அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்
இருபத்தோராம் நாள்
உரோமாஞா நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள்
சங்கத்தில் சபை அதி சிரேஷ்டரைத் தெரிந்துகொண்டு, அர்ச். பிரான்சீஸ்குவுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டங் கொடுக்கவேண்டுமென்று எல்லோரும் விண்ணப்பம் செய்துகொண்ட பிறகு அர்ச். அந்தோனியார் உரோமாஞா விலுள்ள அர்ச். பிரான்சீஸ்கு சபை மடங்களுக்குச் சிரேஷ்டராக நியமனம் பெற்றார். அப்போது அவருக்கு முப்பத்திரண்டு பிராயம் நடந்து வந்தது.
மரணமட்டுங் கீழ்ப்படிந்த சேசுகிறீஸ்து நாதரைத் தமது உன்னத மாதிரியாகத் தெரிந்துகொண்டிருந்த அந்தோனியார், சனங்களை மனந்திருப்ப வெகு ஆவல் கொண்டவரானாலும், பெரியோர்கள் கட்டளைக்குச் சந்தோஷமான மனதோடு கீழ்ப்படிந்து தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மடங்களைச் சந்தித்து விசாரிக்கத் தொடங்கினார். உரோமாஞா நாட்டிலுள்ள மடங்களுக்கு அநேக வருஷகாலம் சிரேஷ்டராக இருந்து அம்மடங்களை அடிக்கடி சந்தித்து வெகு பக்தி விமரிசையோடும் அன்போடும் சந்நியாசிகளை விசாரித்து தமது உத்தம மாதிரியினாலும், சாந்த குணத்தினாலும் எல்லோரும் புண்ணிய வழியில் நடப்பதற்கு ஏவி வந்தார். தமது உத்தியோகத்தினுடைய கடமைகளை நிறைவேற்றின பிறகு ஆத்துமங்களை இரட்சிக்கிற வேலையை விடா முயற்சியோடு செய்யத் துவக்கினார். பலவிடங்களைச் சந்தித்து, பிரிவினைக்காரர் அநேகரை மனந்திருப்பி, எளியவர்களை வலியவர்களுடைய கொடுமையினின்று விடுவித்து, பகையாளிகளைச் சமாதானப்படுத்திப் பலவித நன்மை உபாகாரங்களைச் செய்து வந்தார்.
ஜெமோனா (Gemona) பட்டணத்து மடம் கட்டும்போது அந்தோனியார் வேலையாட்களோடு தாமும் சேர்ந்து வேலை செய்து கொண்டு வருகையில், அவ்வழியாய் ஒருவன் வெற்று வண்டியொன்று ஓட்டிப்போகக் கண்டு, அவனிடம் போய் கற்கள் கொண்டு வருகிறதற்காக கொஞ்ச நேரத்துக்கு வண்டி வேண்டுமென்று கேட்டார். அவனுக்கோ வண்டி கொடுத்துதவ மனதில்லாதவனாய் வண்டியிற் படுத்திருந்த ஒருவனை அவருக்குக் காண்பித்து மரித்தவன் ஒருவனை ஏற்றிப்போகிறேனென்று சொன்னான். அதன் பேரில் அந்தோனியார் அவனை விட்டுப் போய்விட்டார். வண்டிக்காரன் வண்டியைக் கொஞ்சந்தூரம் ஓட்டிப்போய் நடந்த சங்கதியை வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனுக்குச் சொல்லவேண்டுமென்று அவனைத் தட்டி எழுப்ப, அவன் மெய்யாகவே செத்தப் பிரேதமாக இருக்கிறதைக்கண்டு அழுது புலம்பி செத்தப் பிரேதத்தைக் கொண்டுவந்து அந்தோனியார் பாதத்தில் கிடத்தி, தானும் அவருடைய பாதத்தில் விழுந்து அவர் தன்மேல் இரக்கம் வைக்க வேண்டும் என்று அவரைக் கெஞ்சி மன்றாடினான். அப்போது அந்தோனியாருக்கு மனதிளகி செத்தவனை உயிர்ப்பித்து அவனுடைய தகப்பனிடத்தில் ஒப்புவித்து நல்ல புத்திமதி சொல்லி அனுப்பினார்.
நாம் புண்ணிய வழியில் நடக்க ஆசைப்பட்ட போதிலும் நமது ஆத்துமத்தை மாசுப்படுத்தும் அற்பப் பாவங்களை நாம் கொஞ்சங் கூடச் சட்டைபண்ணாமல் நடந்து வருகிறோம். செபத்தினாலும், தர்மத்தினாலும், நற்கிரியைகளினாலும் நமது அற்பக் குற்றங்களைப் பரிகரிக்கப் பிரியாசப்படக்கடவோம். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுடைய உதவியைக் கேட்போம். அவர்கள் வேதனை குறைய வேண்டிக் கொள்ளக்கடவோம்.
செபம்
மகா வல்லமையுள்ள எங்களுடைய சகல அவசரங்களிலும் எங்களுக்கு நீர் உதவி புரிய உம்மை மன்றாடுகிறோம். எங்கள் கஸ்திகளிலும், வியாதிகளிலும், இக்கட்டுகளிலும் ஆறுதலும் துணையுமாயிருந்து, இவ்வுலகில் எங்களுக்குப் பசாசினாலும் துர்மார்க்கராலும் உண்டாக விருக்கிற தின்மைகளை அகற்றி எங்களை மோட்ச இராச்சியம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
நற்கிரியை : உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்துவைக்கிறது.
மனவல்லயச் செபம்: கீழ்ப்படிதலின் கண்ணாடியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக