Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 5 பிப்ரவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39

 அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39 


அர்ச்.சாமிநாதருடைய ஞான அறிவுரையை தாழ்ச்சிநிறை இருதயத்துடன் கேட்டதினாலேயே டயானா அர்ச்சிஷ்ட ஜீவியத்தை எட்டினாள். சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்லும் வரைக்கும் சில வாரங்கள் பொலோஞாவில் சாமிநாதர் தங்கியிருந்தார். அப்போது டயானா அடிக்கடி அவரை சந்திப்பாள். அவளுக்குக் கிடைத்த தேவவரப்ரசாதத்தின் பாக்கியமான அந்தஸ்தைப் பற்றி அர்ச்சிஷ்டவர் விவரித்து அவளை உணரவைத்தார். தன் இருதயத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்ற நினைவு அவளுடைய ஆத்துமத்தில் துாண்டப்பட்டது, அவளுடைய சொந்த பேறுபலன்களாலல்ல என்பதை அவளுக்கு எடுத்துரைத்தார். அப்போதிலிருந்து, இவ்வுலகிலுள்ள மற்ற சிருஷ்டிகளையும் சர்வேசுரனுக்காக சிநேகிக்கலானாள். இவ்வாறாக, மற்ற சிருஷ்டிகளின் நிலையற்ற தன்மையைக் குறித்து ஏற்படும் துயரத்திலிருந்து விடுபட்டாள். ஒருநாள், டயானாவின் எதிர்காலத்தைப்பற்றி, தாம் கண்ட காட்சியினிமித்தம், அர்ச்.சாமிநாதர், வேறொருவகையான தேவவரப்ரசாதத்தைப் பற்றி டயானாவிடம் ”மகளே! துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் கேட்பது பற்றி ஒரு சிலரே நினைக்கிறார்கள். எவ்வளவு பரிதாபமான நிலைமை இது! துன்பத்தை மக்கள் மிகப் பயங்கரமானதொன்றாக, இவ்வாழ்வில் தாங்கமுடியாத ஒன்றாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றிய நினைவே மிகப் பயங்கரமானதொன்றாக இருக்கிறது. உனக்கு அதைப்பற்றி நன்கு தெரியும் என்று நம்புகிறேன். துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் நீ ஏன் மன்றாடக் கூடாது?' என்று கூறினார். ஆம். சுவாமி. எனக்கு அதைப்பற்றித் தெரியும். ஆனால் அந்நினைவே என்னை அச்சுறுத்துகிறது” என்று கூறி விட்டு மௌனமானாள். ஏனெனில், அர்ச்சிஷ்டதனத்தை சிறுவயதிலிருந்தே விரும்பினாலும், துன்பத்தை நேசிக்கும் மனதையே அப்பரிசுத்ததனம் பெரிதும் சார்ந்திருக்கிறது என்று அறிந்ததால், அவளுடைய அர்ச்சிஷ்டவளாகும் எண்ணத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதை அவளுடைய முகத்திலிருந்தே கண்டறிந்த அர்ச்.சாமிநாதர், அவளிடம் துன்பம் என்னும் பரிசுத்த சிலுவையின் மகிமைகளையும் வல்லமையையும் பற்றி பிரசங்கித்தார். ”பிள்ளையே! கவனி. இவ்வுலகில் துன்பம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் கிறிஸ்துவர்களாகிய நாம் அத்துன்பத்தை சிநேக தேவனாகிய திவ்ய இரட்சகருக்காக பொறுமையுடன் ஏற்போமேயானால், அத்துன்பம் நமது ஆத்துமத்தை சர்வேசுரனிடம் சேர்க்கும் நமது ஆத்தும் இரட்சணியத்தின் உன்னத சாதனமாக மாறும். நம் ஆண்டவர் நமக்காகப் பட்ட பாடுகளையும் அவர் நமக்காக சிலுவை மரத்தில் தமது திவ்ய இரத்தமெல்லாம் சிந்தி மரித்ததையும் எப்போதும் நம் இருதயத்தில் பதிப்போமேயானால் நமது ஜீவியத்தில் நாம் சந்திக்கும் எத்தகைய துன்பமும் நமக்கு தேவவரப்ரசாதத்தைப் பெற்றுதரும் நற்கொடையாக மாறிவிடும். எனவே என் பிரிய மகளே இதைப்பற்றி பயப்படாதே. இருதயத்தில் கோழையாக இருப்பவர்கள் கூட துன்பத்தை சிநேகிக்கக் கற்றுக் கொள்ள முடியும். சர்வேசுரனுடைய உதவியை ஒவ்வொரு நாளும் அதற்காக மன்ாடினால் எல்லாரும் துன்பத்தை நேசிக்க முடியும்"

இதைக் கேட்ட டயானாவும் இருதயத்தில் புத்துணர்வை அடைந்தவளாக 18 வயது வரை கொண்டிருந்த பயமெல்லாம் நீங்கியவளாக, தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், ஆண்டவருடைய சிநேகத்திற்காகவும், சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், துன்பத்தை நேசிக்க துவக்கினாள். அர்ச். சாமிநாதர், இவ்வாறாக, டயானா பரிசுத்ததனத்தின் பாதையில் தனது அர்ச்சிஷ்ட ஜீவியத்தை துவக்கியதையும், அப்பாதையில் அவளைப் பின்பற்றி அநேக ஆத்துமங்கள் தங்களுடைய நேச இரட்சகரை உத்தமமாக சிநேகித்து சேவிப்பார்கள் என்பதையும் கண்டு அகமகிழ்ந்தார். அந்த வருடம் கிறிஸ்துமஸ் திருநாளுக்குப் பிறகு உடனே சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்கு செல்லும்படி கூறிவிட்டு, சாமிநாதரும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக ரோமாபுரிக்கு சென்றார். ரோமிலுள்ள அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு 18 மாதங்கள் கழித்து வந்த சாமிநாதர் அங்குள்ள துறவிகள் அநேக நன்மைகளைச் செய்து அருமையாக உழைத்திருப்பதைக் கண்டார். அங்கு தற்போது துறவிகளின் எண்ணிக்கை 100க்கு மேலாக உயர்ந்திருப்பதையும் கண்டார். மேலும் சிக்ஸ்துஸ் மடத்தின் துறவிகளின் அயராத உழைப்பினால் ரோம் நகர மக்கள் தேவமாதாவின் மேல் அதிக பக்திபற்றுதலுடன் திகழ்வதையும் கண்டு மகிழ்வுற்றார். அந்நகர மக்களெல்லாம் தினமும் தவறாமல் தேவமாதாவின் சங்கீதமாலை என்ற ஜெபமாலையை தவறாமல் பக்தியுடன் ஜெபித்து வந்தனர். இதனால் பரலோக இராக்கினியான தேவமாதாமீது அவர்களுக்கு இருந்த சிநேகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

தமது சகோதர துறவிகள் மேல் சிலர் அவதுாறு சொல்வதையும் அர்ச்.சாமிநாதர் கேள்வியுற்றார். சகோ. டான்கிரட் , ”சுவாமி, சில கன்னியாஸ்திரிகள் தான் இதற்கு காரணம். அவர்கள் இன்னும் நம்மையும் நமது வேதபோதக அலுவலையும் சந்தேகத்துடன் கவனித்து வருகின்றனர்" என்றார். "ஆம். சுவாமி. குறிப்பாக, தைபர் நதியின் குறுக்கில் உள்ள செயிண்ட்மேரி மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளே நம்மை அச்சத்துடன் பார்க்கிறார்கள்" என்று சகோ.ஆல்பர்ட் கூறினார். 2 வருடங்களுக்கு முன் ஹொனோரியுஸ் பாப்பரசர் ரோமிலுள்ள கன்னியர் மடங்களையெல்லாம் ஒன்றிணைக்கும் பணியை அர்ச்.சாமிநாதரிடம் ஒப்படைத்தார். புரோயிலுள்ள சாமிநாதருடைய கன்னியர்களின் மடத்தின் சபை ஒழுங்கைப் பின்பற்றி, அக்கன்னியர் சபைகளை புதுப்பித்து ஒரே துறவற சபையாக மாற்ற வேண்டும் என்பதே அவ்வலுவல். அதனை முன்னிட்டே பரிசுத்த பாப்பரசர் சாமிநாதருக்கு அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலயத்தையும் மடத்தையும் கொடுத்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முயல்வாரேயானால், பெரும் எதிர்ப்பைக்கொடுப்பதற்கு இக்கன்னியர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதை அர்ச்.சாமிநாதர் தம் சபைத் துறவிகள் வழியாக அறிந்து கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக