Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 21 டிசம்பர், 2023

கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் ஒரு பரிபூரண பலனை பெறலாம்!



உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் டிசம்பர் 8, 2023 முதல் பிப்ரவரி 2, 2024 வரை ஏதாவது ஒரு  பிரான்சிஸ்கன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் ஒரு பரிபூரண பலனை பெறலாம்!

இந்த ஆண்டு, கத்தோலிக்கர்கள் அர்ச். கன்னி மரியாவின் அமல உற்பவ விழாவான டிசம்பர் 8 முதல், 2024 பிப். 2 வரை, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கோவிலில்  காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழாவரை எதாவது பிரான்சிஸ்கன் சபையின் ஆலயத்தில்  குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் பரிபூரண பலனை பெறலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அர்ச். பிரான்சிஸ் அசிசியின் திருநாளில், இத்தாலியின் அசிசியில் உள்ள அர்ச். பிரான்சிஸ் பேராலயத்தில் விசுவாசிகள் கூடி, தங்கள் அன்பிற்குரிய இத்தாலிய துறவியைக் கௌரவிப்பதற்கும், அர்ச். பிரான்சிஸ் சபையின் 800 வது ஆண்டு 1223) மற்றும் கிரேசியோவில் கிறிஸ்து பிறப்பு காட்சியின் உருவாக்கம் (Nativity) நிறைவைக் கொண்டாடுவதற்கும் கூடினர். 

இந்த பிரான்சிஸ்கன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்சிஸ்கன் குடும்பத்தின் மாநாடு போப் பிரான்சிஸிடம் இந்த முழுமையான ஆசீர்வாதத்திற்கு ஒப்புதல் கேட்டது.

 வழக்கமான நிபந்தனைகளின் கீழ் விசுவாசிகள் இந்த பரிபூரண பலனை பெற அனுமதித்தது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உடல் ரீதியாக பங்கேற்க முடியாதவர்கள் தங்கள் துன்பங்களை ஆண்டவரிடம்  சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது "பக்தியின் நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலமோ" பரிபூரண பலனை பெறலாம்.


பரிபூரண பலனை பெற 

1. தேவஇஷ்ட பிரசாத அந்தஸ்தில் (ஆன்மாவில் சாவான பாவங்கள்) இன்றி இருக்க வேண்டும்.

2. பரிபூரண பலனைப் பெறுவதற்கான பொதுவான எண்ணம் இருக்க வேண்டும்.

தினசரி கூட, ஒருவரால் முடிந்த அனைத்து பரிபூரண பலனையும் பெற, ஒருவரின் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்வது ஒரு நல்ல நடைமுறையாகும்.

3. பரிபூரண பலனை பெற  விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

4. பரிந்துரைக்கப்பட்ட செபங்கள் வாய்வழியாக வாசிக்கப்பட வேண்டும்; அதாவது, சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் உதடுகளால் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம். முடியாதவர்கள்  சொற்றொடரை வாய்வழியாக இல்லாமல் மனரீதியாகச் சொல்வதன் மூலம் ஒருவர் பரிபூரண பலனைப் பெறலாம்.

5. முழுமையான பரிபூரண பலனை பெற பொதுவாக "வழக்கமான நிபந்தனைகளின் கீழ்" வழங்கப்படுகின்றன.

 "வழக்கமான நிபந்தனைகளின் கீழ்"

 இந்த "வழக்கமான நிபந்தனைகள்" பாவ சங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை, ஒரு பிரான்சிஸ்கண் ஆலயத்திற்கு வருகை மற்றும் பரிசுத்த தந்தையின் நோக்கத்திற்காக செபம் செய்வது..



அருட்கருவிகள் - சிலுவையும் - பாடுபட்ட சுரூபமும் (Cross)

Source: Salve Regina May June -  12


சிலுவையும் பாடுபட்ட சுரூபமும்



நமது திவ்விய இரட்சர் சிலுவை மரத்தில் அறையுண்ட பாவனையாய்ச் செய்த சுரூபம் பாடுபட்ட சுரூபம். எனப்படுகின்றது; சுரூபம் இல்லாத வெறுஞ் சிலுவைக்குச் சிலுவை என்று பெயர். கிறீஸ்துவ ஆராதனை ஸ்தலங்கள், பள்ளிக்கூடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் முதலியவைகளை இதர மத ஸ்தாபனங்களினின்று பிரித்துக்காட்டுகிற வெளி அடையாளம் சிலுவையே.

பூர்வீக காலங்களில், பெரும் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வது அநேக நாடுகளில் வழக்கமாயிருந்தது. அதிக பழமையான வழக்கம் குற்றவாளியை ஓர் மரத்தில் ஆணிகளால் அல்லது கயிறுகளால் தொங்க விட்டு தூக்குப் போடுவதுதான். பின்னர் இரு மரத்துண்டுகளை உபயோகிக்கிற வழக்கம் ஏற்பட்டது. உரோமையர் அடிமைகளையும் சிலுவையில் அறைந்து கொல்வார்கள். இத்தகைய மரணத் தீர்ப்பு பெற்றவர்களின் கைகளைச் சிலுவையின் குறுக்குச் சட்டத்தில் விரித்து வைத்துக் கைகளையும் பாதங்களையும் இருப்பாணிகளால் சிலுவையோடு சேர்த்து அறைந்து தொங்கவிடுவார்கள். இது மிகவும் குரூரமான தண்டனை என்று சொல்லத் தேவையில்லை. நமது திவ்விய இரட்சகர் இப்போது சொன்ன குரூரமான விதமாய் அறையுண்டு மரித்தார்.

சிலுவையானது அக்காலங்களில் குரூர வாதனை செய்யும் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டாலும், அஞ்ஞானிகள் அதற்குச் சங்கை செலுத்திவந்தது குறிப்பிடத்தக்கது. அது சூரிய சுழற்சிக்கு அடையாளமாகவும் உயிருக்கு அறிகுறியாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. எஜிப்து தேசத்திலும் அசீரியா நாட்டிலும் சிலுவை உற்பத்தி, சக்திக்கு உருவமாக எண்ணப்பட்டது.

பௌத்த மதத்தினர் அதை மறு ஜீவியத்துக்கு அடையாளமாகக் கருதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நமது சிலுவைக்கும் அவர்கள் உபயோகித்த சிலுவைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பது உண்மை. ஆயினும் அந்த அஞ்ஞானிகள் அதே அடையாளத்தை இலௌகீக சீவியத்தின் குறியாகக் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு விசேஷந்தான். கிறீஸ்தவ வேதம் உரோமை இராச்சியம் முழுவதிலும் பரவத் துவக்கினதிலிருந்து, சிலுவையை விசுவாச சின்னமாகவும், பக்திக்குரிய பொருளாகவும், பகிரங்கமாய் எங்கும் உபயோகிக்கலானார்கள். திருச்சபை சிலுவையையும் பாடுபட்ட சுரூபத்தையும் மந்திரிப்பதற்கு விசேஷ ஜெபங்களை ஏற்படுத்தி, அவைகள் இரண்டையும் விசுவாசப் பற்றுதலோடு பிரயோகிக்கும்படி விசுவாசிகளைத் தூண்டினது.

மெய்யான சிலுவை:



நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை இப்போது எங்கே இருக்கிறது? கொன்ஸ்தாந்தீன் மகா சக்கரவர்த்தியின் தாயாகிய ஹெலனம்மாள் 326-ம் ஆண்டில், எருசலேமுக்குத் திருயாத்திரையாகச் சென்றபொழுது, கல்வாரிமலையில் பல குழிகளைத் தோண்டிப் பரிசோதித்ததின் பயனாக மூன்று சிலுவைகள் அகப்பட்டன. அவைகளில் எது நமது திவ்விய இரட்சகருடையது என்று தெரிந்துகொள்ள இயலாததால் எருசலேம் நகர் மேற்றிராணியாராகிய மக்காரியுஸ் ஆண்டவர் சொன்ன யுத்திக்கிணங்கி, அந்தச் சிலுவைகள் ஒவ்வொன்றையும் வியாதியாயிருந்த ஓர் ஸ்திரியின்மேல் வைக்க, அவைகளில் ஒன்று அவளைத் தொட்டவுடன் அவள் திடீரெனப் புதுமையாய் சொஸ்தமடைந்ததினால், அச்சிலுவையே நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை என்று தெரிந்துகொண்டார்கள். அந்த சிலுவையின் குறுக்குச் சட்டத்தை எருசலேமில் வைத்துவிட்டு, நீண்ட பாகத்தைக் கொன்ஸ்தாந்தீன்க்கு  (Constantinople) அனுப்பினார்கள். இதில் பெரிதான பாகம் சிறிது காலந்துக்குப் பிறகு உரோமைக்கு அனுப்பப்பட்டு பரிசுத்த சிலுவைக் கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. கொன்ஸ்தாந்தினோபிளில் இருந்த பாகத்தை 13-ம் நூற்றாண்டில் பிராஞ்சிய அரசராயிருந்த அர்ச். லூயிஸ் பாரீஸ் பட்டணத்துக்குக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். எருசலேமில் இருந்த பாகத்தை பெர்சியா தேசத்தார் அபகரித்துக் கொண்டுபோக. 628-ம் வருடத்தில் எராக்கிளியுஸ் (Heraclius) சக்கரவர்த்தி அதை மீட்டுக் கொண்டு வந்தார் ஆனால் முகமதியர் எருசலேமைத் தங்கள் வசமாக்கின பின், அது எங்கே போயிற்றென்று அறிய வழியில்லை.

ஆணிகள்:

நமது திவ்விய இரட்சகரை அறைந்த ஆணிகள் மூன்றா. நான்கா என்பதைப் பற்றி இன்னும் அபிப்பிராய பேதம் இருந்துவருகிறது. சில படங்களில், பாதங்களை அறைத்த ஆணி ஒன்றாகவும், வேறு சில பாடங்களில் இரண்டாகவும் காட்டியிருக்கிறது. பாதத்தைத் தாங்கும் பலகையொன்று சித்தரிக்கப்பட்ட படங்களில் பாதங்களை ஒன்றித்து ஒரே ஆணியால் அறைந்ததாகக் காட்டியிருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆணிகளைக் குறித்து அநேகர் பல சங்கதிகள் சொல்லிக் கொள்கிறார்கள். இவைகளையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இல்லை. அவைகள் விசுவாச சத்தியங்கள் அல்ல. ஆயினும், பற்பல இடங்களில் மெய்யான சிலுவையின் துண்டுகள் இருக்கிறன்றனவென்று சொல்வதை நம்ப இடமுண்டு.

பாடுபட்ட சுரூபம்:

திவ்விய பூசை செய்யும் பீடத்தில் பாடுபட்ட கரூபம் இருக்க வேண்டும் என்பதை திருச்சபையின் கட்டளை, கல்வாரி மலையில் நடந்த பலியைத் தொடர்ந்து நடத்தும் பலியே திவ்விய பூசையாகயால், இந்தக் கட்டளையின் கருத்து வெளிப்படையாயிருக்கிறது. சுற்றுப்பிரகாரங்களின் முன்னணியில் கொண்டுபோவது வழக்கமாய்ப் பாடுபட்ட சுரூபமே. கத்தோலிக்க இல்லங்களில் இதைப் பகிரங்கமான இடத்தில் வைத்துச் சங்கிக்கவேண்டும் என்பது திருச்சபையின் விருப்பம். பாடுபட்ட சுரூபத்தின் தலைப்பில் I.N.R.I. என்னும் நான்கு எழுத்துக்கள் வரைந்திருப்பது வழக்கம். "சேசு நசரேன் யூதர்களின் இராஜா" என்ற அர்த்தம் கொண்ட Iesus Nazarenus Rex Iudaeorum என்னும் இலத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் இவை. பிலாத்துஸ் இட்ட கட்டளைப்படி நமதாண்டவரை அறைந்த சிலுவையின் தலைப்பில் இந்த வார்த்தைகள் செதுக்கப்பட்ட பலகை மாட்டியிருந்ததே இதற்குக் காரணம், சிலுவையின் அடிப்பாகத்தில் ஒரு மண்டையோடும் எழும்புகளும் காட்டியிருப்பதும் உண்டு. கல்வாரிமலை எபிரேய மொழியில் கோல்கோத்தா (Golgotha) என்பார்கள். இதற்கு அர்த்தம் “மண்டையோட்டின் ஸ்தலம்". ஆதி மனிதனாகிய ஆதாம் இவ்விடத்தில் புதைக்கப்பட்டாரென்று அவர் நிமித்தம் உண்டான பாவநோஷத்தை நீக்க வந்த சேசுநாதர் அதே இடத்தில் மரித்தார் என்றும் எடுத்துக் காட்டுவதற்காக, சிலுவையின் அடியில் ஆதாமின் மண்டை யோடு காட்டப்பட்டிருக்கிறதென்று சிவர் சொல்வார்கள்.

நன்றி: ஞானோபதேசக் கோர்வை: 3-ம் பாகம். பக். 281-284. கத்தோலிக்க களஞ்சியம் இரண்டாம் பதிப்பு. திருச்சி. 1941

Sacramentals - An explanation in Tamil

 அருட்கருவிகள் - ஓர் விளக்கம்
Sacramentals - An explanation


அருட்கருவிகள் - உதாரணங்கள்


1. நம்மை அர்ச்சிப்பதற்கு தேவதிரவிய அனுமானங்களைத் தவிர வேறே வெளி வழிவகைகள் உண்டா?

திருச்சபை உபயோகிக்கும் அருட்கருவிகள் உண்டு.

2. அருட்கருவிகள் என்பதற்கு அர்த்தமென்ன?

தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாக, திருச்சபை தனது மன்றாட்டினால் நமக்கு வேண்டிய சில நன்மை சகாயங்களை, விசேஷமாய் ஞான நன்மைகளை, அடைந்து கொடுக்கும்படி உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கிருத்தியங்களே (செயல்கள்) அருட்கருவிகள் எனப்படும்.

3. இவ்விடம் கிருத்தியங்கள் அல்லது செயல்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் தற்காலமாயிருந்து. அதற்குப்பின் நிலையற்றதாயிருந்தால் கிருத்தியம் அல்லது செயல்கள் எனப்படும். உதாரணமாக: மந்திரித்தல்.

4. இவ்விடம் பொருட்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் நிலையுள்ளதாயிருந்தால், அது பொருள் எனப்படும்.

உதாரணமாக: தீர்த்தம், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள் முதலியவைகள்.

5. அருட்கருவிகள் எப்படித் தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாயிருக்கின்றன?

அருட் கருவிகளும் தேவதிரவிய அனுமானங்களைப் போல், தம் வழியாய் அடையக்கூடுமான இலௌகிக நன்மைகளையோ அல்லது ஞான நன்மைகளையோ குறித்துக்காட்டும் வெளியரங்கமான அடையாளங்களாயிருக்கின்றன.

6. தேவதிரவிய அனுமானங்களுக்கும் அருட்கருவிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

(1) தேவதிரவிய அனுமானங்களெல்லாம் சேசு கிறீஸ்துநாதரால் உண்டாக்கப்பட்டன. அருட்கருவிகளோ திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் திருச்சபை புதுத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் புது அருட்கருவிகளை உண்டாக்கலாம்.

7. அருட்கருவிகள் எத்தனை வகைப்படும்?

அவைகளை ஆறு பிரிவாய்ப் பிரிக்கலாம்.

(1) செபங்கள் அதாவது திருச்சபையால் கற்பிக்கப்பட்டு அதன் பெயரால் சொல்லப்படும் செபங்கள். உதாரணமாக: ஞானஸ்நானம், அவஸ்தைப்பூசுதல் கொடுக்கப்படும்போது சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த செபம், பூசைச் செபம், திருச்சபையின் கட்டளைப்படி குருக்கள் செபிக்கும் சங்கீதமாலை முதலியவைகள். ஒவ்வொருவரும் தனித்தனியே செபிக்கும் செபம் அருட்கருவியல்ல.

(2) தீர்ந்தத் தெளித்தலும், திருப்பூசுதலும்,

(3) மந்திரிக்கப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தல்

(4) பூசையின் துவக்கத்திலும், திவ்விய நன்மை கொடுக்கும்போதும், கட்டளை செபம் செபிக்கும்போதும் சொல்லப்படுகிற பாவசங்கீர்த்தன மந்திரம்.

(5) திருச்சபை கற்பிக்கிற தானதர்மங்களும், ஆத்தும சரீர சம்பந்தமான சகல தமக்கிரியைகளும்,

உதாரணமாக: விசுவாசப்பரம்புதல், பாலர் சபை, அர்ச். இராயப்பர் காசு முதலியவைகளுக்குச் செய்யும் தர்மம், ஞானோபதேசம் கற்றுக் கொடுத்தல், வியாதிக்காரரைச் சந்தித்தல் முதலியவைகள். மற்றப்படி ஒவ்வொருவரும் தன் இஷ்டப்படி செய்யும் தானதர்மம் அருட்கருவியல்ல.

(6) திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டு ஜனங்கள் பேரிலாவது, யாதொரு பொருள் பேரிலாவது, அர்ச். பாப்பாண்டவர். மேற்றிராணிமார்கள், குருக்கள் கொடுக்கிற சகலவித ஆசீர்வாதங்களும், அவ்விதமாய் மந்திரிக்கப்பட்ட பொருட்களும்.

8. அருட்கருவிகளால் விசேஷமாய் விளையும் நன்மைகள் எவை? 

பலவித நன்மைகளை, விசேஷமாய் ஞான நன்மைகளை வருவிக்க அருட்கருவிகளுக்குச் சக்தியிருக்கின்றது. (1) நம்மிடத்தில் ஸ்திரமான பக்திப் பற்றுதலை எழுப்பி, நாம் பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்யும்படி வேண்டிய உதவி வரப்பிரசாதத்தைப் பெறுவிக்கிறதுமின்றி, பாவப்பொறுத்தலை அடைய நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

(2) மனப்பற்றுதலற்ற சகல அற்பப்பாவங்களும் மன்னிக்கப்படும்.

(3) பசாசானது இருக்கக்கூடிய இடங்களிலும், ஆட்களிலும், பொருட்களிலும் நின்று அதைத் துரத்துகின்றன.

(4) அநேக பிரபஞ்சத் தீமைகளினின்று இரட்சிக்கின்றன. இப்படியே வியாதி, தொத்துநோய், இடி, பஞ்சம் முதலிய துன்ப துரிதங்களிலும், ஆபத்து விபத்துக்களிலும் நின்று காப்பாற்றுகின்றன. மேலும் பற்பல இலௌகீக நன்மைகளையும் அளிக்கின்றன. உதாரணமாக: மழை, சௌக்கியம், வெள்ளாண்மை.

(5) மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு இன்னும் வரவேண்டிய அநித்திய ஆக்கினையும் நீங்கிப்போகலாமென்பது சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.

9. அருட்கருவிகளுக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு வேண்டிய ஆயத்தம் என்ன?

விசுவாசம், பக்தி, பாவங்களின் மேல் மனஸ்தாபம் முதலிய பற்றுதல்கள் அவசியம். மெய்யான மனஸ்தம் இல்லாமல் யாதொரு அற்பப்பாவமும் மன்னிக்கப்படாது. அருட்கருவிகளைப் பெறுபவர்களின் ஆயத்தத்துக்குத் தகுந்தபடி அதிகமான பலனைப் பயக்குவதினால், அவைகளால் வரும் நன்மைகளை ஏராளமாய் அடையும்படி நல்ல ஆயத்தமாயிருக்க வேண்டியது

புதன், 20 டிசம்பர், 2023

சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்! - Feast of Annunciation (March - 25)

Source: Salve Regina, March 2007 


சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!

வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)


ரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!

அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி!  ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது. 

ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)

மாமரியின் தகுதி!

சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு  என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.

திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.

மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!

கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.

கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 18 - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica)

 அர்ச். மோனிக்கம்மாள்

"ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன"




பிரசித்திப்பெற்ற வேதபாரகரும் திருச்சபைத் தூண்களில் ஒருவருமாகிய அர்ச். அகுஸ்தீன் என்பவரின் தாயாகிய மோனிக்கம்மாள், ஆப்பிரிக்காவின் வடபாகத்தில் பக்தியுள்ள குடும்பத்தில் 332-ம் ஆண்டில் பிறந்தவள். மோனிக்காவின் தாய் தந்தையர் தங்கள் பிரிய குமாரத்தியைப் புண்ணியவதியான ஓர் வேலைக்காரி வசம் சிறு வயதிலேயே ஒப்படைத்திருந்தனர். இந்த வேலைக்காரி புகட்டிய நற்புத்திமதி, மோனிக்கம்மாள் தெய்வபயத்திலும் தல்லொழுக்கத்திலும் நாளடைவில் அபிவிருத்தியடைய தூண்டுகோலாயிருந்தது. திருமண பருவம் வந்தவுடன், மோனிக்கம்மாள் பத்ரீசியுஸ் என்னும் பிற மத வாலிபனை மனம்புரிய நேர்ந்தது. இவள் தனது அடக்கவொடுக்கம், கீழ்ப்படிதல், அன்பு, தயை, தாட்சண்யம் முதலிய அருங்குணங்களால் தன் கணவனின் நேசபாசத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். கணவன் அன்புடையவனாயிருந்த போதிலும் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். அவன் கோபமாயிருக்கும்போது மோனிக்கம்மாள் எதிர்த்துப் பேசாமல் பொறுமையாயிருப்பாள். கோபம் தணிந்தவுடன் மிக்க அன்புடன் அவனுக்கு தற்புத்தி புகட்டி அவனது சீர்கேடான நடத்தையைச் சீர்திருத்த முயற்சிப்பாள். கடைசியாக இப்பதி விரதையின் ஜெகுபத்தினால் பத்ரீசியுள் மனத்திரும்பி பாக்கியமான மரணம் அடைந்தான். மோனிக்கம்மாளின் அயல் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரோடு சண்டையிட்டு அடி உதை பட்டு முகத்தில் காயங்களோடு வந்து அவளிடம் முறையிடுவர். "உங்கள் நாவை அடக்கினால் இத்தகைய கேடு உங்களுக்கு வராது" என்பதே மோனிக்கம்மாள் இப்பெண்களுக்கு அடிக்கடி கூறும் புத்திமதி. இந்தப் புத்திமதியை நன்குணர்ந்து இதன்படி நடந்து கொண்டவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி சமாதானம் நிலைபெறும். மற்றவர்கள் குடும்பங்களோ ஓயாத போர்க்களமாகவே இருக்கும். மோனிக்கம்மாளுக்கு ஏழை

களின் மீது அணைகடந்த இரக்கமுண்டு. தனது கையினால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பது அவளுக்கு ஆனந்தம். அனுதினமும் திவ்விய பலிபூசை காணத் தவறமாட்டாள். காலை மாலை தேவாலயத்தில் நடக்கும் பொது ஜெபத்திற்கு போவது இவ்வுத்தமியின் சிறந்த வழக்கம்.

மோனிக்கம்மாளுக்கு மோட்சவாசிகள்மீது உருக்கமுள்ள பக்தி பற்றுதலுண்டு, வேதசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அவர்களுடைய உதவியை அடிக்கடி இரந்து மன்றாடுவாள். வேத அனுசாரத்தைச் சார்ந்த எதையும் சிறிதாக எண்ணி அலட்சியம் செய்யமாட்டாள். சர்வேசுரனுக்கடுத்த காரியங்களில் சகலமும் பெரிதே என்று மதித்து நடந்துவந்தாள். தேவ சிநேகத்தை முன்னிட்டுச் செய்யும் அற்ப நற்கிரிகைகூட தேவ சமுகத்தில் மிக்கப் பேறுபெற்ற மகத்தான புண்ணிய முயற்சியாக மாறிவிடுமென்பது அவளின் திடமான நம்பிக்கை.

மோனிக்கம்மாள் ஜெபத்திலும் தபத்திலும் வெகுநேரம் செலவழித்த போதிலும் தனது பிள்ளைகளைத் தெய்வபக்தியில் வளர்ப்பது கிறீஸ்தவத் தாயின் கடமை என எண்ணியிருந்தான். இவளுக்கு அகுஸ்தீன், நவீஜியுஸ் என்னும் இரண்டு புத்திரர் இருந்தனர். மூத்த குமாரனாகிய அகுஸ்தீன் கல்வி கற்க கார்த் தேஜ் நகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான். இவ்வாலிபன் பக்தியுள்ள தாயின் கண்காணிப்பிலிருந்து வெகு தூரம் சென்ற பின் மனிக்கேயர் என்னும் பதிதர் வலையில் சிக்கித் தனது ஞானக் கடமைகளைக் கைநெகிழ்ந்து எதேச்சையாய்த் திரிந்து தன் அன்புள்ள தாயின் இருதயத்திற்கு அளவற்றத் துயரத்தை வருவித்தான். மோனிக்கம்மாள் தனது மகனுக்கு எவ்வளவுதான் நற்புத்தி கொல்லியும் பயனற்றுப்போனதை கண்டு, அவனுக்காக அழுது கண்ணீர் சிந்தி இடைவிடாது தேவ இரக்கத்தை மன்றாடுவாள்.

அகுஸ்தீன் உலக சாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சிபெற்று பட்டங்களைப் பெற்ற பின்னர், தாய்க்குத் தெரியாமல் கப்பல் ஏறி அன்னியதேசம் சென்று தனது இஷ்டப்படி திரியலாம் என்றெண்ணி இத்தாலிக்குப் பயணமானான். மகன் தப்பித்து ஓடிவிட்டான் என்று அறித்த அன்புள்ள அன்னை அவனைத் தேடிப்பிடிக்கும்படி மறு கப்பலில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள். மிலான் பட்டணத்தில் தாயும் மகனும் ஒருவரை யொருவர் சந்தித்தனர். வேதபாரகராகிய அர்ச். அம்புரோஸ் அச்சமயம் மிலான் நகர் ஆயராயிருந்தார். இந்தப் பரிசுத்த ஆயரின் புத்திமதிகளையும், போதனைகளையும் கேட்டு அகுஸ்தீன தன் பதித அபத்தங்களை விலக்கி, கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வக் குமாரன் ஆனார். இந்த ஊதாரிப் பிள்ளை மனந்திரும்பி தந்தை வீடு சேர்ந்ததை அறிந்த பக்தியுள்ள தாய் ஆண்டவருக்குத் தாழ்மையுடன் நன்றி சமர்ப்பித்து, "ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன" என்று மன்றாடினான். 

அகுஸ்தீன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பியதுமன்றி. குருப்பட்டம் பெற்று. தன் கல்வி, சாதுரியம், திறமை, சத்துவம் சகலத்தையும் தேவ ஊழியத்தில் செலவிடத் தீர்மானித்திருப்பதாக தனது அன்பு தாய்க்குத் தெரிவித்தார். இதைக் கேட்ட உத்தம தாய் ஆனந்தக் கண்ணீர் சொரித்து, தனது மகனை தோக்கி: “அப்பா, மகனே. என் வேலை முடித்துவிட்டது. நீ கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து சர்வேசுரனுடையப் பிள்ளையாயிருப்பதைப் பார்க்கும் பொருட்டே சிறிதுகாலம் இவ்வுலகில் வாழ ஆசைப்பட்டேன். நல்ல ஆண்டவர் நான் கேட்டதற்கு மேல் எனக்கு அளித்தருள கிருபை செய்திருக்கிறார். நீ திருச்சபையில் சேர்ந்தது மாத்திரம் போதாதென்றாற்போல் உன்னைத் தமது திவ்விய ஊழியத்திற்கும் தெரிந்துகொண்டார். எனது பாக்கியமே பாக்கியம்" என்றாள். மோனிக்கம்மாளின் அந்தரங்க ஆவல் முற்றிலும் நிறைவேறியது. இனி மரணத்திற்கு ஆயத்தம் செய்தாள். அவளுடைய குமாரர் இருவரும் தங்கள் சொந்த தேசமாகிய ஆப்பிரிக்காவுக்குத் தாயை அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இத்தாலியின் துறைமுகப்பட்டனமாகிய ஓஸ்தியாவில் மோனிக்கம்மாளுக்கு கடின ஜுரம் கண்டது. பிள்ளைகள் தன்னைச் சொந்த தேசத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாயிருப்பதை அறிந்து மோனிக்கம்மாள் சொல்வாள்: "என் பிரிய மக்களே. தான் அன்னிய நேசத்தில் இறந்து என் சரீரம் நமது நாட்டிற்குத் தூரமான நாட்டில் புதைக்கப்பட்டாலென்ன? ஆண்டவருக்குத் தூரம், சமீபம் உண்டோ? உலக முடிவில் மாமிச உத்தான நாளில் என் சரீரம் இருக்குமிடம் ஆண்ட வருக்குக் தெரியாதோ? மற்றவர்களோடு என்னையும் எழுப்பி எனக்கு மோட்ச பாக்கியம் அளித்தருளுவாரன்றோ? உங்கள் தாயை எவ்விடத்திலென்கிலும் அடக்கம் பண்ணுங்கள். என் சரீரத்தைப்பற்றி எனக்கு யாதொரு கவலையுமில்லை. ஆனால் ஒரேயொரு மன்றாட்டு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் மரித்தபின் என்னை மறவாமல் என் ஆன்ம இளைப்பாற்றிற்காக திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுங்கள். எனக்காக அடிக்கடி வேண்டிக்கொள்ளுங்கள்." 

இவ்வாறு மோனிக்கம்மாள் தனது அருமைப் பிள்ளைகளுக்குக் கடைசி அறிவுரை கூறிய ஐந்தாம் நாள் இக்கண்ணீர் கணவாயை விட்டு கருணா கரத்து கடவுளாகிய தனது கர்த்தர் பதம் சென்றாள். அவள் மரித்தது

387-ம் வருடம். தாயை அடக்கம் பண்ணியபின் இரு சகோதரரும் தங்கள் சொந்த தேசம் திரும்பினர். மூத்தவர் தனது தீர்மானப்படி குகுப்பட்டம் பெற்றார். அவருடைய பரிசுத்த தனத்தையும் அபாரக் கல்வியறிவையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் அவரை ஆயராக நியமித்தார். அருஸ்தின் தேவ ஊழியத்தில் அயராது உழைத்து அதேக அரிய நூல்களை எழுதித் திருச்சபையின் புகழ்பெற்ற வேதபாரகராக இன்றும் விளங்குகிறார்


அர்ச். மோனிக்காம்மாளுக்கு புனிதர் பட்டம் 390ம் ஆண்டு Pope . Siricius  அவர்களால் கொடுக்கப்பட்டது. 

அவளுடைய திருநாள் மே மாதம் 4ம் தேதி.


Source: Sancta Maria 2018 - April - June

அருட்கருவிகள் - கோவில் மணிகள் (Church Bells)

 கோவில் மணிகள்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




பற்பல பொது நிகழ்வுகளுக்கும் வேத நிகழ்வுகளுக்கும் மணி அடிக்கிற வழக்கம் தொன்மையானது. எஜிப்தியர் ஓசரிஸ் என்னும் தெய்வத்தை வழிபடுவதற்கு மணி உபயோகித்தார்கள் என்று தெரியவருகிறது. ஆனால் அந்த மணிகள் வெகு சிறியவையாகவும், தட்டை வடிவமான சேமக்கல் உருவமாகவும் இருந்தன. மோயீசன் எஜிப்து தேசத்துக்குக் குருக்களுடைய பழக்க வழக்கத்தை யூதருடைய ஆராதனை முறையில் ஏற்படுத்தினார் என்று சொல்ல நியாயம் உண்டு.

உரோமையர் தங்கள் வேத சடங்குமுறைகளில் மணி உபயோகப்படுத்தினதாகத் தெரியவில்லை. சண்டையில் ஜெயித்தபின் சந்தோஷங் கொண்டாடுவதற்காக நடத்தின ஊர்வலங்களில் மணி அடித்துக்கொண்டு போவது அவர்களுக்குள் வழக்கமாயிருந்தது.

கிறீஸ்தவ ஆலயங்களில் மணியின் உபயோகம் கி.பி. 400-ம் ஆண்டில் ஏற்பட்டது. இத்தாலியாவிலுள்ள நோலா நகரத்து மேற்றிராணியாராகிய பவுலினுஸ் என்பவர் முதன்முதல் இந்த வழக்கத்தை உண்டு பண்ணினார் என்று கூறுகிறார்கள். அக்காலங்களில் தேவாராதனை சடங்குகளுக்கு மட்டுமின்றி, யாதொரு அபாயத்தை ஜனங்களுக்கு அறிவிப்பதற்காகவும் கோவில் மணியை அடிப்பார்கள். இதனிமித்தம் தேவாலயங்களில் மணிகள் அமைக்கிற வழக்கம் வெகு துரிதமாய் எங்கும் பரவிற்று. நமது நாட்டில் இந்தப் பூர்வீக வழக்கத்தை அநுசரித்து, இன்னும் சிற்சில கிராமங்களில் நெருப்புப்பிடித்தல் போன்ற விபத்துக்களை அறிவிப்பதற்குக் கோவில் மணியை அடிப்பதுண்டு. கோவில் மணி உபயோகம் கி.பி. 604-ம் ஆண்டில் சபினியன் என்னும் பாப்பானவர் காலத்தில் திருச்சபையின் அங்கீகாரம் பெற்றது. சிறிது காலத்துக்குப் பிறகு மணியை மந்திரிப்பதற்கு விசேஷ சடங்கு ஒன்று ஏற்பாடாயிற்று. கோவில் கோபுரங்களில் பெரிய மணிகளை அமைக்க ஆரம்பித்தது 11-ம் நூற்றாண்டுக்கு முன் அல்லவென்று சொல்லலாம்.

ஐரோப்பாவிலுள்ள பலவித காட்சிசாலைகளில் பழமையான பல மணிகளைக் காணலாம். விசேஷமாய் அயர்லாந்து தேசத்திலும், ஸ்காட்லாண்டு தேசத்திலும் வெகு பூர்வீகமான மணி வகைகள் இன்றும் இருக்கின்றன. அவைகளில் சில சதுர வடிவமாகவும், வெண்கலம் அல்லது இரும்புத் தகடுகளால் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. இதனால் அவைகளின் நாதம் கேட்பதற்குக் கோரமாய் இருந்ததுமல்லாமல், இக்காலத்து மணிகளைப்போல் அவ்வளவு ஓசையுள்ளதுமல்ல என்பது நிச்சயம்.


கீழ்த்திசை கிரேக்க ஆலயங்களில் 9-ம் நூற்றாண்டில் மணி உபயோகம் ஆரம்பித்தது. ரஷ்ய தேசத்திலுள்ள பெரிய மேற்றிராசனக் கோவில்களில் தான் உலகப் பிரசித்திப் பெற்ற மணிகள் இருந்தன. எல்லாவற்றிலும் மிகப் பெரிதான மணி மாஸ்கோ பட்டணத்தில் உள்ளது. அது 19 அடி உயரமும், சற்றேறக்குறைய அதேயளவு குறுக்களவிலும் இருந்தது.

சில தேவாலயங்களில், 8, 12, அல்லது 14 மணிகள் வரிசையாய்த் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இவைகள், சங்கீதத்தின் எழு ஸ்வரங்களும் தொனிக்கும்படியாக வார்க்கப்பட்டவை. இவைகள் அடிக்கப்படும்போது, செவிக்கு இனிமையான நாதத்தையும், வெகு தூரம் கேட்கக்கூடிய அளவில் ஓசையையும் உண்டாக்குகின்றன என்பது சொல்லாமலே விளங்கும். குறிப்பான சில வசனங்கள் மணிகளில் செதுக்கப்பட்டிருப்பது சகஜம். அவ்வசனங்கள் மணியின் பிரயோகத்தை எடுத்துரைக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பழைய ஆலயங்களில் அநேக மணிகளின் மேற்பரப்பில் செதுக்கப்பட்டுள்ள சில வாக்கியங்களை நாம் வாசிக்கும் பொழுது அவைகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும். அவைகளில் சில வசனங்கள் பின்வருமாறு:

"துக்கத்தொனியால் மரணமதைத் தெரிவிக்கிறேன்” 

“மின்னல், இடியின் இன்னலதைத் தவிர்க்கிறேன்” 

"ஓய்வுநாளில் ஆலயத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்” 

"தூங்குபவர் துரிதமாய் துயில்விட்டெழத் தொனிக்கிறேன்” 

சண்டமாருதத்தைச் சதா சாந்தப்படுத்துகிறேன்” "

"அபாயம் நேரிடுங்கால் அபயமிட்டு அலறுகிறேன்...." 

என்கிற வாக்கியங்கள் சில மணிகளில் காணக்கிடக்கின்றன.

மின்னல், இடி, புயல் இவைகளால் ஆபத்து நேரிடாவண்ணம் தடுப்பதற்குக் கோவில் மணிச்சத்தம் நிச்சயமான ஓர் சாதனம் என்கிற எண்ணம் அக்காலத்து ஜனங்களுக்கு இருந்ததாகத் தெரியவருகிறது. முத்தின காலங்களில் சாவுமணி அடித்த விதமும் குறிப்பிடத்தக்கத்து. இறந்தவனுடைய வயது எத்தனையோ அத்தனை தடவை தட்டு மணி அடிப்பதுதான் வழக்கமாயிருந்து.

திரிகால ஜெபத்துக்கும், திவ்விய பூசை, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய கோவில் ஆராதனைகளுக்கு முந்தியும் மணி அடிப்பது வழக்கம். சில இடங்களில் நடுப்பூசை நேரத்திலும் கோவில் பெரிய மணியை அடிப்பதுண்டு. நியாயமான விக்கினத்தை முன்னிட்டுத் திவ்விய பலிபூசைக்கு வர இயலாதவர்களும் தாங்கள் இருக்கிற இடத்திலிருந்து, நற்கருணையில் எழுந்தருளிவருகிற ஆண்டவரை ஆராதிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த வழக்கம் 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள். இந்த மணிச்சத்தங் கேட்டவுடன், எல்லோரும் எங்கேயிருந்தாலும் ஒரு நிமிடம் முழந்தாட்படியிட்டு ஆராதனை முயற்சி செய்வது வழக்கமாயிருந்தது


மணி மந்திரித்தல்:



மேற்றிராணியார் அல்லது அவரிடமிருந்து விசேஷ அதிகாரம் பெற்ற குருவானவர் மாத்திரம் மணி மந்திரிக்கிற சடங்கை நிறைவேற்றலாம். மணியை மந்திரிக்கிறவரும் மற்ற குருக்களும் அதைச் சுற்றிவருவதற்கும் அதன் உட்புறத்தைத் தொடுவதற்கும் விக்கினமில்லாத விதமாய் கோளில் நடுச் சாலையில் தலைப்பில் அல்லது வேறு முக்கியமான இடத்தில் மணியைத் தொங்கவிட்டு வைக்கவேண்டும். மேற்றிராணியாரும் குருக்களும் அதை தொங்கவிடப்பட்டிருக்கிற இடத்துக்குச் சுற்றுப் பிரகாரமாய் ஏழு சங்கீதங்களைச் சொல்லித் திருச்சபைக்கும் அதைச் சேர்ந்த எல்லோருக்கும் தேவ இரக்கத்தை மன்றாடிக்கொண்டு போவார்கள். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், மேற்றிராணியார் தீர்த்தம் மந்திரித்து, அதைக் கொண்டு மணியைக் கழுவுவார். அவருக்கு உதவியாய் நிற்கிற குருக்கள் மணியின் உள்ளும் புறமும் மேற்பரப் பெல்லாம் கழுவி முடிப்பார்கள். இதனிடையில் வேறு ஏழு சங்கீதங்கள் சொல்லப்படும். சங்கீதங்களின் முடிவில் சொல்கிற ஜெபம் வெகு நேர்த்தியானது. சர்வேசுரன் தமது பிரஜைக்குத் தமது அருளை ஈந்து, மணிச்சத்தத்தைக் கேட்பதான அவர்களுடைய விசுவாசமும் பக்தியும் அதிகரிக்கவும், துஷ்ட அரூபியின் வஞ்சனைகளெல்லாம் பயனற்றுப்போகவும், ஆரோக்கியம் உண்டாகவும், மணிச்சத்தத்தைக் கேட்டு பசாசுக்கள் பறந்தோடவும் வேண்டுமென்று மன்றாடுகிறார். இன்னுமொரு ஜெபம் சொன்னபின், அவஸ்தைபூசுதலில் உபயோகிக்கிற அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் ஏழு இடங்களில் மணியின் வெளிப்புறத்தில் தடவுகிறார். மீண்டும் வேறொரு ஜெபம் சொல்லி மணியின் உள்வாயில் பரிமள தைலத்தால் நாலு சிலுவை அடையாளம் வரைகிறார். வேறு சில ஜெபங்களும் சங்கீதமும் சொன்னபின்னர், பெரிய பாட்டுப் பூசையில் செய்வதுபோல் சுவிசேம் பாடப்படும். இந்த சுவிசேத்தின் பாகம், நமது திவ்விய இரட்சகர் மார்த்தா, மரியம்மாள் என்னும் இரு சகோதரிகளையும் பார்க்கப்போன சம்பவத்தைக் குறிக்கிறது. கோவில் மணிச்சத்தங் காதில் விழும்போதெல்லாம், மரியம்மாளைப் போல் கடவுளைத் தியானிப்பதே மேலான காரியம் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

Epiphany of Our Lord - ஞானத்தைத் தேடி தரிசிப்போமாக!

Epiphany of Our Lord

ஞானத்தைத் தேடி அதில் வளரவேண்டும் என்ற உணர்வு மனிதர்களிடம் எப்பொழுதும் இருந்துவந்தது. மனித புத்தியானது தான் அநுதினம் எதிர்கொள்ளும் காரியங்கள். பொருட்களைப் பற்றிய உண்மைகளை இன்னும் அதிகமதிகமாய் அறிய விரும்புகிறது. ஆகையால்தான் மக்கள் சில காரியங்களைக் குறித்த, தங்களின் அறியாமையை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை! இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம். ஒரு மனிதன் தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறான். அது முதல் தடவையாதலால் வீட்டு முகவரி இருந்தும், அவனால் சரியான தெருவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் வேறொருவரின் உதவியை நாடுகிறான். முன்பின் தெரியாத அந்த மனிதன் தமக்கும் சரியான முகவரி தெரியவில்லையானாலும், அந்த இடத்தை அறிந்தவன் போல் பாவனை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், எப்படியாவது அவனுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று விருப்பம் கொண்டதால், தவறான வழியைக் காட்டிவிடுவான். ஏன் இந்த மனிதன் தவறான வழியைக் காட்டிட வேண்டும்? ஏனெனில் தனக்கு உண்மையிலேயே பாதை தெரியாது என்ற தமது அறியாமையை வெளிக்காட்டிக்கொள்ள அவன் விரும்ப வில்லை. இப்படி தமது அறியாமையை வெளிப்படுத்த விரும்பாதவன் எப்படி, அதனை போக்கிக்கொள்ள முடியும்? அதிகமதிகமாய் தேடி அறிவை வளர்ப்பதே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவு வாயிலாகும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஞானத்தை அடைய வேண்டுமென்ற தாகமே, அந்த கீழ்த்திசை ஞானிகள் சகல ஞானங்களின் ஊற்றாகிய நித்திய ஞானமானவரை குழந்தை சேசுவை தேடிக்கொண்டுவர தூண்டியது. நூற்றாண்டு காலமாக "பூமியின் எல்லைகளையும்" (சங். 2:8) சொந்தமாகக் கொண்டவரான, நித்திய ஞானமானவரை ஒரு நட்சத்திரத்தின் மூலமாக அஞ்ஞானிகளுக்கு முன்னுரைக்கப்பட்டது. அது எப்படியெனில்: "...அவரைக் காண்பேன், ஆனால் இப்போதல்ல; அவரை தரிசிப்பேன், ஆனால் சமீபித்திருந்தல்ல. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல்  இஸ்ராயேலியரிட மிருந்து எழும்பும்; அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும், சேத் புத்திரர்களெல்லோரையும் நாசம் பண்ணும்" (எண். 24:17). இது பாலாமின் தீர்க்க தரிசனமாகும். அஞ்ஞானியான பாலாம் இஸ்ராயேலியரை சபிக்கக் கேட்டுக்கொள்ளப்பட, அவனோ அவர்களை ஆசீர்வதிக்கும் கட்டாயத்துக்குள்ளானான்.

மூன்று இராஜாக்கள்" என்று அழைக்கப்படும் ஞானிகளான கஸ்பார், மெக்கியோர் மற்றும் பல்தஸார் பாலாமின் இந்த தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தனர். அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு அது மோட்சத்தி லிருந்து தங்களுக்கு வந்த அழைப்பு என உறுதிகொண்டனர் அவர்களின் இருதயத்தினுள் உள்ளரங்க வரப்பிரசாதம் செயல்படவே, நித்திய ஞானமானவரைத் தேடும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களது பயணம் எதனாலும் தடைபடவில்லை. குடும்பத்தைப் பற்றிய கவலையோ, களைப்பைத் தரும் நீண்ட பயணத்தைப் பற்றிய பிரமிப்போ, எதனையும்பற்றி கவலைப்படாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாலைவனத்தின் கடும் வெப்பத்தைப்பற்றிய சுவக்கமோ, கொள்ளைக்காரர்களைப்பற்றிய அச்சமோ, எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறப்பட்டதுபோல் "தேடியவர்கள் சர்வேசுரனைக் கண்டுகொண்டனர்." அவரை தரிசித்தார்கள். ஏனெனில்ஞானம் அவர்களோடு இருந்தது.

ஆம்! எண்ணில்லா கடினமான துன்பங்களுக்குப் பிறகு, கர்த்தரை கண்டுகொண்டார்கள். அவரை ஆராதித்தார்கள். ஞானத்தைப்பற்றி பெரிய நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்துபவராக அல்லாமல், அமைதியான குழந்தையாகக் கண்டுகொண்டார்கள். ஒரு தாயின் கவனமான அரவணைப்பில், பாதுகாப்பில் அவர் இருக்கக் கண்டு கொண்டனர். இதன் மூலம் சர்வேசுரன் தாமே தாழ்ச்சியின் அற்புதத்தை பிறருக்கு காண்பித்தார்.

நித்திய ஞானத்தோடு தொடர்புகொண்ட அவர்கள், கிறீஸ்துவின் பிறப்பை ஏரோதனுக்கு சொல்லாது, மாற்றுப் பாதையில் தங்களது நாடுகளுக்குச் சென்றனர். அவர்களது இச்செயலே ஞானிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு தந்தது என்றால் மிகையாகாது!

நாமும்கூட இந்த ஞானிகளைப் போல கிறீஸ்துவை தேடிவந்து கண்டு ஆராதிக்கவும், அவரது சுவிசேஷ சட்டங்களின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலமாகவே நித்தியமானவரோடு நம்மையே இணைத்துக்கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் பாக்கியம் பெறுவோமாக!


Source: Salve Regina - Jan. - Feb. 2011

அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்

 "அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்" (லூக். 2:7)





திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப்பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பார் என்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத்திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன்  அடிமைத்தனத் தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீது என்பவர் இராஜபட்டம் பெற்ற 1032-ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவகுமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையாஸ் வசனித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப்பிறப்பு சம்பவித்தது. 

சேசு இரட்சகருடைய வருகை!

நம் பரிசுத்த வேதத்தை உண்டாக்கியவரான சேசு கிறீஸ்துநாதர் பெத்லெகேமில் பிறந்ததும், பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து மரித்ததும் சரித்திர வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். உலக சரித்திரமும் இவற்றிற்கு சான்று பகர்கிறது. எவராலும் மறுக்கப்படாத விதமாய் இவைகள் எண்பிக்கப்பட்டிருக்கின்றன.

பெத்லெகேமில் குழந்தையாய் பிறந்த சேசு மெய்யாகவே கடவுள். அவர் ஏனைய குழந்தைகளைப் போன்றவரன்று: அவர் உண்மை யாகவே கடவுள் என்று எண்பிக்க பல அதிசயங்கள் நடைபெற்றன.

கடவுளாகிய தேவகதன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றும்படி இப்பூமிக்கு வந்தார். பாஸ்கு வாரத்தில் மனித மீட்புக்காக உயிர்விட்டார். தமது இரட்சிப்பின் பண்டிகையான அர்ச்சியசிஷ்ட வார திருநாட்களுக்கு, கர்த்தர் பிறந்த திருநாள் தயாரிப்பாகும். மோட்சம் போவதற்கான வழியை மனிதருக்கு காட்ட சேசு இப்பூமிக்கு வந்தார். மோட்ச பாதையை பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியைத் தர வந்தார். எனவே கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளாகும்.

கர்த்தர் பிறந்த திருநாளையொட்டி ஒவ்வொரு கோவிலிலும், இல்லங் களிலும் குடில் தயாரிப்பதுண்டு. குடிலின் மத்திய ஸ்தானம் குழந்தை சேசுவே. அவரருகில் அவருடைய மாதாவான மரியாயையும் அவரை வளர்த்த தந்தை சூசையப்பரையும் காணலாம். தேவ குழந்தையை தரிசிக்க வந்த இடையர்களையும் அங்கு பார்க்கிறோம். சேசு பிறந்த சில நாட்களுக்கு பின் அவரை தரீசிக்க வந்த மூன்று இராஜாக்களின் உருவங்களை ஜனவரி 6-ம் நாளாகிய மூன்று இராஜாக்கள் திருநாளையொட்டி அங்கு வைப்பார்கள். கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளெனக் காட்ட குடிலில் நட்சத்திரங்களையும் காணலாம்.

சேசுவின் பிறப்பானது உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றி ருக்கிறது. அவர் பிறந்த காலத்தில் உரோமை இராஜ்ஜியத்தை செசார் அகுஸ்துஸ் ஆண்டுவந்தான்.

உரோமை இராச்சியம் உலகில் அநேக பகுதிகளில் பரவியிருந்தது. அந்தப் பகுதிகளிலெல்லாம் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக அரசன் கட்டளை பிறப்பித்தான். ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர்களை எழுதிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் தங்கள் சொத்த ஊர்களுக்குப் போனார்கள். சூசையப்பர் தாவிதின் கோத்திரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால் கர்ப்பிணியான கன்னிமரி யுடன் பெயர் எழுதிக்கொடுக்கும் பொருட்டு, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் நகரத்துக்குச் சென்றார். அந்த நாட்களில் எரோது அரசன் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான் (மத் 2:1). சேசு பிறந்த இரவில் அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து தங்கள் கிடைக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். சேசு பிறந்த பெத்லெகேம் ஊர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஊர் இன்னும் இருக்கிறது. சேசு பிறந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள். சேசுவை துணிகளால் சுற்றி முன்னிட்டியில் (தொழுவத்தில்) கிடத்தினார்கள். அவரைப் பெற்ற தாய் மரியம்மாள் என்றும், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் என்றும் தெரியும். இடையர்கள் போய் சேசுவை சந்தித்தார்கள். கீழ் திசையிலிருந்து சோதிட சாஸ்திரிகள் (மூன்று இராஜாக்கள்) அவரைத் தரிசிக்க சென்றனர். 

சேசுவின் பிறப்பானது ஏனையக் குழந்தைகளைவிட அவர் மேம்பட்டவரெனக் காட்டுகிறது. அவரது பிறப்பை சூசையப்பருக்கும் இடையருக்கும் சம்மனசுக்களும், கீழ்த்திசை சோதி சாஸ்திரிகளுக்கு ஒரு நட்சத்திரமும் அறிவிக்கின்றன. சீனாய் மலையில் கடவுள் தம்மை மோயீசனுக்கு வெளிப்படுத்தியபோது தெய்விக ஒளி காணப்பட்டது போல சேசு பிறந்த இரவில் தெய்விக பிரகாசம் பரலோகத்திலிருந்து வந்து காணப்பட்டது என லூக்காஸ் சுவிசேஷத்தில் (2:9) பார்க்கிறோம். கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் கடவுளால் அனுப்பப்பட்ட அதிசய நட்சத்திரமாகும்.

நம்மை இரட்சிப்பதற்காகவே சேசு பிறந்தார்!


நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்" (லூக் 1:31) என கன்னிமரியம்மாளிடம் சம்மனசானவர் அறிவித்தார். சேசு என்றால் இரட்சகர் என்று பொருள். "இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்" என இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்தார் (லூக். 2:11). கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகளுக்கு நோன்றிய நட்சத்திரமானது சேசு அனைவருக்கும் இரட்சகர் எனக் காட்டிற்று. இந்த இரட்சிப்பானது மானிட சந்ததிக்கு ஒரு நல்ல செய்தியாரும்; இந்த நல்ல செய்தியோ பெரும் மகிழ்ச்சியின் ஊற்று, “இதோ எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று இடையர்களுக்கு தேவ தூதன் தெரிவித்தார் (லூக் 2:10). இந்த நல்ல செய்தியானது ஒரு புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை சுவிசேஷப் புத்தகம் என்கிறோம்.

இடையர்கள் போய் சேசுவை கண்டார்கள். அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும், மகிழ்ச்சியும் யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அவன் ஒளியும் சந்தோஷமும் அடைவான். பெத்லெகேம் நகர் மக்களோ சேகவை சட்டைப் பண்ணவில்லை. கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பெற்றார்கள். ஜெருசலேம் நகர் குருக்களோ, சேசுவைப் போய் பார்க்க விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விகும்பினான். சாதாரண மக்களும் அறிஞர்களும், ஏழைகளும் செல்வந்தர்களும் சேசுவைப் பார்க்கப் போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு  நேசிக்கிறார். யூதர்களும் புறஜாதியாரும் சேசுவிடம் போனார்கள்.  சேசு அனைவருக்கும் இரட்சகர் 

கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பலிபூசை நிறைவேற்றுகின்றனர். முதற் பூசையானது சுவிசேஷத்தில் சொல்லப் பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. இரண்டாவது பூசையானது இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும் ஆத்துமங்களில் சேசு பிறப்பதைக் காட்டுகிறது. சேசு கடவுளாகிய மட்டும் நித்தியத்திளிருந்தே இருக்கிறார் எனக்காட்ட “ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார்" என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்றுக் காட்ட “வார்த்தையானவர் மாம்சமானர்" என்றும், தாம் உண்டாக்கிய திருச்சபையில் வசிக்கும் சேசு ஞான விதமாய் ஆத்துமங்களில் பிறக்கிரா ரென்று காட்ட “யார் யார் அவரை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்" என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும் கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டுமென்பதையும் மூன்று பூசைகளும் நம் நினைவுக்கு கொண்டுவருகின்றன. அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல் மாசற்றவர்களாக வாழ்வதே. “நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்".

சேசு தம்மை சாஸ்திரிகளுக்கு காண்பிப்பதை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த சாஸ்திரிகள் புறஜாதியார் அனைவரையும் குறிக்கிறார்கள். சகல ஜாதி ஜனங்களும் இரட்சகரிடம் வருவார்கள் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும், தாவீது இராஜாவும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

கர்த்தர் பிறந்த திருநாளன்று பிறருக்கு நாம் கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு; என்றாலும் கர்த்தர் பிறந்த திருநாளை யொட்டி நாம் பிறருக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சேசு தம்மை இடையர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம் இருதயங்கள் உயிருள்ள குடில்களாக வேண்டும். அந்த குடில்களில் சேசுவை ஏற்றுக்கொள்ள அவற்றை தயாரிக்கும்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும். பாவமோ, பாவத்தின் மேல் பற்றுதலோ, நம் இருதயத்தில் இருக்கலாகாது. அப்படியானால் திவ்விய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

J.M.N உத்தம மக்களை உருவாக்க: 583.# 23

Source : Salve Regina 2010 October - December



சனி, 16 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17 - அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)

 கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிதத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது)

அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)


அது. 1566 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிநாட்கள். அன்று இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வண்ண, வண்ண அலங்கார வளைவுகள், தோரணங்கள், ஒளியை உமிழும் பல வண்ண விளக்குகள் என எங்கும் ஆடம்பரம்! துணைவேந்தர். பேராசிரியர், அறிஞர்கள். மாணவர்கள், ஊழியர் என பலதரப்பினரும் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தனர். வளாகத்தில் மேடைகளும், அறிவார்ந்த சொற்பொழிவு விவாத அரங்கங்களும் தயாராயிருந்தன. அவற்றில் அமைக்கப்பட்டு பங்கேற்று தங்கள் அறிவுத்திறனை எண்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தயாராக நின்றிருந்தனர்.

யாருக்கு இந்த வரவேற்பு? ஆம்! இங்கிலாந்து தேசத்தை ஆளும் தன்னிகரற்ற அரசி முதலாம் எலிசபெத் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்ய வருகிறாள். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தன்னை விளக்கிக் கொண்டு இங்கிலாத்தின் திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்து எதிர்ப்பு மதத்தை உருவாக்கிய 8ம் ஹென்றியின் மகள். அவனுக்கும் அவன் தேவதுரோகமாக மணந்து கொண்ட ஆன்போலினுக்கும் பிறந்த வாரிசுதான் இந்த அரசி! தந்தையைப் போலவே பாப்பரசரின் வேதத்தை மறுதலித்து தன்னையே இங்கிலாந்தின் ஆங்கிளிக்கன் சபையின் தலைவியாக அறிவித்து, அவள் பட்டத்திற்கும் வரும்போது வயது 25தான்! ஆனாலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்ற கதையாக கத்தோலிக்க எதிர்ப்பைக் கடைபிடித்துவந்தாள். கத்தோலிக்க வேதமே இங்கிலாந்தில் இல்லாமல் செய்ய சூளுரைத்தாள்! திவ்விய பலிபூசை, குருக்கள், கத்தோலிக்க மத அனுசாரணம் யாவும் தடைசெய்யப்பட்டது. அப்படி மீறி இங்கிலாந்தில் குருக்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தலை உருளும், அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஒப்புக்கான விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இங்கிலாந்து திருச்சபையின் தலைவி அரசியே என்று சத்திய பிரமாணம் செய்து பாப்பரசரை மறுதலிக்காதவர்கள் தேவ துரோகக் குற்றம் சூட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு வயிறு கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அவள் படித்த அறிஞர்கள், அறிவுடையோர் கல்வியாளர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவராக இப்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு வருகைதந்து, தனது கொள்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற ஆசித்தாள், அதன் பதிரொலியாகத்தான் இன்றைய "ஆக்ஸ் போர்ட் விஜயம்!"

தமது அரசவை உறுப்பினர்கள் புடை சூழ மகா கம்பீரமாக வந்த அரசி தமது ஆசனத்தில் அமரவும் அவளை வரவேற்கும் படலம் ஆரம்பமாயிற்று.

அங்கே முதல் வரிசையிலே, அறிவுஜீவி, அறிஞர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர் என்றெல்லாம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன். அரசியை வரவேற்று சொற்பொழிவாற்றும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கன்னியமாக உடையணிந்திருந்த காம்பியன் மிடுக்கான தடையில், அரசியை வணங்கிவிட்டு சொற்பொழிவு மேடையேறி தமது அறிவார்ந்த நடையில் கணீர்குரலால் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியை வாழ்த்தி பேச அவர் கையாண்ட நாவன்மையைக் கண்டு அவையோர் ஆர்ப்பரித்து மகிழ அரசியின் முன்னோர்கள், அவனது ஆட்சி. அவளோடு வந்திருந்த அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் பாராட்டி பேசிய காம்பியனின் குரல் அந்த அசங்கத்தின் கையொலியால் கரைந்துபோனது. அவரது பேச்சு திறமையில் உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ந்த அரசியின் முகம் பிரகாசமடைந்தது. வரவேற்புரையை நிகழ்த்தி முடித்து தலைகுனிந்து அரசியை வணங்கிய காம்பியனுக்கு வயது 26! தமது அறிவுத் திறமையால் "இங்கிலாத்தின் இரத்தினம்" என்று பட்டம் சூட்டப்பட்ட எட்மண்ட பேரொலியால் எழுந்த கரவொலியால் பெருமை பொங்க மேடையை விட்டு இறங்கினார்.

ஆனால், அதே எட்மண்ட் காம்பியன் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியால் "தேசதுரோகி" என்ற பட்டம் சூட்டப்பட்டு கொடூரமாய் தூக்கிலிடப்பட்டு வேதசாட்சியடைந்தார்! ஆம். அதுவே தேவ திருவுளம்! சத்திய வேதமாம், கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்திற்காக அவர் இரத்தம் சிந்தினார்.

மனந்திரும்பிய காம்பியன்!

1540 -ம் லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட் காம்பியனின் தந்தை ஒரு புத்தகவியாபாரி. அதனால் தானோ என்னவோ படிப்பில் சிறந்து விளங்கினார். தமது 17வயது வயதில் அர்ச். ஜான் கல்லூரியில் ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றார். அவர் எவ்வளவுக்கு அறிவுத்திறமையும், நாவன்மையும் கொண்டிருந்தாரானால், அவரைச் சுற்றி எப்போதும் மாணவக் கூட்டம் இருக்கும். அவரது பேச்சை, அதில் மினிரும் அறிவுத்திறமையை சாதூரியத்தை, பழக்க வழக்கங்களை கண்டு பாவிக்கவும், அன்றைய மாணவர்களிடையே ஒருவித ஆவல் இருந்தது. அதனாலேயே அவரோடு சுற்றித் திரிந்தவர்களை "காம்பியன் கூட்டத்தார்" என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியலில், தத்துவ சாஸ்திரத்தில், லத்தீன் மொழியில் புலமை பெற்று "அசாதாரணமான மாணவன்" என்ற பெயர் பெற்றர். ஏழ்மையில் இருந்ததால் அவரது படிப்புச் செலவிற்காக சலுகையும் உதவித்தொகையும் பெற்றார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகக் கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் ஏற்றுக் கொண்டிருக்கும் போதுதான அங்கே அரசி எலிசபெத்தின் வருகை நிகழ்ந்தது. அவளை வரவேற்பளிக்கத் தெரிவு செய்யப்பட்ட காம்பியனும், தமது அறிவார்ந்த உரையால் அரசியின் பெருமதிப்புக்குள்ளானார். அரசவை கூட்டங்களில் உரையாற்ற அழைக்கப்பட்ட அவர் "இங்கிலாந்தின் இரத்தினம் " என்று கௌரவப்பட்டம் பெற்றார். அரசாங்க ஆதரவு அவருக்கு இருந்ததால் பிற்காலத்தில் உயர்பதவிகள் காத்திருந்தன.

எலிசபெத் அரசி ஆட்சி பொறுப்பேற்கும் வரை கத்தோலிக்கராயிருந்த இவரது குடும்பம், பாப்பரசரின் அதிகாரத்துக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டபோது, அதை ஆதரித்து ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்தது. தமது கல்வி, எதிர்காலம் கருதிய எட்மண்ட் அரசியே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற சத்திய பிரமாணத்தை செய்தார். புராட்டஸ்டாண்ட் ஆங்கிளிக்கன் சபையில் சேர்ந்திருந்தாலும் அவரது மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஏனெனில் தத்துவ சாஸ்திரம் கற்கும்போது திருச்சபையின் பிதாபிதாக்கள் எழுதிய நூல்களையும் கற்க நேரிட்டது. அவர்களது கத்தோலிக்க விசுவாச உறுதியையும், அதுவே சத்திய வேதம் என்பதை சுட்டிக்காட்ட அவர்கள் தந்த ஆதாரங்களையும் கண்டு உள்ளம் தாக்குண்டவரானார். இந்நிலையில் தான் ஆங்கிலிக்கன் சபையில் தியோக்கன் பட்டம் பெற்றார்.

பலருடைய மதிப்பையும், நட்பையும் பெற்று உயரிய பதவியடைய வாய்ப்பிருந்த போதிலும் தான் ஆங்கிலிக்கன் சபையில் பட்டம் பெற்றது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவரது ஆன்மா சத்தியத்தை நாடி தேட அம்முயற்சியில் இறங்கிய காம்பியன் திருச்சபையின் வரலாற்றை படிக்கலானார். பல பிதாப்பிதாக்களின் நூல்களை கற்று உணரலானார்.

இப்போது அவரது மனம் தவிக்கலாயிற்று. இங்கிலாந்து நாட்டின் அர்ச். அகஸ்டின் காண்டபூரி, அர்ச். எட்வர்ட் அரசன் மற்றும் வேதசாட்சியாக மரித்த அர்ச். தாமஸ் பெக்கட் போன்றோர் சார்ந்திருந்த கத்தோலிக்க சபை உண்மையானதா? எலிசபெத் அரசியை தலைமையாகக் கொண்ட ஆங்கிளிக்கன் சபை சத்தியமான வேதமா? என்று அங்கலாய்த்த அவரது உள்ளம், அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து உண்மையான வேதம் கத்.திருச்சபைதான். தாம் இருக்கும் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் ஒரு பதிதம்! அங்கு சேசுகிறீஸ்து இல்லை! அவரது உண்மையான போதனைகளும் இல்லை. அங்கு ஆன்ம இரட்சிப்பு இல்லை. ஆம்! இரட்சிக்கப்பட சேசுகிறீஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட சத்திய வேதமான பாப்பரசரை தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையே என்பதை அறிந்து உணர்ந்து கொண்டார். கத்தோலிக்கரானார்.

தேவ அழைத்தல்

அக்காலத்தில் இங்கிலாந்து தேசத்திலிருந்து சுத்தோலிக்க வேதம் அழிக்கப்பட்டு விட்டதால், அதனை மீண்டும் ஏற்படுத்த ஆங்கில கத்தோலிக்கர்கள் விரும்பினார்கள். கத். விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருந்த எண்ணற்ற ஆங்கில நாட்டு மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தவும் குருக்களை உருவாக்க முயற்சி நடந்தது. அதனால் பாப்பரசரின் ஆதரவில் பிரான்ஸ் நாட்டில் துவே (Douay) என்ற இடத்தில் குருமடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிறந்த ஆங்கில நாட்டு இளைஞர்களை குருப்பட்டத்திற்கு தயாரித்து குருக்களாக்கி இரகசியமாக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர் ஆனால் அப்படி இரகசியமாக இங்கிலாந்து நாட்டுக்குள் வரும் குருக்களை இனங்கண்டு கைது செய்ய அரசியின் ஒற்றர்கள் கடற்கரையோரம் நிலை கொண்டிருந்தது வேறு விஷயம்!

அப்படிப்பட்ட குருமடத்தில் குருத்துவ பயிற்சி பெற காம்பியனின் உற்ற தோழரான கிரகோரி மார்டின் என்பவர் பிரான்ஸ் நாடு சென்றார். குருமடம் சென்ற அவர் நல்ல உள்ளம் கொண்ட காம்பியனையும் அங்கே அழைத்தார். அதுபோலவே, மற்றொருவர் அர்ச். துர்தி பார்ட் மாயின் என்பவரும் நாடு கடந்து சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து, பிடிபட்டு வேதசாட்சியம் அடைந்தார் என்பது வேறு வரலாறு. இவற்றால் உள்ளம் கவரப்பட்டு உறுதியடைத்த காம்பியன் பாப்பரசருக்கு விரோதமாக தாம் கொடுத்த சத்திய பிரமாணத்திற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டு வருந்த தன்னை முழுவதும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்க விரும்பினார்.

அச்சமயத்தில்தான் தம்மை ஆங்கிலிக்கன் சபையில் தீயாக்கோன் பட்டம் பெறத் தூண்டிய ரிச்சர்டு ஷென்னே (Richard Cheney) என்ற ஆயருக்கு நீண்ட கடிதம் எழுதினார். கத்தோலிக்க மணப்பான்மை கொண்ட அந்த ஆயர், ஆங்கிலிக்கன் சபையில் பிஷப்பாக இருந்தார். கத்தோலிக்கரான எட்மண்ட் காம்பியன் அவரது தவறான கொள்கையைச் சுட்டிக்காட்டி கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் "60 வயதாகிவிட்ட தாங்கள், நிலையில்லாத உடல் ஆரோக்கியத்தையும், தப்பறையின் மீது வெறுப்பையும் கத்தோலிக்கர்கள் மீது இரக்கமும் கொண்டவர். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஆயர் என்று அழைக்கப்பட்டீர்கள். உமது மௌனத்தால், நீங்கள் விரும்பாத, சாபத்துக்குரிய புராட்டஸ்டாண்ட் பிரிவினையையும் வளர்த்தீர்களே. அதனால் கிறீஸ்துவின் வரப்பிரசாதங்களை பெற முடியாது இருக்கிறீர்கள். தாங்கள் எல்லா ஜெபங்களுடையவும், பலிபூசைகளுடையவும், தேவ திரவிய அனுமானங்களுடையவும் நன்மைகளையும், பலன்களையும் இழந்து போய் இருக்கிறீர்களே! பதீதமதத்தில் என்னநான் எதிர்ப்பார்க்கிறீர்கள்? உமது வாழ்வுதான் என்ன? எதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள்....." என்றெல்லாம் எழுதி அவரை தப்பறையிலிருந்து மீட்டு சத்திய வேதமான கத்தோலிக்க திருச்சபைக்கு வரத் தூண்டினார். ஆனால் அந்தோ! ஆயர் ஷென்னே எந்த முடிவையும் எடுக்காமல் மரணமடைந்தார்!

கத்தோலிக்கத் திருச்சபையில் உட்பட்ட எட்மண்ட காம்பியனின் வாழ்வு தலைகீழாக மாறிப் போனது!

எட்மண்ட் காம்பியன் கத்தோலிக்கராக மனத்திரும்பியதும் தாம்பெரிதும் நேசிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அயர்லாந்துக்குச் சென்று அங்கே இரண்டு வருடம் தமது சுத்தோலிக்க நண்பரது குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அந்த நாட்களில் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் திளைத்து புண்ணியத்தில் உயர்ந்தார். அக்குடும்பத்தின் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவந்த எட்மண்ட், டப்ளின் நகரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு கத்தோலிக்க நாடான அயர்லாந்தின் வரலாறு ஒன்றையும் எழுதி அதற்குப் புகழ் சேர்த்தார்.

பின்னர் தமது அழைத்தல் குருவாவதே என்பதை உணர்ந்தவராக துவேக்குச் (Douay) சென்று அங்கே குரு மடத்தில் சேர்ந்தார். "உப தியாக்கோன் பட்டம்" பெற்ற பின் உரோமைக்குச் சென்று அங்கே சேசு சபையில் சேர்ந்தார். பிராக் நகருக்கு நவசந்தியாச வாழ்வுக்காக அனுப்பப்பட்ட எட்மண்ட் காம்பியன் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1578 செப்டம்பர் மாதத்தில் குருப்பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டில் புராட்டஸ்டாண்டாரிடையே சேசு சபையினர் ஆற்றிய அரிய காரியங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும் அறிந்த பாப்பரசர் 13-ம் கிரகோரியார் சேசு சபையினரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் எட்மண்ட் காம்பியனும் ஒருவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கான பயணத்தை துவக்கும் முந்தின நாள் இரவில் அவர் தங்கியிருந்த அறையின் சுவரில் “எட்மண்ட் காம்பியன் வேதசாட்சி" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். தேவ ஏவுதலால் ஒரு குருவானவர் அப்படி எழுதியிருந்த அந்த வாக்கு நம் புனிதரின் வாழ்வில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

1580-ம் ஆண்டு ரோமையிலிருத்து ஜெனிவா நகர் வழியாக இங்கிலாந்து வந்த அவர்கள், திருச்சபையின் எதிரிகளால் அடையாளம் காணமுடியாத வகையில் மாறுவேடம் பூண்டு சென்றனர். அங்கே, இங்கிலாந்தில் கத்தோலிக்க விசுவாசம் நசிந்துபோய் அழித்துகொண்டிகுந்தது! கிறீஸ்தவர்கள் கலாபனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள். "குருக்களே இங்கிலாந்து நாட்டில் இல்லை!” என்ற நிலை ஏற்பட தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்ற முடியாத அவலம் ஏற்பட்டது. சில குருக்கள் மாறுவேடம் பூண்டு விசுவாசிகளின் வீடுகளில் தங்கி, அரசாங்க வீரர்கள் தேடிவந்தபோது பிடிபடாமல் தப்பிக்க பதுங்கு குழிகளில் தங்கினர். இதற்காக ஒவ்வொரு கத் இல்லத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருக்கள் அவற்றில் மறைந்து வாழ்த்து குறிப்பிட்ட நாட்களில் அங்கே கூடும் விசுவாசிகளுக்கு திவ்விய பலிபூசை, பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி ஞான வாழ்வில் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பிடிக்கவென்று ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "குரு வேட்டையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் அர்ச். எட்மண்ட் காம்பியன் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே தமது நோக்கத்தை குறிப்பிட்டு கத்தோலிக்க சத்தியங்களை ஆதரித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "எனது அருமை நாட்டு மக்களின் ஞான ஆபத்துக்களையும், தீமைகளையும் மற்றும் அவர்களது ஆங்கார அறியாமையையும் அகற்றி அவர்களைக் காப்பதுவே தமது நோக்கம்" என்று தெரிவித்திருந்தார். காம்பியனும் அவரது சக குருவானவரும் இங்கிலாந்துக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எப்படியோ சுங்கத்துறையினருக்குத் தெரியவர, துறைமுகம் எங்கும் ஒற்றர்களின் செயல்பாடு அதிகரித்திருந்தது. ஆனாலும் அவர்களது கண்களுக்குத் தப்பி பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்து மக்களுக்கு விசுவாச சத்தியங்களைப் போதித்து, கத்தோலிக்க விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வந்தனர். அநேகர் மனத்திரும்பினார்கள். இதைப்பற்றி சேசுசபை தலைவருக்கு காம்பியன் எழுதிய கடிதத்தில் "...நான் நாள்தோறும் அங்குமிங்கும் போய் பணியாற்றி வருகிறேன். அறுவடை உண்மையாகவே தாராளமாயிருக்கிறது. திருச்சபையின் எதிரிகள் கையில் அகப்பட வெகுநாள் பிடிக்காது. தான் என்னை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் உடை எனக்கே சிரிப்பூட்டுகிறது. பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது..." என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இங்கிலாத்தில் மறைவாக அப்போஸ்தல அலுவவில் ஈடுபட்டுவந்த எட்மண்ட் காம்பியன் புராட்டஸ்டாண்ட் பதிதத்தைக் தாக்கி, கண்டித்து “பத்துக் காரணங்கள்" என்ற அரிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார். அது. எதிரிகளால் பிடிபடும் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி விசாரிக்கும்போது கூற வேண்டிய பதில்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. சத்திய வேதத்தை ஆதரித்து ஆங்கிளிக்கள் புராட்டஸ்டாண்ட் பதிதத்தை கண்டிப்பானவராகவும் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூல் 1587 ஜூன் 27-ம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆலய இருக்கைகளில் 400 பிரதிகள் வைக்கப்பட்டன. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும்கூட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 48 பதிப்புகளில் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, அந்த நூலை எழுதிய எட்மண்ட் காம்பியனை பிடிப்பதற்கு ஒற்றர்களையும், குரு வேட்டைக்காரர்களையும் முழுவீச்சுடன் இறக்கிவிட்டது.

நூல் வெளியிடப்பட்டதும் வேறு எங்காவது மறைவாக சிலகாலம் போய்விடுவது நலம் பயக்கும் என்று எண்ணிய காம்பியனும் அவரது சகக்குருவானவரும் நார்ஃபக் (Norfolk) நகருக்குப் பயணமானார்கள். வழியில் Lyford Grange என்ற ஊர் வரவே அங்கே சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். ஏனெனில் அவ்வூர் செல்வந்தரான திரு.யாட் (Yate) என்பவர் தமது சுத். விசுவாசத்திற்காக லண்டனில் சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது வயது முதிர்ந்த தாய் தன் வீட்டில் நிரந்தரமாக 2 குருக்களையும் சில சுன்னியர்களையும் தங்கவைத்து பராமரித்து வந்தாள். எனவே அங்கே தங்கி அவரை பாராட்டி விசுவாசிகளை உற்சாகப்படுத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன் சுவாமி மாறுவேடத்தில் இரகசியமாக வந்தாலும் அவரது வருகை சுற்றுவட்டாரத்திலுள்ள கத். விசுவாசிகளிடையே பரவியது. அரசின் ஒற்றர்களுக்கும் இச்செய்தி எட்டவே அக்குடும்பத்தின் முன்னான் வேலையாளான ஜார்ஜ் எலியாட் என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

காம்பியன் பட்ட வாதனை!

பிடிபட்ட சங், எட்மண்ட் காம்பியன் சுவாமி லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் வீதிகளில் பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்டார். முன்னொரு காலத்தில் இதே விதிகளில் சிறந்த கல்வியாளர், இங்கிலாந்தின் இரத்தினம் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் இன்று தாம் கொண்ட சத்திய விசுவாசத்திற்காக கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு லண்டன் டவர் சிறையில் ஒரு சிறு இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேம்ஸ் நதிக்கரைக்கு அப்பால் உள்ள லெய்செஸ்டர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசபெத் ராணி வருகை தந்தபோது தாம் நிகழ்த்திய வரவேற்புரையை பாராட்டி தமக்கு ஆதரவாளராக மாறிப்போன அமைச்சர் வெய்செஸ்டர் பிரபுவின் (Earl of Leicester) இல்லம் தான் அது! அங்கே தன் முன்னால் நிற்கும் நபரைக் கண்டு வியந்துபோன எட்மண்ட் காம்பியன் தன் கண்ணை தான் நம்பாது திகைத்தார். ஆம்! அவர் முன்பு நாட்டையாளும் எலிசபெத் அரசியே நின்றிருந்தான். ஒரு காலத்தில் தம்மால் “இங்கிலாந்தின் இரத்தினம்" என்று அழைக்கப்பட்டவர் இன்று தனக்கு எதிராக, தமது வேதத்திற்காக கைதியாக நிற்பதைக் கண்டு முகம் சுளித்தாள் அரசி. ஆனாலும் மிகவும் நயமாக அவரைப் பாராட்டியவள், பிடிவாதத்தை விடுத்து அரசியான தன்னை திருச்சபையின் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அபத்த கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக மறுத்துவிடும்படியாக கேட்டாள். அப்படி அவர் செய்தால், ஆங்கிலிக்கன் சபையில் மிக உயர்ந்த அந்தஸ்து அவருக்காகக் காத்திருக்கிறது என்ற ஆசை வார்த்தைகள் கூறினாள். ஆனால் அரசியின் எந்த வார்த்தைகளுக்கும் பணியாமல் தமது விசுவாசத்தில் உறுதியாக நின்ற காம்பியனைக் கண்டு வியந்தவனாக அவரைவிட்டு அகன்றாள்.

ஐந்து நாட்களிலும் அவர் தமது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை 3 தடவைகள் வாதைக் கருளியால் துன்புறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி இரும்பு சட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக இழுத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார். கை கால்களின் மூட்டுகளும் எலும்புகளும் பிய்ந்து நெட்டுருகிப்போய் கொடூர வேதனையளித்தது. அத்தனையையும் தாங்கிக் கொண்ட எட்மண்ட் காம்பியன் தேவ உதவிக்காக மன்றாடினார் தமது அனைத்து வேதனைகளையும் இங்கிலாந்து தேசம் மீண்டும் சத்திய வேதத்திற்கு வர ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.

இத்தகைய வாதை நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு தடவைகள் வேத தர்க்க விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டார். தான் இருந்த நிலையிலும் அவர்களுக்கு தக்கப் பதில் தந்து முறியடித்தார். தம்மைத் துன்புறுத்தியவர்களிடமும் வெகு சாந்தத்தோடு அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டு வியந்துபோன பிலிப்பு ஹோவர்ட் (Philip Howard) மற்றும்  (Earl of Arundal) மனந்திரும்பினார்கள்.

மீண்டும் வாதைக் கருவியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காம்பியன் சுவாமி மீது குற்றப்படுத்த ஒன்றும் கிடைக்காததால் அவர் இங்கிலாந்தில் புரட்சி ஒன்றை உண்டாக்கும் கருத்தோடு நாட்டிற்குள் வந்ததாக கதைக் கட்டினார்கள். ஆனால் அதனை தமது வாதத்தால் தூளாக்கிய காம்பியன் "நாங்கள் எலிசபெத் அரசிக்கு விரோதமாக எக்குற்றமும் செய்ததில்லை. உங்களுக்கு குற்றமாகத் தெரிவது நாங்கள் எங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பது மட்டுமே!” என்று எடுத்துக் கூறினார்.

தமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முன்பாக அங்கிருந்த நீதிபதிகளை நோக்கி, "எங்களை இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்கும் நீங்கள், உங்கள் முன்னோர்கள் அனைவரையுமே கண்டனத்துக்குள்ளாக்குகிறீர்கள். அந்த முன்னோர்களின் தகுதியற்ற வாரிசுகளாக இப்போதுள்ள உங்களால் நாங்கள் கண்டனத்துக்குள்ளாவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மகிமையுமேயாகும். சர்வேசுரன் எப்போதும் இருக்கிறார். உங்கள் வாரிசுகளும் இப்போது நீங்கள் செய்வதைப் பார்ப்பார்கள். உங்கள் மீது அவர்களும் சர்வேசுரனும் தரும் தீர்ப்பு ஒருநாளும் தவறாது உண்மையாகவேயிருக்கும்" என்று கூறினார். காம்பியன் பிறரைப் போல் அல்லாமல் அரசியின் தனிப்பட்ட அரச அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பு வழங்கப்பட்டார். அப்போது அங்கே வந்த, தன்னைக் காட்டிக்கொடுத்த எலியட் மற்றும் ஹாப்டன் என்பவர்கள் புனிதரின் அவலநிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்களை மன்னித்து விட்டதாக புனிதர் அறிவித்தார்.

கொலையாளி தன் வேலையைச் செய்வதற்கு முன்பாக, எட்மண்ட் காம்பியன் சுற்றியிருந்த மக்களைப் பார்த்து, "உங்கள் அரசியும், என் அரசியுமான அம்மையாருக்காக வேண்டுகிறேன். நீடித்த ஆயுளும், எல்லா நலனும் அவர்களுக்கு உண்டாவதாக" என்று ஜெபித்தார். அவரும் அவரோடு தீர்ப்பிடப்பட்ட குருக்களும் வழக்கம்போல் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள். முதலில் தூக்கிலிடப்பட்டு, உடல் கீழே விழத்தாட்டப் பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, உடல் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டார்கள்.

St. Henry Walpole
அப்போது வெட்டப்பட்ட புனித எட்மண்ட காம்பியனின் இரத்தத்துளி ஒன்று அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றி வால்ப்போல் என்ற இளைஞன் மீது சிதறி விழுந்தது. அதன் பலனாய் அவரும் பின்னாளில் சேசு சபையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேதசாட்சிய வரம் பெற்றார்! 

வேதசாட்சியான எட்மண்ட் காம்பியனுக்கு 1970-ம் ஆண்டில் அர்ச்சியசிஷ்டப் பட்டம் வழங்கப்பட்டது!

அர்ச். எட்மண்ட் காம்பியனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!



Download Tamil Christmas songs


வியாழன், 14 டிசம்பர், 2023

கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

 Christus natus est nobis; adoremus
கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

(உரோமை கட்டளை ஜெபம்)



கிறிஸ்துமஸ் இரவிலே, திருச்சபை சகல விசுவாசிகளுக்கும் இத்தகைய அழைப்பை விடுக்கிறது. அதற்கு உடனே செவி சாய்ப்பாயாக. ஓ எனது ஆன்மாவே, நினைவின் வழியாக பெத்லேகம் சென்று, நமது மீட்பரின் தோற்றத்தைத் தியானி, விவரிக்க முடியாத நேசத்தை நமது கண்கள் காண்கின்றன! உலகை சிருஷ்டித்து. சர்வேசுரன் ஒரு சிறு சிசுவாக குழந்தையாக அவரது தெய்வீக மகிமைகள் அனைத்தும் களையப்பட்டு இருக்கிறார். ஆதலால் நமது அச்சங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து நீக்கி, அனைத்து உள்ளங்களையும் அவரிடம் ஈர்த்துக்கொள்ளும் வடிவமாக இருக்கிறார். நமக்காக தன்னையே அழித்துக் கொள்ளும், அவரது நேசம்தான் எத்தகையது! நம்மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டுள்ளார்! பாருங்கள், எப்படி அவர் தமது சின்னஞ் சிறு கரங்களை உன்னை நோக்கி விரிப்பதையும், அவர் பின்னாளில் சொல்லவிருக்கும் சுமை சுமந்து சோர்ந்திருக்கும் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் நான் தீர்ப்பிடுவதற்காக உலகிற்கு வரவில்லை. ஆனால் உலகை மீட்கவே வந்தேன் என்ற வார்த்தைகள் அவரது இதயத்துடிப்பாக வெளிவருவதை உணருங்கள்.

இந்த தேவக் குழந்தையின் அன்பை யார்தான் தியானிக்க முடியும்! நம்மீது கொண்ட அளவற்ற அன்பே அவரை மோட்சத்திலிருந்து, கீழே இந்த எளிய மாட்டைக் குடிலிலே கொண்டு வந்தது. எதற்காக? நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்லவே! அப்படிப்பட்டவரை எப்படி நேசிக்கப் போகிறோம்? அவருக்கு எவ்வாறு பதில் அன்பு காட்டப் போகிறோம்?

நாம் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும், நமது கடந்த கால பிரமாணிக்கமின்மை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவரது அன்பான, பரிவிரக்கமுள்ள இதயத்தின் மொழி நம்மை இனிமையாலும் நம்பிக்கை உணர்வாலும் நிரப்புகிறது. இப்படி இரக்கத்தையும், பரிவையும் அன்பையும் வெளிப்படுத்தும் சேச பாலனை வாருங்கள் ஆராதிப்போம்!


source - Salve Regina - December 2007


Download Tamil Christmas Songs MP3

சனி, 9 டிசம்பர், 2023

அமலோற்பவ கன்னிமரி - December 8 - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ கன்னிமரி


அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது. (அரு. காட்சி. 12:1) 




1854 டிசம்பர் 8-ம் நாளன்று பாப்பரசர் முத். போன 9-ம் பத்திநாதர் "Ineffabilis Deus" என்ற பிரகடனத்தில் "...மிக ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரி, மனுக்குலத்தைக் காப்பாற்றுகிறவரான சேசு கிறீஸ்துவின் பேறு பலன்களை முன்னிட்டு, எல்லாம் வல்ல சர்வேசுவரனுடைய தனி வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும் தான் உற்பவித்த முதல்கணத்தில், ஜென்மப்பாவக்கறை எதுவும் அணுகாமல் காப்பாற்றப்பட்டார்கள், இந்த சத்தியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால் இது உறுதியுடனும் இடைவிடாமலும் விசுவாசிகள் அனைவராலும் விசுவசிக்கப்பட வேண்டும்..."என்று மாதாவின் அமலோற்பவத்தை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

இந்த உண்மை பரிசுத்த வேதாகமத்திலும், திருச்சபையின் போதனைகளிலும் காணப்படும் ஒன்று கத்தோலிக்க வேதசாஸ்திரத்தை ஒத்திருக்கும் இந்த சத்தியம் பரிசுத்த கன்னிமரியாயின் மிகப்பெரிய மகிமைப் பாக்கியமாக உள்ளது. இது பல புதுமைகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வேசுவரன் ஆதாமையும் ஏவாளையும் தேவ இஷ்டப் பிரசாதத்தில் மிக உன்னதமான நிலையில் சிருஷ்டித்திருந்தார். ஆனால் விலக்கப்பட்டசு கனியினைத் தின்று, பாவம் கட்டிக்கொண்டு தேவ கோபாக்கினையைத் தண்டனையாக தங்கள் மீது தேடிக் கொண்டனர். சர்வேசுவரன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளவை: "உனக்கும் ஸ்திரீக்கும். உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவள் குதிகாலைத் தீண்டப் பிரயத்தனம் பண்ணுவாய்" (ஆதி. 3:15) இதனை சற்று ஆராய்வோம்: ஆதியாகமத்தில் இந்த வார்த்தைகளை சர்வேசுவரன் எக்காலங்களுக்கென்று மனிதர்களுக்காக கூறியது.

அவருடைய வாக்கு மகிமையாகவும், உண்மையிலும், கம்பீர மாகவும் ஒலித்தது. அவர் முன்பாக, பாவத்தால் நிலை குலைந்து போன ஆதாம், வீழ்ச்சியின் துயரத்தோடு ஏவாள், சோதிப்பவனான சாத்தான் ஆகியோர் நிற்கின்றனர். ஆதாம் ஏவாள் விலக்கப்பட்டக் கனியை உண்ணக்கூடாதென்று கடவுளால் கூறப்பட்டாலும், அவர்கள் அவருடைய பேறுபெற்றப் பிள்ளைகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் தீமை நடைபெற்றுவிட்டது. சர்வேசுவரன் தயாளமுள்ள தந்தையாதலால் அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினார். அவர் பாம்பை நோக்கி, "கீழ்த்தரமான சாப்பமே, உனக்கும் பெண்ணுக்கும் அழிவுக்குரிய உடன்பாடு நீ சோதித்தாய். அவள் உடன்பட்டாள். இப்போது உனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் முழுமையான பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துவோம். அது என்னால் ஏற்படுத்தப்பட்ட பகை" என்று கூறுகிறார்.

அவளது மாசுபட்ட இரத்தத்திலிருந்து, குழந்தைகளையேப் பெறுவாள். ஆனால் நான் அவளது இந்த தலை முறையினரை நிறுத்தி, உனது (பசாசின்) ஆதிக்கமில்லாத ஒரு தலைமுறையைக் கொண்டு வருவேன். நான் ஒரு பெண்ணை உனது எதிரியாகவும், பகையாளியாகவும் ஏற்படுத்துவேன். அவளிடமிருந்து பிறப்பவர் பரிசுத்தராக இருப்பார். அவள் மட்டுமல்ல, அவளது வித்தும் உனது எதிரியாக இருப்பார். நீ அவளால நசுக்கப்படுவாய். நீ அவளைத் தீண்ட முயல்வாய். ஆனால் அவளது ஆன்மாவையோ அல்லது உள்ளத்தை யோ தொடமுடியாது. நீ வீணாக அவளது குதிகாலைத் தீண்ட முயற்சிப்பாய். இப்படியாக மரியாயில், சர்வேசுவரன் தாமே பசாசோடு பகையை மூட்டியுள்ளார். அவளை அணுக முயலும் போதெல்லாம் சாத்தான் தோல்வியே அடையும். ஆனால் அவள் அதன் தலையை நசுக்குவாள். மாதா தாம் உற்பவமான அந்த கணத்திலிருந்து அமலோற்பவியாக இருக்கிறார்கள். சாத்தானால் ஒரு கண நேரத்திலும் கூட மாதாவை வெற்றிகொள்ள முடியவில்லை.

பரிசுத்த கன்னிமரியம்மாள் சம்மனசானவரால் “அருள் நிறைந்தவள்" என அழைக்கப்பட்டார்கள். அருள் நிறைவு என்பது மாதா தனது வாழ்நாளெல்லாம் கடவுளோடு முழுமையாக ஒன்றித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் பாவத்தால் கறைபடுத்தப்படவில்லை. கடவுளின் நிறைவான படைப்பாக உருவாக்கப்பட்டார்கள். அமலோற்பவியாக பரிசுத்தவதியாக

அதிதூதரான கபிரியேல் "கர்த்தர் உம்முடனே” (லூக், 1:28) என்றுரைத்து மரியாயோடு சர்வேசுவரன் இருப்பதைக் கூறுகிறார். "சர்வேசுவரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்” (லூக், 1:30) ஆதாம் இந்த வரப்பிரசாதத்தை இழந்ததால் சர்வேசுவரன் அவரை சிங்காரத்தோப்பிலிருந்து வெளியேற்றினார். அவரோடு கடவுள் இருக்கவில்லை. ஆதாம் இழந்தவைகள் அனைத்தையும் மாதா கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து விலகியிருந்தது மட்டுமல்லாமல், அவருடைய பாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டு விலை மதிப்பில்லாத ஒவ்வொரு வரங்களாலும் அணிவிக்கப்பட்டு படைப்புகளிலேயே மிகவும் உன்னதமான சிருஷ்டியாக உயர்த்தப் பட்டார்கள்.

அர்ச். எலிசபெத்தம்மாள் மாதாவை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதாமே” (லுாக். 1:42) என்று வாழ்த்தினாள். இந்த வாழ்த்து எதற்கு? ஏனென்றால் மரியாயின் வயிற்றின் கனியானவர் வாக்களிக்கப்பட்ட மீட்பரான அவர்களது தெய்விக மகன்! சிங்காரத் தோப்பில் சர்வேசுவரனால் ஏவாளின் பாவங்களுக்காக முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரியானவள் மரியாயே! மாதா அவரது அன்னையாக ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகையால் ஒரு சிறு பாவம் கூட அணுகாமல் பாதுகாக்கப்பட்டார்கள். பாவத்தால் பீடிக்கப்பட்ட தாயிடமிருந்து மனுவுரு எடுக்கவோ, சாத்தானால் கவரப்பட்ட பாவக் கறைபட்ட பேழையிலோ அவர் தங்குவதில்லை.

திருவழிபாடுகளிலும், பாரம்பரியத்திலும், தொன்மை கலைச்சித்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட மாதாவின் அமலோற்பவம், விசுவாச சத்தியமாக்கப்பட்ட போது. திருச்சபையின் பாப்பரசரும் வேதபாரகர்களும் இந்த உண்மையை வலியுறுத்தி அநேக நூல்களையும், பிரபந்தங்களையும் எழுதினார்கள்,

கன்னிமாமரி அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந் தார்கள், ஏனெனில் அவர்களே ஞானத்திற்கு இருப்பிடம்: தீமையிலிருந்து காக்கப்பட்டார்கள். இதனால் நன்மைதனத்திலும் நிறைவிலும் எப்போதும் நிலைத்திருந்தார்கள். ஆகையால் தான் திருச்சபை "ஓ மரியாயே நீர் எத்துணை அழகானவள்; ஜென்மப்பாவத்தின் மாசு உம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்று பாடுகிறது. மரியாயின் சரீரத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி என்ற மனித இயல்பின் பரிணாமத்திற்கு உட்பட்டாலும் ஜென்மப்பாவத்தின் தாக்கம் இல்லாமையால் முழுமையான சௌந்தர்யமுள்ளதாக விளங்கியது. அவர்கள் சுகவீனத்திலிருந்துதடுக்கப்பட்டிருந்தாலும் பசி, தாகம், மனவேதனை ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு கடந்து மறுமைக்குச் சென்றதும்கூட சுகவீனமோ. நோய்வாய்ப்பட்டதாலோ அல்ல. மாறாக வல்லமை வாய்ந்த தேவசிநேகமே அவர்களது சரீரத்தை நிலைகுலையச் செய்தது.

மாதாவின் அமலோற்பவத் திருநாளின் கட்டளை ஜெபம், திவ்விய பலிபூசையிலும் கூட மாதாவின் உற்பவத்தின் போது அவர்களது சரீரத்தோடு இணைக்கப்பட்ட, அசாதாரணமான ஆன்ம அழகு பெரிதும் போற்றப்படுகின்றது. கபிரியேல் தூதனால் "அருள் நிறைந்தவளே வாழ்க!" (லுாக். 1:28) என்று கடவுளின் மாதாவை வாழ்த்துவதைப் பற்றிய திருச்சபையின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானனை. மரியாயைப் போதிய அளவுக்கு வாழ்ந்த வேண்டுமானால் நாமும் கபிரியேல் தாதுவரின் மனப்பான்மையை கொண்டிருப்பது அவசியம். அவைகளின் உயர்வை, உன்னதத்தினை யோசிப்பது அவ்வளவு சிரமமில்லை. விசுவாசத்தோடு சம்மனசானவர் தெய்வீக நன்மைத்தனங்களோடு விளங்கிய மரியாயை ஆராதித்த போது, இந்த தாழ்ச்சியானக் கன்னிகை அந்த மகா உன்னத மகிமை உயர்வுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டு வியப்படைந்தாள் மீட்பினுடையவும். மனிதாவதாரத்தினுடையவும் பரமரகசியங்களை முன்னறிவிப்பவராக தாம் ஏற்படுத்தப்பட்ட மரியாதையினால் சம்மனசானவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலோற்பவ மாதாவின் மகோன்னதமான உயர்வு பெருமைகளையெல்லாம் திருச்சபையின் ஜெபங்களிலும், திருவழிப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. மரியாயின் நாமம். எல்லா அழகோடும், தூய்மையோடும், ஒளிபொருந்திய சூரிய பிரகாசத்தோடும், அவர்களது வரப்பிரசாத சுகந்தங்களோடும் அகில உலகெங்கும் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. அவர்கள் ஜெருசலேமின் மகிமை உயர்வு. மக்களின் பெருமை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தெய்விக வல்லபத்தின் உருவம் உயர்ந்த பரிசுத்த பர்வதங்களின் உச்சியில் கட்டப்பட்ட கடவுளின் திருநகர்!

ஒ. அனைத்தும் பரிசுத்த பிரகாசமான மாசில்லாத கன்னிகையே, உலகமுண்டாகும் முன்பே நீர் தேர்ந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்! குற்றங்களின் பாரத்தால் நசுக்கப்பட்டு மீட்பு பற்றிய நிச்சயமில்லாமல் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் மனிதன் உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறான். நீரே எங்களது நம்பிக்கை, உம்மில் உம் வழியாகவே குற்றவாளிகள் வரப் பிரசாதத்தைக் கண்டடைகிறார்கள். நொறுக்கப்பட்டவன் ஆறுதலையும், கைவிடப்பட்டவன் அடைக்கலத்தையும், அறிவிலி ஞானத்தையும்; பாவியானவன் மன்னிப்பையும்; நீதிமான் நிலைமை வரத்தையும் கண்டடைகிறான். தாயே நீரே எங்களது ஏக அடைக்கலம்!



Source: சால்வே ரெஜினா- டிசம்பர் 2006

Christmas - உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்

 உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்






உலகம் இன்று போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இறுதிக் காலங்களின் ஓர் அடையாளமாக "தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்பும்" (மத் 24:7) என்று நம் ஆண்டவர்தாமே முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா- யுக்ரேன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்ற எந்த ஒரு போரும் எந்த நிமிடத்திலும் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உலகப் போராக மாறக்கூடிய ஆபத்து நம் தலைக்கு மேல் வாளைப் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பிற நாடுகளை ஏமாற்றிக் கைவசப்படுத்து வதற்கென்றே உருவானவை போன்ற நாடுகள் "பேச்சு வார்த்தை" மூலம் சமாதானத்தை நிலை தாட்டப் போவதாகப் பாசாங்கு செய்கின்றன. அவை முதுகுக்குப் பின்னால் இடது கையில் கத்தியை மறைத்துக்கொண்டு வலது கையால் "பாசத்தோடு" கைகுலுக்குகின்றன. வேறு வழியின்றி அவற்றை நம்பும் ஏழை நாடுகள் பல வகைகளிலும் தங்களையே அவற்றிடம் அடகு வைக்கின்றன. உலகத்தில் சமாதானமில்லை. ஏனெனில் இப்போது அது "கடவுளற்றதாக" மாறிக் கொண்டிருக்கிறது. அது சமாதானம் (கடவுள்) இல்லாத இடங்களில் அதைத் தேடுகிறது. உலக செல்வங்களிலும், வெற்று வாக்குறுதிகளிலும், பேராசையிலும் அதைத் தேடுகிறது.

தனி மனிதர்களோ கடவுளை அடியோடு மறந்துவிட்டு, உலக செல்வங்களிலும், உலகக் கேளிக்கைகளிலும், மதுவிலும், சரீர இச்சையிலும் தங்கள் இன்பத்தையும், அதில் சமாதானத் தையும் தேடுகிறார்கள். நல்லொழுக்க விதிகளை மீறுவதில் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஊடகங்கள் சகல அகத்தங்களையும் கொண்டு மனிதனை நிரப்பி, அந்திக் கிறிஸ்துவுக்கான பாதையை மிக எளிதாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒளியைத் தேடுவதாக நினைத்துக்கொண்டு. மேலும் மேலும் அதிகக் கடுமையான, "தொட்டுணரக் கூடிய இருளுக் குள் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் சமாதானமில்லை.

இன்றைய (சங்கத்) திருச்சபையோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரட்சணியப் பணியை அடியோடு மறந்துவிட்டு, உலகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே உலக மதத் திற்கான விதையை அதுவே பூமியில் ஊன்றி, அது வளரத் தேவையான எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறது. அது தன் திவ்ய எஜமானராகிய உலக இரட்சகரைத் "தெய்வங்களில்" ஒருவராகப் பார்க்கிறது. அல்லது இன்னும் மோசமாக, சமூகப் புரட்சி செய்ய வந்த ஒரு "மிகச் சிறந்த மனிதராகப்" பார்க்கிறது. சங்கச் சபை சுவிசேஷ போதனைகளை ஏளனம் செய்கிறது; சரீர இச்சை, ஓரின உறவு, குருந்துவ அழிவு, துறவற அழுகல், தேவத் திரவிய அனுமானங்களின் முழுச் சிதைவு, விசுவாசமற்ற "இறை மக்களின்" வெறுமையான "மனித நேய" ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டு, தானே ஒரு முழுமையான விசுவாச மறுதலிப்பை முழுமை யாக்கி விட உழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய "திருச்சபையிலும் சமாதானமில்லை!

இந்நிலையில் இதோ! கீழ்த்திசையினின்று ஓர் ஒளி உதிக்கிறது/ பெத்லகேமில் உண்மை யான "சமாதானத்தின் அரசர்" (இசை.9:6) தோன்றுகிறார்? ஆச்சரியத்திற்குரிய முறையில், இன்று உலகம் தேடும் எதுவும் அவரிடமில்லை! பரலோக, பூலோக, பாதாள லோகங்களாகிய திரிலோகங்களையும் ஒரே வார்த்தையால் படைத்த அந்த நித்திய செல்வந்தர், இதோ, மனிதர் களின் இருதயங்களிலும், சத்திரத்திலும் கூட, தமக்கென ஓர் இடமின்றி, மாடும், கழுதையும் அடையும் கொட்டிலில், மூடத் துணியுமின்றி, படுக்கக் கட்டிலுமின்றி, உலசு வசதி ஏதுமின்றி. தீவனத் தொட்டியில் பரப்பிய வைக்கோலின்மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! யாருக்கு முன்பாக வானத்து நட்சத்திரங்களும் கூட வெறுமையாகவும். ஒரு மூச்சுக் காற்றைப் போலவும் இருக்கின் றனவோ, யாருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறதோ, யாருக்கு முன்பாக மலை களும், குன்றுகளும் துள்ளிக் குதிக்கின்றனவோ, அந்த உன்னத சர்வேசுரன் இங்கே, ஏதும் செய்ய இயலாத எல்லாவற்றிற்கும் தம்முடைய மாசற்ற திவ்ய கன்னிகையாகிய திருத்தாயாரையும், பிதாவால் தமக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட பரிசுத்த விரத்தராகிய நீதிமானையும் சார்ந்திருக்கிறார்! நித்திய பிதாவோடு ஒரே பொருளானவர். கீழ்ப்படிதலின் நிமித்தம் இந்தக் கேடுகெட்ட மனிதனை மீட்பதற்காக, சகல அசுத்தங்களும் நிறைந்த உலகிற்கு இறங்கி வந்திருக் கிறார்! நல்ல வேளையாக, பூலோக மோட்சமாகிய அமல உற்பவ நித்தியக் கன்னிமையின் மாசற்ற இருதயம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது!

ஆம்! கிறீஸ்துநாதரின் பிறப்பு தரும் போதனை உலகத்திற்கு எதிரானது! அது தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம், தரித்திரம், கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் போதனை! கிறீஸ்து பாலன் உலக இன்பங்களுக்கான, உலகில் சுகமாக மனிதன் வாழ்வதற்கான வழியை அல்ல, மாறாக, நித்திய மோட்சத்தின் வழியை, நித்திய இரட்சணியத்தின் வழியைத் திறந்து வைக்கவே வந்திருக்கிறார்! அவரே கூறுவது போல, அந்த வழி ஒடுக்கமானது! கல்லும், முள்ளும் நிரம்பியது! அதில் நுழைபவன் எவனும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, இரத்தம் தோய்ந்த தன் திவ்ய எஜமானரின் பாதச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவனாயிருக்கிறான்!

ஆயினும் இது நமக்கு அச்சம் தரத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஒடுங்கிய வழிக்குள் ஒருவன் நுழைந்த மாத்திரத்திலேயே, உலகம் தர முடியாத, நிரந்தரமான, நல்ல மனத்தவர்களுக்குரிய சமாதானம் அவனை நிரப்பி விடுகிறது. உலகத் துன்பங்களால் கெடுக்கப்படவோ, அழிக்கப்பட்டவோ முடியாத சமாதானம் அது! இன்னும் சொல்லப் போனால், உலகத் துன்பங்களை ஏக்கத்தோடு தேடச் செய்கிற உத்தமமான சமாதானம் அது!

அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த சமாதானத்தில் வாழ்ந்தார்கள்! பல சமயங்களில் அது தருகிற மோட்சத்தின் முன்சுவையாகிய இந்த நித்திய சமாதானத்தையும், பேரின்பத்தின் சில துளிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகக் கூட அவர்கள் இருந்தார்கள்! நம்முடைய ஞானத் தகப்பனான அர்ச். சவேரியாரின் "இந்திய" வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்! பிரபுத்துவப் பிறப்பு! ஆடம்பரமான இளமை வாழ்வு! மிகச் சிறந்த கல்வி! புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி! ஆனால் இதிலெல்லாம் தம்மால் காண முடியாத உண்மையான சமாதானத்தையும், உண்மையான இன்பத்தையும் அவர் தரித்திர வாழ்வைத் தேர்ந்துகொண்ட போது, மட்டற்ற விதமாக அனுபவித்தாரி! இரவெல்லாம் ஜெபத்தில் கழித்து, பகலெல்லாம் கால்நடையாக அல்லது படருகளில் பல ஊர்களுக்குச் சென்று பூசை வைத்து, ஞான உபதேசம் கற்பித்து, ஆலயங்கள் கட்டி, அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடிக் கழித்த பின், இரவில், அந்த மணப்பாட்டுக் குகையில் முழந்தாளிட்டபடி தம்முடைய பரவச நிலையில், "போதும்! போதும் என் ஆண்டவரே! தேவரீர் என்மீது பொழிகிற இந்தப் பேரின்பத்தை என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது!" என்று கூக்குரலிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தச் சமாதானத்தின் வேர்கள் எதில் ஊன்றியிருக்கின்றன? அவை தேவசிநேகத்தில் ஊன்றியிருக்கின்றன. இந்த தேவசிநேகமோ தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அடங்கி யிருக்கிறது. அவை தேவ நம்பிக்கையில் ஊன்றியிருக்கின்றன. பெத்லகேமின் திவ்ய பாவனைப் போல, வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரித்திர நிலையிலும், சர்வேசுரனைத் தன் சொந்தமாகக் கொண்டிருப்பவனை விடப் பெரிய செல்வந்தன் எவனும் இல்லை. அந்த வேர்கள் அசைவுறாத தேவ விசுவாசத்தில் ஊன்றியுள்ளன. இன்றைய விசுவாச மறுதலிப்புக்கு மத்தியிலும், புயலடித்தபோதும், வெள்ளம் வந்து மோதிய போதும். திடமான விசுவாசமென்னும் பாறையின் மீது எவனுடைய வாழ்வு கட்டப்பட்டிருக்கிறதோ. அவன் பாக்கியவான். ஆயினும், தன்னுடைய பரிசுத்த வாழ்வின் மூலம், இந்த விசுவாசமாகிய தேவ கொடை என்றென்றும் தன் சொந்தமா யிருப்பதையும், அது நித்திய ஜீவியத்திற்குரிய கனிகளைத் தன்னில் பிறப்பித்து, அவற்றை விளை வித்துக் கனியச் செய்வதையும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், "மலை களைப் பெயர்த்தகற்றும்" வல்லமையுள்ளதாக இருந்தாலும் கூட கடவுளுக்கு முன்பாக எந்த மதிப்பும் அற்றதாக இருக்கிற ஒரு விசுவாசம் உண்டு! அது பரிசுத்த வாழ்வில் ஊன்றியிராத. வெறும் போலி விசுவாசம்!

மேலும் அது கடவுளுக்குச் சித்தமானால் பரிசுத்த கன்னிமையில், அல்லது ஜீவிய அந்தஸ்துக்குரிய கற்பில் ஊன்றியிருக்கிறது! கடவுளுக்குச் சித்தமானால், அவரைப் போலவும். அவருடைய திருத்தாயாரைப் போலவும், பரிசுத்த நீதிமானைப் போலவும், பரிபூரண தரித்திரத் தையும் ஏற்றுக்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது! மரண மட்டுக்கும். அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவரைக் கண்டுபாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருப் பதிலும், அவரால் நமக்கு மேலாக நியமிக்கப்படுபவர்களுக்குப் பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் பணிந்திருப்பதிலும் அடங்கியிருக்கிறது!

இவை இல்லாத கிறீஸ்துமஸ் திருநாட்கள் திவ்ய பாலனின் பார்வையில் "அருவருப்புக் குரியவையாக" இருக்கின்றன என்பதை மறவாதீர்கள், குடில்கள், வீட்டு அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவற்றில் மட்டுமே இன்று மனிதன் கிறீஸ்து பிறப்பைக் கொண்டாடுவதுதான் இன்றைய பெரும் தீமையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் கிறீஸ்து பிறப்பிற்காகத் தன் ஆத்துமத்தை ஆயத்தம் செய்து வைத்துக் காத்திருப்பதை அவன் நினைப்பது கூட இல்லை. இவைகளைத்தான் செய்திருக்க வேண்டும்; அவைகளையும் விட்டு விடலாகாது (மத்.23:23).மேலும் உங்க ளிடையே வாழும் ஏழைகளையும் மறந்து விடலாகாது! எனவே, அன்புச் சகோதரரே! கிறீஸ்துநாதர் உண்மையாகவே நம் ஆத்துமங்களிலும்,

இல்லத்திலும் வந்து பிறப்பதை உறுதி செய்துகொள்வோம். அப்போது, நல்மனத்தோருக்குரிய சமாதானம் நம்முடையதாகும்; அதுவே உன்னத ஸ்தலங்களில் சர்வேசுரனுக்கு மகிமையாக இருக்கும்.




Source: Matha Malar - நவம்பர் - டிசம்பர், 2023


மரியாயே வாழ்க!