Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 10 மார்ச், 2022

Devotion to St. Antony (Day 22)

 இருபத்திரண்டாம் நாள்


ரிமீனி (Rimini) பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்


சேசு கிறிஸ்துநாதர் தமது மிகவும் பிரமாணிக்கமுள்ள ஊழியரான அந்தோனியாருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் புத்தியில்லாத அற்ப சிருஷ்டிகளைக்கொண்டு மற்ற மனிதருக்கு முன்பாக வெளிப்படுத்தி அவர்களுக்குப் புத்தி படிப்பித்து மனந்திரும்பும் படி செய்யச் சித்தமானார். எப்படியென்றால், பிரிவினைக்காரர் பெருமளவு இருந்த ரிமினி பட்டணத்துக்கு அர்ச். அந்தோனியார் சென்று அவர்களை மனந்திருப்புவதற்கு வேண்டிய பிரயத்தனமெல்லாம் செய்தும் அவர்கள் கல்நெஞ்சராய்த் தமது பிரசங்கங்களை முதலாய்க் கேட்க மனமில்லாமல் வராதிருக்கிறதைக் கண்டு, அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனை நோக்கி மன்றாடி. அபரிமிதமான கண்ணீர் சொரிந்து, இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு, சுற்றி நின்றவர்களை நோக்கிப் புத்தியுள்ள மனிதருக்குத் தேவ வாக்கியங்களைக் கேட்க 

மனமில்லாதிருந்ததால் புத்திரில்லாத அற்பப் பிராணிகளுக்குச் சர்வேசுரனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்தப் போகிறதாகச் சொல்லி கடலோரம் சென்றார். அவர் அவ்விடத்தில் செய்யப்போவதென்னவென்று அறிய ஆசையினால் அநேகர் அவரைத் தூரத்திற் பின் சென்றார்கள். அவர் கடலோரம் சேர்ந்தபோது மீன்களெல்லாவற்றையுந் தமது பிரசங்கம் கேட்க வரவழைத்தார். உடனே மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாய் கரையோரம் வந்து சின்ன மீன்கள் வரிசை வரிசையாய் மணலோரத்திலும், அவைகளுக்குப் பின்னால் நடுத்தரமான மீன்களும், கடைசியில் பெரிய மீன்களும் வரிசைக் கிரமமாயிருந்து தலையெடுத்து அவர் பக்கமாய் வெகு கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தோனியார் அவைகளுக்குப் பிரசங்கம் பண்ணினார். இந்த ஆச்சரியத்தைக் கண்ட பிரிவினைக்காரர் அர்ச்சியசிஷ்ட வருடைய பாதத்தில் விழுந்து மன்றாடவே அவர் அவர்களுக்கு வெகு உருக்கமாய்ப் பிரசங்கம் பண்ணி அவர்கள் தப்பறைகளையும் துர்நடத்தையையும் எடுத்துக்காட்ட அவர்களில் அநேகர் மனந்திரும்பினார்கள். பிறகு அவர் மீன்களை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு ரிமினி பட்டணத்தில் சில நாள் தங்கி எல்லோரையும் வேத சத்தியங்களில் உறுதிப்படுத்தினார்.


ஆனாலும் மனந்திரும்பாத சில கொடிய பாவிகள் அவைரப் பழிவாங்கி அவரைக் கொல்ல நினைத்து அன்பு காண்பிப்பவர்களைப் போல அவரை விருந்துக்கு அழைத்து விஷங்கலந்த பதார்த்தங்களை அவருக்கு முன்பாக வைத்து அவைகளைச் சாப்படும்படி அவரைக் கேட்டார்கள். ஞான திருஷ்டியால் அவர்களுடைய மோசக் கருத்தை அறிந்த அவர் அவர்கள் மோசக் கருத்தை வெளிப்படுத்தி, அவர்கள் செய்தது அக்கிரமமென்று அவர்களுக்குச் சொன்னபோது "விஷத்தையுண்ட போதிலும், அதனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராது" என்று சேசுநாதர் தமது அப்போஸ்தலருக்கு சொன்னதில்லையோ? அதன் உண்மையைப் பரிட்சை பார்க்கிறதற்காகத்தான் இப்படிச் செய்தோமென்று சொன்னார்கள். உடனே நமது அர்ச்சியசிஷ்டவர் ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டு, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: 'நீங்கள் கேட்கிற பிரகாரம் நான் செய்யப் போகிறேன். சுவாமியைச் சோதிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுடைய இரக்ஷணியத்தையும், திருச்சபையின் மகிமையையும் நான் எவ்வளவு ஆசிக்கிறேன் என்றால் அதற்காக எதுவும் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று காண்பிக்கிறதற்காகவே நீங்கள் கேட்ட பிரகாரஞ் செய்யப் போகிறேன் என்று சொல்லி, விஷங்கலந்த பதார்த்தத்தைக் கையிலெடுத்து சிலுவை அடையாளம் வரைந்து அவரைக் கொல்ல நினைத்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க அதைச் சாப்பிட்டார். ஆனால் அவருக்குக் கெடுதியொன்றும் உண்டானதில்லை. அதற்கு விரோதமாய் வர அவரைக் கொல்லத் தேடினவர்களெல்லோரும் மனந் பது திரும்பினார்கள். இந்தப் பிரகாரமே வேறநேக சமயங்களிலும் அவரைக் கொல்லத் தேடினவர்கள் முயற்சி வியர்த்தமாய்ப் போய் நன்மையே விளைந்தது.


நமது சீவியக்காலத்தில் உண்டாகும் இக்கட்டுகளால் நமக்கு அதைரியம் உண்டாகும் போது அர்ச் அந்தோனியாரை நினைத்து அவருடைய பொறுமை சாந்தகுணத்தைக் கண்டு ஆறுதலடையக்கடவோம்.


செபம்


புத்தியுள்ள மனிதர் உமது அருமையான பிரசங்கங்களைக் கேட்க மனமிராதிருந்தபோது, சர்வேசுரனுடைய ஏவுதலாற் கடலின் மச்சங்களுக்குப் பிரசங்கம் பண்ணின அர்ச் அந்தோனியாரே! எங்கள் புத்தி, மனது, நினைவு இவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு எப்போதும் கீழ்ப்படுத்தி நடந்து நித்திய மோட்சம் இராச்சியஞ் சேரக் கிருபை அடைந்தருளும். ஆமென்.


நற்கிரியை: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.


மனவல்வயச் செபம்: புதுமைகளால் பிறந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

Devotion to St. Anthony (Day 21) in Tamil

 அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்

இருபத்தோராம் நாள்


உரோமாஞா நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள்


சங்கத்தில் சபை அதி சிரேஷ்டரைத் தெரிந்துகொண்டு, அர்ச். பிரான்சீஸ்குவுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டங் கொடுக்கவேண்டுமென்று எல்லோரும் விண்ணப்பம் செய்துகொண்ட பிறகு அர்ச். அந்தோனியார் உரோமாஞா விலுள்ள அர்ச். பிரான்சீஸ்கு சபை மடங்களுக்குச் சிரேஷ்டராக நியமனம் பெற்றார். அப்போது அவருக்கு முப்பத்திரண்டு பிராயம் நடந்து வந்தது.

மரணமட்டுங் கீழ்ப்படிந்த சேசுகிறீஸ்து நாதரைத் தமது உன்னத மாதிரியாகத் தெரிந்துகொண்டிருந்த அந்தோனியார், சனங்களை மனந்திருப்ப வெகு ஆவல் கொண்டவரானாலும், பெரியோர்கள் கட்டளைக்குச் சந்தோஷமான மனதோடு கீழ்ப்படிந்து தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மடங்களைச் சந்தித்து விசாரிக்கத் தொடங்கினார். உரோமாஞா நாட்டிலுள்ள மடங்களுக்கு அநேக வருஷகாலம் சிரேஷ்டராக இருந்து அம்மடங்களை அடிக்கடி சந்தித்து வெகு பக்தி விமரிசையோடும் அன்போடும் சந்நியாசிகளை விசாரித்து தமது உத்தம மாதிரியினாலும், சாந்த குணத்தினாலும் எல்லோரும் புண்ணிய வழியில் நடப்பதற்கு ஏவி வந்தார். தமது உத்தியோகத்தினுடைய கடமைகளை நிறைவேற்றின பிறகு ஆத்துமங்களை இரட்சிக்கிற வேலையை விடா முயற்சியோடு செய்யத் துவக்கினார். பலவிடங்களைச் சந்தித்து, பிரிவினைக்காரர் அநேகரை மனந்திருப்பி, எளியவர்களை வலியவர்களுடைய கொடுமையினின்று விடுவித்து, பகையாளிகளைச் சமாதானப்படுத்திப் பலவித நன்மை உபாகாரங்களைச் செய்து வந்தார்.

ஜெமோனா (Gemona) பட்டணத்து மடம் கட்டும்போது அந்தோனியார் வேலையாட்களோடு தாமும் சேர்ந்து வேலை செய்து கொண்டு வருகையில், அவ்வழியாய் ஒருவன் வெற்று வண்டியொன்று ஓட்டிப்போகக் கண்டு, அவனிடம் போய் கற்கள் கொண்டு வருகிறதற்காக கொஞ்ச நேரத்துக்கு வண்டி வேண்டுமென்று கேட்டார். அவனுக்கோ வண்டி கொடுத்துதவ மனதில்லாதவனாய் வண்டியிற் படுத்திருந்த ஒருவனை அவருக்குக் காண்பித்து மரித்தவன் ஒருவனை ஏற்றிப்போகிறேனென்று சொன்னான். அதன் பேரில் அந்தோனியார் அவனை விட்டுப் போய்விட்டார். வண்டிக்காரன் வண்டியைக் கொஞ்சந்தூரம் ஓட்டிப்போய் நடந்த சங்கதியை வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனுக்குச் சொல்லவேண்டுமென்று அவனைத் தட்டி எழுப்ப, அவன் மெய்யாகவே செத்தப் பிரேதமாக இருக்கிறதைக்கண்டு அழுது புலம்பி செத்தப் பிரேதத்தைக் கொண்டுவந்து அந்தோனியார் பாதத்தில் கிடத்தி, தானும் அவருடைய பாதத்தில் விழுந்து அவர் தன்மேல் இரக்கம் வைக்க வேண்டும் என்று அவரைக் கெஞ்சி மன்றாடினான். அப்போது அந்தோனியாருக்கு மனதிளகி செத்தவனை உயிர்ப்பித்து அவனுடைய தகப்பனிடத்தில் ஒப்புவித்து நல்ல புத்திமதி சொல்லி அனுப்பினார்.

நாம் புண்ணிய வழியில் நடக்க ஆசைப்பட்ட போதிலும் நமது ஆத்துமத்தை மாசுப்படுத்தும் அற்பப் பாவங்களை நாம் கொஞ்சங் கூடச் சட்டைபண்ணாமல் நடந்து வருகிறோம். செபத்தினாலும், தர்மத்தினாலும், நற்கிரியைகளினாலும் நமது அற்பக் குற்றங்களைப் பரிகரிக்கப் பிரியாசப்படக்கடவோம். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுடைய உதவியைக் கேட்போம். அவர்கள் வேதனை குறைய வேண்டிக் கொள்ளக்கடவோம்.


செபம்

மகா வல்லமையுள்ள எங்களுடைய சகல அவசரங்களிலும் எங்களுக்கு நீர் உதவி புரிய உம்மை மன்றாடுகிறோம். எங்கள் கஸ்திகளிலும், வியாதிகளிலும், இக்கட்டுகளிலும் ஆறுதலும் துணையுமாயிருந்து, இவ்வுலகில் எங்களுக்குப் பசாசினாலும் துர்மார்க்கராலும் உண்டாக விருக்கிற தின்மைகளை அகற்றி எங்களை மோட்ச இராச்சியம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம். ஆமென்


நற்கிரியை : உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்துவைக்கிறது.

மனவல்லயச் செபம்: கீழ்ப்படிதலின் கண்ணாடியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,


St. Anthony Devotion (Day 20) in Tamil

 இருபதாம் நாள்


உரோமாபுரியில் நடந்த நிகழ்ச்சிகள்


இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்ட அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சபையின் ஒழுங்குகளை அங்கீகரித்த 3-ம் ஒனோரியுஸ் என்னும் பாப்பானவர் அந்த ஒழுங்குகளை தாழ்ச்சியுடன் அனுசரித்துவந்த அர்ச். அந்தோனியாரை உரோமாபுரியில் கண்ட பிறகு மரித்தார். அவருக்குப் பிற்பாடு அர்ச். பிரான்சீஸ்குடையவும், அர்ச். சாமிநாதருடையவும் உற்ற சிநேகிதரான யுகோலின் (Hugolin) என்னும் கர்தினால் பாப்பானவராகத் தெரிந்துகொள்ளப்பட்டு 9-ம் கிறகோரியார் என்னும் பெயர் பூண்டு திருச்சபைக்குத் தலைவரானார். ஏற்கனவே அவர் பாப்பானவர் பட்டந்தரிக்கப்போவதை அர்ச். பிரான்சீஸ்கு என்பவர் அவருக்குத் தீர்க்கதரிசனமாய் அறிவித்திருந்தார். அர்ச். அந்தோனியாருடைய மகிமையும், கீர்த்தியும் அவர் பிரிவினைக்காரரை வென்று அவர்களுக்குப் பயங்கரத்தை வருவித்து அவர்களுடைய கர்வத்தை அடக்கும் சம்மட்டியென்பதும் எங்கே பார்த்தாலும் பரவியிருந்த படியால் அர்ச். பாப்பானவர் உரோமாபுரியில் பிரசங்கம் பண்ணும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். படித்தவர் களுக்கும், படிக்காதவர்களுக்கும், பிரபுக்களுக்கும், எளியவர் களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் தகுந்த வண்ணம் அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் பண்ணினபடியால் அவருடைய கல்வித் திறமையையும், வாய்ச்சாலகத்தையும், புத்தி சாதுரியத்தையும் கண்டு ஆச்சரியப்படாதவர் ஒருவருமில்லை. ஆனதால் உரோமாபுரி சனங்களெல்லாரும் புது மனிதரானதுபோல் தங்கள் பக்தியினாலும், விசுவாசத்தினாலும், பக்தி ஒறுத்தல் கிருத்தியங்களினாலும் அக்காலத்தில் விளங்கி வந்தார்களென்று சொல்லலாம்.

அர்ச். பாப்பானவர் முதல் சகல கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிரசாதிகளும், அந்தோனியாருடைய பிரசங்கங்களைக் கேட்க வெகு ஆவவோடு போவார்கள். அவர் வேத வாக்கியங்களை எவ்வளவு தெளிவாய் வியாக்கியானம் பண்ணி அடிக்கடி அவைகளைப் பிரயோகித்து வந்தார் என்றால், அரிசி, பாப்பானவர் ஆச்சரியமிகுந்து 'பழைய புதிய ஏற்பாடுகளின் பெட்டகம்' என்று அவரை அழைப்பார். ஏனெனில், பழைய ஏற்பாடு புது ஏற்பாடு முழுமையுமே அர்ச்சியசிஷ்டவருடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது.

பாஸ்கா  நாள் அடுத்து வந்த போது பரிபூரணப் பலனடைய நாலாபக்கத்துச் சனங்களும், பல சாதியாரும் பல தேசத்தாரும் திரண்டு உரோமை நகர் சேர்ந்த சமயத்தில் அந்தோனியார் பரிபூரணப்பலனைப் பற்றி பாப்பானவருடைய கட்டளை மின்மேல் பிரசங்கித்தார். அப்போது அர்ச். பாப்பானவரும், கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிர சாதிகளும் திரண்டு வர, எண்ணிக்கையில்லாத சனங்கள். பல மொழிக்காரர், இவர்களுக்கு முன்பாக அவர் பிரசங்கம் பண்ணினதை ஒவ்வொருவருந் தங்கள் தங்கள் மொழிகளில் அவர் பேசினதுபோலத் தெளிவாய்க் கண்டுபிடித்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர் காலத்தில் நடந்த அற்புதமே அப்போதும் நடந்ததென்று எண்ணி அர்ச். பாப்பானவர் சொன்னதென்னவெனில்: மெய்யாகவே, இவர் உடன்படிக்கையின் பெட்டகமும், வேத வாக்கியத்தின் திரவியமுமாயிருக்கிறார்" என்றார். அந்தோனியாரை எப்போதும் உரோமாபுரியிலேயே நிறுத்திக்கொள்ள அர்ச். பாப்பானவருக்கும் மற்றவர்களுக்கும் இஷ்டமிருந்தபோதிலும், அந்தோனியார் தாழ்ச்சி மிகுதியினால் அப்பேர்ப்பட்ட மகிமையிலிருந்து தப்பித்துக் கொள்ள, சிரேஷ்டர்களுடைய அனுமதியின்பேரில் சபைப் பொதுச் சங்கங் கூடவேண்டிய முதன்மையான சம்மனசுகளின் மாதா மடத்துக்குப் (Notre-Dame des Anges) போனார்.

உரோமைபுரியிலும், பிரஞ்சு தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் இன்னும் மற்ற இடங்களிலும் அவ்வளவு பேர் பெற்று விளங்கின போதகரான அந்தோனியாரே சொல்வதைக் கேளுங்கள். 'நமதாண்டவரான சேசு கிறீஸ்துநாதருடைய வாக்கியத்தை நன்றாய்க் கண்டுபிடித்து அதைக் கேட்பதில் பிரியங் கொள்ளுகிறதுக்கு உனக்கு ஆசையுண்டோ? அவருடைய சீவியத்துக்கு ஒத்த பிரகாரம் உன் சீவியத்தையும் ஒழுங்குபடுத்தப் பிரயாசைப்படு' என்றார்.

பிரசங்கம் கேட்கும்போதும், ஞான வாசகங்கள் வாசிக்கும்போதும் நம்முடைய ஆத்தும நன்மையை நினைத்துக் கொள்ளக்கடவோம். பிரசங்கங்களில், ஞான வாசகங்களில் சொல்லப்படுவது மற்றவர்களுக்குத் தான் என்று நாம் எண்ணாமல், நமக்குத்தானே என்று நிச்சயித்து நாம் கேட்கும் பிரசங்கங்களினாலும் வாசிக்கும் ஞான வாசகங்களினாலும் நமது ஆத்துமங்களுக்கு ஞானப் பிரயோசனமுண்டாகும்படி அர்ச். அந்தோனியாரைப் பிரார்த்திக்கக்கடவோம்.


செபம்

சேசுநாதருடைய பிரிய நேசரான அர்ச். அந்தோனியாரே, துர்க்குணங்களை ஒழித்துப் புண்ணியங்கள் வளரும்படி செய்தவரே, என் சீவிய நடத்தையை உமது அடைக்கலத்தில் வைக்கிறேன். நான் சாவான பாவத்தில் ஒருபோதும் விழாமல் நீரே எனக்குப் புண்ணிய வழி காட்டியருளும். என் வார்த்தைகளினாலும், நடத்தையினாலும் பிறருடைய ஆத்தும இரக்ஷணியத்தை நான் தேடும்படி செய்தருளும். ஆமென்.


நற்கிரியை: வேதத்தை அசட்டைப்பண்ணுகிறவர் களுக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம்: பாவிகளை மனந்திருப்பினவரான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Devotion to St. Anthony (day 19) - அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்

அர்ச். அந்தோனியார் வணக்கமாதம் 
பத்தொன்பதாம் நாள் 


அர்ச். தேவமாதா தரிசனையானது. 



அர்ச் அந்தோனியார் செய்துவந்த பிரசங்கங்களினாலும், புதுமைகளினாலும் அநேகமான பாவிகளும் பிரிவினைக்காரரும் மனந்திரும்பித் தன்னுடைய கைகளின்று தப்பித்துப் போகிறதைக்கண்ட பசாசு அவர்மேல் கோபங்கொண்டு அவரைக் கொலை செய்யத் தேடினது. 
அர்ச்சியசிஷ்டவர் பிரிவ் கெபிகளில் தங்கி ஏகாந்தத்திலிருந்து, தன் சரீரத்தை வருத்திக் கடின தபசு செய்து, செபத்திலுந் தியானத்திலுங் காலத்தைச் செலவழித்து வந்தார். அப்போது ஒரு நாள் களைத்து அவர் இளைப்பாறக் கட்டிலின்மேற் படுத்தவுடனே பசாசு குரூர முகத்தோடு அவருக்கு முன்பாகத் தோன்றி அவர்மேல் பாய்ந்து அவருடைய கழுத்தைப் பிடித்து நெருக்கி அவர் உயிரைப் போக்கத் தேடினது. அர்ச்சியசிஷ்டவர் வாய் திறக்க மாட்டாமலும், மூச்சுவிட மாட்டாமலுமிருக்க வெகு பிரயாசையோடு திணரிக் கொண்டு "ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே (0 golriosa Domina) என்று சொன்ன மாத்திரத்திலே மகா ஒளி பொருந்திய பிரகாசத்தோடு சம்மனசுகள் சூழ மோக்ஷ இராக்கினி தமது திருக்குமாரனைக் கரங்களிலேந்திக்கொண்டு அவர் பக்கத்தில் நின்று, பசாசைக் கோப முகத்தோடு பார்த்து ஓடிப்போகும்படி கட்டளையிடவே, பசாசு ஓடி நரக பாதாளத்தில் விழுந்தது. அந்தோனியார் ஆண்டவளுடைய பாதத்தில் முழங்காலிலிருந்து "நல்ல ஆதரவின் மாதாவே" (Notre-Dame de Bon Secours) என்னும் நாமத்தால் அவளை வாழ்த்தி அவளுக்கு நன்றியறிதலான தோத்திரங்கள் செலுத்தினார். 
இந்தப் புதுமையை ஞாபகப்படுத்த அந்தக் கெபியில் மாதாவின் சுரூபம் ஒன்று பசாசுகளை மிரட்ட வாய் திறந்த பிரகாரமும், அவைகளை ஓட்டத் தமது கையிலிருந்த செங்கோலால் சைகை" காட்டுகிற பிரகாரமும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சுரூபம் வைக்கப்பட்ட பீடத்தண்டை அர்ச்சியசிஷ்டவர் காலத்திலும், விசேஷமாய் அவர் மரித்த பிறகும் அநேகமாயிரம் சனங்கள் போய் மாதாவை நோக்கி வேண்டிக்கொண்டு தங்களுக்கு வேண்டிய மன்றாட்டுகளைக் கேட்பார்கள். பிரஞ்சு தேசத்தில் 18-ம் நூற்றாண்டின் கடைசியில் கொடிய வேத கலாபம் நேரிட்டபோது வேத விரோதிகள் அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகளைத் துரத்திவிட்டு மடத்தை இடித்துப்போட்டு, கெபிகளை விற்றுவிட்டபோதிலும், நல்லாதரவு மாதாவினுடையவும், அர்ச் அந்தோனியாருடை யவும் ஞாபகமும், வணக்கமும் நில்லாது நிலைநின்று, சனங்கள் இராக்காலத்தில் அவ்விடத்துக்குப் போய் வேண்டிக்கொண்டு, ஊற்றின் தண்ணீரெடுத்து வந்து தங்களுக்கு அந்த மாதாவின் மட்டிலும், புதுமை விளங்குகிறவரான அந்தோனியார் மட்டிலும் உண்டான பக்தி நம்பிக்கையை விடாது காட்டி வந்தார்கள். 
1874-ம் வருஷம் அந்தோனியார் பேரில் பக்தியுள்ள சில புண்ணியவான்கள் உதவியைக் கொண்டு அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகள் அத்திரு யாத்திரை ஸ்தலத்தைத் திரும்பவும் அடைந்து ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி துல் (Tulle) நகரத்து மேற்றிராணியார் அதை மந்திரித்து அவர்கள் கைவசப்படுத்தினார். பிறகு புதிதாய் மடங் கட்டப்பட்டது. கோயில் புதுப்பிக்கப்பட்டது. வியாதிக்காரர் சாலைகளும், அநாதப் பிள்ளைகள் மடங்களும் ஏற்பட்டன. இன்னும் வேறே அநேக நூதன ஏற்பாடுகளும் உண்டாயின. பூலோகமெங்கும் அர்ச் அந்தோனியாரைக் கொண்டு சர்வேசுரன் செய்துவரும் நன்மைகளுக்காகவும் அற்புதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி இனிமேலும் அப்படியே செய்து வரும்படி மன்றாட வேண்டியது. அந்தோனியாரைட் போலவே நாமும் நமக்குப் பசாசினால் வரும் ஆபத்துக்களிலும் சரி, வேறே எந்தக் கஷ்ட துன்பங்களிலுஞ் சரி நல்லாதரவின் மாதாவை, உம்முடைய தாயாரை, வேண்டிக் கொள்வோமேயானால் அவள் நமக்குத் தம்மைத்தானே காண்பிக்காமற்போன போதிலும் நமது மன்றாட்டுக்கு இரங்குவாளென்பதற்குச் சந்தேகமில்லை. அர்ச். பிரான்சீஸ்கு அசிசி (1181-1226) மரித்த பிறகு அந்தோனியாரை இத்தாலியா தேசம் போகச் சிரேஷ்டவர்கள் கட்டளையிட்ட மாத்திரத்தில் அவர் உடனே கீழ்ப்படிந்து போகிறார். உரோமாபுரியையும், அஸ்ஸீஸ் பட்டணத்தையும் நோக்கி கால்நடையாக வழியில் பிச்சை இரந்து சாப்பிட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக்கொண்டு செல்லுகிறார். 
ஓ! அவருடைய கீழ்ப்படிதலானது எவ்வளவோ ஆச்சரியத்துக் கூரியது! அதைக் கண்டு அதிசயித்து நாமும் உலக காரியங்களின்மட்டில் பற்றுதல் வைக்காமல் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு மாத்திரம் சந்தோஷமாய்க் கீழ்ப்படிந்து நடக்கக்கடவோம். 

  செபம் 
 ஓ! அர்ச். அந்தோனியாரே, சேசுவின் மாதாவுடைய பிரமாணிக்கமான ஊழியரே, நல்லாதரவு மாதாவினிடத்தில் எனக்காகப் பரிந்து பேசி, அவள் என்மட்டில் தயவுகூர்ந்து என் பாவங்களுக்குப் பொறுத்தல் அடையவும், நான் புண்ணிய நெறி நடக்க வரப்பிரசாதந் தந்தருளவும் எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென். 

நற்கிரியை: அநாதைப் பிள்ளையை ஆதரிக்கிறது. 
மனவல்லயச் செபம்: பசாசுகளுக்குப் பயங்கரமான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 46


பார்த்தோ நகர மேற்றிராணியாரைப் பின்பற்றி, மொதேனா நகரின் மேற்றிராணியாரான வந்.வில்லியம் ஆண்டகையும் (பிற்காலத்தில் சபினா நகரின் கர்தினாலாக பொறுப்பேற்றார்) சாமிநாதரை அணுகி, தம்மையும் அவருடைய சபையின் சகோதரராக ஏற்கும்படி விண்ணப்பித்தார். உடனே அர்ச். சாமிநாதர், அவரை தமது சபையில் ஏற்றுக்கொண்டு, தந்தைக்குரிய பொறுப்புகளை அவருக்கு அளித்தார். தமது ஜீவியகாலம் முழுவதும் வந். வில்லியம் ஆண்டகை அர்ச்.சாமிநாத சபைத் துறவியாகவே புண்ணியத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து, நன்மரணம் அடைந்தார். ஒரு சமயம், ஒரு பங்கு குருவானவர் பிரான்சு நாட்டிலிருந்து ரோம் நகரத்துக்கு வந்தார். வரும் வழியில், மொதேனா நகரத்தில், அவர் அர்ச். சாமிநாதர் பிரசங்கித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பிரசங்கம் முடிந்ததும், அவர் சாமிநாதரைத் தனியாக சந்தித்து, தனக்கு வரும் பலவிதமான சோதனைகளைப் பற்றியும், அவற்றில் முக்கியமாக சரீரத்துக்கு அடுத்த பாவசோதனைகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாத நிலைமையைப் பற்றியும் கூறினார். இச்சூழ்நிலையில், தனது ஆத்துமத்தை நித்தியத்திற்கும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சினார். 

இதனால், மற்ற ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தாம் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறினார். உடனே சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச். சாமிநாதர், அவரிடம், "சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கத்தின் மேல் முழு நம்பிக்கையுடன் உங்களுடைய பங்குக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுடைய ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள். நானே உங்களுக்குத் தேவையான இச்சையடக்கம் என்னும் புண்ணியத்தை சர்வேசுரனிடம் மன்றாடிப் பெற்றுத் தருவேன்" என்று கூறினார். அவரும் அர்ச்சிஷ்டவருடைய வார்த்தையை முழுதும் நம்பியவராக, திருப்தியுடன் சென்றார். அர்ச். சாமிநாதர் இரவுபகலாக தேவாலயத்தில் திவ்ய நற்கருணைப் பேழையின் முன்பாக இக்கருத்துக்காக ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டு வந்தார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்தார். அதன்விளைவாக, இதுவரைக்கும், மாமிசத்துக்கு எதிரான பாவசோதனைகளை எதிர்ப்பதில் மிகவும் பலவீனராக இருந்த இக்குருவானவர் சிறிது காலத்திலேயே, இச்சையடக்கம் நிறைந்தவராக , நிறைகற்பு என்னும் புண்ணியத்தை நுட்பமாக அனுசரித்து, தன் சரீரத்தை ஒடுக்கி அநேக நற்புண்ணியங்களை அனுசரிக்கலானார். உத்தம ஞானமேய்ப்பராக ஜீவித்தார்.

லோம்பார்டி என்ற நகரில் ஒரு சமயம் பலருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, அர்ச். சாமிநாதர், அநியாய வட்டி வாங்கி அநீத செல்வத்தைப் பெருக்கி வந்த ஒரு சட்ட ஆலோசகனைக் காண வந்தார். அவன் சாகும் தருவாயில் இருந்தான். அவனுக்கு அவஸ்தைக் கொடுப்பதற்காக ஒரு குருவானவர் ஏற்கனவே அங்கு இருந்தார். அவர் முன்னிலையில், அர்ச். சாமிநாதர், அவனிடம், அவன் இதுவரை வசூலித்திருந்த அநியாய வட்டிகளை அவரவரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். அதற்கு அவன் இணங்கவில்லை. தனது பிள்ளைகள் அதனால் தரித்திரநிலையை அடைந்துவிடுவார்கள் என்று கூறி, அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அங்கிருந்த குருவானவருடன் அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து சென்று விட்டார். அவனுக்கு திவ்ய நன்மையும் கொடுக்காமல் சென்று விட்டார். அவனுடன் இருந்த மற்றவர்கள், அவன் திவ்ய நன்மை வாங்காமல் இறந்தால் அவனுக்கு கிறிஸ்துவ அடக்கம் கிடையாது என்று கூறினர். உடனே அவன் அங்கு கூடியிருந்தவர்களை ஏமாற்றும்படியாக, இறுதியாக சாகுமுன் உட்கொள்வதற்காக ஒரு குருவானவரை வரவழைத்து திவ்ய நன்மை உட்கொண்டான். உடனே, "ஐயோ, நான் முழுவதும் எரிகிறேனே ! நரகமே எனது வாய்க்குள் இறங்கிவிட்டதே ! இதோ நாம் எல்லாரும் எரிந்து கொண்டிருக்கிறோமே! இதோ , பாருங்கள் ! இங்கு எல்லாம் நெருப்பாக இருக்கிறது!'' என்று அலறினான். இவ்வாறு அலறிக்கொண்டே அவன் அவலமாய் மரித்தான். இதேபோல வேறு ஒருநாள், ஒரு அநீதவட்டிக்காரன், தான் தேவப்பிரசாத அந்தஸ்தில் இருப்பதாக நடித்துக் கொண்டே, அர்ச். சாமிநாதரிடம் வந்து திவ்ய நன்மை உட்கொண்டான். அப்பொழுது, அவனுடைய நாக்கில் ஒரு நெருப்புக்கரி வைத்தது போல துடிதுடித்தான். தனது பாவங்களுக்காக உடனே மனஸ்தாபத்தால் நிறைந்தவனாக அர்ச்சிஷ்டவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதன்பிறகு தான் வாங்கிய அநியாய வட்டித் தொகையை அவரவரிடம் திருப்பித் தந்தான். இறுதிவரை திருந்திய நல்ல கத்தோலிக்கனாக ஜீவித்தான்.

St. Anthony Devotion (Day 18) in Tamil

 பதினெட்டாம் நாள்


வெங்காயத்தின் புதுமை


அர்ச். அந்தோனியார் சபையின் ஒழுங்குப் பிரகாரம் வயல்களின் லீலிப் புஷ்பங்களை உடுத்தி வானத்தின் பறவைகளைப் போஷித்து வரும் வல்லமை பொருந்திய சர்வேசுரனுடைய கிருபைகடாக்ஷத்தையே தம்முடைய மடத்துச் சவரக்ஷணைக்காக எப்போதும் நம்பியிருப்பார். அநேகாநேக சமயங்களில் மடத்தில் ஒன்றுமில்லாமலிருப்பதும் உண்டு. அப்படியே சாப்பாட்டுக்கு ஒன்றும் அகப்படாத ஒருநாள், அர்ச். அந்தோனியார் ஒரு பக்தியுள்ள ஸ்திரீயிடம் சொல்லி அவளுடைய தோட்டத்திலிருந்து ஏதாவதது மரக்கறி பதார்த்தங்கள் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அந்தப் புண்ணியவதி உடனே தன்னுடைய வேலைக்காரியை அழைத்துத் தோட்டத்தில் காய் வகைகள் பறித்து மடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்று கட்டளை மிட்டாள். ஆனால் அச்சமயம் அசாத்தியமான மழை விடாமற் பெய்துகொண்டிருந்ததால் வேலைக்காரி சாக்குப் போக்குச் சொன்னபோது, அவசியம் கொண்டுபோகத்தான் வேண்டுமென்று எசமானி திரும்பவும் கட்டளையிட்டதால், வேலைக்காரி ஒரு பெருங் கொத்து வெங்காயமும், கிழங்கும், காய்களும் பறித்துத் தொலைவிலிருந்த மடத்துக்கு எடுத்துப் போனாள். மழை ஓயாமற் பெய்து கொண்டிருந்தபோதிலும் ஒரு துளி தண்ணீர் முதலாய் அவள் மேற்படவில்லை, அவள் திரும்பி வந்தபோது நடந்த அற்புதத்தைத் தன் எசமானி யிடத்திற் சொல்ல இருவரும் சுவாமிக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணினார்கள். அந்தப் புண்ணிய வதியின் குமாரன் ஒரு மடத்துக்குச் சிரேஷ்டராயிருந்தவர், வெகு சந்தோஷத்தோடு இந்த அற்புதத்தைப்பற்றி அடிக்கடி பேசி வருவார்.

இந்த விசேஷத்தைப் பற்றித்தான், இந்தப் புதுமையை ஞாபகப்படுத்துவதற்காகத் தான், பிரிவ் பட்டணத்தில் ஆகஸ்டு மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்காயச் சந்தை வெகு வருஷ காலமாய்க் கூடி நடந்து வருகிறதென்று அநேகர் எண்ணுகிறார்கள். அர்ச்சியசிஷ்டவருடைய சரித்திரத்தை எழுதினவர் இந்தப் புதுமையைப் பேசும்போது வேலைக்காரர், வேலைக்காரிகள் தங்கள் எசமான்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தங்களுக்கு இடும் கட்டளைகளை நல்ல மனதோடு நிறைவேற்றினால் அவர்களுக்கு இவ்வுலகத் திலேயே சர்வேசுரன் வெகுமதி அளிப்பாரென்று எழுதி வைத்திருக்கிறார். இந்தக் காலத்திலோ, வேலைக்காரரும் பிள்ளைகளும் எசமான்கள் பெரியவர்கள் என்கிற எண்ணமில்லாமல் இருக்கிற காலமாயிருக்கின்றது. பரலோகத்தையும் பூவோகத்தையும் படைத்த சேசுநாதசுவாமியே கீழ்ப்படிடத்த நடந்தார். ஆனதால் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.

'காணாமற்போன பொருளைக் கண்டுபிடிக்கும்படி அர்த் அந்தோனியார் செய்கிறார்" என்பது எல்லோரும் அறிந்த காரியம். அவருக்கு இந்த வரம் எப்போது சுலாம் அளித்தாரென்றால், அவர் மடத்திலிருந்த ஒரு நவசந்தியாகி மடத்திலிருக்க மனதில்லாமல் அதை விட்டு இரகசியமா ஓடிப்போகும்போது அவர் எழுதி வைத்திருந்த பிரசங்ல பிரதிகளையும் திருடிக்கொண்டு போய்விட்டார் அந்தோனியார் அவர் ஓடிப்போனதைப்பற்றியும், மேலும் திருடினதைப் பற்றியும் கவலைப்பட்டு வேண்டிக்கொண்டார் திருடி ஓடிப்போகத் தந்திரம் பண்ணின பசாசே நவசந்நியாசியைக் கொன்றுபோடுவதாகப் பயமுறுத்தி திருடின பொருளோடு திரும்பவும் மடம் சேரக் கட்டாயப்படுத்தியதால் சந்நியாசி பயந்து மனஸ்தாபப்பட்டுத் திரும்பி வந்து அர்ச்சியசிஷ்டவருடைய பாதத்தில் விழுந்து தன்னை மடத்தினின்று தள்ளிவிடாதபடிக்கு அவரைக் கெஞ்சி மன்றாடினார். அக்காலமுதல் இக்காலம் வரைக்குங் காணாமற்போன பொருளைக் கண்டடைய அர்ச், அந்தோனியார் உதவி புரிந்து வருகிறார். 13-ம் சிங்கராயர் என்னும் அர்ச். பாப்பானவர் அர்ச். அந்தோனியார் பூலோக முழுமைக்கும் அர்ச்சியசிஷ்டவர் என்கிறார். மெய்யாகவே அந்தோனியார் எத்தேசங்களிலும் எந்தச் சாதி மனிதரிடத்திலேயும் தமது வல்லமையைக் காட்டிப் புதுமை செய்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் இவ்வுலகத்தில் எளியவர்களையும், தாய் தகப்பனற்ற பிள்ளைகளையும் சகலராலுங் கைவிடப்பட்டவர் களையும் விசேஷ விதமாய் நேசித்தவராதலால், இப்போதும் அவருடைய மன்றாட்டுகளைக் கேட்கும்  நாமும் விசேஷமான பிரகாரம் எளியவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், சகலராலும் கைவிடப்பட்டவர்களுக்கும் நல்ல மனதோடு நம்மாலான உதவி செய்யும்படி சித்தமாயிருக்கிறார். அப்படி நாம் செய்வோமேயானால் நாம் அவரைக் கேட்கும் அனுக்கிரகத்தைத் தவறாமல் கட்டளையிடுகிறார். ஆனதால் நாம் அவருடைய சலுகையைத் தேடி நமது இரட்சணியத்துக்கும் அர்ச்சியசிஷ்டத்தனத்துக்கும் அவசியமான வரங்களை அவரிடத்தில் கேட்கக்கடவோம்.


செபம்

கவலைப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிற அர்ச். அந்தோனியாரே, என்னைச் சுற்றிலும் வருத்தும் இக்கட்டுகளைப் பார்த்து என்னை இரக்ஷித்தருளும். அவைகளை நான் நல்ல மனதோடு சகிக்கும் கிருபை செய்யும். என் ஆபத்துக்களில் என்னை ஒருபோதும் கைவிடாமல் காப்பாற்றும். நாங்கள் எங்கள் கவலை துன்பங்களில் சுவாமிக்குப் பிரமாணிக்கமாயிருந்து நித்திய மோக்ஷானந்த ஆறுதலுக்குப் பாத்திரவான்களாகும்படி எங்களுக்காக மன்றாடியருளும். ஆமென்.


நற்கிரியை: ஒரு எளியவனுக்குச் சாப்பாடு போடுகிறது. 

மனவல்லயச் செபம்: கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


புதன், 23 பிப்ரவரி, 2022

St. Anthony Devotion (day 17) in Tamil

 பிரில் பட்டணத்துக் கெபிகள்


அர்ச். அந்தோனியாருடைய தாழ்ச்சியையும், புண்ணியங்களையும் அவர் செய்துவந்த அற்புதங்களையும் பசாசுகள் கண்டு கலங்கி அவருடைய உயிரை வாங்கத் தேடின சேன் ஜூனியன் (St. Junien) என்னும் ஊரில் பிரசங்கம் கேட்கவந்த திரனான சனங்களுக்குக் கோயிலில் இடமில்லாமையால் வெளியில் ஒரு மைதானத்தில் மேடைபோட்டு அம்மேடைமேல் குருப்பிரசாதிகளும் பிரபுக்களும் அந்தோனியாரைச் சுற்றி நின்றிகொண்டிருக்கும் படியான ஏற்பாடு செய்தார்கள். அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் துவக்குகிறதுக்குமுன் அதைக் கெடுக்க நினைத்திருந்த பசாசுகளின் மோசக் கருத்தை ஞான திருஷ்டியால் அறிந்து சனங்களைப் பார்த்து; பிரசங்கத்தின்போது என்ன சம்பவித்தபோதிலும் அதனால் யாதொரு கெடுதியும் நடவாதென்று அறிவித்தபிறகு பிரசங்கத்தை ஆரம்பித்தார். நடுச்சமயத்தில் மேடை அதிர்ந்து விழ அதைப்பற்றி ஒருவரும் கவனிக்கவுமில்லை, ஒருவருக்கும் சேதமும் இல்லை. அந்தோனியார் மற்றொரு உயர்ந்த ஸ்தலத்தில் ஏறி துவக்கின பிரசங்கத்தை முடித்தார். சனங்கள் அவருடைய ஞான திருஷ்டிகைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.



கடைசியில் பிரிவ் பட்டணம் வந்து சேர்ந்தார். அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த ஐசுவரியவான் ஒருவர் அவ்விடத்தில் அவர் ஒரு மடங் கட்டுவதற்கு வேண்டிய ஆஸ்தி வைப்பதாகச் சொன்னார். ஆனால் தனிவாசத்தை நேசித்த அர்ச்சியசிஷ்டவர் அடுத்தாற்போலத் தனித்துக் கெபிகள் இருப்பதாகக் கண்டு அங்கே அடிக்கடி போய்க் கொண்டிருப்பார். அந்தத் தனித்தவிடத்தில்தான் தம்முடைய ஆசைக்குத் தக்க அளவு செபத்திலும், தியானத்திலும், தவத்திலும், ஏகாந்தத்திலும் எப்போதும் சர்வேசுரனுடைய சமூகத்தில் காலத்தைச் செலவழித்தார். பாறையினின்று துளித்துளியாய் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபடியால் தமது கையால் ஒரு குழி தோண்டி தண்ணீரைத் தாம் உபயோகப்படுத்தி வந்தார். "பாறையில் உன் வாசஸ்தலத்தைத் தெரிந்து கொள்" என்றாற் போல அந்தோனியார் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்தார். சேசுநாதரே அந்தப் பாறை, அவரிடத்தில் தான் உன் வாசஸ்தலமும், உன் நினைவுகளும், உன் பட்சமும் இருக்கவேண்டியது. வனாந்தரத்தில் யாக்கோபு பாறையின்மேல் தலைவைத்து நித்திரை போகையில், பரமண்டலந் திறந்து அதனின்று இறங்கின சம்மனசுகளோடு சம்பாஷணைசெய்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதுபோலவே சேசுநாதரிடத்தில் தன் வாசஸ்தலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆத்துமமும் ஆசீர்வதிக்கப்படும். அர்ச். அந்தோனியார் தமது விரலினால் பள்ளம் தோண்டி தண்ணீரை அதில் விழும்படி செய்தார். திருயாத்திரை ஸ்தலங்களில் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பாதத்தின் அடியிலோ, வேறெந்த அற்புத விதமாகவோ உண்டான ஊற்றின் நீரைக்கொண்டு சர்வேசுரன் அநேகம் புதுமைகளைச் செய்யத் திருவுளமானார். 13-ம் நூற்றாண்டு முதல் பிரிவ் பட்டணத்தை அடுத்த கெபியின் ஊற்றில் அநேக அற்புதங்கள் நடந்து வருகின்றன. ஞானஸ்நானத்துக்குச் சேசுநாத சுவாமி தண்ணீரைத் தெரிந்துகொண்டார். கடல் நீரின்மேல் நடந்தார். தாமே தண்ணீரால் ஞானஸ்நானம் பெறத் திருவுளமானார். கடலின் அலைகளுக்குக் கட்டளையிட்டார். உடனே அமரிக்கை உண்டானது. இக்காலத்திலும் 1858-ம் வருஷம் பிரஞ்சு தேசத்தில் லூர்துமாநகரில் மஸபியேல் கெபியில் அர்ச். தேவ மாதா பெர்நதெத்தம்மாளுக்குக் காட்சி தந்த ஸ்தலத்தில் ஏற்பட்ட ஊற்றுநீரைக்கொண்டு அவ்விடத்தில் மாத்திரமல்ல, அந்த அற்புதமான தண்ணீர் எந்தெந்தத் தேசங்களுக்குக் கொண்டு போகப்படுகின்றதோ, அவ்விடங்களிலெல்லாம் வருஷாவருஷம் நடந்து வரும் புதுமைகளுக்குக் கணக்குண்டோ?


மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தை நாம் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும்போது அதனால் நமக்கு அநேகம் பலன்களுண்டு. அந்தோனியார் இத்தாலியா தேசத்தில் அநேகவிடங்களில் கிணறுகளும் ஊற்றுகளும் எடுக்கச் செய்து அத்தண்ணீரால் அநேக வியாதிஸ்தரை குணப்படுத்தினார். பிரிவ் கெபி தண்ணீருக்கு விசேஷ குணம் கட்டளையிட்டிருக்கிறார். அதனால் அநேகர் சௌக்கியப்பட்டிருக்கிறார்கள். நாமும் கூடுமானபோது நம்பிக்கையோடு அதைப் பிரயோகித்துக்கொள்ளக்கடவோம். தீர்த்தத்தினாலும், சிலுவையினாலும், மற்ற அநேக புண்ணிய முயற்சிகளாலும் நமது அற்ப குற்றங்களை நிவாரணஞ் செய்யக்கடவோம். எவ்வளவுக்கு நம்முடைய ஆத்துமம் பரிசுத்தமாயிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை அடையப் பாத்திரவான் களாவோம்.


செபம்


ஓ வல்லமையும் பிறசிநேகமும் உள்ளவரான அரிச் அந்தோனியாரே, பிரிவ் நகரத்துக் கெபிகளின் தண்ணீரால் ஆத்தும வியாதிகளையும் சரீர நோய்களையும் தீர்த்தீரே, வியாதியினால் பலமற்றிருக்கும் அடியேன் மேல் இரக்கமாயிரும். ஆங்காரம், கோபம், மோகம் இவை முதலானவைகளே என் தீராத வியாதி. எனக்கு ஆத்தும சரீர சுகத்தை நீர் அடைந்து அடியேன் என்றென்றைக்கும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யும்படிக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை: தர்மம் செய்கிறது.,


மனவல்லயச் செபம்: புதுமைகளால் விளங்கினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 45

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 45

ஒரு சமயம் அர்ச்.சாமிநாதர் பாரீஸிலிருந்து பொலோஞா நகருக்குச் சென்றார். அங்கு, அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தில் சகோ. ரெஜினால்டுவினுடைய பொறுப்புமிக்க வழிநடத்துதலினால், கிறிஸ்து சேசுவுக்குள் நன்கு போஷிக்கப்பட்டு துறவறஜீவியத்தில் வேரூன்றிய இவருடைய சபை சகோதரர்கள் ஏராளமானோர், இவரை மகிழ்வுடனும், தந்தைக்குக்குக் காட்ட வேண்டிய சங்கை மரியாதையுடனும் உற்சாகமாக வரவேற்று உபசரித்தனர். முன்மாதிரிகையுடன் கூடிய ஞானதியான பிரசங்கங்கள் மூலம் அவர்களுடைய ஞான ஜீவியம் உத்தமதனத்தில் நன்கு செழித்து வளரும்படியாக, அவர்களுடன் சிறிது காலம் சாமிநாதர் தங்கினார். அந்நகரிலிருந்த ஓர் குருவானவர், அர்ச். சாமிநாதரும் அவருடைய சீடர்களும், ஞானபிரசங்கங்கள் நிகழ்த்துவதில் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டிருப்பதையும், மற்ற எந்த உலக சன்மானங்களைப் பற்றியோ, உலக தேவைகளைப்பற்றியோ கவலைப்படாமல் ஜீவிப்பதையும், ஞான காரியங்களுக்காக மற்ற எல்லாவற்றையும் துறந்தவர்களாக வாழ்வதையும் உன்னித்துக் கவனித்து வந்தார். அவர்களுடைய இந்த உன்னதமான துறவற ஜீவிய அந்தஸ்தின் வசீகரத்தால் கவர்ந்திழுக்கப்பட்டவராக ,இக்குருவானவர், பக்திபற்றுதலின் துாண்டுதலால், அர்ச். சாமிநாதருடைய துறவறஜீவியத்தை தம்மால் முடிந்தவரை பின்பற்ற ஆவல் கொண்டார். 

இப்பரிசுத்த ஆவலின் பிரகாரம், அவர், எல்லாவற்றையும் முழுவதுமாகத் துறந்து விட்டு, அர்ச். சாமிநாதசபைத் துறவிகளுடைய ஜீவியத்தைப் பின்பற்ற விரும்பினார். ஆனால், அந்த போதகதுறவியருடைய ஜீவியத்திற்குள் உட்படுவதற்கு புதிய ஏற்பாடு மிக அவசியமாகத் தேவை என்றும், சுவிசேஷத்தின் இந்நுால் தனக்குக் கிடைக்குமானால், தான் நிச்சயமாக எல்லாவற்றையும் துறந்து விட்டு சாமிநாத சபைக்குள் உட்படுவதாக நினைத்திருந்தார். இவ்வாறு அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் தன் அங்கியினுள் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதை விற்பதற்காக அவரிடம் வந்தான். அவன் கொண்டு வந்த புத்தகம் சுவிசேஷத்தின் புதிய ஏற்பாட்டு நுால்எ ன்றறிந்ததும், குருவானவர் ஆச்சரியத்துடனும் அகமகிழ்வுடனும் உடனே , சுவிசேஷ புத்தகத்தை அவனிடம் வாங்கினார். ஆனால், சுவிசேஷத்தை வாங்கிய பிறகு, "நான் இச்சபையில் உட்படுவது சர்வேசுரனின் சித்தம் தானா? இதில் உண்மையில் ஆண்டவர் மகிழ்வாரா?'' என்றெல்லாம் அக்குருவானவர் சோதனையான நினைவுகளுக்கு உட்பட்டார். இவ்வாறு பல நினைவுகள் மாறி மாறித் தோன்றி அவரைக் குழப்பிக் கொண்டிருந்த போது, இக்காரியத்தில் சர்வேசுரனுடைய பதிலை, சுவிசேஷத்திலேயே பார்க்க வேண்டும் என்று எண்ணிய அவர், ஒரு சிறு ஜெபத்தை பக்தியுடன் ஜெபித்த பிறகு, சுவிசேஷத்தை மூடினார். பிறகு, புத்தகத்தின் மீது, சர்வேசுரனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே, சிலுவை அடையாளத்தை வரைந்தார். அதன்பிறகு, சுவிசேஷத்தைத் திறந்து முதன்முதலாக வந்த பக்கத்தைத் திறந்து படித்தார். கொர்னேலியுஸ் மூன்று பேரை அர்ச். இராயப்பரிடம் அனுப்பியபோது, இஸ்பிரீத்துவானவர், அவரிடம், "நீ எழுந்து புறப்பட்டுச் சற்றேனும் ஐயப்படாமல் அவர்களுடனே கூடப்போ' ஏனெனில் நாமே அவர்களை அனுப்பினோம்" என்று கூறிய பகுதியை வாசித்தார். சுவிசேஷத்தின் இப்பகுதியை வாசித்தவுடன், தாம் அர்ச். சாமிநாதரைப் பின்பற்றுவதே சர்வேசுரனின் சித்தம் என்பதை உறுதி செய்தவராக, உடனே உலகத்தை முழுதும் துறந்து விட்டு, சாமிநாத சபைத் துறவற சகோதரர்களைப் பின்பற்றி, அச்சபையில் உட்பட்டார்.

மற்றொரு சமயம், பொலோஞாவில் அர்ச்சாமிநாதசபைத் துறவற மடத்தில் சகோதரர்களின் எண்ணிக்கைமிக அதிக அளவாக உயர்ந்தபோது, திருச்சபையின் தலைமையகத்திலிருந்து , பாப்பரசரின் துாதுவராக வந். கொன்ராட் என்ற பார்த்தோ நகர மேற்றிராணியார் பொலோஞாவிற்கு வந்திருந்தார். அப்போது, சாமிநாதசபைத் துறவிகள், இவரை மிகுந்த மரியாதையுடனும், நேசத்துடனும் வரவேற்று தங்களுடைய மடத்தில் தங்க வைத்து உபசரித்தனர். ஆனால், இந்த மேற்றிராணியார், புதிதாக துவங்கிய இச்சபையைப் பற்றிய தவறான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டார். எக்காரணத்தினால், இம்மாதிரியான , வழக்கத்தில் இல்லாத , புதிய, துறவற சபை துவங்கப்பட வேண்டும் ? இச்சபையினால் எவ்வித ஞான நன்மைகள் திருச்சபைக்கு கிடைக்கும்? இச்சபை மனிதரிடமிருந்து உருவானதா? அல்லது சர்வேசுரனிடமிருந்து தோன்றிய துறவற சபையா? என்றெல்லாம் நினைத்துக் குழப்பமடைந்திருந்தார். இத்தகைய குழப்பத்துடன் தேவாலயத்திற்குள் சென்றார். அங்கு அச்சபையின் சகோதரர்கள் இவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஒரு விசேஷ இருக்கைக்குச் சென்றபோது, ஒரு புத்தகத்தைக் கொண்டு வரும்படிக் கேட்டார். அவர்கள் அவரிடம் திவ்ய பூசைப் புத்தகத்தைக் கொடுத்தனர். அதன்மேல் சிலுவை அடையாளத்தை வரைந்து விட்டு பூசைப்புத்தகத்தைத் திறந்தார். 

முதல் பக்கத்தின் தலைப்பில், ”Laudare, benedicere et nraedicare ஜூபுகழ், போற்று, பிரசங்கம் செய்”ஸ என்ற பகுதியை கண்டார். உடனே இச்சபையின் போதக அலுவலை பரலோகமே அங்கீகரித்துள்ளது என்பதற்கான பதில் இதுவே என்று கண்டுணர்ந்தார். தன் இருதயத்தில் இருந்த இச்சபையைப் பற்றிய ஐயப்பாடுகளையெல்லாம் அகற்றினார். அவரும் இச்சபையின் உன்னதமான துறவறஜீவியமுறையினால் பெரிதும் ஈர்க்கப்ட்டவராக, அச்சபைச் சகோதரர்களை அன்புடன் அழைத்து, "நான் வெளியே, எனது அந்தஸ்திற்கான வேறு உடையை அணிந்திருந்தபோதிலும், எனது ஆத்துமமானது உள்ளரங்கத்தில், உங்களுடைய சபையின் துறவற உடுப்பையே அணிந்துள்ளது. நான் முழுவதும் உங்களுக்கேச் சொந்தமானவன் என்று நிச்சயத்திருங்கள். உங்களுடைய சபையைச் சேர்ந்தவன். நான் என் என்னை எல்லாநேசத்துடன் உங்களுக்கே கையளிக்கிறேன்" என்று கூறினார்.

தேவமாதாவின் முப்பொழுதும் கன்னிமை ஸ்துதிக்கப்படக்கடவது!

 தேவமாதாவின் முப்பொழுதும் கன்னிமை ஸ்துதிக்கப்படக்கடவது!



கி.பி 508-ல் ரோமாபுரியிலே கிறீஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும், சேசு நாதர் பிறந்த பரம இரகசியத்தைப் பற்றி விவாதம் நடந்தது. இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனாலே, அர்ச். கன்னி மரியம்மாள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதும், சேசுநாதர் அவர்களிடமாய் அற் புதமாய் பிறந்தார் என்பதும், ஆகையால் தேவதாயார், முப்பொழுதும் கன்னிகையாக இருக் கிறார்கள் என்பதும் கிறீஸ்துவர்களின் விசுவாச சத்தியம். இந்த சத்தியங்களைப் பற்றி விளக்கி, கிறீஸ்துவர்கள் வாதாடினர். யூதர்கள் இதற்கு எதிரிடையாக வாதாடினர்.

ஒரு கன்னிகையிடமாக கர்ப்பம் உண்டாவது மனிதரால் கூடாத காரியம். எனினும், அது சர்வேசுரனுடைய அளவில்லா வல்லமைக்கு எளிய காரியம் என்றும், அவ்வாறே பரி சுத்த கன்னிமரியம்மாளிடம், ஆண்டவர் புதுமையாக உண்டானார் என்றும், கிறீஸ்துவர்கள்

எடுத்துரைத்தார்கள். அதற்கு ஆதாரமாக, அர்ச். கபிரியேல் சம்மனசானவர், தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, அர்ச். கன்னிமரியம்மாள், அவரைப்பார்த்து, தான் எப் பொழுதும் கன்னிகையாயிருக்க, இது எப்படியாகும்?" என்று வினவியதையும், அதற்கு சம் மனசு,"சர்வேசுரனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை" என்று பதிலுரைத்ததையும் எடுத்துக் காட்டினர். இவை முதலான நல்லநியாயங்களையும் யூதர்கள் ஒப்புக் கொள்ளாததால், ரோமா புரியிலிருந்து, யூதர்களைத் துரத்துவதற்கு, கிறீஸ்துவர்கள் யோசனை செய்தார்கள். அச் சமயத்தில், தேவதாயார் ஒரு பிறவிக்குருடன் வழியாக, இந்த விவகாரத்தைத் தீர்த்து வைக்க சித்தமானார்கள்.

அந்தப் பிறவிக் குருடன் எழுதப்படிக்கத் தெரியாதவன். எனினும் மிகவும் புத்திசாலி. குருக்கள் சொன்ன ஞானப் பிரசங்கங்களிலிருந்தும், வாசிக்கக் கேட்ட ஞானப் புத்தங்களிலி ருந்தும், அவன் சத்திய வேதத்தை நன்றாய் அறிந்திருந்தான். அன்றியும், அவன் தேவமாதாவின் மீது உத்தமமான பக்தி கொண்டிருந்தான். அவன், யூதர்கள் சொன்ன தேவ தூஷணங்களைக் கேட்டுக் கோபங்கொண்டான். அவன், தன் நம்பிக்கையெல்லாம் தேவதாயார்மேல் வைத்து, யூதர் சபை நடுவே எழுந்து, அவர்களோடு தர்க்கம் செய்தான். யூதர்களின் ஆட்சேபனை களுக்கு இவன் நல்ல நியாயங்களை எடுத்துக் கூறி தடுத்துப் பேசியதால், அவர்கள் வெட்கிப் பேசாமல் இருந்தார்கள்.

அப்போது ஒருவன் எழுந்து,"ஒன்றும் அறியாத மூடனே! பள்ளிக் கூடத்தையும் பார்க்காத நீ, எங்களோடு தர்க்கிக்க வரலாமா? உனக்கு என்ன ஆணவம்? எங்களுடைய வேதத்தில் உண்டான சாஸ்திரங்களைவிட, நீ, அதிக சாஸ்திரம் அறிந்தவனா? நீ பெரும்பாவி. உன்பாவத்துக்கு தண்டனையாக, உன் இரண்டு கண்களும் இருண்டு கிடக்கின்றன. இவை களையெல்லாம், நீ முன் பின் யோசியாமல், எங்களோடு தர்க்கிக்க வந்ததென்ன?" என்றெல் லாம் குருடனை நோக்கிவசை மாரி பொழிந்தான். பிறவிக் குருடன் இந்த வசை மொழிகளை யெல்லாம் பொருட்படுத்தாமல், தைரியமாய் தர்க்கித்து நின்று வெற்றி பெற்றான். இதைக் கண்ட மற்றொரு யூதன், "மரியம்மாள் எப்பொழுதும் கன்னிகை என்று தர்க்கிக்கும் நீ, ஒரு பைத்தியக்காரன். மரியம்மாளின் சேசு , தன் தாய் எப்பொழுதும் கன்னிகையாயிருக்க அற் புதம் செய்தாரென்றால், பிறவிக் குருடனான உன்னைக்குணப்படுத்துவது எளிய காரியமல்ல வா? இந்த எளிய காரியத்தை செய்யக் கூடாத சேசு, தன் தாயாரை, எப்பொழுதும் கன்னி கையாயிருக்க செய்வதெப்படி?" என்று கூறி நகைத்தான்.

அப்போது குருடன், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவால் ஏவப்பட்டு , யூதர்களைப் பார்த்து, " சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, என் கண்களுக்கு, வெளிச்சத்தைக் கொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டான்."அப்படியானால், நாங்கள், சேசுநாதர் கன்னிமரியம்மாளிடம் அற்புதமாய் உற்பவித்துப் பிறந்தாரென்று விசுவசிப்போம்” என்றனர். எனினும் அவர்களில் ஒருவன் எழுந்து,"சேசுநாதர், உன் கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடியவரல்ல. ஏனெனில் எங்கள் முன்னோர்கள், நீ விசுவசிக்கும் சேசுவை சிலுவையில் அறைந்து, அவர் உண்மையான கடவுளின் குமாரனானால், சிலுவையிலிருந்து இறங்கி, தன்னை, இரட்சித்துக் கொள்ளட்டும் என்றனர். ஆனால், அவராலே, தன்னை இரட்சித்துக்கொள்ளக் கூடாமற் போ யிற்று. எனவே, அவரால், எவ்வாறு உன் கண்களைக் குணப்படுத்த முடியும்?" என்று ஏளனம் செய்தான்.

குருடன்," சேசுகிறீஸ்துநாதர் என்னைக்குணப்படுத்தப்போவதை உங்கள் கண்களால் காணப் போகிறீர்கள். ஆகையால், நீங்கள், இப்போது கொடுத்த வாக்குப்படி நடக்கத் தவ றினால், உங்கள் சொத்துக்களையெல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்து. உங்களையும் இந்நக ரத்தை விட்டுத் துரத்துவார்கள்" என்று கூறினான். அதற்கு, அவர்கள் சம்மதித்து, சாட்சியும் வைத்தார்கள். அப்போது பிறவிக் குருடன், இனி வரும் மூன்றாம் நாள், தேவதாயார் தன் திருக் குமாரனை கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தத் திருநாள். அன்றைக்கு நீங்கள் பன்தையோனென்கிற தேவமாதாவின் தேவாலயத்திற்கு வாருங்கள்” என்றான். அதற்கு யூதர் களும் சம்மதித்தனர். அதன்பின் கூட்டம் கலைந்தது.

குருடன் பாப்பாண்டவரிடம் சென்று, நடந்ததையெல்லாம் தெரிவித்தான். அவர் சந் தோஷப்பட்டு, அவன் தேவதாயார்மேல் நம்பிக்கையாயிருக்கும்படி புத்தி சொல்லி, யூதர்களை, கெடுவின்படி, அந்த தேவமாதா கோயிலுக்கு வரும்படி கட்டளையிட்டார். குருடன் அம் மூன்று நாட்களும், தன் வீட்டில் ஒரு சந்தியாயிருந்து, ஆழ்ந்த ஜெபத்தில் நிலைத்திருந்தான். மேலும் எப்பொழுதும் கன்னிகையான தேவதாயாருக்குத்தோத்திரமாக, சில பாடல்களை இயற்றி, அவற்றைப் பாடினான். மூன்றாம் நாள், குறித்தபடி, தேவமாதாவின் தேவாலயத்தில், யூதர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் அநேக ஆயிரம் பேர் வந்து கூடினர். தேவால யம் நிரம்பி வழிந்தது.

அப்போது ஒருவன், பிறவிக் குருடன் கையைப் பிடித்து வழிகாட்டிய படி, நடந்து வந்தான். குருடன் மறுகையால் தடியை ஊன்றி மெல்ல நடந்து வந்து, கோயிலை அடைந் தான். அந்த திரளான கூட்டத்தின் நடுவே, யூதர் மத்தியில் வந்து சேர்வதற்கு, அவன் அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு சேர்ந்த பின், தான் இரண்டு கண்களும் தெரியாத வன் என்று, யூதர்கள் அறியும்படி, தன் முகத்தை நன்றாக, அவர்களுக்குக் காண்பித்தான். பிறகு, அங்கிருந்த குருவானவர்கள், திருநாளைக் குறித்து, ஜெபம் செய்யத் தொடங்கினார் கள். அப்போது குருடன் முழந்தாளிட்டு, முப்பொழுதும் கன்னிகையான மிகவும் பரிசுத்த தேவமாதா, தமது கன்னிமையை, ஒரு புதுமையால் விளக்க வேண்டுமென்று மிகுந்த விசு வாச பக்தி சுறுசுறுப்போடும், நம்பிக்கையோடும், வேண்டிக்கொண்டான். குருக்கள் தங்கள் ஜெபத்தை முடித்ததும், குருடன் தன் வழிகாட்டியை, தேவதாயாரின் சுரூபத்தின் அருகே, தன்னை அழைத்துப் போகும்படி கேட்டான். சுரூபத்தை நெருங்கியதும், அவன், தேவதாயா ருக்குத் தோத்திரமாக, தான் இயற்றிய பாடல்களைப் பாடினான். அவன், அப்பாடல்களைப் பாடி முடிந்ததும், தேவமாதாவின் கிருபையால், புதுமையாக, பார்வையடைந்தான்.

இந்தப் புதுமையைக்கண்ட கிறீஸ்துவர்களும், யூதர்களில் 500 பேரும் தேவதாயாரின் முப்பொழுதும் கன்னிமையை விசுவசித்தார்கள். தேவமாதா, திவ்ய சேசுநாதர் சுவாமியை, குழந்தையாய் தமதுதிருவுதரத்தில் உற்பவித்தற்கு முன்னும், தேவபாலனைப் பெற்ற போதும், திவ்ய பாலனைப் பெற்றெடுத்த பிறகும், கன்னிகையாயிருந்தார்கள் என்கிற கத்தோலிக்க விசு வாச சத்தியம் அந்தப்புதுமையால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் புதுமைக்குப் பிறகும், யூதர்களில் பலர், தாங்கள் கொடுத்த வாக்கின்படி நடக்கத் தவறியதால், அவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து, ரோம் நகரத்தை விட்டு வெளியேறினார்கள். விசுவசித்த 500 யூதர்கள் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையின் மக்களாயினர். பின் கத்தோலிக்க விசுவாசிகள் யாவ ரும், அற்புதமாக தேவமாதாவின் புதுமையால் கண்பார்வை பெற்ற குருடனுடனும், மனந் திரும்பிய யூதர்களுடனும் சேர்ந்து தேவதாயாரையும் ஆண்டவரையும் தோத்திரம் செய்த னர்; எல்லாம் வல்ல சர்வசுரனுக்கு நன்றி செலுத்தினர்.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் Life History of St. Alphonsus Liguori in Tamil

 திவ்ய இரட்சகர் சபையின் ஸ்தாபகர், அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்:




திருநாள் ஆகஸ்டு 2ம் தேதி 1696ம் வருடம் அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியார், நேப்பிள்ஸ் நகரத்தில், அக் காலத்தில் புகழ் பெற்றிலங்கிய, தொன் சூசை லிகோரி, தோனா அன்னாள் என்னும் பக்திக் குரிய தாய் தந்தையரிடத்தில் பிறந்தார். மரிய நேலா என்னும் பெயருடைய மாளிகையில் பிறந்த குழந்தைக்கு, கன்னியருக்கு இராக்கினியான தேவமாதா கோவிலில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த சேசுசபைகுருவானவர் பிராஞ்சீஸ்க்கு ஜெரோம் என்பவர், குழந்தையைக் கையிலேந்தி ஆசீர்வதித்து," இக்குழந்தை மிகவும் விருத்தாப்பிய வயது வரை க்கும் ஜீவிக்கும், மேற்றிராணியாராகவும் ஆகும், தேவதோத்திரத்துக்காகவும் அநேக ஆத்து மங்களின் இரட்சணியத்துக்காகவும், மிக அரியகாரியங்களை செய்து முடிக்கும்” என்று தீர்க்க தரிசனமாய் உரைத்தார்.

ஆனால், அரசனின் இராணுவத்தில் தளபதியாக உயர்ந்த பதவியிலி ருந்த தகப்பனார், தொன் சூசைலிகோரிக்கு, தமது சிரேஷ்ட புதல்வனைப் பற்றி கூறப்பட்ட தீர்க்கதரிசனம் ஒருவிதத்திலும் திருப்தியாயில்லை. அதற்கு மாறாக, தேவமாதா மீது மகா பக்தி யாயிருந்த தாய் அன்னாளுக்கு, அது மட்டற்ற அக்களிப்பையும், ஆறுதலையும் தந்தது. தேவ தாய் தனக்களித்த ஏழு குமாரர்களுக்கும், அனுதினம் மரியாயின் பக்தியை மறவாமல் ஊட்டி வளர்த்தாள். அர்ச். லிகோரியார் பின்னாளில் எழுதிய மரியாயின் மகிமைகள், என்னும் புத்த கம் இதற்கு சாட்சி. காலையும் மாலையும் தாய் மக்களை தன்னுடன் கூட்டிச் சேர்த்து, குடும்ப ஜெபம் ஜெபிப்பாள். தினமும் குடும்பத்தோடு சேர்ந்து ஜெபமாலை சொல்லுவாள். நல்ல புஸ்தகங்களை எடுத்து தினமும் ஞான வாசகம் வாசிக்கச் செய்வாள். பாவத்துக்கு விலகி அஞ்சி நடக்கவும், எப்பொழுதும் உண்மையே பேசவும் கற்பித்து வந்தாள். பரிசுத்த கற்பு என் னும் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அற்பப் பழுதும்படாமல் காப்பாற்ற வேண்டும்

என்று புத்தி புகட்டுவாள். அத்தோடு தாய், தன் மக்களின் கல்வி விஷயத்திலும் கவனமாயிருந்தாள்.

மூத்த மகனாகியலிகோரியார் கல்வியில் வெகுதேர்ச்சியடைந்து, தனது 17-வது வயதில் சட்ட சாஸ்திரத்தில் (L.L.D) பட்டம் பெற்று, பாரிஸ்ட்ட ர் என்னும் பதவியடைந்து, மகா கீர்த்தியும் மகிமையுமடைந்தார். இப்படி, 8 வருட காலமாக, தாம் ஒப்புக்கொண்ட ஒவ் வொரு வழக்கிலும் வெற்றியடைந்தார். ஓர்நாள், திரண்ட சொத்தைப் பற்றிய ஒரு வழக்கில், நெடு நேரம் மிகபலமாய் இவர் வாதாடி அமர்ந்த பின், எதிர் வக்கீல் எழும்பி, தம் கையிலி ருந்த ஓர் பத்திரத்தில் சில வரிகளை வாசித்து, லிகோரியாரைப் பார்த்து, நீர் ஏன் இவ்வளவு நேரம் வீணாய்ப் போக்கினீர்?நான் வாசித்த இதற்கென்ன பதில் சொல்கிறீர் என்று வினவி னவுடனே, லிகோரியார் ஸ்தம்பித்து, தலை கவிழ்ந்து, தாம் அதேபத்திரத்தை வழக்கு சம்பந்த மாய் அநேகமுறை வாசித்திருந்த போதிலும், அவ்வார்த்தைகளையும், சட்டமாற்றத்தையும் கவனிக்காது போனதைப் பற்றி அதிசயப்பட்டு, தாம் ஒருபோதும் அபத்தமென்றறிந்த வழக் குகளை ஏற்றுக் கொள்ளாதிருந்தும், சத்தியத்துக்கு விரோதமாய், தான் இப்போது வாதாடிய தால் சகலருக்கும் துர்மாதிரிகையானதே என்று சஞ்சலப்பட்டு, மனம் சோர்ந்து, இவ்வளவு ஆபத்துள்ள இவ்வுத்தியோகத்தை இனிமேல் ஒரு போதும் செய்வதில்லையென்று கூறிவிட்டு வீடு போய் சேர்ந்தார். இது தேவசெயலாய் நேரிட்ட சம்பவமே. இச்சம்பவத்துக்குப் பின், இவர் தம்மை தேவஊழியத்துக்கு ஒப்புக் கொடுத்து, தமது 30-வது வயதில் 1726-ம்ஆண் டில் டிசம்பர் 21-ம் தேதி அர்ச். தோமையார் திருநாளன்று குருப்பட்டம் பெற்றார். பின்புதீர்க் கதரிசன வாக்குப்பிரகாரம் மேற்றிராணியாருமானார். ஆத்துமங்களை இரட்சிப்பதற்காக அல் லும் பகலும் அயராது உழைத்தார். ஒருபோதும் நேரத்தை வியர்த்தமாய் செலவிடுவதில்லை என்று ஆண்டவருக்கு உத்தம வார்த்தைப்பாடு கொடுத்து அதை பிரமாணிக்கமாய் அனு சரித்துவந்தார். அதன்காரணமாக இரவும் பகலும் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல் லாம் சன்னியாசிகள், கன்னியாஸ்திரிகள், விசுவாசிகள் சகலருக்கும் ஆத்தும் பிரயோசனம் உண்டாகும்படி, அநேக நூற்றுக்கணக்கான பக்திக்குரிய புத்தகங்களையும், வேத சாஸ்திர நூல்களையும் எழுதி பிரசுரித்தார். அப்புத்தகங்களில் சில புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கது.

குருக்கள் பாவசங்கீர்த்தன மூலமாக ஆத்துமங்களை இரட்சிப்பதற்கு உதவியாக, இவர் எழுதிய இரு வேதசாஸ்திர நூல்கள் உலகெங்கும் கீர்த்தி பெற்றவை. அவை ஒவ் வொன்றும் 1000ம் ஏட்டுக்கும் அதிகமாயுள்ளது. இதை முறையே எழுதி முடிக்க, இந்த அர்ச் சிஷ்டவர் எடுத்து வாசித்து ஆராய்ந்த புத்தகங்கள் அநந்தமென அதில் தெளிவாகிறது. இந் நூலை, 312 அடி அளவுள்ள ஒரு சிறிய மேசையிலேயே, அவர் எழுதினார். இதுவும், ஒரு அர்ச் சிஷ்டப் பண்டமாக, நேப்பிள்ஸ் நகருக்கு அருகே, அர்ச். லிகோரியார் வாழ்ந்து மரித்த நொ சேரா ஊர் மடத்தில், காப்பாற்றப்பட்டிருக்கின்றது. தம்மாலியன்ற மட்டும் அநேக ஆத்து மங்களை இரட்சிக்க வேண்டுமென அத்தியந்த ஆவலுடன் நேப்பிள்ஸின் மேற்றிராசனங்கள் எங்கும் போய் பிரசங்கம் செய்வார். இப்பணியை தம்மோடு சேர்ந்து செய்யும்படியாக, திவ்ய இரட்சகர் சன்னியாச சபை, என்னும் ஓர்சபையையும் ஸதாபித்தார். அதில் உட்பட்ட குருக் கள் பல இடங்களுக்கும் போய், ஞான ஒடுக்கம் கொடுத்ததினால் அநேக ஆத்துமங்களுக்கு மோட்ச பாக்கியம் நிச்சயமானது. அர்ச். லிகோரியார், அனைவரும் நித்தியமான சத்தியங்க ளின் பேரில் எளிதில் தியானம் செய்து பலனடையத்தக்கதாக, நன்மரண ஆயத்தம், என்னும் தியானப் புத்தகத்தை தமது 62-ம் வயதில் 1758-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். நாள் தோறும் சிறியோர் பெரியோர் சரீரகாரியங்களைப்பற்றி சிந்தித்து யோசிக்கிறார்கள். இப்படி யே ஆத்துமகாரியத்திலும் செய்யவேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

அர்ச்சிஷ்டவர் மரணப்படுக்கையிலிருக்கும் போது, தாமே எழுதிய மரியாயின்மகி மைகள் என்னும் புத்தகத்தை, தமது சபை சன்னியாசிகள் வாசிப்பதைக் கேட்டு, அந்த ஆண் டவள் தமது ஊழியருக்கு, மரண சமயத்தில் செய்யும் பலத்த சகாயங்களைப் பற்றி மலர்ந்த முகத்துடன் கேட்டு, மிகவும் ஆறுதலடைந்த போதிலும், ஆ! வெளியிலிருந்து வரும் சத்துருக் கள், எவ்வளவோ திரளான பேர், என்று கூறினார். அதைக் கேட்ட ஒரு சன்னியாசியார் நன் மரணத்துக்கு அடைக்கலமான அர்ச். சூசையப்பருடைய படத்தை எடுத்து, அவர் கையில்

கொடுக்க, அதை பக்தியோடு முத்திசெய்து கொண்டபின், தேவமாதா படத்தையும் கேட்டு வாங்கி முத்தி செய்து, பிரியதத்த மந்திரத்தையும் ஜெபித்தார். அவருக்கு நேரே, அவரே வரைந்த தேவமாதாவின் படம் தொங்கிற்று. அடிக்கடி அதை உற்றுப்பார்த்தார். மரண அவஸ்தையாயிருந்த நேரத்தில், கண்களை திடீரெனத் திறந்து, அந்தப்படத்தை உற்றுப்பார்த் துக் கொண்டிருக்கையில், அவர் முகம், ஜோதி மயமாய் பிரகாசித்து ஜொலிப்பதையும், மலர்ந்த முகத்தோடும் ஆனந்த மகிழ்ச்சியோடும் பரவசமாயும் காணப்பட்டார். இவ்வாறு ஏறக்குறைய கால்மணி நேரம் கழிந்தது. அவரை சூழ்ந்து நின்ற அநேகரும் இந்த அதிசயத் தைக் கண்டார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அவரது சபை சகோதரர், குருக்கள் மாறிமாறி, அவர் மரணப் படுக்கையை சூழ்ந்து நின்று ஜெபித்துக் கொண்டிருந்ததால், அனைவரும் இக்காட்சியைக் கண்டனர்.

அர்ச்சிஷ்டவர் தமது வாழ்நாளில் தேவமாதாவுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்தது மல்லாமல், என் ஆண்டவளே என் தாயாரே! உமது தாசரில் எத்தனையோ பேருக்கு அவர்கள் மரணதருணத்தில், நீரே உமது தரிசனையளித்து இரட்சித்தபடியே, அடியேனுக்கும் கிருபை செய்தருளும், என்று கெஞ்சி மன்றாடி வந்தபடியால், பரலோக இராக்கினி , இவ ருக்கு ஒருதரம் மாத்திரமல்ல, மூன்று தரம் காணப்பட்டு பிசாசுக்களை ஓட்டி இரட்சித்தார் கள். உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டதை அவர் அறிந்து, எல்லாம் முடிந்துவிட்டது; இனி வைத்தியரால் யாதொன்றும் செய்யமுடியாது என்றார். பாடுபட்ட சுரூபத்தையும், தேவ மாதா சுரூபத்தையும் அடிக்கடி ஆவலோடு முத்தி செய்தார். அப்போது சிறு சிறு நேசப்பற் றுதல்களைக் கூறி ஜெபித்தார். அவ்விரு சுரூபங்களையும் மார்போடு சேர்த்து, அரவணைத்து வைத்துக் கொண்டார். கடைசியாய் 1797-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி அதிகாலை யில் திரிகாலஜெபத்திற்கான மணியடித்தவுடனே, அவர் படுக்கையை சூழ்ந்து நின்ற குருக் கள் சகோதரர் முழங்காலில் இருந்து, திரிகால ஜெபத்தையும், அதில் சேர்ந்த பிரியதத்த மந் திரத்தையும், பக்தியோடும், கண்ணீரோடும் ஜெபித்தனர். "இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்” என்று அவர்கள் ஜெபித்த போது, அவருடைய ஆத்து மம் அவருடைய 91ம் வயதில், முன்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படி, அவரைவிட்டுப் பிரிந்தது. அவர், தாம் ஸ்தாபித்த திவ்ய இரட்சகர் சபையின், தாய் மடமாகிய நொசே ராவிலேயே மரித்தார். அங்கேயே பூஜிதமாய் அடக்கம் செய்யப்பட்டார். 1830ம் ஆண்டில் அவருக்கு அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்டது. அர்ச். மரிய லிகோரியாருக்கும், அவர், குழந்தையாயிருக்கும்போதே, அவரைக் குறித்துத் தீர்க்கதரிசனத்தை, உரைத்தசங். ஜெரோம் சுவாமியாருக்கும், ஒரே நாளில் அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுக்கப்பட்டது. (சங்.லாரன்ஸ் சேவியர் பெர்னான்டஸ் சுவாமியார் அர்ச். மரிய லிகோரியாரின் நன்மரண ஆயத்தத்தை தமி ழில் 1934ல் வெளியிட்டார். அதன் முன்னுரையிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டது)

தேவசிநேகத்தில் நாங்கள் உயர்வதற்கு உறுதுணையான ஞானநூல்கள் தந்த

அர்ச். அல்ஃபோன்ஸ் மரியலிகோரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச். மரிய லிகோரியர் நமக்கு அருளிச்செய்த சாங்கோபாங்கத்தின் சுருக்கம்:

1. சேசுநாதர் சுவாமியின் திவ்ய பாடுகளை நன்றாக தியானித்து, ஆண்டவரின் சிநேகத்திலே உயர்வதற்கு தினமும் பிரயாசைப்படு!

2. அடிக்கடி பக்தியுடனும் தகுந்த ஆயத்தத்துடனும் திவ்ய நன்மை உட்கொள்!

3. ஒருநாளைக்கு ஒருமுறையாவது தேவ நற்கருணை சந்திக்கச் செல்.

4.காலையில் எழுந்திருக்கையில், அன்று வரும் சகல தின்மைகளை எல்லாம், நேசஆண்டவருக் காக பொறுத்துக்கொள்வதாகத் தீர்மானித்து, உன்னை முழுவதும் ஆண்டவருக்காக ஒப்புக் கொடு!

5.ஆண்டவர் தம்மில் தாமே அளவில்லாதவிதமாய், மிகுந்த பாக்கியமுள்ளவராய் இருக்கி றார் என்பதை தியானித்து களிகூர்வாயாக!

6. மோட்சத்தை ஆவலுடன் ஆசித்து, அதற்குத் தடையானவைகளை விலக்கி, சாவை எப்பொழுதும் விரும்பி இரு

7. உன்னைச் சேர்ந்தவர்கள் திவ்ய சேசுநாதர்சுவாமியை சிநேகிக்கும்படி செய்.

8.நேச ஆண்டவருக்குப் பிரியமானதை எப்பொழுதும் நாடி, பொருந்தாததை வெறுத்து, உன்னை முழுவதும் குறைவின்றி, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடு.

9. தினந்தோறும், உத்தரிக்கிறஸ்தலத்தின் ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்.

10. நீ எந்த காரியத்தைச் செய்தாலும், அதை சேசுநாதர்சுவாமிக்குப் பிரியப்படுவதற்காகச் செய். .

11. உன்னை முழுவதும், ஒருநாளில், ஒருமுறையாகிலும், திவ்ய சேசுநாதர் சுவாமிக்கு ஒ ப்புக்கொடுத்து, அவர் சித்தத்திற்காகக் காத்துக்கொண்டிரு.

12. உன்னை நேசிப்பதுபோல, பிறரையும் நேசி..


அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரும் அர்ச்.சவேரியாரும் (St. Ignatius and St. Francis Xavier) Tamil

 அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரும் அர்ச்.சவேரியாரும்

அர்ச் இலொயோலா இஞ்ஞாசியார் திருநாள்: ஜூலை 31




அர்ச். இஞ்ஞாசியார் தத்துவ சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தபோது, சவேரியார் அதை படித்து முடித்து, வெகு திறமையோடு பிறருக்கு கற்பிக்கும் ஆசிரியராயிருந்தார். இவ் வளவு சிறந்த இலட்சணங்கள் அமைந்த இவர், இகலோக மகிமையை வெறுத்து, சர்வேசுரன் பாரிசமானால், தேவ மகத்துவத்துக்கு எவ்வளவோ அதிமிக தோத்திரமுண்டாகுமென நன் குணர்ந்த இஞ்ஞாசியார், அவர் நட்பை அடைய பிரயத்தனம் பண்ணிவந்தார். ஆனால் இஞ் ஞாசியாருடைய மேன் பிறப்பையும், சுபாவ பெருந்தகைமையையும், சகலத்திலும் அவர் இருதயத்தை ஆட்கொண்டு நடத்திவந்த தேவ வரப்பிரசாத ஞானத்தையும், சவேரியார் இன்னும் அறியாமலிருந்தார். அவர் அணிந்திருந்த எளிய உடையின் கேவலமான வெளித் தோற்றத்தையும், மகிமையை அலட்சியம் செய்து, நிந்தை அவமானங்களையே, அவர் பிரிய மாய்த் தேடி வந்ததையும், கண்ட சவேரியார், அவர் மீது வெறுப்புற்று, அவரோடு சகவாச மாய் இருப்பது தனக்கு அவமானமென்பதுபோல் ஒதுங்கி நடந்து வந்தார். தன் சுபாவ மேட்டிமையை முற்றும் வென்று , சகலத்திலும் சர்வேசுரனுடைய அதிமிக தோத்திரம் ஒன் றையே கருத்தில் கொண்டு ஜீவித்த இஞ்ஞாசியார், இதனால் மனத்தாங்கல் கொண்டு பின் வாங்கவில்லை. சவேரியாரிடத்தில் என்றும் மாறாத அன்புடையவராய், அவருடைய சாஸ் திரத் திறமையைப் புகழ்ந்து பேசி, அவர் பெயர் மேன்மேலும் பிரசித்தி அடையும்படி, தாமே முயற்சி செய்து வந்தார்.

சவேரியாருடைய சாதுரிய சாமர்த்தியமான, சாஸ்திர விளக்கவுரைகளைவியந்து கேட் பதற்கு, தாமே மாணவர்களை சேகரித்துக் கொண்டு விடுவார். இதற்குப் பின் அதிவிரைவில், இஞ்ஞாசியாருடன் மனங்கலந்த நண்பரானார் சவேரியார். சவேரியார் இருதயத்தை, முற்றும் சர்வேசுரன் வசமாக்கும்படியாக, ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன்

ஆத்துமத்தை இழந்து போனால், வரும் பிரயோசனம் என்ன! என்கிற வேதவாக்கியத்தை அடிக்கடி எடுத்துரைத்து, அதன் சாரம் அவர் இருதயத்தில் நன்றாய் உறைக்கும்படியான வித மாய் பேசிவருவார். சவேரியார் இவ்வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கலானார். சிந்திக்க சிந்திக்க, தம்மை ஜெயித்து, தேவஊழியத்துக்கு தம்மை முழுதும் கையளித்து, இஞ்ஞாசியாரை பின் செல்வதாக வாக்குக்கொடுத்தார். ஞான முயற்சிகளை அனுசரித்து, தேவசிநேகத்தில் வளர்ந்து வந்தார்.

சேசு சபை ஸ்தாபிக்கப்பட்டபின், இந்தியாவுக்குச் செல்லும்படி, முதலில் குறிக்கப் பட்டவர்கள், சீமோன் ரொத்ரிகஸ், நிக்கொலாஸ் பொபதில்லா என்ற இருவர் தான். ரொத் ரிகஸ் சுவாமியார் 1540-ல் உரோமையை விட்டுப் புறப்பட்டார். பொபதில்லா சுவாமியார் வெகு வியாதியாயிருந்தார். ஆதலால் அவருக்கு பதிலாய் வேறொருவரைத் தெரிந்து கொள் வது அவசியமாயிற்று. யாரை அனுப்புவதென்று, இஞ்ஞாசியார் ஜெபத்தில் சர்வேசுரனை மன்றாடினார்.

பிரான்ஸிஸ் சவேரியார் இந்து தேசத்துக்குப் போவது, தேவசித்தம் என்றுணர்ந்தார்; அவரிடம், " சகோதரர் பிரான்சிஸ், அர்ச். பாப்பானவர் கட்டளைப்படி நம்முள் இருவர் இந்தி யாவுக்குப் புறப்பட்டுப் போவது அவசியம். அதற்கென்றுக் குறிக்கப்பட்ட பொபதில்லா சுவாமியார் வியாதியாயிருக்கிறார் என்பது உமக்குத் தெரியுமே. ஸ்தானாதிபதியோ பிரயா ணம் துவக்க அவசரப்படுகிறார். அதிகநாள் தாமதிக்க முடியாது. சர்வேசுரன், உம்மை இந்து தேசத்தில் வேதம் போதிக்க அழைக்கிறார்” என்று கூறினார். அஞ்ஞானதேசங்களுக்குச் சென்று, சேசுகிறீஸ்து நாதருடைய பரிசுத்த வேதத்தை போதித்து, வேதசாட்சியாக தமது இரத்தத் தைச் சிந்தி மரிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்குமென்று, வெகுகாலம் பரிதவித்திருந்த சவேரியார், இவ்வார்த்தைகளைக் கேட்டதும் சொல்லிலடங்காத ஆனந்தமடைந்து ," தந்தையே! இதோ புறப்பட்டுப் போக ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறிவிட்டு, உடனே பய ணத்துக்கு ஆயத்தம் செய்தார்.

இலொயோலா இஞ்ஞாசியாரும், பிரான்சீஸ்க்கு சவேரியாரும் தங்கள் உள்ளரங்க இலட்சணங்களில் ஒரே அச்சில் உருவாக்கப்பட்டவர்கள் போல், ஒரே தன்மை ஒரே சாய லுள்ளவர்களாய், ஒருவர் மீது ஒருவர் மேலான எண்ணமும், ஓர் அருமைத் தந்தையும், அரு மை மைந்தனும் போல் ஒருவருக்கொருவர் அன்னியோன்னிய நேசமுடையவர்களாயிருந் தார்கள். மேலும் சவேரியாருடைய புண்ணியங்களையும் திறமையையும் நன்றாக அறிந்த இஞ்ஞாசியார், அவர், தமதருகிலிருப்பது, புதிதாய் ஸ்தாபிக்கப்பட்ட சேசுசபைக்கு வெகு உதவியாயிருக்குமென்று எண்ணியிருந்தார். ஆதலால், அவரை, இந்து தேசத்துக்கு, அனுப் பத் தீர்மானித்தபோது, அவர் அதிக வருத்தத்துக்குள்ளானார். ஆனால், அவர் போவது தேவ சித்தம் என்றுணர்ந்த அக்ஷணமே, இந்து தேசத்தாரின் ஆத்தும் இரட்சணியத்துக்காக, அவ ரை சந்தோஷமாய் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். அது போலவே, சவேரியாரும் தம் ஞான பிதாவையும், ஞான சகோதரர்களையும் விட்டுப் பிரிவதால் உண்டான வியாகு லத்தை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார்.

இஞ்ஞாசியார் சவேரியாரை இந்தியாவுக்குப் போகும்படி சொன்னது 1540- ம் வரு டம் மார்ச் மாதம் 15-ம் தேதி. மறுநாள், அதிகாலையிலே, திவ்ய பலிபூசை செய்து, தமது கரத் தில் பலியான திவ்ய சுதனோடு தம்மையும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த பின், தமது அருமைத் தந்தையின் ஆசீர்வாதம் பெறும்படி அவர் முன் சென்றார். ஜெப் புஸ்தகமும், பாடுபட்ட சுரூபமும், அணிந்திருந்த பழையவஸ்திரமும் தவிர, பயணத்துக் கென்று வேறு எதுவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் போது குளிர் அதிகமிருக்குமே யென்று கவலையுற்ற இஞ்ஞாசியார், வியாதியினிமித்தம் , தான் அப்போது அணிந்திருந்த கம்பளிப் போர்வையை எடுத்து சவேரியார் மேல் போட்டு, அதை, அவர் அணிந்து கொள் ளும்படி செய்தார். பின், தம் அருமைப்புதல்வனை நோக்கி:"போய், உலகமெல்லாம் தேவசிநேக அக்கினியால் பற்றியெரியச் செய்யும்” என்று உருக்கமாய்க்கூறித் தம் கடைசி ஆசீர்வாதத்தை அவருக்களித்தார்.

சங்.சவேரியார், சங்.ரொத்ரிகஸ் என்ற இருகுருக்களையும் போர்த்துக்கல் அரசன் கண் டதும், அவர்களை, இந்தியாவுக்கு அனுப்ப, அவருக்கும் மனம் வரவில்லை. கல்வியிலும், அர்ச் சிஷ்டதனத்திலும் மிகத் தேர்ந்தவர்களான இவர்களை, தன் நாட்டிலே நிறுத்திக் கொள்ளப் பிரியப்பட்டு, அதற்காக பாப்பானவருக்கும், இஞ்ஞாசியாருக்கும் கடிதத்துக்கு மேல் கடி தம் எழுதினார். பாப்பானவரோவென்றால், அரசனும், இஞ்ஞாசியாரும், தங்களுக்குள் காரி யத்தை தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டு விட்டார். இஞ்ஞாசியார், சங். ரொத்ரிகஸ் சுவாமியார் போர்த்துக்கள் தேசத்திலிருக்கட்டும், சவேரியார் சுவாமியார் இந்தியாவுக்குப்

புறப்பட்டுப் போகட்டும், என்று அரசனுக்கு எழுதினார். அரசன் அதற்கு சம்மதிக்கவே, சவேரியார் 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி கப்பலேறி, 1542-ம் வருடம் மே மாதம் 6-ம்தேதி நம் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

உரோமையிலிருந்து வரும் இஞ்ஞாசியாருடைய குரலொலி போலும் அவருடைய உயிருள்ள உருவம் போலும், அர்ச்.சவேரியார் இந்து தேசத்தில் துலங்கினார். அர்ச். இஞ்ஞாசி யார் மேல், நமது அப்போஸ்தலர் இருதயத்தில் எவ்வளவு சங்கை, நேச வணக்கம் குடி கொண்டிருந்ததென்றால், அவருக்குக் கடிதம் எழுதும்போது முழந்தாளிட்டு எழுதி வந்த தாகத் தெரிகிறது. அவர் கடிதத்திலிருந்து சில பகுதிகள்:" கடைசியாய், நான் என் முழு இரு தயத்துடன் சங்கித்து வரும் எனதாத்துமத்தின் பிதாவே! நான் என் உடலில் உயிருள்ள வரை யும், சர்வேசுரனுடைய மகா பரிசுத்த திருவுளத்தை அறிந்து, அதை சம்பூரணமாய் நிறைவேற்றி வர, அவர் எனக்கு அனுக்கிரகம் தந்தருளும்படி, தேவரீர் உமது திவ்ய பலி பூசைகளிலும் ஜெபங்களிலும், எனக்காக சர்வேசுரனைப் பிரார்த்திக்க ஒருபோதும் மறந்து போகக் கூடாதென்று, முழந்தாளிலிருந்து தாழ்மையாய்த் தங்களை மன்றாடுகிறேன். ஏனெ னில், தேவரீரை நான் இப்பொழுது, என் கண்முன் இங்கு தரிசிப்பது போல், முழந்தாளி ருந்தே இக்கடிதத்தை எழுதுகிறேன். சேசுகிறீஸ்து நாதருடைய இருதயத்தில், எனக்கு சொந் தமான ஏகதந்தையே, மறுமையில் மாத்திரமல்ல, இம்மையிலும் தேவரீரைக்கண்டு தங்கள் உதவியும் ஒத்தாசையும், அவசியமாய் வேண்டிய அநேக விஷயங்களை பற்றி, தங்களிடத்தில் பேச நான் எவ்வளவோ ஆவலாயிருக்கிறேன் என்று சர்வேசுரன் அறிவார். எவ்வளவு தொலை வானாலும் கீழ்ப்படிதல் முன், அது ஓர் தடையாயிராது. உமது கடிதத்தில்: எவ்வளவு காலம் சென்றாலும், அதுவெல்லாம், நான் உம்மை மறந்து போகும்படி செய்யக்கூடுமானதல்ல; ஆகையால் முற்றும் உமக்கு சொந்தமான இஞ்ஞாசியுஸ், என்ற அன்பின் முத்திரை போன்ற கடைசி வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப நினைவில் சிந்தித்து வருகிறேன். ஒருவகையில், அவைகள் என் ஆத்துமத்துக்கு போசனம் போலிருக்கின்றன. கடந்து போன பாக்கியமான நாட்களையும், எக்காலமும், என்னை அரவணைத்து இன்னும் அரவணைத்து வரும், தேவரீரு டைய உண்மையும் பரிசுத்தமுமான சிநேகத்தையும் சிந்தித்து கண்கலங்கி பிரலாபிக்கிறேன்.

ஆவிபிரியுமுன் திரும்ப ஒருதரம் என்னைக் காண தேவரீர், வெகு ஆவலாயிருப்பதாக அன்புற்று சொல்லுகிறீர்கள். இவ்வார்த்தைகளை நான் சிந்திக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்களில் நீர் ததும்புகின்றது. திரும்ப நான் தங்களைக் காண்பதென்பது அரிதான காரியம் தான். ஆயினும் பரிசுத்த கீழ்ப்படிதலினால் ஆகாததொன்றுமில்லை. உமது மக்களிலெல்லாம் மிகச்சிறியவனும், யாவரிலும் அதிக தொலைவில் பரதேசியாயிருப்பவனு மாகிய பிரான்சீஸ்” என்று கடிதத்தை முடிக்கிறார். உரோமையிலிருந்த அர்ச். இஞ்ஞாசியார், தமது அருமைப்புதல்வனைத் திரும்ப வரவழைத்து, பத்து வருஷத்துக்கு மேலாக தாம் வகித்து வந்த அதிபதி சிரேஷ்டர் பதவியை, அவர் கையில் ஒப்புவிக்க ஆவலுற்றிருந்தார். உடனே உராமைக்குப் புறப்பட்டுவரும்படி சவேரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் அவர் கைக்கு கிடைக்குமுன், ஆண்டவர், சவேரியாரை நித்திய பேரின்பத்துக்கு அழைத்துக் கொண்டார்.


(அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் சரித்திரம் - சங்.மரிய இஞ்ஞாசியாரால் எழுதப்பட்டு, 1906ல் திருச்சி தொழிற்பள்ளியில் அச்சிடப்பட்டது)

அர்ச். பிரான்சிஸ் சவேரியாரை எங்களுக்கு அளித்த நல்ல ஞானத்தந்தையே!

அர்ச். இஞ்ஞாசியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


சேசு சபை நிறுவனர்- அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரின் உத்தமதனம்.

 சேசு சபை நிறுவனர்- அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரின் உத்தமதனம்.

அர்ச். இலொயோலா இஞ்ஞாசியார் போர் வீரராயிருந்தவர். உலகத்தை வெறுத்து, தேவ ஊழியத்தில் பிரவேசித்ததால், தன் மாளிகையைவிட்டு வெளியேறினார். அவர் சகோ தரர்களில் ஒருவரும், இரு ஊழியரும் அவருடன் சென்றனர். வழியில் இருந்த தேவமாதா வின் தேவாலயத்தில், ஓர் இரவு முழுதும் தங்கி, ஜெபத்திலாழந்திருந்தார். அதன்பின் கூட வந்தவர்களை மாளிகைக்குத் திரும்பிப் போகச் சொல்லிவிட்டு, தனியே, மோன்செராத் எ ன்னும் மலையை நோக்கிப் பயணம் செய்தார். அம்மலையிலிருக்கும் தேவமாதாவிற்கு தோத் திரமாகக் கட்டப்பட்டிருந்த தேவாலயத்தைச் சந்தித்து, அங்கிருந்து ஜெருசலேமுக்கு திரு யாத்திரை புறப்பட்டுப் போகலாமென்று எண்ணியிருந்தார்.

அவர் வழியே செல்கையில், மகமதியன் ஒருவன் குதிரைமேல் சவாரியாய் அவரோடு வந்து சேர்ந்தான். செல்லுமிடத்தைப் பற்றி, ஒருவரொருவரை வினாவி, சம்பாஷித்துக் கொண்டு போகையில், தான், மோன்செராத் மலைமேலிருக்கும் பரிசுத்தக் கன்னிகையின் தேவாலயத்திற்குப் போவதாக, இஞ்ஞாசியார் கூறினார். மகமதியன், தேவதாயாரின் பரிசுத்தக் கன்னிமைக்கெதிராய் அவதூறு பேசத் துவக்கினான். இஞ்ஞாசியார், உடனே கோபங் கொண்டு, அவிசுவாசி சொன்னதை மறுத்து, பல நியாயங்களை எடுத்துரைத்து, வாக்குவாதம் செய்தார். அவற்றுக்கெல்லாம் மகமதியன் சற்றும் இணங்காமல், தப்பறையில் மூர்க்கமாய் நின்றான். ஆனால், கோபத்தால் சிவந்திருந்த, இஞ்ஞாசியாரின் முகத்திலும் பேச்சிலும் விளங் கிய வேற்றுமையைக் கண்டு அஞ்சி, திடீரென குதிரையை முன்னுக்கு தட்டி, அப்பாற் சென்றுவிட்டான். அவிசுவாசி அப்பாற் சென்றதும், இஞ்ஞாசியார் இருதயத்தில் ஓர் கடும் போர் நிகழ்ந்தது. என்ன! மகாபரிசுத்த திவ்ய கன்னிகையை நிந்திக்கத் துணிந்த பாதகனை, அப்பொழுதே சிட்சியாமல் விட்டுவிட்டது யோக்கியமா? பரலோக இராக்கினிக்கு அவன் செய்த நிந்தையைத் தீர்க்க, அவனை வாளுக்கு இரையாக்கியிருக்க வேண்டாமா? என அவர் மனம் சந்தேகமுற்று வருந்தலாயிற்று. மகமதியன் மேல், அவர் இருதயத்தில் பொங்கிய கோபம் கட்டுப்படுத்த முடியாததாயிருந்தது. தாமதமின்றி குதிரையைத் தட்டிவிட்டு, அவனை வாளால் தண்டிக்க மனம் ஆத்திரப்பட்டது. ஆனால் அப்படிச் செய்வது சர்வேசுர னுக்கு ஏற்குமோவென்னும் சந்தேகமும், அவர் இருதயத்தை வருந்தச் செய்தது. தம்மால் கண்டுபிடிக்கக் கூடாததை, சர்வேசுரன் கையில் விட்டுவிடுவதென்று தீர்மானித்து, ஒரு நல்ல முடிவுக்குவந்தார். வழி இரு மார்க்கமாய் பிரியும் ஓரிடத்துக்கு வந்ததும், கடிவாளத் தைத் தளரவிட்டு, குதிரையைத் தன் போக்கிலே போக விட்டுவிட்டார். மகமதியன் சென்ற மார்க்கத்தில் குதிரை செல்லுமேயாகில், அவிசுவாசியைத் தேடிப் பிடித்து அவன் உயிரை மாய்க்கிறது. அதைவிட்டு வேறுமார்க்கத்தில் சென்றால், அவனை, சர்வேசுரன் கையில் விட்டு விடுகிறது என்று, தனக்குள் தீர்மானித்துக் கொண்டார். மகமதியன் சென்ற பாதை அகலமா யும், செவ்வையாகவுமிருந்தது. இன்னொருபாதையோ, ஏற்றமான மலைப்பாதையாயிருந்தது. என்றாலும் குதிரைசெவ்வையான பாதையை விட்டுவிட்டு மலைப்பாதையில் ஏறிச் சென்றது. மகமதியனும் தப்பிப் பிழைத்தான். இப்படியாகத் தன் தாசனுடைய இருதய நேர்மையை அறிந்த சர்வேசுரன், அவருடைய அறியாமைக்கு இரங்கி, பெரும் ஆபத்தினின்று அவரைத் தற்காக்கத் திருவுளமானார்.

மோன்செராத் மலையடிவாரத்திலிருந்த ஊரில் போய்ச் சேர்ந்ததும், ஜெருசலேமுக்கு யாத்திரை போகும்போது அணிந்து கொள்வதற்கென்று சாக்குத் துணியால் செய்யப்பட்ட ஒரு அங்கியும், இடைக்கச்சையாக ஒரு பெருங்கயிறும், தும்பினால் செய்யப்பட்ட ஒரு பாத ரட்சையும், ஓர் ஊன்று கோலும், ஓர் சுரைக் குடுக்கையும் சேகரித்துக் கொண்டார். இக லோக காரியங்களை முற்றும் மறந்தவராய், சர்வேசுரனுடைய அதிமிகத் தோத்திரத்துக்காக தாம் செய்ய ஆசித்திருக்கும் உன்னத காரியங்களின் மேலேயே ஆழ்ந்த சிந்தனையாய், மலை மேலிருக்கும் தேவமாதாவின் கோவிலை நோக்கி குதிரையை நடத்திச் சென்றார்.

மோன்செராத்தில் பிரசித்தி பெற்ற திருயாத்திரை ஸ்தலமாகிய தேவமாதா தேவால யம் கட்டப்பட்டிருந்தது. அதற்கருகாமையில் பறவைக்கூடுபோல் ஆசீர்வாதப்பர் சபை மடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 150 சன்னியாசிகள் இம்மடத்தில் வசித்து வந்த னர். இதற்கும் உயரத்திலிருக்கும் செங்குத்தான கொடுமுடிகளில், ஆங்காங்கு துண்டு துண் டாய் தபோதனர்கள் வசிக்கும் 13 குடிசைகளும், அவைகள் ஒவ்வொன்றை அடுத்து ஒவ் வொரு அர்ச்சிஷ்டவர்கள் பெயர்கொண்ட சிறு கோவில்களும் இருந்தன. இவைகளுள் வெகு உச்சத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு குடிசையும், அதைச் சேர்ந்த சிறு கோவிலும், பச்சாதாபக் கள்ளனாகிய அர்ச். தீஸ்மாஸ் என்பவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு, அர்ச் தீஸ்மாஸ் குடிசையென்று அதற்குப் பெயர் வழங்கி வந்தது. மடத்து சன்னியாசிகளுக்குள் அதிக ஏகாந்தத்தையும் அருந்தவத்தையும் விரும்பியவர்கள், அங்கு சென்று, தனிவாசம் செய்தார்கள்.

இஞ்ஞாசியார் வந்த சமயம், தீஸ்மாஸ் குடிசையில் அர்ச்சிஷ்டதனத்தில் உயர்ந்த ஷானோன் அருளப்பர் அங்கே வாசமாயிருந்தார். இவர் பிறந்து வளர்ந்து குருப்பட்டம் பெற்றது, பிரான்சு நாடு. 32- ம் வயதில் இத்திருஸ்தலத்தை தரிசிக்க வந்தவர், அங்கிருந்த சன்னியாசிகளின் சுகிர்த ஒழுக்கத்தைக் கண்டு, மனம் உவந்து அவர்கள் சபையில் பிரவே சித்தார்; தனது 88-ம் வயது வரை, புண்ணிய சாங்கோபாங்கத்தில் உயர்ந்து, மற்ற சன்னியா சிகளுக்கு மேல் வரிச்சட்டமாய்த் துலங்கிவந்தார். இவரிடத்தில், இஞ்ஞாசியார் அதிக மனஸ் தாபத்துடன், பொது பாவசங்கீர்த்தனம் செய்தார். செய்து முடிக்க மூன்று நாள் ஆனது. தன் எண்ணங்கள், கருத்துக்கள் யாவற்றையும் இக்குருவானவரிடத்தில் வெளிப்படுத்தினார். அவரு டைய ஞான அறிவுரையைத் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். பிறகு, தன் குதிரையை மடத்துக்கு தானமாகவும், வாளையும், சுரிகையையும் தேவமாதாவின் பீடத்திற்கு முன் காணிக் கையாக விட்டுச் செல்வதற்கும், அவருடைய சம்மதம் பெற்றுக் கொண்டார்.

1522-ம் வருடம் மங்கள வார்த்தை திருநாளன்று, தாம் அணிந்திருந்த விலையுயர்ந்த வஸ்திரங்களையெல்லாம், ஒரு பிச்சைக்காரனிடம் விட்டுவிட்டு, தான் சேகரித்து வைத்திருந்த சாக்கு அங்கியைத் தரித்துக்கொண்டு, கையில் ஊன்று கோலும் பிடித்துக்கொண்டார். இந்தக் கோலமாய் அகமகிழ்ந்தவராய் தேவதாயார் பீடத்தின் முன் சென்றார். முற்காலத்தில் சுத்த வீரன் பட்டத்துக்கு தெரிந்து கொள்ளப்பட்ட கிறீஸ்துவப் போர்வீரன், அப்பட்டத்தைப் பெறுவதற்கு முந்தின நாள், உபவாசமாயிருந்து, இரவுமுழுதும் நித்திரையின்றி, தேவாலயப் பீடத்துக்கு முன் போர்க்கவசமணிந்து நின்று, தான் கைகொள்ளப் போகும் மேன்மையான அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, தேவ ஆசீர்வாதத்தை மன்றாடி, யுத்தாயுத நோன்பு அனுசரிப்பான். அதை நினைவு கூர்ந்த இஞ்ஞாசியார், சேசுகிறீஸ்துநாதருடைய பரிசுத்த வீரனாக, திவ்ய கன்னித்தாயார் கரத்தில் தன்னை ஒப்புக்கொடுத்து, அன்றிரவு முழு வதும் ஒரு சமயம் முழங்காலிலிருந்தும், ஒரு சமயம் நின்று கொண்டும், காலைவரை ஜெபத் தில் செலவழித்தார். காலையில் திவ்வியசற்பிரசாதம் உட்கொண்டு, தேவ ஆசீர்வாதத்துடன் தீவிரமாய், பார்சலோனா வழியாக ஜெருசலேமுக்குப் புறப்பட்டார்.

ஆத்தும் இரட்சணியத்தின் மேல் ஆவல் கொண்ட அர்ச். இஞ்ஞாசியார், ஒரு சமயம், நன்னெறி தவறி துர்மாதிரிகையாய் நடந்த ஒரு குருவானவரை, மனந்திருப்ப விரும்பினார். அவருக்காக, சர்வேசுரனை உருக்கமாக மன்றாடிய பின், அவரைத் தேடிப்போய், அவர் பாதத் தில் முழந்தாளிட்டு, தன் ஜீவியக் காலமெல்லாம், தான் செய்த பாவங்களையெல்லாம், அள வற்ற துக்க மனஸ்தாபத்துடன், அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் செய்தார். கடந்து போனக் குற்றங்கள் மீது, இவர் கொண்டிருந்த துவேஷத்தையும், மனஸ்தாபப் பெருக்கத்தையும் கண்ட அந்த குருவானவர், தன்பாவங்களை நினைத்து, பச்சாதாபம் கொண்டார். தன் ஆத்து மம், தேவசமூகத்தில் இருக்கும் நிர்ப்பாக்கிய அந்தஸ்தை, அர்ச். இஞ்ஞாசியாருக்கு அறி வித்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டார். இஞ்ஞாசியார், அவரை சில நாள், ஒடுக்கத் தில அமர்ந்திருக்கச் செய்து, தமது ஞான முயற்சிகளை அவருக்குப் போதித்தார். அதன் பிறகு, துர்மாதிரிகையாய் நடந்து வந்தவர், யாவருக்கும் நன்மாதிரிகையான நல்ல குருவானவரா னார்.

மற்றொரு சமயம், தன் ஆத்துமத்துக்கடுத்த காரியங்களில், அஜாக்கிரதையாக நடந்து வந்த ஓர் சாஸ்திரியார் வீட்டிற்கு இஞ்ஞாசியார், செல்லும்படி நேரிட்டது. அச்சமயம் அவர், மேஜைப் பந்து (பில்லியார்ட்ஸ்) விளையாடிக் கொண்டிருந்தார். இஞ்ஞாசியாரைக் கண்ட தும், தன்னுடன் விளையாடும்படி அழைத்தார். இஞ்ஞாசியார், அதற்கு துவக்கத்தில் சம்மதிக் கவில்லை. பின் ஒருநிபந்தனையின் பேரில், விளையாடச் சம்மதித்தார். நான் தோல்வி அடைந் தால், ஒரு மாதக் காலம் உமக்கு ஊழியனாக இருந்து, நீர் இடும் வேலைகள் யாவும் செய்து வருவேன். நான் வெற்றியடைந்தாலோ, நான் சொல்லும் ஒரே ஒரு காரியம் மாத்திரம், நீர் செய்தால் போதும் என்று, அர்ச். இஞ்ஞாசியார் சாஸ்திரியாரிடம் கூறினார். அதற்கு சாஸ்திரி யார் சம்மதித்தார். இருவரும் விளையாடினர். இஞ்ஞாசியார் வெற்றியடைந்தார். தோல்வி அடைந்த சாஸ்திரி, இஞ்ஞாசியார் என்ன கேட்கப்போகிறார் என்று பயந்தார். இஞ்ஞாசியார், தமது ஞான முயற்சிகளை செய்யும்படி மாத்திரம், அவரிடம் கேட்டார். அது முதல், சாஸ்திரியார் ஜீவியம், முற்றிலும் மாறியது; உத்தம் கிறீஸ்துவ ஜீவியம் ஜீவித்தார்.


அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 14 - அர்ச் களாட் தெலா கொலம்பியர் (Claude La Colombière) Part - I

 சேசுவின் திரு இருதயத்தின் பக்தியை பரப்பிய அர்ச். க்ளாட் தெலா கொலம்பியரின் ஜீவிய சரிதை




திவ்ய சேசுநாதர் சுவாமி தமது மகா பரிசுத்த திரு இருதயத்தின் அளவற்ற சிநேகத் தை நமக்கு வெளிப்படுத்த, இரண்டு அர்ச்சிஷ்டவர்களைத் தெரிந்தெடுத்தார். அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் தமது திவ்ய இருதயத்தை காண்பித்த ஆண்டவர், அவளுக்கு ஆத்தும் குருவானவராக, அர்ச். க்ளாட் தெலா கொலம்பியரை அனுப்பினார். இந்த அர்ச்சிஷ்டவர், 1641-ம் ஆண்டு, திவ்ய சேசு பாலன் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட திருநாளன்று (பிப் 2-ம் தேதி) பிறந்தார். பெர்ட்ராண்டு , மார்கரீத் , இவர்களுக்குப் பிறந்த எழுவருள் 3-வதாக பிறந்தவர் தான், நமது அர்ச்சிஷ்டவர். இந்த 7 பேரில் இருவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போயினர். மூவர் குருக்களாகவும், ஒருவர் கன்னியாஸ்திரியாகவும், மூத்த மகன் இல்லரவாசியாகவும் தங்கள் வாழ்க்கையை பின்னாளில் அமைத்துக் கொண்டனர்.

நமது அர்ச்சிஷ்டவரின் பெற்றோர் தங்களது நற்குணங்களால் பிள்ளைகளுக்கு முன் மாதிரிகையாக விளங்கினர். தந்தை பெர்ட்ராண்டு சத்திய வேதத்தினுடைய முன்னேற்றத் துக்காக ஊக்கமாய் உழைப்பதிலும், பல கோவில்கள் கட்டுவிக்க தாராளமாய் பண உதவி புரிவதிலும், ஆர்வத்தோடு இருந்தார். தாய், தனது பிள்ளைகளுக்கு இளவயதிலேயே ஞானோ பதேசம் கற்பித்து, தேவஞானத்திலும், தேவசிநேகத்திலும் வளர்த்து வந்தாள். க்ளாட், 9-வது வயதில் பெற்றோரின் வழிநடத்துதலில், தகுதியான முறையில் புதுநன்மை, உறுதி பூசுதல் ஆகிய தேவ திரவிய அனுமானங்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆரம்பக் கல்வி பயி லும் பொருட்டு, லயன்ஸ் நகரிலுள்ள சகாயமாதா ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கே அவர் தேவதாயாரின் பாதுகாவலின் கீழ், தேவ ஞானத்திலும், கல்வியிலும் வளர்ந்து வந்தார். 12-வது வயதில்லயன்ஸ் மாநகரில் சேசு சபை நடத்தி வந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது, இளைஞர்களை தேவசிநேகத் தில் வளர்ப்பதில் பேர் பெற்ற சங்.ஜான் சே.ச சுவாமி தான், கல்லூரியின் முதல் வராக இருந்தவர். நமது அர்ச்சிஷ்டவர், இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பயனாக 1658-ம் ஆண்டு தனது 18-வது வயதில் அவிஞ்ஞோன் என்ற நகரிலிருந்த சேசு சபையில் நவசந்நியாசியாக சேர ஆசித்தார்.

மகனின் விருப்பத்தை அறிந்த பெற்றோர், சர்வேசுரனுக்கு நன்றி கூறி அவரை ஆண் டவருக்கு ஒப்புக் கொடுத்தனர். மடத்தில் அவர் சேரும்போது, சங்.ஜான் நவசந்நியாசிகளைக் கண்காணிக்கும் பொறுப்பேற்று அங்கு வந்து சேர்ந்தார். க்ளாட் தெலா கொலம்பியர் அர்ச் சிஷ்டவராவதற்கு, இவர் ஒரு பெரிய தூண்டு கோலாயிருந்தார். “எனது உண்மையுள்ள ஊழியன், என் சிறந்த நண்பன்" என்று சேசுவின் திரு இருதயத்தால் புகழப்படும் அளவிற்கு, பின்னாளில் கொலம்பியர் பெரிய அர்ச்சிஷ்டவரானார்.

அம்மடத்தில் ஒரு வயோதிகக் குருவானவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். கொலம்பியார், இவருக்கு உதவி செய்யும் பொருட்டு அடிக்கடி அவரை சந்திக்க செல்வார். அவர் தான் முதன் முதல், சேசுவின் திரு இருதய நேசத்தைப்பற்றி இவருக்கு விவரித்துக்கூறி, அம்மகாப் பரிசுத்த திவ்யதிரு இருதயத்தின் மீதான பக்தியைத் தூண்டியவர். அவர், தன் மரண வேளையில் எல்லோரையும் தே தேயும் பாடச் சொன்னார். பின், "இரக்கம் நிறைந்த ஆண்டவர் எனக்கருளிய எல்லா வரங்களிலும் மேலானது, சேசு சபையில் நான் இறப்பதே” என்று பேரானந்தத்தோடு சொல்லி, உயிர் நீத்தார். இதைப் பார்த்த நம் அர்ச்சிஷ் டவர், சேசு சபையில் ஆண்டவருக்குகந்த துறவியாய் ஜீவிப்பதே, பாக்கியமான மரணமும், இருதய சமாதானமும் அடைவதற்கு வழிவகுக்கும் என்று உறுதியாக உணர்ந்தார்.

அப்போது மடத்தின் அதிபர் சுவாமியார் அவரை அழைத்து, அவர் தாய் கடின வியாதியில் அவஸ்தைப்படுவதாகவும், அவரைக் காண விரும்புவதாகவும், கடிதம் வந்திருப் பதைக் கூறினார். இருதய வேதனையோடு, மரணப் படுக்கையிலிருந்த தாயை சந்திக்கச் சென்றார். தாய் மகனைக் கண்டதும் எல்லையில்லா ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்தாள். "மகனே! நீ ஒரு நாள் பெரிய அர்ச்சிஷ்டவராவாய்!” என்று கூறினாள். சில நாட்களில் அவ ளுடைய இவ்வுலக வாழ்வு முடிந்தது. அருகிலிருந்து தன் தாயின் மரணத்தைக் கண்ணுற்ற அவர், இவ்வுலக வாழ்வின் அநித்தியத்தை ஆழமாய் உணர்ந்தார். ஆண்டவருக்காக வாழ்வ தொன்றையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.

சேசு சபை குருத்துவப் பயிற்சி காலத்தில், குருமாணவர்களை பள்ளிகளுக்கும், கல்லூரி களுக்கும் அனுப்பி, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும், மேற்பார்வையிடவும் செய்வது வழக்கம். நம் அர்ச்சிஷ்டவரும் அவிஞ்ஞோன் நகரில் கல்லூரி ஆசிரியராகப் பொறுப்பேற் றார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பொறுப்பு சங்கில்பர்ட் என்ற திறமை வாய்ந்த குருவானவரிடம் இருந்தது. அவரிடமிருந்து பதிதர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், மாணவர்களை தேவ சிநேகத்தில் நடப்பிக்கவும் கற்றுக் கொண்டார். அச்சமயம் மினவுதல் சபை தொடங்கக் காரணமாயிருந்த வந். பிரான்ஸிஸ் சலேசியார் மேற்றிராணியாருக்கு அர்ச்சிஷ்டப் பட்டம் கொடுக்கப்பட்டது. அவருடைய புண்ணிய வாழ்க்கையைப் பற்றிப் பிரசங்கிக்கும் பேறு. நம் அர்ச்சிஷ்டவருக்குக் கிடைத்தது. இதனால் அர்ச். பிரான்ஸிஸ் சலே சியார் மீது, இவருக்கு விசேஷ பக்தி ஏற்பட்டது. பின்னர், வேத இயலில் பயிற்சி பெறுவ தற்காக, பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கே அரச குடும்பங்களுடன் பழகும் சூழல் ஏற்பட் டது. அமைச்சரின் இருபுதல்வர்களுக்குக் கல்விகற்பிக்கும் ஆசிரியரானார். அப்பொழுது தான் திருச்சபைக்கெதிரான ஜான்சனிசப் பதிதம் தோன்றியது. குருமாணவர்களையும், கன்னியாஸ் திரிகளையும், மேற்றிராணிமார்களையும் கூட, தங்கள் வலையில் சிக்க வைக்க வஞ்சகமாக ஜான்சனிசப் பதிதர்கள் முயன்றனர். திருச்சபைக்கு விரோதமான இப்பதிதத்தை முற்றிலும் முறியடித்தது, சேசுவின் திரு இருதயபக்தியே ஆகும். இதற்காகவே, நம் அர்ச்சிஷ்டவர் சேசுவின் திரு இருதயத்தால் தெரிந்துகொள்ளப்பட்டார்.