Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

Devotion to St. Anthony (day 19) - அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்

அர்ச். அந்தோனியார் வணக்கமாதம் 
பத்தொன்பதாம் நாள் 


அர்ச். தேவமாதா தரிசனையானது. 



அர்ச் அந்தோனியார் செய்துவந்த பிரசங்கங்களினாலும், புதுமைகளினாலும் அநேகமான பாவிகளும் பிரிவினைக்காரரும் மனந்திரும்பித் தன்னுடைய கைகளின்று தப்பித்துப் போகிறதைக்கண்ட பசாசு அவர்மேல் கோபங்கொண்டு அவரைக் கொலை செய்யத் தேடினது. 
அர்ச்சியசிஷ்டவர் பிரிவ் கெபிகளில் தங்கி ஏகாந்தத்திலிருந்து, தன் சரீரத்தை வருத்திக் கடின தபசு செய்து, செபத்திலுந் தியானத்திலுங் காலத்தைச் செலவழித்து வந்தார். அப்போது ஒரு நாள் களைத்து அவர் இளைப்பாறக் கட்டிலின்மேற் படுத்தவுடனே பசாசு குரூர முகத்தோடு அவருக்கு முன்பாகத் தோன்றி அவர்மேல் பாய்ந்து அவருடைய கழுத்தைப் பிடித்து நெருக்கி அவர் உயிரைப் போக்கத் தேடினது. அர்ச்சியசிஷ்டவர் வாய் திறக்க மாட்டாமலும், மூச்சுவிட மாட்டாமலுமிருக்க வெகு பிரயாசையோடு திணரிக் கொண்டு "ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே (0 golriosa Domina) என்று சொன்ன மாத்திரத்திலே மகா ஒளி பொருந்திய பிரகாசத்தோடு சம்மனசுகள் சூழ மோக்ஷ இராக்கினி தமது திருக்குமாரனைக் கரங்களிலேந்திக்கொண்டு அவர் பக்கத்தில் நின்று, பசாசைக் கோப முகத்தோடு பார்த்து ஓடிப்போகும்படி கட்டளையிடவே, பசாசு ஓடி நரக பாதாளத்தில் விழுந்தது. அந்தோனியார் ஆண்டவளுடைய பாதத்தில் முழங்காலிலிருந்து "நல்ல ஆதரவின் மாதாவே" (Notre-Dame de Bon Secours) என்னும் நாமத்தால் அவளை வாழ்த்தி அவளுக்கு நன்றியறிதலான தோத்திரங்கள் செலுத்தினார். 
இந்தப் புதுமையை ஞாபகப்படுத்த அந்தக் கெபியில் மாதாவின் சுரூபம் ஒன்று பசாசுகளை மிரட்ட வாய் திறந்த பிரகாரமும், அவைகளை ஓட்டத் தமது கையிலிருந்த செங்கோலால் சைகை" காட்டுகிற பிரகாரமும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சுரூபம் வைக்கப்பட்ட பீடத்தண்டை அர்ச்சியசிஷ்டவர் காலத்திலும், விசேஷமாய் அவர் மரித்த பிறகும் அநேகமாயிரம் சனங்கள் போய் மாதாவை நோக்கி வேண்டிக்கொண்டு தங்களுக்கு வேண்டிய மன்றாட்டுகளைக் கேட்பார்கள். பிரஞ்சு தேசத்தில் 18-ம் நூற்றாண்டின் கடைசியில் கொடிய வேத கலாபம் நேரிட்டபோது வேத விரோதிகள் அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகளைத் துரத்திவிட்டு மடத்தை இடித்துப்போட்டு, கெபிகளை விற்றுவிட்டபோதிலும், நல்லாதரவு மாதாவினுடையவும், அர்ச் அந்தோனியாருடை யவும் ஞாபகமும், வணக்கமும் நில்லாது நிலைநின்று, சனங்கள் இராக்காலத்தில் அவ்விடத்துக்குப் போய் வேண்டிக்கொண்டு, ஊற்றின் தண்ணீரெடுத்து வந்து தங்களுக்கு அந்த மாதாவின் மட்டிலும், புதுமை விளங்குகிறவரான அந்தோனியார் மட்டிலும் உண்டான பக்தி நம்பிக்கையை விடாது காட்டி வந்தார்கள். 
1874-ம் வருஷம் அந்தோனியார் பேரில் பக்தியுள்ள சில புண்ணியவான்கள் உதவியைக் கொண்டு அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகள் அத்திரு யாத்திரை ஸ்தலத்தைத் திரும்பவும் அடைந்து ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி துல் (Tulle) நகரத்து மேற்றிராணியார் அதை மந்திரித்து அவர்கள் கைவசப்படுத்தினார். பிறகு புதிதாய் மடங் கட்டப்பட்டது. கோயில் புதுப்பிக்கப்பட்டது. வியாதிக்காரர் சாலைகளும், அநாதப் பிள்ளைகள் மடங்களும் ஏற்பட்டன. இன்னும் வேறே அநேக நூதன ஏற்பாடுகளும் உண்டாயின. பூலோகமெங்கும் அர்ச் அந்தோனியாரைக் கொண்டு சர்வேசுரன் செய்துவரும் நன்மைகளுக்காகவும் அற்புதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி இனிமேலும் அப்படியே செய்து வரும்படி மன்றாட வேண்டியது. அந்தோனியாரைட் போலவே நாமும் நமக்குப் பசாசினால் வரும் ஆபத்துக்களிலும் சரி, வேறே எந்தக் கஷ்ட துன்பங்களிலுஞ் சரி நல்லாதரவின் மாதாவை, உம்முடைய தாயாரை, வேண்டிக் கொள்வோமேயானால் அவள் நமக்குத் தம்மைத்தானே காண்பிக்காமற்போன போதிலும் நமது மன்றாட்டுக்கு இரங்குவாளென்பதற்குச் சந்தேகமில்லை. அர்ச். பிரான்சீஸ்கு அசிசி (1181-1226) மரித்த பிறகு அந்தோனியாரை இத்தாலியா தேசம் போகச் சிரேஷ்டவர்கள் கட்டளையிட்ட மாத்திரத்தில் அவர் உடனே கீழ்ப்படிந்து போகிறார். உரோமாபுரியையும், அஸ்ஸீஸ் பட்டணத்தையும் நோக்கி கால்நடையாக வழியில் பிச்சை இரந்து சாப்பிட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக்கொண்டு செல்லுகிறார். 
ஓ! அவருடைய கீழ்ப்படிதலானது எவ்வளவோ ஆச்சரியத்துக் கூரியது! அதைக் கண்டு அதிசயித்து நாமும் உலக காரியங்களின்மட்டில் பற்றுதல் வைக்காமல் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு மாத்திரம் சந்தோஷமாய்க் கீழ்ப்படிந்து நடக்கக்கடவோம். 

  செபம் 
 ஓ! அர்ச். அந்தோனியாரே, சேசுவின் மாதாவுடைய பிரமாணிக்கமான ஊழியரே, நல்லாதரவு மாதாவினிடத்தில் எனக்காகப் பரிந்து பேசி, அவள் என்மட்டில் தயவுகூர்ந்து என் பாவங்களுக்குப் பொறுத்தல் அடையவும், நான் புண்ணிய நெறி நடக்க வரப்பிரசாதந் தந்தருளவும் எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென். 

நற்கிரியை: அநாதைப் பிள்ளையை ஆதரிக்கிறது. 
மனவல்லயச் செபம்: பசாசுகளுக்குப் பயங்கரமான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக