Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38 


அர்ச். சாமிநாதரை சந்தித்த டயானா , அவரிடம், தான் சகோ. ரெஜினால்டுவின்ஞானதியானபிரசங்கங்களினால் சர்வேசுரன்பால் கவர்ந்திழுக்கப்பட்டதைப் பற்றி தெரிவித்தாள். மேலும் இதற்கு, தனது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தாள். உத்தம கத்தோலிக்க ஜீவியத்தை முன்னிட்டு, தான் அவருடைய கன்னியர் சபையில் சேர விரும்புவதாகவும், அதற்கு அவர் உதவ வேண்டுமென்றும், அர்ச். சாமிநாதரிடம் விண்ணப்பித்தாள். சாமிநாதர் அவளிடம், "குழந்தையே! நீவிசேஷ விதமாக சர்வேசுரனை சேவிக்க விரும்பவதை, உன் வீட்டில் இருந்து கொண்டே செய்ய முடியும். இது, உனக்கு விளங்கும் என்று நம்புகிறேன்" என்றார். "ஆம் சுவாமி. என் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசிக்கிறேன். 

ஆனால், அது மட்டும் பற்றாது. நான் எனது நேசத்தை மட்டுமல்லாமல், என்னிடமுள்ள அனைத்தையும், இதுவரைக்கும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இனி எனக்கு சொந்தமாகப்போகும் யாவற்றையும் நம் நேச ஆண்டவருக்குக் காணிக்கையாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்வது போல, துறவற ஜீவிய அந்தஸ்துடன் சர்வேசுரனுக்கு ஊழியம் புரிய ஆசிக்கிறேன்" என்று டயானா கூறினாள். சாமிநாதர், அவளிடம், "மகளே! ஞான காரியங்களில் எப்பொழுதும் நிதானமாகவே முடிவு எடுக்க வேண்டும். தற்பொழுது, உன் இருதயத்தை அர்ப்பணிப்பதையே, ஆண்டவர் விரும்புவார். உத்தமமான துறவற அந்தஸ்திற்கு ஏற்ற காணிக்கைகளை நம் ஆண்டவருக்கு, நீ பிறகு அர்ப்பணிக்கலாம்'' என்றார். அதற்கு டயானாவும் சம்மதித்தாள். அதன்படி, அர்ச்.சாமிநாதர் தேர்ந்தெடுத்த ஒரு நாளில் அர்ச். நிக்ககோலாஸ் தேவாலயத்திற்கு டயானா வந்து பெரிய பீடத்திற்கு முன் முழந்தாளிட்டாள். அங்கு சகோ.ரெஜினால்டுவும், சகோ.குவாலா, சகோ.ருடால்ஃப் முன்னிலையில், டயானா , தன் நேச ஆண்டவருக்கு தன்னை முழுவதும் நித்தியத்திற்குமாக அர்ப்பணிக்கும் ஜெபத்தை ஜெபித்து துறவற வார்த்தைப்பாடு கொடுத்தாள். அர்ச். சாமிநாதருடைய இருதயம் அகமகிழ்வால், திடீரென்று மேலே வெகு தூரம் தாவியது. அவருடைய புதுமைமிகு தேவவரப்ரசாத சலுகையினால், தனக்கு முன்னால், முழங்காலில் இருக்கும் இச்சிறுபெண்ணிற்கு நிகழவிருக்கும், எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார். அவை அதிர்ச்சிக்குரியவை களாகவும், அதேநேரத்தில் ஆறுதலளிப்பவையாகவும் இருந்தன. அதன்பிரகாரம், டயானா , வார்த்தைப்பாடு கொடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாக மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாள். பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய கன்னியர்மடம் நிறுவப்படும் என்று காத்திருக்கும் வேளையில் தன் வீட்டாருக்கு தெரியாமல், பொலோஞாநகரின் எல்லைப்புறத்திலிருக்கும் ரொன்சானோ என்ற ஊரிலுள்ள அர்ச். அகுஸ்தினாருடைய கன்னியர் சபைமடத்தில் சேர்ந்தாள்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளை வீட்டிற்கு இழுத்துவந்தனர். வீட்டிற்கு எதிரான அவளுடைய போராட்டத்தை நிரந்தரமாக முடமாக்கிவிட்டனர். இருப்பினும், அவள் தனது வார்த்தைப்பாட்டின்படி, இவ்வுலக சிருஷ்டிகளிடமிருந்து விலகி, தன் இருதயத்தை தம் சிநேக தேவனான திவ்ய இரட்சகரிடமே நிலைத்திருப்பதில் பிரமாணிக்கமாக இருந்தாள். இறுதியில் தனது குடும்பத்தினருடைய உதவியினாலேயே பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய முதல் கன்னியர்மடத்தை நிறுவுவதில் டயானா வெற்றி பெற்றாள். விரைவில், சகோ.டயானா உத்தம சாங்கோபாங்கத்தில் வெகுவாய் உயர்ந்து, அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தாள். அதன்படி, அர்ச்சிஷ்டவளாக மரித்தபிறகு, அர்ச்.சாமிநாத சபைகுருக்கள், கன்னியர், மூன்றாம் சபையினர் அனைவரும், "முத்தி பேறுபெற்ற டயானாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று மகிழ்ச்சியுடன் அவளிடம் ஜெபிக்கும்படியாக, விரைவிலேயே, அவள் பீடத்திற்கு உயர்த்தப்பட்டாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக