இருபதாம் நாள்
உரோமாபுரியில் நடந்த நிகழ்ச்சிகள்
இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்ட அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சபையின் ஒழுங்குகளை அங்கீகரித்த 3-ம் ஒனோரியுஸ் என்னும் பாப்பானவர் அந்த ஒழுங்குகளை தாழ்ச்சியுடன் அனுசரித்துவந்த அர்ச். அந்தோனியாரை உரோமாபுரியில் கண்ட பிறகு மரித்தார். அவருக்குப் பிற்பாடு அர்ச். பிரான்சீஸ்குடையவும், அர்ச். சாமிநாதருடையவும் உற்ற சிநேகிதரான யுகோலின் (Hugolin) என்னும் கர்தினால் பாப்பானவராகத் தெரிந்துகொள்ளப்பட்டு 9-ம் கிறகோரியார் என்னும் பெயர் பூண்டு திருச்சபைக்குத் தலைவரானார். ஏற்கனவே அவர் பாப்பானவர் பட்டந்தரிக்கப்போவதை அர்ச். பிரான்சீஸ்கு என்பவர் அவருக்குத் தீர்க்கதரிசனமாய் அறிவித்திருந்தார். அர்ச். அந்தோனியாருடைய மகிமையும், கீர்த்தியும் அவர் பிரிவினைக்காரரை வென்று அவர்களுக்குப் பயங்கரத்தை வருவித்து அவர்களுடைய கர்வத்தை அடக்கும் சம்மட்டியென்பதும் எங்கே பார்த்தாலும் பரவியிருந்த படியால் அர்ச். பாப்பானவர் உரோமாபுரியில் பிரசங்கம் பண்ணும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். படித்தவர் களுக்கும், படிக்காதவர்களுக்கும், பிரபுக்களுக்கும், எளியவர் களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் தகுந்த வண்ணம் அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் பண்ணினபடியால் அவருடைய கல்வித் திறமையையும், வாய்ச்சாலகத்தையும், புத்தி சாதுரியத்தையும் கண்டு ஆச்சரியப்படாதவர் ஒருவருமில்லை. ஆனதால் உரோமாபுரி சனங்களெல்லாரும் புது மனிதரானதுபோல் தங்கள் பக்தியினாலும், விசுவாசத்தினாலும், பக்தி ஒறுத்தல் கிருத்தியங்களினாலும் அக்காலத்தில் விளங்கி வந்தார்களென்று சொல்லலாம்.
அர்ச். பாப்பானவர் முதல் சகல கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிரசாதிகளும், அந்தோனியாருடைய பிரசங்கங்களைக் கேட்க வெகு ஆவவோடு போவார்கள். அவர் வேத வாக்கியங்களை எவ்வளவு தெளிவாய் வியாக்கியானம் பண்ணி அடிக்கடி அவைகளைப் பிரயோகித்து வந்தார் என்றால், அரிசி, பாப்பானவர் ஆச்சரியமிகுந்து 'பழைய புதிய ஏற்பாடுகளின் பெட்டகம்' என்று அவரை அழைப்பார். ஏனெனில், பழைய ஏற்பாடு புது ஏற்பாடு முழுமையுமே அர்ச்சியசிஷ்டவருடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது.
பாஸ்கா நாள் அடுத்து வந்த போது பரிபூரணப் பலனடைய நாலாபக்கத்துச் சனங்களும், பல சாதியாரும் பல தேசத்தாரும் திரண்டு உரோமை நகர் சேர்ந்த சமயத்தில் அந்தோனியார் பரிபூரணப்பலனைப் பற்றி பாப்பானவருடைய கட்டளை மின்மேல் பிரசங்கித்தார். அப்போது அர்ச். பாப்பானவரும், கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிர சாதிகளும் திரண்டு வர, எண்ணிக்கையில்லாத சனங்கள். பல மொழிக்காரர், இவர்களுக்கு முன்பாக அவர் பிரசங்கம் பண்ணினதை ஒவ்வொருவருந் தங்கள் தங்கள் மொழிகளில் அவர் பேசினதுபோலத் தெளிவாய்க் கண்டுபிடித்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர் காலத்தில் நடந்த அற்புதமே அப்போதும் நடந்ததென்று எண்ணி அர்ச். பாப்பானவர் சொன்னதென்னவெனில்: மெய்யாகவே, இவர் உடன்படிக்கையின் பெட்டகமும், வேத வாக்கியத்தின் திரவியமுமாயிருக்கிறார்" என்றார். அந்தோனியாரை எப்போதும் உரோமாபுரியிலேயே நிறுத்திக்கொள்ள அர்ச். பாப்பானவருக்கும் மற்றவர்களுக்கும் இஷ்டமிருந்தபோதிலும், அந்தோனியார் தாழ்ச்சி மிகுதியினால் அப்பேர்ப்பட்ட மகிமையிலிருந்து தப்பித்துக் கொள்ள, சிரேஷ்டர்களுடைய அனுமதியின்பேரில் சபைப் பொதுச் சங்கங் கூடவேண்டிய முதன்மையான சம்மனசுகளின் மாதா மடத்துக்குப் (Notre-Dame des Anges) போனார்.
உரோமைபுரியிலும், பிரஞ்சு தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் இன்னும் மற்ற இடங்களிலும் அவ்வளவு பேர் பெற்று விளங்கின போதகரான அந்தோனியாரே சொல்வதைக் கேளுங்கள். 'நமதாண்டவரான சேசு கிறீஸ்துநாதருடைய வாக்கியத்தை நன்றாய்க் கண்டுபிடித்து அதைக் கேட்பதில் பிரியங் கொள்ளுகிறதுக்கு உனக்கு ஆசையுண்டோ? அவருடைய சீவியத்துக்கு ஒத்த பிரகாரம் உன் சீவியத்தையும் ஒழுங்குபடுத்தப் பிரயாசைப்படு' என்றார்.
பிரசங்கம் கேட்கும்போதும், ஞான வாசகங்கள் வாசிக்கும்போதும் நம்முடைய ஆத்தும நன்மையை நினைத்துக் கொள்ளக்கடவோம். பிரசங்கங்களில், ஞான வாசகங்களில் சொல்லப்படுவது மற்றவர்களுக்குத் தான் என்று நாம் எண்ணாமல், நமக்குத்தானே என்று நிச்சயித்து நாம் கேட்கும் பிரசங்கங்களினாலும் வாசிக்கும் ஞான வாசகங்களினாலும் நமது ஆத்துமங்களுக்கு ஞானப் பிரயோசனமுண்டாகும்படி அர்ச். அந்தோனியாரைப் பிரார்த்திக்கக்கடவோம்.
செபம்
சேசுநாதருடைய பிரிய நேசரான அர்ச். அந்தோனியாரே, துர்க்குணங்களை ஒழித்துப் புண்ணியங்கள் வளரும்படி செய்தவரே, என் சீவிய நடத்தையை உமது அடைக்கலத்தில் வைக்கிறேன். நான் சாவான பாவத்தில் ஒருபோதும் விழாமல் நீரே எனக்குப் புண்ணிய வழி காட்டியருளும். என் வார்த்தைகளினாலும், நடத்தையினாலும் பிறருடைய ஆத்தும இரக்ஷணியத்தை நான் தேடும்படி செய்தருளும். ஆமென்.
நற்கிரியை: வேதத்தை அசட்டைப்பண்ணுகிறவர் களுக்குப் புத்தி சொல்லுகிறது.
மனவல்லயச் செபம்: பாவிகளை மனந்திருப்பினவரான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக