Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42 

"ஓ சமுத்திரத்தின் நட்சத்திரமே! வாழ்க!சர்வேசுரனுடைய பூசிக்கப்பட்ட பரிசுத்த மாதாவே! நித்தியமும் பரிசுத்த கன்னிகையே, வாழ்க! பரலோகத்தின் பேரின்ப பாக்கியமான வாசலே! வாழ்க! கபிரியேல் என்கிற சம்மனசினுடைய வாக்கிலே நின்று புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்தில் நிலை நிறுத்தும். ஆக்கினைக்குப் பாத்திரமானவர்களுடைய கட்டுகளை அவிழும். குருடருக்குப் பிரகாசத்தைக் கொடுத்தருளும். எங்கள் பொல்லாப்புக் களைத் தள்ளும். சகல நன்மைகளும் எங்களுக்கு வர மன்றாடும் " என்ற அர்ச். சாமிநாதர் மிகவும் விரும்பிய, தேவமாதாவுக்குத் தோத்திரமான இனிய பாடலை, மிக நேர்த்தியாக ஒரே குரலில், பாடியபடி, செயிண்ட் மேரி கன்னியர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புத படத்தை சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்துக்குள் கொண்டு வந்தனர். 

இந்தக் கன்னியாஸ்திரிகள் அனைவரையும் அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் மிகுந்த மகிழ்வுடன் அர்ச்.சாமிநாதர் வரவேற்றார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபைவிதிமுறைகளைப் பற்றி அவர்களிடம் விளக்குவதற்காக சாமிநாதர் அவர்களை மடத்தின் அருகிலுள்ள அர்ச்.சிக்ஸ்துஸ் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் அமரச்செய்தார். சுற்றுப்பிரகாரத்தில் வந்த கர்தினால்மார்கள் மேற்றிராணியார்கள் மற்றும் குருக்கள் அனைவரும் அந்தப் பொதுசபைக் கூட்டத்திற்காக அமர்ந்தனர். கூட்டம் முடிந்ததும், அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்காக ஒரு திவ்ய பலிபூசை நிறைவேற்றுவார். அதன்பிறகு கன்னியர்கள் அனைவரும் பவனியாக தேவாலயத்தின் மைதானம் வழியாக சென்று, அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்திற்கு செல்லவேண்டும் என்று, சாமிநாதர் திட்டமிட்டிருந்தார். 

ஆனால், புதிய துறவற சபைவிதிமுறைகளைப் பற்றி, அர்ச். சாமிநாதர் பேச துவக்குமுன்னே , வளாகத்தில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒரு மனிதன் ஓடிவந்து சாமிநாதரிடம், கர்தினால் ஸ்டீபனின் சகோதரனின் மகனான நெப்போலியன் ஆர்சினி என்பவன், குதிரையிலிருந்து கீழே விழுந்து, கழுத்து முறிபட்டுக் கிடக்கிறான், என்று கூறினான். உடனே கர்தினால், வந்.ஸ்டீபன், "பையனின் உயிருக்கு ஆபத்தில்லையே?" என்று வினவினார். ''ஆண்டவரே, அவன் விழுந்த இடத்திலேயே இறந்து விட்டான்'' என்று வந்தவன் துயரத்துடன் கூறினான். இதைக் கேட்ட கர்தினால் மிகவும் துயரத்துடன், தன் இருக்கையில் சாய்ந்தார். கர்தினாலின் துயரத்தைக் கண்ட அர்ச். சாமிநாதர், தமது சபை சீடர் ஒருவர் மூலமாக தீர்த்தத்தை வருவித்து, வருத்ததில் ஆழ்ந்திருந்த தமது ஞான ஆலோசகரான கர்தினால் மீது, தீர்த்தத்தை தெளித்துவிட்டு, குதிரையிலிருந்து பையன் கீழே விழுந்த இடத்திற்கு விரைந்து சென்றார். சகோ.டான்கிரட் மற்ற சகோதரர்கள் தங்களுடைய சபை அதிபரிடம், தாங்களும் கூட வருவதற்கு அனுமதி கோரினர். 

அதற்கு, அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் உடனே திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு பீடத்தை தயார் செய்யும்படி பணித்தார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபையின் பொதுக்கூட்டத்தை ஒத்தி வைத்தார். அதைவிட மிக முக்கியமான காரியத்தைக் கவனிக்கச் சென்றார். உயிரற்ற நெப்போலியனுடைய உடலை சிற்றாலய பீடத்தின் அருகிலுள்ள ஒரு அறையில் கிடத்தினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர் திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்காக பீடத்திற்குச் சென்றார். எப்பொழுதும் திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன் நிறைவேற்றும் சாமிநாதர், அன்று எவ்வளவு அதிக பக்தி உருக்கத்துடன் பூசையை நிறைவேற்றினார் என்றால், அவருடைய முகம் மாபெரும் ஒளியால் வசீகரம் பெற்று, மாட்சியுடன் துலங்கிற்று. பார்ப்பவருடைய இருதயங்களில் தெய்வபயமும் உத்தமமான பக்தியும் துண்டப்பெற்றன. நடுப்பூசையின்போது, உள்ளங்கை அகலத்திற்கு தரைக்கு மேலே அர்ச்.சாமிநாதருடைய பாதங்கள் உயர எழும்பியிருந்தன. அவருடைய முகம் சூரியனைப்போல ஒளி வீசிக் கொண்டிருந்தது. 

அவர் திவ்ய பலிபூசை நிறைவேற்றிய நேரம் முழுவதும், ஒரு சத்தமும் இல்லை . எதுவும் , யாரும் அசையவில்லை . திவ்ய பலிபூசை முடிந்தபிறகும் அங்கிருந்த அனைவரும் வெகுநேரத்திற்கு கல்லைப்போல, பரலோகக் காட்சியால் பரவசமானவர்களைப் போல, அசைவின்றி முழங்காலில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். திவ்ய பலிபூசை முடிந்தபிறகு, அர்ச். சாமிநாதர் யாதொன்றும் நிகழாததுபோல , அமைதியாக ,அனைவரையும் நெப்போலியனுடைய உடலைக் கிடத்தியிருந்த அறைக்கு, தம்முடன் வரும்படி அழைத்தார். அங்கிருந்த கூட்டத்தினர், தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே, அவர் கூறுவதற்குக் கீழ்ப்படிந்தனர். பிறகு, அர்ச். சாமிநாதர் இறந்து போயிருந்த, நெப்போலியனுடைய விறைத்துப் போயிருந்த கைகால்களை, நேராக வைத்து ஒழுங்குபடுத்தினார். பிறகு, அவர் ஆழ்ந்த ஜெபத்தில் மூழ்கினார். நெப்போலியனுடைய உடலினருகில், அர்ச்.சாமிநாதர் மூன்று முறை பீடத்தின் மேலிருந்த, ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை நோக்கி, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார். ஆராதித்துக் கொண்டே, உயிரற்ற நெப்போலியன் மேல் இரக்கமாயிருக்கும்படி, ஆண்டவரிடம் அழுது, மன்றாடி ஜெபித்தார். "பரலோக பிதாவே, இந்தப் பிள்ளையின் மேல் இரக்கமாயிரும். இவனை சாவிலிருந்து மீட்டருளும்" என்று உருக்கமாக வேண்டினார். பல நிமிடங்கள் ஓடின. சாமிநாதர் அழுதுகொண்டே ஆண்டவரைநோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார். நெப்போலியனுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தார். தம் கைகளை பரலோகத்தை நோக்கி உயர்த்தியவராக, உரத்த குரலில், "இளைஞனே! நமதாண்டவராகிய சேசுநாதர் சுவாமியின் நாமத்தினாலே உனக்குக் கூறுகிறேன். எழுந்திரு!'' என்று கூறினார். இவ்வாறு உரத்த குரலில் அவ்விளைஞனுக்குக் கட்டளையிடுகையில், சாமிநாதர், உள்ளங்கை அகலத்திற்கு தரையை விட்டு உயர எழும்பினார். உடனே அனைவரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். ஆம். இறந்த நெப்போலியன் மெதுவாக, தமது கண்களைத் திறந்தான். பிறகு, அவன் எழுந்து உட்கார்ந்து, ஆழ்ந்த துக்கத்திலிருந்து மீண்டவனைப் போல சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு தன் முன் நின்றுகொண்டிருந்த அர்ச். சாமிநாதரிடம், "சுவாமி, எனக்குப் பசியாயிருக்கிறது. எனக்கு உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் " என்று கூறினான். சில மணித்துளிகள் முன்பு வரை இறந்து போயிருந்த இளைஞன், புதுமையாக , உயிருடன் வரக் கண்ட அர்ச். சாமிநாதர், அவனை அரவணைத்துக்கொண்டு, "ஆம். மகனே. இதோ உனக்கு உணவு கொடுக்கப்படும்" என்று கூறினார். இதைக் கண்ட கர்தினாலும் மிகுந்த மகிழ்ச்சி, ஆரவாரத்துடனும் ஆனந்தக் கண்ணீருடனும், "இதோ நமதுபையன் உயிருடன் இருக்கிறான். சர்வேசுரன் ஸ்துதிக்கப் படுவாராக" என்று ஆண்டவரை வாழ்த்திக்கொண்டே , இளைஞனுக்குத் தேவையான உணவைக் கொண்டுவர, ஏற்பாடு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக