Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 9 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 - அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)

 கற்பு என்ற உன்னத வரம் பெற்ற அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)



சேசு சபையைத் தோற்றுவித்த அர்ச். இஞ்ஞாசியார், மனந்திரும்பிய திவ்ய இரட்சகர் சபை நிறு வனரான அர்ச் அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், வெது வெதுப்புள்ள ஆத்துமங்களில் தேவசிநேக நெருப்பை மூட்டுவதற்காக, இத்தாலி நாடெங்கும் ஞான தியானப் பிரசங்கங்களை நிகழ்த்தினார். 1745ம் வருடம், ஞான தியான பிரசங்கங்கள் நிகழ்த்துவதற்காக, ஃபோஜ்ஜியா நகருக்கு சென்றார். ஏட்ரியாடிக் கடலை ஒட்டியிருந்ததால், இந்நகரம் கப்பல் வழி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது; பண்டைய அபுலியா இராஜ்யத்தின் தலைநகரமானஃபோஜ்ஜியா, செல்வ செழிப்புடனிருந்தது; கிறீஸ் துவ வேதத்தின் பழம்பெரும் காலத்தின் துவக்கத்தில், மனுக்குலத்தை மீட்க மனிதவதாரமெடுத்த திவ்ய சுதன் மேலுள்ள நேசப் பெருக்கத்தால், ஜெருசலேம் நகரை நோக்கி திருயாத்திரை போகத் தீர்மானித்தார். தன் பாவங்களை நினைத்து பட்ட உத்தம மனஸ்தாபத்தினாலும், அதிகமாய் தேவசிநே கத்துக்காக வீரத்தன்மையான கிரியைகள் செய்யவேண்டும் என்ற ஆசையாலும், கடின தபசு செய்து, தன் சரீரத்தை உபாதித்து, உலகத்திலிருந்து மறைந்திருக்க ஆவலுற்றிருந்தார். ஏற்கனவே கசை யால் தன்னை அடித்துக்கொள்ள துவக்கியிருந்தார்.

அருந்தவப் பிரீதியால், அவர் மனம் கர்த்துாசியர் சபையை நாடிச் சென்றது. திருயாத்திரை போய் வந்தவுடன் அதில் உட்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் "சேசு" என்ற மகா பரிசுத்த திருநாமத்தை விருதாகவும், "சர்வேசுரனுடைய அதிமிக தோத் திரம்" என்பதை விருதுவாக்கியமாகவும் கொண்டு, திருச்சபையின் நன்மைக்காக அயராது, போர் புரியும் படையணி என, நவமாய் ஒரு துறவற சபையை ஸ்தாபிப்பதற்காக, இஞ்ஞாசியாரைத் தெரிந்து கொண்ட பரம் கர்த்தர், அவர் கர்த்தாசியர் சபையில் உட்படத் திருவுளமாகவில்லை. ஆயி னும், அர்ச். இஞ்ஞாசியார், ஆயுள் பரியந்தம், கர்த்துாசியர்சபையின் மேல் வெகு அன்பு வைத்திருந் தார். ஓர் இரவு, அவர், இலொயோலா மாளிகையிலுள்ள தம் அறையிலிருந்த தேவமாதாவின் படத் திற்கு முன்பாக முழந்தாளிட்டு வெகு உருக்கத்துடன், பரிசுத்தக் கன்னித்தாயின் திவ்யகரங்களில், தன்னை சேசுநாதர் சுவாமிக்கு முழுவதும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய மாளிகை எங்கும் ஓர் பலமான அதிர்ச்சி உண்டானது. அதனால் பலகணிக் கண்ணாடிகள் உடைந்து போயின.

சுவரிலும் ஓர் பிளவு உண்டாகி, இந்நாள் வரை இந் நிகழ்வுக்கு அத்தாட்சியாயிருக்கின்றது. அர்ச்சிஷ்டவர், பரிசுத்த கற்பு என்னும் புண்ணியத்தில் ஸ்திரமாய் ஜீவிப்பதற்கு வேண்டிய தேவ வரப்பிரசாதத்திற்காக அமலோற்பவமாதாவிடம் அதிக உருக்க மாக ஜெபித்து வந்தார். ஓர் இரவில், அர்ச். இஞ்ஞாசியார் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அர்ச். அமலோற்பவமாதா, திவ்ய குழந்தை சேசுவுடன் மாட்சிமிக்க பேரொளியுடன் காட்சியளித்தார் கள். தேவமாதா, இஞ்ஞாசியாரையே சற்று நேரம் உற்று நோக்கியபடி, காட்சி கொடுத்தார்கள். தேவ மாதா, ஒன்றும் பேசவில்லை. திவ்ய குழந்தை சேசுவும், அவரை அளவற்ற அன்புடன் நோக்கி னார். பரிசுத்த ஜோதிமயமான அக்காட்சியை இஞ்ஞாசியார், கண்குளிரப் பார்த்தார். துாயதேவசிநே கப் பெருக்கத்தால் இருதயம் தாவித்துடிக்க, ஒப்பிலா அழகு சோபனம் வாய்ந்த அவ்விரு திரு வதனங்களையும் கூர்ந்து நோக்கினார். அப்பொழுது, அவருடைய ஆத்துமம், அருட்பிரகாச தீட்சை பெற்றது. அமல உற்பவ இராக்கினியையும், அவதரித்த திவ்ய சுதனையும் தரிசித்த அர்ச் இஞ்ஞாசி யாரின் கண்கள் அன்று முதல், உலகமாய்கைகளின் கவர்ச்சியினின்று முற்றிலும் விடுபட்டது. பரலோகக் காட்சியால், பூலோக இன்பங்களை இருதயம் வென்றது. ஆதாமின் மக்களை, அலைக்கழித்து சிந்தை குலையச் செய்யும் ஐம்புல மாய்கை அன்றே அவரைவிட்டு அகன்றது. அன்று முதல், ஜீவிய கால மெல்லாம், கற்பு என்கிற புண்ணியத்தில் ஓர் அசரீரியைப் போல் ஜீவிக்கும் உன்னத வரத்தை அடைந்தார். இத்தரிசனத்திற்குப் பின், இஞ்ஞாசியார், பரலோக ஏக்கமுடையவர் போல், நட்சத்தி ரங்கள் துலக்கமாய்ப் பிரகாசிக்கும் இரவு நேரத்தில், வானத்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டி ருப்பார். அவர் பூரண சரீர சுகம் அடையும் வரைக்கும், இன்னும் சிறிது காலம் அம்மாளிகையிலேயே தங்க நேர்ந்தது. அந்நாட்களை வீணாக்காமல், அவர், ஜெபத்திலும், ஞானவாசகத்திலும் கழித்தார். அடிக் கடி, ஆத்தும் சோதனை செய்வார். மற்றவருடன் உரையாடும் போது, ஞான காரியங்களைப் பற்றியே பேசுவார். வாசித்த ஞானகாரியங்களை நன்றாக மனதில் பதியவைக்கும்படி, அவற்றை ஓர் புத்தகத் தில் திருத்தமான அட்சரங்களில் எழுதிவைப்பார். சேசுநாதர் சுவாமியுடைய திருவாக்கியங்களை யும் கிரியைகளையும், பொன்னிறமான அட்சரங்களிலும், தேவதாயாரைக் குறித்தவைகளை நீல நிறத்திலும், மற்ற அர்ச்சிஷ்டவர்களைச் சார்ந்தவற்றை வேறுநிறங்களிலும் எழுதிவைத்தார். இலொயோலா மாளிகையைலிட்டுப் போகும் போது, அவர், தம்முடன் எடுத்துக்கொண்டு போன பொக்கிஷம் இப்புத்தகம் ஒன்று மட்டுமே.


பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்

 பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்


1. சரீரத்தின் பாவங்களே, ஆத்துமங்களை நரகத்திற்கு இட்டுச்செல்வதற்கு ஏதுவான பாவங்களாக இருக்கின்றன.

2. பரிசுத்த கற்பை அனுசரிப்பதற்கு, சரீரத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆத்துமத்தைப் பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு, பாவம் கட்டிக்கொள்ளக் கூடாது: தீமையானவற்றைப் பார்க்கக்கூடாது, திருடக்கூடாது, பொய்பேசக் கூடாது,எவ்வளவு கடினமானதொன்றாக இருந்தபோதிலும் உண்மையே பேச வேண்டும்.

3. நம் நேச ஆண்டவரை மிகவும் நோகச்செய்யும் ஆடைகளை அணியக்கூடிய நாகாரீகங்கள் இனி தோன்றும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் உடை உடுத்துவதில் இத்தகைய மோசமான நாகரீகங்களைப் பின்பற்றக் கூடாது. திருச்சபைக்கு இத்தகைய நாகரீகங்கள் இல்லை. நம் ஆண்டவர் எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றார்.

4. மருத்துவர்கள், தேவசிநேகத்தைக் கொண்டிராததால், நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஞானஒளியைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

5. குருக்கள் திருச்சபையின் அலுவல்களில் மட்டுமே ஈடுபடவேண்டும். குருக்கள் பரிசுத்தமாக, அதிக பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும். குருக்களும், துறவியரும், ஞான அதிகாரிகளுக்கும், பாப்பரசருக்கும் கீழ்ப்படியாமல் ஜீவிப்பது, நம் ஆண்டவரை மிகவும் நோகச் செய்கின்றது.

6. கன்னியாஸ்திரிகள் துறவற அந்தஸ்தில் நிலைத்திருப்பதற்கு, அவர்கள் சரிரத்திலும், ஆத்துமத்திலும் பரிசுத்தமாக இருப்பது அவசியமாகும்.

7. பல திருமணங்கள், சர்வேசுரனுடையதாக இல்லாதிருப்பதால், நல்ல திருமணங்கள் அல்ல. அவை சர்வேசுரனுக்கு உகந்தவை அல்ல.

8. பாவசங்கீர்த்தனம் என்பது, தேவ இரக்கத்தின் தேவதிரவிய அனுமானம். எனவே, உறுதியான நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் பாவசங்கீர்த்தனத் தொட்டியை அணுக வேண்டும்.

9. என் ஞானத் தாயே! நாட்டை ஆள்பவர்களுக்காக அதிகம் ஜெபியுங்கள். நம் ஆண்டவருடைய திவ்ய வேதத்தை அனுசரிப்பவர்களை தண்டிப்பவர்களுக்கு ஐயோ கேடு! திருச்சபையுடன் சமாதானத்துடன் இருக்கும் நாடுகளையும், பரிசுத்த வேதவிசுவாசத்தை அனுசரிப்பதற்கு சுதந்திரத்தை அளிக்கும் நாடுகளையும் சர்வேசுரன் ஆசீர்வதிப்பார்.

10. உலகத்தின் பாவாக்கிரமங்களுக்கான தண்டனையாக, நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன.

11. இனிமேலும், தேவமாதா, உலகத்தைத் தண்டிப்பதிலிருந்து, தம்முடைய நேசகுமாரனுடைய திருக்கரத்தைத் தாங்கிப் பிடிக்கக் கூடாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, நாம் அவசியமாக தபசு செய்ய வேண்டும். மனிதர்கள் தங்களுடைய பாவவழியைவிட்டுத் திரும்பினால், ஆண்டவர் உலகத்தைத் தண்டிக்காமல் விட்டு விடுவார். இல்லையென்றால், துப்புரவுத் தண்டனை வந்தே திரும்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 42 

"ஓ சமுத்திரத்தின் நட்சத்திரமே! வாழ்க!சர்வேசுரனுடைய பூசிக்கப்பட்ட பரிசுத்த மாதாவே! நித்தியமும் பரிசுத்த கன்னிகையே, வாழ்க! பரலோகத்தின் பேரின்ப பாக்கியமான வாசலே! வாழ்க! கபிரியேல் என்கிற சம்மனசினுடைய வாக்கிலே நின்று புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்தில் நிலை நிறுத்தும். ஆக்கினைக்குப் பாத்திரமானவர்களுடைய கட்டுகளை அவிழும். குருடருக்குப் பிரகாசத்தைக் கொடுத்தருளும். எங்கள் பொல்லாப்புக் களைத் தள்ளும். சகல நன்மைகளும் எங்களுக்கு வர மன்றாடும் " என்ற அர்ச். சாமிநாதர் மிகவும் விரும்பிய, தேவமாதாவுக்குத் தோத்திரமான இனிய பாடலை, மிக நேர்த்தியாக ஒரே குரலில், பாடியபடி, செயிண்ட் மேரி கன்னியர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புத படத்தை சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்துக்குள் கொண்டு வந்தனர். 

இந்தக் கன்னியாஸ்திரிகள் அனைவரையும் அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் மிகுந்த மகிழ்வுடன் அர்ச்.சாமிநாதர் வரவேற்றார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபைவிதிமுறைகளைப் பற்றி அவர்களிடம் விளக்குவதற்காக சாமிநாதர் அவர்களை மடத்தின் அருகிலுள்ள அர்ச்.சிக்ஸ்துஸ் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் அமரச்செய்தார். சுற்றுப்பிரகாரத்தில் வந்த கர்தினால்மார்கள் மேற்றிராணியார்கள் மற்றும் குருக்கள் அனைவரும் அந்தப் பொதுசபைக் கூட்டத்திற்காக அமர்ந்தனர். கூட்டம் முடிந்ததும், அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்காக ஒரு திவ்ய பலிபூசை நிறைவேற்றுவார். அதன்பிறகு கன்னியர்கள் அனைவரும் பவனியாக தேவாலயத்தின் மைதானம் வழியாக சென்று, அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்திற்கு செல்லவேண்டும் என்று, சாமிநாதர் திட்டமிட்டிருந்தார். 

ஆனால், புதிய துறவற சபைவிதிமுறைகளைப் பற்றி, அர்ச். சாமிநாதர் பேச துவக்குமுன்னே , வளாகத்தில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒரு மனிதன் ஓடிவந்து சாமிநாதரிடம், கர்தினால் ஸ்டீபனின் சகோதரனின் மகனான நெப்போலியன் ஆர்சினி என்பவன், குதிரையிலிருந்து கீழே விழுந்து, கழுத்து முறிபட்டுக் கிடக்கிறான், என்று கூறினான். உடனே கர்தினால், வந்.ஸ்டீபன், "பையனின் உயிருக்கு ஆபத்தில்லையே?" என்று வினவினார். ''ஆண்டவரே, அவன் விழுந்த இடத்திலேயே இறந்து விட்டான்'' என்று வந்தவன் துயரத்துடன் கூறினான். இதைக் கேட்ட கர்தினால் மிகவும் துயரத்துடன், தன் இருக்கையில் சாய்ந்தார். கர்தினாலின் துயரத்தைக் கண்ட அர்ச். சாமிநாதர், தமது சபை சீடர் ஒருவர் மூலமாக தீர்த்தத்தை வருவித்து, வருத்ததில் ஆழ்ந்திருந்த தமது ஞான ஆலோசகரான கர்தினால் மீது, தீர்த்தத்தை தெளித்துவிட்டு, குதிரையிலிருந்து பையன் கீழே விழுந்த இடத்திற்கு விரைந்து சென்றார். சகோ.டான்கிரட் மற்ற சகோதரர்கள் தங்களுடைய சபை அதிபரிடம், தாங்களும் கூட வருவதற்கு அனுமதி கோரினர். 

அதற்கு, அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் உடனே திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு பீடத்தை தயார் செய்யும்படி பணித்தார். கன்னியாஸ்திரிகளுடைய புதிய சபையின் பொதுக்கூட்டத்தை ஒத்தி வைத்தார். அதைவிட மிக முக்கியமான காரியத்தைக் கவனிக்கச் சென்றார். உயிரற்ற நெப்போலியனுடைய உடலை சிற்றாலய பீடத்தின் அருகிலுள்ள ஒரு அறையில் கிடத்தினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர் திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்காக பீடத்திற்குச் சென்றார். எப்பொழுதும் திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன் நிறைவேற்றும் சாமிநாதர், அன்று எவ்வளவு அதிக பக்தி உருக்கத்துடன் பூசையை நிறைவேற்றினார் என்றால், அவருடைய முகம் மாபெரும் ஒளியால் வசீகரம் பெற்று, மாட்சியுடன் துலங்கிற்று. பார்ப்பவருடைய இருதயங்களில் தெய்வபயமும் உத்தமமான பக்தியும் துண்டப்பெற்றன. நடுப்பூசையின்போது, உள்ளங்கை அகலத்திற்கு தரைக்கு மேலே அர்ச்.சாமிநாதருடைய பாதங்கள் உயர எழும்பியிருந்தன. அவருடைய முகம் சூரியனைப்போல ஒளி வீசிக் கொண்டிருந்தது. 

அவர் திவ்ய பலிபூசை நிறைவேற்றிய நேரம் முழுவதும், ஒரு சத்தமும் இல்லை . எதுவும் , யாரும் அசையவில்லை . திவ்ய பலிபூசை முடிந்தபிறகும் அங்கிருந்த அனைவரும் வெகுநேரத்திற்கு கல்லைப்போல, பரலோகக் காட்சியால் பரவசமானவர்களைப் போல, அசைவின்றி முழங்காலில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். திவ்ய பலிபூசை முடிந்தபிறகு, அர்ச். சாமிநாதர் யாதொன்றும் நிகழாததுபோல , அமைதியாக ,அனைவரையும் நெப்போலியனுடைய உடலைக் கிடத்தியிருந்த அறைக்கு, தம்முடன் வரும்படி அழைத்தார். அங்கிருந்த கூட்டத்தினர், தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே, அவர் கூறுவதற்குக் கீழ்ப்படிந்தனர். பிறகு, அர்ச். சாமிநாதர் இறந்து போயிருந்த, நெப்போலியனுடைய விறைத்துப் போயிருந்த கைகால்களை, நேராக வைத்து ஒழுங்குபடுத்தினார். பிறகு, அவர் ஆழ்ந்த ஜெபத்தில் மூழ்கினார். நெப்போலியனுடைய உடலினருகில், அர்ச்.சாமிநாதர் மூன்று முறை பீடத்தின் மேலிருந்த, ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை நோக்கி, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார். ஆராதித்துக் கொண்டே, உயிரற்ற நெப்போலியன் மேல் இரக்கமாயிருக்கும்படி, ஆண்டவரிடம் அழுது, மன்றாடி ஜெபித்தார். "பரலோக பிதாவே, இந்தப் பிள்ளையின் மேல் இரக்கமாயிரும். இவனை சாவிலிருந்து மீட்டருளும்" என்று உருக்கமாக வேண்டினார். பல நிமிடங்கள் ஓடின. சாமிநாதர் அழுதுகொண்டே ஆண்டவரைநோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார். நெப்போலியனுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தார். தம் கைகளை பரலோகத்தை நோக்கி உயர்த்தியவராக, உரத்த குரலில், "இளைஞனே! நமதாண்டவராகிய சேசுநாதர் சுவாமியின் நாமத்தினாலே உனக்குக் கூறுகிறேன். எழுந்திரு!'' என்று கூறினார். இவ்வாறு உரத்த குரலில் அவ்விளைஞனுக்குக் கட்டளையிடுகையில், சாமிநாதர், உள்ளங்கை அகலத்திற்கு தரையை விட்டு உயர எழும்பினார். உடனே அனைவரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். ஆம். இறந்த நெப்போலியன் மெதுவாக, தமது கண்களைத் திறந்தான். பிறகு, அவன் எழுந்து உட்கார்ந்து, ஆழ்ந்த துக்கத்திலிருந்து மீண்டவனைப் போல சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு தன் முன் நின்றுகொண்டிருந்த அர்ச். சாமிநாதரிடம், "சுவாமி, எனக்குப் பசியாயிருக்கிறது. எனக்கு உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் " என்று கூறினான். சில மணித்துளிகள் முன்பு வரை இறந்து போயிருந்த இளைஞன், புதுமையாக , உயிருடன் வரக் கண்ட அர்ச். சாமிநாதர், அவனை அரவணைத்துக்கொண்டு, "ஆம். மகனே. இதோ உனக்கு உணவு கொடுக்கப்படும்" என்று கூறினார். இதைக் கண்ட கர்தினாலும் மிகுந்த மகிழ்ச்சி, ஆரவாரத்துடனும் ஆனந்தக் கண்ணீருடனும், "இதோ நமதுபையன் உயிருடன் இருக்கிறான். சர்வேசுரன் ஸ்துதிக்கப் படுவாராக" என்று ஆண்டவரை வாழ்த்திக்கொண்டே , இளைஞனுக்குத் தேவையான உணவைக் கொண்டுவர, ஏற்பாடு செய்தார்.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 41

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 41


 சுவாமி, சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன் 3ம் செர்ஜியுஸ் பாப்பரசர் இந்த அற்பதப்படத்தை தமது லாத்தரன் மாளிகைக்குக் கொண்டு சென்றார். அதை, எங்களுடைய மடத்துக் கன்னியர் எவ்வளவோ தடுக்க முயன்றனர். அதற்கு பாப்பரசர் இணங்கவில்லை . ஆனால், அடுத்த நாள் இரவில் புதுமையாக, இப்படம் எங்களுடைய செயிண்ட் மேரி மடத்துக்கே திரும்ப வந்தது. அந்நாளிலிருந்து, எங்களுடைய மடத்துக் கன்னியர்கள் இப்படத்தை மிக விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதி வருகின்றனர். இப்படத்தைச் சுற்றியே , தங்களுடைய முதன்மையான பக்தி முயற்சிகளை, அனுசரித்து வருகின்றனர். எனவே, இப்படம் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பது, சர்வேசுரனுடைய திருவுளமாக இருக்கிறது. 

அதேபோல தான், நாங்களும் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும், அவருடைய சித்தமாக இருக்கிறது, என்று சங்.யூஜீனா தாயார் கூறினார்கள். ரோமாபுரியிலுள்ள கன்னியாஸ்திரி மடங்களை, சீர்திருத்தி ஒரே சபைக்குள் ஒருங்கிணைக்கும் அலுவலில், அர்ச்.சாமிநாதருக்கு உதவிடும்படி பாப்பரசரால் நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர்களான வந்.உபோலினோ, வந்.ஸ்டீஃபன், வந்.நிக்கோலாஸ் என்ற மூன்று கர்தினால்மார்களும், செயிண்ட் மேரி மடத்துக்கன்னியர்களிடம் சாமிநாதர் மேற்கொண்ட முதல் சந்திப்பு, தோல்வியடைந்தது என்பதை அறிந்து மிகவும் மனம் தளர்ந்தனர். பாப்பரசரிடம் இவ்வலுவலில் இருந்து தங்களை விடுவிக்கும்படி விண்ணப்பிக்கவும் ஆசித்தனர். கடின இருதயம் படைத்த பதிதர்களை மனந்திருப்பும் அலுவலில் வெற்றிபெறச் செய்த தேவமாதாவின் உதவியை, இவ்வலுவலிலும் விசேஷமாக நாடப்போவதாக அர்ச்.சாமிநாதர் தீர்மானித்தார். ஜெபத்தின் வல்லமையை நன்கு அறிந்த அர்ச்சிஷ்டவர், இக்கருத்திற்காக முன்பைவிட ஜெபத்தை இன்னும் அதிகமாக தீவரித்தவராக, பக்திபற்றுதலுடனும் அதிக தபசுமுயற்சிகளுடனும் தேவமாதாவிடம் இரவும் பகலும் மன்றாடிவந்தார். 

இவ்வாறு, கன்னியர்களை ஒன்றிணைக்கும் அலுவலின் வெற்றிக்காக, தமது சரீரத்தை உபாதித்து, நீண்ட நேர ஜெபத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய இருதயத்தில் தேவசிநேகம் அதிகரித்தது' மேலும் சர்வேசுரனுடைய சிநேகத்தில் புத்தொளியையும் உத்வேகத்தையும் அடைந்தார். "புரோயிலுள்ள மடத்திலுள்ள என் குமாரத்திகள் கன்னியாஸ்திரிகளாக ஜீவிப்பதற்கான ஒழுங்கு முறைகள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றால், இம்மடத்தின் பிள்ளைகள் அனைவரும் அர்ச்சிஷ்டவர்களாக முடியுமே. ரோமாபுரியிலுள்ள எல்லா மடத்துக் கன்னியாஸ்திரிகளும் ஒன்றாக ஒரே துறவறசபைக்குள் உட்பட்டு, ஒழுங்கு முறைகளை அனுசரித்து ஒரே குடும்பமாக ஜீவிக்க வேண்டும் என்பதே நம் நல்ல கடவுளின் திருவுளமாக இருக்கிறது. நம் ஆண்டவர் எவ்வளவு சிநேகம் மிகுந்தவர். நம் மேல் எவ்வளவு இரக்கம் கொண்டு, நம்மைப் பராமரித்து போஷித்து வருகிறார் என்பதை இக்கன்னியர்கள் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே" என்று சாமிநாதர் தமக்குள்ளே சிந்தித்துக்கொண்டு இருந்தார். ஒருநாள், அவர் திவ்யநற்கருணைப் பேழையின் முன் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவருடைய ஆத்துமத்தின் ஆழத்தில், இன்னுமொரு தடவை செயிண்ட் மேரி கன்னியர்மடத்தை சந்தித்து, அவர்களுக்கு ஜெபத்தினாலும் தபசினாலும் நிறைவேற்ற வேண்டிய ஆத்தும் ஈடேற்ற அலுவலின் மகிமைகளைப் பற்றி பிரசங்கிக்குமாறு ஒரு குரலொலி கேட்டது. திவ்ய இஸ்பிரீத்துவானவரே தம்மை இவ்வாறு ஏவுகின்றார் என்பதை உணர்ந்ததும், அர்ச். சாமிநாதர் இரண்டாம் முறையாக செயிண்ட் மேரி மடத்திற்கு சென்றார். 

அவர், அங்குள்ள கன்னியரிடம், ஜெபத்தினுடையும் தபத்தினுடையவும் நன்மைகளையும், அவற்றின் பேறுபலன்களினால், ஆத்துமங்களுக்கு விளையும் எண்ணற்ற பயன்களையும் பற்றி ஞானதியான பிரசங்கம் செய்தார். அதைக் கேட்ட கன்னியாஸ்திரிகளுடைய இருதயங்கள் ஞான ஒளி பெற்றன. மடத்துத் தாயார், "சுவாமி, இனிமேல் நாங்கள், ஆன்ம ஈடேற்றத்திற்காக ஜெபத்திலும் தபசிலும் அதிக நேரம் மெய்யாகவே முழுமனதுடன் ஈடுபடுவோம். இதுவரை, சர்வேசுரனிடமிருந்து நாங்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு பதிலாக, அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்றபடியே ஜீவித்து வந்திருக்கிறோம். இனி அத்தகைய ஜீவியத்தை மாற்றுவோம். உங்களுடைய துறவற சபை ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்போம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும், அர்ச்.சாமிநாதர் மிகவும் மகிழ்வடைந்தார். உடனே, அம்மடத்துக் கன்னியர் ஒவ்வொருவரும் கோவிலுக்கு சென்று, பரலோக பூலோக அரசரான திவ்யசற்பிரசாதநாதர் முன்பாக, கீழ்ப்படிதல் என்னும் துறவற சபைக்கான முக்கிய வார்த்தைப்பாட்டைக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தார். 

மேலும் அவர்களிடம், அர்ச்.சாமிநாதர், "சகோதரிகளே, இன்னும் சில நாட்களுக்குள், நம் பாப்பரசர் ஹொனோரியுஸ் நமக்கு அளித்துள்ள சாந்தா சபினா மடத்திற்கு, சிக்ஸ்துஸ் மடத்திலுள்ள நமது சகோதரர்கள் சென்று விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் எல்லாரும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு வந்துவிடலாம். பரிசுத்தமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தை ஆசிக்கும் மற்ற பெண்களையும் புதிதாக மடத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புதப்படத்தையும் உங்களுடன் எடுத்துக் கொண்டு வாருங்கள். ஒருவேளை தேவமாதா படம் முன்புபோல புதுமையாக , தானாகவே, இந்த மடத்திற்கே திரும்பி வந்துவிட்டால், நீங்களும் உங்களுடைய விருப்பப்படி மீண்டும் இந்த மடத்திற்கே வந்து தங்கலாம். அதை நான் தடுக்க மாட்டேன்" என்று கூறினார். இதற்கு, மடத்தின் கன்னியர்கள் அனைவரும் மகிழ்வுடன் சம்மதித்தனர். அதன்படி, 1220ம் வருடம், பிப்ரவரி 20ம் தேதியன்று , செயிண்ட்மேரி மடத்துக்கன்னியர் சிறுகுழுவாக சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்தின் கர்தினால் மார்கள், மேற்றிராணியார்கள், குருக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் தைபர் நதிபாலத்தின் வழியாக நகரத்திற்குள் சென்றனர். இந்த சுற்றுபிரகாரத்தை வரவேற்கும்படியாக தேவாலயங்களின் மணிகள் ஒலித்தன.


சனி, 5 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 40 


”சுவாமி, நமது சபைவிதிகள் மிகக் கடுமையானதாக இருக்கிறது என்று அம்மடத்திலுள்ள சில கன்னியர்கள் அஞ்சுகிறார்கள். அதிலும் குறிப்பாக, அடைப்பட்ட மடத்து ஜீவியத்தின் கடுமையான விதிமுறைகள் அவர்களை மிரளச் செய்துள்ளன" என்று சகோ. ஆல்பர்ட் அதிபர் சுவாமியாரிடம் கூறினார்.

அதை ஆமோதித்த சகோ.டான்கிரட், "ஆம். சுவாமி, ரோமில் வசிக்கும் அக்கன்னியர்களின் நண்பர்களும், உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் இக்கன்னியர்களுடைய ஜீவியமுறையை சிறிதளவு மாற்ற முயன்றாலும், உங்களை தடுப்பதற்காக எதையும் செய்யத் துணிந்திருக்கிறார்கள் " என்றார்.

ரோமாபுரியில் இருக்கும் மற்ற அநேக மடங்களில் இருந்த கன்னியர்களும், இப்புதிய துறவற ஒழுங்குகளை, அதுவும் பிரான்சு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் உள்ள புரோயிலுள்ள கன்னியர்மடத்தின் ஒழுங்குகளை, அனுசரிப்பதற்கு மனமில்லாதவர்களாக இருந்தனர். உயர்ந்த இத்தாலிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களான இவர்கள், சாதாரன குடியானவர்களைப் போல நெசவு வேலை செய்வதற்கும், கடின மரக்கட்டைகளை விட சுமாரான படுக்கைகளில் படுக்கவும், தயாராக இல்லை. மேலும் வருடத்தின் பெரும் பாகத்தில், ஒருசந்தி உபவாசம் இருப்பதையும், காலம் முழுவதும் சுத்தபோசனம் அனுசரிப்பதையும், முரட்டுக் கம்பளி உடுப்புகளை அணிந்துகொள்ளவும், தங்களுக்கென்று யாதொன்றையும் வைத்துக்கொள்ளாமல் அட்ட தரித்திரத்தைக் கடைப்பிடிக்கவும் இவர்கள் விரும்பவில்லை . நடுஇரவிலும் மற்ற அநேக ஒத்துவராத நேரங்களிலும் தேவாலயத்துக்கு வந்து தேவகீர்த்தனை ஜெபங்களை ஜெபிப்பதும் இவர்களுக்குக் கடினமானதும் கடைபிடிக்கமுடியாததுமான துறவற ஒழுங்காக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு, தங்களுடைய வீட்டிற்கு ஒருபோதும் போகக்கூடாது என்பது, இவர்களால் அனுசரிக்கவே முடியாத சபைவிதியாக இருந்தது.

அம்மடத்தின் தாயார் சங்.யூஜீனா, "இப்புதிய துறவற சபையின் விதிமுறைகளும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதன் ஒழுங்குமுறைகள் சில துறவற சபைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அவை நமது மடத்திற்கு ஏற்றதல்ல. நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட” என்று கூறினார்கள்.

உடனே, மற்ற வயோதிக கன்னியாஸ்திரிகள் ”அவை நடைமுறைக்கு ஏற்புடையாதவை மட்டுமல்ல. விவேகமற்ற விதத்தில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் " என்றனர்.

இதையெல்லாம் கேள்வியுற்ற அர்ச்.சாமிநாதர், இக்கன்னியரை சந்தித்து அவர்களுக்கு, தபசினாலும், ஜெபத்தினாலும் திருச்சபையில் விளையும் உன்னத நன்மைகளைப் பற்றி உணர்த்த விரும்பினார். அம்மடத்துக் கன்னியர்களை சந்திக்க செல்வதற்கு முன், அநேக நாட்கள் அர்ச்.சாமிநாதர் நீண்ட ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டிருந்தார். அதன் பின் அவர்களை சந்தித்தபோது, சாமிநாதர், சங்.யூஜினா தாயார் மற்றும் அம்மடத்தின் கன்னியர் அனைவரையும் கூட்டி அமரச் செய்து, அவர்களிடம், அநேக துறவறமடங்களில் நிலவும் துர்மாதிரிகைகள் அகலும்படியாக, ரோமாபுரியிலுள்ள அனைத்து கன்னியர்மடங்களிலும் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தைப் பற்றி விளக்கினார். துறவற ஜீவிய அந்தஸ்தின் முக்கிய நோக்கமும், சர்வேசுரன் அவர்களிடம் ஆசிக்கும் உன்னத நிலைமையுமான உத்தம சாங்கோபாங்க ஜீவியத்தினைக் கைப்பற்ற முடியும் என்றும் மிகத்தெளிவாக அவர்களுக்கு விவரித்தார்.

இருப்பினும், மடத்துத் தாயாரும்மற்ற கன்னியர்களும் அர்ச்சிஷ்டவரின் பிரசங்கத்தினால் யாதொரு பாதிப்புமின்றி, "சுவாமி! நீங்கள் எங்களிடம் கேட்பது, முடியாத காரியம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக அந்தப் படத்தை முன்னிட்டு நாங்கள் இம்மடத்தை விட்டு எங்கும் வரமுடியாது" என்று கூறினார்கள்.

சாமிநாதர், "படமா. அது என்ன? என்றுவினவினார்.

”சுவாமி, அது தான், அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் படம். அது எங்களுடைய மடத்தின் மிக முக்கிய பொக்கிஷம். அதைவிட்டு நாங்கள் வேறு எங்கும் பிரிந்து செல்ல முடியாது” என்று தாயார் கூறினார்கள்.

சாமிநாதர், "நீங்கள் அதையும் எடுத்துக்கொண்டு அர்ச். சிக்கஸ்துஸ் மடத்திற்கு வரலாமே. அதற்கு எந்த தடையமில்லையே" என்றார்.

”சுவாமி. நீங்கள் இதைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த அற்புதமான தேவமாதாவின் படம் இந்த இடத்திலுள்ள இம்மடத்திற்குதான் சொந்தமாக இருக்கிறது. இதை வேறு எங்கும் எடுத்துச்செல்லமுடியாது ..." என்று தாயார் தொடர்ந்தார்கள்.


அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39

 அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 39 


அர்ச்.சாமிநாதருடைய ஞான அறிவுரையை தாழ்ச்சிநிறை இருதயத்துடன் கேட்டதினாலேயே டயானா அர்ச்சிஷ்ட ஜீவியத்தை எட்டினாள். சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்லும் வரைக்கும் சில வாரங்கள் பொலோஞாவில் சாமிநாதர் தங்கியிருந்தார். அப்போது டயானா அடிக்கடி அவரை சந்திப்பாள். அவளுக்குக் கிடைத்த தேவவரப்ரசாதத்தின் பாக்கியமான அந்தஸ்தைப் பற்றி அர்ச்சிஷ்டவர் விவரித்து அவளை உணரவைத்தார். தன் இருதயத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்ற நினைவு அவளுடைய ஆத்துமத்தில் துாண்டப்பட்டது, அவளுடைய சொந்த பேறுபலன்களாலல்ல என்பதை அவளுக்கு எடுத்துரைத்தார். அப்போதிலிருந்து, இவ்வுலகிலுள்ள மற்ற சிருஷ்டிகளையும் சர்வேசுரனுக்காக சிநேகிக்கலானாள். இவ்வாறாக, மற்ற சிருஷ்டிகளின் நிலையற்ற தன்மையைக் குறித்து ஏற்படும் துயரத்திலிருந்து விடுபட்டாள். ஒருநாள், டயானாவின் எதிர்காலத்தைப்பற்றி, தாம் கண்ட காட்சியினிமித்தம், அர்ச்.சாமிநாதர், வேறொருவகையான தேவவரப்ரசாதத்தைப் பற்றி டயானாவிடம் ”மகளே! துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் கேட்பது பற்றி ஒரு சிலரே நினைக்கிறார்கள். எவ்வளவு பரிதாபமான நிலைமை இது! துன்பத்தை மக்கள் மிகப் பயங்கரமானதொன்றாக, இவ்வாழ்வில் தாங்கமுடியாத ஒன்றாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றிய நினைவே மிகப் பயங்கரமானதொன்றாக இருக்கிறது. உனக்கு அதைப்பற்றி நன்கு தெரியும் என்று நம்புகிறேன். துன்பத்தை நேசிக்கும் வரத்தை ஆண்டவரிடம் நீ ஏன் மன்றாடக் கூடாது?' என்று கூறினார். ஆம். சுவாமி. எனக்கு அதைப்பற்றித் தெரியும். ஆனால் அந்நினைவே என்னை அச்சுறுத்துகிறது” என்று கூறி விட்டு மௌனமானாள். ஏனெனில், அர்ச்சிஷ்டதனத்தை சிறுவயதிலிருந்தே விரும்பினாலும், துன்பத்தை நேசிக்கும் மனதையே அப்பரிசுத்ததனம் பெரிதும் சார்ந்திருக்கிறது என்று அறிந்ததால், அவளுடைய அர்ச்சிஷ்டவளாகும் எண்ணத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதை அவளுடைய முகத்திலிருந்தே கண்டறிந்த அர்ச்.சாமிநாதர், அவளிடம் துன்பம் என்னும் பரிசுத்த சிலுவையின் மகிமைகளையும் வல்லமையையும் பற்றி பிரசங்கித்தார். ”பிள்ளையே! கவனி. இவ்வுலகில் துன்பம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் கிறிஸ்துவர்களாகிய நாம் அத்துன்பத்தை சிநேக தேவனாகிய திவ்ய இரட்சகருக்காக பொறுமையுடன் ஏற்போமேயானால், அத்துன்பம் நமது ஆத்துமத்தை சர்வேசுரனிடம் சேர்க்கும் நமது ஆத்தும் இரட்சணியத்தின் உன்னத சாதனமாக மாறும். நம் ஆண்டவர் நமக்காகப் பட்ட பாடுகளையும் அவர் நமக்காக சிலுவை மரத்தில் தமது திவ்ய இரத்தமெல்லாம் சிந்தி மரித்ததையும் எப்போதும் நம் இருதயத்தில் பதிப்போமேயானால் நமது ஜீவியத்தில் நாம் சந்திக்கும் எத்தகைய துன்பமும் நமக்கு தேவவரப்ரசாதத்தைப் பெற்றுதரும் நற்கொடையாக மாறிவிடும். எனவே என் பிரிய மகளே இதைப்பற்றி பயப்படாதே. இருதயத்தில் கோழையாக இருப்பவர்கள் கூட துன்பத்தை சிநேகிக்கக் கற்றுக் கொள்ள முடியும். சர்வேசுரனுடைய உதவியை ஒவ்வொரு நாளும் அதற்காக மன்ாடினால் எல்லாரும் துன்பத்தை நேசிக்க முடியும்"

இதைக் கேட்ட டயானாவும் இருதயத்தில் புத்துணர்வை அடைந்தவளாக 18 வயது வரை கொண்டிருந்த பயமெல்லாம் நீங்கியவளாக, தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், ஆண்டவருடைய சிநேகத்திற்காகவும், சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், துன்பத்தை நேசிக்க துவக்கினாள். அர்ச். சாமிநாதர், இவ்வாறாக, டயானா பரிசுத்ததனத்தின் பாதையில் தனது அர்ச்சிஷ்ட ஜீவியத்தை துவக்கியதையும், அப்பாதையில் அவளைப் பின்பற்றி அநேக ஆத்துமங்கள் தங்களுடைய நேச இரட்சகரை உத்தமமாக சிநேகித்து சேவிப்பார்கள் என்பதையும் கண்டு அகமகிழ்ந்தார். அந்த வருடம் கிறிஸ்துமஸ் திருநாளுக்குப் பிறகு உடனே சகோ. ரெஜினால்டுவை பாரீஸ் நகருக்கு செல்லும்படி கூறிவிட்டு, சாமிநாதரும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக ரோமாபுரிக்கு சென்றார். ரோமிலுள்ள அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு 18 மாதங்கள் கழித்து வந்த சாமிநாதர் அங்குள்ள துறவிகள் அநேக நன்மைகளைச் செய்து அருமையாக உழைத்திருப்பதைக் கண்டார். அங்கு தற்போது துறவிகளின் எண்ணிக்கை 100க்கு மேலாக உயர்ந்திருப்பதையும் கண்டார். மேலும் சிக்ஸ்துஸ் மடத்தின் துறவிகளின் அயராத உழைப்பினால் ரோம் நகர மக்கள் தேவமாதாவின் மேல் அதிக பக்திபற்றுதலுடன் திகழ்வதையும் கண்டு மகிழ்வுற்றார். அந்நகர மக்களெல்லாம் தினமும் தவறாமல் தேவமாதாவின் சங்கீதமாலை என்ற ஜெபமாலையை தவறாமல் பக்தியுடன் ஜெபித்து வந்தனர். இதனால் பரலோக இராக்கினியான தேவமாதாமீது அவர்களுக்கு இருந்த சிநேகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

தமது சகோதர துறவிகள் மேல் சிலர் அவதுாறு சொல்வதையும் அர்ச்.சாமிநாதர் கேள்வியுற்றார். சகோ. டான்கிரட் , ”சுவாமி, சில கன்னியாஸ்திரிகள் தான் இதற்கு காரணம். அவர்கள் இன்னும் நம்மையும் நமது வேதபோதக அலுவலையும் சந்தேகத்துடன் கவனித்து வருகின்றனர்" என்றார். "ஆம். சுவாமி. குறிப்பாக, தைபர் நதியின் குறுக்கில் உள்ள செயிண்ட்மேரி மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளே நம்மை அச்சத்துடன் பார்க்கிறார்கள்" என்று சகோ.ஆல்பர்ட் கூறினார். 2 வருடங்களுக்கு முன் ஹொனோரியுஸ் பாப்பரசர் ரோமிலுள்ள கன்னியர் மடங்களையெல்லாம் ஒன்றிணைக்கும் பணியை அர்ச்.சாமிநாதரிடம் ஒப்படைத்தார். புரோயிலுள்ள சாமிநாதருடைய கன்னியர்களின் மடத்தின் சபை ஒழுங்கைப் பின்பற்றி, அக்கன்னியர் சபைகளை புதுப்பித்து ஒரே துறவற சபையாக மாற்ற வேண்டும் என்பதே அவ்வலுவல். அதனை முன்னிட்டே பரிசுத்த பாப்பரசர் சாமிநாதருக்கு அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலயத்தையும் மடத்தையும் கொடுத்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முயல்வாரேயானால், பெரும் எதிர்ப்பைக்கொடுப்பதற்கு இக்கன்னியர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதை அர்ச்.சாமிநாதர் தம் சபைத் துறவிகள் வழியாக அறிந்து கொண்டார்.


வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38 


அர்ச். சாமிநாதரை சந்தித்த டயானா , அவரிடம், தான் சகோ. ரெஜினால்டுவின்ஞானதியானபிரசங்கங்களினால் சர்வேசுரன்பால் கவர்ந்திழுக்கப்பட்டதைப் பற்றி தெரிவித்தாள். மேலும் இதற்கு, தனது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தாள். உத்தம கத்தோலிக்க ஜீவியத்தை முன்னிட்டு, தான் அவருடைய கன்னியர் சபையில் சேர விரும்புவதாகவும், அதற்கு அவர் உதவ வேண்டுமென்றும், அர்ச். சாமிநாதரிடம் விண்ணப்பித்தாள். சாமிநாதர் அவளிடம், "குழந்தையே! நீவிசேஷ விதமாக சர்வேசுரனை சேவிக்க விரும்பவதை, உன் வீட்டில் இருந்து கொண்டே செய்ய முடியும். இது, உனக்கு விளங்கும் என்று நம்புகிறேன்" என்றார். "ஆம் சுவாமி. என் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசிக்கிறேன். 

ஆனால், அது மட்டும் பற்றாது. நான் எனது நேசத்தை மட்டுமல்லாமல், என்னிடமுள்ள அனைத்தையும், இதுவரைக்கும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இனி எனக்கு சொந்தமாகப்போகும் யாவற்றையும் நம் நேச ஆண்டவருக்குக் காணிக்கையாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்வது போல, துறவற ஜீவிய அந்தஸ்துடன் சர்வேசுரனுக்கு ஊழியம் புரிய ஆசிக்கிறேன்" என்று டயானா கூறினாள். சாமிநாதர், அவளிடம், "மகளே! ஞான காரியங்களில் எப்பொழுதும் நிதானமாகவே முடிவு எடுக்க வேண்டும். தற்பொழுது, உன் இருதயத்தை அர்ப்பணிப்பதையே, ஆண்டவர் விரும்புவார். உத்தமமான துறவற அந்தஸ்திற்கு ஏற்ற காணிக்கைகளை நம் ஆண்டவருக்கு, நீ பிறகு அர்ப்பணிக்கலாம்'' என்றார். அதற்கு டயானாவும் சம்மதித்தாள். அதன்படி, அர்ச்.சாமிநாதர் தேர்ந்தெடுத்த ஒரு நாளில் அர்ச். நிக்ககோலாஸ் தேவாலயத்திற்கு டயானா வந்து பெரிய பீடத்திற்கு முன் முழந்தாளிட்டாள். அங்கு சகோ.ரெஜினால்டுவும், சகோ.குவாலா, சகோ.ருடால்ஃப் முன்னிலையில், டயானா , தன் நேச ஆண்டவருக்கு தன்னை முழுவதும் நித்தியத்திற்குமாக அர்ப்பணிக்கும் ஜெபத்தை ஜெபித்து துறவற வார்த்தைப்பாடு கொடுத்தாள். அர்ச். சாமிநாதருடைய இருதயம் அகமகிழ்வால், திடீரென்று மேலே வெகு தூரம் தாவியது. அவருடைய புதுமைமிகு தேவவரப்ரசாத சலுகையினால், தனக்கு முன்னால், முழங்காலில் இருக்கும் இச்சிறுபெண்ணிற்கு நிகழவிருக்கும், எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார். அவை அதிர்ச்சிக்குரியவை களாகவும், அதேநேரத்தில் ஆறுதலளிப்பவையாகவும் இருந்தன. அதன்பிரகாரம், டயானா , வார்த்தைப்பாடு கொடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாக மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாள். பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய கன்னியர்மடம் நிறுவப்படும் என்று காத்திருக்கும் வேளையில் தன் வீட்டாருக்கு தெரியாமல், பொலோஞாநகரின் எல்லைப்புறத்திலிருக்கும் ரொன்சானோ என்ற ஊரிலுள்ள அர்ச். அகுஸ்தினாருடைய கன்னியர் சபைமடத்தில் சேர்ந்தாள்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளை வீட்டிற்கு இழுத்துவந்தனர். வீட்டிற்கு எதிரான அவளுடைய போராட்டத்தை நிரந்தரமாக முடமாக்கிவிட்டனர். இருப்பினும், அவள் தனது வார்த்தைப்பாட்டின்படி, இவ்வுலக சிருஷ்டிகளிடமிருந்து விலகி, தன் இருதயத்தை தம் சிநேக தேவனான திவ்ய இரட்சகரிடமே நிலைத்திருப்பதில் பிரமாணிக்கமாக இருந்தாள். இறுதியில் தனது குடும்பத்தினருடைய உதவியினாலேயே பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய முதல் கன்னியர்மடத்தை நிறுவுவதில் டயானா வெற்றி பெற்றாள். விரைவில், சகோ.டயானா உத்தம சாங்கோபாங்கத்தில் வெகுவாய் உயர்ந்து, அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தாள். அதன்படி, அர்ச்சிஷ்டவளாக மரித்தபிறகு, அர்ச்.சாமிநாத சபைகுருக்கள், கன்னியர், மூன்றாம் சபையினர் அனைவரும், "முத்தி பேறுபெற்ற டயானாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று மகிழ்ச்சியுடன் அவளிடம் ஜெபிக்கும்படியாக, விரைவிலேயே, அவள் பீடத்திற்கு உயர்த்தப்பட்டாள்.


வியாழன், 3 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37



சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார்.

உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங் களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றி யெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர்.

இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர் களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங் களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவ சிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள்.

அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 36


சகோ.ரெஜினால்டு, தமது சபை அதிபர் தமக்கு அளித்த மடத்துத் தலைவர் பதவியைக் குறித்து, துவக்கத்தில் கலங்கினார். பரலோக உதவி கிடைக்கும்படியாக தேவமாதாவிடம் மன்றாடினார். ஆனால், உடனடியாக யாதொரு பரலோக உதவியும் கிடைக்காதது போல தோன்றியது. அப்போது, ரெஜினால்டு, தான் ஒரு துறவறசபைத் துறவி என்றும், சபையில் நுழையும் போது கொடுத்த பரிசுத்த கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டிற்கேற்ப, அதிபர் சுவாமியார் தமக்களித்த அலுவலை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, முழு உற்சாகத்துடனும் பிரமாணிக்கத்துடனும், நிறைவேற்றுவதில் ஈடுபடலானார்.

“அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு கொஞ்சம் பேர் மட்டுமே வந்தாலும் போதும். அந்த சிலரில் ஒருவரையாவது, தமது முன்மாதிரிகையுடன் கூடிய, பரிசுத்த துறவற ஜீவியத்தினாலும், உன்னதமான ஞானதியான பிரசங்கங்களாலும், உத்தம அர்ச்சிஷ்டதனத்தின் பரிசுத்த அந்தஸ்திற்கு உயர்த்த முடிந்தால், அதுவே தமக்குக் கொடுக்கப்பட்ட அலுவலுக்கான வெற்றி. ஓ மகா சிநேகமான தேவமாதாவே! உங்களைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிப்பேன். அதில் முக்கியமாக, உங்களை நோக்கி வாழ்த்தி மன்றாடும் அந்த ஜெபத்தை, எங்களுடைய அதிபர் சுவாமியாரின் உதடுகளில் எப்பொழுதும் அடிக்கடி உச்சரிக்கப்படும், அருள்நிறை மந்திரத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று ரெஜினால்டு எண்ணி தம்மையே உற்சாகப்படுத்திக் கொண்டார். பரலோகத்தின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட, ரெஜினால்டுவின் இந்த ஞானமிக்க திர்மானம், மிகுந்த ஞானநன்மைகளை விளைவித்தது. தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி சகோ.ரெஜினால்டு செய்த ஞானதியான பிரசங்கங்கள், எளிதாகவும், சுருக்கமாகவும் இருந்தபோதிலும், கோவிலுக்கு சிறு கூட்டமாக வந்த மக்களின் இருதயங்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் தங்களுடைய ஜிவியத்தை பரிசுத்தமும் உத்தமுமான கத்தோலிக்க ஜிவியமாக மாற்றினர். சகோ.ரெஜினால்டுவின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம் குறுகிய காலத்திற்குள்ளாகவே, நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்தது. “வெகு காலத்திற்குப்பிறகு, இப்பொழுது பொலோஞாவில் மிகச்சிறந்த பிரசங்கியார், நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் தான் சகோ.ரெஜினால்டு. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியவில்லை. அர்ச்.சின்னப்பரே, அல்லது அர்ச்.எலியாஸ் திர்க்கதரிசியே உலகிற்கு திரும்ப வந்துவிட்டார், என்று எண்ணத் தோன்றுகிறது”,  “அவர் உண்மையாகவே தேவமாதாவை நேரில் பார்த்தவர்போல பிரசங்கம் செய்கிறார்”, “ஆம். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர் ரோமாபுரியில் தங்கியிருந்தபோது, தேவமாதாவே நேரில் வந்து அவரை திராதக் காய்ச்சலிலிருந்து புதுமையாகக் குணப்படுத்தினார்கள்”, “அவர் இப்புதுமையைப் பற்றிக் கூறும்போது, அழுதுவிடுகிறார்” என்றெல்லாம்மக்கள் பேசினர். மோட்ச இராக்கினி, ரெஜினால்டுவிற்கு அளித்த வெண்கம்பளி உத்தரியத்தைப் பற்றியும், புதுமையாக அவரை குணப்படுத்தியதை பற்றியும் செய்தி அனேக இடங்களுக்குப் பரவியது.

அதனால் அர்ச்.சாமிநாதருடைய துறவற சபையில் சேர்வதற்கான ஆர்வம், இளைஞர்களிடையே மாபெரும் அளவிற்கு அதிகரித்தது. அர்ச்.சாமிநாதர் சகோ.ரெஜினால்டுவைப் பற்றிக் கண்ட கனவு நனவாகிறதுபோல, சில பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விநோதப்பிரியத்தினால் உந்தப்பட்டவர்களாக, அர்ச்.மரிய மஸ்கரெல்லா தேவாலயத்திற்கு வந்தனர். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும், பாரிஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான, ரெஜினால்டுவின் மிகுந்த கல்வி ஞானத்தைப் பற்றி தங்கள் வகுப்பறைகளில் அதிகம் கேள்விப்பட்ட இம்மாணவர்கள், இப்பொழுது இம்மடத்தில் கறுப்பு வௌளை துறவற உடையுடன் காணப்படும் சகோ.ரெஜினால்டுவும் அப்பேராசிரியரும் ஒருவர்தானா, என்றெண்ணி வியந்தனர்.

புதன், 2 பிப்ரவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 9

 மகாப் பரிசுத்த தேவநற்கருணைப்புதுமை அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்ததால் நான்கு யூதர்கள் மனந்திரும்பின புதுமை


16வது நூற்றாண்டில், ரோமாபுரியில் ஜீவித்த அநேக அர்ச்சிஷ்டவர்களுள் அர்ச்.பிலிப் நேரியாரும் ஒருவர். இவர் தமது ஆன்ம இரட்சணிய அலுவலினாலும், ஞானமிக்க பிரசங்கங்களினாலும், எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். அப்பொழுது அந்நகரத்தில், நான்கு யூத சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் கன்னெஞ்சர்கள். குருக்கள் சொன்ன நற்புத்திமதிகளை எத்தனை முறை கேட்டாலும், மனந் திரும்பாமல் இருந்தனர். இந்த நான்கு யூதர்களையும், சிலர், அர்ச். பிலிப்பு நேரியாரிடம் கூட்டிச் சென்றனர். அர்ச். பிலிப் நேரியார், அவர்களுக்கு அதிக சிநேகத்தைக் காண்பித்து, அவர்களிடம், "மோட்சத்துக்குப் போகிற மெய்யான வழி எது என்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய பிதாக்களாகிய அபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களைப் படைத்த சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அர்ச். பிலிப், "நாளைக்கு நாமும் திவ்ய பலிபூசையில் வேண்டிக் கொள்வோம்" என்றார். 

பின்பு அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். கூட வந்தவர்கள், "அர்ச்சிஷ்டவர், அவர்களுக்கு வேறு புத்தி எதுவும் சொல்லவில்லை", என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை அவர் கண்டு, அவர்களைப் பார்த்து, "நாளைக்கு நாம் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகிறபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள்'' என்று கூறினார். அந்த நான்கு யூதர்களும் தங்களுடைய வீட்டிற்குப் போனபிறகு, மற்ற யூதர்கள் அவர்களிடத்தில் வந்து, அர்ச். பிலிப் நேரியார் அவர்களுக்கு என்ன புத்தி சொன்னார் என்று கேட்க, "அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் எத்தனைப் புத்தி சொன்னாலும், நாங்கள் கேட்போமா , நம் வேதத்தை விடுவோமா?'' என்று அவரைப் பரிகாசம் பண்ணும் வகையில் பேசினார்கள். ஆனால், மறுநாள் அர்ச்சிஷ்டவர், திவ்ய பலிபூசை செய்கையில், அந்த நான்கு யூதர்களும் புதுமையாக மனந்திரும்பினர். மற்ற யூதர் முன்பாக, தாங்கள் கிறிஸ்துவர்களாக விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த நான்கு யூதர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், ஞான உபதேசம் கேட்கிறபோது, அவர்களில் ஒருவனுக்குக் கடின காய்ச்சல் கண்டு படுக்கையில் கிடந்தான். அர்ச். பிலிப், இதை அறிந்து அந்தக் காய்ச்சல்காரனிடத்தில் போய், "நீ கிறிஸ்துவனான தினால் உனக்கு சாவு வந்தது" என்பார்கள். நாளைக்கு நான் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகையில் உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் அனுப்பு" என்றார். அன்று இரவு அவனுடைய உடல் நிலை மிக மோசமாயிருந்தது. மருத்துவர், இவன் பிழைக்கமாட்டான் என்று தெரிவித்து விட்டார். மறுநாள் அவன் பேச்சில்லாமல் அவஸ்தையாயிருந்த போது, அருகிலிருந்தவன் உரத்த சத்தமாய், "பிலிப்பு நேரியார் நேற்று சொன்னபடி, உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் ஆனப்ப வேண்டுமோ?" என்று கேட்டான். அவன் தலையசைத்து, ஆமென்று அடையாளம் காண்பித்தான். 

அப்படியே பிலிப்பு நேரியாரிடம், ஆள் போய், வியாதிக்காரன் தனக்காகப் பூசையில் வேண்டிக்கொள்ள மன்றாடினாரென்று சொன்னதும் தவிர, அவனும் திவ்ய பலிபூசையைப் பக்தியுடன் கண்டான். அப்படியே அர்ச். பிலிப்பு பூசையில் வேண்டிக் கொண்டார். திவ்ய பலிபூசை முடிந்த பிறகு, அவன் திரும்பிச் சென்றான். அவஸ்தைக்காரன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நோயாளி நலமுடனிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் . " எப்படி உனக்கு திடீரென்று சுகம் கிடைத்தது? எந்த நேரத்தில் உனக்கு சுகம் கிடைத்தது?" என்று நோயாளியிடம் கேட்டதற்கு, அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்கிற நேரத்தில் அவனுக்குக் குணமானது என்று அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவர்களே! ஆத்துமத்தின் வியாதியாகிய பாவமும், சரீரத்தின் வியாதியும் திவ்ய பலிபூசைப்பலத்தினால் நீங்கிப்போகும். உங்கள் உறவினர் அல்லது மற்றவர்களுக்குள்ளே பாவியாயிருக்கிறவர்கள் மனந்திரும்ப , நீங்கள் பக்தியோடு காண்கிற பூசையில் அவர்களுக்காக மகா பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டு, அந்தப் பூசையைப் பிதாவாகியசர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவ பூசையின் பலத்தினால் அப்பேர்பட்ட பாவிகள் மனந்திரும்புவார்கள். கல்வாரி மலைமேல் சிலுவை மரத்தில் நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையில், அருகில் இருந்த நல்ல கள்ளன் மனந்திரும்பினான். இரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பூசைக்குள்ள பலன், இரத்தம் சிந்தாத இந்தப் பூசைக்கும் இருக்கிறதினால், அதனுடைய பலத்தினால் அப்போது பாவி மனந்திரும்பினதுபோல், இந்தப் பூசை பலத்தினால் இப்போதும் பாவிகள் மனந்திரும்புவர். உங்கள் உறவினருள் யாதொரு வியாதிக்காரன் உண்டானால், நீங்கள் கோவிலுக்குப் போய் பக்தியோடு பூசைக்கண்டு, ஆண்டவருக்கு சித்திமிருந்தால் இந்த வியாதிக்காரனுக்குக் குணமுண்டாகும்படி, நீங்கள் கண்ட பூசையை ஒப்புக்கொடுத்தால் அந்தப் பூசையின் பலத்தினால் வியாதிக்காரருக்கு சுகம் கிடைக்கும்.

தபசுகாலத்தின் நான்காவது ஞாயிறுக்கான தியானம்- St. Alphonsus Liguori

தபசுகாலத்தின் நான்காவது ஞாயிறுக்கான தியானம்



பாவிகள் மேல் நமது நேச ஆண்டவர் கொண்டிருக்கும் கனிவுமிக்க கருணையின் பேரில் தியானம்: அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்
சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் திவ்யபாடுகளுக்கான காலம் சமீபத்தில் இருந்தபோது, ஒருநாள் சமாரியாவிற்கு சென்றார். அங்கு சமாரியா;கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக  “அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும், “ஆண்டவரே, உமக்கு சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்படி சொல்கிறோம் என்றார்கள்” (லூக் 9:54) ஆனால், அதற்கு, தம்மை நிந்திப்பவர்களிடமும் மதுர தயாளம் நிறைந்தவராக விளங்கும், திவ்ய சேசுநாதர்சுவாமி, “உங்களுக்கு யாருடைய புத்தியுண்டென்று உங்களுக்குத் தெரியவில்லை. மனுமகன் ஆத்துமங்களைச் சேதமாக்குவதற்கல்ல, அவைகளை இரட்சிக்கவே வந்தார்” என்றார் (லூக்.
9:55,56). 

மேலும் ஆண்டவர், தமது சீடர்களிடம், “நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கிறேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” (மத் 11:29) என்று கூறியதன்மூலம், திமை செய்பவர்களை பழிவாங்கி தண்டிப்பது, சர்வேசுரனை ஏற்றுக் கொள்ளாதவர்களை அழிப்பது என்ற மனப்பான்மை நம் நேச ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல என்றும், பொறுமையும் தயாளமும், சாந்தமும் உடைய நமது ஆண்டவர் மனிதரை அழிப்பதற்கல்ல, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களை இரட்சிப்பதற்கே வந்தார் என்றும், இங்கு நமக்கு உணர்த்துகின்றார். மேலும் பின்வரும் உவமையில் நமது திவ்ய இரட்சகர், எத்தகைய கனிவுமிக்க சிநேக இருதயத்துடன் பாவிகளை நேசிக்கிறார் என்று எவ்வளவு அழகாக விவரிக்கிறார்! “உங்களில் நுரறு ஆடுகளை உடைய எவனாயினும் அவைகளில் ஒன்று காணாமற் போனால், மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைக் காணுந்தனையும் தேடித்திரிவானோ? அதைக் கண்டுபிடித்தபின்பு, சந்தோஷமாய் அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்தேன், ஆகையால் என்னோடு கூடக் களிகூறுங்களென்று சொல்லுவானல்லோ?” (லூக்.15:4-6). 

ஆனால் ஓ எங்கள் நேச ஆண்டவரே! இங்கு திவ்ய மேய்ப்பராகிய நிரல்ல, அகமகிழவேண்டியது! தனது திவ்ய மேய்ப்பரும் சர்வேசுரனுமாகிய உம்மைக் கண்டடைந்த காணாமல்போன ஆடுதான் அதிக சந்தோஷமடைய வேண்டியது! ஆம். உண்மையில், தனது மேய்ப்பரைக் கண்டடைந்த ஆடு அகமகிழ்வடைந்தது என்று ஆண்டவரும் இதையே, “காணாமல் போன ஆட்டைக் கண்டடைந்ததினிமித்தம் மாபெரும் சந்தோஷமுண்டாயிற்று”
என்று குறிப்பிடுகின்றார். இவ்வழகிய உவமையை“அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நிதிமான்களைப் பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் மோட்சத்திலே அதிக சந்தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.15:7) என்று நம் ஆண்டவர் முடிக்கின்றார். பாவி; தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்
படுவானேயாகில், அவனை தமது கனிந்த சிநேகத்தினால் அரவணைத்து, தமது திவ்ய தோள்கள்மேல் சுமந்து செல்வதற்கு சித்தமாயிருக்கும் நமது நேச ஆண்டவரின் அளவில்லாத சிநேகத்தையும் இரக்கத்தையும் கண்டுபிடிக்கும் போது, எந்த பாவிதான் உடனே ஓடோடிபோய் தனது திவ்ய இரட்சகரின் திவ்ய திருப்பாதங்களில் விழுந்து கிடப்பதற்கு விரும்பாத கன்னெஞ்சனாயிருப்பான்? 

நம் நேச ஆண்டவர் மனஸ்தாபப்படும் பாவிகள் மேல் மிகுந்த கனிவுமிக்க தயையுடன் இருக்கிறார் என்பதை ஊதாரிப்பிள்ளையின் உவமையில் அறிவிக்கிறார் (லூக்.15:12). இவ்வுவமையில் நல்ல தகப்பனார் தன் ஊதாரிப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தின் பேரில், அவனுக்குச் சேர வேண்டிய சொத்தின் பாகத்தை, மிகுந்த துயரத்துடன் அவனுடைய அழிவைக்குறித்து அழுது கொண்டே, அவனிடம் கொடுக்கிறார். அவன் தன்னுடைய சொத்தையெல்லாம் திய வழியில் விரயம் செய்கிறான். பன்றிகளுக்குப் போடும் கோதுகள்கூட
அவனுக்குக் கிடைக்காத நிலைக்கு வறியவனான அவன், சர்வேசுரனைவிட்டுப் பிரிந்தவனும், தேவவரப்ரசாதத்தையும் பேறுபலன்களையும் இழந்து விட்டவனும், நிர்ப்பாக்கியமான அந்தஸ்தில் பசாசின் அடிமையாக உபாதனை நிறைந்தவனுமான, ஒரு பாவியின் உருவகமாகவே ஊதாரிப்பிள்ளை நமக்குக்
காண்பிக்கப்படுகிறான். திவ்ய சேசுநாதர்சுவாமியின் உருவகமாக விளங்கும் அந்த தகப்பனார், மனந்திரும்பிய ஊதாரிப்பிள்ளையைக் கண்டதும், அவனுடைய அக்கிரமத்திற்காக அவனைத் தண்டித்துத் துரத்தாமல், இரக்கத்தால் மனம் உருகி, அவனை அரவணைத்து முத்தமிடுகிறார். 



அர்ச்.ஜெரோம் மற்றும் அர்ச்.அகுஸ்தினார், அவனுக்கு உடுத்தப்படுகிற முதல்தர ஆடை என்பது, மனந்திரும்பும் பாவிக்கு பாவமன்னிப்பின் மூலம், கிடைக்கப்பெறும் தேவவரப்ரசாதங்களையும் பரலோகக் கொடைகளையும்
குறிக்கிறது என்று குறிப்பிடுகின்றனர்.அவனுக்குஅணிவிக்கப்படும் மோதிரமானது, தேவஇஷ்டப்பிரசாத அந்தஸ்திற்குள் நுழைந்த ஆத்துமம் கிறிஸ்துநாதரின் பத்தினியாக மறுபடியும் மாறுகிறது என்பதற்கான
அடையாளமாக இருக்கிறது. “கொழுத்த கன்றை அடித்துக் கொண்டாடுவோம்” என்ற வாக்கியம், பரலோகவாசிகளின் ஜீவிய அப்பமாகிய, மகா பரிசுத்த தேவ நற்கருணையைக் குறிக்கிறது. அதாவது, மனந்திரும்பிய பாவியின் ஆத்துமத்திற்கு தேவையான திவ்யபோஜனத்திற்காக திவ்யபலிபூசை நேரத்தில், நமது நேச ஆண்டவர், நமது தேவாலயப் பீடங்களில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பதையேக் குறிக்கிறது. 

எனவே நாம் அந்த தேவவிருந்தை உண்டு அகமகிழ்வோமாக! ஆனாலும், ஓ ஆண்டவரே! எங்கள் தேவபிதாவே! ஒரு நன்றிகெட்ட மகன் திரும்ப வந்ததற்காக ஏன் இவ்வளவாக நாம் மகிழ வேண்டும்? “ஏனென்றால், இறந்து போன, இந்த மகன், மறுபடியும் உயிருடன் வந்திருக்கிறான். இவன் காணாமல் போனான். இப்போது, நான் அவனைக் கண்டடைந்தேன்” என்று நமது பரலோக தந்தை, நமக்கு பதிலளிக்கிறார். 

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 8 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

நமது நல்ல தந்தை அர்ச். சாமிநாதர் இறந்த அதே நேரத்தில், அவருடைய உத்தம சீடரான எவரார்டு, பிரான்சு நாட்டில் இறந்தார். இவர் தமது சபையின் அதிபரான சாமிநாதரின் அரும்பெரும் அப்போஸ்தல அலுவல்களைப்பற்றி கேள்விப்பட்டு, அவரை சந்திக்கும்படி ஆவலுடன் சென்றார். ஆயினும், இறப்பானது இருவரையும் இப்பூமியில் சந்திக்காமல் பிரித்தது. சங்.எவரார்டு சுவாமியார், லாங்கரஸ் நகர பேராலயத்தின் மதிப்பிற்குரிய மூத்த துணை அதிபராக இருந்தார். அந்நகரத்தின் பெரும் செல்வாக்கையும் புகழையும் இவர் பெற்றிருந்தார். ஒரு சமயம் அந்நகருக்கு அர்ச். சாமிநாதருடைய சபைத் துறவியான சகோ.சாக்சனிஜோர்டன் வந்து நிகழ்த்திய ஞானதியான பிரசங்கத்தைக் கேட்டார். பரலோகத்திலிருந்து வந்த சம்மனசு போல , தேவசிநேக அக்கினியால் பற்றியெரிந்த சகோ. ஜோர்டனின் ஆழ்ந்த ஆன்ம இரட்சணிய ஆவலைக் கண்ட சங். எவரார்டு, அர்ச். சாமிநாதருடைய சபையின் மேல் ஈர்க்கப்பட்டார். எவரார்டு பல திறமைகளுடையவராக இருந்தார். பெரிய மருத்துவமனையைக் கட்டியிருந்தார்.

லாங்க்ரஸ் நகரத்தின் பேராலயத்தை நிர்வகித்துவந்தார். அவரை லோசான் என்ற நகரின்மேற்றிராணியாராக்க, பாப்பரசர் விரும்பியபோது, தகுந்த காரணங்களைக்கூறி, சங். எவரார்டு, அப்பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை . 1220ம் ஆண்டு, பொலோஞாவிலிருந்து, சகோ.ஜோர்டன் பாரீஸ் வந்தபோது, எவரார்டு தமது பதவி , உடைமை யாவற்றையும் துறந்து அர்ச். சாமிநாதருடைய போதகத் துறவிகளுடைய சபையில் சேர்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்தார். அச்சமயம், லொம்பார்டியைச் சேர்ந்த பிராந்தியத்திற்கு தலைமை அதிபர் பதவியை சகோ. ஜோர்டன்கிடைக்கப் பெற்றிருந்தார்.சகோ. ஜோர்டன், எவரார்டு சுவாமியாருக்கு சாமிநாதருடைய சபைத் துறவிகளுடைய உடையை அணிவித்து, பாரீஸிலுள்ள அர்ச். ஜாக்வஸ் மடத்தில் சேர்த்துக் கொண்டார். சபையில் சேர்ந்தவுடன், சங். எவரார்டு சுவாமியார், தமது சபை அதிபரான அர்ச்.சாமிநாதரைக் காண பெரிதும் ஆசித்தார். சாமிநாதருடைய அர்ச்சிஷ்டதனத்தைப் பற்றி சகோ. ஜோர்டன் அளவில்லா உற்சாகத்துடன் விவரித்திருந்தார். லாங்கரஸ் கதீட்ரல் பேராலயத்தின் பொறுப்புள்ள பதவியில் இருந்ததால், சங். எவரார்டு சுவாமியாார், பிரான்சு நாட்டை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்லமுடியாத சூழ்நிலையில், இத்தாலியில் இருந்த தமது சபை அதிபர் சுவாமியாரைக் காண பெரிதும் ஆவல் கொண்டார். அச்சமயம், அர்ச்.சாமிநாதரோ பிரான்சுக்கு உடனே வருவதற்கானதிட்டம் ஏதும் இல்லை. ஆனால், சகோ. ஜோர்டன் லொம்பார்டிக்கு, தமது புதிய பொறுப்பை ஏற்பதற்காக செல்ல வேண்டியிருந்தது. அங்கு நிச்சயம் அர்ச். சாமிநாதர் இருப்பார் என்பதை அறிந்த எவரார்டு சுவாமியாரும் ஜோர்டனுடன் சென்றார். பர்கண்டியிலிருந்து, இத்தாலியை நோக்கிச் சென்ற பயணத்தின்போது, இந்த வயோதிக குருவானவருடைய அனுபவமிக்க ஞானமும் உற்சாகமூட்டும் அறிவும் சகோ. ஜோர்டனுக்கு மிகவும் நன்மை பயத்தன. துறவற ஜீவியத்திலுள்ள நடைமுறைப்படுத்த வேண்டிய அநேக நன்மையான காரியங்களைப் பற்றி எவரார்டு சுவாமியாரிடம் சகோ.ஜோர்டன் கற்றறிந்தார்.

சென்ற இடங்களிலெல்லாம் இருவரும் ஞானபிரசங்கங்களை நிகழ்த்தினர். அந்த தியானப் பிரசங்கங்களின் வெற்றிக்குக் காரணம் சங். எவரார்டு சுவாமியார் தான் என்று சகோ. ஜோர்டன் குறிப்பிடுகிறார். ”பிரான்சு மற்றும் பர்கண்டி நாடுகளைக் கடந்து சென்றபோது, என்னுடன் வந்த சங்.எவரார்டு சுவாமியாரைக் கண்ட யாவரும், அவரை மிகவும் சங்கை செய்து புகழ்ந்து பாராட்டினர். அவர், கிறிஸ்துவுக்காக அட்ட தரித்திரத்துடனும், யாவற்றையும் துறந்தவராகவும் பிரசங்கங்களைப் போதிக்கச் சென்றார்” என்று ஜோர்டன் குறித்துவைத்துள்ளார். நேற்றுவரை திருச்சபையின் அதிகாரியும் செல்வம் மிக்கவருமாயிருந்த சங். எவரார்டு, இன்று சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் ஏழைகளுக்காக ஆர்வமுள்ள பிச்சைக்காரராக திகழ்ந்த போது, ஏழைகள் எல்லாரும் அவருடைய பராமரிப்பிற்காக அவரை அண்டி சென்றனர். எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மேற்றிராணியார்கள், சாமிநாதருடைய போதகசபைத் துறவிகளை நன்கு வரவேற்று, தியான பிரசங்கங்களை நிகழ்த்தவும், நன்கொடையாளர்களுடைய உதவியினால் மடங்களைக்கட்டவும் அனுமதிப்பார்கள் என்ற விவரத்தையும் எவரார்டு அறிவித்தார். இந்த விவரங்கள், பிற்காலத்தில் சகோ. ஜோர்டனுக்கு மடங்களைநிறுவுவதற்கு மிகவும் உதவியாக இருந்தன. தொல்லைகள் நிறைந்த கடினமான பயணத்தைப்பற்றி முறையிடாமல், இளம் துறவிகளுக்கான உலகத்தைச் சுற்றி வேதம் போதிக்கும் அலுவலில், தம் நேச இரட்சகருக்காக, தமது முதிய வயதில் எவரார்டு, உற்சாகமாக ஈடுபட்டார். கோடைகாலங்களில் மிக உஷ்ணமாக இருந்தபோதிலும், உதயசாமத்திற்கு முன்பே துவக்கி மாலை வழிபாட்டு ஜெப (vespers)நேரத்திற்கான நட்சத்திரங்கள் தோன்றும் வரை, அவர்கள் தங்கள் வேதபோதக அலுவலில் ஈடுபட்டனர். சென்ற இடங்களிலெல்லாம் தங்குவதற்கான துறவற இல்லங்கள், எவரார்டு சுவாமியாருக்கு தெரிந்திருந்ததால், அவர்களுடைய வேதபோதக யாத்திரை மிக எளிதாக இருந்தது. ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது, எவரார்டு சுவாமியார் மிகவும் பலவீனமடைந்தார். அவர் மிகவும் நோயுற்றிருக்கிறார் என்பதை அறிய வந்தனர். சிறிது சிறிதாக முன்னேறி லோசான் என்ற ஊரை அடைந்தனர். மருத்துவர்ககள் அவரைப் பரிசோதித்துவிட்டு அவர் விரைவிலேயே இறந்துவிடுவார் என்று, அறிவித்துவிட்டு அவருக்கு அதைப்பற்றித் தெரிவிக்க வேண்டாம் என்று, கூறினர். இதை யூகித்து அறிந்து கொண்ட எவரார் சுவாமியார், ”மருத்துவர்கள் நான் இறக்கப்போகிறேன் என்பதை ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்.

அந்நினைவு கசப்பாக இருக்கும் மனிதர்களிடம் தான், அதை மறைக்க வேண்டும். எனக்கு மரணபயம் இல்லை ” என்று கூறினார். சில தினங்களில், தாம் மிகவும் ஆவலுடன் சந்திக்க விரும்பிய தமது சபையின் அதிபரான அர்ச்.சாமிநாதர், தமது சகோதர துறவிகளிடையே மரிப்பதற்காக, பொலோஞா நகரத்திலுள்ள தமது மடத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார் என்பதை அறியாமலேயே , எவரார்டு சுவாமியார், 1221ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாள், பாக்கியமான மரணம் அடைந்தார். சங். எவரார்டு சுவாமியார்மேல் லாங்க்ரஸ் மேற்றிராசனம் எப்போதும் பக்தி கொண்டு விளங்குகிறது. அவருடைய நினைவுநாள் ஆகஸ்டு மாதம் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 BLESSED JANE OF AZA - முத். ஜேன்

 BLESSED JANE OF AZA - முத். ஜேன் (1140-1202)


அர்ச். சாமிநாதருடைய தாயாரின் பெயர் ஜேன் ஆஃப் ஆசா. முத். ஜேனம்மாள் என்று அழைப்போம். மத்திய நூற்றாண்டுகளில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தேவமாதாவின் பேரில் விசேஷ பக்தியுடன் திகழ்ந்தன. அதில், ஸ்பெயின் நாட்டுமக்களிடம் இயல்பிலேயே அந்த பக்திமிக அதிகமாக இருந்தது. அர்ச். சாமிநாதர் தமது சபைத்துறவிகளிடம் தேவமாதாமீது அசாதாரணமான விதத்தில் ஆழ்ந்த பக்தி கொள்ள வைத்ததற்கான ஒரே முக்கிய காரணம் அவருடைய தாயார். அவர்களுடைய குணாதிசயங்களை, எல்லா காலத்திலும் செயல்பட்டு வரும் அவர்களுடைய மகன் , சாமிநாதரால், நிறுவப்பட்ட துறவற சபையில் நாம் பார்க்க முடியும். அர்ச். சாமிநாதர் தமது தாயிடம் எவ்வளவு அதிக கனிவுள்ள பாசமுள்ளவராக இருந்தாரென்றால், அந்த நல்ல தாயாரிடம் கற்றுக்கொண்டபடி, அவர் தமது எல்லா கஷ்டநேரங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும், எப்பொழுதும், இடைவிடாமல், தன் பரலோக தாயாரான மிகவும் பரிசுத்த தேவமாதாவை நோக்கி தமது இருதயத்தை எழுப்பி, அவர்களுடன் உரையாடி மகிழ்வார்.

அர்ச். சாமிநாதர் பிறப்பதற்கு முன், ஜேன் ஒரு கனவு கண்டார்கள். தமது மகன் ஒரு நாயைப்போல வாயில் தீப்பந்தத்தைக் கவ்வியபடி உலகம் முழுவதும் சுற்றிவந்து, அகில உலகத்தையும் ஒளிர்விப்பது போல ஜேன் கனவு கண்டார்கள். தீப்பந்தமாகிய தேவசிநேகநெருப்பை சாமிநாதருடைய ஆத்துமத்தில் பாதுகாக்கவும், அதைத் துாண்டி வளர்க்கவும் வேண்டிய அலுவலை, அவருடையதாயார், ஜேன் தமது தாய்க்குரிய நேசத்துடன் மிக நேர்த்தியாக செய்தார்கள். மேலும், ஜெபம் என்னும் அரிய பொக்கிஷத்தின் விலையுயர் தன்மையையும், அதனால் எண்ணற்ற ஆத்துமங்களை ஆண்டவருடைய தேவசிநேக இராஜ்யத்துக்குள் கொண்டுவரும் உன்னத நன்மைபயக்கும் உயர்ந்த விளைவுகளையும் பற்றி தமது மகனுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இந்த சிறந்த போதனையின் உதவியினாலேயே, சாமிநாதர் அர்ச்சிஷ்டவருக்குரிய ஜெப தப பரித்தியாகங்களினால் திரளான பதிதர்களை மனந்திருப்பியதுடன், ஏராளமான துறவற மடங்களை சீர்திருத்தவும் முடிந்தது. முத். ஜேனம்மாள் தமது மகனுக்கு, அநேக ஆத்துமங்களுக்கு மோட்சத்தின் திறவுகோலாக விளங்கிய, தேவமாதாவை வாழ்த்திப் போற்றும், மங்களவார்த்தை ஜெபத்தைக் கற்பித்தது மட்டுமல்லாமல், தேவமாதாவைப் பின்பற்றி உத்தம கிறிஸ்துவ பெண்மணியாக எவ்வாறு ஜீவிப்பது என்று நன்மாதிரிகையுடன் வாழ்ந்தும் காண்பித்தார்கள்.

ஜேனுடைய மூன்று மகன்கள், பிற்காலத்தில் குருவானவர்களானார்கள். தேவமாதாவின் மீது பெருமதிப்பிற்குரிய அச்சத்துடனும், கனிந்த சிநேகத்துடனுமான பக்தியை, தமது பிள்ளைகளிடம், ஜேன் ஊட்டினார்கள். இதன் விளைவாகத் தான் , அர்ச்.சாமிநாதருடைய சபைத்துறவிகள், தேவவரப்ரசாதத்தின் மாதாவும், பரலோகத்தின் இராக்கினியுமான தேவமாதாவிடம், மகா உன்னதமான சிநேகத்துடன் இருந்தனர். அதனால், எப்பொழுதும் பரலோக மகிழ்வில் திளைத்திருந்தனர். ஒவ்வொரு குருவானவரும், தமது தாயை நன்மைநிறைந்தவரும், சிநேகம் நிறைந்த வருமான நல்ல பெண்மணியாக உணர்வது போலவே, அர்ச். சாமிநாதருக்கு , நன்மைகளின் முன்மாதிரியாகவும், நற்செயல்களை செய்வதற்கு துண்டுகோலாகவும், உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் கலங்கரை விளக்காகவும், முதல் குருவானவரான நமதாண்டவரின் பரிசுத்த தாயாரின் உயிருள்ள படமாகவும் முத். ஜேனம்மாள் விளங்கினார்கள். அர்ச். சாமிநாதர், பரலோக இராக்கினியின் நன்மைத்தனங்களான, பரிசுத்ததனத்தையும், கனிவுமிக்க தயாளத்தையும், தேவசிநேகத்தால் துாண்டப்பட்ட உத்தமமான பிறர் சிநேகக் கிரியைகளையும் தமது தாயாரிடம் கண்டு மகிழ்ந்தார். கிறிஸ்துவ ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த கலரூவேகா கோட்டையின் கவர்னரான தொன் ஃபெலிக்ஸ் கஸ்மனுடைய மனைவியான ஜேனம்மாள், தமது குடும்பத்தை உத்தம கிறிஸ்துவ நெறிகளின்படி நடத்திவந்தார்கள்.

அர்ச்.சாமிநாதர் பிறக்கும்போது, ஏற்கனவே அந்தோணி மற்றும் மானெஸ் என்ற ஜேனின் இரு மூத்த குமாரர்கள் குருத்துவத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்தனர். சிலோஸ் நகருக்கு ஜேன் அடிக்கடி தவயாத்திரையாக செல்வது வழக்கம். சிலோஸ் நகரின் அர்ச். தோமினிக் மேல் அதிக பக்திகொண்டிருந்ததால், ஜேன் தனது கடைசி மகனுக்கும் தோமினிக், அதாவது சாமிநாதர், என்ற பெயரை வைத்தார்கள். தன் கணவர் இந்த இளைய குமாரனை தனது விருப்பப்படி ஒரு போர்வீரனாக்காதபடிக்கு, ஜேன், சாமிநாதருடைய குழந்தை பருவத்திலிருந்தே, அவருக்கு போர்வாளுக்குப் பதிலாக நல்ல ஞான நூல்களைக் கொடுத்து உத்தம குருவானவராவதற்கு தேவையான ஞானபயிற்சிகளைக் கொடுத்துவந்தார்கள். 12ம் சிங்கராயர் பாப்பரசர், ஜேனம்மாளுக்கு 1828ம் வருடம் முத்திப்பேறு பட்டம் கொடுத்தார். மூன்று குருமகன்களை, அதுவும் மூன்று அர்ச்சிஷ்டகுருக்களை திருச்சபைக்கு தந்த முத். ஜேனம்மாள் மீது, பல நுாற்றாண்டுகளாகவே திருச்சபையில் பக்திமுயற்சிகள் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளன. அர்ச்சிஷ்டவர்களான அவளுடைய குருமகன்களுடைய பரிசுத்த குணாதிசயங்களைக் கொண்டு நாம் முத்.ஜேனம்மாளின் உன்னத கிறிஸ்துவ பெண்மணிக்கான குணநலன்களைக் கண்டுணரலாம். .

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 6 - அலோய்ஷியஸ் கமோ

கென்யாவின் வேதசாட்சி 

ஆப்ரிக்காவிலுள்ள கென்யா என்கிற நாடு 1895ம் ஆண்டு, ஆங்கிலேயருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1920ல், ஆங்கிலேய ஆட்சி அங்கு வலுப்பெற்றது. நாட்டின் விடு தலைக்காக, ஜோமா கென்யட்டா என்பவர், ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடங்கினார். இயக்கத்தின் ஒரு பகுதியினர் பயங்கரவாதிகளாக மாறினர். ஆங்கிலேயரைத் துரத்தும்படி, சகல வித அக்கிரமங்களிலும் ஈடுபட்டனர். "வெள்ளையர்களுக்குச் சாவு" என்பதே, இடை விடாமல், அவர்கள் தொடர்ந்து எழுப்பிய கூச்சலாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அநேக கத்தோலிக்க வேதபோதகர்கள், கென்யாவில் ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் நடத்தி வந்தனர். ஆட்சியிலி ருந்த ஆங்கிலேயருடன் கூட, இந்த வேதபோதகர்களையும் சேர்த்து ஒழித்துக்கட்டுவதற்கு, தீவிரவாதிகள் உறுதி செய்தனர். வேத போதகர்களுக்கு உதவி செய்யும் சகலரையும் கொல் வதற்கு திட்டமிட்டனர். கமோ என்பவர், ஒரு ஆப்ரிக்கர்; தொடக்கப்பள் பணி புரிந்து வந்தார். வேத போதகர்களுக்கு அவர் உற்ற நண்பர். அவருடைய நடவடிக்கை களை, தீவிரவாதிகள் கண்காணிக்கத் துவக்கினர். கமோ, நம்முடன் சேர்வாரென்றால், நமது இயக்கம் வலுவடையும். மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவோம்; கமோ நம்முடன் சேர்ந்து, வெள்ளையருக்கு எதிராக வாக்குறுதி எடுக்க வேண்டும்; அல்லாவிடில், அவரைக் கொல்ல வேண்டும், என்று, அவர்கள் கூறினர்.

மேற்றிராணியார், கென்யா நாட்டு விசுவாசிகளுக்கு ஒரு சுற்றுமடல் எழுதி அனுப்பி, சுதந்திரம் பெறுவதற்கு, நியாயமான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், மௌ மௌ என்ற தீவிரவாதிகளின் கொள்கைகளை, யாரும் பின்பற்றக் கூடாது; அவை திருச்சபைக்கு விரோதமானவை என்றும், அவர், அம்மடலில் எச்சரித்திருந்தார். ஏனெனில், தீவிரவாதிகள், கிறீஸ்துவ மதத்தை விட்டுவிட வேண்டும்; வெள்ளையரின் இரத்தத்தை ஒருகிண்ணத்தில் பருக வேண்டும் என்று, திருச்சபைக்கு எதிரான ஒரு ஆணையை அவ்வியக்க உறுப்பினருக்கு விடுத் திருந்தனர். இளைஞராயிருந்தபோது, கிறீஸ்துவ மதத்தில் சேர்வது, கமோவிற்கு, கடினமாகத் தோன்றியது. கிறீஸ்துவ வேதம், அநேகக் கடினமான காரியங்களைச் செய்யும்படி நம்மிடம் கேட்கிறதே, என்று கமோ கூறி வந்தார். ஆனால், தேவதிருவுளத்தின்படி, ஒரு பரிசுத்தகுருவா னவரின் ஆன்ம ஈடேற்ற அலுவலின் பயனாக, 1945ம் ஆண்டு, செப்டம்பர் 7ம் நாளன்று ஞானஸ்நானம் பெற்று, அலோய்ஷியஸ் என்ற பெருடன், கமோ, கத்தோலிக்கரானார்.

ஒரு சமயம், ஞான உபதேச வகுப்பில், கன்னியாஸ்திரி, உங்கள் வேதத்தை விடுவது அல்லது கடவுளுக்காக உயிரை விடுவது என்று நிர்ப்பந்திக்கப்பட்டால், இரண்டில் எதைத் தெரிந்து கொள்வீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். ஞான உபதேசம் கற்றுக்கொண் டிருந்த கமோ, உடனே எழுந்து, சத்திய வேதத்தை விடுவதை விட, நான் சாவையேத் தெரிந்து கொள்வேன் என்று கூறினார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள், கமோ, கல்வி கற்பித்து வந்த 4வது வகுப்பிற்குள் நுழைந்தபோது, ஞான உபதேச புத்தகங்கள், துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டு, அவர் மேஜையின் மீது போடப்பட்டிருப்பதைக் கண்டார்.

மௌ மௌ என்ற தீவிரவாத இயக்கத் தலைவன், மாணவர்களுக்குத் துர்போதனை செய்திருக்கிறான் என்பதை, கமோ, அறிந்தார்: உங்கள் ஆசிரியன், வெள்ளையர்களின் கூட்டாளி. நம்மை அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு, வெள்ளையர் ஆசிக்கின்றனர்; அதற்கு, உங்கள் ஆசிரியனும் ஆதரவாக இருக்கிறான். அவனுக்கு விரோதமாக, நீங்கள் எல்லோரும் எழும்ப வேண்டும். துரோகிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும். ஒரு ஆழமான குழியைத் தோண்டுங்கள். உங்கள் ஆசிரியன் சைக்கிளில் வரும்போது, அதில் விழுவான்; அவனைக் கொன்று விடுங்கள், என்பதே அவன், மாணவர்களுக்களித்தத் துர்போதனை.

அதன்படி, கெட்ட மாணவரெல்லோரும் ஒன்றுகூடி, அவ்வாறே ஒரு குழி தோண்டி வைத்தனர்; ஆனால், மழைகாலம் துவங்கியதால், அவர் சைக்கிளில் வராமல், நடந்து வந்தார். உடனே, அக்கிரமிகளின் தலைவனது வேறு திட்டத்தின்படி, கமோ, வகுப்பில், கரும்பலகை யில் எழுதிக்கொண்டிருக்கும்போது, அவர் மேல் ஈட்டிகளை எறிந்து, கரும்பலகையோடு சேர்த்துக் கொல்வதற்காக, மாணவர்கள், ஈட்டிகளை, புத்தகங்களில் மறைத்து வைத்திருந்த னர். இப்பேராபத்தைப் பற்றி, ஒரு சிறுமி, ஆசிரியரிடம் தெரிவித்தாள். அலோய்ஷியஸ் கமோ, ஆண்டவரின் பேரில் வைத்த சிநேகத்தினிமித்தம், வகுப்பைத் தொடர்ந்து நடத்தினார்: அவர், மாணவரிடம், தீயவர்கள், உங்களுக்குத் துர்போதனை செய்திருப்பதைப் பற்றிவருந்து கிறேன். நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். வெள்ளையரை கென்யாவிலிருந்து விரட்ட வேண்டும். எனினும், வெள்ளையராயிருப்பது பற்றி அவர்களைக் கொல்வது சாவான பாவமா கும். நான் கிறீஸ்துவன். என் விசுவாசத்தை விட்டுவிட மாட்டேன். நேச ஆண்டவருக்காக இக்காரியத்தில் என் உயிரை அளிப்பதற்குக்கூடதயாராக இருக்கிறேன், என்று கூறினார். வீட்டில், உன் வேதத்தை விடாவிட்டால், உனக்கு சாவு நிச்சயம், என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தைக் கண்டார். பாடுபட்ட சுரூபத்தின் முன் பக்தியுடன் முழங்காலிலிருந்து, ஆண் டவரே! நான் ஒருபோதும், உமக்கு துரோகம் செய்ய மாட்டேன். என் விசுவாசத்தைத் திடப்படுத்தியருளும். நான் உம்மை நேசிக்கிறேன். உமக்காக என் உயிரைக் கையளிப்பேன், என்று ஜெபித்தார்.

ஒரு நாள், அவர் வீட்டுக்குத்திரும்பி வரும் வழியில், அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், வெள்ளையர்களின் இரத்தத்தில் ஆணையிட்டு, அவர்களை விரட்ட எங்களு டன் சேர்ந்துகொள். அல்லது சாவாய்! உன்னைக் கொன்று விடுவோம் என்று, தீவிரவாதிகள் அச்சுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே, அவரைக் கத்தியால் குத்தி வீழ்த்தினர். அலோய்ஷியஸ் கமோ, சேசுவே! மாதாவே! எங்களுக்குத் துணையாக வாருங்கள்! என்று தன் மீது சிலுவை அடையாளம் வரைந்தார். கொடூரமான காட்டுமிராண்டிகளான தீவிர வாத இயக்கத்தினர், அவரைத் துண்டு துண்டாக வெட்டிக்கொன்றனர்; கமோ, வேத சாட்சி யாக மரித்தார்; ஆம், அர்ச். அலோய்ஷியஸ் கமோ என்கிற இன்னொரு ஆப்ரிக்காவின் அர்ச் சிஷ்டவர், திருச்சபையில் தோன்றினார்.


திங்கள், 31 ஜனவரி, 2022

பத்து சர்வேசுரனுடைய கற்கனைகள் - Ten Commandment's in Tamil

சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?
பத்து.

 பத்தும் சொல்லு.
சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து!

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக

2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக

3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக

4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக

6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக

7. களவு செய்யாதிருப்பாயாக

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக

10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.