Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 2 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 8 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

 முத். எவரார்டு லாங்கரஸ் EVERARD OF LANGRES(d. 1221)

நமது நல்ல தந்தை அர்ச். சாமிநாதர் இறந்த அதே நேரத்தில், அவருடைய உத்தம சீடரான எவரார்டு, பிரான்சு நாட்டில் இறந்தார். இவர் தமது சபையின் அதிபரான சாமிநாதரின் அரும்பெரும் அப்போஸ்தல அலுவல்களைப்பற்றி கேள்விப்பட்டு, அவரை சந்திக்கும்படி ஆவலுடன் சென்றார். ஆயினும், இறப்பானது இருவரையும் இப்பூமியில் சந்திக்காமல் பிரித்தது. சங்.எவரார்டு சுவாமியார், லாங்கரஸ் நகர பேராலயத்தின் மதிப்பிற்குரிய மூத்த துணை அதிபராக இருந்தார். அந்நகரத்தின் பெரும் செல்வாக்கையும் புகழையும் இவர் பெற்றிருந்தார். ஒரு சமயம் அந்நகருக்கு அர்ச். சாமிநாதருடைய சபைத் துறவியான சகோ.சாக்சனிஜோர்டன் வந்து நிகழ்த்திய ஞானதியான பிரசங்கத்தைக் கேட்டார். பரலோகத்திலிருந்து வந்த சம்மனசு போல , தேவசிநேக அக்கினியால் பற்றியெரிந்த சகோ. ஜோர்டனின் ஆழ்ந்த ஆன்ம இரட்சணிய ஆவலைக் கண்ட சங். எவரார்டு, அர்ச். சாமிநாதருடைய சபையின் மேல் ஈர்க்கப்பட்டார். எவரார்டு பல திறமைகளுடையவராக இருந்தார். பெரிய மருத்துவமனையைக் கட்டியிருந்தார்.

லாங்க்ரஸ் நகரத்தின் பேராலயத்தை நிர்வகித்துவந்தார். அவரை லோசான் என்ற நகரின்மேற்றிராணியாராக்க, பாப்பரசர் விரும்பியபோது, தகுந்த காரணங்களைக்கூறி, சங். எவரார்டு, அப்பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை . 1220ம் ஆண்டு, பொலோஞாவிலிருந்து, சகோ.ஜோர்டன் பாரீஸ் வந்தபோது, எவரார்டு தமது பதவி , உடைமை யாவற்றையும் துறந்து அர்ச். சாமிநாதருடைய போதகத் துறவிகளுடைய சபையில் சேர்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்தார். அச்சமயம், லொம்பார்டியைச் சேர்ந்த பிராந்தியத்திற்கு தலைமை அதிபர் பதவியை சகோ. ஜோர்டன்கிடைக்கப் பெற்றிருந்தார்.சகோ. ஜோர்டன், எவரார்டு சுவாமியாருக்கு சாமிநாதருடைய சபைத் துறவிகளுடைய உடையை அணிவித்து, பாரீஸிலுள்ள அர்ச். ஜாக்வஸ் மடத்தில் சேர்த்துக் கொண்டார். சபையில் சேர்ந்தவுடன், சங். எவரார்டு சுவாமியார், தமது சபை அதிபரான அர்ச்.சாமிநாதரைக் காண பெரிதும் ஆசித்தார். சாமிநாதருடைய அர்ச்சிஷ்டதனத்தைப் பற்றி சகோ. ஜோர்டன் அளவில்லா உற்சாகத்துடன் விவரித்திருந்தார். லாங்கரஸ் கதீட்ரல் பேராலயத்தின் பொறுப்புள்ள பதவியில் இருந்ததால், சங். எவரார்டு சுவாமியாார், பிரான்சு நாட்டை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்லமுடியாத சூழ்நிலையில், இத்தாலியில் இருந்த தமது சபை அதிபர் சுவாமியாரைக் காண பெரிதும் ஆவல் கொண்டார். அச்சமயம், அர்ச்.சாமிநாதரோ பிரான்சுக்கு உடனே வருவதற்கானதிட்டம் ஏதும் இல்லை. ஆனால், சகோ. ஜோர்டன் லொம்பார்டிக்கு, தமது புதிய பொறுப்பை ஏற்பதற்காக செல்ல வேண்டியிருந்தது. அங்கு நிச்சயம் அர்ச். சாமிநாதர் இருப்பார் என்பதை அறிந்த எவரார்டு சுவாமியாரும் ஜோர்டனுடன் சென்றார். பர்கண்டியிலிருந்து, இத்தாலியை நோக்கிச் சென்ற பயணத்தின்போது, இந்த வயோதிக குருவானவருடைய அனுபவமிக்க ஞானமும் உற்சாகமூட்டும் அறிவும் சகோ. ஜோர்டனுக்கு மிகவும் நன்மை பயத்தன. துறவற ஜீவியத்திலுள்ள நடைமுறைப்படுத்த வேண்டிய அநேக நன்மையான காரியங்களைப் பற்றி எவரார்டு சுவாமியாரிடம் சகோ.ஜோர்டன் கற்றறிந்தார்.

சென்ற இடங்களிலெல்லாம் இருவரும் ஞானபிரசங்கங்களை நிகழ்த்தினர். அந்த தியானப் பிரசங்கங்களின் வெற்றிக்குக் காரணம் சங். எவரார்டு சுவாமியார் தான் என்று சகோ. ஜோர்டன் குறிப்பிடுகிறார். ”பிரான்சு மற்றும் பர்கண்டி நாடுகளைக் கடந்து சென்றபோது, என்னுடன் வந்த சங்.எவரார்டு சுவாமியாரைக் கண்ட யாவரும், அவரை மிகவும் சங்கை செய்து புகழ்ந்து பாராட்டினர். அவர், கிறிஸ்துவுக்காக அட்ட தரித்திரத்துடனும், யாவற்றையும் துறந்தவராகவும் பிரசங்கங்களைப் போதிக்கச் சென்றார்” என்று ஜோர்டன் குறித்துவைத்துள்ளார். நேற்றுவரை திருச்சபையின் அதிகாரியும் செல்வம் மிக்கவருமாயிருந்த சங். எவரார்டு, இன்று சேசுகிறிஸ்துநாதர் சுவாமியின் ஏழைகளுக்காக ஆர்வமுள்ள பிச்சைக்காரராக திகழ்ந்த போது, ஏழைகள் எல்லாரும் அவருடைய பராமரிப்பிற்காக அவரை அண்டி சென்றனர். எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மேற்றிராணியார்கள், சாமிநாதருடைய போதகசபைத் துறவிகளை நன்கு வரவேற்று, தியான பிரசங்கங்களை நிகழ்த்தவும், நன்கொடையாளர்களுடைய உதவியினால் மடங்களைக்கட்டவும் அனுமதிப்பார்கள் என்ற விவரத்தையும் எவரார்டு அறிவித்தார். இந்த விவரங்கள், பிற்காலத்தில் சகோ. ஜோர்டனுக்கு மடங்களைநிறுவுவதற்கு மிகவும் உதவியாக இருந்தன. தொல்லைகள் நிறைந்த கடினமான பயணத்தைப்பற்றி முறையிடாமல், இளம் துறவிகளுக்கான உலகத்தைச் சுற்றி வேதம் போதிக்கும் அலுவலில், தம் நேச இரட்சகருக்காக, தமது முதிய வயதில் எவரார்டு, உற்சாகமாக ஈடுபட்டார். கோடைகாலங்களில் மிக உஷ்ணமாக இருந்தபோதிலும், உதயசாமத்திற்கு முன்பே துவக்கி மாலை வழிபாட்டு ஜெப (vespers)நேரத்திற்கான நட்சத்திரங்கள் தோன்றும் வரை, அவர்கள் தங்கள் வேதபோதக அலுவலில் ஈடுபட்டனர். சென்ற இடங்களிலெல்லாம் தங்குவதற்கான துறவற இல்லங்கள், எவரார்டு சுவாமியாருக்கு தெரிந்திருந்ததால், அவர்களுடைய வேதபோதக யாத்திரை மிக எளிதாக இருந்தது. ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது, எவரார்டு சுவாமியார் மிகவும் பலவீனமடைந்தார். அவர் மிகவும் நோயுற்றிருக்கிறார் என்பதை அறிய வந்தனர். சிறிது சிறிதாக முன்னேறி லோசான் என்ற ஊரை அடைந்தனர். மருத்துவர்ககள் அவரைப் பரிசோதித்துவிட்டு அவர் விரைவிலேயே இறந்துவிடுவார் என்று, அறிவித்துவிட்டு அவருக்கு அதைப்பற்றித் தெரிவிக்க வேண்டாம் என்று, கூறினர். இதை யூகித்து அறிந்து கொண்ட எவரார் சுவாமியார், ”மருத்துவர்கள் நான் இறக்கப்போகிறேன் என்பதை ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்.

அந்நினைவு கசப்பாக இருக்கும் மனிதர்களிடம் தான், அதை மறைக்க வேண்டும். எனக்கு மரணபயம் இல்லை ” என்று கூறினார். சில தினங்களில், தாம் மிகவும் ஆவலுடன் சந்திக்க விரும்பிய தமது சபையின் அதிபரான அர்ச்.சாமிநாதர், தமது சகோதர துறவிகளிடையே மரிப்பதற்காக, பொலோஞா நகரத்திலுள்ள தமது மடத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார் என்பதை அறியாமலேயே , எவரார்டு சுவாமியார், 1221ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் நாள், பாக்கியமான மரணம் அடைந்தார். சங். எவரார்டு சுவாமியார்மேல் லாங்க்ரஸ் மேற்றிராசனம் எப்போதும் பக்தி கொண்டு விளங்குகிறது. அவருடைய நினைவுநாள் ஆகஸ்டு மாதம் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக