Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 5 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40 


”சுவாமி, நமது சபைவிதிகள் மிகக் கடுமையானதாக இருக்கிறது என்று அம்மடத்திலுள்ள சில கன்னியர்கள் அஞ்சுகிறார்கள். அதிலும் குறிப்பாக, அடைப்பட்ட மடத்து ஜீவியத்தின் கடுமையான விதிமுறைகள் அவர்களை மிரளச் செய்துள்ளன" என்று சகோ. ஆல்பர்ட் அதிபர் சுவாமியாரிடம் கூறினார்.

அதை ஆமோதித்த சகோ.டான்கிரட், "ஆம். சுவாமி, ரோமில் வசிக்கும் அக்கன்னியர்களின் நண்பர்களும், உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் இக்கன்னியர்களுடைய ஜீவியமுறையை சிறிதளவு மாற்ற முயன்றாலும், உங்களை தடுப்பதற்காக எதையும் செய்யத் துணிந்திருக்கிறார்கள் " என்றார்.

ரோமாபுரியில் இருக்கும் மற்ற அநேக மடங்களில் இருந்த கன்னியர்களும், இப்புதிய துறவற ஒழுங்குகளை, அதுவும் பிரான்சு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் உள்ள புரோயிலுள்ள கன்னியர்மடத்தின் ஒழுங்குகளை, அனுசரிப்பதற்கு மனமில்லாதவர்களாக இருந்தனர். உயர்ந்த இத்தாலிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களான இவர்கள், சாதாரன குடியானவர்களைப் போல நெசவு வேலை செய்வதற்கும், கடின மரக்கட்டைகளை விட சுமாரான படுக்கைகளில் படுக்கவும், தயாராக இல்லை. மேலும் வருடத்தின் பெரும் பாகத்தில், ஒருசந்தி உபவாசம் இருப்பதையும், காலம் முழுவதும் சுத்தபோசனம் அனுசரிப்பதையும், முரட்டுக் கம்பளி உடுப்புகளை அணிந்துகொள்ளவும், தங்களுக்கென்று யாதொன்றையும் வைத்துக்கொள்ளாமல் அட்ட தரித்திரத்தைக் கடைப்பிடிக்கவும் இவர்கள் விரும்பவில்லை . நடுஇரவிலும் மற்ற அநேக ஒத்துவராத நேரங்களிலும் தேவாலயத்துக்கு வந்து தேவகீர்த்தனை ஜெபங்களை ஜெபிப்பதும் இவர்களுக்குக் கடினமானதும் கடைபிடிக்கமுடியாததுமான துறவற ஒழுங்காக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு, தங்களுடைய வீட்டிற்கு ஒருபோதும் போகக்கூடாது என்பது, இவர்களால் அனுசரிக்கவே முடியாத சபைவிதியாக இருந்தது.

அம்மடத்தின் தாயார் சங்.யூஜீனா, "இப்புதிய துறவற சபையின் விதிமுறைகளும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதன் ஒழுங்குமுறைகள் சில துறவற சபைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அவை நமது மடத்திற்கு ஏற்றதல்ல. நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட” என்று கூறினார்கள்.

உடனே, மற்ற வயோதிக கன்னியாஸ்திரிகள் ”அவை நடைமுறைக்கு ஏற்புடையாதவை மட்டுமல்ல. விவேகமற்ற விதத்தில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் " என்றனர்.

இதையெல்லாம் கேள்வியுற்ற அர்ச்.சாமிநாதர், இக்கன்னியரை சந்தித்து அவர்களுக்கு, தபசினாலும், ஜெபத்தினாலும் திருச்சபையில் விளையும் உன்னத நன்மைகளைப் பற்றி உணர்த்த விரும்பினார். அம்மடத்துக் கன்னியர்களை சந்திக்க செல்வதற்கு முன், அநேக நாட்கள் அர்ச்.சாமிநாதர் நீண்ட ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டிருந்தார். அதன் பின் அவர்களை சந்தித்தபோது, சாமிநாதர், சங்.யூஜினா தாயார் மற்றும் அம்மடத்தின் கன்னியர் அனைவரையும் கூட்டி அமரச் செய்து, அவர்களிடம், அநேக துறவறமடங்களில் நிலவும் துர்மாதிரிகைகள் அகலும்படியாக, ரோமாபுரியிலுள்ள அனைத்து கன்னியர்மடங்களிலும் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தைப் பற்றி விளக்கினார். துறவற ஜீவிய அந்தஸ்தின் முக்கிய நோக்கமும், சர்வேசுரன் அவர்களிடம் ஆசிக்கும் உன்னத நிலைமையுமான உத்தம சாங்கோபாங்க ஜீவியத்தினைக் கைப்பற்ற முடியும் என்றும் மிகத்தெளிவாக அவர்களுக்கு விவரித்தார்.

இருப்பினும், மடத்துத் தாயாரும்மற்ற கன்னியர்களும் அர்ச்சிஷ்டவரின் பிரசங்கத்தினால் யாதொரு பாதிப்புமின்றி, "சுவாமி! நீங்கள் எங்களிடம் கேட்பது, முடியாத காரியம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக அந்தப் படத்தை முன்னிட்டு நாங்கள் இம்மடத்தை விட்டு எங்கும் வரமுடியாது" என்று கூறினார்கள்.

சாமிநாதர், "படமா. அது என்ன? என்றுவினவினார்.

”சுவாமி, அது தான், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படம். அது எங்களுடைய மடத்தின் மிக முக்கிய பொக்கிஷம். அதைவிட்டு நாங்கள் வேறு எங்கும் பிரிந்து செல்ல முடியாது” என்று தாயார் கூறினார்கள்.

சாமிநாதர், "நீங்கள் அதையும் எடுத்துக்கொண்டு அர்ச். சிக்கஸ்துஸ் மடத்திற்கு வரலாமே. அதற்கு எந்த தடையமில்லையே" என்றார்.

”சுவாமி. நீங்கள் இதைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த அற்புதமான தேவமாதாவின் படம் இந்த இடத்திலுள்ள இம்மடத்திற்குதான் சொந்தமாக இருக்கிறது. இதை வேறு எங்கும் எடுத்துச்செல்லமுடியாது ..." என்று தாயார் தொடர்ந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக