Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 10 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 44

 

அர்ச். ஹையசிந்து, போலந்து நாட்டின் வடபகுதியில் உள்ள சிலேசியா என்ற பகுதியில் உயர்ந்த ஓட்ரோவாட்ஸ் குடும்பத்தில் 1185ம் வருடம் பிறந்தார். அவருடைய மாமாவான வந்.ஐவோ மேற்றிராணியாரால் தமது சகோதரரான முத். செஸ்லாஸ் சுவாமியாருடன், உத்தம குருவாக உருவாகப் பெற்றார். அர்ச். சாமிநாதரை மேற்கூறிய நிகழ்வின்போது சந்தித்து, அவருடைய சபையில் அவரால் பயிற்றுவிக்கப்பட்டபிறகு, ஹையசிந்து, வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேதபோதக அலுவலில் ஈடுபடலானார். அவருடைய ஜீவியம் முழுவதும் தொடர்ந்து நிறைவேறிய அனேக புதுமைகளைக் கொண்டிருந்தது. டென்மார்க், ப்ரஷ்யா , முதல் கிரீஸ் வரையிலுள்ள நாடுகளுக்கு சென்று வேதத்தைப் போதித்தார். ரஷ்யா, டார்டரி முதல், சீனா, திபெத் வரைக்கும் கால்நடையாகவே சென்று சத்திய வேதத்தைப் பிரசங்கித்து வந்தார். இந்நாடுகளின் காட்டுமிராண்டித்தனமுள்ள மக்களிடமிருந்தும், அங்கு நிலவிய உயிரை மாய்க்கும் கொடிய சீதோஷ்ண நிலைக்கும் தப்பி, அங்கு உன்னத வேத உண்மைகளைப் போதித்துவிட்டு அவர் உயிருடன் திரும்பியதே மாபெரும் புதுமையாகும். அவர் வேதபோதக அலுவலில் ஈடுபட்ட ஆரம்பகாலத்தில், தேவமாதா அவருக்குத் தோன்றி, அவர் கேட்கும் எதையும் மறுக்காமல் அளிப்பதாக வாக்களித்தார்கள். அதே போல், அவருடைய ஆன்ம இரட்சணிய அலுவலானது மிகுந்த பலனுள்ளதாக திகழ்ந்தது. திரளான ஆத்துமங்களை நேச ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார். அநேக நோயாளிகளை குணப்படுத்தினார். இரு பிறவிக் குருடர்களுக்குக் கண்பார்வை அளித்தார். பல சமயங்களில், இவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார். ஒரு சமயம் கியோனியா நகரத்தில் இருந்தபோது, தார்தாரியப் படைவீரர்களால் பங்கம் வராதபடிக்கு, தம்முடைய கோயிலில் ஸ்தாபித்திருந்த தேவநற்கருணையையும் ஆளுயர தேவமாதா சுரூபத்தையும் மலரைப்போல எளிதாய் சுமந்து சென்றதே மிகப்பெரிய புதுமை. இதுவே அர்ச். ஹையசிந்து தேவநற்கருணையிடமும், தேவமாதாவிடமும் கொண்டிருந்த ஆழ்ந்த நெருக்கமான பக்தியின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தேவமாதா , தமது மோட்சாரோபனத்தின் திருநாளின்போது, அர்ச். ஹையசிந்து மரிப்பார் என்பதை அவருக்கு முன்னறிவித்தார்கள். அவர் வேதம் போதித்த நாடுகளிலெல்லாம், அர்ச்.ஹையசிந்து மேல் பக்தி இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கிறது. அர்ச். சாமிநாதர் சபையின் ஆரம்பகாலத்திலிருந்தே, அர்ச். ஹையசிந்து, அச்சபையின் மகிமையாக விளங்குகிறார்.

ஒருசமயம், ஸ்பெயின் நாட்டில் குவாடல் .பேரா என்ற இடத்தில், அர்ச். சாமிநாதர் சபைத் துறவிகள் சிலர், அர்ச்சிஷ்டவரை விட்டுச் செல்லும்படியாக, பசாசு அவர்களை சோதித்தது. இதை, ஒரு பறவைநாகம் அந்த துறவிகளை விழுங்குவதுபோல, ஒரு பரலோகக் காட்சியினால், அர்ச். சாமிநாதர் முன்னறிந்திருந்தார். உடனே இக்காட்சியின் விளக்கத்தை தமது சீடர்களுக்கு விளக்கி, சகதுறவிகளை தமது வலையில் இழுக்கப்பார்க்கும், பசாசின் சூழ்ச்சி தந்திரத்தைப் பற்றி எச்சரித்து, அவர்களை தைரியத்துடன் பசாசை எதிர்த்து ஜெபதவபரித்தியாக ஜீவியத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார். பசாசுடன் ஒத்துழையாதபோது, அதனால் யாரையும் தன் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்றும் உபதேசித்தார். இருப்பினும், சகோ.ஆதாம் மற்றும் இரு துறவற சகோதரர்களைத் தவிர மற்ற அநேக துறவிகள், பசாசின் சோதனைக்கு உட்பட்டவர்களாக அர்ச். சாமிநாதரை விட்டு விட்டுச்சென்றனர். இதைக்கண்டு மனந்தளராமல், அவர்கள் மேல் மிகுந்த இரக்கமுடையவராக , உடனே, துன்பநேரத்தில் தன் வழக்கப்படி, அர்ச். சாமிநாதர், தேவாலயத்தில் திவ்யாசற்பிரசாதநாதர் முன்பாக, பரலோக உதவி கேட்டு, நீண்ட ஜெபத்தில் ஈடுபட்டார். அவருடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் செவிசாய்த்தார். விரைவிலேயே, தேவவரப்ரசாத உதவியினால், பசாசின் தந்திரத்தில் விழுந்து அவரை விட்டுச் சென்ற அனைவரும் மீண்டும் சாமிநாதரிடம் திரும்ப வந்து சேர்ந்தனர். ஒருமுறை, துலோஸ் நகரிலிருந்து பாரீஸுக்கு செல்லும் வழியில், அர்ச். சாமிநாதர், ரோகாமடோரிலுள்ள தேவமாதாவின் தேவாலயத்தில் தங்கி இரவு முழுதும் ஜெபத்தில் ஈடுபட்டார். அவருடன் பக்திமிக்க சகதுறவி, சகோ. பெட்ரன்டு சென்றிருந்தார். இவரே பிற்காலத்தில் புராவன் நகரத்தின் மடத்திற்கு முதல் அதிபராக பொறுப்பேற்றவர். அடுத்தநாள் காலையில், அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜெர்மனியிலிருந்து வந்த தவயாத்ரீகர் குழு ஒன்றை வழியில், சந்தித்தனர். அவர்கள் மிகுந்த பக்தி பற்றுதலுடன் சங்கீதங்களையும், பிரார்த்தனைகளையும் பாடிச் சென்றனர். ஒரு கிராமத்தை அடைந்ததும், ஜெர்மானியர்கள், அர்ச்.சாமிநாதரையும் சகோ. பெட்ரன்டையும் தங்களுடன் உணவு அருந்தும்படி அழைத்தனர். இவ்வாறாக அக்குழுவினருடன் தொடர்ந்து 4 நாட்கள் அர்ச். சாமிநாதர் தமது சக துறவியுடன் பாரீஸ் நகரை நோக்கி பயணம் செய்தனர். ஒருநாள் சாமிநாதர், "சகோ. பெட்ரன்டு, அவர்கள் அளித்த உணவை நாம் உண்டோம். ஆனால், அதற்குக் கைம்மாறாக அவர்களுக்கு ஒரு ஞான உணவையும் நாம் கொடுக்கவில்லை. உமக்கும் சம்மதம் என்றால், நாம் முழங்காலில் இருந்து, ஆண்டவரிடம் நமக்கு அவர்களுடைய ஜெர்மானிய மொழி புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அப்பொழுது நாம் நமது நேச ஆண்டவரைப் பற்றி அவர்களிடம் போதிக்கலாம்" என்று கூறி அதன்படியே அவர்கள் இருவரும் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள். உடனே, ஜெர்மானிய தயவயாத்ரீகர்களே ஆச்சரியப்படும்படியாக, சரளமாக இருவரும் ஜெர்மானிய மொழியில் உரையாடினர். தவயாத்ரீகர்களிடையே, ஆண்டவரைப்பற்றிய ஞானதியானப்பிரசங்கங்களை நிகழ்த்திக்கொண்டே அடுத்த நான்கு நாட்கள், ஆர்லியன்ஸ் நகரை அடையும் வரை தொடர்ந்து பயணம் செய்தனர். பிறகு, ஜெர்மானிய தவயாத்ரீகர்கள் அங்கிருந்து சார்ட்ரஸிலுள்ள தேவமாதாவின் திருயாத்திரைஸ்தலத்திற்கு செல்ல விரும்புவதாகக் கூறி அர்ச்.சாமிநாதரிடம் விடைபெற்றுச்சென்றனர். தங்களுக்காக ஜெபிக்கும்படி அர்ச்சிஷ்டவரிடம் விண்ணப்பித்துச் சென்றனர். சாமிநாதர் தமது சீடருடன் பாரீஸுக்குத் தொடர்ந்து பயணித்தார். அடுத்தநாள், சாமிநாதர், சகோ. பெட்ரன்டுவிடம், "சகோதரரே! நாம் இதோ , பாரீஸுக்குள் நுழையப்போகிறோம். இப்புதுமையைப் பற்றி நமது சகோதரர்கள் கேள்விப்பட்டால், பாவிகளாகிய நம்மை அர்ச்சிஷ்டவர்கள் என்று எண்ணுவார்கள். மற்ற மக்கள் இதை அறிய நேரிட்டால், நாமும் வீண்மகிமைக்கு உட்பட நேரிடும். எனவே, இதை நான் மரிக்கும் வரைக்கும் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று உமக்குக் கட்டளையிடுகிறேன்'' என்று கூறினார். அதன்படியே சகோ. பெட்ரன்டுவும், பரிசுத்த தந்தை சாமிநாதர் இறந்த பிறகே, இப்புதுமை சம்பவத்தைப் பற்றி மற்ற துறவிகளுக்கு வெளிப்படுத்தினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக