Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 2 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 BLESSED JANE OF AZA - முத். ஜேன்

 BLESSED JANE OF AZA - முத். ஜேன் (1140-1202)


அர்ச். சாமிநாதருடைய தாயாரின் பெயர் ஜேன் ஆஃப் ஆசா. முத். ஜேனம்மாள் என்று அழைப்போம். மத்திய நூற்றாண்டுகளில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தேவமாதாவின் பேரில் விசேஷ பக்தியுடன் திகழ்ந்தன. அதில், ஸ்பெயின் நாட்டுமக்களிடம் இயல்பிலேயே அந்த பக்திமிக அதிகமாக இருந்தது. அர்ச். சாமிநாதர் தமது சபைத்துறவிகளிடம் தேவமாதாமீது அசாதாரணமான விதத்தில் ஆழ்ந்த பக்தி கொள்ள வைத்ததற்கான ஒரே முக்கிய காரணம் அவருடைய தாயார். அவர்களுடைய குணாதிசயங்களை, எல்லா காலத்திலும் செயல்பட்டு வரும் அவர்களுடைய மகன் , சாமிநாதரால், நிறுவப்பட்ட துறவற சபையில் நாம் பார்க்க முடியும். அர்ச். சாமிநாதர் தமது தாயிடம் எவ்வளவு அதிக கனிவுள்ள பாசமுள்ளவராக இருந்தாரென்றால், அந்த நல்ல தாயாரிடம் கற்றுக்கொண்டபடி, அவர் தமது எல்லா கஷ்டநேரங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும், எப்பொழுதும், இடைவிடாமல், தன் பரலோக தாயாரான மிகவும் பரிசுத்த தேவமாதாவை நோக்கி தமது இருதயத்தை எழுப்பி, அவர்களுடன் உரையாடி மகிழ்வார்.

அர்ச். சாமிநாதர் பிறப்பதற்கு முன், ஜேன் ஒரு கனவு கண்டார்கள். தமது மகன் ஒரு நாயைப்போல வாயில் தீப்பந்தத்தைக் கவ்வியபடி உலகம் முழுவதும் சுற்றிவந்து, அகில உலகத்தையும் ஒளிர்விப்பது போல ஜேன் கனவு கண்டார்கள். தீப்பந்தமாகிய தேவசிநேகநெருப்பை சாமிநாதருடைய ஆத்துமத்தில் பாதுகாக்கவும், அதைத் துாண்டி வளர்க்கவும் வேண்டிய அலுவலை, அவருடையதாயார், ஜேன் தமது தாய்க்குரிய நேசத்துடன் மிக நேர்த்தியாக செய்தார்கள். மேலும், ஜெபம் என்னும் அரிய பொக்கிஷத்தின் விலையுயர் தன்மையையும், அதனால் எண்ணற்ற ஆத்துமங்களை ஆண்டவருடைய தேவசிநேக இராஜ்யத்துக்குள் கொண்டுவரும் உன்னத நன்மைபயக்கும் உயர்ந்த விளைவுகளையும் பற்றி தமது மகனுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இந்த சிறந்த போதனையின் உதவியினாலேயே, சாமிநாதர் அர்ச்சிஷ்டவருக்குரிய ஜெப தப பரித்தியாகங்களினால் திரளான பதிதர்களை மனந்திருப்பியதுடன், ஏராளமான துறவற மடங்களை சீர்திருத்தவும் முடிந்தது. முத். ஜேனம்மாள் தமது மகனுக்கு, அநேக ஆத்துமங்களுக்கு மோட்சத்தின் திறவுகோலாக விளங்கிய, தேவமாதாவை வாழ்த்திப் போற்றும், மங்களவார்த்தை ஜெபத்தைக் கற்பித்தது மட்டுமல்லாமல், தேவமாதாவைப் பின்பற்றி உத்தம கிறிஸ்துவ பெண்மணியாக எவ்வாறு ஜீவிப்பது என்று நன்மாதிரிகையுடன் வாழ்ந்தும் காண்பித்தார்கள்.

ஜேனுடைய மூன்று மகன்கள், பிற்காலத்தில் குருவானவர்களானார்கள். தேவமாதாவின் மீது பெருமதிப்பிற்குரிய அச்சத்துடனும், கனிந்த சிநேகத்துடனுமான பக்தியை, தமது பிள்ளைகளிடம், ஜேன் ஊட்டினார்கள். இதன் விளைவாகத் தான் , அர்ச்.சாமிநாதருடைய சபைத்துறவிகள், தேவவரப்ரசாதத்தின் மாதாவும், பரலோகத்தின் இராக்கினியுமான தேவமாதாவிடம், மகா உன்னதமான சிநேகத்துடன் இருந்தனர். அதனால், எப்பொழுதும் பரலோக மகிழ்வில் திளைத்திருந்தனர். ஒவ்வொரு குருவானவரும், தமது தாயை நன்மைநிறைந்தவரும், சிநேகம் நிறைந்த வருமான நல்ல பெண்மணியாக உணர்வது போலவே, அர்ச். சாமிநாதருக்கு , நன்மைகளின் முன்மாதிரியாகவும், நற்செயல்களை செய்வதற்கு துண்டுகோலாகவும், உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் கலங்கரை விளக்காகவும், முதல் குருவானவரான நமதாண்டவரின் பரிசுத்த தாயாரின் உயிருள்ள படமாகவும் முத். ஜேனம்மாள் விளங்கினார்கள். அர்ச். சாமிநாதர், பரலோக இராக்கினியின் நன்மைத்தனங்களான, பரிசுத்ததனத்தையும், கனிவுமிக்க தயாளத்தையும், தேவசிநேகத்தால் துாண்டப்பட்ட உத்தமமான பிறர் சிநேகக் கிரியைகளையும் தமது தாயாரிடம் கண்டு மகிழ்ந்தார். கிறிஸ்துவ ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த கலரூவேகா கோட்டையின் கவர்னரான தொன் ஃபெலிக்ஸ் கஸ்மனுடைய மனைவியான ஜேனம்மாள், தமது குடும்பத்தை உத்தம கிறிஸ்துவ நெறிகளின்படி நடத்திவந்தார்கள்.

அர்ச்.சாமிநாதர் பிறக்கும்போது, ஏற்கனவே அந்தோணி மற்றும் மானெஸ் என்ற ஜேனின் இரு மூத்த குமாரர்கள் குருத்துவத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்தனர். சிலோஸ் நகருக்கு ஜேன் அடிக்கடி தவயாத்திரையாக செல்வது வழக்கம். சிலோஸ் நகரின் அர்ச். தோமினிக் மேல் அதிக பக்திகொண்டிருந்ததால், ஜேன் தனது கடைசி மகனுக்கும் தோமினிக், அதாவது சாமிநாதர், என்ற பெயரை வைத்தார்கள். தன் கணவர் இந்த இளைய குமாரனை தனது விருப்பப்படி ஒரு போர்வீரனாக்காதபடிக்கு, ஜேன், சாமிநாதருடைய குழந்தை பருவத்திலிருந்தே, அவருக்கு போர்வாளுக்குப் பதிலாக நல்ல ஞான நூல்களைக் கொடுத்து உத்தம குருவானவராவதற்கு தேவையான ஞானபயிற்சிகளைக் கொடுத்துவந்தார்கள். 12ம் சிங்கராயர் பாப்பரசர், ஜேனம்மாளுக்கு 1828ம் வருடம் முத்திப்பேறு பட்டம் கொடுத்தார். மூன்று குருமகன்களை, அதுவும் மூன்று அர்ச்சிஷ்டகுருக்களை திருச்சபைக்கு தந்த முத். ஜேனம்மாள் மீது, பல நுாற்றாண்டுகளாகவே திருச்சபையில் பக்திமுயற்சிகள் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளன. அர்ச்சிஷ்டவர்களான அவளுடைய குருமகன்களுடைய பரிசுத்த குணாதிசயங்களைக் கொண்டு நாம் முத்.ஜேனம்மாளின் உன்னத கிறிஸ்துவ பெண்மணிக்கான குணநலன்களைக் கண்டுணரலாம். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக