Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 10 பிப்ரவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 43

 


அர்ச். சாமிநாதர் நெப்போலியனை உயிர்ப்பித்த புதுமைபற்றிய செய்தி உரோமை நகரம் முழுவதும் விரைவாகப் பரவியது. உரோமை மற்றும் அண்டை நகரங்களிலிருந்தும் திரளான மக்கள் ஆயிரக்கணக்காக, சாமிநாதரை சந்திப்பதற்காக அர்ச். சிக்ஸ்துஸ் தேவாலயத்துக்கு வரலாயினர். அம்மடத்துக் கன்னியர்களும், ஒரு அர்ச்சிஷ்டவருடைய தலைமையின் கீழ், புதிய துறவற சபையில், தாங்கள் ஜீவிக்கப்போவதை எண்ணி , மிகவும் பூரிப்படைந்தனர். அதற்காக சர்வேசுரனை வாழ்த்திப் போற்றினர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தினர். அதன்பின் வந்த ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர திவ்ய பலிபூசை நிறைவேற்றி அர்ச். சாமிநாதர் புதிய கன்னியர் சபைக்குள், கன்னியாஸ்திரிகளை உட்படுத்தினார். 44 கன்னியாஸ்திரிகள், கறுப்பு வெள்ளை உடுப்பைப் பெற்று துறவற வார்த்தைப்பாட்டைக் கொடுத்தனர். செயிண்ட் மேரி கன்னியர் மடத்துக் கன்னியர்களுடன், சில புதிய உறுப்பினர்களும், வேறு துறவற சபை மடங்களிலிருந்து சில கன்னியாஸ்திரிகளும், இதில் சேர்ந்தனர். 

அன்றிரவே , அர்ச். சாமிநாதர், தமது ஞான ஆலோசகர்களான கர்தினால்மார்கள் (வந் நிக்கோலாஸ், வந். ஸ்டீஃபன்), பிறநண்பர்களுடன் வெறுங்காலில் பாதயாத்திரையாக கைளில் தீப்பந்தங்களுடன் அர்ச். லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படத்தை சுற்றுப்பிரகாரமாக, அர்ச். சிக்ஸ்துஸ் தேவாலயத்திற்கு எடுத்துச் சென்றனர். வந். நிக்கோலாஸ் கர்தினால், "இப்படம் இங்கு தங்கினால், சர்வேசுரன் இப்புதிய கன்னியர் மடத்தின் மட்டில் மகிழ்வடைந்துள்ளார் என்று, நாம் கண்டுணரலாம். ஒருவேளை இப்படம் தனது பழைய மடத்திற்கே திரும்பினால் என்ன செய்யலாம், Fr. தோமினிக்?" என்று கேட்டார். "இல்லை . நிச்சயமாக அது திரும்பிச் செல்லாது, ஆண்டவரே" என்று அர்ச். சாமிநாதர் பதிலளித்தார். அப்பொழுது, பொலோஞாவுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டு, அங்கு மடத்தை நிர்வகித்தும், சபை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டும் உழைத்திட்ட சகோ. ரெஜினால்டு , அர்ச். யாகப்பர் மடத்தில் இறந்த செய்தி எட்டியது. 

அவருக்கு வயது 35க்குள் தான். மிகவும் சிறிய வயதினர். இதைக் கேட்ட சபை அதிபரான அர்ச். சாமிநாதர் மிகுந்த துயரத்துக்குள்ளானார். சபை உத்தரியத்தை தேவமாதாவிடமிருந்தே பெறும் பாக்கியத்தைப்பெற்ற சகோ. ரெஜினால்டு, தற்சமயம் மோட்சமகிமையில் தமது சபைக்காக , அதிகம் உதவுவார் என்ற நினைவே அர்ச. சாமிநாதருக்கு பெரும் மகிழ்வாகவும் ஆறுதலாகவும் இருந்தது. மேலும், சகோ. ரெஜினால்டு இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, இரு ஜெர்மானிய இளைஞர்களை போதக துறவிகளின் சபைக்குள் உட்படுத்தியிருந்தார். ஜோர்டன், ஹென்றி என்ற அவ்விருவரும் பாரீஸ்நகரின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தனர் என்ற செய்தியும் அர்ச். சாமிநாதரை மகிழ்வித்தது. இவ்விரு இளைஞர்களையும் அர்ச். சாமிநாதர், தமது பாரீஸ்நகர பயணத்தின்போது ஏற்கனவே சந்தித்துள்ளார். அதில், குறிப்பாக, சகோ. ஜோர்டனை நன்கறிவார். அப்போது, ஜோர்டனிடம் அர்ச். சாமிநாதர், சகோ. ரெஜினால்டுவை, தீராத நோயினின்று, எவ்வாறு தேவமாதா விசேஷமாக தமது பாதுகாப்பினால் பராமரித்து புதுமையாகக் காப்பாற்றினார்கள் என்பதை விவரித்து கூறினார். மேலும் தமது சபையைப் பற்றியும், அதன் வேதபோதக அலுவல்களைப் பற்றியும் கூறும்போது, ஜோர்டனின் முகம் மகிழ்வுற்று மலர்வதைக் கண்ட , அர்ச். சாமிநாதர், அவரையும் சர்வேசுரன், தமது சபைக்கு அழைப்பதைத் தாம் உணர்வதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறு, இவ்விரு இளைஞர்களின் இருதயங்களில் ஏற்கனவே, அர்ச். சாமிநாதர் தேவ அழைத்தலுக்கான விதையை விதைத்திருந்தார். அதை சகோ. ரெஜினால்டு போஷித்து வளர்த்தார். விரைவிலேயே இவ்விருவரும் மாபெரும் வேதபோதக அலுவல்களை, போதகக் குருக்களாக செயல்படுத்தப்போவதையும், அதிலும் குறிப்பாக, தமக்குப் பிறகு சபையை சகோ. ஜோர்டனே நிர்வகிப்பார் என்பதை முன்கூட்டியே அறிந்தவராக, அர்ச்.சாமிநாதர் மனமகிழ்ந்தார்.

அப்போது, போலந்து நாட்டிலிருந்து தம்மைப் பார்க்க வந்த புதிதாக மேற்றிராணியாராக கிராக்கோ நகருக்குப் பொறுப்பேற்றிருந்த வந்.ஐவோ ஆண்டகையை, அர்ச். சாமிநாதர் வரவேற்றார். அவருடன் இளங்குருக்கள், சங்.செஸ்லாஸ், சங்.ஹையசிந்து என்ற அவருடைய சகோதரரின் மகன்களும், மற்றும் ஹென்றி , ஹெர்மன் என்ற இரு உதவியாளர்களும் வந்திருந்தனர். அர்ச்.சாமிநாதர் நெப்போலியனை உயிர்ப்பித்த நேரத்தில், இவர்கள் அனைவரும் வந். ஐவோ மேற்றிராணியாருடன் சிக்ஸ்துஸ் தேவாலயத்தில், அப்புதுமையைக் கண்டு களித்தவர்கள். பேசுவதில் எளிமையும், அடக்கவொடுக்கமும் தாழ்ச்சியுமுடையவரான வந்.ஐவோ ஆண்டகை, அர்ச். சாமிநாதரிடம், தமது மேற்றிராசனத்துக்கு, போதகசபைத் துறவிகளை, சுமார் 4 துறவிகளையாவது, ஞானப்பிரசங்கங்கள் நிகழ்த்த அனுப்புமாறு வேண்டினார். சங். செஸ்லாஸ்," எங்களுடைய வடக்குப் பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கு குருக்கள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறார்கள் '' என்றார். உடனே சங்.ஹையசிந்து சுவாமியார், "நமது சத்திய வேதம் போலந்து நாட்டிற்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி.965ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் அது, இன்னும் போதிய அளவில் அங்கு வளர்ச்சியுறவில்லை. அநேகர் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை. பரந்து விரிந்த நிலப்பிரதேசத்தையுடைய இந்நாட்டில் மெய்ஞானம் தழைத்தோங்கும்படியாக, அங்கு போதகத் துறவிகள் வேதம் போதிப்பதற்கு தேவைப்படுகிறார்கள்'' என்று கூறினார். "சுவிசேஷம் அங்கு போதிய அளவில் போதிக்கப்பட்டால் தான், அங்கு நிலவிவரும்போர்களும் குழப்பங்களும் நீங்கி, ஆண்டவருடைய சமாதானம் குடிகொள்ளும். அதற்கு நீங்கள் தான் உதவவேண்டும். உங்களுடைய துறவிகளை அனுப்ப வேண்டும் '' என்று வந்.ஐவோ ஆண்டகை சாமிநாதரிடம் விண்ணப்பித்தார். அப்போது, பொலோஞா , பாரீஸ், ரோம் போன்ற நகர்ப்பகுதிகளில், அங்கிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை, பதிதர்கள் தங்களுடைய வசத்தில் உட்படுத்துவதால், அம்மாணவர்களுக்கு உத்தம ஞான உபதேசத்தைப் புகட்டி, அவர்களை மனந்திருத்துவதும், அவர்களைக் கொண்டே மற்ற பதிதர்களை மனந்திருப்புவதற்காகவுமே, இந்நகரங்களில் தமது சபை மடங்களை ஏற்படுத்தியிருப்பதைப் பற்றி அர்ச். சாமிநாதர் விவரித்தார். மேலும் அஞ்ஞான நாடுகளுக்கு தமது சபைத் துறவிகளை, வேதபோதக அலுவல்களுக்கு அனுப்புவதற்கு இன்னும் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு போலந்து நாட்டு மொழி தெரியாது என்றும் கூறினார். 

சற்று சிந்தித்தபிறகு, அர்ச். சாமிநாதர், ''ஆண்டவரே! நீங்கள் உங்களுடன் வந்த இந்த இளங்குருக்களை, உம்முடைய சகோதரருடைய மகன்களை, என்னிடம் விட்டுச் செல்லுங்கள். சிறிது காலம் போதும். அவர்கள் உங்களுடைய நாட்டிற்கு தேவையான சிறந்த போதக துறவிகளாக பயிற்றுவிக்கப்படுவார்கள் " என்றார்.

 இதை சற்றும் எதிர்பாராத வந்.ஐவோ ஆண்டகை, அதிர்ச்சியடைந்த அதே நேரத்தில், சங்.ஹைசியந்து, சங்.செஸ்லாஸ் என்ற இரு குருக்களும், அர்ச். சாமிநாதர் முன்பாக முழந்தாளிட்டு, "சுவாமி, யார்வேண்டுமானாலும் உங்களுடைய சபையில் சேரமுடியுமா? என்று வினவினர். 

"ஏன் முடியாது. ஹெர்மன், ஹென்றி நீங்களும் கூட வரலாம். வாருங்கள் என் பிள்ளைகளே! '' என்று கூறி, அந்த நால்வரையும், இருகரம் விரித்து தம்மிடம் வரவேற்றார். உடனே, ஹெர்மன், ஹென்றி இருவரும் மாசற்ற குழந்தைத்தனத்துடன் நேசத்தந்தையான அர்ச். சாமிநாதரை நோக்கி விரைந்தோடி வந்தனர். அப்போது, சாமிநாதரின் சீடர் ஒருவர் வெள்ளைக் கம்பளியிலான துறவற உடுப்புகளை எடுத்து வந்தார். மற்றொரு சீடர், தீர்த்தத்தையும் எரியும் மெழுகுதிரிகளையும் எடுத்துவந்தார். உடனே, வந்.ஐவோவின் பிள்ளைகளான இரு இளங்குருக்களும், இரு உதவியாளர்களும் நெடுஞ்சாண்கிடையாக பீடத்தின் முன்பாக கிடந்தார்கள். தகுதியற்ற தங்களை, சர்வேசுரனுடையவிசேஷ ஊழியத்திற்கென்று ஏற்கும்படியாக அவ்வாறு சாஷ்டாங்கமாக விழுந்து ஜெபித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்நால்வரும் போதகத் துறவிகளுடைய உடுப்பை அணிந்து கொண்டனர். அர்ச்.சாமிநாதர் , உரத்த குரலில் உற்சாகத்துடனும் மகிழ்வுடனும், "ஓ ஆண்டவரே, உமது ஊழியர்களான இவர்கள், தங்களுடைய முழு இருதயத்துடன் உம்மையே நாடும்படியாகவும், அவர்கள் தகுதியுடன் கேட்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கும்படியும் அவர்களுக்குத் தேவையான பரலோக உதவிக்கான உமது வலது கரத்தை அவர்கள்மேல் நீட்டுவீராக!...'' என்ற ஜெபத்தை ஜெபித்தார். சங். ஹையசிந்து தான், பிற்காலத்தில் 25000 மைல் தூரம் கால்நடையாகவே வேதம் போதித்த "போலந்து நாட்டின் சாமிநாதர்" என்று புகழ்பெற்றவரும், தேவமாதாவுடனும் ஆண்டவருடனும் அடிக்கடி சல்லாபித்து, உத்தம சாங்கோபாங்கத்தை அடைந்தவருமான அர்ச். ஹையசிந்து. இவருடைய திருநாள் ஆகஸ்டு 16ம்தேதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக