Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 36


சகோ.ரெஜினால்டு, தமது சபை அதிபர் தமக்கு அளித்த மடத்துத் தலைவர் பதவியைக் குறித்து, துவக்கத்தில் கலங்கினார். பரலோக உதவி கிடைக்கும்படியாக தேவமாதாவிடம் மன்றாடினார். ஆனால், உடனடியாக யாதொரு பரலோக உதவியும் கிடைக்காதது போல தோன்றியது. அப்போது, ரெஜினால்டு, தான் ஒரு துறவறசபைத் துறவி என்றும், சபையில் நுழையும் போது கொடுத்த பரிசுத்த கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டிற்கேற்ப, அதிபர் சுவாமியார் தமக்களித்த அலுவலை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, முழு உற்சாகத்துடனும் பிரமாணிக்கத்துடனும், நிறைவேற்றுவதில் ஈடுபடலானார்.

“அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு கொஞ்சம் பேர் மட்டுமே வந்தாலும் போதும். அந்த சிலரில் ஒருவரையாவது, தமது முன்மாதிரிகையுடன் கூடிய, பரிசுத்த துறவற ஜீவியத்தினாலும், உன்னதமான ஞானதியான பிரசங்கங்களாலும், உத்தம அர்ச்சிஷ்டதனத்தின் பரிசுத்த அந்தஸ்திற்கு உயர்த்த முடிந்தால், அதுவே தமக்குக் கொடுக்கப்பட்ட அலுவலுக்கான வெற்றி. ஓ மகா சிநேகமான தேவமாதாவே! உங்களைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிப்பேன். அதில் முக்கியமாக, உங்களை நோக்கி வாழ்த்தி மன்றாடும் அந்த ஜெபத்தை, எங்களுடைய அதிபர் சுவாமியாரின் உதடுகளில் எப்பொழுதும் அடிக்கடி உச்சரிக்கப்படும், அருள்நிறை மந்திரத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று ரெஜினால்டு எண்ணி தம்மையே உற்சாகப்படுத்திக் கொண்டார். பரலோகத்தின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட, ரெஜினால்டுவின் இந்த ஞானமிக்க திர்மானம், மிகுந்த ஞானநன்மைகளை விளைவித்தது. தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி சகோ.ரெஜினால்டு செய்த ஞானதியான பிரசங்கங்கள், எளிதாகவும், சுருக்கமாகவும் இருந்தபோதிலும், கோவிலுக்கு சிறு கூட்டமாக வந்த மக்களின் இருதயங்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் தங்களுடைய ஜிவியத்தை பரிசுத்தமும் உத்தமுமான கத்தோலிக்க ஜிவியமாக மாற்றினர். சகோ.ரெஜினால்டுவின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம் குறுகிய காலத்திற்குள்ளாகவே, நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்தது. “வெகு காலத்திற்குப்பிறகு, இப்பொழுது பொலோஞாவில் மிகச்சிறந்த பிரசங்கியார், நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் தான் சகோ.ரெஜினால்டு. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியவில்லை. அர்ச்.சின்னப்பரே, அல்லது அர்ச்.எலியாஸ் திர்க்கதரிசியே உலகிற்கு திரும்ப வந்துவிட்டார், என்று எண்ணத் தோன்றுகிறது”,  “அவர் உண்மையாகவே தேவமாதாவை நேரில் பார்த்தவர்போல பிரசங்கம் செய்கிறார்”, “ஆம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர் ரோமாபுரியில் தங்கியிருந்தபோது, தேவமாதாவே நேரில் வந்து அவரை திராதக் காய்ச்சலிலிருந்து புதுமையாகக் குணப்படுத்தினார்கள்”, “அவர் இப்புதுமையைப் பற்றிக் கூறும்போது, அழுதுவிடுகிறார்” என்றெல்லாம்மக்கள் பேசினர். மோட்ச இராக்கினி, ரெஜினால்டுவிற்கு அளித்த வெண்கம்பளி உத்தரியத்தைப் பற்றியும், புதுமையாக அவரை குணப்படுத்தியதை பற்றியும் செய்தி அனேக இடங்களுக்குப் பரவியது.

அதனால் அர்ச்.சாமிநாதருடைய துறவற சபையில் சேர்வதற்கான ஆர்வம், இளைஞர்களிடையே மாபெரும் அளவிற்கு அதிகரித்தது. அர்ச்.சாமிநாதர் சகோ.ரெஜினால்டுவைப் பற்றிக் கண்ட கனவு நனவாகிறதுபோல, சில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விநோதப்பிரியத்தினால் உந்தப்பட்டவர்களாக, அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு வந்தனர். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும், பாரிஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான, ரெஜினால்டுவின் மிகுந்த கல்வி ஞானத்தைப் பற்றி தங்கள் வகுப்பறைகளில் அதிகம் கேள்விப்பட்ட இம்மாணவர்கள், இப்பொழுது இம்மடத்தில் கறுப்பு வௌளை துறவற உடையுடன் காணப்படும் சகோ.ரெஜினால்டுவும் அப்பேராசிரியரும் ஒருவர்தானா, என்றெண்ணி வியந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக