Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 10 மார்ச், 2022

Devotion to St. Antony (Day 22)

 இருபத்திரண்டாம் நாள்


ரிமீனி (Rimini) பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்


சேசு கிறிஸ்துநாதர் தமது மிகவும் பிரமாணிக்கமுள்ள ஊழியரான அந்தோனியாருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் புத்தியில்லாத அற்ப சிருஷ்டிகளைக்கொண்டு மற்ற மனிதருக்கு முன்பாக வெளிப்படுத்தி அவர்களுக்குப் புத்தி படிப்பித்து மனந்திரும்பும் படி செய்யச் சித்தமானார். எப்படியென்றால், பிரிவினைக்காரர் பெருமளவு இருந்த ரிமினி பட்டணத்துக்கு அர்ச். அந்தோனியார் சென்று அவர்களை மனந்திருப்புவதற்கு வேண்டிய பிரயத்தனமெல்லாம் செய்தும் அவர்கள் கல்நெஞ்சராய்த் தமது பிரசங்கங்களை முதலாய்க் கேட்க மனமில்லாமல் வராதிருக்கிறதைக் கண்டு, அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனை நோக்கி மன்றாடி. அபரிமிதமான கண்ணீர் சொரிந்து, இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு, சுற்றி நின்றவர்களை நோக்கிப் புத்தியுள்ள மனிதருக்குத் தேவ வாக்கியங்களைக் கேட்க 

மனமில்லாதிருந்ததால் புத்திரில்லாத அற்பப் பிராணிகளுக்குச் சர்வேசுரனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்தப் போகிறதாகச் சொல்லி கடலோரம் சென்றார். அவர் அவ்விடத்தில் செய்யப்போவதென்னவென்று அறிய ஆசையினால் அநேகர் அவரைத் தூரத்திற் பின் சென்றார்கள். அவர் கடலோரம் சேர்ந்தபோது மீன்களெல்லாவற்றையுந் தமது பிரசங்கம் கேட்க வரவழைத்தார். உடனே மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாய் கரையோரம் வந்து சின்ன மீன்கள் வரிசை வரிசையாய் மணலோரத்திலும், அவைகளுக்குப் பின்னால் நடுத்தரமான மீன்களும், கடைசியில் பெரிய மீன்களும் வரிசைக் கிரமமாயிருந்து தலையெடுத்து அவர் பக்கமாய் வெகு கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தோனியார் அவைகளுக்குப் பிரசங்கம் பண்ணினார். இந்த ஆச்சரியத்தைக் கண்ட பிரிவினைக்காரர் அர்ச்சியசிஷ்ட வருடைய பாதத்தில் விழுந்து மன்றாடவே அவர் அவர்களுக்கு வெகு உருக்கமாய்ப் பிரசங்கம் பண்ணி அவர்கள் தப்பறைகளையும் துர்நடத்தையையும் எடுத்துக்காட்ட அவர்களில் அநேகர் மனந்திரும்பினார்கள். பிறகு அவர் மீன்களை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு ரிமினி பட்டணத்தில் சில நாள் தங்கி எல்லோரையும் வேத சத்தியங்களில் உறுதிப்படுத்தினார்.


ஆனாலும் மனந்திரும்பாத சில கொடிய பாவிகள் அவைரப் பழிவாங்கி அவரைக் கொல்ல நினைத்து அன்பு காண்பிப்பவர்களைப் போல அவரை விருந்துக்கு அழைத்து விஷங்கலந்த பதார்த்தங்களை அவருக்கு முன்பாக வைத்து அவைகளைச் சாப்படும்படி அவரைக் கேட்டார்கள். ஞான திருஷ்டியால் அவர்களுடைய மோசக் கருத்தை அறிந்த அவர் அவர்கள் மோசக் கருத்தை வெளிப்படுத்தி, அவர்கள் செய்தது அக்கிரமமென்று அவர்களுக்குச் சொன்னபோது "விஷத்தையுண்ட போதிலும், அதனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராது" என்று சேசுநாதர் தமது அப்போஸ்தலருக்கு சொன்னதில்லையோ? அதன் உண்மையைப் பரிட்சை பார்க்கிறதற்காகத்தான் இப்படிச் செய்தோமென்று சொன்னார்கள். உடனே நமது அர்ச்சியசிஷ்டவர் ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டு, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: 'நீங்கள் கேட்கிற பிரகாரம் நான் செய்யப் போகிறேன். சுவாமியைச் சோதிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுடைய இரக்ஷணியத்தையும், திருச்சபையின் மகிமையையும் நான் எவ்வளவு ஆசிக்கிறேன் என்றால் அதற்காக எதுவும் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று காண்பிக்கிறதற்காகவே நீங்கள் கேட்ட பிரகாரஞ் செய்யப் போகிறேன் என்று சொல்லி, விஷங்கலந்த பதார்த்தத்தைக் கையிலெடுத்து சிலுவை அடையாளம் வரைந்து அவரைக் கொல்ல நினைத்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க அதைச் சாப்பிட்டார். ஆனால் அவருக்குக் கெடுதியொன்றும் உண்டானதில்லை. அதற்கு விரோதமாய் வர அவரைக் கொல்லத் தேடினவர்களெல்லோரும் மனந் பது திரும்பினார்கள். இந்தப் பிரகாரமே வேறநேக சமயங்களிலும் அவரைக் கொல்லத் தேடினவர்கள் முயற்சி வியர்த்தமாய்ப் போய் நன்மையே விளைந்தது.


நமது சீவியக்காலத்தில் உண்டாகும் இக்கட்டுகளால் நமக்கு அதைரியம் உண்டாகும் போது அர்ச் அந்தோனியாரை நினைத்து அவருடைய பொறுமை சாந்தகுணத்தைக் கண்டு ஆறுதலடையக்கடவோம்.


செபம்


புத்தியுள்ள மனிதர் உமது அருமையான பிரசங்கங்களைக் கேட்க மனமிராதிருந்தபோது, சர்வேசுரனுடைய ஏவுதலாற் கடலின் மச்சங்களுக்குப் பிரசங்கம் பண்ணின அர்ச் அந்தோனியாரே! எங்கள் புத்தி, மனது, நினைவு இவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு எப்போதும் கீழ்ப்படுத்தி நடந்து நித்திய மோட்சம் இராச்சியஞ் சேரக் கிருபை அடைந்தருளும். ஆமென்.


நற்கிரியை: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.


மனவல்வயச் செபம்: புதுமைகளால் பிறந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக