மாதாவின் பிள்ளைகளே, நேயர்களே!
நமது மீட்பு - அர்ச்சியசிஷ்டதனம் உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமான சேசு கிறீஸ்துவை அடைவதிலே - அவரோடு கொள்ளும் ஐக்கியத்திலேதான் அடங்கியுள்ளது. ஏனெனில் அவரே “ஆல்பாவும், ஒமேகாவுமாக - எல்லாவற்றின் துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். அவரே புனிதத்தின் ஊற்று! தெய்வீகத்தின் முழுமையும், மற்றெல்லா வரப்பிரசாதங்கள், புண்ணியங்கள், உத்தமதனங்கள் இவற்றின் நிறைவும் அவரிடம் மட்டுமே குடிகொண்டுள்ளன. இதனால் அர்ச். சின்னப்பர், எல்லா மானிடரையும் சேசுகிறீஸ்துவில் உத்தமராக்குவதற் கன்றி வேறு எதற்காகவும் தாம் உழைக்கவில்லை என்கிறார்.
மாதா வழியாக சேசுவிடம்! நாலாயிரம் ஆண்டுகளாக மீட்பருக்காகக் காத்துக் கிடந்த உலகிற்குப் பிதாவாகிய சர்வேசுரன் தம் ஏக திருக்குமாரனை மாதா வழியாகவே கொடுத்தார். எத்தனையோ தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டின் அர்ச்சியசிஷ்டவர்களும் அந்தத் திரவியத்தைப் (மீட்பரை) பெற எவ்வளவோ மன்றாட்டுக்களைச் செய்திருக்கலாம். ஆனால் மகா பரிசுத்த கன்னிமாமரி மட்டுமே தன் வேண்டுகோள்களின் வலிமையாலும், தன் புண்ணியங் களின் உயர்வாலும் அதைப் பெறக் கூடிய தகுதியையும், தேவ வரப்பிரசாதத்தையும் பெற்றிருந் தார்கள். அர்ச். அகுஸ்தினார், "சர்வேசுரன் தம் குமாரனை மரியாயிடம் கொடுத்து, அவர்கள் வழி யாகவே உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார்” என்று உரைக்கிறார். தேவ-மனித சேசுகிறீஸ்து என்னும் தமது உன்னத சிருஷ்டியை திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவர் மரியாயிடத்தில் உருவாக்கினார். இதனால் வார்த்தையான சர்வேசுரன் "மாம்சமாகி, இஷ்டப் பிரசாதமும், சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு.1:14). அவர்
யாருக்குள்ளே வாசமாயிருந்தார்? மகா பரிசுத்த கன்னிமரியாயிடமே! இதனாலேயே அவர்கள் கடவுளின் தாயானார்கள் (Theotokos). கடவுள் தமது பிறப்பிக்கும் வல்லமையைப் பரிசுத்த கன்னித்தாயாருக்குத் தந்தார். சிருஷ்டி என்ற வகையில் மாமரி எந்த அளவுக்கு அதைப் பெற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குத் தந்தார். தம் திருக்குமாரனைக் கருத்தாங்கி தேவ-மனிதனாக அவரைப் பெற்றெடுக்கவும், அவருடைய ஞான சரீரத்தின் (திருச்சபையின்) * உறுப்பினர்கள் (ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கர்கள்) அனைவரையும் வரப்பிரசாத ஜீவியத் திற்குப் பிறப்பிக்கவும் தேவையான வல்லமையைப் பெறுவதில் அவர்களுக்கு உதவும்படியாக அப்படிச் செய்தார். இதன்படி கன்னி மாமரி சகல மனிதர்களுக்கும் வரப்பிரசாத ரீதியில் தாயானார்கள். இதனால்தான் கல்வாரியில் சேசுநாதர் தமது தாயாரை, "இதோ உன் தாய்'' (அரு.20:27) என்று தமது பிரிய சீடர் வழியாக மனுக்குலம் முழுவதற்கும் தாயாகக் கொடுத்தார்.
ஆக. நாம் இரட்சகரைப் பெற்றுக்கொள்ள மாமரியிடம்தான் செல்ல வேண்டும். இதற்கு, தேவ தாயாரான பரிசுத்த கன்னிகையை நாம் நமது தாயாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதனைத்தான பாசுத்த தாயத் திருச்சபை "Ad Jesus per Mariam" என்று சுருங்கக் கூறுகிறது. “மரியாயின் வழியாக சேசுவிடம்” செல்ல நம்மைத் தூண்டுகிறது. இதுவே சர்வேசுரனுடைய திருச்சித்தம்!
தேவமாதா மீதான பக்தி நமது இரட்சணயத்துக்கு அவசியம் அர்ச். தமாஸின் அருளப்பர்: "ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்குக் கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம் மீது கொள்ளும் பக்தி!” என்று வியந்து போற்றுகிறார். மாதா மீது அன்பு பாராட்டுவது நமது மீட்பை உறுதி செய்வதாக இருக்கிறது. மனிதர்கள் தங்களது இறுதிக் கதியை - நித்திய இரட்சணியத்தை - அடைய மாதா தேவைப்படுகிறார்கள். திருச்சபையின் வேதபாரகர்களும் இதனையேதான் போதிக்கிறார்கள். இதில், அர்ச். அகுஸ்தீனார், அர்ச். எப்ரேம், அர்ச். ஆன்செல்ம், அர்ச். பெர்னார்டு, அர்ச். பெர்னார்டீன், அர்ச். தாமஸ் அக்வினாஸ் முதலியோரைக் குறிப்பிடலாம். மாதா மீது மரியாதையும், அன்பும் இல்லாதிருப்பது தண்டனைத் தீர்ப்பிடப்படுவதன் நிச்சயமான அடையாளமென்றும், மாதா மீது உண்மையாகவும், முழுமையாகவும் பக்தி கொண்டிருப்பது முன்குறிக்கப்படுவதன் நிச்சயமான அடையாளம் என்றும் இந்த அர்ச்சியசிஷ்ட வர்கள் ஒருவாய்ப்பட அறிவிக்கிறார்கள். இதன் தாற்பரியம் என்னவென்றால் தேவமாதாவின் மீது பக்தி நேசம் கொண்டிருப்பவர்களை இந்தத் தாய் பராமரிக்கிறார்கள்; அவர்களுக்குக் கடவுளிடமிருந்து கிருபையைப் பெற்றுத் தருகிறார்கள்; தனது திருக்குமாரன் சம்பாதித்த இரட்சணியப் பேறுபலன்களையும், வரப்பிரசாதங்களையும் தான் விரும்புகிறபோது அவர் களுக்கு வழங்கி, புண்ணியத்தில் வளரச் செய்கிறார்கள் என்பதே!
அர்ச்சிப்பின் உயர்ந்த நிலையில் தான் விரும்பும் எவரையும் மேம்படச் செய்யவும், தான் விரும்பும் யாரையும் பரலோகத்திற்குச் செல்லும் ஒடுக்கமான பாதையில் வைக்கவும், தன் விருப்பப்படி எவரையும் அந்த ஒடுக்கமான ஜீவிய வாசல் வழியாகக் கொண்டு வந்து அரச சிம்மாசனத்தையும் மகுடத்தையும், செங்கோலையும் அவர்களுக்குக் கொடுக்கவும் சர்வேசுரன் தேவமாதாவை நியமித்தார். சேசுநாதர் எங்கும், எப்பொழுதும் மரியாயின் குமாரனும், கனியுமாகவே இருக்கிறார். அதே போல மாமரியும், ஜீவியக் கனியைத் தரும் உண்மையான மரமாகவும், அக்கனியை உற்பத்தி செய்யும் உண்மையான அன்னையாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் மாமரியின் மீது பக்தி கொண்டவர்களுக்கு அர்ச்சிப்பு எளிதாகிறது. சுருக்கமாகச் சொல்வோமானால், சர்வேசுரன் தேவ அன்பின் (மீட்பின் கனிகளின்) பொக்கிஷ சாலையின் திறவுகோலை மாதாவிடமே கொடுத்துள்ளார். ஆகையால் மாதா தான் விரும்புகிறவர்களுக்கு, விரும்பும்போது, விரும்பும் அளவுக்கு தேவ வரப்பிரசாதத்தை வழங்கி, அவர்களை அர்ச்சிய சிஷ்டவர்களாக்குகிறார்கள். அநேகர் இத்தாயின் பரிந்துரையால் தங்கள் வாழ்நாளிலேயே மோட்சம் வாக்களிக்கப்பட்டு அர்ச்சியசிஷ்டவர்கள் ஆனார்கள். எடுத்துக்காட்டாக, அர்ச். அசிசியார் மற்றும் சமீபகாலத்தில் அர்ச். மாக்ஸிமிலியன்கோல்பே போன்றோரைக் குறிப்பிடலாம்.
தேவமாதா பக்தி சேசுவை அடைவதற்கான மிகச் சிறந்த வழி | "கிறீஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது. மாதாவின் மீதான பக்தியானது அதனை அடையும் இலகுவான வழி, கிட்டத்து வழி, உத்தம் வழி, பாதுகாப்பான வழி” என்று அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.
தேவமாதா தனது பிள்ளைகளை மிக இலகுவாக சேசுகிறீஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார்கள். மற்ற வழிகளிலும் சென்று கடவுளுடன் ஐக்கியம் கொள்ள முடியும் என்பது உண்மையே. ஆனால் இந்த வழிகளிலும் கூட, மாமரியை அறிந்தும் நேசியாதவன், அல்லது அவர்களை வெறுப்பவன் ஒருபோதும் கடவுளுடன் ஐக்கியம் கொள்ள சாத்தியமேயில்லை ஏனெனில் மனிதர்களை வரப்பிரசாத ஜீவியத்திற்குப் பெற்றெடுப்பவர்களும், சகல வரப்பிரசாதங் களின் மத்தியஸ்தியுமான மாமரியின் வழியாக அன்றி எவனும் தன் இரட்சணிய வரப்பிரசாதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. மேலும் மற்ற வழிகளில் இனம் புரியாத மரணங்களும், பல சிலுவைகளும், எளிதில் வெல்ல முடியாத பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகே அது கைகூடும். ஆனால் மாதா என்ற பாதையின் வழியாக நாம் எளிதாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கடந்து செல்கிறோம். இந்தப் பாதையிலும் கடும் போராட்டங்களும், பெரிய கஷ்டங்களும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அச்சமயங்களில் இந்த அன்புத் தாய் தனது மக்களைப் பாதுகாக்கிறார்கள், கைதூக்கி விடுகிறார்கள். திடப்படுத்திப் பிரகாசிப்பிக்கிறார்கள். ஆகையால் இப்பாதையில் பயணம் இலகுவாகிறது, எளிதில் கடவுளை அடைய முடிகிறது.
இதனை அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மூலம் விளக்கலாம். ஒரு சமயம் அர்ச். பிரான்சிஸ் ஒரு பரவச நிலையின் போது மோட்சத்தை எட்டும் அளவுக்கு உயரமாயிருந்த இரு ஏணிகளைக் கண்டார். அவற்றில் ஒன்று செந்நிறமாகவும், மற்றொன்று வெண்ணிறமாகவும் இருந்தன. செந்நிற ஏணியின் மேலே கிறீஸ்து அரசரும், அருகில் உள்ள வெண்ணிற ஏணியின் உச்சியில் மாமரியும் வீற்றிருந்தார்கள். அர்ச். பிரான்சிஸம், அவரது சக துறவிகளும் செந்நிற ஏணியில் ஏறுகிறார்கள். அர்ச். பிரான்சிஸால் அதில் எளிதில் ஏற முடிந்தாலும், அவரது துறவிகளால் அதில் ஏற முடியாமல், பாதியிலே தவறிக் கீழே விழுந்து துயரப்படுகிறார்கள். அதனைக் கண்ட அர்ச். பிரான்சிஸ் ஒரு கணம் சிந்தித்தவராக செந்நிற ஏணியிலிருந்து இறங்கி, அருகிலிருந்த வெள்ளை நிற ஏணியில் மளமளவென ஏறி, தமது சகோதர துறவிகளிடம், “இந்த இரக்கத்தின் ஏணியில் ஏறி வாருங்கள்” என்று அழைக்க, அதில் அனைவரும் இலகுவாக, சிரமம் இல்லாமல் ஏறி மாதாவிடம் செல்கிறார்கள். மாதா சேசுகிறீஸ்து அரசரிடம் அவர்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.
ஆம்! மாமரி என்னும் பாதை சேசு கிறீஸ்துவை அடைய இலகுவான, பாதுகாப்பான, கிட்டத்து வழியாக இருக்கிறது.
கரிசனை உள்ள அன்புத் தாய்! தேவதாய் உலக மக்களுக்கெல்லாம் வரப்பிரசாத ரீதியில் தாயாக இருக்கிறார்கள் என்பதை முன்பு கண்டோம். உலகம் மற்றும் திருச்சபையின் வரலாற்றில் தனது பிள்ளைகளுக்கு ஆபத்தும் தீங்கும் நேரிடும் காலங்களிலெல்லாம் மாமரி மோட்சத்திலிருந்து இறங்கி வந்து, காட்சி தந்து, எச்சரித்து, சர்வேசுரனுடைய திட்டங்களைக் கூறி, அவர்களை மோட்ச பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறுவதில்லை என்பதை இங்கே நினைவுகூருவோம். இந்தப் பிந்திய காலங்களில் ஆன்ம கேடுகள் அதிகம் நேரிடும்போதெல்லாம் காட்சி தந்து எச்சரிப்பது அதிகரித்துள்ளதையும் நாம்
அறிவோம். இவற்றில் மெக்ஸிகோகுவாடலூப்பே மாதா காட்சி, அற்புத சுரூபக் காட்சி, சலேத், லூர்துபதி, பாத்திமா காட்சிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கேந்திரமாக பாத்திமாவில் திவ்விய கன்னிகை தனது மாசற்ற இருதயப் பரிகார முதல் சனி பக்தியை வெளிப்படுத்தி, அதனை பக்தியோடு அனுசரிப்பவர்களுக்கு இரட்சணிய உதவியை வழங்கி வருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது தவிர, பல்வேறு கால கட்டங்களில் பல அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தோன்றி, தனது விசேஷ பாதுகாப்பையும், வல்லமையையும் வழங்கும் வரப்பிரசாதக் கருவிகளையும் அவர்களுக்குக் கொடுத்து, தனது மக்களின் ஆன்மாக்களைப் பசாசின் தந்திரங்களிலிருந்து காத்து அர்ச்சிப்பதையும் திருச்சபையின் வரலாற்றில் நாம் காண்கிறோம். அர்ச். சாமிநாதர் வழியாக ஜெபமாலை பக்தியையும், அர்ச். சைமன் ஸ்டாக் மூலமாக கார்மெல் உத்தரியத்தையும், அர்ச். காத்தரீன் லாபோரே வழியாக அற்புதச் சுரூபத்தையும் மாமரி நமக்கு வழங்கியுள்ளதை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
நமது கடமை
நமது கடமை கத்தோலிக்க விசுவாசிகளுக்கு அர்ச்சியசிஷ்டதனம் ஒன்றும் எட்டாக் கனியல்ல. ஏனெனில் - அவர்களே மெய்யங்கடவுளின் சுவீகார மக்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டு இரட்சிக்க சேசுநாதர் சம்பாதித்த மீட்பின் பேறுபலன்களை அடைந்து அர்ச்சியசிஷ்டவர்களாகி இரட்சணியம் அடைய உரிமை பெற்றவர்கள். மற்ற மக்களையும் தேவ இரக்கம், உதவி வரப்பிரசாதங்களைக் கொண்டு பரிசுத்த சத்திய விசுவாசத்திற்குக் கொண்டு வந்து இரட்சிக்கிறது என்பதும் சரியே! அதே போல், தேவதாய் சகல
மனிதர்களுக்கும் தாயாக இருப்பதால் அவர்களையும் விசுவாசத்துக்கு மனந்திருப்பிக் காக்கிறார்கள். எனவே மாமரியின் மீதான பக்தியைக் கைக்கொண்டு, அவர்களை நேசித்து, அவர்களிடம் தங்களை அர்ப்பணித்து, அவர்கள் காட்டும் பாதையில் நடப்போமானால், வெகு இலகுவாகவும், சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும், தேவ ஞானமாகிய சேசுகிறீஸ்துவை அடைந்து அர்ச்சிக்கப்படுவோம். அதனால் அவர் வழங்கும் இரட்சணியத்தை மாமரித் தாய் வழியாகப் பெற்றுக் கொள்வோமாக!
சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.