பார்த்தோ நகர மேற்றிராணியாரைப் பின்பற்றி, மொதேனா நகரின் மேற்றிராணியாரான வந்.வில்லியம் ஆண்டகையும் (பிற்காலத்தில் சபினா நகரின் கர்தினாலாக பொறுப்பேற்றார்) சாமிநாதரை அணுகி, தம்மையும் அவருடைய சபையின் சகோதரராக ஏற்கும்படி விண்ணப்பித்தார். உடனே அர்ச். சாமிநாதர், அவரை தமது சபையில் ஏற்றுக்கொண்டு, தந்தைக்குரிய பொறுப்புகளை அவருக்கு அளித்தார். தமது ஜீவியகாலம் முழுவதும் வந். வில்லியம் ஆண்டகை அர்ச்.சாமிநாத சபைத் துறவியாகவே புண்ணியத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து, நன்மரணம் அடைந்தார். ஒரு சமயம், ஒரு பங்கு குருவானவர் பிரான்சு நாட்டிலிருந்து ரோம் நகரத்துக்கு வந்தார். வரும் வழியில், மொதேனா நகரத்தில், அவர் அர்ச். சாமிநாதர் பிரசங்கித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பிரசங்கம் முடிந்ததும், அவர் சாமிநாதரைத் தனியாக சந்தித்து, தனக்கு வரும் பலவிதமான சோதனைகளைப் பற்றியும், அவற்றில் முக்கியமாக சரீரத்துக்கு அடுத்த பாவசோதனைகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாத நிலைமையைப் பற்றியும் கூறினார். இச்சூழ்நிலையில், தனது ஆத்துமத்தை நித்தியத்திற்கும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சினார்.
இதனால், மற்ற ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தாம் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறினார். உடனே சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச். சாமிநாதர், அவரிடம், "சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கத்தின் மேல் முழு நம்பிக்கையுடன் உங்களுடைய பங்குக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுடைய ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள். நானே உங்களுக்குத் தேவையான இச்சையடக்கம் என்னும் புண்ணியத்தை சர்வேசுரனிடம் மன்றாடிப் பெற்றுத் தருவேன்" என்று கூறினார். அவரும் அர்ச்சிஷ்டவருடைய வார்த்தையை முழுதும் நம்பியவராக, திருப்தியுடன் சென்றார். அர்ச். சாமிநாதர் இரவுபகலாக தேவாலயத்தில் திவ்ய நற்கருணைப் பேழையின் முன்பாக இக்கருத்துக்காக ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டு வந்தார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்தார். அதன்விளைவாக, இதுவரைக்கும், மாமிசத்துக்கு எதிரான பாவசோதனைகளை எதிர்ப்பதில் மிகவும் பலவீனராக இருந்த இக்குருவானவர் சிறிது காலத்திலேயே, இச்சையடக்கம் நிறைந்தவராக , நிறைகற்பு என்னும் புண்ணியத்தை நுட்பமாக அனுசரித்து, தன் சரீரத்தை ஒடுக்கி அநேக நற்புண்ணியங்களை அனுசரிக்கலானார். உத்தம ஞானமேய்ப்பராக ஜீவித்தார்.
லோம்பார்டி என்ற நகரில் ஒரு சமயம் பலருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, அர்ச். சாமிநாதர், அநியாய வட்டி வாங்கி அநீத செல்வத்தைப் பெருக்கி வந்த ஒரு சட்ட ஆலோசகனைக் காண வந்தார். அவன் சாகும் தருவாயில் இருந்தான். அவனுக்கு அவஸ்தைக் கொடுப்பதற்காக ஒரு குருவானவர் ஏற்கனவே அங்கு இருந்தார். அவர் முன்னிலையில், அர்ச். சாமிநாதர், அவனிடம், அவன் இதுவரை வசூலித்திருந்த அநியாய வட்டிகளை அவரவரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். அதற்கு அவன் இணங்கவில்லை. தனது பிள்ளைகள் அதனால் தரித்திரநிலையை அடைந்துவிடுவார்கள் என்று கூறி, அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அங்கிருந்த குருவானவருடன் அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து சென்று விட்டார். அவனுக்கு திவ்ய நன்மையும் கொடுக்காமல் சென்று விட்டார். அவனுடன் இருந்த மற்றவர்கள், அவன் திவ்ய நன்மை வாங்காமல் இறந்தால் அவனுக்கு கிறிஸ்துவ அடக்கம் கிடையாது என்று கூறினர். உடனே அவன் அங்கு கூடியிருந்தவர்களை ஏமாற்றும்படியாக, இறுதியாக சாகுமுன் உட்கொள்வதற்காக ஒரு குருவானவரை வரவழைத்து திவ்ய நன்மை உட்கொண்டான். உடனே, "ஐயோ, நான் முழுவதும் எரிகிறேனே ! நரகமே எனது வாய்க்குள் இறங்கிவிட்டதே ! இதோ நாம் எல்லாரும் எரிந்து கொண்டிருக்கிறோமே! இதோ , பாருங்கள் ! இங்கு எல்லாம் நெருப்பாக இருக்கிறது!'' என்று அலறினான். இவ்வாறு அலறிக்கொண்டே அவன் அவலமாய் மரித்தான். இதேபோல வேறு ஒருநாள், ஒரு அநீதவட்டிக்காரன், தான் தேவப்பிரசாத அந்தஸ்தில் இருப்பதாக நடித்துக் கொண்டே, அர்ச். சாமிநாதரிடம் வந்து திவ்ய நன்மை உட்கொண்டான். அப்பொழுது, அவனுடைய நாக்கில் ஒரு நெருப்புக்கரி வைத்தது போல துடிதுடித்தான். தனது பாவங்களுக்காக உடனே மனஸ்தாபத்தால் நிறைந்தவனாக அர்ச்சிஷ்டவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதன்பிறகு தான் வாங்கிய அநியாய வட்டித் தொகையை அவரவரிடம் திருப்பித் தந்தான். இறுதிவரை திருந்திய நல்ல கத்தோலிக்கனாக ஜீவித்தான்.