அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 41
சுவாமி, சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன் 3ம் செர்ஜியுஸ் பாப்பரசர் இந்த அற்பதப்படத்தை தமது லாத்தரன் மாளிகைக்குக் கொண்டு சென்றார். அதை, எங்களுடைய மடத்துக் கன்னியர் எவ்வளவோ தடுக்க முயன்றனர். அதற்கு பாப்பரசர் இணங்கவில்லை . ஆனால், அடுத்த நாள் இரவில் புதுமையாக, இப்படம் எங்களுடைய செயிண்ட் மேரி மடத்துக்கே திரும்ப வந்தது. அந்நாளிலிருந்து, எங்களுடைய மடத்துக் கன்னியர்கள் இப்படத்தை மிக விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதி வருகின்றனர். இப்படத்தைச் சுற்றியே , தங்களுடைய முதன்மையான பக்தி முயற்சிகளை, அனுசரித்து வருகின்றனர். எனவே, இப்படம் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பது, சர்வேசுரனுடைய திருவுளமாக இருக்கிறது.
அதேபோல தான், நாங்களும் இம்மடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும், அவருடைய சித்தமாக இருக்கிறது, என்று சங்.யூஜீனா தாயார் கூறினார்கள். ரோமாபுரியிலுள்ள கன்னியாஸ்திரி மடங்களை, சீர்திருத்தி ஒரே சபைக்குள் ஒருங்கிணைக்கும் அலுவலில், அர்ச்.சாமிநாதருக்கு உதவிடும்படி பாப்பரசரால் நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர்களான வந்.உபோலினோ, வந்.ஸ்டீஃபன், வந்.நிக்கோலாஸ் என்ற மூன்று கர்தினால்மார்களும், செயிண்ட் மேரி மடத்துக்கன்னியர்களிடம் சாமிநாதர் மேற்கொண்ட முதல் சந்திப்பு, தோல்வியடைந்தது என்பதை அறிந்து மிகவும் மனம் தளர்ந்தனர். பாப்பரசரிடம் இவ்வலுவலில் இருந்து தங்களை விடுவிக்கும்படி விண்ணப்பிக்கவும் ஆசித்தனர். கடின இருதயம் படைத்த பதிதர்களை மனந்திருப்பும் அலுவலில் வெற்றிபெறச் செய்த தேவமாதாவின் உதவியை, இவ்வலுவலிலும் விசேஷமாக நாடப்போவதாக அர்ச்.சாமிநாதர் தீர்மானித்தார். ஜெபத்தின் வல்லமையை நன்கு அறிந்த அர்ச்சிஷ்டவர், இக்கருத்திற்காக முன்பைவிட ஜெபத்தை இன்னும் அதிகமாக தீவரித்தவராக, பக்திபற்றுதலுடனும் அதிக தபசுமுயற்சிகளுடனும் தேவமாதாவிடம் இரவும் பகலும் மன்றாடிவந்தார்.
இவ்வாறு, கன்னியர்களை ஒன்றிணைக்கும் அலுவலின் வெற்றிக்காக, தமது சரீரத்தை உபாதித்து, நீண்ட நேர ஜெபத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய இருதயத்தில் தேவசிநேகம் அதிகரித்தது' மேலும் சர்வேசுரனுடைய சிநேகத்தில் புத்தொளியையும் உத்வேகத்தையும் அடைந்தார். "புரோயிலுள்ள மடத்திலுள்ள என் குமாரத்திகள் கன்னியாஸ்திரிகளாக ஜீவிப்பதற்கான ஒழுங்கு முறைகள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றால், இம்மடத்தின் பிள்ளைகள் அனைவரும் அர்ச்சிஷ்டவர்களாக முடியுமே. ரோமாபுரியிலுள்ள எல்லா மடத்துக் கன்னியாஸ்திரிகளும் ஒன்றாக ஒரே துறவறசபைக்குள் உட்பட்டு, ஒழுங்கு முறைகளை அனுசரித்து ஒரே குடும்பமாக ஜீவிக்க வேண்டும் என்பதே நம் நல்ல கடவுளின் திருவுளமாக இருக்கிறது. நம் ஆண்டவர் எவ்வளவு சிநேகம் மிகுந்தவர். நம் மேல் எவ்வளவு இரக்கம் கொண்டு, நம்மைப் பராமரித்து போஷித்து வருகிறார் என்பதை இக்கன்னியர்கள் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே" என்று சாமிநாதர் தமக்குள்ளே சிந்தித்துக்கொண்டு இருந்தார். ஒருநாள், அவர் திவ்யநற்கருணைப் பேழையின் முன் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவருடைய ஆத்துமத்தின் ஆழத்தில், இன்னுமொரு தடவை செயிண்ட் மேரி கன்னியர்மடத்தை சந்தித்து, அவர்களுக்கு ஜெபத்தினாலும் தபசினாலும் நிறைவேற்ற வேண்டிய ஆத்தும் ஈடேற்ற அலுவலின் மகிமைகளைப் பற்றி பிரசங்கிக்குமாறு ஒரு குரலொலி கேட்டது. திவ்ய இஸ்பிரீத்துவானவரே தம்மை இவ்வாறு ஏவுகின்றார் என்பதை உணர்ந்ததும், அர்ச். சாமிநாதர் இரண்டாம் முறையாக செயிண்ட் மேரி மடத்திற்கு சென்றார்.
அவர், அங்குள்ள கன்னியரிடம், ஜெபத்தினுடையும் தபத்தினுடையவும் நன்மைகளையும், அவற்றின் பேறுபலன்களினால், ஆத்துமங்களுக்கு விளையும் எண்ணற்ற பயன்களையும் பற்றி ஞானதியான பிரசங்கம் செய்தார். அதைக் கேட்ட கன்னியாஸ்திரிகளுடைய இருதயங்கள் ஞான ஒளி பெற்றன. மடத்துத் தாயார், "சுவாமி, இனிமேல் நாங்கள், ஆன்ம ஈடேற்றத்திற்காக ஜெபத்திலும் தபசிலும் அதிக நேரம் மெய்யாகவே முழுமனதுடன் ஈடுபடுவோம். இதுவரை, சர்வேசுரனிடமிருந்து நாங்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு பதிலாக, அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்றபடியே ஜீவித்து வந்திருக்கிறோம். இனி அத்தகைய ஜீவியத்தை மாற்றுவோம். உங்களுடைய துறவற சபை ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்போம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும், அர்ச்.சாமிநாதர் மிகவும் மகிழ்வடைந்தார். உடனே, அம்மடத்துக் கன்னியர் ஒவ்வொருவரும் கோவிலுக்கு சென்று, பரலோக பூலோக அரசரான திவ்யசற்பிரசாதநாதர் முன்பாக, கீழ்ப்படிதல் என்னும் துறவற சபைக்கான முக்கிய வார்த்தைப்பாட்டைக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தார்.
மேலும் அவர்களிடம், அர்ச்.சாமிநாதர், "சகோதரிகளே, இன்னும் சில நாட்களுக்குள், நம் பாப்பரசர் ஹொனோரியுஸ் நமக்கு அளித்துள்ள சாந்தா சபினா மடத்திற்கு, சிக்ஸ்துஸ் மடத்திலுள்ள நமது சகோதரர்கள் சென்று விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் எல்லாரும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திற்கு வந்துவிடலாம். பரிசுத்தமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தை ஆசிக்கும் மற்ற பெண்களையும் புதிதாக மடத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அர்ச்.லூக்காஸ் வரைந்த தேவமாதாவின் அற்புதப்படத்தையும் உங்களுடன் எடுத்துக் கொண்டு வாருங்கள். ஒருவேளை தேவமாதா படம் முன்புபோல புதுமையாக , தானாகவே, இந்த மடத்திற்கே திரும்பி வந்துவிட்டால், நீங்களும் உங்களுடைய விருப்பப்படி மீண்டும் இந்த மடத்திற்கே வந்து தங்கலாம். அதை நான் தடுக்க மாட்டேன்" என்று கூறினார். இதற்கு, மடத்தின் கன்னியர்கள் அனைவரும் மகிழ்வுடன் சம்மதித்தனர். அதன்படி, 1220ம் வருடம், பிப்ரவரி 20ம் தேதியன்று , செயிண்ட்மேரி மடத்துக்கன்னியர் சிறுகுழுவாக சுற்றுப்பிரகாரமாக ரோமாபுரி நகரத்தின் கர்தினால் மார்கள், மேற்றிராணியார்கள், குருக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் தைபர் நதிபாலத்தின் வழியாக நகரத்திற்குள் சென்றனர். இந்த சுற்றுபிரகாரத்தை வரவேற்கும்படியாக தேவாலயங்களின் மணிகள் ஒலித்தன.