Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37



சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார்.

உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங் களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றி யெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர்.

இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர் களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங் களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவ சிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள்.

அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக