங்கிக்கும் போது, வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வீனாஸ், "கப்பல் மாலுமிகள் நட்சத்திரத்தினால், துறைமுகத்திற்கு வழிநடத்தப்படுவதுபோல, கிறிஸ்துவர்களும், தேவமாதாவின் உதவியினால் வழிநடத்தப்பட்டு, பாதுகாப்பாக மோட்சகரையை அடைந்துகொள்கின்றனர்" என்று விவரிக்கின்றார். தேவமாதாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பின் மேல் ஸ்திரமான நம்பிக்கையை, பாவிகளுடைய இருதயங்களில் ஏற்படுத்தும் விதமாக, மற்றொரு வேதசாஸ்திரியான அர்ச். பொனவெந்துர், அவர்கள் முன்பாக புயலினால் கொந்தளிக்கும் ஓர் சமுத்திரத்தின் காட்சியின் படத்தைக் காண்பித்தார். தேவவரப்பிரசாதம் என்னும் கப்பலிலிருந்து அந்த சமுத்திரத்தில் விழுந்துவிட்டிருந்த பாவிகளிடம், தம்முடைய பரிசுத்த தாயாரைக் காண்பித்து, நமதாண்டவர், "இதோ சமுத்திரத்தின் நட்சத்திரம்' என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார். பிறகு, அர்ச்சிஷ்டவர், சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் பாவிகளை நோக்கி, "ஓ காணமல் போன நிர்பாக்கிய ஏழைப் பாவியே! தேவவரப்பிரசாதத்தைத் தொலைத்தவனே ! அதைரியப்படாதே! உன்னுடைய கண்களை உயர்த்து. அதோ அந்த அழகிய நட்சத்திரத்தைப் பார். அது உன்னை, உன்னுடைய இரட்சணியத்தின் துறைமுகத்திற்கு வழிநடத்திச் செல்லும் " என்று கூறுவார். 

7. " மகனே ! இதோ உன் தாய்!'' என்று நம் நேச ஆண்டவர் நம்மிடம் கூறுகின்றார். ஆம். நாம், நம்முடைய தாயாராக ஏற்றுக்கொண்டு, தேவமாதாவை நோக்கினால், மாதா நம்முடைய பாதுகாப்பான அடைக்கல தஞ்சஸ்தலமாக இருப்பார்கள். நம்முடைய சகல துன்பங்களிலும், நமக்கு சகாயமாக வரும்படியாக உதவிக்கு அழைத்தபடி, நாம் மாதாவையே நாடிச் செல்லவேண்டும் என்று நம்மை மிகவும் கெஞ்சுவதுபோல் தேவமாதவின் கண்கள் நம்மை நோக்கிப் பார்ப்பதாகக் காணப்படுவதையும் இப்படத்தில் காண்கின்றோம். ஏனெனில், நாம் தேவமாதாவை நோக்கி அடிக்கடி, "ஆதலால், எங்களுக்காக வேண்டி மன்றாகின்ற தாயே , உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் மேல் திருப்பியருளும் " என்று கிருபைதயாபத்து மந்திரத்தில் வேண்டிக்கொண்ட ஜெபத்திற்கு, தேவமாதாவின் திருக்கண்கள், இவ்வாறு நமக்கு பதில் அளிக்கின்றன. தேவமாதாவை, பெரிய திறந்த கண்களுடனும், சிறிய அழகிய வாயுடனும் சித்தரிக்கும் பைசான்டின் முறைப்படி அமையப்பெற்ற வரைபடங்கள், தேவமாதாவின் உன்னதமான குணநலனை நமக்குப் பறைசாற்றுகின்றன : அதாவது, தேவமாதா பார்த்தார்கள். பார்த்தவற்றையெல்லாம் தம்முடைய இருதயத்தில் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அதே சமயம் மிகச் சிறிதளவே பேசினார்கள். ஆனால் எப்பொழுதும் ஞானத்துடன் மட்டுமே பேசினார்கள் என்ற கருத்தை இப்படங்கள் வெளிப்படுத்துவதாக வேதவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இடைவிடா சகாய மாதாவின் படம், நடைமுறையில், நீதிமான்களுக்கும் பாவிகளுக்கும் பொதுவாக கற்பிக்கும் ஒரே பாடம் ஏதெனில் : உதவி தேவைப்படும் அவசர நேரத்தில், தேவமாதா எப்பொழுதும் நமக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதேயாம்..




அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 44

 

அர்ச். ஹையசிந்து, போலந்து நாட்டின் வடபகுதியில் உள்ள சிலேசியா என்ற பகுதியில் உயர்ந்த ஓட்ரோவாட்ஸ் குடும்பத்தில் 1185ம் வருடம் பிறந்தார். அவருடைய மாமாவான வந்.ஐவோ மேற்றிராணியாரால் தமது சகோதரரான முத். செஸ்லாஸ் சுவாமியாருடன், உத்தம குருவாக உருவாகப் பெற்றார். அர்ச். சாமிநாதரை மேற்கூறிய நிகழ்வின்போது சந்தித்து, அவருடைய சபையில் அவரால் பயிற்றுவிக்கப்பட்டபிறகு, ஹையசிந்து, வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேதபோதக அலுவலில் ஈடுபடலானார். அவருடைய ஜீவியம் முழுவதும் தொடர்ந்து நிறைவேறிய அனேக புதுமைகளைக் கொண்டிருந்தது. டென்மார்க், ப்ரஷ்யா , முதல் கிரீஸ் வரையிலுள்ள நாடுகளுக்கு சென்று வேதத்தைப் போதித்தார். ரஷ்யா, டார்டரி முதல், சீனா, திபெத் வரைக்கும் கால்நடையாகவே சென்று சத்திய வேதத்தைப் பிரசங்கித்து வந்தார். இந்நாடுகளின் காட்டுமிராண்டித்தனமுள்ள மக்களிடமிருந்தும், அங்கு நிலவிய உயிரை மாய்க்கும் கொடிய சீதோஷ்ண நிலைக்கும் தப்பி, அங்கு உன்னத வேத உண்மைகளைப் போதித்துவிட்டு அவர் உயிருடன் திரும்பியதே மாபெரும் புதுமையாகும். அவர் வேதபோதக அலுவலில் ஈடுபட்ட ஆரம்பகாலத்தில், தேவமாதா அவருக்குத் தோன்றி, அவர் கேட்கும் எதையும் மறுக்காமல் அளிப்பதாக வாக்களித்தார்கள். அதே போல், அவருடைய ஆன்ம இரட்சணிய அலுவலானது மிகுந்த பலனுள்ளதாக திகழ்ந்தது. திரளான ஆத்துமங்களை நேச ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார். அநேக நோயாளிகளை குணப்படுத்தினார். இரு பிறவிக் குருடர்களுக்குக் கண்பார்வை அளித்தார். பல சமயங்களில், இவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார். ஒரு சமயம் கியோனியா நகரத்தில் இருந்தபோது, தார்தாரியப் படைவீரர்களால் பங்கம் வராதபடிக்கு, தம்முடைய கோயிலில் ஸ்தாபித்திருந்த தேவநற்கருணையையும் ஆளுயர தேவமாதா சுரூபத்தையும் மலரைப்போல எளிதாய் சுமந்து சென்றதே மிகப்பெரிய புதுமை. இதுவே அர்ச். ஹையசிந்து தேவநற்கருணையிடமும், தேவமாதாவிடமும் கொண்டிருந்த ஆழ்ந்த நெருக்கமான பக்தியின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தேவமாதா , தமது மோட்சாரோபனத்தின் திருநாளின்போது, அர்ச். ஹையசிந்து மரிப்பார் என்பதை அவருக்கு முன்னறிவித்தார்கள். அவர் வேதம் போதித்த நாடுகளிலெல்லாம், அர்ச்.ஹையசிந்து மேல் பக்தி இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கிறது. அர்ச். சாமிநாதர் சபையின் ஆரம்பகாலத்திலிருந்தே, அர்ச். ஹையசிந்து, அச்சபையின் மகிமையாக விளங்குகிறார்.

ஒருசமயம், ஸ்பெயின் நாட்டில் குவாடல் .பேரா என்ற இடத்தில், அர்ச். சாமிநாதர் சபைத் துறவிகள் சிலர், அர்ச்சிஷ்டவரை விட்டுச் செல்லும்படியாக, பசாசு அவர்களை சோதித்தது. இதை, ஒரு பறவைநாகம் அந்த துறவிகளை விழுங்குவதுபோல, ஒரு பரலோகக் காட்சியினால், அர்ச். சாமிநாதர் முன்னறிந்திருந்தார். உடனே இக்காட்சியின் விளக்கத்தை தமது சீடர்களுக்கு விளக்கி, சகதுறவிகளை தமது வலையில் இழுக்கப்பார்க்கும், பசாசின் சூழ்ச்சி தந்திரத்தைப் பற்றி எச்சரித்து, அவர்களை தைரியத்துடன் பசாசை எதிர்த்து ஜெபதவபரித்தியாக ஜீவியத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார். பசாசுடன் ஒத்துழையாதபோது, அதனால் யாரையும் தன் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்றும் உபதேசித்தார். இருப்பினும், சகோ.ஆதாம் மற்றும் இரு துறவற சகோதரர்களைத் தவிர மற்ற அநேக துறவிகள், பசாசின் சோதனைக்கு உட்பட்டவர்களாக அர்ச். சாமிநாதரை விட்டு விட்டுச்சென்றனர். இதைக்கண்டு மனந்தளராமல், அவர்கள் மேல் மிகுந்த இரக்கமுடையவராக , உடனே, துன்பநேரத்தில் தன் வழக்கப்படி, அர்ச். சாமிநாதர், தேவாலயத்தில் திவ்யாசற்பிரசாதநாதர் முன்பாக, பரலோக உதவி கேட்டு, நீண்ட ஜெபத்தில் ஈடுபட்டார். அவருடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் செவிசாய்த்தார். விரைவிலேயே, தேவவரப்ரசாத உதவியினால், பசாசின் தந்திரத்தில் விழுந்து அவரை விட்டுச் சென்ற அனைவரும் மீண்டும் சாமிநாதரிடம் திரும்ப வந்து சேர்ந்தனர். ஒருமுறை, துலோஸ் நகரிலிருந்து பாரீஸுக்கு செல்லும் வழியில், அர்ச். சாமிநாதர், ரோகாமடோரிலுள்ள தேவமாதாவின் தேவாலயத்தில் தங்கி இரவு முழுதும் ஜெபத்தில் ஈடுபட்டார். அவருடன் பக்திமிக்க சகதுறவி, சகோ. பெட்ரன்டு சென்றிருந்தார். இவரே பிற்காலத்தில் புராவன் நகரத்தின் மடத்திற்கு முதல் அதிபராக பொறுப்பேற்றவர். அடுத்தநாள் காலையில், அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜெர்மனியிலிருந்து வந்த தவயாத்ரீகர் குழு ஒன்றை வழியில், சந்தித்தனர். அவர்கள் மிகுந்த பக்தி பற்றுதலுடன் சங்கீதங்களையும், பிரார்த்தனைகளையும் பாடிச் சென்றனர். ஒரு கிராமத்தை அடைந்ததும், ஜெர்மானியர்கள், அர்ச்.சாமிநாதரையும் சகோ. பெட்ரன்டையும் தங்களுடன் உணவு அருந்தும்படி அழைத்தனர். இவ்வாறாக அக்குழுவினருடன் தொடர்ந்து 4 நாட்கள் அர்ச். சாமிநாதர் தமது சக துறவியுடன் பாரீஸ் நகரை நோக்கி பயணம் செய்தனர். ஒருநாள் சாமிநாதர், "சகோ. பெட்ரன்டு, அவர்கள் அளித்த உணவை நாம் உண்டோம். ஆனால், அதற்குக் கைம்மாறாக அவர்களுக்கு ஒரு ஞான உணவையும் நாம் கொடுக்கவில்லை. உமக்கும் சம்மதம் என்றால், நாம் முழங்காலில் இருந்து, ஆண்டவரிடம் நமக்கு அவர்களுடைய ஜெர்மானிய மொழி புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அப்பொழுது நாம் நமது நேச ஆண்டவரைப் பற்றி அவர்களிடம் போதிக்கலாம்" என்று கூறி அதன்படியே அவர்கள் இருவரும் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள். உடனே, ஜெர்மானிய தயவயாத்ரீகர்களே ஆச்சரியப்படும்படியாக, சரளமாக இருவரும் ஜெர்மானிய மொழியில் உரையாடினர். தவயாத்ரீகர்களிடையே, ஆண்டவரைப்பற்றிய ஞானதியானப்பிரசங்கங்களை நிகழ்த்திக்கொண்டே அடுத்த நான்கு நாட்கள், ஆர்லியன்ஸ் நகரை அடையும் வரை தொடர்ந்து பயணம் செய்தனர். பிறகு, ஜெர்மானிய தவயாத்ரீகர்கள் அங்கிருந்து சார்ட்ரஸிலுள்ள தேவமாதாவின் திருயாத்திரைஸ்தலத்திற்கு செல்ல விரும்புவதாகக் கூறி அர்ச்.சாமிநாதரிடம் விடைபெற்றுச்சென்றனர். தங்களுக்காக ஜெபிக்கும்படி அர்ச்சிஷ்டவரிடம் விண்ணப்பித்துச் சென்றனர். சாமிநாதர் தமது சீடருடன் பாரீஸுக்குத் தொடர்ந்து பயணித்தார். அடுத்தநாள், சாமிநாதர், சகோ. பெட்ரன்டுவிடம், "சகோதரரே! நாம் இதோ , பாரீஸுக்குள் நுழையப்போகிறோம். இப்புதுமையைப் பற்றி நமது சகோதரர்கள் கேள்விப்பட்டால், பாவிகளாகிய நம்மை அர்ச்சிஷ்டவர்கள் என்று எண்ணுவார்கள். மற்ற மக்கள் இதை அறிய நேரிட்டால், நாமும் வீண்மகிமைக்கு உட்பட நேரிடும். எனவே, இதை நான் மரிக்கும் வரைக்கும் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று உமக்குக் கட்டளையிடுகிறேன்'' என்று கூறினார். அதன்படியே சகோ. பெட்ரன்டுவும், பரிசுத்த தந்தை சாமிநாதர் இறந்த பிறகே, இப்புதுமை சம்பவத்தைப் பற்றி மற்ற துறவிகளுக்கு வெளிப்படுத்தினார்


அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 43

 


அர்ச். சாமிநாதர் நெப்போலியனை உயிர்ப்பித்த புதுமைபற்றிய செய்தி உரோமை நகரம் முழுவதும் விரைவாகப் பரவியது. உரோமை மற்றும் அண்டை நகரங்களிலிருந்தும் திரளான மக்கள் ஆயிரக்கணக்காக, சாமிநாதரை சந்திப்பதற்காக அர்ச். சிக்ஸ்துஸ் தேவாலயத்துக்கு வரலாயினர். அம்மடத்துக் கன்னியர்களும், ஒரு அர்ச்சிஷ்டவருடைய தலைமையின் கீழ், புதிய துறவற சபையில், தாங்கள் ஜீவிக்கப்போவதை எண்ணி , மிகவும் பூரிப்படைந்தனர். அதற்காக சர்வேசுரனை வாழ்த்திப் போற்றினர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தினர். அதன்பின் வந்த ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர திவ்ய பலிபூசை நிறைவேற்றி அர்ச். சாமிநாதர் புதிய கன்னியர் சபைக்குள், கன்னியாஸ்திரிகளை உட்படுத்தினார். 44 கன்னியாஸ்திரிகள், கறுப்பு வெள்ளை உடுப்பைப் பெற்று துறவற வார்த்தைப்பாட்டைக் கொடுத்தனர். செயிண்ட் மேரி கன்னியர் மடத்துக் கன்னியர்களுடன், சில புதிய உறுப்பினர்களும், வேறு துறவற சபை மடங்களிலிருந்து சில கன்னியாஸ்திரிகளும், இதில் சேர்ந்தனர். 

அன்றிரவே , அர்ச். சாமிநாதர், தமது ஞான ஆலோசகர்களான கர்தினால்மார்கள் (வந் நிக்கோலாஸ், வந். ஸ்டீஃபன்), பிறநண்பர்களுடன் வெறுங்காலில் பாதயாத்திரையாக கைளில் தீப்பந்தங்களுடன் அர்ச். லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படத்தை சுற்றுப்பிரகாரமாக, அர்ச். சிக்ஸ்துஸ் தேவாலயத்திற்கு எடுத்துச் சென்றனர். வந். நிக்கோலாஸ் கர்தினால், "இப்படம் இங்கு தங்கினால், சர்வேசுரன் இப்புதிய கன்னியர் மடத்தின் மட்டில் மகிழ்வடைந்துள்ளார் என்று, நாம் கண்டுணரலாம். ஒருவேளை இப்படம் தனது பழைய மடத்திற்கே திரும்பினால் என்ன செய்யலாம், Fr. தோமினிக்?" என்று கேட்டார். "இல்லை . நிச்சயமாக அது திரும்பிச் செல்லாது, ஆண்டவரே" என்று அர்ச். சாமிநாதர் பதிலளித்தார். அப்பொழுது, பொலோஞாவுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டு, அங்கு மடத்தை நிர்வகித்தும், சபை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டும் உழைத்திட்ட சகோ. ரெஜினால்டு , அர்ச். யாகப்பர் மடத்தில் இறந்த செய்தி எட்டியது. 

அவருக்கு வயது 35க்குள் தான். மிகவும் சிறிய வயதினர். இதைக் கேட்ட சபை அதிபரான அர்ச். சாமிநாதர் மிகுந்த துயரத்துக்குள்ளானார். சபை உத்தரியத்தை தேவமாதாவிடமிருந்தே பெறும் பாக்கியத்தைப்பெற்ற சகோ. ரெஜினால்டு, தற்சமயம் மோட்சமகிமையில் தமது சபைக்காக , அதிகம் உதவுவார் என்ற நினைவே அர்ச. சாமிநாதருக்கு பெரும் மகிழ்வாகவும் ஆறுதலாகவும் இருந்தது. மேலும், சகோ. ரெஜினால்டு இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, இரு ஜெர்மானிய இளைஞர்களை போதக துறவிகளின் சபைக்குள் உட்படுத்தியிருந்தார். ஜோர்டன், ஹென்றி என்ற அவ்விருவரும் பாரீஸ்நகரின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தனர் என்ற செய்தியும் அர்ச். சாமிநாதரை மகிழ்வித்தது. இவ்விரு இளைஞர்களையும் அர்ச். சாமிநாதர், தமது பாரீஸ்நகர பயணத்தின்போது ஏற்கனவே சந்தித்துள்ளார். அதில், குறிப்பாக, சகோ. ஜோர்டனை நன்கறிவார். அப்போது, ஜோர்டனிடம் அர்ச். சாமிநாதர், சகோ. ரெஜினால்டுவை, தீராத நோயினின்று, எவ்வாறு தேவமாதா விசேஷமாக தமது பாதுகாப்பினால் பராமரித்து புதுமையாகக் காப்பாற்றினார்கள் என்பதை விவரித்து கூறினார். மேலும் தமது சபையைப் பற்றியும், அதன் வேதபோதக அலுவல்களைப் பற்றியும் கூறும்போது, ஜோர்டனின் முகம் மகிழ்வுற்று மலர்வதைக் கண்ட , அர்ச். சாமிநாதர், அவரையும் சர்வேசுரன், தமது சபைக்கு அழைப்பதைத் தாம் உணர்வதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறு, இவ்விரு இளைஞர்களின் இருதயங்களில் ஏற்கனவே, அர்ச். சாமிநாதர் தேவ அழைத்தலுக்கான விதையை விதைத்திருந்தார். அதை சகோ. ரெஜினால்டு போஷித்து வளர்த்தார். விரைவிலேயே இவ்விருவரும் மாபெரும் வேதபோதக அலுவல்களை, போதகக் குருக்களாக செயல்படுத்தப்போவதையும், அதிலும் குறிப்பாக, தமக்குப் பிறகு சபையை சகோ. ஜோர்டனே நிர்வகிப்பார் என்பதை முன்கூட்டியே அறிந்தவராக, அர்ச்.சாமிநாதர் மனமகிழ்ந்தார்.

அப்போது, போலந்து நாட்டிலிருந்து தம்மைப் பார்க்க வந்த புதிதாக மேற்றிராணியாராக கிராக்கோ நகருக்குப் பொறுப்பேற்றிருந்த வந்.ஐவோ ஆண்டகையை, அர்ச். சாமிநாதர் வரவேற்றார். அவருடன் இளங்குருக்கள், சங்.செஸ்லாஸ், சங்.ஹையசிந்து என்ற அவருடைய சகோதரரின் மகன்களும், மற்றும் ஹென்றி , ஹெர்மன் என்ற இரு உதவியாளர்களும் வந்திருந்தனர். அர்ச்.சாமிநாதர் நெப்போலியனை உயிர்ப்பித்த நேரத்தில், இவர்கள் அனைவரும் வந். ஐவோ மேற்றிராணியாருடன் சிக்ஸ்துஸ் தேவாலயத்தில், அப்புதுமையைக் கண்டு களித்தவர்கள். பேசுவதில் எளிமையும், அடக்கவொடுக்கமும் தாழ்ச்சியுமுடையவரான வந்.ஐவோ ஆண்டகை, அர்ச். சாமிநாதரிடம், தமது மேற்றிராசனத்துக்கு, போதகசபைத் துறவிகளை, சுமார் 4 துறவிகளையாவது, ஞானப்பிரசங்கங்கள் நிகழ்த்த அனுப்புமாறு வேண்டினார். சங். செஸ்லாஸ்," எங்களுடைய வடக்குப் பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கு குருக்கள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறார்கள் '' என்றார். உடனே சங்.ஹையசிந்து சுவாமியார், "நமது சத்திய வேதம் போலந்து நாட்டிற்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி.965ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் அது, இன்னும் போதிய அளவில் அங்கு வளர்ச்சியுறவில்லை. அநேகர் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை. பரந்து விரிந்த நிலப்பிரதேசத்தையுடைய இந்நாட்டில் மெய்ஞானம் தழைத்தோங்கும்படியாக, அங்கு போதகத் துறவிகள் வேதம் போதிப்பதற்கு தேவைப்படுகிறார்கள்'' என்று கூறினார். "சுவிசேஷம் அங்கு போதிய அளவில் போதிக்கப்பட்டால் தான், அங்கு நிலவிவரும்போர்களும் குழப்பங்களும் நீங்கி, ஆண்டவருடைய சமாதானம் குடிகொள்ளும். அதற்கு நீங்கள் தான் உதவவேண்டும். உங்களுடைய துறவிகளை அனுப்ப வேண்டும் '' என்று வந்.ஐவோ ஆண்டகை சாமிநாதரிடம் விண்ணப்பித்தார். அப்போது, பொலோஞா , பாரீஸ், ரோம் போன்ற நகர்ப்பகுதிகளில், அங்கிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை, பதிதர்கள் தங்களுடைய வசத்தில் உட்படுத்துவதால், அம்மாணவர்களுக்கு உத்தம ஞான உபதேசத்தைப் புகட்டி, அவர்களை மனந்திருத்துவதும், அவர்களைக் கொண்டே மற்ற பதிதர்களை மனந்திருப்புவதற்காகவுமே, இந்நகரங்களில் தமது சபை மடங்களை ஏற்படுத்தியிருப்பதைப் பற்றி அர்ச். சாமிநாதர் விவரித்தார். மேலும் அஞ்ஞான நாடுகளுக்கு தமது சபைத் துறவிகளை, வேதபோதக அலுவல்களுக்கு அனுப்புவதற்கு இன்னும் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு போலந்து நாட்டு மொழி தெரியாது என்றும் கூறினார். 

சற்று சிந்தித்தபிறகு, அர்ச். சாமிநாதர், ''ஆண்டவரே! நீங்கள் உங்களுடன் வந்த இந்த இளங்குருக்களை, உம்முடைய சகோதரருடைய மகன்களை, என்னிடம் விட்டுச் செல்லுங்கள். சிறிது காலம் போதும். அவர்கள் உங்களுடைய நாட்டிற்கு தேவையான சிறந்த போதக துறவிகளாக பயிற்றுவிக்கப்படுவார்கள் " என்றார்.

 இதை சற்றும் எதிர்பாராத வந்.ஐவோ ஆண்டகை, அதிர்ச்சியடைந்த அதே நேரத்தில், சங்.ஹைசியந்து, சங்.செஸ்லாஸ் என்ற இரு குருக்களும், அர்ச். சாமிநாதர் முன்பாக முழந்தாளிட்டு, "சுவாமி, யார்வேண்டுமானாலும் உங்களுடைய சபையில் சேரமுடியுமா? என்று வினவினர். 

"ஏன் முடியாது. ஹெர்மன், ஹென்றி நீங்களும் கூட வரலாம். வாருங்கள் என் பிள்ளைகளே! '' என்று கூறி, அந்த நால்வரையும், இருகரம் விரித்து தம்மிடம் வரவேற்றார். உடனே, ஹெர்மன், ஹென்றி இருவரும் மாசற்ற குழந்தைத்தனத்துடன் நேசத்தந்தையான அர்ச். சாமிநாதரை நோக்கி விரைந்தோடி வந்தனர். அப்போது, சாமிநாதரின் சீடர் ஒருவர் வெள்ளைக் கம்பளியிலான துறவற உடுப்புகளை எடுத்து வந்தார். மற்றொரு சீடர், தீர்த்தத்தையும் எரியும் மெழுகுதிரிகளையும் எடுத்துவந்தார். உடனே, வந்.ஐவோவின் பிள்ளைகளான இரு இளங்குருக்களும், இரு உதவியாளர்களும் நெடுஞ்சாண்கிடையாக பீடத்தின் முன்பாக கிடந்தார்கள். தகுதியற்ற தங்களை, சர்வேசுரனுடையவிசேஷ ஊழியத்திற்கென்று ஏற்கும்படியாக அவ்வாறு சாஷ்டாங்கமாக விழுந்து ஜெபித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்நால்வரும் போதகத் துறவிகளுடைய உடுப்பை அணிந்து கொண்டனர். அர்ச்.சாமிநாதர் , உரத்த குரலில் உற்சாகத்துடனும் மகிழ்வுடனும், "ஓ ஆண்டவரே, உமது ஊழியர்களான இவர்கள், தங்களுடைய முழு இருதயத்துடன் உம்மையே நாடும்படியாகவும், அவர்கள் தகுதியுடன் கேட்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கும்படியும் அவர்களுக்குத் தேவையான பரலோக உதவிக்கான உமது வலது கரத்தை அவர்கள்மேல் நீட்டுவீராக!...'' என்ற ஜெபத்தை ஜெபித்தார். சங். ஹையசிந்து தான், பிற்காலத்தில் 25000 மைல் தூரம் கால்நடையாகவே வேதம் போதித்த "போலந்து நாட்டின் சாமிநாதர்" என்று புகழ்பெற்றவரும், தேவமாதாவுடனும் ஆண்டவருடனும் அடிக்கடி சல்லாபித்து, உத்தம சாங்கோபாங்கத்தை அடைந்தவருமான அர்ச். ஹையசிந்து. இவருடைய திருநாள் ஆகஸ்டு 16ம்தேதி .

புதன், 9 பிப்ரவரி, 2022

லூர்து மாதா காட்சிபெற்ற அர்ச். பெர்னதெத்தம்மாளின் புண்ணிய ஜீவியம்



அர்ச். பெர்னதெத்தம்மாள் மற்ற கன்னியரைப்போல் உடுத்தியிருந்த போதிலும், சிறிது உற்று நோக்குவோர் கண்களுக்கு, அவளுடைய முகத்தைப் பார்க்காமலேயே, முக்காளை அணிந்திருந்த விதத்தினாலும், அவளுடைய பொதுவான அடக்கமான தோற்றத்தினாலும், மற்ற கன்னியரிடமிருந்து தனியாகத் தோன்றுவாள். அதேபோல், பக்திக்குரிய காரியங்களை, மற்றவர் களைப் போல் அனுரித்து வந்த போதிலும், மற்றவரிடம் காணமுடியாத சுபாவத்திற்கு மேலான பிரகாசம், பெர்னதெத்தம்மாளுடைய பக்தி முயற்சிகளில் காணப்பட்டது. பிதாவுக்கும் சுதனுக் கும் இஸ்பிரீத்து சாந்துக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக என்ற அர்ச்தமத்திரித்துவ தோத்திர ஜெபத்தின் போது, மிகுந்த பக்தி பற்றுதலுடனும், சங்கையுடனும், மெதுவாக நிறுத்தி, அழுத்தம் திருத்தமாக சிலுவை அடையாளத்தைத் தன்மேல் வரைந்தபடி, அந்த உன்னத ஜெபத்தை ஜெபிப்பாள்.

சிலுவை அடையாளத்தை அடிக்கடி நம் சரீரங்களில் வரைந்து கொள்வதால், அபரி மிதமான ஞானநன்மைகள் மற்றும் ஞானசத்ருக்களிடமிருந்து பாதுகாப்பை அடைந்து கொள்ள லாம் என்பதை நன்கு உணர்ந்தபடியால், அவ்வாறு பக்தி பற்றுதலுடன் ஜெபிப்பாள். சங்.லான் ன சென்ஸ் என்ற கன்னியாஸ்திரி, "ஜெபிக்கும்போது, பெர்னதெத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதை மிகவும் விரும்பினேன். பெர்னதெத்தம்மாள் ஜெபிக்கும் போது, அங்கு ஓர் சம்மனசானவர் ஜெபிப்பது போலிருக்கும். யாதொரு அசைவும் சலனமும் இன்றி, நிமிர்ந்ததலை யுடனும், கூப்பிய கரங்களுடனும், தேவநற்கருணைப் பேழையையே உற்று நோக்கியபடியோ அல்லது புற உலக அசைவுகளால் யாதொரு பாதிப்புமின்றி, தேவசிநேக மிகுதியால் கனத்த இமைகளுடன் கீழ் நோக்கியபடியோ இருக்கும் கண்களுடனும், முழங்காலில் இருந்து பெர்ன தெத்தம்மாள் ஜெபிக்கும் அந்த அழகானக்காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது.

எங்கும் வியாபித்திருக்கும் தேவபிரசன்னமானது, பெர்னதெத்தம்மாளை மேலும் மேலுமாக ஊடுருவித் தன் வசப்படுத்தியுள்ளதாக நாங்கள் கருதுவோம். நவசந்நியாசிகளான நாங்கள் பூசை முடிந்து, நன்றியறிதல் முடிந்து, கோவிலிலிருந்து வெளியேறும் போது, பெர்னதெத்தம்மாள் இருக்கும் இடத்திற்கு வரும்போது, சர்வேசுரனுடன் அவர்கள் நெருக்கமாக சல்லாபித்து உரையாடும் காட்சியை நன்குக் காணும்படி, மெதுவாக அந்த இடத்தைக் கடந்து செல்வோம் " என்று குறிப்பிடுகிறாள்.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 - அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)

 கற்பு என்ற உன்னத வரம் பெற்ற அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)



சேசு சபையைத் தோற்றுவித்த அர்ச். இஞ்ஞாசியார், மனந்திரும்பிய திவ்ய இரட்சகர் சபை நிறு வனரான அர்ச் அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், வெது வெதுப்புள்ள ஆத்துமங்களில் தேவசிநேக நெருப்பை மூட்டுவதற்காக, இத்தாலி நாடெங்கும் ஞான தியானப் பிரசங்கங்களை நிகழ்த்தினார். 1745ம் வருடம், ஞான தியான பிரசங்கங்கள் நிகழ்த்துவதற்காக, ஃபோஜ்ஜியா நகருக்கு சென்றார். ஏட்ரியாடிக் கடலை ஒட்டியிருந்ததால், இந்நகரம் கப்பல் வழி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது; பண்டைய அபுலியா இராஜ்யத்தின் தலைநகரமானஃபோஜ்ஜியா, செல்வ செழிப்புடனிருந்தது; கிறீஸ் துவ வேதத்தின் பழம்பெரும் காலத்தின் துவக்கத்தில், மனுக்குலத்தை மீட்க மனிதவதாரமெடுத்த திவ்ய சுதன் மேலுள்ள நேசப் பெருக்கத்தால், ஜெருசலேம் நகரை நோக்கி திருயாத்திரை போகத் தீர்மானித்தார். தன் பாவங்களை நினைத்து பட்ட உத்தம மனஸ்தாபத்தினாலும், அதிகமாய் தேவசிநே கத்துக்காக வீரத்தன்மையான கிரியைகள் செய்யவேண்டும் என்ற ஆசையாலும், கடின தபசு செய்து, தன் சரீரத்தை உபாதித்து, உலகத்திலிருந்து மறைந்திருக்க ஆவலுற்றிருந்தார். ஏற்கனவே கசை யால் தன்னை அடித்துக்கொள்ள துவக்கியிருந்தார்.

அருந்தவப் பிரீதியால், அவர் மனம் கர்த்துாசியர் சபையை நாடிச் சென்றது. திருயாத்திரை போய் வந்தவுடன் அதில் உட்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் "சேசு" என்ற மகா பரிசுத்த திருநாமத்தை விருதாகவும், "சர்வேசுரனுடைய அதிமிக தோத் திரம்" என்பதை விருதுவாக்கியமாகவும் கொண்டு, திருச்சபையின் நன்மைக்காக அயராது, போர் புரியும் படையணி என, நவமாய் ஒரு துறவற சபையை ஸ்தாபிப்பதற்காக, இஞ்ஞாசியாரைத் தெரிந்து கொண்ட பரம் கர்த்தர், அவர் கர்த்தாசியர் சபையில் உட்படத் திருவுளமாகவில்லை. ஆயி னும், அர்ச். இஞ்ஞாசியார், ஆயுள் பரியந்தம், கர்த்துாசியர்சபையின் மேல் வெகு அன்பு வைத்திருந் தார். ஓர் இரவு, அவர், இலொயோலா மாளிகையிலுள்ள தம் அறையிலிருந்த தேவமாதாவின் படத் திற்கு முன்பாக முழந்தாளிட்டு வெகு உருக்கத்துடன், பரிசுத்தக் கன்னித்தாயின் திவ்யகரங்களில், தன்னை சேசுநாதர் சுவாமிக்கு முழுவதும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய மாளிகை எங்கும் ஓர் பலமான அதிர்ச்சி உண்டானது. அதனால் பலகணிக் கண்ணாடிகள் உடைந்து போயின.

சுவரிலும் ஓர் பிளவு உண்டாகி, இந்நாள் வரை இந் நிகழ்வுக்கு அத்தாட்சியாயிருக்கின்றது. அர்ச்சிஷ்டவர், பரிசுத்த கற்பு என்னும் புண்ணியத்தில் ஸ்திரமாய் ஜீவிப்பதற்கு வேண்டிய தேவ வரப்பிரசாதத்திற்காக அமலோற்பவமாதாவிடம் அதிக உருக்க மாக ஜெபித்து வந்தார். ஓர் இரவில், அர்ச். இஞ்ஞாசியார் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அர்ச். அமலோற்பவமாதா, திவ்ய குழந்தை சேசுவுடன் மாட்சிமிக்க பேரொளியுடன் காட்சியளித்தார் கள். தேவமாதா, இஞ்ஞாசியாரையே சற்று நேரம் உற்று நோக்கியபடி, காட்சி கொடுத்தார்கள். தேவ மாதா, ஒன்றும் பேசவில்லை. திவ்ய குழந்தை சேசுவும், அவரை அளவற்ற அன்புடன் நோக்கி னார். பரிசுத்த ஜோதிமயமான அக்காட்சியை இஞ்ஞாசியார், கண்குளிரப் பார்த்தார். துாயதேவசிநே கப் பெருக்கத்தால் இருதயம் தாவித்துடிக்க, ஒப்பிலா அழகு சோபனம் வாய்ந்த அவ்விரு திரு வதனங்களையும் கூர்ந்து நோக்கினார். அப்பொழுது, அவருடைய ஆத்துமம், அருட்பிரகாச தீட்சை பெற்றது. அமல உற்பவ இராக்கினியையும், அவதரித்த திவ்ய சுதனையும் தரிசித்த அர்ச் இஞ்ஞாசி யாரின் கண்கள் அன்று முதல், உலகமாய்கைகளின் கவர்ச்சியினின்று முற்றிலும் விடுபட்டது. பரலோகக் காட்சியால், பூலோக இன்பங்களை இருதயம் வென்றது. ஆதாமின் மக்களை, அலைக்கழித்து சிந்தை குலையச் செய்யும் ஐம்புல மாய்கை அன்றே அவரைவிட்டு அகன்றது. அன்று முதல், ஜீவிய கால மெல்லாம், கற்பு என்கிற புண்ணியத்தில் ஓர் அசரீரியைப் போல் ஜீவிக்கும் உன்னத வரத்தை அடைந்தார். இத்தரிசனத்திற்குப் பின், இஞ்ஞாசியார், பரலோக ஏக்கமுடையவர் போல், நட்சத்தி ரங்கள் துலக்கமாய்ப் பிரகாசிக்கும் இரவு நேரத்தில், வானத்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டி ருப்பார். அவர் பூரண சரீர சுகம் அடையும் வரைக்கும், இன்னும் சிறிது காலம் அம்மாளிகையிலேயே தங்க நேர்ந்தது. அந்நாட்களை வீணாக்காமல், அவர், ஜெபத்திலும், ஞானவாசகத்திலும் கழித்தார். அடிக் கடி, ஆத்தும் சோதனை செய்வார். மற்றவருடன் உரையாடும் போது, ஞான காரியங்களைப் பற்றியே பேசுவார். வாசித்த ஞானகாரியங்களை நன்றாக மனதில் பதியவைக்கும்படி, அவற்றை ஓர் புத்தகத் தில் திருத்தமான அட்சரங்களில் எழுதிவைப்பார். சேசுநாதர் சுவாமியுடைய திருவாக்கியங்களை யும் கிரியைகளையும், பொன்னிறமான அட்சரங்களிலும், தேவதாயாரைக் குறித்தவைகளை நீல நிறத்திலும், மற்ற அர்ச்சிஷ்டவர்களைச் சார்ந்தவற்றை வேறுநிறங்களிலும் எழுதிவைத்தார். இலொயோலா மாளிகையைலிட்டுப் போகும் போது, அவர், தம்முடன் எடுத்துக்கொண்டு போன பொக்கிஷம் இப்புத்தகம் ஒன்று மட்டுமே.


பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்

 பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்


1. சரீரத்தின் பாவங்களே, ஆத்துமங்களை நரகத்திற்கு இட்டுச்செல்வதற்கு ஏதுவான பாவங்களாக இருக்கின்றன.

2. பரிசுத்த கற்பை அனுசரிப்பதற்கு, சரீரத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆத்துமத்தைப் பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு, பாவம் கட்டிக்கொள்ளக் கூடாது: தீமையானவற்றைப் பார்க்கக்கூடாது, திருடக்கூடாது, பொய்பேசக் கூடாது,எவ்வளவு கடினமானதொன்றாக இருந்தபோதிலும் உண்மையே பேச வேண்டும்.

3. நம் நேச ஆண்டவரை மிகவும் நோகச்செய்யும் ஆடைகளை அணியக்கூடிய நாகாரீகங்கள் இனி தோன்றும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் உடை உடுத்துவதில் இத்தகைய மோசமான நாகரீகங்களைப் பின்பற்றக் கூடாது. திருச்சபைக்கு இத்தகைய நாகரீகங்கள் இல்லை. நம் ஆண்டவர் எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றார்.

4. மருத்துவர்கள், தேவசிநேகத்தைக் கொண்டிராததால், நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஞானஒளியைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

5. குருக்கள் திருச்சபையின் அலுவல்களில் மட்டுமே ஈடுபடவேண்டும். குருக்கள் பரிசுத்தமாக, அதிக பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும். குருக்களும், துறவியரும், ஞான அதிகாரிகளுக்கும், பாப்பரசருக்கும் கீழ்ப்படியாமல் ஜீவிப்பது, நம் ஆண்டவரை மிகவும் நோகச் செய்கின்றது.

6. கன்னியாஸ்திரிகள் துறவற அந்தஸ்தில் நிலைத்திருப்பதற்கு, அவர்கள் சரிரத்திலும், ஆத்துமத்திலும் பரிசுத்தமாக இருப்பது அவசியமாகும்.

7. பல திருமணங்கள், சர்வேசுரனுடையதாக இல்லாதிருப்பதால், நல்ல திருமணங்கள் அல்ல. அவை சர்வேசுரனுக்கு உகந்தவை அல்ல.

8. பாவசங்கீர்த்தனம் என்பது, தேவ இரக்கத்தின் தேவதிரவிய அனுமானம். எனவே, உறுதியான நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் பாவசங்கீர்த்தனத் தொட்டியை அணுக வேண்டும்.

9. என் ஞானத் தாயே! நாட்டை ஆள்பவர்களுக்காக அதிகம் ஜெபியுங்கள். நம் ஆண்டவருடைய திவ்ய வேதத்தை அனுசரிப்பவர்களை தண்டிப்பவர்களுக்கு ஐயோ கேடு! திருச்சபையுடன் சமாதானத்துடன் இருக்கும் நாடுகளையும், பரிசுத்த வேதவிசுவாசத்தை அனுசரிப்பதற்கு சுதந்திரத்தை அளிக்கும் நாடுகளையும் சர்வேசுரன் ஆசீர்வதிப்பார்.

10. உலகத்தின் பாவாக்கிரமங்களுக்கான தண்டனையாக, நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன.

11. இனிமேலும், தேவமாதா, உலகத்தைத் தண்டிப்பதிலிருந்து, தம்முடைய நேசகுமாரனுடைய திருக்கரத்தைத் தாங்கிப் பிடிக்கக் கூடாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, நாம் அவசியமாக தபசு செய்ய வேண்டும். மனிதர்கள் தங்களுடைய பாவவழியைவிட்டுத் திரும்பினால், ஆண்டவர் உலகத்தைத் தண்டிக்காமல் விட்டு விடுவார். இல்லையென்றால், துப்புரவுத் தண்டனை வந்தே திரும்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42 

"ஓ சமுத்திரத்தின் நட்சத்திரமே! வாழ்க!சர்வேசுரனுடைய பூசிக்கப்பட்ட பரிசுத்த மாதாவே! நித்தியமும் பரிசுத்த கன்னிகையே, வாழ்க! பரலோகத்தின் பேரின்ப பாக்கியமான வாசலே! வாழ்க! கபிரியேல் என்கிற சம்மனசினுடைய வாக்கிலே நின்று புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்தில் நிலை நிறுத்தும். ஆக்கினைக்குப் பாத்திரமானவர்களுடைய கட்டுகளை அவிழும். குருடருக்குப் பிரகாசத்தைக் கொடுத்தருளும். எங்கள் பொல்லாப்புக் களைத் தள்ளும். சகல நன்மைகளும் எங்களுக்கு வர மன்றாடும் " என்ற அர்ச். சாமிநாதர் மிகவும் விரும்பிய, தேவமாதாவுக்குத் தோத்திரமான இனிய பாடலை, மிக நேர்த்தியாக ஒரே குரலில், பாடியபடி, செயிண்ட் மேரி கன்னியர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புத படத்தை சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்துக்குள் கொண்டு வந்தனர். 

இந்தக் கன்னியாஸ்திரிகள் அனைவரையும் அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் மிகுந்த மகிழ்வுடன் அர்ச்.சாமிநாதர் வரவேற்றார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபைவிதிமுறைகளைப் பற்றி அவர்களிடம் விளக்குவதற்காக சாமிநாதர் அவர்களை மடத்தின் அருகிலுள்ள அர்ச்.சிக்ஸ்துஸ் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் அமரச்செய்தார். சுற்றுப்பிரகாரத்தில் வந்த கர்தினால்மார்கள் மேற்றிராணியார்கள் மற்றும் குருக்கள் அனைவரும் அந்தப் பொதுசபைக் கூட்டத்திற்காக அமர்ந்தனர். கூட்டம் முடிந்ததும், அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்காக ஒரு திவ்ய பலிபூசை நிறைவேற்றுவார். அதன்பிறகு கன்னியர்கள் அனைவரும் பவனியாக தேவாலயத்தின் மைதானம் வழியாக சென்று, அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்திற்கு செல்லவேண்டும் என்று, சாமிநாதர் திட்டமிட்டிருந்தார். 

ஆனால், புதிய துறவற சபைவிதிமுறைகளைப் பற்றி, அர்ச். சாமிநாதர் பேச துவக்குமுன்னே , வளாகத்தில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒரு மனிதன் ஓடிவந்து சாமிநாதரிடம், கர்தினால் ஸ்டீபனின் சகோதரனின் மகனான நெப்போலியன் ஆர்சினி என்பவன், குதிரையிலிருந்து கீழே விழுந்து, கழுத்து முறிபட்டுக் கிடக்கிறான், என்று கூறினான். உடனே கர்தினால், வந்.ஸ்டீபன், "பையனின் உயிருக்கு ஆபத்தில்லையே?" என்று வினவினார். ''ஆண்டவரே, அவன் விழுந்த இடத்திலேயே இறந்து விட்டான்'' என்று வந்தவன் துயரத்துடன் கூறினான். இதைக் கேட்ட கர்தினால் மிகவும் துயரத்துடன், தன் இருக்கையில் சாய்ந்தார். கர்தினாலின் துயரத்தைக் கண்ட அர்ச். சாமிநாதர், தமது சபை சீடர் ஒருவர் மூலமாக தீர்த்தத்தை வருவித்து, வருத்ததில் ஆழ்ந்திருந்த தமது ஞான ஆலோசகரான கர்தினால் மீது, தீர்த்தத்தை தெளித்துவிட்டு, குதிரையிலிருந்து பையன் கீழே விழுந்த இடத்திற்கு விரைந்து சென்றார். சகோ.டான்கிரட் மற்ற சகோதரர்கள் தங்களுடைய சபை அதிபரிடம், தாங்களும் கூட வருவதற்கு அனுமதி கோரினர். 

அதற்கு, அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் உடனே திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு பீடத்தை தயார் செய்யும்படி பணித்தார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபையின் பொதுக்கூட்டத்தை ஒத்தி வைத்தார். அதைவிட மிக முக்கியமான காரியத்தைக் கவனிக்கச் சென்றார். உயிரற்ற நெப்போலியனுடைய உடலை சிற்றாலய பீடத்தின் அருகிலுள்ள ஒரு அறையில் கிடத்தினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர் திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்காக பீடத்திற்குச் சென்றார். எப்பொழுதும் திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன் நிறைவேற்றும் சாமிநாதர், அன்று எவ்வளவு அதிக பக்தி உருக்கத்துடன் பூசையை நிறைவேற்றினார் என்றால், அவருடைய முகம் மாபெரும் ஒளியால் வசீகரம் பெற்று, மாட்சியுடன் துலங்கிற்று. பார்ப்பவருடைய இருதயங்களில் தெய்வபயமும் உத்தமமான பக்தியும் துண்டப்பெற்றன. நடுப்பூசையின்போது, உள்ளங்கை அகலத்திற்கு தரைக்கு மேலே அர்ச்.சாமிநாதருடைய பாதங்கள் உயர எழும்பியிருந்தன. அவருடைய முகம் சூரியனைப்போல ஒளி வீசிக் கொண்டிருந்தது. 

அவர் திவ்ய பலிபூசை நிறைவேற்றிய நேரம் முழுவதும், ஒரு சத்தமும் இல்லை . எதுவும் , யாரும் அசையவில்லை . திவ்ய பலிபூசை முடிந்தபிறகும் அங்கிருந்த அனைவரும் வெகுநேரத்திற்கு கல்லைப்போல, பரலோகக் காட்சியால் பரவசமானவர்களைப் போல, அசைவின்றி முழங்காலில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். திவ்ய பலிபூசை முடிந்தபிறகு, அர்ச். சாமிநாதர் யாதொன்றும் நிகழாததுபோல , அமைதியாக ,அனைவரையும் நெப்போலியனுடைய உடலைக் கிடத்தியிருந்த அறைக்கு, தம்முடன் வரும்படி அழைத்தார். அங்கிருந்த கூட்டத்தினர், தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே, அவர் கூறுவதற்குக் கீழ்ப்படிந்தனர். பிறகு, அர்ச். சாமிநாதர் இறந்து போயிருந்த, நெப்போலியனுடைய விறைத்துப் போயிருந்த கைகால்களை, நேராக வைத்து ஒழுங்குபடுத்தினார். பிறகு, அவர் ஆழ்ந்த ஜெபத்தில் மூழ்கினார். நெப்போலியனுடைய உடலினருகில், அர்ச்.சாமிநாதர் மூன்று முறை பீடத்தின் மேலிருந்த, ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை நோக்கி, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார். ஆராதித்துக் கொண்டே, உயிரற்ற நெப்போலியன் மேல் இரக்கமாயிருக்கும்படி, ஆண்டவரிடம் அழுது, மன்றாடி ஜெபித்தார். "பரலோக பிதாவே, இந்தப் பிள்ளையின் மேல் இரக்கமாயிரும். இவனை சாவிலிருந்து மீட்டருளும்" என்று உருக்கமாக வேண்டினார். பல நிமிடங்கள் ஓடின. சாமிநாதர் அழுதுகொண்டே ஆண்டவரைநோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார். நெப்போலியனுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தார். தம் கைகளை பரலோகத்தை நோக்கி உயர்த்தியவராக, உரத்த குரலில், "இளைஞனே! நமதாண்டவராகிய சேசுநாதர் சுவாமியின் நாமத்தினாலே உனக்குக் கூறுகிறேன். எழுந்திரு!'' என்று கூறினார். இவ்வாறு உரத்த குரலில் அவ்விளைஞனுக்குக் கட்டளையிடுகையில், சாமிநாதர், உள்ளங்கை அகலத்திற்கு தரையை விட்டு உயர எழும்பினார். உடனே அனைவரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். ஆம். இறந்த நெப்போலியன் மெதுவாக, தமது கண்களைத் திறந்தான். பிறகு, அவன் எழுந்து உட்கார்ந்து, ஆழ்ந்த துக்கத்திலிருந்து மீண்டவனைப் போல சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு தன் முன் நின்றுகொண்டிருந்த அர்ச். சாமிநாதரிடம், "சுவாமி, எனக்குப் பசியாயிருக்கிறது. எனக்கு உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் " என்று கூறினான். சில மணித்துளிகள் முன்பு வரை இறந்து போயிருந்த இளைஞன், புதுமையாக , உயிருடன் வரக் கண்ட அர்ச். சாமிநாதர், அவனை அரவணைத்துக்கொண்டு, "ஆம். மகனே. இதோ உனக்கு உணவு கொடுக்கப்படும்" என்று கூறினார். இதைக் கண்ட கர்தினாலும் மிகுந்த மகிழ்ச்சி, ஆரவாரத்துடனும் ஆனந்தக் கண்ணீருடனும், "இதோ நமதுபையன் உயிருடன் இருக்கிறான். சர்வேசுரன் ஸ்துதிக்கப் படுவாராக" என்று ஆண்டவரை வாழ்த்திக்கொண்டே , இளைஞனுக்குத் தேவையான உணவைக் கொண்டுவர, ஏற்பாடு செய்தார்.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 41

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 41


 சுவாமி, சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன் 3ம் செர்ஜியுஸ் பாப்பரசர் இந்த அற்பதப்படத்தை தமது லாத்தரன் மாளிகைக்குக் கொண்டு சென்றார். அதை, எங்களுடைய மடத்துக் கன்னியர் எவ்வளவோ தடுக்க முயன்றனர். அதற்கு பாப்பரசர் இணங்கவில்லை . ஆனால், அடுத்த நாள் இரவில் புதுமையாக, இப்படம் எங்களுடைய செயிண்ட் மேரி மடத்துக்கே திரும்ப வந்தது. அந்நாளிலிருந்து, எங்களுடைய மடத்துக் கன்னியர்கள் இப்படத்தை மிக விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதி வருகின்றனர். இப்படத்தைச் சுற்றியே , தங்களுடைய முதன்மையான பக்தி முயற்சிகளை, அனுசரித்து வருகின்றனர். எனவே, இப்படம் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பது, சர்வேசுரனுடைய திருவுளமாக இருக்கிறது. 

அதேபோல தான், நாங்களும் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும், அவருடைய சித்தமாக இருக்கிறது, என்று சங்.யூஜீனா தாயார் கூறினார்கள். ரோமாபுரியிலுள்ள கன்னியாஸ்திரி மடங்களை, சீர்திருத்தி ஒரே சபைக்குள் ஒருங்கிணைக்கும் அலுவலில், அர்ச்.சாமிநாதருக்கு உதவிடும்படி பாப்பரசரால் நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர்களான வந்.உபோலினோ, வந்.ஸ்டீஃபன், வந்.நிக்கோலாஸ் என்ற மூன்று கர்தினால்மார்களும், செயிண்ட் மேரி மடத்துக்கன்னியர்களிடம் சாமிநாதர் மேற்கொண்ட முதல் சந்திப்பு, தோல்வியடைந்தது என்பதை அறிந்து மிகவும் மனம் தளர்ந்தனர். பாப்பரசரிடம் இவ்வலுவலில் இருந்து தங்களை விடுவிக்கும்படி விண்ணப்பிக்கவும் ஆசித்தனர். கடின இருதயம் படைத்த பதிதர்களை மனந்திருப்பும் அலுவலில் வெற்றிபெறச் செய்த தேவமாதாவின் உதவியை, இவ்வலுவலிலும் விசேஷமாக நாடப்போவதாக அர்ச்.சாமிநாதர் தீர்மானித்தார். ஜெபத்தின் வல்லமையை நன்கு அறிந்த அர்ச்சிஷ்டவர், இக்கருத்திற்காக முன்பைவிட ஜெபத்தை இன்னும் அதிகமாக தீவரித்தவராக, பக்திபற்றுதலுடனும் அதிக தபசுமுயற்சிகளுடனும் தேவமாதாவிடம் இரவும் பகலும் மன்றாடிவந்தார். 

இவ்வாறு, கன்னியர்களை ஒன்றிணைக்கும் அலுவலின் வெற்றிக்காக, தமது சரீரத்தை உபாதித்து, நீண்ட நேர ஜெபத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய இருதயத்தில் தேவசிநேகம் அதிகரித்தது' மேலும் சர்வேசுரனுடைய சிநேகத்தில் புத்தொளியையும் உத்வேகத்தையும் அடைந்தார். "புரோயிலுள்ள மடத்திலுள்ள என் குமாரத்திகள் கன்னியாஸ்திரிகளாக ஜீவிப்பதற்கான ஒழுங்கு முறைகள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றால், இம்மடத்தின் பிள்ளைகள் அனைவரும் அர்ச்சிஷ்டவர்களாக முடியுமே. ரோமாபுரியிலுள்ள எல்லா மடத்துக் கன்னியாஸ்திரிகளும் ஒன்றாக ஒரே துறவறசபைக்குள் உட்பட்டு, ஒழுங்கு முறைகளை அனுசரித்து ஒரே குடும்பமாக ஜீவிக்க வேண்டும் என்பதே நம் நல்ல கடவுளின் திருவுளமாக இருக்கிறது. நம் ஆண்டவர் எவ்வளவு சிநேகம் மிகுந்தவர். நம் மேல் எவ்வளவு இரக்கம் கொண்டு, நம்மைப் பராமரித்து போஷித்து வருகிறார் என்பதை இக்கன்னியர்கள் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே" என்று சாமிநாதர் தமக்குள்ளே சிந்தித்துக்கொண்டு இருந்தார். ஒருநாள், அவர் திவ்யநற்கருணைப் பேழையின் முன் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவருடைய ஆத்துமத்தின் ஆழத்தில், இன்னுமொரு தடவை செயிண்ட் மேரி கன்னியர்மடத்தை சந்தித்து, அவர்களுக்கு ஜெபத்தினாலும் தபசினாலும் நிறைவேற்ற வேண்டிய ஆத்தும் ஈடேற்ற அலுவலின் மகிமைகளைப் பற்றி பிரசங்கிக்குமாறு ஒரு குரலொலி கேட்டது. திவ்ய இஸ்பிரீத்துவானவரே தம்மை இவ்வாறு ஏவுகின்றார் என்பதை உணர்ந்ததும், அர்ச். சாமிநாதர் இரண்டாம் முறையாக செயிண்ட் மேரி மடத்திற்கு சென்றார். 

அவர், அங்குள்ள கன்னியரிடம், ஜெபத்தினுடையும் தபத்தினுடையவும் நன்மைகளையும், அவற்றின் பேறுபலன்களினால், ஆத்துமங்களுக்கு விளையும் எண்ணற்ற பயன்களையும் பற்றி ஞானதியான பிரசங்கம் செய்தார். அதைக் கேட்ட கன்னியாஸ்திரிகளுடைய இருதயங்கள் ஞான ஒளி பெற்றன. மடத்துத் தாயார், "சுவாமி, இனிமேல் நாங்கள், ஆன்ம ஈடேற்றத்திற்காக ஜெபத்திலும் தபசிலும் அதிக நேரம் மெய்யாகவே முழுமனதுடன் ஈடுபடுவோம். இதுவரை, சர்வேசுரனிடமிருந்து நாங்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு பதிலாக, அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்றபடியே ஜீவித்து வந்திருக்கிறோம். இனி அத்தகைய ஜீவியத்தை மாற்றுவோம். உங்களுடைய துறவற சபை ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்போம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும், அர்ச்.சாமிநாதர் மிகவும் மகிழ்வடைந்தார். உடனே, அம்மடத்துக் கன்னியர் ஒவ்வொருவரும் கோவிலுக்கு சென்று, பரலோக பூலோக அரசரான திவ்யசற்பிரசாதநாதர் முன்பாக, கீழ்ப்படிதல் என்னும் துறவற சபைக்கான முக்கிய வார்த்தைப்பாட்டைக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தார். 

மேலும் அவர்களிடம், அர்ச்.சாமிநாதர், "சகோதரிகளே, இன்னும் சில நாட்களுக்குள், நம் பாப்பரசர் ஹொனோரியுஸ் நமக்கு அளித்துள்ள சாந்தா சபினா மடத்திற்கு, சிக்ஸ்துஸ் மடத்திலுள்ள நமது சகோதரர்கள் சென்று விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் எல்லாரும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு வந்துவிடலாம். பரிசுத்தமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தை ஆசிக்கும் மற்ற பெண்களையும் புதிதாக மடத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புதப்படத்தையும் உங்களுடன் எடுத்துக் கொண்டு வாருங்கள். ஒருவேளை தேவமாதா படம் முன்புபோல புதுமையாக , தானாகவே, இந்த மடத்திற்கே திரும்பி வந்துவிட்டால், நீங்களும் உங்களுடைய விருப்பப்படி மீண்டும் இந்த மடத்திற்கே வந்து தங்கலாம். அதை நான் தடுக்க மாட்டேன்" என்று கூறினார். இதற்கு, மடத்தின் கன்னியர்கள் அனைவரும் மகிழ்வுடன் சம்மதித்தனர். அதன்படி, 1220ம் வருடம், பிப்ரவரி 20ம் தேதியன்று , செயிண்ட்மேரி மடத்துக்கன்னியர் சிறுகுழுவாக சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்தின் கர்தினால் மார்கள், மேற்றிராணியார்கள், குருக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் தைபர் நதிபாலத்தின் வழியாக நகரத்திற்குள் சென்றனர். இந்த சுற்றுபிரகாரத்தை வரவேற்கும்படியாக தேவாலயங்களின் மணிகள் ஒலித்தன.


சனி, 5 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40 


”சுவாமி, நமது சபைவிதிகள் மிகக் கடுமையானதாக இருக்கிறது என்று அம்மடத்திலுள்ள சில கன்னியர்கள் அஞ்சுகிறார்கள். அதிலும் குறிப்பாக, அடைப்பட்ட மடத்து ஜீவியத்தின் கடுமையான விதிமுறைகள் அவர்களை மிரளச் செய்துள்ளன" என்று சகோ. ஆல்பர்ட் அதிபர் சுவாமியாரிடம் கூறினார்.

அதை ஆமோதித்த சகோ.டான்கிரட், "ஆம். சுவாமி, ரோமில் வசிக்கும் அக்கன்னியர்களின் நண்பர்களும், உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் இக்கன்னியர்களுடைய ஜீவியமுறையை சிறிதளவு மாற்ற முயன்றாலும், உங்களை தடுப்பதற்காக எதையும் செய்யத் துணிந்திருக்கிறார்கள் " என்றார்.

ரோமாபுரியில் இருக்கும் மற்ற அநேக மடங்களில் இருந்த கன்னியர்களும், இப்புதிய துறவற ஒழுங்குகளை, அதுவும் பிரான்சு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் உள்ள புரோயிலுள்ள கன்னியர்மடத்தின் ஒழுங்குகளை, அனுசரிப்பதற்கு மனமில்லாதவர்களாக இருந்தனர். உயர்ந்த இத்தாலிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களான இவர்கள், சாதாரன குடியானவர்களைப் போல நெசவு வேலை செய்வதற்கும், கடின மரக்கட்டைகளை விட சுமாரான படுக்கைகளில் படுக்கவும், தயாராக இல்லை. மேலும் வருடத்தின் பெரும் பாகத்தில், ஒருசந்தி உபவாசம் இருப்பதையும், காலம் முழுவதும் சுத்தபோசனம் அனுசரிப்பதையும், முரட்டுக் கம்பளி உடுப்புகளை அணிந்துகொள்ளவும், தங்களுக்கென்று யாதொன்றையும் வைத்துக்கொள்ளாமல் அட்ட தரித்திரத்தைக் கடைப்பிடிக்கவும் இவர்கள் விரும்பவில்லை . நடுஇரவிலும் மற்ற அநேக ஒத்துவராத நேரங்களிலும் தேவாலயத்துக்கு வந்து தேவகீர்த்தனை ஜெபங்களை ஜெபிப்பதும் இவர்களுக்குக் கடினமானதும் கடைபிடிக்கமுடியாததுமான துறவற ஒழுங்காக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு, தங்களுடைய வீட்டிற்கு ஒருபோதும் போகக்கூடாது என்பது, இவர்களால் அனுசரிக்கவே முடியாத சபைவிதியாக இருந்தது.

அம்மடத்தின் தாயார் சங்.யூஜீனா, "இப்புதிய துறவற சபையின் விதிமுறைகளும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதன் ஒழுங்குமுறைகள் சில துறவற சபைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அவை நமது மடத்திற்கு ஏற்றதல்ல. நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட” என்று கூறினார்கள்.

உடனே, மற்ற வயோதிக கன்னியாஸ்திரிகள் ”அவை நடைமுறைக்கு ஏற்புடையாதவை மட்டுமல்ல. விவேகமற்ற விதத்தில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் " என்றனர்.

இதையெல்லாம் கேள்வியுற்ற அர்ச்.சாமிநாதர், இக்கன்னியரை சந்தித்து அவர்களுக்கு, தபசினாலும், ஜெபத்தினாலும் திருச்சபையில் விளையும் உன்னத நன்மைகளைப் பற்றி உணர்த்த விரும்பினார். அம்மடத்துக் கன்னியர்களை சந்திக்க செல்வதற்கு முன், அநேக நாட்கள் அர்ச்.சாமிநாதர் நீண்ட ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டிருந்தார். அதன் பின் அவர்களை சந்தித்தபோது, சாமிநாதர், சங்.யூஜினா தாயார் மற்றும் அம்மடத்தின் கன்னியர் அனைவரையும் கூட்டி அமரச் செய்து, அவர்களிடம், அநேக துறவறமடங்களில் நிலவும் துர்மாதிரிகைகள் அகலும்படியாக, ரோமாபுரியிலுள்ள அனைத்து கன்னியர்மடங்களிலும் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தைப் பற்றி விளக்கினார். துறவற ஜீவிய அந்தஸ்தின் முக்கிய நோக்கமும், சர்வேசுரன் அவர்களிடம் ஆசிக்கும் உன்னத நிலைமையுமான உத்தம சாங்கோபாங்க ஜீவியத்தினைக் கைப்பற்ற முடியும் என்றும் மிகத்தெளிவாக அவர்களுக்கு விவரித்தார்.

இருப்பினும், மடத்துத் தாயாரும்மற்ற கன்னியர்களும் அர்ச்சிஷ்டவரின் பிரசங்கத்தினால் யாதொரு பாதிப்புமின்றி, "சுவாமி! நீங்கள் எங்களிடம் கேட்பது, முடியாத காரியம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக அந்தப் படத்தை முன்னிட்டு நாங்கள் இம்மடத்தை விட்டு எங்கும் வரமுடியாது" என்று கூறினார்கள்.

சாமிநாதர், "படமா. அது என்ன? என்றுவினவினார்.

”சுவாமி, அது தான், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படம். அது எங்களுடைய மடத்தின் மிக முக்கிய பொக்கிஷம். அதைவிட்டு நாங்கள் வேறு எங்கும் பிரிந்து செல்ல முடியாது” என்று தாயார் கூறினார்கள்.

சாமிநாதர், "நீங்கள் அதையும் எடுத்துக்கொண்டு அர்ச். சிக்கஸ்துஸ் மடத்திற்கு வரலாமே. அதற்கு எந்த தடையமில்லையே" என்றார்.

”சுவாமி. நீங்கள் இதைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த அற்புதமான தேவமாதாவின் படம் இந்த இடத்திலுள்ள இம்மடத்திற்குதான் சொந்தமாக இருக்கிறது. இதை வேறு எங்கும் எடுத்துச்செல்லமுடியாது ..." என்று தாயார் தொடர்ந்தார்கள்.


அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39

 அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39 


அர்ச்.சாமிநாதருடைய ஞான அறிவுரையை தாழ்ச்சிநிறை இருதயத்துடன் கேட்டதினாலேயே டயானா அர்ச்சிஷ்ட ஜீவியத்தை எட்டினாள். சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்லும் வரைக்கும் சில வாரங்கள் பொலோஞாவில் சாமிநாதர் தங்கியிருந்தார். அப்போது டயானா அடிக்கடி அவரை சந்திப்பாள். அவளுக்குக் கிடைத்த தேவவரப்ரசாதத்தின் பாக்கியமான அந்தஸ்தைப் பற்றி அர்ச்சிஷ்டவர் விவரித்து அவளை உணரவைத்தார். தன் இருதயத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்ற நினைவு அவளுடைய ஆத்துமத்தில் துாண்டப்பட்டது, அவளுடைய சொந்த பேறுபலன்களாலல்ல என்பதை அவளுக்கு எடுத்துரைத்தார். அப்போதிலிருந்து, இவ்வுலகிலுள்ள மற்ற சிருஷ்டிகளையும் சர்வேசுரனுக்காக சிநேகிக்கலானாள். இவ்வாறாக, மற்ற சிருஷ்டிகளின் நிலையற்ற தன்மையைக் குறித்து ஏற்படும் துயரத்திலிருந்து விடுபட்டாள். ஒருநாள், டயானாவின் எதிர்காலத்தைப்பற்றி, தாம் கண்ட காட்சியினிமித்தம், அர்ச்.சாமிநாதர், வேறொருவகையான தேவவரப்ரசாதத்தைப் பற்றி டயானாவிடம் ”மகளே! துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் கேட்பது பற்றி ஒரு சிலரே நினைக்கிறார்கள். எவ்வளவு பரிதாபமான நிலைமை இது! துன்பத்தை மக்கள் மிகப் பயங்கரமானதொன்றாக, இவ்வாழ்வில் தாங்கமுடியாத ஒன்றாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றிய நினைவே மிகப் பயங்கரமானதொன்றாக இருக்கிறது. உனக்கு அதைப்பற்றி நன்கு தெரியும் என்று நம்புகிறேன். துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் நீ ஏன் மன்றாடக் கூடாது?' என்று கூறினார். ஆம். சுவாமி. எனக்கு அதைப்பற்றித் தெரியும். ஆனால் அந்நினைவே என்னை அச்சுறுத்துகிறது” என்று கூறி விட்டு மௌனமானாள். ஏனெனில், அர்ச்சிஷ்டதனத்தை சிறுவயதிலிருந்தே விரும்பினாலும், துன்பத்தை நேசிக்கும் மனதையே அப்பரிசுத்ததனம் பெரிதும் சார்ந்திருக்கிறது என்று அறிந்ததால், அவளுடைய அர்ச்சிஷ்டவளாகும் எண்ணத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதை அவளுடைய முகத்திலிருந்தே கண்டறிந்த அர்ச்.சாமிநாதர், அவளிடம் துன்பம் என்னும் பரிசுத்த சிலுவையின் மகிமைகளையும் வல்லமையையும் பற்றி பிரசங்கித்தார். ”பிள்ளையே! கவனி. இவ்வுலகில் துன்பம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் கிறிஸ்துவர்களாகிய நாம் அத்துன்பத்தை சிநேக தேவனாகிய திவ்ய இரட்சகருக்காக பொறுமையுடன் ஏற்போமேயானால், அத்துன்பம் நமது ஆத்துமத்தை சர்வேசுரனிடம் சேர்க்கும் நமது ஆத்தும் இரட்சணியத்தின் உன்னத சாதனமாக மாறும். நம் ஆண்டவர் நமக்காகப் பட்ட பாடுகளையும் அவர் நமக்காக சிலுவை மரத்தில் தமது திவ்ய இரத்தமெல்லாம் சிந்தி மரித்ததையும் எப்போதும் நம் இருதயத்தில் பதிப்போமேயானால் நமது ஜீவியத்தில் நாம் சந்திக்கும் எத்தகைய துன்பமும் நமக்கு தேவவரப்ரசாதத்தைப் பெற்றுதரும் நற்கொடையாக மாறிவிடும். எனவே என் பிரிய மகளே இதைப்பற்றி பயப்படாதே. இருதயத்தில் கோழையாக இருப்பவர்கள் கூட துன்பத்தை சிநேகிக்கக் கற்றுக் கொள்ள முடியும். சர்வேசுரனுடைய உதவியை ஒவ்வொரு நாளும் அதற்காக மன்ாடினால் எல்லாரும் துன்பத்தை நேசிக்க முடியும்"

இதைக் கேட்ட டயானாவும் இருதயத்தில் புத்துணர்வை அடைந்தவளாக 18 வயது வரை கொண்டிருந்த பயமெல்லாம் நீங்கியவளாக, தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், ஆண்டவருடைய சிநேகத்திற்காகவும், சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், துன்பத்தை நேசிக்க துவக்கினாள். அர்ச். சாமிநாதர், இவ்வாறாக, டயானா பரிசுத்ததனத்தின் பாதையில் தனது அர்ச்சிஷ்ட ஜீவியத்தை துவக்கியதையும், அப்பாதையில் அவளைப் பின்பற்றி அநேக ஆத்துமங்கள் தங்களுடைய நேச இரட்சகரை உத்தமமாக சிநேகித்து சேவிப்பார்கள் என்பதையும் கண்டு அகமகிழ்ந்தார். அந்த வருடம் கிறிஸ்துமஸ் திருநாளுக்குப் பிறகு உடனே சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்கு செல்லும்படி கூறிவிட்டு, சாமிநாதரும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக ரோமாபுரிக்கு சென்றார். ரோமிலுள்ள அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு 18 மாதங்கள் கழித்து வந்த சாமிநாதர் அங்குள்ள துறவிகள் அநேக நன்மைகளைச் செய்து அருமையாக உழைத்திருப்பதைக் கண்டார். அங்கு தற்போது துறவிகளின் எண்ணிக்கை 100க்கு மேலாக உயர்ந்திருப்பதையும் கண்டார். மேலும் சிக்ஸ்துஸ் மடத்தின் துறவிகளின் அயராத உழைப்பினால் ரோம் நகர மக்கள் தேவமாதாவின் மேல் அதிக பக்திபற்றுதலுடன் திகழ்வதையும் கண்டு மகிழ்வுற்றார். அந்நகர மக்களெல்லாம் தினமும் தவறாமல் தேவமாதாவின் சங்கீதமாலை என்ற ஜெபமாலையை தவறாமல் பக்தியுடன் ஜெபித்து வந்தனர். இதனால் பரலோக இராக்கினியான தேவமாதாமீது அவர்களுக்கு இருந்த சிநேகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

தமது சகோதர துறவிகள் மேல் சிலர் அவதுாறு சொல்வதையும் அர்ச்.சாமிநாதர் கேள்வியுற்றார். சகோ. டான்கிரட் , ”சுவாமி, சில கன்னியாஸ்திரிகள் தான் இதற்கு காரணம். அவர்கள் இன்னும் நம்மையும் நமது வேதபோதக அலுவலையும் சந்தேகத்துடன் கவனித்து வருகின்றனர்" என்றார். "ஆம். சுவாமி. குறிப்பாக, தைபர் நதியின் குறுக்கில் உள்ள செயிண்ட்மேரி மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளே நம்மை அச்சத்துடன் பார்க்கிறார்கள்" என்று சகோ.ஆல்பர்ட் கூறினார். 2 வருடங்களுக்கு முன் ஹொனோரியுஸ் பாப்பரசர் ரோமிலுள்ள கன்னியர் மடங்களையெல்லாம் ஒன்றிணைக்கும் பணியை அர்ச்.சாமிநாதரிடம் ஒப்படைத்தார். புரோயிலுள்ள சாமிநாதருடைய கன்னியர்களின் மடத்தின் சபை ஒழுங்கைப் பின்பற்றி, அக்கன்னியர் சபைகளை புதுப்பித்து ஒரே துறவற சபையாக மாற்ற வேண்டும் என்பதே அவ்வலுவல். அதனை முன்னிட்டே பரிசுத்த பாப்பரசர் சாமிநாதருக்கு அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலயத்தையும் மடத்தையும் கொடுத்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முயல்வாரேயானால், பெரும் எதிர்ப்பைக்கொடுப்பதற்கு இக்கன்னியர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதை அர்ச்.சாமிநாதர் தம் சபைத் துறவிகள் வழியாக அறிந்து கொண்டார்.


வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38 


அர்ச். சாமிநாதரை சந்தித்த டயானா , அவரிடம், தான் சகோ. ரெஜினால்டுவின்ஞானதியானபிரசங்கங்களினால் சர்வேசுரன்பால் கவர்ந்திழுக்கப்பட்டதைப் பற்றி தெரிவித்தாள். மேலும் இதற்கு, தனது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தாள். உத்தம கத்தோலிக்க ஜீவியத்தை முன்னிட்டு, தான் அவருடைய கன்னியர் சபையில் சேர விரும்புவதாகவும், அதற்கு அவர் உதவ வேண்டுமென்றும், அர்ச். சாமிநாதரிடம் விண்ணப்பித்தாள். சாமிநாதர் அவளிடம், "குழந்தையே! நீவிசேஷ விதமாக சர்வேசுரனை சேவிக்க விரும்பவதை, உன் வீட்டில் இருந்து கொண்டே செய்ய முடியும். இது, உனக்கு விளங்கும் என்று நம்புகிறேன்" என்றார். "ஆம் சுவாமி. என் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசிக்கிறேன். 

ஆனால், அது மட்டும் பற்றாது. நான் எனது நேசத்தை மட்டுமல்லாமல், என்னிடமுள்ள அனைத்தையும், இதுவரைக்கும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இனி எனக்கு சொந்தமாகப்போகும் யாவற்றையும் நம் நேச ஆண்டவருக்குக் காணிக்கையாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்வது போல, துறவற ஜீவிய அந்தஸ்துடன் சர்வேசுரனுக்கு ஊழியம் புரிய ஆசிக்கிறேன்" என்று டயானா கூறினாள். சாமிநாதர், அவளிடம், "மகளே! ஞான காரியங்களில் எப்பொழுதும் நிதானமாகவே முடிவு எடுக்க வேண்டும். தற்பொழுது, உன் இருதயத்தை அர்ப்பணிப்பதையே, ஆண்டவர் விரும்புவார். உத்தமமான துறவற அந்தஸ்திற்கு ஏற்ற காணிக்கைகளை நம் ஆண்டவருக்கு, நீ பிறகு அர்ப்பணிக்கலாம்'' என்றார். அதற்கு டயானாவும் சம்மதித்தாள். அதன்படி, அர்ச்.சாமிநாதர் தேர்ந்தெடுத்த ஒரு நாளில் அர்ச். நிக்ககோலாஸ் தேவாலயத்திற்கு டயானா வந்து பெரிய பீடத்திற்கு முன் முழந்தாளிட்டாள். அங்கு சகோ.ரெஜினால்டுவும், சகோ.குவாலா, சகோ.ருடால்ஃப் முன்னிலையில், டயானா , தன் நேச ஆண்டவருக்கு தன்னை முழுவதும் நித்தியத்திற்குமாக அர்ப்பணிக்கும் ஜெபத்தை ஜெபித்து துறவற வார்த்தைப்பாடு கொடுத்தாள். அர்ச். சாமிநாதருடைய இருதயம் அகமகிழ்வால், திடீரென்று மேலே வெகு தூரம் தாவியது. அவருடைய புதுமைமிகு தேவவரப்ரசாத சலுகையினால், தனக்கு முன்னால், முழங்காலில் இருக்கும் இச்சிறுபெண்ணிற்கு நிகழவிருக்கும், எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார். அவை அதிர்ச்சிக்குரியவை களாகவும், அதேநேரத்தில் ஆறுதலளிப்பவையாகவும் இருந்தன. அதன்பிரகாரம், டயானா , வார்த்தைப்பாடு கொடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாக மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாள். பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய கன்னியர்மடம் நிறுவப்படும் என்று காத்திருக்கும் வேளையில் தன் வீட்டாருக்கு தெரியாமல், பொலோஞாநகரின் எல்லைப்புறத்திலிருக்கும் ரொன்சானோ என்ற ஊரிலுள்ள அர்ச். அகுஸ்தினாருடைய கன்னியர் சபைமடத்தில் சேர்ந்தாள்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளை வீட்டிற்கு இழுத்துவந்தனர். வீட்டிற்கு எதிரான அவளுடைய போராட்டத்தை நிரந்தரமாக முடமாக்கிவிட்டனர். இருப்பினும், அவள் தனது வார்த்தைப்பாட்டின்படி, இவ்வுலக சிருஷ்டிகளிடமிருந்து விலகி, தன் இருதயத்தை தம் சிநேக தேவனான திவ்ய இரட்சகரிடமே நிலைத்திருப்பதில் பிரமாணிக்கமாக இருந்தாள். இறுதியில் தனது குடும்பத்தினருடைய உதவியினாலேயே பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய முதல் கன்னியர்மடத்தை நிறுவுவதில் டயானா வெற்றி பெற்றாள். விரைவில், சகோ.டயானா உத்தம சாங்கோபாங்கத்தில் வெகுவாய் உயர்ந்து, அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தாள். அதன்படி, அர்ச்சிஷ்டவளாக மரித்தபிறகு, அர்ச்.சாமிநாத சபைகுருக்கள், கன்னியர், மூன்றாம் சபையினர் அனைவரும், "முத்தி பேறுபெற்ற டயானாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று மகிழ்ச்சியுடன் அவளிடம் ஜெபிக்கும்படியாக, விரைவிலேயே, அவள் பீடத்திற்கு உயர்த்தப்பட்டாள்.


வியாழன், 3 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37



சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார்.

உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங் களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றி யெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர்.

இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர் களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங் களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவ சிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள்.

அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 36


சகோ.ரெஜினால்டு, தமது சபை அதிபர் தமக்கு அளித்த மடத்துத் தலைவர் பதவியைக் குறித்து, துவக்கத்தில் கலங்கினார். பரலோக உதவி கிடைக்கும்படியாக தேவமாதாவிடம் மன்றாடினார். ஆனால், உடனடியாக யாதொரு பரலோக உதவியும் கிடைக்காதது போல தோன்றியது. அப்போது, ரெஜினால்டு, தான் ஒரு துறவறசபைத் துறவி என்றும், சபையில் நுழையும் போது கொடுத்த பரிசுத்த கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டிற்கேற்ப, அதிபர் சுவாமியார் தமக்களித்த அலுவலை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, முழு உற்சாகத்துடனும் பிரமாணிக்கத்துடனும், நிறைவேற்றுவதில் ஈடுபடலானார்.

“அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு கொஞ்சம் பேர் மட்டுமே வந்தாலும் போதும். அந்த சிலரில் ஒருவரையாவது, தமது முன்மாதிரிகையுடன் கூடிய, பரிசுத்த துறவற ஜீவியத்தினாலும், உன்னதமான ஞானதியான பிரசங்கங்களாலும், உத்தம அர்ச்சிஷ்டதனத்தின் பரிசுத்த அந்தஸ்திற்கு உயர்த்த முடிந்தால், அதுவே தமக்குக் கொடுக்கப்பட்ட அலுவலுக்கான வெற்றி. ஓ மகா சிநேகமான தேவமாதாவே! உங்களைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிப்பேன். அதில் முக்கியமாக, உங்களை நோக்கி வாழ்த்தி மன்றாடும் அந்த ஜெபத்தை, எங்களுடைய அதிபர் சுவாமியாரின் உதடுகளில் எப்பொழுதும் அடிக்கடி உச்சரிக்கப்படும், அருள்நிறை மந்திரத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று ரெஜினால்டு எண்ணி தம்மையே உற்சாகப்படுத்திக் கொண்டார். பரலோகத்தின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட, ரெஜினால்டுவின் இந்த ஞானமிக்க திர்மானம், மிகுந்த ஞானநன்மைகளை விளைவித்தது. தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி சகோ.ரெஜினால்டு செய்த ஞானதியான பிரசங்கங்கள், எளிதாகவும், சுருக்கமாகவும் இருந்தபோதிலும், கோவிலுக்கு சிறு கூட்டமாக வந்த மக்களின் இருதயங்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் தங்களுடைய ஜிவியத்தை பரிசுத்தமும் உத்தமுமான கத்தோலிக்க ஜிவியமாக மாற்றினர். சகோ.ரெஜினால்டுவின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம் குறுகிய காலத்திற்குள்ளாகவே, நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்தது. “வெகு காலத்திற்குப்பிறகு, இப்பொழுது பொலோஞாவில் மிகச்சிறந்த பிரசங்கியார், நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் தான் சகோ.ரெஜினால்டு. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியவில்லை. அர்ச்.சின்னப்பரே, அல்லது அர்ச்.எலியாஸ் திர்க்கதரிசியே உலகிற்கு திரும்ப வந்துவிட்டார், என்று எண்ணத் தோன்றுகிறது”,  “அவர் உண்மையாகவே தேவமாதாவை நேரில் பார்த்தவர்போல பிரசங்கம் செய்கிறார்”, “ஆம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர் ரோமாபுரியில் தங்கியிருந்தபோது, தேவமாதாவே நேரில் வந்து அவரை திராதக் காய்ச்சலிலிருந்து புதுமையாகக் குணப்படுத்தினார்கள்”, “அவர் இப்புதுமையைப் பற்றிக் கூறும்போது, அழுதுவிடுகிறார்” என்றெல்லாம்மக்கள் பேசினர். மோட்ச இராக்கினி, ரெஜினால்டுவிற்கு அளித்த வெண்கம்பளி உத்தரியத்தைப் பற்றியும், புதுமையாக அவரை குணப்படுத்தியதை பற்றியும் செய்தி அனேக இடங்களுக்குப் பரவியது.

அதனால் அர்ச்.சாமிநாதருடைய துறவற சபையில் சேர்வதற்கான ஆர்வம், இளைஞர்களிடையே மாபெரும் அளவிற்கு அதிகரித்தது. அர்ச்.சாமிநாதர் சகோ.ரெஜினால்டுவைப் பற்றிக் கண்ட கனவு நனவாகிறதுபோல, சில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விநோதப்பிரியத்தினால் உந்தப்பட்டவர்களாக, அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு வந்தனர். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும், பாரிஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான, ரெஜினால்டுவின் மிகுந்த கல்வி ஞானத்தைப் பற்றி தங்கள் வகுப்பறைகளில் அதிகம் கேள்விப்பட்ட இம்மாணவர்கள், இப்பொழுது இம்மடத்தில் கறுப்பு வௌளை துறவற உடையுடன் காணப்படும் சகோ.ரெஜினால்டுவும் அப்பேராசிரியரும் ஒருவர்தானா, என்றெண்ணி வியந்தனர்.